தாரகை – 13

மேகா ஶ்ரீ.

ஒரு காலத்தில் புன்னகை பூக்கும் பூச்செடியாய் இருந்தாள்.

துள்ளி திரியும் துருதுரு மான்குட்டி அவள். அகலின் சுடர் போல முகத்தில் எப்போதும்
ஒரு விகசிப்பு இருக்கும்.

நடுத்தர குடும்பத்தில் பிறந்திருந்தாலும் துன்பம், வறுமை என்னும் சொற்களை நெருங்கவிடாமல் அருமையாய் பார்த்துக் கொண்டார் மேகாவின் அப்பா, விநாயகம்.

தாயுமானவனாய் எதற்கும் உடன் இருக்கும் அப்பா, நேசிப்பை மட்டுமே சிந்தும் அம்மா, உயிருக்கு உயிராய் அவள் விரும்பும் தம்பி என அழகிய குருவி கூடு அவர்கள் குடும்பம்.

அவர்கள் மகிழ்ச்சியாக தான் இருந்தார்கள்,… அந்த கூட்டை கலைக்க, வாழ்க்கை அந்த பெரிய கல்லை எறிவதற்கு முன்பு வரை.

விநாயகம் புகழ் பெற்ற கல்லூரிக்கு முன்பாக தேநீர்க்கடை வைத்து நடத்திக் கொண்டிருந்தார். ஜே ஜே வென மாணவர்கள் கூட்டம் அங்கே நிரம்பி வழியும்.

அவர் வாழ்க்கை சாலையில் எந்த சுழிவும் இல்லாமல் நேராய் சென்று கொண்டிருக்க, அன்று ஒரு நாள் ஏற்பட்ட திருப்பத்தில் அவர் வாழ்க்கையே திரும்ப முடியாமல் போய்விட்டது.

கல்லூரியின் ஃபேர்வேல் தினம் அன்று,  மாணவர்களுக்கு இடையே கேன்டீனில் ஏற்பட்ட திடீர் சண்டையை தடுக்கப் போனவரின் தலையில் எதிர்பாராய் விதமாய் அடிப்பட்டுவிட அவர் வாழ்க்கையே முற்றிலும் அடிப்பட்டு போனது.

சில நாட்களுக்கு பின்பு அவர் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு பரிசோதனை செய்து பார்த்த பின்பு தான் தெரிந்தது, மூளைக்கு செல்லும் முக்கியமான நரம்பு துண்டிக்கப்பட்டு விட்டது என்று.

அதன் பின்பு அவர் மனநிலையில் மிகப் பெரும் மாற்றம்.

அதுவரை அதிர்ந்து கூட பேசாதவர் முதன் முறையாய் வானம் அதிரும்படி கத்தினார்.

தேவைக்கு சிரிப்பவர் காரணம் தெரியாமல் சிரிக்க துவங்கினார்.

அவருக்குள் ஒன்றுக்கு ஒன்று முரணான கற்பனைகள் தோன்ற அவர் நடவடிக்கையிலும் முற்றிலும் முரண்.

தனக்குள்ளேயே ஒரு கற்பனையை உருவாக்கி அதன் படி இந்த உலகமே இயங்குவது போல நினைத்து கொள்வார்.

இதுவரை தன் தந்தையை இப்படி பார்த்து அறியாத மேகாஶ்ரீ, முதன் முறையாய் அவரின் இந்த திடீர் மாற்றத்தைக் கண்டு மனதுக்குள் அடிப்பட்டு போனாள்.

சிரிப்பை மட்டுமே உதிர்ப்பவளின் இதழ்கள் வறண்டு போனது.

தன் தந்தையின் இந்த நிலை அவளை அதிர்வுக்குள்ளாக்குவதாய்.

“அப்பா” என்று அழுகையோடு அவள் அழைக்கும் ஒவ்வொரு முறையும், “நீ தானே அந்த பாகிஸ்தான் தீவிரவாதி… இதோ உன்னை இப்போவே கொன்னுடுறேன்” என்று அவள் கழுத்தை இறுக்கமாய் நெறித்துவிடுவார்.

ஒவ்வொரு முறையும் இவள் தந்தையை நெருங்க முனையும் சமயம் எல்லாம்
அவளுக்கு தோல்வியே ஏற்படும்.

