Uyir Vangum Rojave–EPI 28

ROSE-eade1c06

Uyir Vangum Rojave–EPI 28

அத்தியாயம் 28
இல்ல, எனகு எதுவுமே ஞாபகத்துக்கு வரல.இதுக்கு முன்னாடி இங்க வந்தேனா, உன்னைப் பார்த்தேனா, பேசுனேனா, லவ் பண்ணேனா எதுவும் தெரியல. ஆனா நீ எனக்காக பட்ட அடி, வேதனை, என் மேல வச்சிருக்கற பாசம், எனக்காக உயிரையும் கொடுக்கற உன் மனசு, இதெல்லாம் வச்சு இந்த நிமிஷத்துல இருந்து உன்னை லவ் பண்ணுறேன்
(பாவனா—தீபாவளி)
“என்னங்க ! இவனுக்கு கண்டிப்பா கல்யாணம் பண்ணி வைக்கனுமா?” கேட்டார் ராகவனின் அம்மா சாரதா.
“என்னம்மா இப்படி கேக்குற? பெத்த தாய் தான் மகனுக்கு கால் கட்டுப் போட்டா அடங்கிருவானுங்கன்னு சொல்லுவாங்க. நீ என்னன்னா இப்படி பேசுற” எரிச்சல் இருந்து நடராஜனின் குரலில்.
“ஒத்தப் பையனா போயிட்டான்னு செல்லம் குடுத்து அவன கெடுத்து வச்சிருக்கீங்க. நான் கண்டிக்கறப்பவும், அவன் முன்னுக்கே என்னை அடக்கி வச்சீட்டீங்க. இப்ப அம்மான்னு என்னை மதிக்கவே மாட்டிக்கிறான். ஊருல உள்ள எல்லா கெட்டப் பழக்கமும் இவனுள்ள குடியிருக்கு. எப்படிங்க இவனை நம்பி ஒரு பொண்ணு வாழ்க்கைய பணயம் வைக்கிறது? அதுவும் அந்த பொண்ணு சாந்தி, பார்க்கவே சாந்தமா இருக்கா. நாம் பார்க்க வளர்ந்த பொண்ணு. அவளுக்கு என்ன தலை எழுத்தா இவனைக் கட்டிகிட்டு மாரடிக்க?”
“சாரு! என் பார்ட்னர் சொத்து வெளிய போயிர கூடாதுனு தான் இந்தக் கல்யாணம். அவனே பொண்ண குடுக்க யோசிக்கல, உனக்கு ஏன் இந்த கவலை? இங்கப் பாரு, நை நைன்னு என் கழுத்த அறுக்காம போய் கல்யாண ஏற்பட்டைப் பாரு.” கத்தி விட்டு சென்றார் அவர்.
“இந்த ஆளக் கட்டிக்கிட்டு நான் சீரழிஞ்சது பத்தாதுன்னு, இன்னொரு பொண்ணு வாழ்க்கையும் அழிக்க பார்க்கறானுங்க. ஹ்ம்ம்! எல்லாம் கடவுள் விட்ட வழி. என் மாமியார் என்னை கொடுமை பண்ண மாதிரி இல்லாம, நான் அந்த பொண்ண மக மாதிரி பார்த்துக்குவேன். நான் பிள்ளைய வளர்த்த லட்சணத்துக்கு செய்யற பிராயச்சித்தமா போகட்டும்” புலம்பியவாறே சமயலறைக்குள் நுழைந்தார் சாரதா.
சாப்பிட வந்த மகனை, அமர வைத்துப் பரிமாறியவர்,
“ராகவா!”
“சொல்லும்மா”
“இன்னும் ஒரு வாரத்துல உனக்குக் கல்யாணம். அதுக்கு அப்புறமாவது கொஞ்சம் வேண்டாத பழக்கத்த எல்லாம் விட்டுருயா. அந்தப் பொண்ணு சாந்தி ரொம்ப நல்லவப்பா. சாது. கண் கலங்காம வச்சிக்கப்பா”
அம்மாவை நிமிர்ந்து பார்த்த ராகவன்,
“எனக்கு என்னம்மா குறை? காலையில கரெக்ட் டைமுக்கு எழலயா? அப்பா பிஸ்னச பார்த்துக்கலயா? லாபத்த தான் பெருக்கலயா? நானும் கொஞ்சம் நல்லவன் தான்மா. என்னை நம்பு. சாந்திய எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. அவ கொண்டு வர பணத்துக்காக மட்டும் இல்ல, அவ அழகுக்காவும் தான். அந்த அழகு என்னை எத்தனை நாள் கட்டி வைக்குதுன்னு பார்க்குறேன். வர போற உன் மருமக சாமார்த்தியசாலியா இருந்தா நான் ஏன் மா வெளிய போகப் போறேன்?” மயக்கும் சிரிப்பை சிந்தினான் மகன்.
