தண்ணிலவு தேனிறைக்க… 18

தண்ணிலவு தேனிறைக்க… 18
தண்ணிலவு – 18
உண்மையான, உரிமையான அக்கறை கொண்ட உறவுகள் சுற்றிலும் அரவணைத்திருக்க, நிறைந்த மனநிலை, மகிழ்ச்சியான சூழலில் சிந்தாசினிக்கு நாட்கள் வெகு அழகாக நகரத் தொடங்கியது.
இறுக்கங்கள் தளர்ந்த மனநிலையை ‘நம்மவீடு’ மந்திரம் தானாய் உருவாக்கி விட்டிருந்தது. எங்கும் யாரையும் தேங்கி நிற்க வைக்கவில்லை.
நம் பொறுப்பு, நம் கடமைகள் செயல் வடிவம் பெறும்போது, தன்னால் அனைவருக்கும் பக்குவங்கள், மனமுதிர்வுகள் வந்து விடுகின்றன.
நம்மவீடு மாயாஜாலத்தில் விளைந்த முதற்பயன், கணவன் மனைவிக்குள் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கியதுதான்.
அதன் எதிரொலியாக இருவரும் தடையகன்று பேசத் தொடங்கியிருக்க, அலைபேசியின் வழியாக மிக அழகாகவே குடும்பம் நடத்தினர் பாஸ்கரும் சிந்தாசினியும்…
முன்னைப்போன்ற ஏட்டிக்கு போட்டியான வார்த்தைகள், கோபப் பார்வைகள், குத்தல் மொழிகள் என்றில்லாமல் கணவனிடத்தில் வெகு சகஜமாய் நாட்களை நகர்த்த தொடங்கியிருந்தாள் சிந்தாசினி.
மகள் சொந்தவீடு கட்டுகிறாள் என்ற பெருமையே நாராயணனை உற்சாகம் கொள்ள வைக்க, சென்னைக்கு ஒரெடியாக வந்து விட்டார் மனிதர்.
கட்டிடம் கட்டுமிடத்தில் மேஸ்திரியாக நின்று, பாரபட்சமின்றி அனைத்து வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
அவரின் விவசாயத்தை மகன், தன்பொறுப்பில் எடுத்துக்கொள்ள, கட்டிட வேலையை கவனிக்கவென மனைவி அலமேலுவுடன் வந்து விட்டார். மிகவும் அவசியமென்றால் மட்டுமே கிராமத்திற்கு சென்று வருவதை வாடிக்கையாக்கிக் கொண்டார்.
இயல்பிலேயே தங்கை மரகதம் குடும்பத்தின் மீது அதீத அக்கறை கொண்ட பெரியவருக்கு, மகளின் பொறுப்பை தன் சிரமேற்று செய்வது சிரமமாக தெரியவில்லை.
தாய்மாமனின் வழி வந்த தயானந்தனும், தன்பொறுப்பாக தங்கைக்காக அனைத்தையும் முன்னின்று செய்வதில் எப்போதும் அலுத்துக் கொள்வதில்லை.
கட்டிட நிர்வாகம் இவ்விரு ஆண்களின் மேற்பார்வையிலும் நடைபெற, வீடு சிந்தாசினியின் பெயரிலும், வங்கிக்கடன் பாஸ்கரின் பெயரிலும் சாஸ்வதமாகி இருந்தது.
இரண்டு தவணைகளாக வங்கிக்கடனும் சிரமமின்றியே கிடைக்கப்பெற, வேலைகள் மிக விரைவாகவே நடைபெற ஆரம்பித்தன.
கட்டிட வேலை ஆரம்பித்து மூன்று மாதங்கள் முடிந்திருக்க, தரைதளம் முடிந்து முதல் தளத்தில், அன்று கான்கிரீட் போடும் வேலை நடந்து கொண்டிருந்தது. தயாவும், நாராயணனும் அருகில் நின்று கர்மசிரத்தையாக கலவை போடுவதை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
பாஸ்கர் எப்போதும்போல் வீடியோகாலில் அவ்வப்போது எட்டிப் பார்த்து, மனைவியின் அலைபேசியில் கட்டிட களப்பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.
“இப்டி பாக்குறதும் நல்லாதான் இருக்கு சிந்தா!” சிலாகிப்புடன் பாஸ்கர் பேச,
“நான் வெயில்ல நின்னு ரீல் சுத்துறது பார்க்க உங்களுக்கு நல்லா இருக்கா! என்ன ரசனைடா சாமி!” வழக்கம்போல் வம்பிற்கிழுத்தாள் சிந்தாசினி.
