தீயாகிய மங்கை நீயடி – 02

ei34NQ073963-6e346cc4

***** கல்லூரி வளாகம்

காலை நேரத்திற்கே உரிய பரபரப்புடன் ***** கல்லூரி வளாகம் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்க, தனது நிறுத்தத்தில் இறங்கிக் கொண்ட அருந்ததி தன்னைப் பின் தொடர்ந்து வந்த நபரைக் கண்டு கொள்ளாமல் வேகமாக முன்னேறி நடந்து செல்லத் தொடங்கினாள்.

ஆனால் அவளது நடையின் வேகத்தை எட்டியே ஆகவேண்டும் என்பது போல அவளைப் பின் தொடர்ந்து வந்த அந்த நபர், “அருந்ததி நில்லு, நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும். ப்ளீஸ், அருந்ததி நில்லு” என்றவாறே அவளைப் பின் தொடர்ந்து வர, அவர்களைக் கடந்து சென்று கொண்டிருந்த நபர்கள் எல்லோரும் அவர்கள் இருவரையும் விசித்திரமாக பார்த்துக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தனர்.

“அருந்ததி, ஒரு தடவை நான் சொல்லுறதைக் கேளும்மா”

“எனக்கு உங்ககூட பேச விருப்பமில்லை. தயவுசெய்து என் பின்னாடி வர வேண்டாம்” அருந்ததி தன் பின்னால் வந்து கொண்டிருந்தவனைத் திரும்பிப் பாராமலேயே நடந்து சென்று கொண்டிருக்க,

அவள் எதிர்ப்புறமாக நடந்து வந்து கொண்டிருந்த பெண் ஒருத்தி, “அருந்ததி, கதிர் உன்னை ரொம்ப நேரமாக கூப்பிடுறான் பாரு” என்று கூற,

அவளைத் தன்னால் முடிந்த மட்டும் முறைத்துப் பார்த்தவள், “உன் வேலை முடிஞ்சுடுச்சா? கிளம்பு” என்றபடியே சலிப்புடன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த நபரைத் திரும்பிப் பார்த்தாள்.

“கதிர், உங்க பிரச்சினைதான் என்ன? எதற்காக என்னை இப்படி தினமும் பாலோ பண்ணிட்டு வர்றீங்க?”

“நான் எதற்காக உன் பின்னாடியே வர்றேன்னு உனக்குத் தெரியாதா அரு?”

“கால் மீ அருந்ததி. இந்த அரு, சொறுன்னு சொல்லும் விளையாட்டு எல்லாம் என்கிட்ட வேண்டாம்”

“சரி, சாரி அருந்ததி. எதற்காக நீ என்னை இப்படி அவாய்ட் பண்ணுற?”

“நான் எதற்காக உங்களை விட்டு விலகிப் போறேன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன?”

“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப் போறிங்க கதிர்? நான் ஆரம்பத்திலேயே உங்க கிட்ட சொல்லிட்டேன், எனக்கு இந்தக் காதல் மேலே எல்லாம் நம்பிக்கை கிடையாதுன்னு. அதற்கு அப்புறமும் எதற்காக நீங்க வீணாக உங்க நேரத்தை வீணடிக்குறீங்க?”

“என்னைக்காவது ஒரு நாள் நீ என் காதலைப் புரிஞ்சுக்குவேன்னு தான்”

“அது ஒரு நாளும் நடக்காது” அருந்ததி தன் முன்னால் நின்று கொண்டிருந்தவனைப் பார்த்து உறுதியான குரலில் கூறி விட்டு அங்கிருந்து செல்லப் போன தருணம்,

“அப்போ நாம கல்யாணம் பண்ணிக்கலாமா அருந்ததி?” என்ற கதிரின் கேள்வியில் அதிர்ச்சியாக அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“நீ எதற்காக காதல் மேலே நம்பிக்கை இல்லைன்னு சொல்லுறேன்னு எனக்குத் தெரியும், எங்க நானும் மற்ற ஒன்றிரண்டு பசங்க மாதிரி காதல்ன்னு சொல்லிப் பழகிட்டு அப்புறம் ஏமாற்றிட்டுப் போயிடுவேனோன்னு தானே பயப்படுற?”

