தீங்கனியோ தீஞ்சுவையோ – 7

“டேய் ப்ரணவ் இன்னைக்கு எத்தனை தடவை நீ என் கிட்டே ஐ லவ் யூ சொன்ன??”

“ஹே இதையெல்லாம் கூடவா டி எண்ணிக்கிட்டு இருப்பாங்க… “

“என்னது சார் இதெல்லாமானு ரொம்ப சலிச்சுக்கிட்டே சொல்றா மாதிரி இருக்கு… அப்போ  என்னை லவ் பண்றது சார்க்கு ரொம்ப சலிச்சு போயிடுச்சோ?”

“ஹே என்னடி.. இப்படிலாம் பேசுற?”

“ஆமாம் அதான் உண்மை…  உனக்கு இப்போலாம்   என் கூட பேசுறது சலிச்சு தான் போயிடுச்சு.”

“ஐயோ அம்மு அப்படிலாம் இல்லைடி.. “

“என்ன நொப்படியெல்லாம் இல்லை… சரி நீ சொல்லு…இன்னைக்கு எத்தனை தடவை ஐ லவ் யூ சொன்ன?”

“ஒரு இருபது வாட்டி இருக்குமா??”

“கிழிச்ச… பதினேழு வாட்டி தான் சொன்ன… சரி நேத்து எத்தனை தடவை ஐ லவ் யூ சொன்ன??”

“ஏன்டி இன்னைக்கு சொன்னதே நியாபகத்துல இல்லை.. இதுல நேத்து சொன்னது எப்படி டி நியாபகத்துல இருக்கும்… “

“சே ஏன் டா  உன்னைப் போய் நான் லவ் பண்ணி தொலைச்சேன்… எத்தனை தடவை ஐ லவ் யூ னு சொன்னோம்ன்றதை மறந்து போறவனைப் போயா நான் காதலிச்சு இருக்கேன்… “

“ஹே இதெல்லாம் ரொம்ப அநியாயம் டி..”

“என்ன அநியாயம்.. இல்லை என்ன அநியாயம்னு கேட்கிறேன்… நேத்து நீ முப்பத்து மூணு வாட்டி ஐ லவ் யூ சொன்ன… அதுக்கு முன்னாடி நாள் அம்பத்தாறு வாட்டி ஐ லவ் யூ சொன்ன.. அதுக்கும் முன்னாடி நாள் எண்பத்து நாலு வாட்டி சொன்ன.. அதுக்கும் முன்னாடி நாளு… “

“ஐயோ ஐயோ போதும் டி போதும்.. லிஸ்ட் ரொம்ப பெருசா போய்க்கிட்டு இருக்கு… “

“ப்ரணவ் இந்த லிஸ்ட்ல இருந்து உனக்கு என்ன புரியுது.. “

“எதுவுமே புரியல டி.. “

“உன் மரமண்டைக்கு என்ன தான் புரிஞ்சு இருக்கு… இப்போ எல்லாம் நீ சொல்ற ஐ லவ் யூ வோட கணக்கு குறைஞ்சுக்கிட்டே வருது.. அப்போ காதலோட கணக்கும் குறைஞ்சுட்டு வருதுனு தானே அர்த்தம்… “

“ஐயோ  உத்ரா உனக்கு என்னனு சொல்லி புரிய வைப்பேன்டி.. சத்தியமா உன் மேலே வெச்ச காதல் எனக்கு குறையல டி.. “

“இல்லை இல்லை குறைஞ்சுடுச்சு… ” என்று சொல்லி அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்… அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன்

“அம்மு மூணு நாளா வொர்க் டென்ஷன்.. ஒரு பெரிய ப்ராஜெக்ட் அசைன் பண்ணி இருக்காங்க.. சீக்கிரமா முடிக்க சொல்லி டார்ச்சர் பண்றாங்க டி.. அதான் சரியா பேச முடியல டி.. கோச்சிக்காதே… உன்னை நேர்ல பார்த்ததும் மனசு லேசாச்சு.. உன் கிட்டே சந்தோஷமா பேசிக்கிட்டு இருக்கலாம்னு வந்தா.. சண்டை மட்டும் போட்டுக்கிட்டு இருக்கியே டி.. நான் என்ன பண்ணட்டும்… “

“நீ எதுவும் பண்ண வேண்டாம்… நானும் சண்டை போடல ” என்று சொல்லி அமைதியாகிவிட்டாள்.