அவரிடம் நெருங்குவதற்கு ஒரே வழி,
அவரது இல்லாத கற்பனைக்குள் அவளும் நுழைய வேண்டும்… எல்லாவற்றிற்கும் சரி என்று சொல்ல வேண்டும். அவர் சொல்வதை எதிர்த்தால் அவரிடம் மூர்க்கத்தனம் கூடும்.

ஒரு நாள் அவர் கற்பனையில் பாகிஸ்தான் தீவிரவாதி வருவான், மறுநாள் கற்பனையில் பெரிய கோடீஸ்வரர் ஆகி இருப்பார். இன்னொரு நாள் கற்பனையில் அவர் இலங்கைக்கு ராஜாவாக மாறிடுவார். இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கற்பனையில் அவர் மனம் உருண்டு கொண்டிருக்கும்.

ஒரு நாள் தூங்கி கொண்டிருந்த மேகாவின் அருகில் ஊதுவர்த்தி மற்றும் பழத்தைக் கொண்டு வந்து வைத்து “நீ செத்துட்டே… உனக்கு சம்பிரதாயம் பண்றேன்” என்று கைத்தட்டி சிரித்து சொன்னவரைக் கண்டு அவள் இதயம் இறந்துப் போனது.

ஆனாலும் முகத்தில் அவள் எந்த உணர்வையும் காட்டவில்லை. தான் எதிர்வினை காட்டினால் தன் தந்தையின் மனநிலை மேலும் பாதித்துவிடும் என நினைத்தவள் உணர்ச்சி துடைத்த முகமாய் வலம் வந்தாள்.

இப்படி ஒவ்வொரு நாளும் அவர் மனநிலைக்கு ஏற்ப தன் மன நிலையை மாற்றிக் கொண்டு பேசத் துவங்கினாள்.

அவர் என்ன சொன்னாலும் சரி என்று கேட்டு செய்ய துவங்கியவளால் ஏனோ அன்று ஒரு நாள் மட்டும் அவர் செய்ய சொன்னதை செய்ய முடியவில்லை.

தான் உயிருக்கு உயிராய் நேசித்த, தம்பியின் எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்குறி ஆக்கும்படி  எல்லா டாக்குமெண்ட்ஸையும் எடுத்து தீயில் இடச் சொன்னார்.

“மாட்டேன்பா… தம்பி பாவம்லே” என்று முதல் முறையாய் எதிர்த்தாள்.

“ஹே அவன் ஐ.ஏ.எஸ் தீவிரவாதிடி… அவன் சம்மந்தப்பட்ட ஒரு டாக்குமெண்டும் வீட்டுலே இருக்கக்கூடாது. நம்மளை தான் எல்லாரும் சந்தேகப்படுவாங்க. ஒழுங்கா அதை எரிச்சுப் போடு. இல்லை அவனையே உண்டு இல்லைனு ஆக்கிடுவேன்” என்றவர் ஆங்காரமாய் கத்தவும் அப்போதும் மறுத்து தலையாட்டினாள்.

“அப்பா, புரிஞ்சுக்கோங்கபா… அவன் வாழ்க்கையே இதனாலே பாழா போயிடும். நம்ம ஊரிலே திரும்பி  சர்டிஃபிகேட் வாங்குறது கஷ்டம். விட்டுடுங்கபா” என நெக்குருகி அவரிடம் வேண்டுதல் வைத்தாள்.

ஆனால் இதுநாள் வரை தான் சொல்வதை மறுக்காமல் செய்தவள், முதல் முறையாக எதிர்த்து பேசவும் அவருக்குள் வெறி கூடியது.

“அவன் சர்டிஃபிகேட்டை கிழிச்சு போடுறீயா? இல்லை நான் இவனை கொன்னு போடட்டுமா?” என்று ஆங்காரமாய் கத்தியவர், பக்கத்திலிருந்த கத்தியை கையில் எடுத்து அவன் கழுத்தில் வைத்தார்.

அதைக் கண்டு அன்னையின் உள்ளமும் தங்கையின் உள்ளமும் பதறிப் போனது.

