தாரகை – 14

கர்மா!

அது ஒரு கால சுழற்சி…

தெரிந்து ஒரு வினையை செய்தாலும் தெரியாமல் செய்தாலும் நாம் அந்த சுழலில் சுழன்று தான் ஆக வேண்டும்.

அப்படி தான் முகில் நந்தன், மீள முடியாத அந்த சுழலில் சிக்கி கொண்டிருந்தான்.

கல்லூரியில் முதுகலை முடித்த தருவாயில் ஏற்பட்ட சிறு பிரச்சனையில் தன் நிதானம் தவறிய அந்த ஒரு நொடி, இங்கே ஒரு குடும்பத்தின் முகவரியே மாறிப் போய் இருப்பதை அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை.

அவன் கோபத்தில் எறிந்த கண்ணாடி விநாயகத்தின் மேல் பட்டது தெரியும். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதிக்க கூட செய்தான். அப்போது சிறிய காயம் என்று மருத்துவர் சொன்னதை நம்பிவிட்டான். 

அவரிடம் தான் செய்ததற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு வெளிநாட்டிற்கு பறந்து சென்றவனுக்கு, ஏனோ இங்கு ஒரு குடும்ப கூடு முற்றிலும் கலைந்தது தெரியாது.

இப்போது தான் நடந்த உண்மையை உணர்ந்தான், தன்னுடைய முன்கோபம் ஒருவரின் வாழ்க்கை முன்னுரையை அழித்து இருக்கிறது என்று.

அதற்கான மன்னிப்புரையை எழுத வேண்டி மேகாவிடம் மண்டியிட்டு இருக்கின்றான். ஆனால் அவளோ உணர்வற்ற சிலையாய் நின்று கொண்டிருந்தாள்.

“மேகா மா… நான் பண்ண தப்புக்கு என்னை அடி, திட்டு, சாகடிக்க கூட செய்… ஆனால் இப்படி மௌனமா நின்னு கொல்லாதேடி… தாங்கிக்க முடியலை” என்று கதறியவனை கண்டு கல்லாய் நின்றவள் மெல்ல கட்டிலில் சென்று தன்னை சுருட்டி படுத்து கொண்டாள்.

அவளின் அந்த எதிர்வினையை கண்டு முகில் திணறினான்.

அழுது கோபப்படுபவர்களை சமாதானம் செய்துவிடலாம் ஆனால் மௌனத்தாலேயே கொல்லுபவர்களை என்ன செய்வது?

விடாமல் பேசுபவன் அவளின் முன்பு மொழியின்றி தவித்தான்.

மெல்ல அவளருகில் சென்றவன் நத்தையாய் சுருண்டு கிடந்தவளின் தலைமுடியை வாஞ்சையாய் கோதிவிட்டான். அவளிடம் எந்த அசைவும் இல்லை.

“நான் தப்பு பண்ணிட்டேன்டா… எனக்கு தண்டனை வேணும்” அவன் குரலில் யாசகனின் யாசிப்பு.

மறுமொழி இல்லை அந்த மங்கையாளிடம்.

“நான் வேணும்னு பண்ணலடா…” என்றான் மிக மெதுவாக. தான் வீசிய ஒரு கண்ணாடி கோப்பை ஒரு குடும்பத்தையே சில்லு சில்லாக உடைத்திருக்கிறது என்பதை எண்ண எண்ண அவனுக்குள் ஆற்றாமை வெடித்தது.

“மேகா மா…” என்று இதமாய் அழைத்தான். அப்போதும் அவள் வேர்கள் அசையவில்லை.

அவனுக்கு புரிந்தது. தனக்கான தண்டனை என்ன என்பது.

அவளுடைய மௌனம் தான் அவனுக்கான மிகப் பெரிய தண்டனை. அவளுடைய உணர்ச்சி வடியாத முகத்தைக் காணும் ஒவ்வொரு முறையும் ஏற்படும் குற்றவுணர்வு தான் அவனுக்கான மிகப் பெரிய நரக வதை.

கண்களில் சிந்திய கண்ணீர்த் துளிகளோடு, மெல்ல அருகில் சென்று படுத்தவன் சுருண்டு கிடந்தவளை பின்னாலிருந்து இறுக அணைத்துக் கொண்டு தானும் அந்த நட்டை கூட்டுக்குள் அடைக்கலம் அடைந்தான்.

அவள் விலக்கவும் இல்லை. அவனை திருப்பி அணைக்கவும் இல்லை. மரமாய் கிடந்தாள் அவன் அருகில்.