அவளது அமைதி இவனைப் பாதித்தது.. அவள் திட்டிக் கொண்டு இருந்தால் கூட காது குளிர அவள் குரலை கேட்டு ரசித்து இருக்கலாம் போல.இப்படி மௌனித்துப் போனவளின் நிசப்தத்தை அவனால் கேட்கவே முடியவில்லை…

“ஹே உத்ரா நீ சண்டை கூட போடு டி.. ஆனால் இப்படி பேசாம அமைதியா இருக்காதே… “

“இல்லை டா. நான் பேசல… நான் பேசுனாதா உனக்கு டென்ஷனா இருக்குமே ப்ரஷர்ரா இருக்குமே..”

“அடியேய் நான் எப்போ டி அப்படி சொன்னேன்.. “

“இதோ இப்போ தானே சொன்ன… ஆபிஸ்ல பண்ற ப்ரஷர் போதாதுனு நீயும் ஏன் கோபப்படுத்துற  டென்ஷன் ஏத்துறனு சொன்னியே… ” என்றவளை பாவப்பட்ட முகத்துடன் பார்த்தான்.

“ஐயோ அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகிட்டாளே எனக்கு என்ன பண்றதுனு தெரியலையே.. இனி என்ன பேசுனாலும் சண்டைக்கு இழுப்பாளே..  பேசாம வாயை மூடிக்க வேண்டியது தான்” என்று அமைதியாகிவிட அவள் அதற்கும் சண்டை இழுத்தாள். ” உனக்கு என் கிட்டே பேசவே பிடிக்கலல” என்று…

“பேசாம நீ அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி” என்று மைண்ட் வாய்ஸ்ஸில் பேசியபடி தலையில் கைவைத்துக் கொண்டான்.

அவனுக்கு  புரிந்து தான் இருந்தது.  அவள் கொள்ளும்  ஊடல் எல்லாம் காதலின் வெளிப்பாடு தான் என்று. இவள் என்னை பரிசோதித்துப் பார்க்கிறாள் எவ்வளவு தூரம் நான் தாக்குப் பிடிக்கிறேன் என்று. சிரித்துக் கொண்டான்.

ஊடல் கொள்ளும் அவளை சமாளிக்க ஒரே வழி கூடல் கொள்வது தான்.

மெதுவாக அவளருகே நெருங்கினான். பேசிக் கொண்டு இருந்த இதழ்கள் தடைப்பட்டு போய் இவனை நோக்கியது. அவன் இவளை நோக்கி மெதுவாக வர அவன் சட்டையின் மீது  கைவைத்து தள்ளி ஓடிவிட்டாள். அவள் விட்டு விட்டு போன அந்த சட்டையின் கசங்கலையும் அதன் ஸ்பரிசத்தையும் வருடிக் கொண்டு இருந்தான் அவன்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

“41, 42, 43 ” என்று வாய்விட்டு எண்ணிக் கொண்டு இருந்த மகளை கேள்வியாக பார்த்தார்.. அவரின் கேள்விப் பார்வைக்கு வாய்மொழியில் பதிலளித்தாள் இவள்…

“இல்லை அம்மா.. அந்த ப்ரணவ் போன் பண்ணா எடுக்கவே இல்லை.. அதான் எத்தனை தடவை கால் attend பண்ணலனு எழுதுக்கிட்டு இருக்கேன் மா” என்று சொல்லிய மகளையே கவலையுடன் பார்த்தார்.. மனதினுள் அன்று அந்த ஜோசியர் சொன்ன வார்த்தைகள் ஒலித்தது..

எங்கோ இருக்கும் கிரகங்கள் இங்கு இருக்கும் மனிதர்களை ஆட்டிப் படைக்குமா?விதியை நிர்ணயிக்குமா?

மனமும் செயலும் தானே விதியை நிர்ணயிக்கும். ஆமாம் அந்த மனம் தான் என் குழந்தைகளின் விதியை நிர்ணயிக்கும் இந்த கிரகங்கள் அல்ல.