தலையில் அடித்துக் கொண்டார் சாரதா.
‘ஒரு அம்மா கிட்ட பேசுற பேச்சா இது? இப்படி சிரிச்சு சிரிச்சே ஊருல உள்ளவளுக எல்லாத்தையும் மயக்கி வச்சிருக்கான். வேலையில ஹீரோவா இருந்து என்ன பண்ண, ஒழுக்கத்துல ஜீரோவா இல்ல இருக்கான். சாந்தி இவன் கிட்ட மயங்கி நிக்கறத பார்த்தாலே தெரியுது, அவள சுண்டு விரலுல முடிய போறான். அவ தலை எழுத்து அப்படினா நான் என்ன செய்ய முடியும். கடவுள் மேல பாரத்தைப் போட வேண்டியது தான்.’ கடவுளிடமே சரணடைந்தார் சாரதா.
ராகவனின் புத்திசாலித்தனத்தைப் பார்த்து அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார் நடராஜன். மகனின் அழகிலும், அறிவிலும் அவருக்கு அப்படி ஒரு பெருமை. மகன் கண் அசைவிலேயே அவன் ஆசையை நிறைவேற்றி வைப்பார் அவர். மாயக் கண்ணனைப் போல பார்ப்பவரை கவர்ந்திழுக்கும் காந்த சக்தி ராகவனிடம் இருந்தது. பதினாறு வயதில், மகன் கண்கள் பெண்களின் மேல் வலம் வருவதைப் பார்த்து, தன்னைப் போலவே மகன் என பெருமை அடைந்த தந்தை இவர் ஒருவராக தான் இருப்பார். அதற்கும் ஒரு படி மேலே போய், தனி வீடு வாங்கி கொடுத்து, மகன் பிறந்த நாளுக்கு அழகிய மாடல் பெண்ணை பரிசளித்த அபூர்வ தந்தையும் இவராக தான் இருக்கும். நடராஜனுக்கு பணமும் இருந்தது, மகனுக்கு செய்ய மனமும் இருந்தது.
“அம்மா, என்னோட துணிலாம் கொஞ்சம் பேக் பண்ணி வைங்க. ரெண்டு நாள் லண்டன் ட்ரிப் இருக்கு”
“ராகவா, இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம். இப்ப வெளிநாட்டுப் பயணம் அவசியமா?”
“ரெண்டு நாளுல வந்துருவேன்மா. கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்ச நாள் அடங்கி இருக்கனும்ல. அதுக்கு தான், கொஞ்சம் ரிலேக்ஸ் பண்ணிட்டு வரேன். அப்பா கிட்ட சொல்லிட்டேன்” சிரித்தான் அவன்.
‘லோக்கல் சரக்கு(பொண்ணு) அலுத்துருச்சுப் போல. பாரின் சரக்கு அடிக்க போறான். இவன் திருந்த மாட்டான்.’
சுற்றங்கள் சூழ, மந்திரங்கள் ஓத சாந்தியின் கழுத்தில் மஞ்சள் நாண் பூட்டி தனக்கு லீகலாக ஒரு அடிமையை செட் பண்ணிக் கொண்டான் ராகவன். சாந்தியின் கண்ணில் தெரிந்த மயக்கம் , சாரதாவின் வயிற்றில் புலியைக் கரைத்தது. இத்தனைக்கும் சாந்தி படித்தப் பெண். ஆனாலும் கட்டுக் கோப்பாக வளர்க்கப்பட்டவர். கணவனுக்குப் பணிந்து போவதும் பணிவிடை செய்வதும் தான் பெண்களின் கடமை என தன் தந்தையால் கற்பிக்கப்பட்டவர்.
அந்தக் காலத்தில், ஆங்கிலேயர்கள் பெண்களை திருமணத்துக்கு தயார் படுத்த என பள்ளி வைத்திருந்தார்களாம். அதில் பெண்கள் எப்படி நடக்க, சாப்பிட, உடுக்க, பேச, மயக்க வேண்டும் என கற்பிக்கப் படுமாம். அதில் தேர்ந்த பெண்களை சுயம்வர நடன விருந்துக்கு அழைத்து செல்வார்களாம். ஆண்கள் தங்களின் மனம் கவர்ந்த பெண்ணை அந்த நிகழ்ச்சியில் தேர்ந்தெடுத்து மணந்து கொள்வார்களாம்.