அவளின் இந்த மௌன நிலை கண்டு உள்ளுக்குள் நொடிந்துப் போனவன், அவளை மேலும் இறுக்கி கட்டி கொண்டு தலையை வருடியவாறே சாளரத்தின் வழியே தெரிந்த வானத்தை வெறித்தான்.

தன் கழுத்தில் குறுகுறுக்கும் அவன் குறுந்தாடியின் ஸ்பரிசத்தில் மேகா நெகிழவில்லை… விலகவில்லை. அவளும் மௌனமாய் ஜன்னலின் ஊடே வானை வெறிக்கத் துவங்கினாள்.

தெளிவில்லாத மேகக்கூட்டங்கள் வானில்…

இனி வானவில் காணுமா இந்த முகிலின் மேகங்கள்?

விடை விரைவில்…

💐💐💐💐💐💐💐💐💐

காவ்ய நந்தன்.

கூண்டுக்குள் அடைப்பட்ட சிறுத்தையின் சீற்றம் அவனிடம்.

அவனை மனதால் நெருங்க எழில் முற்படும் ஒவ்வொரு முறையும் அவளுக்கு சிறப்பாய் பல சம்பவங்கள் நடக்கும்.

இப்போதும் கூட அப்படி தான்…

இன்று அவனின் பிறந்தநாள். ஆசையாய் அவனுக்காக கேக் செய்து வாழ்த்து சொல்வதற்காக எழுப்ப முழித்துப் பார்த்தவனோ எழில்மதியின் முகத்தைக் கண்டதும் எண்ணெயில் போட்ட கடுகாய் கடுகடுத்தான்.

“ஹேப்பி பர்த்டே மாமா” சந்தோஷமாய் அவள் சொன்ன அடுத்த நொடி, கேக் ஏரோ ஃப்ளேன் மோடில் பறந்து வந்து எழிலின் முகத்தில் லேண்ட் ஆனது.

“சே… உன் முகத்திலே பிறந்த நாள் அன்னைக்கு முழிக்க வைச்சுட்டியேடி… இந்த கேக்கை எவன் கேட்டான். ஒழுங்கா எழுந்து போய் தொலை” என்றவனின் கர்ஜனையை கேட்டிருந்தால் காடே நடுங்கியிருக்கும்.

ஆனால் அதிர வேண்டியவளோ அதிராமல் அவனைப் பார்த்து கண் சிமிட்டினாள்.

“மாமா, கேக் நல்லா வந்து இருக்கு. ஆனால் ஸ்ட்ராபெரி ஃப்ளேவர் மட்டும் கொஞ்சம் தூக்கலா போட்டுட்டேன் போல”
அவன் கோபத்தில் தன் முகத்தில் அடித்த கேக்கை நாவால் தடவிப் பார்த்து சுவையை தரம் பிரித்து கொண்டிருக்க காவ்ய நந்தனிடம் கோபம் எகிறியது.

“ஏய்ய்ய்ய்…  எத்தனை தடவை அடிப்பட்டாலும் சூடு சொரணையே இல்லாமல் பின்னாடி பின்னாடி வரீயே… உனக்கு கொஞ்சம் கூட மானம் ரோஷம் இல்லையாடி” பல்லைக் கடித்து பேசியவன் புசுபுசுவென  மூச்சு வாங்கினான்.

அவன் தன் வாழ்நாளில் இத்தனை பெரிய பெரிய வசனங்களையெல்லாம் பேசியதே கிடையாது.

என்ன… ம்ம்… வேண்டாம்…  வேண்டும்… இந்த நான்கு வார்த்தைகள் தான் இதுவரை அவன் வாழ்க்கை அகராதியில் இருந்தது.

ஆனால் இப்போதோ நொடிக்கு நொடி முச்சு மூட்ட எழில்மதி பேச வைத்தாள். அவளைத் திட்டுவதற்காக அவளை காயப்படுத்துவதற்காகவாது பேசியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.

அவனுக்கு மூச்சு வாங்குவதைப் பார்த்து எழில் மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.

மூச்சுக்கு முன்னூறு முறை திட்டினாலும் பரவாயில்லை அவன் குரலை காதார கேட்க வேண்டும்.

காயப்படுத்துகிறாயா காயப்படுத்து… ஆனால் அருகில் இருந்து காயப்படுத்து என்னும் நிலையில் இருந்தாள் அவள்.

காதலின் இந்த பித்து நிலையை தான் அவன் தன்மானம் இல்லையா என்று கேட்கின்றான் என்று உணர்ந்தவள் உதட்டைப் பிதுக்கினாள்.