“இல்லை கதிர், அது…”

“நான் சொல்லி முடிச்சுடுறேன் அருந்ததி. உனக்கு நான் உன்னை ஏமாற்றிடுவேன்னு பயம்ன்னா நான் உன்னை இப்போவே கல்யாணம் பண்ணிக்க தயாராக இருக்கேன். இப்போதாவது உனக்கு என் மேலே நம்பிக்கை வருமா?”

“…….”

“சொல்லு அருந்ததி, நம்பிக்கை வருமா?”

“சரி, ஓகே, நான் உங்களை நம்புறேன். ஆனா ஒரு கன்டிஷன்”

“நீ ஓகே சொன்னதே எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கு, இதற்கு மேலே என்ன வேணும்? சரி, என்ன கன்டிஷன்னு மட்டும் சொல்லு, இப்போவே அதை செய்துடுறேன்”

“என்னைப் பற்றி எல்லா உண்மைகளையும் உங்க அம்மா, அப்பாகிட்ட சொல்லி அவங்க சம்மதத்துடன் எங்க வீட்டுக்கு சம்பந்தம் பண்ண வாங்க, அது போதும், என்ன சம்மதமா?” அருந்ததியின் கேள்வியில் அதிர்ச்சியாக அவளைப் பார்த்துக் கொண்டு நின்றவன்,

“அருந்ததி, அம்மா, அப்பா கிட்ட…” என்றபடியே தயங்கி நிற்க,

அவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவள், “நான் சொன்ன இந்தக் கன்டிஷன் உங்களுக்கு ஓகேன்னா அதற்கு அப்புறம் நாம இதைப்பற்றி மேலே பேசலாம். இப்போ கிளாசுக்கு நேரமாச்சு, நான் கிளம்புறேன்” என்று விட்டு அருந்ததி அங்கிருந்து நகர்ந்து சென்று விட, மறுபுறம் கதிர் அவள் சொன்ன விடயத்தைக் கேட்டு திகைத்துப்போய் நின்றான்.

எல்லோராலும் கதிர் என்றழைக்கப்படும் கதிர்வேலன் அந்த ஊரில் இருக்கும் பிரபல்யமான ஒரு அரசியல்வாதியின் மூத்த ஆண் வாரிசு.

கதிரின் தந்தை மாணிக்கம் பல நற்சேவைகளையாற்றும் ஒரு அரசியல்வாதியாக வெளியுலகிற்கு தெரிந்தாலும் உண்மையில் அவர் அத்தனை நல்லவர் ஒன்றும் கிடையாது, அவரது ஒவ்வொரு நற்சேவைகளுக்குப் பின்னாலும் ஏதாவது ஒரு உள்நோக்கம் இருந்து கொண்டேதான் இருக்கும்.

அதேநேரம் கதிரின் அன்னை சரஸ்வதி பெயருக்கு ஏற்றாற்போல் அந்த சரஸ்வதியின் மறு உருவம் என்றே கூறலாம்.

தன் மகன் என்றால் அவருக்கு அலாதிப் பிரியம், அவனுக்காக இந்த உலகத்தைக் கூட எதிர்த்து நிற்க அவர் தயங்க மாட்டார்.

கதிருக்கு அடுத்து ஒரு தங்கை, பெயர் பார்வதி, தற்போது பி.எஸ்.சி இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்.

கதிரின் குடும்பம் பல பரம்பரை பரம்பரையாக செல்வந்தர்களாக இருந்து வந்தாலும் அவனுக்குத் தன் விருப்பப்படி எதையும் செய்துதான் பழக்கம்.

அதனால்தான் என்னவோ தன் குடும்பத்தின் கண்காணிப்பின் கீழ் இருக்கும் பல நிறுவனங்களை மேற்பார்வை செய்யும் பொறுப்பை தன் தந்தையிடமே ஒப்படைத்திருந்தவன், தன் சிறு வயதுக் கனவான வழக்கறிஞராகும் படிப்பைத் தொடர ஆரம்பித்திருந்தான்.