இந்த ஜாதகம் எல்லாம் பொய்.என் குழந்தைகளுக்கு ஒன்றும் ஆகாது. அவர்கள் பிரியவே மாட்டார்கள். இனி இந்த ஜாதகத்தை எடுத்துக் கொண்டு அந்த ஜோசியரிடம் செல்லவே மாட்டேன். என் குழந்தைகளின் வாழ்வு  இணைந்து தான் இருக்கும். என்று யோசித்த அந்த தாயின் மனமோ மீண்டும் மகளின் முகத்தைப் பார்த்து கவலைக் கொண்டது. இப்போதே என் பெண்ணின் முகத்தில் கவலையின் சின்னம் தெரிகிறதே. அவர் சொன்ன வார்த்தைகள் பலித்துவிடுமோ.. பலித்துவிடக்கூடாது கடவுளே என்று வேண்டியபடி அவளை கடந்து போனார்.

அவள் 76 என்று சொல்லிய போது பிரணவ் அவளது  அழைப்பை ஏற்று இருந்தான்… ஆனால் எடுத்தவன் வேக வேகமாக படபடத்தான்…

“அம்மு நான் அப்புறம் பேசுறேன் டி.. எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு.. பாய்” 

“அப்போ எனக்கு வேலை இல்லைனு சொல்ல வரீயா ப்ரணவ்.. “

“ஐயோ உத்ரா தயவு செஞ்சு போனை கட் பண்ணு ” என்று சொல்லியவன் அவள் பதிலை கூட எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்துவிட்டு இருந்தான்.

துண்டிக்கப்பட்ட அந்த அழைப்பை தாங்கிய அந்த அலைபேசியையே கண்களில் நீர் மறைக்க பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ஏன் சட்டென்று அழைப்பை துண்டித்தான். என்னிடம் பேசபிடிக்கவில்லையோ… இல்லை இல்லை அப்படி எல்லாம் இருக்காது.

அன்று போல் எனக்கு சப்ரைஸ் கொடுப்பதற்காக அழைப்பை துண்டித்து இருப்பான். எண்ணிய மாத்திரத்தில் புன்னகையில் இதழ்கள் விரிந்தது. ஓடிச் சென்று  வாயில் பக்கம் பார்த்து அமர்ந்தாள்.  ஏழு மணி நேரம் முழுவதாய்  முடிந்துவிட்டது ஆனால் அவன் வரவே இல்லை.  இதற்கு மேலும் அவன் வருவதற்கு சாத்தியங்களும் இல்லை.

அப்படி என்றால்  எனக்கு அவன் ஆனந்த அதிர்ச்சி தருவதற்காக அழைப்பை துண்டிக்கவில்லையா பேச பிடிக்காமல் தான் என் அழைப்பை துண்டித்து இருக்கிறானா?

நிதர்சனம் புரிந்து போனது..  இவ்வளவு நேரம் பைத்தியக்காரிப் போல் அவனுக்காக காத்திருந்த அவளை எண்ணி அவளுக்கே கழிவிரக்கம் வந்தது..  கண்களில் கண்ணீர் பிறந்தது.

உள்ளுக்குள் பிறந்த அழுகை பெருங்கேவலாக மாறும் முன்பு அறைக்கு ஓடி வந்து கதவை சாத்திக் கொண்டாள். கட்டிலில் விழுந்தவள் கதறி  அழ ஆரம்பிக்க தொடங்கி இருந்தாள்.

ஏன் பேச முடியவில்லை என்ற காரணத்தையாவது அவன் சொல்லி அழைப்பை துண்டித்து இருக்கலாம் அல்லவா..

ஏன் இப்படி என்னை புறக்கணித்தான். இப்போது எல்லாம் அவன் என்னிடம் சரியாகவே பேசுவதில்லை. ஏன் என்று கேட்டாலும் அணைத்து என்னை சமாதானப்படுத்தி விடுகின்றான்.

