காவ்ய நந்தனை கண்டாலே அந்த வீடு அலறியது.
எந்த கோபத்தை காட்டக்கூடாது என எஸ்டேட்டில் ஒளிந்து கொள்ள நினைத்தானோ இப்போது அதே கோபத்தை எல்லோர் மீதும் வஞ்சனை இல்லாமல் காட்டினான்.
குறிப்பாக லட்சுமியின் மீது.
மகன்களுக்கு கட்டாய திருமணம் செய்தவர் அவர்களின் கோப முகத்தை சந்திக்க திராணியில்லாமல் ஒதுங்கி நின்றுவிட்டார்.
ஆனால் காவ்ய நந்தன் ஒவ்வொரு விஷயத்திலும் லட்சுமி அம்மாளை காயப்படுத்திக் கொண்டே இருந்தான்.
அவனுக்கு உள்ளுக்குள் ஏற்பட்ட காயத்தின் வடு ஆறவில்லை. அன்று மண்டபத்தில் வந்து எழில் சொன்னதைக் கேட்டு ஒருமனதாக முடிவெடுத்துவிட்டார் என்ற கோபம் அக்னி ஜுவலையாய் மனதுக்குள் எரிந்து கொண்டே இருந்தது.
ஒரு முறை ஒரே முறை என்னிடம் வந்து தனியாக பேசியிருக்கக்கூடாதா! அவளின் நாடகத்தை தெளிவாக எடுத்து சொல்லியிருக்க மாட்டேனா…
மானம், கௌரவம், வளர்ப்பு என்று பல முகாந்திர சொற்களை சொல்லி என் வாழ்க்கையை எரிதழலில் தள்ளி விட்டுவிட்டார்களே. அவனுக்குள் ஆற்றாமை அடங்கவில்லை.
திருமணம் செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? ஊர் முன்னால் தான் பட்ட அவமானம் அத்தனை எளிதில் நீங்கவிடுமா என்ன?
தான் பட்ட வேதனையை இரண்டு மடங்கு திரும்பி கொடுக்க ஆரம்பித்தான்.
நாங்க மட்டும் இங்கே மனைவிகளிடம் அல்லல் படுவோம்… நீங்கள் ரெண்டு பேர் மட்டும் ஜோடியாக சுத்துவீங்களோ?
முதல் காரியமாக தந்தையையும் தாயையும் பிரிக்கும் வேலையை சிறப்பாக செய்துவிட்டான்.
ராஜமாணிக்கத்தை வெளியூரில் இருக்கும் நிறுவனத்திற்கு ஒரு மாதத்திற்கு அனுப்பி வைத்தவன் தாயிடம் கூட அலைப்பேசியில் பேசக்கூடாது என்று முடிவாக சொல்லிவிட மூத்த ஜோடிகள் இருவர் முகமும் மூஞ்சுறு போல மாறியது.
“டேய் அப்பா பாவம்டா” என ராஜ மாணிக்கம் முகத்தை எந்த ஷேப்பில் வைத்து கெஞ்சினாலும் அசையவில்லை அவன்.
முடிவெடுத்த பின்பு மாறும் குணம் கொண்டவன் அல்லவே அவன்!
பெருமூச்சோடு, எதுவும் பேச முடியாமல் தன் மாடப்புறாவை விட்டு மணிப்புறா சோகத்தோடு பறந்து போனது.
ஏற்கெனவே சோகமாய் வலம் வந்து கொண்டிருந்த லட்சுமி தன் கணவனின் பிரிவில் மேலும் சோகமாகி ‘இவன் எப்போது மலை இறங்குவான்’ என காவ்ய நந்தனையே ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருந்தார்.
“இங்கே பாருங்க… என்ன தான் சோகமா லுக் விட்டாலும் எதுவும் மாறப் போறதில்லை. என் வாழ்க்கை என்ன சினிமாவா? ப்ரேம்க்கு ப்ரேம் நீங்க நினைச்சா மாதிரி சீன் மாற… வாழ்க்கைமா, ஒரு தடவை எடுத்த முடிவாலே ஏற்பட்ட விளைவுகளை அத்தனை சீக்கிரமா மாத்தி அமைச்சுட முடியாது”
“நந்தா, உன் கோவம் தான் உன் மூளையை மறைக்குது. நீயே தெளிவா யோசிச்சு பார் உனக்கு எல்லாமே புரிய ஆரம்பிக்கும்… அம்மா உனக்கு எப்போவாவது கெடுதல் செஞ்சு இருக்கேனா?” பரிதவித்து அவர் கேட்க காவ்யன் முகத்தைத் திரும்பிக் கொண்டான், இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என்பதைப் போல.
அவன் உள்ளுக்குள் ஓடும் உணர்வுகளை தாயின் மனம் எளிதாக கண்டு கொண்டது.
“நந்தா, அம்மாவை வெறுத்துட்டியா பா? என்னை விலக்கி வைக்க நினைக்கிறியா?” அவர் கலக்கமாய் அவன் கன்னத்தை தாங்கவும் அப்போதும் அசையாமல் நின்றிருந்தான் காவ்ய நந்தன்.
“நான் உங்களை என்னக்காவது வேறவா பார்த்து இருக்கேனாமா… ஆனால் முதல் முறை அந்த கல்யாண மண்டபத்துலே நான் அனாதையா உணர்ந்தேன்” அவன் உடைந்த குரலில் சொல்லவும் லட்சுமியின் தொண்டையில் துயரத்தின் விஷம் இறங்கியது.