வெகு ஆசைப்பட்டு அவன் தெரிவு செய்திருந்த இந்தக் கல்லூரியில் இணைந்த பின்புதான் அவனது வாழ்வில் அருந்ததியின் வருகையும் ஆரம்பித்திருந்தது.

ஆரம்பத்தில் அவளது வெளித்தோற்றத்தைப் பார்த்து ஈர்ப்புக் கொண்டு அவளைப் பின் தொடர ஆரம்பித்தவன், அருந்ததி அவளைப் பற்றிய உண்மைகளைச் சொன்ன பின்னர் இன்னமும் அவளை நேசிக்க ஆரம்பித்திருப்பதாக சொல்லி அவளைப் பின் தொடர்ந்து செல்வதை தன் வழக்கமாகக் கொண்டிருந்தான்.

என்றாவது ஒரு நாள் அருந்ததி தன் காதலை உணர்ந்து கொள்ளக் கூடும் என்ற நம்பிக்கையுடன் பெருமூச்சு விட்டபடியே கதிர் திரும்பிச் செல்லப் போன தருணம், அவனது தோளில் ஆதரவாக ஒரு கரம் பதிய சிறு குழப்பத்துடன் திரும்பிப் பார்த்தவன் அங்கே நின்று கொண்டிருந்த நபரைப் பார்த்து இயல்பாக புன்னகைத்துக் கொண்டான்.

“ஹேய் சபரி! நீ இன்னும் கிளாசுக்கு போகலையா?”

“கதிர், என்னடா இது?”

“என்ன, என்னடா? ஒண்ணும் இல்லை, வா கிளாசுக்கு போகலாம்”

“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப் போற கதிர்? அதுதான் அவ உன்னைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டாளே, இதற்கு மேலேயும் இப்படியே இருக்கப் போறியா?”

“டேய் சபரி, அதெல்லாம் உனக்கு சொன்னாப் புரியாதுடா”

“கதிர், நான் ஒண்ணு கேட்டால் தப்பாக எடுத்துக்க மாட்டியே?”

“ஹேய்! என்னடா இப்படி எல்லாம் கேட்குற? நீ என்னோட பெஸ்ட் பிரண்ட், உனக்கு இல்லாத உரிமையா? என்ன வேணும்னாலும் கேளுடா”

“நம்ம காலேஜில் எவ்வளவோ பொண்ணுங்க இருக்காங்க, ஏன் உன்னைச் சுற்றி சுற்றி எத்தனையோ பொண்ணுங்க வர்றாங்க. அப்படி இருக்கும் போது எல்லாப் பொண்ணுங்களையும் விட்டுட்டு எதற்காக நீ இப்படி ஒண்ணைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுற?”

“சபரி!” சபரியின் கேள்வி முடிவதற்குள் அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்த கதிர்,

“இன்னொரு தடவை அருந்ததியைப் பற்றி தப்பாக பேசுனேன்னு வை, அப்புறம் உன்னை என் பிரண்ட்ன்னு கூட பார்க்க மாட்டேன், ஜாக்கிரதை. நீ என்ன சொன்ன? இப்படி ஒண்ணா? ஏன் அவ மனுஷன் இல்லையா? அவ என்ன உயிரில்லாத ஜடமா? இன்னொரு தடவை அது, இதுன்னு அருந்ததியைப் பேசுன, உன்னைக் கொன்னுடுவேன்” தன் நண்பனை கோபமாக முறைத்துப் பார்த்துபடியே அங்கிருந்து நகர்ந்து சென்று விட, அந்த வழியாக திரும்பி வந்து கொண்டிருந்த அருந்ததி அவர்கள் இருவரது சம்பாஷணைகளையும் கேட்டு திகைத்துப்போய் நின்றாள்.