“அப்பா ப்ளீஸ்பா, இப்படி பண்ணாதீங்க பயமா இருக்கு” என மேகா அலறவும், “ஐயோ என் பையனை விட்டுடுங்க” என்று காஞ்சனா ஒரு புறமாய் கத்தவும் ஏற்கெனவே தான் பேசுவதை கேட்கவில்லை என்ற  வெறியிலிருந்தவர்
மொத்தமாய் தன் நிதானத்தை இழந்திருந்தார்.

“ஒழுங்கா அந்த ஆதாரத்தை எரிங்க… இல்லை இவனை இந்த உலகத்துலேயே விட்டு வெச்சு இருக்க மாட்டேன். இவன் ஐ.ஏ.எஸ் தீவிரவாதி இந்த உலகத்தையே அழிக்க வந்தவன்” என பித்தின் உச்சில் பிதற்றியவரின் கைவளைவில் இருந்தவன்,

“அப்பா என்னை விட்டுடுங்கபா… உங்களை பார்க்கவே பயமா இருக்கு” என்று இறுதியிலும் இறுதியாய் கெஞ்ச, அவன் குரல் விநாயகத்தின் மூளையில் பல ரசாயான மாற்றங்களை நிகழ்த்தியது.

தலையை பிடித்துக் கொண்டவர் அவன்  பேசுவதை  நிறுத்துவதற்காக சட்டென அவன் தொண்டையில் கத்தியை இறக்கினார்.

ஆனாலும் அவர் முகத்திலிருந்த வெறி குறையவில்லை. கழுத்திலிருந்த கத்தியை எடுத்து வயிற்றில் இறக்கி அவனை மொத்தமாய் இறக்க செய்தார்.

இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத காஞ்சனா துடித்து மகனை மடியில் ஏந்தி மார்பில் அடித்துக் கொண்டு அழ, மேகாவின் முகத்தில் துளி உணர்வு  இல்லை.

உயிரற்ற கூடாய் இருந்த தன் தம்பியையே  வெறித்தபடி இருந்தாள். அவன் இறுதி ஊர்வலத்தில் கூட இறுதியாய் ஒரு துளி கண்ணீர் சிந்தவில்லை. மூலையில் சென்று தன்னைத் தானே குறுக்கிக் கொண்டு அமர்ந்தவள் அதன் பின்பு நிமிரவே இல்லை.

ஒரு இறப்பு நடந்த பின்பும், வீட்டிலேயே விநாயகத்தை வைத்திருப்பது ஆபத்து என்று உணர்ந்தவர்கள், அவரை வீட்டுக்கு அருகிலிருந்த அறையில் இரும்பு கம்பிகளுக்கு பின்னால் அடைத்து வைத்துவிட்டனர்.

மேகா அந்த அறையிலிருந்த தன் தகப்பனையே வெறித்தபடி நின்று கொண்டிருப்பாள்.

அது வரை மானாய் துள்ளி திரிந்தவள் ஒரு அறைக்குள் அடைப்பட்டு போனாள்.

அவளுக்கு ஏனோ இந்த உலகத்தை எதிர் கொள்ள பயம். கல்லூரியின் இரண்டாவது ஆண்டில் இருந்தவள் அதன் பின்பு படிப்பதற்கு வெளியே செல்லவே இல்லை.

எதையோ வெறித்தபடி இருக்கும் விழிகள், யார் என்ன சொன்னாலும் மறுகேள்வி கேட்காமல் அப்படியே செய்வது என ஆளே மாறிப் போய் இருந்தாள்.

ஒரு வருடம் ஆகியும் அவள் தன் தம்பியின் இழப்பிலிருந்து மீண்டு வரவில்லை, உதட்டில் புன்னகை மின்னல் ஒளிரவும் இல்லை என்பதை உணர்ந்த காஞ்சனா, அவளுக்கு நல்ல இடமாற்றம் வேண்டும் என்று நினைத்தார்.

இந்த மன உளைச்சல் நிறைந்த தன் சூழலிலிருந்து தள்ளியிருந்தால் தான் தன் மகளின் மனதில் வசந்த சாரல் வீசும் என்பதை உணர்ந்தவர் அவளுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தார்.

அப்போது தான், என்ன சொன்னாலும் கேட்கும் எதிர்த்துப் பேசாத மணமகளை காவ்ய நந்தனுக்காக சல்லடை போட்டு தேடிக் கொண்டிருந்த லட்சுமியின் கண்ணில் மேகா ஶ்ரீ விழுந்தாள்.