“கட்டடத்த பாக்கறதா யாருடி சொன்னா… அதை படம் பிடிக்கிற என் வீட்டுக்காரியத் தான், நான் ரசிச்சுட்டு இருக்கேன்…” அலைபேசியில் கண்சிமிட்டி கவன்றவனை பொய்யாய் முறைத்தாள்.
“இல்லாத மீசையை முறுக்கிட்டு பேசுற பழக்கத்த இன்னமும் விடலயா?” நையாண்டியுடன் ‘உன்னை நான் நம்பவில்லை’ என்பதை இவள் எடுத்துரைக்க, கணவனுக்கு சூடேறிப் போனது.
“நீ, அடிக்கடி இதையே சொல்லி உசுப்பேத்துறடி! ஊருக்கு வரும்போது கட்டை மீசையோட அய்யனாரா வந்து பயமுறுத்துறேனா, இல்லையான்னு பாரு…” வாய்சொல்லில் வீரனாய் தன்னை முன்னிறுத்திக் கொள்ள,
“ஹலோ… உங்களை, யாரு இங்கே கூப்பிட்டா! அதான், எனக்கும் என்பிள்ளைக்கும் வீடு ரெடியாகிடுச்சே! அது போதும் எங்களுக்கு… எப்பவும் போல மொபைல்ல குடும்பம் நடத்தி, ஜூம்ல நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பார்க்குது பாட்டு படிப்போம் மிஸ்டர் அய்யனார்!”
“அடிப்பாவி புருசங்காரன் பாவமில்லையா? என்னை சாமியாரா தூரமாவே நிக்க வைப்பியாடி!” பாவமாய் கணவன் கேட்ட தோரணையில், பொங்கிச் சிரித்துக் கொண்டே,
“உங்களை பாவம் பாக்குற அளவுக்கு எனக்கு கிறுக்கு பிடிக்கல பாஸ்மாமா! தபஸ்வியா அங்கேயே இருங்க…” பதிலுக்குபதில் சொன்னவளின் குரலில் எகத்தாளமும் நக்கலும் களைகட்டியது.
இலகுவான பாவனைகள், சீண்டலான பேச்சுக்களில் இருவரும் தங்களை இணைத்துக் கொள்வதில் சற்றும் அசருவதில்லை. சுருங்கச் சொன்னால் இப்படியான பேச்சுக்களின் மூலம் தங்களின் இயல்பினை மெதுமெதுவாக மீட்டுக் கொண்டிருந்தனர்.
இவர்களது உறவின் தொடக்க நிலையே இத்தகைய பேச்சுக்களில் ஆரம்பித்தது தானே! அதையே தங்களது அடுத்த கட்டத்திற்கும் கையாளத் தொடங்கியிருந்தனர்.
ஏழுவருட பிரிவின் எதிரொலியை மேலும் பிரஸ்தாபித்து இன்னுமின்னும் வலிகளை சுமக்க இருவருமே விரும்பவில்லை என்பது மட்டுமே நிஜம்.
இனி இப்படித்தான், வாழ்வின் இறுதிவரை இதில் மாற்றமில்லை என்ற நிதர்சனத்தை உணர்ந்து கொண்டே, தங்களை திசை திருப்பியிருந்தனர்.
குழந்தைகளுக்கு பள்ளிகள் தொடங்கியிருக்க, மாலைநேரத்தில் அவர்களின் பொழுதுப்போக்கு மற்றும் உலா, நம்ம வீட்டு கட்டிடத்தை சுற்றிப் பார்ப்பதில் கழிந்தது.
சிறுவன் விபாகருக்கும் தன்னால்தான், தனக்காகதான் வீடு கட்டப்படுகின்றது என்ற நினைவிலேயே எல்லையற்ற மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் நடமாடத் தொடங்கினான். மனதிற்குள் தன்னை ஒரு சாதனையாளனாக, பெரியவனாக எண்ணிக்கொண்டு பேசவும் ஆரம்பித்திருந்தான்.
“நந்தா! இங்கே வந்ததும் நீயும் நானும் தனி ரூம்ல இருப்போம்”
“வேண்டாம் விபு! பாட்டிகூட படுத்தா கதை சொல்வாங்க…”
விபுவை விட இரண்டு வயது சிறியவனான நந்தாவிற்கு அத்தனை எளிதில் பெரியவன் கூறுவதின் சாராம்சம் புரியவில்லை.