‘கதிர் எனக்காக எதற்காக இப்படி எல்லோர் கூடவும் சண்டை போடணும்? ஏன் நான் சொல்ல வர்றதை அவங்க புரிஞ்சுக்கவே மாட்டேங்குறாங்க. இவங்களுக்கு என்ன சொல்லி நான் புரிய வைக்கிறது?’ தன் மனதிற்குள் சூழ்ந்திருந்த பெரும் சிந்தனையோடு அருந்ததி அங்கிருந்து விலகிச் சென்று விட, கதிர் மற்றும் சபரி ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தனர்.

காலமும், இறைவனும் ஒரு சிலருக்கு சில வலிகளைக் கொடுத்த பின்புதான் அவர்களுக்கான வாழ்வின் இலக்கை நோக்கிய சரியான பாதையைக் காண்பிக்கும், அதேபோல அருந்ததியும் தன் வாழ்க்கையிலும் சில வலிகளைக் கடந்துதான் செல்ல வேண்டும்.

அந்த சந்தர்ப்பத்தில் அவள் அருந்ததியாக இல்லாமல் தீயாக மாற வேண்டிய நிலை கூட ஏற்படலாம், அந்த சந்தர்ப்பத்தில் அவளது மாற்றங்கள் எவ்வாறு இருக்கக்கூடும் என்பதை அந்த இறைவன் ஒருவனே அறிவான்.

***************

மாலை நேரம் தன் கல்லூரி முடிந்ததும் வழக்கமாக தான் செல்லும் பேருந்திற்காக அருந்ததி காத்துக் கொண்டு நின்ற நேரம் கதிர் மற்றும் சபரி அவளை நோக்கி நடந்து வந்து கொண்டிருக்க, அவளோ அவர்களைப் பார்த்து சலித்துக் கொண்டபடியே தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அருந்ததி இந்தக் கல்லூரியில் இணைந்த நாளிலிருந்து சபரி மீது அவளுக்கு எப்போதும் நல்ல அபிப்பிராயம் இருந்ததே இல்லை.

அவள் கல்லூரியில் இணைந்த பின்னர் கதிரிடம் தன்னைப் பற்றிய உண்மைகளை எல்லாம் சொன்ன பின்பு அந்த விடயங்களை எல்லாம் ஏதோ நகைச்சுவை போல வருவோர், போவோருக்கு எல்லாம் சொல்லி சொல்லி அவன் சிரித்ததைப் பார்த்ததிலிருந்து அவன் மீது அவளுக்கு ஒரு சிறு மதிப்பு கூட வந்ததில்லை.

இப்போது கூட கதிரின் வற்புறுத்கலுக்காகவே அவனுடன் இணைந்து நடந்து வருவது போல நடந்து வந்து கொண்டிருப்பவனைப் பார்த்து அவளுக்கு முற்றிலும் எரிச்சலாகவே இருந்தது.

வழக்கமாக நேரத்திற்கே வந்து விடும் தான் செல்லும் பேருந்து கூட இன்றைக்கு வேண்டுமென்றே தாமதிப்பது போல இருக்க, எப்படியாவது அவர்கள் தன்னருகில் வருவதற்குள் அங்கிருந்து சென்று விட வேண்டும் என்கிற எண்ணத்துடன் அவள் தன் மனதிற்குள் எல்லாத் தெய்வங்களையும் துணைக்கு அழைக்க, அவள் வேண்டுதலை ஏற்றுக் கொண்டது போல கதிர் சரியாக அவளது அருகில் வரும் வேளை அவளது பேருந்தும் அவள் முன்னால் வந்து நின்றது.

தன் முன்னால் நின்று கொண்டிருந்த பேருந்தைப் பார்த்ததுமே சந்தோஷம் பொங்க தன் பையை எடுத்துக்கொண்டு பேருந்தில் ஏறிக் கொண்டவள் மறந்தும் கூட கதிரின் புறம் திரும்பிப் பார்க்கவில்லை.

இன்றைய ஒரு நாளை எப்படியோ கடந்தாகி விட்டது என்கிற நிம்மதியான உணர்வுடன் அந்த பேருந்தின் இருக்கையில் அமர்ந்து கொண்டவள் இனி வரும் நாட்களையும் இவ்வாறுதானே கழித்து ஆகவேண்டும் என்கிற யோசனையுடன் தன் பயணத்தை தொடர ஆரம்பித்திருந்தாள்.