அதன் பின்பு வாழ்க்கை நடத்திய சதிராட்டத்தில் இப்போது முகில் நந்தனின் வானத்தில் மேகா ஶ்ரீ மேகமாய் தவழ துவங்கியிருந்தாள்.

நடந்து முடிந்த அனைத்தையும் கண்ணீரோடு சொன்ன காஞ்சனா, “என் பொண்ணு முகத்துலே சிரிப்பைப் பார்த்து ஒரு வருஷத்துக்கு மேலே ஆச்சுபா… அவள் முகத்திலே ஒரே ஒரு தடவையாவது சிரிப்பை பார்க்கணும்… வர வைச்சுடுவீங்கள்ல?” என ஏங்கிப் போய் கேட்டவரின் முன்னால் தன் கண்ணீரை பெரும்பாடு பட்டு மறைத்தான்.

“கண்டிப்பா மா… என் பொண்டாட்டி முகத்திலே சிரிப்பை வர வைப்பேன். அதை அழியாம பார்த்துப்பேன்” என்று கரகரத்து சொன்னவனின் இதயத்தில் மேலும் மேலும் பாரம் கூட அவசரமாய் அங்கிருந்து கிளம்பினான்.

ஆனால் செல்லும் முன்பு அவன் கண்கள் ஒரு முறை திரும்பி விநாயகத்தைப் பார்த்தது. அவன் விழிகளில் சொல்லெண்ணா துயரம்.

முகிலின் முகத்தில் மொழிப் பெயர்க்க முடியாத உணர்வுகள்.  இமய மலையின் பாரத்தோடு மேகா ஶ்ரீயின் முன்பு வந்து நின்றான்.

எப்போதும் போல சொன்னதை செய்துவிடுவதற்காக கட்டளையை எதிர்பார்த்து அட்டென்ஷனில் நின்றிருந்தாள்.

ஏன் அவள் என்ன சொன்னாலும் மறுக்காமல் கே கேட்கிறாள் என்று புரிந்தது. தன் அப்பா சொன்னததை கேட்காததால் தான் தம்பி இறந்துவிட்டான் என்ற எண்ணம் உள்ளுக்குள் ஆழமாய் பதிந்து இருக்கிறது.

சொன்னதை மீறி தானாய் முடிவெடுத்து ஒன்று செய்தால் தன் தம்பியை கொன்றுவிடுவார்கள் என்ற பயத்தில் உள்ளுக்குள் நத்தையாய் சுருண்டு கொள்கிறாள் என்பதும் புரிந்தது.

அவளின் உணர்வு சிந்தாத முகம் கண்டு அவன் கருவிழிக்குள் கண்ணீரின் திரட்சி.

அவன் வருத்தத்தைக் கண்டவள், “சாரிங்க, இந்த தடவை நான் கரெக்டா அந்த அஞ்சு டயலாக்ஸ் சொல்லிடுவேன். நம்புங்க… நீங்க சொல்றதை இனி கேட்பேன். ப்ளீஸ் இனி என் மேலே கோவப்படாதீங்க” என்றவள் பயந்து போய் சொல்லவும் முகில் நந்தன் கட்டுப்படுத்தி வைத்திருந்த உணர்வுகள் வெள்ளப் பெருக்காய் கரையை உடைத்தது.

உடைந்துப் போய் அவள் காலில் மண்டியிட்டவன், “என்னாலே இந்த குற்ற உணர்வை தாங்க முடியலையே மேகா… என்னாலே முடியலையே” என அவள் காலை கட்டிக் கொண்டவன் விசும்பலின் இடையே நொறுங்கிப் போய் பேசினான்.

“விநாயகம் அண்ணா என்னாலே இப்படி ஆனதை ஜீரணிச்சுக்கவே முடியலையே. நான் கோவத்துலே அவசரப்பட்டு தூக்கி வீசுன க்ளாஸ் உங்க குடும்பத்தையே சில்லு சில்லா நொறுக்கிடுச்சே” என குலுங்கி குலுங்கி அழுதவனை புரியாத பாவனை பார்த்து நின்றாள் மேகா ஶ்ரீ.