“நீ இன்னும் சின்ன பிள்ளையாடா? எங்கப்பா இல்லாத நேரத்துல நாமதான்டா வீட்டை பத்திரமா பார்த்துக்கணும். வீ ஆர் பிக்பாய்ஸ்டா… ஏதாவது கேம் விளையாடிட்டு சேர்ந்து படுப்போம்” விபு ஆசையை தூண்டிவிட, நந்தாவும் அதற்கு பின்பாட்டு பாடத் தொடங்கினான்.
தனியறைக்கான போராட்டத்தில் இருவரும் இறங்க, அவர்களுக்கான சிறிய அறை ஒன்று புதிய வீட்டில் கட்டவும் முடிவெடுக்கப்பட்டது..
“பாட்டி… உன் துணைக்கு, இனிமே நைல்நதிய கூப்பிட்டுக்கோ! அவளும் பிக்கேர்ள் ஆயிட்டா…” என்ற நந்தாவின் அலட்டலில் சின்னகுட்டி அழத் தொடங்கிவிட்டாள்.
“அம்மா இல்லன்னா அத்தைதான் வேணும். அவங்கதான் ரைம்ஸ் சொல்லுவாங்க, பாட்டி ஓல்டு ஸ்டோரீஸ் சொல்லி போர் அடிப்பாங்க! நான் பாட்டிகிட்ட போகமாட்டேன்!” வெடுக்கென்று பேசிய பேத்தியின் பட்டவர்த்தனமான குற்றசாட்டில் பொய்கோபம் கொண்டார் மரகதம்.
“இந்த சின்னகுட்டிக்கு திமிரப் பார்த்தியா? அப்படியே அவங்க அப்பனை மாதிரியே என்னை வாரிவிட்டு பேசுறத…” முறைக்க தொடங்கிய பாட்டியை என்ன செய்து விடுவாய் என்ற மெத்தனப் போக்கில், இடுப்பில் கைவைத்து பதிலுக்கு முறைத்து, பழிப்பு காட்டினாள் நைல்குட்டி.
பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததில் இருந்து தன்னையும், பெரிய பெண்ணாகவே நினைத்துக் கொள்கிறாள் இந்த சின்னக்குட்டி.
“நோ யூஸ் பாட்டிமா… ஐயாம் வெரி ஸ்ட்ராங் அண்ட் ப்ரேவ் பேபி… உன்னோட முறைப்புக்கெல்லாம் சிந்துநதி மட்டும்தான் பயப்படும், அப்படிதானே அத்த…” பயமில்லாமல் கிண்டலடித்துக் கொண்டே, அத்தையின் முதுகில் சலுகையாக சாய்ந்து, கழுத்தை கட்டிக்கொள்ள அனைவரும் வெடித்து சிரித்தனர்.
தொடர்ந்த விபு நந்தாவின் சீண்டலில், மீண்டும் கச்சேரியை ஆரம்பித்த சின்னகுட்டியின் வாயை மூட சிந்தாசினியே மெனக்கெட வேண்டியிருந்தது.
“புதுவீட்டுக்கு போனதும் நீ, அத்தை கூடவே இருக்கலாம் தங்ககுட்டி! பாய்ஸ் எல்லாம் அப்பாட்ட அடி வாங்கப் போறாங்க! ரெண்டு நதியும் சேர்ந்தே இருப்போம்டா” பெரியவள் சமாதானபடுத்தி வைக்க, அத்தை சொன்னதை உறுதிபடுத்திக் கொள்ள தயாப்பாவை தேடிச் சென்றுவிட்டாள் நைனிகா.
பிள்ளைகளின் சண்டையில் எப்போதும் நாட்டாமையாக சிந்தாசினி பதவி வகிக்க, தினம் ஒரு செல்லப் பஞ்சாயத்துடன் பொழுதுகள் இனிதாய் நகர்ந்தன.
முதற்கட்ட நுழைவுத் தேர்வான ஃபவுண்டேஷன் எக்ஸாமை மிகுந்த நம்பிக்கையோடு அனைவரின் அன்பான கவனிப்போடும் எதிர்கொண்டாள் சிந்தாசினி.
பயிற்சி வகுப்பு, வீட்டுவேலை, குழந்தைகளின் பராமரிப்பு இடையிடையே கணவனுக்கு இங்குள்ள நிலவரங்களை பகிர்ந்துகொள்ளவென ஓய்வின்றி சுழன்றவளுக்கு, பாடங்களை கவனித்து கொள்வதில் சற்று சுணக்கம் வந்திருந்தது. ஆனாலும் தளராத நம்பிக்கையுடன் தேர்வினை எழுதியிருந்தாள்.