பலவிதமான யோசனைகளுடனும், குழப்பத்துடன் தன் வீட்டு அருகாமையில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டவள் சாலையைக் கடப்பதற்காக காத்துக் கொண்டு நின்ற நேரம், திடீரென ஒரு குழந்தை சாலையின் நடுவே ஓடிச் செல்லப் பார்க்க தன் பொருட்களை எல்லாம் அப்படியே கீழே போட்டு விட்டு அந்தக் குழந்தையின் பின்னால் ஓடியவள் மயிரிழையில் அந்தக் குழந்தையை விபத்தில் இருந்து காப்பாற்றியிருந்தாள்.

ஒரு சில நொடிகளுக்குள் எல்லாமே நடந்து முடிந்திருக்க, தன் குழந்தையைக் காணாமல் பதட்டத்துடன் ஓடி வந்த பெண்ணொருவர் அருந்ததியின் கையிலிருந்த தன் குழந்தையைப் பார்த்ததும் தன் இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்தபடியே கண்கள் கலங்க அவளது கையிலிருந்து தன் குழந்தையை வாங்கிக் கொண்டார்.

“ரொம்ப ரொம்ப நன்றிம்மா, நீ மட்டும் சரியான நேரத்திற்கு வரலேன்னா என் குழந்தைக்கு என்ன நடந்திருக்குமோ? நீ ரொம்ப நல்லா இருக்கணும்?” என்று அந்தக் குழந்தையின் அன்னை உணர்ச்சி வசப்பட்டவராக பேசிக் கொண்டு நிற்க, அவரருகில் நின்று கொண்டிருந்த இன்னொரு பெண் அருந்ததியை ஜாடையாக காட்டியபடி எதுவோ அவரது காதில் சொல்ல, அத்தனை நேரமாக புன்னகையுடன் பாராட்டிப் பேசிய அந்தப் பெண்ணின் முகம் நொடி நேரத்தில் இறுகிப் போனது.

“நீ எதற்காக என் குழந்தையைத் தொட்ட? உன்னை மாதிரி ஆளுங்களை எல்லாம் பார்த்துத்தான் என் குழந்தை பயந்து போய் ஓட ஆரம்பிச்சுடுச்சு. உங்களை எல்லாம் எதற்குத்தான் இப்படி எல்லோர் கூடவும் நடமாட விடுறாங்களோ? சீச்சீ! உன்னைப் போய் பாராட்டிப் பேசிட்டேனே” சிறிது நேரத்திற்கு முன்பு தன் குழந்தையைக் காப்பாற்றியதற்காக புகழ்ந்து பேசிய அதே பெண் இவர்தானா? என்பது போல ஆச்சரியமாக அவரைப் பார்த்துக் கொண்டு நின்ற அருந்ததி சிறு புன்னகையுடன் தன் பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு அந்த வீதியைக் கடந்து சென்று விட, அப்போதும் அங்கிருந்த நபர்கள் எல்லோரும் அவளை ஏளனமாகப் பார்த்துக் கொண்டேதான் நின்று கொண்டிருந்தனர்.

இப்படியான ஏளனப் பார்வைகளும், பேச்சுக்களும் அருந்ததி போன்றவர்களின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகிப் போனதால் என்னவோ அந்தப் பேச்சுக்களையும், பார்வையையும் பொருட்படுத்தாமல் தனது பாதையில் நடக்கத் தொடங்கியவள் ஒரு சில நிமிடங்களில் தனது வீட்டை வந்து சேர்ந்திருந்தாள்.