இனி அவன் பேச்சுக்கு நான் மயங்கப் போவதில்லை. அவனாக  அலைபேசியில் என்னை அழைக்கும் வரை அவனிடம் நான் பேசப் போவதில்லை.  முடிவெடுத்தவுடன் மனம் சமன்பட்டது. கண்களை துடைத்துக் கொண்டு அலைபேசியில் அவன் அழைப்பிற்காக காத்து இருந்தாள். அந்த நேரம் பார்த்து தொடுதிரை மிளிர்ந்தது. புன்னகையுடன் விரிந்த இதழ்கள் சட்டென்று காய்ந்து உதிர்ந்து போனது.  ஏமாற்றத்துடன் எடுத்து காதில் வைத்தவள்

“சொல்லு வினய்” என்றாள்.

“என்ன டாம் வாய்ஸ்ஸே சரியில்லை என்ன ஆச்சு?.. எடுத்த உடனே சொல்லு ஜெர்ரி னு தானே  சொல்லுவ உத்ரா. ஆனால் இப்போ என்ன ஆச்சு ஏன் வினய்னு கூப்பிடுற”

“ஒன்னும் இல்லை ஜெர்ரி.. “

“இல்லை டாம் இப்போலாம் நீ ரொம்ப மாறிட்ட… வர வர என்னை டாம்னு கூப்பிடுறதையே நிறுத்திட்ட… சரி நீ சொல்லு நேத்து எத்தனை தடவை ஜெர்ரினு கூப்பிட்ட??… “

“இதை எல்லாம் கூடவா நியாபகம் வெச்சு இருப்பாங்க” என்று சலிப்பான குரலில் சொன்னவளுக்கு மூளையில் மின்னல் அடித்தது.

ப்ரணவ்வும் என்னிடம் இதே போல தானே சலிப்பாக கேட்டான்.

எத்தனை முறை ஐ லவ் யூ சொல்லி இருக்கிறாய் என்று நான் கேட்டதற்கு அவனும் என்னை மாதிரியே தானே இப்படி சலித்துக் கொண்டான்.

நான் எப்படி வினய்யை முக்கியமற்றவனாக கருதியதால் அந்த எண்ணிக்கையை மறந்து போனேனோ நியாபகத்தில் வைத்துக் கொள்ளவில்லையோ  அதே போல தானே ப்ரணவ் என்னை முக்கியமற்றவளாக கருதுகிறான் என்று நினைத்த மாத்திரத்தில் நின்று இருந்த  கண்ணீர் மீண்டும் வழிய துவங்கி இருந்தது.

“ஹே டாம் அழறீயா.. ஏன்  இப்போ எல்லாம் என் கிட்டே பேசும் போதுலாம் அழற?.. என்ன தான் மா ஆச்சு உனக்கு..  ” என வினய் வருத்தம் நிறைந்த குரலில் கேட்டான்.

இவனுக்கு என் மேல் இருக்கும் அக்கறையில் பத்தில் ஒரு பங்கு  கூட ப்ரணவ்விற்கு என் மேல் இல்லை. பெருமூச்சுவிட்டுக் கொண்டாள்.

“வினய் என்னவோ தெரியல மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னை சிரிக்க வையேன்.” என அவள் கேட்க

“அட டாம் உன்னை சிரிக்க வைக்கிறது தவிர்த்து இந்த ஜெர்ரிக்கு என்ன வேலை. உன் கண்ணீரை பார்த்துட்டு இந்த ப்ரெண்ட் சும்மா இருப்பானா? இதோ ஜோக்கு மழையா நான் பொழியப் போறேன்.. நீ நனையத் தயரா இரு.. ” என அவன் சொல்ல

” இவள் டபுள் ஓகே ” என்று சொல்லிவிட்டு அவன் சொன்ன காமெடிக்கு எல்லாம் மனம் நிறைந்து வாய்விட்டு சிரிக்க தொடங்கி இருந்தாள்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐

வினய் பேசும் வரை சிரித்துக் கொண்டு இருந்த அவள் அவன் அழைப்பை வைத்தவுடன் ப்ரணவ்வை நினைத்து மீண்டும் சோகமானாள்.

அவளுக்கு தெரியும் இப்போது அவள் சிரித்தது. வெறும் தற்சமய சிரிப்பு என்று.