“நந்தா, அப்படி இல்லைபா… ” என அவர் அவன் கன்னத்தை தாங்கிப் பிடிக்க வரவும் வேகமாய் இரண்டடி பின்னால் நகர்ந்தான்.
“ஒரு தடவை என்னை நம்பி இருந்தா அந்த முடிவு எடுத்து இருப்பீங்களாமா… என் வாழ்க்கையை சிதைச்சதை கூட நான் தாங்கிப்பேன், ஆனால் பாவம் முகில் என்ன பண்ணான்? இந்த திடீர் கல்யாணம் அவனுக்கு எவ்வளவு அதிர்ச்சியா இருக்கும். என்னாலே தான் அவனோட வாழ்க்கை பாதை மாறிப் போயிடுச்சுனு அவனை நேர்லே பார்க்கவே சங்கடமா இருக்கு ” என்று பேசியவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தம்பியை எண்ணி பரிதவித்தது.
“திடீர்னு ஒருத்தி வந்தா, அவள் குழந்தைக்கு நான் தான் அப்பானு சொன்னா, டக்குனு கல்யாணம் பண்ணி வெச்சுட்டிங்க…ஓகே… இப்போ அவளே தன் வாயாலே குழந்தை சுமக்கலைனு சொல்றா, அப்போ நியாயப்படி அவளுக்கு நான் டிவோர்ஸ் தானே தரணும்?” என்றவன் கேட்கவும் லட்சுமியின் முகம் மெழுகுவர்த்தியில் வைத்த விரல் போல துடித்து உதறியது.
அதைக் கண்டு காவ்ய நந்தன் உதட்டில் கசந்த முறுவல்.
“ஹா ஹா பயப்படாதீங்க… அவளை டிவோர்ஸ்லாம் பண்ண மாட்டேன். ஆனால் அவளை நிம்மதியாவும் இருக்கவிட மாட்டேன். பொய்யை வெச்சு தொடங்க நினைக்கிற வாழ்க்கை நரகமா இருக்கும்னு அவளுக்கு காமிக்கிறேன்” அவன் குரலில் வேட்டையின் ரத்த நிழல் படிந்திருந்தது.
தன் மகன் ஒரு முடிவெடுத்தாவிட்டால் அதை மாற்ற முடியாதென அறிந்தவர் துடித்து நிமிர்ந்தார்,”டேய் நந்தா, எழில் பாவம்டா அவளை எதுவும் செஞ்சுடாதே…” என்றவரின் கதறலைக் கேட்க அங்கே நந்தன் இல்லை.
காற்றுப் போன பலூன் போல சட்டென்று தளர்ந்து சோபவில் விழுந்தவரின் மனம் ‘தப்பான முடிவை எடுத்துவிட்டோமோ’ என்று காலம் கடந்து யோசித்தது.
ஏற்கெனவே மூத்த மகனின் கேள்வியில் உடைந்துப் போயிருந்தவரின் முன்பு இளைய மகன் அங்கே வந்து நின்றான்.
“அம்மா, எனக்கு ஒரு பதில் தெரிஞ்சாகணும். என்னை ஏன் நீங்க மறுவீட்டுக்கு அனுப்பலை… மேகாவோட குடும்பம் ஏன் கல்யாணம் நடந்த அப்புறம் மாயமா மறைஞ்சுப் போயிடுச்சு” என்று கேட்கவும் கையை பிசைந்தார்.
“அது அவங்க வீட்டுலே கொஞ்சம் சூழ்நிலை சரியில்லைபா. அதான் கூப்பிடலை”
“அப்படி என்ன சரியில்லாத சூழ்நிலை பெத்த மகளைக் கூட கூப்பிட முடியாதபடி” என்றவன் கூர்மையாய் கேட்டான்.
“கொஞ்சம் சங்கடமான விஷயம் அது. எப்படி சொல்றதுனு தெரியலை” என அவர் கையைப் பிசையவும் முகில் கோபமாய் நிமிர்ந்தான்.
“சரியா விசாரிச்சு கல்யாணத்தை முடிவு பண்ண மாட்டிங்களாமா? எல்லாத்துக்கும் தலையாட்டுற பொண்ணுனு ஒரே காரணத்துக்காக மேகாவை அண்ணாவுக்கு தேர்ந்தெடுத்துட்டிங்களே. நல்ல வேளை என் அண்ணன் வாழ்க்கை பாழாகலை… ஆனால் என் வாழ்க்கை” என மேலும் சொல்ல வந்தவனுக்கு ஏனோ அந்த வார்த்தையை முழுதாக முடிக்க மனம் வரவில்லை.
அவள் தன் வாழ்க்கையை பாழாக்கிவிட்டாள் என்ற வார்த்தையை அவனால் சொல்ல முடியவில்லை. தன் மனைவியை கீழிறக்கி காட்ட அவனுக்கு துளியும் இஷ்டமில்லை. ஆனால் ஏன் தனக்கு மட்டும் இப்படி நடந்தது என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
உள்ளுக்குள் எழும்பிய ஆற்றாமையோடு மேகாவின் விலாசத்தை வாங்கிக் கொண்டு சென்றவன் அங்கே கண்ட காட்சியில் ஸ்தம்பித்து நின்றுவிட்டான்.
அதுவரை ஏன் தனக்கு மட்டும் இப்படி நடந்தது. ஏன் மேகா தன் வாழ்க்கையில் நுழைந்தாள் என்ற எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்தது.
அவன் கண்ணில் தன்னையும் மீறி ஒரு சொட்டு கண்ணீர்…