இரண்டாம் கட்ட வகுப்பிற்கும் செல்ல ஆரம்பித்த வேளையில், அன்றைய தினம் மனம் முழுவதும் சஞ்சலத்துடனேயே காணப்பட்டாள் சிந்தாசினி.
பாஸ்கர் பலமுறை அழைத்தும், எடுத்துப் பேசவில்லை. இறுதியில் மகனின் பெரிய டாப்-ல்(tab) கணவன் அழைக்க, விபு அதனை சிந்துவிடம் திணித்து விட்டு ஓடிவிட்டான்.
“ரொம்ப பிஸியா மேடம்? எத்தனை தடவ கால் பண்றது? ஏன் அட்டெண்ட் பண்ணல”
“அது… கொஞ்சம் தலைவலி”
“ஏன் எங்கேயாவது ஊர் சுத்துனியா?” கேலி செய்தவனை மனைவி முறைக்க,
“இல்லம்மா… வெயில்ல போயிட்டு வந்தியான்னு கேக்க வந்தேன். அப்படியே டங்க் சிலிப்பாகி, எனக்கு ஆப்பு ரெடி பண்ணிடுச்சு… வரவர என் நாக்கும், உனக்கு ஃபேவரா தான் வேலை பார்க்குது…” தன்போக்கில் பேசிக்கொண்டு சென்ற பாஸ்கர்,
“ம்ப்ச்… இப்ப என்னவாம்?” சுரத்தில்லாமல் உச்சுக் கொட்டிய மனைவியை நன்றாக கவனித்தான்.
கண்கள் எதையோ சொல்ல தவித்தபடி இருக்க, அதை மறைக்கவென முகத்தை நேர்கொண்டும் பார்க்காமல் இருந்தாள் சிந்தாசினி.
“என்ன ஆச்சு சிந்தா? என்ன பண்ணுது? உடம்பு சரியில்லயா…” பாஸ்கர் கேள்விகளை அடுக்க
“அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமா!” முகம் கூம்பிக்கொண்டு மீண்டும் மனைவியின் தலைதாழ்ந்து போனதில் இவனுக்குதான் கிறுக்கு பிடித்தது.
இவளது ‘மாமா’ விளிப்பில், அன்றைய தினம் மருத்துவமனையில் ஆவேசபட்டு மயக்கமடைந்ததே நினைவிற்கு வர, இவனுமே கலங்கிப் போனான்.
‘இப்போது என்ன மாதிரியான பூகம்பத்தை வெடிக்க வைக்கப் போகிறாளோ?’ என உள்ளுக்குள் மிரண்டுகொண்டே மனைவியை பார்த்து,
“என்ன பண்ணுதுன்னு சொன்னாதான்டி தெரியும். மனசுக்குள்ளயே அடைச்சு, எதையும் இழுத்து விட்டுக்காதே சிந்தாசினி! அக்காவ கூப்பிடவா! டாக்டர்கிட்ட போறியா?” மிகஅமைதியாக கேட்டான்.
“ஐயோ… அப்படியெல்லாம் இல்ல மாமா”
“இப்டி வார்த்தைக்கு வார்த்தை மாமானு கூப்பிட்டு வைக்கிற பார்த்தியா, அதுலதான்டி கிலியாகுது! பொறுமைய சோதிக்காம என்ன பண்ணுதுன்னு சொல்லித் தொலைடி!” பொறுமையின்றி இவன் பல்லைக் கடிக்க
“கோபபடாதீங்க! வேணும்னு செய்யல… இப்படி ஆகும்னு நானே எதிர்பாக்கல…” கலங்கிய குரலில் பூடகமாய் பேசப்பேச பாஸ்கருக்கு பற்றிக் கொண்டு வந்தது.
“என்னை கோபக்காரனா, வில்லனா மாத்த என்னென்ன செய்யணுமோ, அதையெல்லாம் அழகா செய்றடி! இப்ப சொல்லப்போறியா இல்லையா?” இவன் குரலை உயர்த்தவும்,
“அது… ஃபவுண்டேஷன் எக்ஸாம்ல ஃபெயில் ஆகிட்டேன் மாமா!” மனதை அரித்துக் கொண்டிருந்த விஷயத்தை வெளியே கொட்டிவிட்டாள் சிந்தாசினி.
பள்ளி இறுதியாண்டு வரை நிறைவான மதிப்பெண்களில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவளுக்கு, இந்த நுழைவுத்தேர்வின் முடிவு, முதன்முதலாக தோல்வியை பரிசளித்து மனதிற்குள் பயத்தையும் பதியமிட்டு விட்டிருந்தது.