ஆங்கிலேயர்களைப் போல் செலவு பண்ணாமலே நம் நாட்டில் அழகாக பெண்ணை அடிமை சாசனம் எழுதி கொடுப்பார்கள். அதுவும் எப்படி ஒரே வாக்கியம் தான், ‘மாப்பிள்ளை மனம் கோணாமல் நடந்து கொள்’. கதை முடிந்தது. அன்பான கணவன் அமைந்தால் எல்லா பெண்ணும் வள்ளுவனின் வாசுகி ஆகிறாள். நேர் மாறானவனாக இருந்தால் அவளே கவுசிகனின் நளாயினியாகவும் ஆக்கப்படுகிறாள்.
சாரதா பயந்ததைப் போலவே, சாந்தியால் கணவனை ஒரு வாரம் கூட முந்தானையில் முடிந்து வைக்க முடியவில்லை. அவர் வீட்டிற்கு வரும் நேரம் குறைந்து, குறைந்து மறைந்து போனது.
“அத்தை !”
“சொல்லும்மா சாந்தி”
“அவரு வீட்டுக்கு வந்து மூனு நாள் ஆச்சு. எனக்கு பயமா இருக்கு”
மருமகளைத் தீர்க்கமாகப் பார்த்தார் சாரதா.
“உனக்கு என்ன நடக்குதுன்னு புரியலையா சாந்தி? நான் கல்யாணத்துக்கு முன்னமே எச்சரிச்சேனே. அதெல்லாம் நான் திருத்திருவேன் அத்தைன்னு வசனம் பேசுன. இப்ப என்ன ஆச்சு?”
கண் கலங்கினார் சாந்தி. மகளாய் நினைக்கும் மருமகளை கட்டிக் கொண்டார் சாரதா.
“இங்க பாருமா, இது புலி வால புடிச்சக் கதை தான். இந்த உறவுல இருந்து வெளிய போகவே முடியாது. அப்பனும் மகனும் விட மாட்டாங்க. அவங்களோட எந்த லீலையா இருந்தாலும், குடும்ப கௌரவத்துக்கு பங்கம் வராம திரை மறைவில தான் நடக்கும். நாம எதிர்க்கவும் முடியாது, இதுல இருந்து ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. நான் கொஞ்சம் சொல்லி பார்க்குறேன். காது குடுத்து கேட்க மாட்டான். இருந்தாலும் உனக்காக முயற்சி பண்ணுறேன்.”
மகனுக்கும் போனை போட்டார் சாரதா.
“சொல்லும்மா”
“எங்கடா இருக்க?”
“வேலையா இருக்கேன் மா”
“ராத்திரி ஒரு மணிக்கு உனக்கு என்ன வேலைன்னு எனக்குத் தெரியும். ஒழுங்கா வீட்டுக்கு வாடா. பொண்டாட்டின்னு ஒருத்தி இங்க உனக்காக காத்துக் கிட்டு இருக்கா தெரியுதா?”
“அந்த சாந்தி கிட்ட ‘சாந்தி’ கிடைக்கலன்னு தானம்மா வெளிய வந்துருக்கேன். திரும்பவும் வாடா, வாடான்னா எப்படிம்மா?” நக்கல் சிரிப்பு வெளிப்பட்டது ராகவனிடம்.
“ராகவா! பெண் பாவம் பொல்லாததுடா.”
“புதுசா எதாச்சும் சொல்லும்மா. போரடிக்கிது. சரி, சரி ! உன் மருமக பக்கத்துல இருந்தா போனைக் குடு”
“இந்தாம்மா, உன் கிட்ட பேசனுமாம்” போனைக் கொடுத்து விட்டு உள்ளே சென்று விட்டார் சாரதா.
“பீஸ்(peace) டார்லிங்! எப்படிடா இருக்க என் பொண்டாட்டி?” கொஞ்சினான்.
“அத்தான், நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? வீட்டுக்கு வாங்க அத்தான். நான் உங்கள ரொம்ப மிஸ் பண்ணுறேன்.”