“அம்மா, சூடா ஒரு கப் காபி” என்றவாறே தனது காலணியைக் கழட்டிய அருந்ததி தங்கள் வீட்டு வாயிலில் நின்று கொண்டிருந்த புத்தம்புதிய ஸ்கூட்டரைப் பார்த்து வியந்து போய் நிற்க,

சிறு புன்னகையுடன் அவளின் பின்னால் நின்று கொண்டிருந்த வைஜயந்தி, “என்னாச்சு வக்கீல் மேடம்? வாசலிலேயே நிற்குறீங்க? ஓஹ்! சர்ப்ரைஸ் பார்த்து ஷாக்காகி நிற்குறீங்களா, என்ன? சரி, என்னோட ராணிம்மாவுக்கு இந்த ஸ்கூட்டி பிடிச்சிருக்கா? இல்லையா?” என்றவாறே அவளது முகத்தின் முன்னால் தன் கையிலிருந்த சாவியை ஆட்ட, அவளோ அவரை அதிர்ச்சியாகத் திரும்பிப் பார்த்தாள்.

“அம்மா, இது எனக்காகவா? ஐயோ! நான் இப்படி எல்லாம் நீங்க பண்ணுவீங்கன்னு நினைச்சுக் கூடப் பார்க்கலையே. ஆனா அம்மா, இது வாங்க ரொம்ப செலவு ஆகி இருக்குமே? அவ்வளவு பணம்? “

“செலவு ஆகும்தான், அதற்காக என் பொண்ணு விஷயத்தில் கணக்குப் பார்ப்பேனா? சின்ன வயதிலிருந்தே நான் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வைத்திருந்தேன்டா ராணிம்மா, எப்போதாவது ஒரு நாள் ஏதாவது ஒரு தேவை வரும்ன்னு நினைச்சுத்தான் சேமித்து வைத்தேன், அதேபோல இன்னைக்கு என் பொண்ணுக்காக அதைப் பயன்படுத்திக்கிட்டேன். எத்தனை நாளைக்குத்தான் என் பொண்ணு அடுத்தவங்க ஸ்கூட்டியை எடுத்து ஓடிப்பார்க்கிறது? அதுதான், அவ எடுத்து வைத்திருக்கும் லைசென்ஸ் காலாவதி ஆகுவதற்கு முதல் அவளுக்கென ஒரு வண்டியை எடுத்துக் கொடுத்துடணும்ன்னு முடிவு பண்ணேன். அவ்வளவுதான்” வைஜயந்தி புன்னகை முகமாக அருந்ததியின் தலையை வருடிக் கொடுக்க,

“அம்மா!” என்றவாறே அவரைத் தாவி அணைத்துக் கொண்டவள்,

“இந்த உலகத்திலேயே நீங்கதான் ரொம்ப ரொம்ப பெஸ்ட் அம்மா” என்றவாறே அவரது கன்னத்தில் முத்தமிட்டு விட்டு அங்கே நின்று கொண்டிருந்த வண்டியை ஆசையாக வருடிக் கொடுக்க ஆரம்பித்தாள்.

“வண்டி ரொம்ப சூப்பரா இருக்கும்மா, சரி, வாங்க. முதல்முதலாக என் வண்டியில் உங்களை வைத்துத்தான் ஒரு ரவுண்டு போகணும். வாங்கம்மா” வைஜயந்தி மறுப்பு சொல்ல சொல்லக் கேட்காமல் அவரது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தன் வண்டியில் அமரச் செய்தவள் மனம் நிறைந்த சந்தோஷத்துடன் தன் அன்னையுடன் இணைந்து அந்தப் பகுதியையே ஒரு வழி செய்திருந்தாள்.

தன் மகள் நித்தமும் பொது வாகனத்தில் செல்லும் போது சந்திக்கும் கஷ்டங்களிலிருந்து விலகியிருக்க ஒரு அன்னையாக தான் செய்தது சரிதான் என்கிற சிந்தனையுடன் அவளது புன்னகை நிறைந்த முகத்தைப் பார்த்து மெய்மறந்து போயிருந்த வைஜயந்தி இனி வரும் காலங்களிலும் அருந்ததி சந்திக்கப் போகும் கஷ்டங்களிலிருந்தும் அவளைக் காப்பாற்றுவாரா? இல்லையா? காலத்தின் போக்கில் நாமும் அறிந்து கொள்ளுவோம்…..