“என்னடி சொல்ற? சிங்கப்பூர் காலேஜ்ல ஃபுல் மார்க் வாங்கினேன்… ஜப்பான் யுனிவர்சிட்டியில பட்டம் வாங்கினேன்னு பெருமை பீத்திக்கிட்டது எல்லாம் பொய்யா சிந்தா!” வழமையான சீண்டலில் பாஸ்கர் கேலிபேச, வெடித்து அழ ஆரம்பித்து விட்டாள் சிந்தாசினி.
“இதுக்குதான்… இப்படி சொல்லிக் காட்டுவீங்கன்னுதான் இந்த பெரிய படிப்பு வேணாம், வேற ஏதாவது ஈசியா பண்ணிட்டு போறேன்னு சொன்னேன். என் பேச்சை யார் கேட்டா?” கோபமும் கண்ணீரும் போட்டிபோட்ட நேரத்திலும் கணவனை குறைசொல்ல தவறவில்லை.
“நீ ஃபெயில் ஆனதுக்கும் நான்தான் காரணமாடி?”
“இல்லையா பின்ன… யோசிக்கவிடாம முடிவெடுக்க வச்சது நீங்கதானே?” கணவன் மீது குற்றசாட்டை அடுக்க, இவனுக்கு ஐயோ என்றானது.
பழக்கமில்லாத தோல்வியெனும் கசப்பை, இதுவரையிலும் அனுபவித்திறாத சிந்தாசினிக்கு, மனமெங்கும் பெருங்குழப்பமே ஆட்டி வைக்க, அதை வெளியே சொல்லவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.
‘இனி, மீண்டும் வேறு என்ன செய்வதென்று யோசிக்க வேண்டும்? திரும்பவும் முதலில் இருந்து தேடுதல் வேட்டையை ஆரம்பிக்க வேண்டுமா?’ என்றெல்லாம் மனதை குடைந்த கேள்விகளுக்கு அவளால் பதில் கண்டுபிடிக்க முடியவில்லை.
இன்னமும் வீட்டில் யாரிடமும் இந்த செய்தியை பகிர்ந்து கொள்ளவில்லை. அப்படி சொன்னால் இதோ கணவன் கேலி பேசினானே, அப்படி யாரேனும் ஜாடைமாடையாக கேட்டுவிட்டால், முற்றிலும் உடைந்து போய்விடும் நிலையில் இருந்தாள். இவளின் கணிப்பிற்கு தப்பாமல் கணவனும் பேசியதில் குமுறிக் கொண்டிருந்த உள்ளமும் அழுகையாக உடைப்பெடுத்து அவளைப் பந்தாடியது.
மனைவியின் கண்ணீரைப் பார்த்தவனுக்கும் மனம் சறுக்கிக்கொள்ள, இந்த தோல்வியில் மீண்டும் மனதை அழுத்திக் கொள்ளப் போகிறாளோ என்றே பெரிதாக கவலைகொண்டான்.
இத்தனை நாட்கள் மெதுமெதுவாக பேசி கூண்டுக்குள் இருந்து மனைவியை, வெளியில் கொண்டு வந்ததே மலையை புரட்டிப் போட்ட சாதனையாக இருக்க, மீண்டும் அப்படியான சூழ்நிலை வந்துவிடக் கூடுமோ என பயந்தான் பாஸ்கர்.
“அழாதம்மா… அழாதடி! இதோட படிப்பு முடியப்போறதில்ல… திரும்பவும் எழுதலாம். கவலைப்படாதே!” பலவாறு சமாதானங்களை கூறினாலும், தளராத கடமையாக அழுகையை அரங்கேற்றிக் கொண்டிருந்தாள்.
“இப்ப என் பேச்சு எதுவும் உனக்கு ஏறாது… அரைமணிநேரம் கழிச்சு நீயே கூப்பிடு! தெம்பா சாப்பிட்டு வந்து பேசுடி!” பட்டென்று சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்தான் பாஸ்கர்.
இவளுக்கோ, தனது வருத்தத்தை கருத்தில் கொள்ளாமல் கோபம் கொள்கிறானே என்ற புதிய காரணமும் சேர்ந்துகொள்ள, கணவனின் மேல் இன்னமும் சினம் கூடிப்போனது.
அதே மனநிலையில் அண்ணனிடம் சென்று தேர்வில் தோல்வியடைந்ததை கூறி, இனி இந்த படிப்பு வேண்டாமென்று சொல்லியும் வந்துவிட்டிருந்தாள்.