அவளுடைய நிரந்தர சிரிப்பை ப்ரணவ்வால் மட்டுமே வெளிக் கொணர முடியும். காத்து இருந்தாள் அந்த நிரந்தர சிரிப்பு சிரிப்பதற்காக. ஆனால் ப்ரணவ் அவனாக அவளை அழைக்கவே இல்லை.

இவள் அவன் தன்னை தேடுகிறானா என்று பார்ப்பதற்காக அவன் தொடர்பு கொள்ளும் எல்லா வழிகளையும் முடக்கி போட்டு இருந்தாள். வாட்ஸ்அப்பிற்கு வரவே இல்லை. பேஸ்புக்கிற்குள் நுழையவே இல்லை. அவன் தன்னை தேடுவதற்காக காத்து இருந்தாள்.

ஆனால்  அவன் தேடுவதற்கு பதிலாய் வினய் தான் தேடினான். ஏன் அவள் ஆன்லைனிற்கே வரவில்லை என்று விசாரித்துவிட்டு போனான். ஏதாவது மனவருத்தமாக இருந்தால் என்னிடம் சொல் உன் நண்பன் நான் இருக்கின்றேன் என்று நம்பிக்கையை கூட கொடுத்துவிட்டு போனான்.

“ப்ரணவ் நீ போன் பண்ணி மூணு வாரம் ஆச்சு.. நானா மெசேஜோ, போன் காலோ பண்ணா தான் நீ என் கிட்டே பேசுவியா??.. நீயா என்ன தேட மாட்டியா??” என்று அவளது மனம் குமைந்தது.

சந்தோஷம் துள்ளி குதிக்கும் அவளது முகம் இப்போது அமைதியாகிப் போய் இருந்தது. போனையோ பார்த்துக் கொண்டு இருந்தாள்.

இப்பொழுது அழைத்துவிடுவான் என்ற நம்பிக்கையிலேயே அந்த போனை வெறித்துக் கொண்டு இருந்தாள்.

முன்பு எல்லாம் அலைபேசியில் பேசுவதற்காக தூக்கத்தை தொலைப்பேன். ஆனால் இப்போது எல்லாம் அவன்  பேசாததால் தூக்கத்தை தொலைக்கிறேன்.

ஆக அவன் அழைத்தாலும் சரி அழைக்காவிட்டாலும் சரி என் தூக்கம் தொலைய தான் போகிறது. ஆனால் முதல் ஒன்று ஆனந்த அவஸ்தை. இரண்டாவது ஒன்று பிரிவின் அவஸ்தை.

அந்த பிரிவின் அவஸ்தையை தாங்கவே முடியாமல் எப்போது அலைபேசியின் தொடுதிரை மிளிரும் என்று அதையே பார்த்து கொண்டு இருந்தாள்.

ஒரு வேளை நான் சைக்கோவாகிவிட்டேனோ என்றெல்லாம் எண்ணி வருந்தும் அளவிற்கு அந்த புறக்கணிப்பின் உக்கிரம் அவளை வாட்டி வதைத்தது.

அவன் பேசாதது என்னை இந்த அளவுக்கு வருத்தும் என்று தெரிந்தும் ஏன் பேசாமல் இருக்கின்றான். என் ப்ரணவ்வால் என்னை இந்த அளவிற்கு அழ வைக்க முடியுமா?

ஒரு நாளின் 86400 நொடிகளில் ஒரு நொடி   செலவழித்து என்னிடம் பேச முடியவில்லையா?

பணிச்சுமை என்றாய் சரி. நீண்ட காலமாக நீ சொன்னதை நான் நம்பி கொண்டு தான் இருக்கின்றேன். ஆனால் இன்று கூடவா என்னிடம் பேச முடியவில்லை.
என் பிறந்தநாளன்று கூடவா உனக்கு பேச நேரமில்லை.. இல்லை மறந்துபோய்விட்டாயா ப்ரணவ்?

அவளது பிறந்தநாள் முடியப் போகும் நேரமும் வந்தது. மணி 11.45 என்று காட்டியது. அவளை சுற்றி பரிசுப் பொருட்கள் இருந்தாலும் அலைபேசி முழுக்க வாழ்த்து செய்திகள் இருந்தாலும் மனதிற்கு நெருக்கமான அவனின் வாழ்த்து இல்லாதது கலங்கடித்தது.