“எனக்கு நீ எவ்வளவு திட்டினாலும் கோவம் வராது… ஏன்னா எனக்கு உன்னை அவ்வளவு பிடிக்கும். நீ திட்ட ஆரம்பி மாமா… கன்டினியூ” என கண் அடித்தவளை வெட்டும் பார்வை பார்த்தான்.

“தன்மானத்தை இழந்து தான் ஒருத்தருக்கு பிடிச்சவங்களா மாறணும்னா அதுக்கு செத்துடலாம்டி… காதலா தன்மானமானு கேட்டா முதலிலே தன்மானத்தை தேர்ந்தெடுக்கணும். அப்போ தான் வாழ்க்கை சிதறாது”

“மானத்தை இழந்தாலும் உன்னை இழக்க மாட்டேன்… எனக்கு தன்மானத்தோட சேர்ந்த காதல் வேணும் மாமா… கிடைக்குமா?” என்றவளின் கேள்வி அவன் மூளைக்குள் சுறுசுறுவென கோபப்பட்டாசை பற்ற வைத்தது.

“அது கனவுலேயும் நடக்காதுடி… உன்னை காதலிக்கிறதுக்கு நான் தலைகீழா கிணத்துலே குதிச்சுடுவேன்” என்றவனை ஏக்கமாய்ப் பார்த்தாள்.

“என்ன பண்ணா என் மேலே காதல் வரும்?” என தன் கண்களை உருட்டி பாவமாக கேட்டவளை கண்டு பல்லைக் கடித்தவன்,

“பொய் சொன்னவள் மேலே எப்படி காதல் வரும்?  நீ செத்து கிடந்தா கூட பாவம் பார்த்து உன் மேலே காதல் வராதுடி. உன் காதலை அடைய உன் மானத்தை மட்டும் அழிக்காம என் கற்பையும் சேர்த்து அழிச்சுட்டியேடி” என்றவன் ஆற்ற மாட்டாமல் அருகிலிருந்த கண்ணாடியைப் போட்டு உடைக்க அது துண்டு துண்டாய் நொருங்கிப் போனது, அவள் மனதைப் போல…

அவள் கலங்கிய முகத்தைக் கண்டு மேலும் ஆத்திரமானவன்,
“ஏய்ய் இந்த நீலிக் கண்ணீர் வேஷம் எல்லாம் என் கிட்டே வேண்டாம். ஒழுங்கா என் கண்ணுலே படாம போயிடு. என் மனசை மாத்த ஆண்டவனாலே கூட முடியாது. என்னை மாத்தணும்னு  நினைச்சு என் முன்னாடி வந்து வார்த்தையாலே அடிப்படாதே…” என்றவன் வார்த்தையைக் கேட்டு சட்டென்று நிமிர்ந்தாள்.

அவள் மனதில் இதுநாள் வரை நெருஞ்சி முள்ளாய் குத்திக் கொண்டிருந்த ஒரு கேள்வியை இன்று நேராய் கேட்டுவிடும் வேகம் அவள் முகத்தில் இருந்தது.

“இன்னும் ஒரே ஒரு கேள்வி மட்டும் மாமா. இப்போ நான் பொய் சொன்னதாலே என் மேலே காதல் வரலனு சொல்ற அது சரி. ஆனால் ஏன் மாமா இதுக்கு முன்னாடி என்னை எங்கே பார்த்தாலும் முகத்தை திருப்பிக்கிட்டே? வெறுப்பா பார்த்த?.அப்போ நான் எந்த தப்பும் பண்ணலையே எந்த பொய்யும் சொல்லலையே… ஏன் என்னை முதலிலே இருந்தே வெறுக்கிற?” என்றவளின் கேள்விகளுக்கு அவன் இதழில் மௌன அலை அடித்தது.

அவள் கேள்வி சரி தானே…

இப்போது மட்டும் அல்ல, முன்னாலிருந்தே அவளை கண்டால் ஒதுங்கிவிடுவானே… நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேனே…

பதிலின்றி மௌனமாய் அவளை வெறித்தான்.

“நான் உன் மாமன் மகளா இல்லாமல் இருந்திருந்தா, என் மேலே ஒருவேளை காதல் வந்திருக்குமோ மாமா? இந்த அளவு என் மேலே வெறுப்பு வந்திருக்காது தானே?” என்றவளின் கூரிய கேள்வியில் மின்சாரம் பட்டவன் போல துடித்து நிமிர்ந்தான்.

“ஏய்ய்ய் நான் உன் அத்தை மகன் இல்லை.. அடுத்த தடவை என்னை மாமானு கூப்பிட்டே கொன்னுடுவேன்டி… ” என்றான் வெறுப்பின் உச்சத்தில்.