யாருடைய அறிவுரையையோ ஆலோசனையையோ ஏற்றுக் கொள்ள இயலாத வெறுமையில், அடுத்து என்ன செய்வதென்ற எண்ணமே விஸ்வரூபமாய் எழுந்து நின்றது.
எந்தவொரு விசயமும் நாம் பார்க்கும் கண்ணோட்டத்தைப் பொறுத்தேதான், மனமும் அப்படியே ஏற்றுக் கொள்கின்றது. தோல்விபயத்தில் பலரும் ஒன்றுக்கும் உதவாத முடிவுகளை எடுத்துவிட்டு, முடிவில் அவர்களே ஒன்றுமில்லாதவர்களாகி விடுகின்றனர்.
வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்றுகூட நினைப்பதில்லை. இவர்களின் அகராதியில் ஒருவெட்டு ஒரே துண்டு அவ்வளவுதான், முடியாத விசயத்திற்கு முடிவுரையை எழுதி விடுவார்கள்.
அந்த ஒரு வெட்டு சறுக்கலின் முடிவாக இருக்க வேண்டும், வெட்டப்பட்ட துண்டு வெற்றிக்கான முதல்படியாக இருக்க வேண்டுமென்று நினைத்து முன்னோக்கி சென்றால் மட்டுமே, தோல்வி என்பது வெற்றிக்கான ஏணிப்படியாக மாறும் வாய்ப்புள்ளது.
குடும்ப வாழ்க்கையில் சறுக்கி விடுவோமோ என்றஞ்சியே கணவனை ஒதுக்கி வைத்து வாழ்ந்தவளுக்கு, இப்பொழுது படிப்பையும் மறுப்பது மிகஎளிதாகவே இருந்தது.
நிதானமாக யோசித்திருந்தால், இதெல்லாம் மிகச் சாதாரணமான ஒன்று என்பது மிகத்தெளிவாக தெரிந்திருக்கும். உள்ளுக்குள் தன்தகுதியை பெருமையாக நினைத்து நடமாடியவளுக்கு, இந்த தோல்வி சற்று பலமான அடியாகதான் பட்டது.
தனது புதிய முடிவில் மாற்றமில்லை என்கிற உறுதியுடன், இரண்டு நாட்கள் வீட்டிலேயே இருந்தாள் சிந்தாசினி. கணவனிடம் பேச முயலவில்லை. பயிற்சி வகுப்பிற்கும் செல்லவில்லை. வீட்டிலும் அவளை வற்புறுத்த வேண்டாமென்று பெரியவர்கள் அனைவரும் கூறிவிட, தயாவும் மிதுனாவுமே அமைதி காத்தனர்.
ஆனால் பாஸ்கரால் அப்படி இருக்க முடியவில்லை. அன்றைக்கு அழுகையுடன் பேசி வைத்தவள், இன்னமும் கணவனுடன் பேசவில்லை. அவளும் அழைக்கவில்லை, இவன் அழைத்தாலும் பதிலில்லை எனும்போது யாரால்தான் பொறுமையாக இருக்கமுடியும்.
முடிவாக வாட்ஸ்-அப்பில் சீண்டலுடன் இவன் அனுப்பிய செய்தி ஏவுகனையாக தாக்கிவிட, மனைவியாக அடுத்த நொடியே கணவனுக்கு பேசிவிட்டாள் சிந்தாசினி.
‘நீ குண்டுசட்டியில் மாடுமேய்க்க வீடும் ரெடி… பானிபூரி கடையில் பிளேட் கழுவும் வேலையும் உனக்கு ரெடி! டிக்கெட் போட்டு விடுறேன் கிளம்பி வந்துசேரு… இங்கேயே குப்பை கொட்டுவோம்’ தக்காளிசாஸ் இமொஜியுடன் பாஸ்கர் டெக்ஸ்ட் அனுப்பிய வேகத்தில், இன்னதென்று புரியாமல் கணவனுக்கு அழைத்த சிந்தாசினி,
“என்ன கண்றாவி மெசேஜ் இது? விளையாடுறதுக்கு ஒரு அளவில்லையா… என்னை கோபப்படுத்தி பாக்குறதுல அப்படியென்ன சந்தோசம் உங்களுக்கு?” அடுக்கடுக்காக அனலை கக்கி, புகையத் தொடங்கினாள்.
“ஏண்டி? நீ எடுத்திருக்க முடிவை விடவா, இது கேவலமா இருக்கு?”