இந்த வருட பிறந்தநாள் அவனின் வாழ்த்து இல்லாமலே முடியப் போகிறதா? கூடாது கூடாது என்று மனம் வேகமாய் அடித்துக் கொண்டது… தான் எடுத்த முடிவை மீறி அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

இன்னைக்கு எனக்கு பர்த்டே.. ஆனால் நீ எனக்கு விஷ் பண்ண வேண்டாம்” என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அவனுடைய வாழ்த்துக்காக காத்து இருந்தாள். சொல் ஒன்று செயல் வேறாக.

சிறிது நேரத்தில் அலைபேசி ஒளிர்ந்தது. அவனிடம் இருந்து தான் அழைப்பு வந்தது.வேகமாக காதில் எடுத்து வைத்தாள்.

“சாரி டி அம்மு.. வொர்க் டென்ஷன்ல மறந்துட்டேன்.. ஹேப்பி பர்த் டே” என்றான். அவள் ஹ்ஹ்ம் என்றாள். வேறு பதில் எதுவும் பேசாதவளாக…

“என்னடி எதுவும் பேச மாட்டேங்கிற”

“இல்லை பேச எனக்கு எதுவும் இல்லை ப்ரணவ்.. “

“ஹே அம்மு கோவமா இருக்கியா சாரி டி…”

“இல்லை இல்லை.. கோவமாலாம் இல்லை.. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்… “

“சாரி டி செல்லம்… நாளைக்கு நம்ம படத்துக்கு போலாம் ஓகே வா.. மேட்னி ஷோ.. ரெடியா இரு.. “

“இல்லை நான் வர மாட்டேன்.. நீ வேற யாரையாவது கூட்டிக்கிட்டு போ.. “

“ஹே என் லவ்வர் உன்னை விட்டுட்டு நான் வேற யாரை டி கூட்டிட்டு போவேன்.. “

“பரவால்லையே நான் உன் லவ்வர் னாச்சு நியாபகம் இருக்கே.. பேஷ் பேஷ்.. “

“அம்மு” என்றான் இறங்கிய குரலில்.. அந்த குரல் அவளை என்னவோ செய்ய

“சரி சரி நான் வரேன்.. இன்னும் ஒரு மாசத்திலே நம்மளோட second year love anniversary வருது… என் பேர்த்டே மாதிரி அதையும் மறந்து போயிடாதே.. அதுக்கு தான் முன்னாடியே சொல்றேன். “

“அம்மு சாரி டி மறந்ததுக்கு.. “

“சரி போதும் போதும் சாரி கேட்டது…

நாளைக்கு ஒழுங்கா டைம்க்கு வந்து சேரு. ” என்று சொல்லி அலைபேசியை துண்டித்தாள்.

பல நாட்கள் கழித்து அவனுடன் பேசிய திருப்தியில் நிம்மதியாக உறங்கிப் போனாள். காலையில் எழுந்தவள் கண்ணாடியின் முன்பு அரை மணி நேரமாக நின்று இருந்தாள். பல நாட்கள் கழித்து அவனைப் பார்க்க போகிறோம். அழகுப் பதுமையாய் அவன் முன்பு ஜொலிக்க வேண்டும் என்று தன்னை அழகுப் படுத்திக் கொண்டவள் கைப்பையை எடுத்து கொண்டு அவன் சொன்ன திரையரங்கிற்கு வந்து நின்றாள்.

அவள் வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிறது. திரைப்படம் ஆரம்பித்து அரை மணி நேரம் ஆகிறது.அவன் இன்னும் வந்த பாடில்லை. கைக்கடிகாரத்தை திருப்பி அவள் நேரத்தை பார்த்த பொழுது அவளின் முன்பு பைக் உறுமி கொண்டு வந்து நின்றது. நிமிர்ந்து அவனைப் பார்த்து முறைத்தாள்.

“சாரி டி.. லேட் ஆகிடுச்சு… ” என்று சொன்னவன் பைக்கை பார்க் செய்துவிட்டு மீண்டும் அவளிடம் வந்தான்.
கோபத்தில் இருந்த அவளது முகம் இன்னும் சமன்படவில்லை. அவள் வாய் திறந்து திட்டவும் இல்லை. வாய் திறந்து பேசவும் இல்லை. அமைதியாக இருந்தாள்.