“நீ இல்லைனு மறுத்தாலும் உண்மையை மறுக்கவும் முடியாது, மாத்த முடியாதே மாமா… நீ  என் அத்தைக்கு பிறந்த மகன்னா நான் உன் மாமன் மகள் தானே?” என்றவளின் வார்த்தைக் கேட்டு அவன் முகமெங்கும் வருத்தநதி பாய்ந்தது.

எந்த கொடிய பக்கத்தை அவன் மறக்க விரும்புகின்றானோ… அதே வாழ்க்கை பக்கங்கள் இவளையும் இவள் அண்ணனையும் காணும் போது எல்லாம் அவனிற்கு நினைவு வந்து வலிக்க வைக்கிறது.

இவர்கள் முகத்தையே பார்க்கக்கூடாதென்று சின்ன வயதிலிருந்து அவர்களை கண்டாலே ஒதுங்கி வெறுத்து நின்றவன் அவன்…  ஆனால் இன்று அவர்களையே விலக்க முடியாத பந்தமாக்கிவிட்டது இந்த வாழ்க்கை.

எதிரில் நிற்பவள் தனக்கு மனைவி. அந்த திலக் வர்மாவோ தனக்கு மச்சான்…  நினைத்துப் பார்க்கும் போதே அவன் இதயம் வேப்பங்காயாய் கசக்க முகத்தை வெறுப்பாய் சுழித்தான்.

அவன் வெறுப்பு சிந்தும் முகத்தைக் கண்டு எழில்மதியின் வதனம் வேதனையை சிந்தியது.

“மாமா… நான் எந்த பாவமும் பண்ணலையே மாமா… உன்னை  கல்யாணத்திலே எல்லார் முன்னாடியும் கலங்கப்படுத்துனது தவிர… ஆனால் ஏன் மாமா எனக்கு மட்டும் ஆரம்பத்திலே இருந்து தண்டனை கொடுக்கிற?”

மாமா என்ற வார்த்தையை அவள் திரும்ப திரும்ப பிரயோகிக்க காவ்ய நந்தன் மதம் கொண்ட யானையாய் மாறினான்.

“ஏய்ய்ய்” என அவள் கழுத்தைப் பிடித்தவன், “அடுத்த தடவை அந்த வார்த்தையை சொன்ன, உன்னை பரலோகம் அனுப்பிடுவேன். எப்பவோ சின்ன வயசுலேயே முடிஞ்சு போன பந்தத்துக்கு உயிர் கொடுக்க நினைக்காதே. ஏன்னா உன் அப்பன் பண்ண பாவத்தாலே எப்போவோ அந்த உறவு சாம்பலா போயிடுச்சு” என்று ஆங்காரமாய் கத்தியவன் அவளது வெளிறிய முகத்தைக் கண்டு சட்டென்று கையைத் தளர்த்தினான்.

அணிலின் கோடுகள் போல மூன்று விரல்கள் அவள் கழுத்தில் ஆழமாய் பதிந்து இருந்தது. தெறித்த விழிகளோடு கண்களில் சிந்திய கண்ணீரோடு அவசரமாய் தொண்டையை இறுமி தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முயன்றவளைக் கண்டு காவ்ய நந்தனுக்குள் குற்றவுணர்வு பொங்கியது.

அவன் வளர்க்கப்பட்ட முறை இது அல்லவே. பெண்ணை மதிக்க வேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவன். கோபத்தில் பெண்ணை கை நீட்டி அடித்தால் நீ ஆண்மையில்லாதவன் என்று சொல்லி வளர்க்கப்பட்டவன்… இப்போது ஒரு பெண்ணை துடிக்க துடிக்க வார்த்தைகளாலும் கையாலும் சித்திரவதை செய்கின்றான்.

அவனுக்கு அவனை நினைத்தே அசிங்கமாய் இருந்தது. ஆனாலும் அவளை மன்னிக்கவும் ஏற்றுக் கொள்ளவும் அவன் உள்மனது இடம் கொடுக்கவில்லை.

தொண்டையைப் பிடித்துக் கொண்டு கண்ணீரோடு நின்றவளைக் கண்டு, “என்னை விட்டு போயிடு எழில்… உன்னை பார்க்கும் போதுலாம் நான் மிருகமா மாறுறேன். எனக்கு மனுஷனா வாழ ஆசை… ப்ளீஸ் என்னை வாழ விடு… போயிடு” என்று ஆழ்ந்த குரலில் கூர்மையாய் சொன்னவன் சட்டென்று அறையை விட்டு வெளியேறிவிட்டான்.

செல்லும் அவனையே விழி நீரோடு வெறித்தபடி நின்றாள் எழில்மதி.