“பிடிக்காத விசயத்துல, இன்வால்வ் ஆகிட்டு நான்தான் அவதிப்பட்டுட்டு இருக்கேன்… இப்ப என்ன புதுசா அங்கே இருக்கலாம்னு ஆரம்பிக்கிறீங்க? இங்கே கட்டுற வீட்டையும் அப்படியே பார்சல் பண்ற ஐடியா எதுவும் இருக்கா? அதையும் செஞ்சு முடிங்க… அங்கேயே வந்து குப்பை மட்டுமில்ல, உங்களையும் சேர்த்தே கொட்டுறேன்” படபடப்புடன் தனது இயலாமையையும், கோபத்தையும் மொத்தமாக வெளிப்படுத்திவிட, பாஸ்கரும் ஆத்திரத்தின் எல்லையைக் கடந்து,
“வா… வா… உன்கிட்ட வாங்கிக் கட்டிக்கத்தான் வெட்டியா இருக்கேன்” பதிலுக்கு கனன்றான்.
இவளை எப்படித்தான் வழிக்கு கொண்டு வருவதென்று இவனுக்கும் தெரியவில்லை. சொல்வதை கேட்டுக் கொள்பவளாக இருந்தால் முயன்று மனதை திசை திருப்பச் சொல்லலாம். இவளோ எதற்கும் வளைந்து கொடுக்காத வணங்காமுடியாக இருக்க, இவன்தான் முட்டிக்கொள்ள சுவற்றை தேடும் நிலையில் இருந்தான்.
“உனக்கு ரோஷம் இருக்குற அளவுக்கு அறிவில்லடி!” அதிரடியாக திட்டத் தொடங்கியவனை மிரண்டு பார்த்தாள் சிந்தாசினி.
“உன்மேல உனக்கே நம்பிக்கையில்ல… சரியான தத்திடி நீ!” மேற்கொண்டு மனைவியை வார்த்தைகளால் தாக்கிக்கொண்டே பேசவும் கோபத்துடன் முறைக்க தொடங்கி விட்டாள்.
“என்ன கோபம் வருதா? ஏண்டா இவன்கூட திரும்பவும் சேர்ந்து வாழ ஆரம்பிச்சோமோன்னு யோசிக்கிற அளவுக்கு மூளை சூடேறுதா?” காட்டமாக பாஸ்கர் கேட்க ஆரம்பிக்கவும்,
“அப்டியெல்லாம் ஒண்ணுமில்ல… சும்மா உங்க இஷ்டத்க்குக் பேசிட்டு இருக்காதீங்க!” இவளும் குறையாத கோபத்தில் பதிலளித்தாள்.
“அப்போ, என்மேல உனக்கு நம்பிக்கை வந்தாச்சு! கடைசி வரைக்கும் உன்னை கண்கலங்காம காப்பாத்துவேன்னு முடிவுக்கு வந்துட்ட… அப்படிதானே!” பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்துக் கொண்டே இவன் கேட்க,
“அப்படிதான்… அதுக்கென்ன இப்போ?” முனகலில் இவள் பதிலளிக்க,
“அப்புறம் எதுக்குடி உடனே ஒரு வேலை கிடைச்சே ஆகணும்னு, திரும்பவும் வேலையை தேடிட்டு அலையுற… நெக்ஸ்ட் அட்டெம்ப்ட் எழுதலாம்னு, உனக்கு தெரியுமா, தெரியாதா? அதுக்கு முயற்சிகூட பண்ணமாட்டியா?” கேட்டவனின் குரலில் கோபம் மிதமிஞ்சி இருக்க, இவள்தான் இறங்கிப் போய் பேச வேண்டியிருந்தது.
“அதெல்லாம் எதுக்கு? வீணா உங்க பணம்தான் விரயமாகுது! என்னோட டைமும் வேஸ்டாகுது! அதான் வேற ஏதாவது ஈசியானதா தேடிக்கலாம்னு படிப்ப விட்டுட்டுட்டேன்” அமைதியாகச் சொன்னவளை அத்தனை ஆத்திரத்துடன் முறைத்தான்.
“இப்படி அவசரமா யோசிச்சுதான் எல்லாத்துலயும் அரைகுறையா நிக்குற… உன்னை வேலைக்கு போகாதே, சம்பாதிக்காதேன்னா சொல்றோம். தகுதிய வளர்த்துட்டு செய்னுதானே சொல்றோம். அதுகூட புரியாதா?