அவளது கையைப் பற்றி கொண்டு திரையரங்கிற்குள் நுழைந்தான். முக்கியமான கதை எல்லாம் போய்விட்டு இருந்தது இவர்கள் உள்நுழைந்த போது…

சீட்டை தேடி இருவரும் அமர்ந்த பிறகும் அவள் எதுவும் பேசவில்லை.

அவளது அமைதி அவனை சுத்தமாக பாதிக்கக்கூடவில்லையா? சீட்டில் வந்து அமர்ந்தவன் அவளையும் பார்க்கவில்லை. திரைப்படத்தையும் பார்க்கவில்லை. போனை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.

அன்று போல் முதல் காட்சியை தவறவிட்டதால் இரண்டாவது காட்சிக்கு டிக்கெட் புக் செய்கிறான் போல என்று நினைத்த மாத்திரத்தில் புன்னகை விரிந்தது.

அடுத்த காட்சியில் அவனோடு இணைந்து முதலில் இருந்து திரைப்படம் பார்க்கலாம். இப்போது இவனைப் பார்த்து கொண்டு இருக்கலாம் என்று அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். ஆனால் அவன் மருந்துக்கு கூட திரும்பவில்லை. அலைபேசியையே பார்த்துக் கொண்டு இருந்தான். 

அவனுக்காக தான் செய்த அலங்காரங்கள் எல்லாம் அவனால் கவனிக்கப்படக்கூடவில்லை. கண்களால் அழகாய் இருக்கிறாய் என்று வியந்து ஒரு பார்வை கூட பார்க்கவில்லை. மனம் சஞ்சலம் உற்றது. அந்த சஞ்சலத்தை உண்டாக்கியவனின் தோளின் மீதே சாய்ந்து போக்கி கொள்ள பார்த்தாள்.

அவள் முகம் தன் தோளை தொட்டவுடன் அவனது கவனம் இவளின் பக்கம் திரும்பியது. இவளைப் பார்த்து புன்னகைத்து தலையை வருடியவன் மீண்டும் போனை பார்க்க துவங்கி இருந்தான். இவளுக்கு அழுகையே வந்துவிடும் போல இருந்தது. நிமிர்ந்து அமர்ந்தாள்.

“இதுக்கு நீ படத்துக்கு என்னை கூட்டிக்கிட்டு வராமலே இருக்கலாம் ப்ரணவ்..” என்றாள் வருத்தம் நிறைந்த குரலில். சட்டென திரும்பியவன்

“இல்லைடா ஒரு” என்று சொல்லி முடிப்பதற்குள் அவனது அலைபேசி அலறியது. எடுத்து காதில் வைத்தவன்

“ஓ அப்படியா உடனே வரேன்” என்று போனில் பதிலளித்துவிட்டு இவளிடம் திரும்பினான்.

” கொஞ்சம் அர்ஜன்ட் வொர்க் டா.. போயே ஆகணும்.. சாரி ” என்று இவளது பதிலை கூட எதிர்பாராமல் கிளம்பிவிட்டான். செல்லும் அவனையே விக்கித்துப் பார்த்தாள்.

அப்படியானால் நான் நினைத்தது போல் அடுத்தக் காட்சிக்கு டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை. வேறு யாருடனோ பேசிக் கொண்டு இருந்து இருக்கிறான் அவன்.

நான் தான் போலியாய் என்னை சமாதானம் செய்து கொண்டேன் போல. அவனின் ஒவ்வொரு புறக்கணிப்பையும் இப்படி தான் ஒவ்வொரு சமாதானம் சொல்லி நான் நியாயப்படுத்திக் கொண்டு இருந்து இருக்கிறேன்.

முன்பு எல்லாம் அவன் அரண்மனையின் ராணியாக என்னை தலையில் வைத்து தாங்கியவன் இப்போது எல்லாம் அந்த அரண்மனையில் படிந்து கிடக்கும் தூசைப் போல கூட என்னை மதிக்கவில்லை.