அனதர் சாய்ஸ் தேடிப்போற நீ, அனதர் சான்ஸ் எடுப்போம்னு ஏன் முடிவெடுக்க மாட்டேங்குற? எல்லாத்துக்கும் இன்னொரு வாய்ப்பு கொடுக்கவோ, ஏற்படுத்திக்கவோ நீ பழகிக்கவே இல்ல… அதை எடுத்துச் சொன்னா உனக்கு கோபம்தான் வருது” காட்டமாக ஆரம்பித்தவன் கொஞ்சம் கொஞ்சமாக, அவளுக்கு புரியும்படி கூறத் தொடங்கினான்.
“அட்டெம்ட், அரியர்ஸ் கேண்டிடேட்ஸ் எல்லாம் ஒண்ணுக்கும் லாயகில்லாதவங்கன்னு முடிவு கட்டி, அப்படியே நாமளும் மாறிடுவோமோன்னு பயந்துட்ட நீ! அதான், ஒரு தடவ ஃபெயிலானதும் கப்பல் கவுந்த மாதிரி, சோககீதம் வாசிச்சிட்டு கடலுக்கே போக மாட்டேன்னு அடம்பிடிக்கிற…” அவளின் பலவீனத்தை ஒவ்வொன்றாக எடுத்துக் கூற,
“என்னால கவனமா படிக்க முடியல… மனசு அங்கேயும் இங்கேயும்னு அலைபாய்ஞ்சுட்டு இருக்கு. அதுவும் கூட ஒரு காரணம். சும்மா இதுதான் சாக்குனு அட்வைஸ் பண்ண ஆரம்பிக்காதீங்க… அட்டெம்ப்ட் அரியர்ஸ் எல்லாம் எனக்கு அலர்ஜி வோர்ட்ஸ்தான். என்னால அதையெல்லாம் அக்செப்ட் பண்ணிட்டு இருக்க முடியாது” என்று சொல்லிக்கொண்டே போக
“கடைசியா உன் முடிவுதான் என்ன?”
“எனக்கு படிப்பு வேணாம்… இங்கே இருந்தே வேற ஏதாவது பழகிக்கிறேன்”
“அந்த கருமத்த, நான் இருக்குற ஊர்ல வந்து செய்யின்னு தான் சொல்றேன்!” வார்த்தைகளை கடித்துத் துப்பியதில் சிந்தாசினிக்கு திக்கென்றது.
“என்ன… எப்பவும் உன்னைத்தேடி நான்தான் வரணுமா? நீ வரமாட்டியா? குடும்பமா இருக்கணும்னு நினைப்பு இருந்தா வந்துசேரு!” அதட்டல், மிரட்டலாக மட்டுமே வந்தன பாஸ்கரின் வார்த்தைகள்.
தன் மனைவிக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி விடவேண்டுமென்று இவன் மெனக்கெட, அதை புரிந்து கொள்ளாமல் தன்போக்கில் இவள் முடிவை எடுத்துகொண்டு பிடிவாதம் பிடித்ததில், தன் பொறுமையை முற்றிலுமாக கைவிட்டிருந்தான்.
மனைவியின் மேலுள்ள கோபத்தை ஓரம்கட்டி, அவளின் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு, இவனாகவே இறங்கி வந்து சமாதானம் பேசி, இன்னும் பல செய்தும் என்ன பலன்? இவள் உச்சாணிக் கொம்பிலேயே இன்னமும் சேவை சாதித்த வண்ணம் இருக்க, பாஸ்கரின் உள்ளம் ஆற்றாமையுடன் அடங்க மறுத்தே வெடித்து விட்டது.
“அப்போ வீடு கட்டுறோமே… அதை என்ன பண்றதாம்? வாயிருக்குன்னு பேசிட்டே இருக்காதீங்க!” கணவனின் மனநிலை புரியாமல் மனைவியும் எதிர்த்து நிற்க,
“அதையெல்லாம் அக்கா மாமா பார்த்துப்பாங்க… இல்லன்னா வாடகைக்கு விட்டுக்கலாம். நீ இங்கே வந்து சேரு!” பிடிவாதம் பிடித்து இவன் நின்றுவிட, சிந்தாசினிக்குத் தான் கணவனை எப்படி சமாளிப்பதென்று புரியவில்லை.
மகிழ்ச்சி, கோபம், சீண்டல் என எந்த ஒன்றையும் வெளிப்படுத்திக் கொள்வதில் ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஒரே நேர்கோட்டில் நிற்க, மீண்டும் புதிய விரிசல்… பழைய சறுக்கல் புதிய வடிவில்…