அவனது இன்மையை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்பது அவனுக்கு தெரியும் தானே. ஆனாலும் ஏன் என்னை இப்படி தனியாக இருக்க வைத்து வதைக்கிறான்.

அவன் என் நண்பனாக இத்தனை வருடங்கள்  இருந்த போது கூட என்னை விட்டு விலகியிருந்ததைப் போல் உணர்ந்ததில்லை. ஆனால் அவன் காதலனாக மாறிய  இரண்டே வருடத்தில் என்னை விட்டு விலகி எங்கேயோ போய் நிற்கிறானே.

அம்மா ஒவ்வொரு முறை அவனிடம் கல்யாணத்தை பற்றி பேசிய போது கூட இப்போது என்ன அவசரம் என்று தள்ளி போட்டு கொண்டே இருக்கின்றானே.. ஒரு வேளை என்னை கல்யாணம் செய்ய தயங்குகிறானோ.

இப்போது எல்லாம் அவன் என்னுடன் இல்லை. அவனது நினைவுகள் மட்டும் தான் என்னுடன் இருக்கிறது. அந்த அவனின் நினைவுகளுடன் பைத்தியக்காரி போல் சண்டை போடுகிறேன். அந்த அவனின் நினைவுகளுடன் காதல் செய்கிறேன்.  எப்போது இந்த நினைவுகள் எல்லாம் மறைந்து என்னை முன்பு போல் காதலித்த அந்த ப்ரணவ்வின் நிஜவுரு வரும் என்று யோசித்தபடியே விக்கித்து அமர்ந்து இருந்தவளது செல்போன் அலறியது. எடுத்து காதில் வைத்தாள். வினய் தான் அழைத்து இருந்தான்.

“ஓய் டாம் லெப்ட்ல திரும்பு.. இப்போ ரைட்ல திரும்பு.. அப்படியே நேரா பாரு… ஓகே மா தேங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு காலை கட் செய்தான்.

என்ன ஆயிற்று இந்த ஜெர்ரிக்கு எதற்கு திடீர் என்று சம்பந்தமே இல்லாமல் பேசிவிட்டு போனை கட் செய்தான். என்று யோசனையில் இருந்தவளது அருகில் இன்னொரு உருவம் வந்து அமர்ந்தது.

திரும்பி பார்த்தவளது கண்கள் வினய்யின் உருவத்தை காட்டியது. அவனை ஆச்சர்யமாக பார்த்தாள்.

“தூரத்துல இருந்து பார்த்தா உன்னை மாதிரியே தெரிஞ்சது உத்ரா… அதான் உனக்கு போன் பண்ணி நீ தானு கன்ஃபார்ம் பண்ணிட்டு வந்தேன்..  ஆமாம் ஏன் டாம்.. தனியா படத்துக்கு வந்து இருக்க??” என்று அவன் கேட்க சின்ன சிரிப்பை பரிசளித்துவிட்டு அந்த கேள்வியை தவிர்த்தாள்.

“ஓய் ஜெர்ரி இன்டர்வெல் போட்டுட்டாங்க.. நான் போய் பாப் கார்ன் வாங்கிட்டு வரேன்.. ” என்று சொல்லிவிட்டு சென்றவன் பாப்கார்னோடு திரும்ப வந்தான்.மீண்டும் அடுத்த பாதி படம் ஆரம்பித்தது. ஆனால் படத்தில் அவளது கவனம் இல்லாமல்

இருக்க ” என்ன ஆச்சு டாம்?” என்று கேட்டான்.

அவளோ ” இல்லை ஜெர்ரி படம் ஸ்டார்ட்டிங்ல வரல.. அதனாலே கதை புரியல” என்றாள்.

அவன் மீதி கதையை விளக்க படத்தின் பிற்பாதியை அவனுடன் சிரிப்புடன் பார்க்கத் துவங்கினாள். இடையில் பாப்கார்ன் எடுப்பதற்காக அவள் கையை நுழைக்க அவனும் அதே சமயம் கையை நுழைத்து இருந்தான். அவள் சடாரென்று நிமிர்ந்து பார்க்க அவனும் படக்கென்று அவளை நிமிர்ந்து பார்த்தான்.