“வரேண்டி பட்டுக் குட்டி. நீ அம்மா கிட்ட போய் கம்ப்ளென் பண்ணாம, அத்தானோட சட்டைய கட்டிப் பிடிச்சுட்டு தூங்குவியாம். இன்னும் ஒரு மணி நேரத்துல அந்த சட்டைக்கு பதிலா இந்த அத்தானே உன்னை கட்டிப் பிடிச்சுக்குவேனாம். அந்த மெருன் கலர் சேலைய கட்டிக்கிட்டுப் படுடி என் ராஜாத்தி. அதுல தான் நீ தேவதைக்கு அக்கா மக மாதிரி இருப்ப” என சிரித்தவன் போனிலேயே முத்தத்தை அள்ளி வழங்கினான். வெட்கச் சிரிப்புடன் போனை வைத்த சாந்தி, ஒரு வித மயக்கத்துடன் மாடி ஏறுவதைப் பார்த்தவாறு நின்றிருந்தார் சாரதா.
திருமணமான இரு மாதங்களிலேயே கருவுற்றார் சாந்தி. சாரதா மருமகளை பாசத்துடன் கவனித்துக் கொண்டார். ராகவனுக்குமே மனைவி கருவுற்றதில் அலாதி சந்தோசம். எங்கே சுற்றி அலைந்தாலும், வாரிசை கட்டிய மனைவியிடம் தானே எதிர்பார்க்க முடியும். மனைவி தன் பிள்ளையை சுமக்கும் நேரத்தில் அவரால் முடிந்த அளவு மனம் கோணாமல் வைத்துக் கொண்டார். தன் தந்தைப் தன்னை பாசத்தைக் கொட்டி வளர்த்தது போல் தன் மகனையும் வளர்க்க வேண்டும் என தீராத ஆசையில் இருந்தார். வயிற்றில் இருப்பது ஆண் பிள்ளை என முடிவே செய்து விட்டார் அவர்.
பிறக்காத பிள்ளை மேல், உயிரையே வைத்திருந்தார் ராகவன். அவரின் ஆசையை பொய்யாக்காமல், அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார் சாந்தி. மகனை வாரி உச்சி முகர்ந்த ராகவன், பிள்ளை பாசத்தில் வானில் மிதந்தார். நடராஜனும் பேரன் அழகில் சொக்கிப் போனார். சாரதாவுக்குத் தான் சர்வமும் ஆட்டம் கண்டது.
‘இவனுங்கள மாதிரியே என் பேரனையும் ஆக்கிருவானுங்களே, படு பாவிங்க! நான் உசுரோட இருக்கற வரைக்கும் அதுக்கு விட மாட்டேன்’ கங்கணம் கட்டிக் கொண்டார்.
டெலிவரி பார்த்த டாக்டர், ராகவனிடம் சாந்தியின் உடன் நிலை குறித்து பேச முற்பட்ட போது,
“டாக்டர், எதுவா இருந்தாலும், டால்க் டு மை மாம்.” என ஒதுங்கி கொண்டான் அவன்.
டாக்டர் அறைக்கு சென்ற சாரதா, வெளி வரும் போது கண்களை துடைத்தப் படியே வந்தார். ஆனால் மனதில் ஒரு வைராக்கியம் உண்டானது.
‘என் பேரனுக்கும், மருமகளுக்கும் நான் இருக்கேன். என் பேரனால இன்னொரு சாரதா, சாந்தி உருவாக விட மாட்டேன். ‘
மகனுக்கு கார்த்திக் என பெயர் சூட்டி அந்த குடும்பத்தின் முடிசூடா மன்னனாக்கினார் ராகவன். தாத்தாவும், அப்பாவும் வேலை நேரமும், ஜல்சா நேரமும் தவிர மற்ற நேரங்களில் கார்த்திக்கை சுற்றியே இருந்தார்கள். இவர்கள் இருவருக்கும் தெரியாமல் மெதுவாக சதுரங்க வேட்டையை ஆரம்பித்தார் சாரதா. அவர்களுக்கு எதிராக காய் நகர்த்தப் படுவது கூட தெரியாமல் இருவரும் தங்கள் சந்தோசத்தில் திளைத்திருந்தனர்.
அன்று காலையிலேயே வக்கீல் வீட்டில் இருப்பதைப் பார்த்து அப்பவுக்கும் மகனுக்கும் ஆச்சரியமாக இருந்தது.
“வாங்க வக்கீல் சார். என்ன விஷயம் காலையிலேயே வந்துருக்கீங்க?” வரவேற்றார் நடராஜன்.
“மேடம் வர சொன்னாங்க சார்”
‘சாரதாவா? எதுக்கு வர சொல்லிருக்கா? வயிற்றில் பயப்பந்து உருண்டது அவருக்கு.
நடராஜனின் அப்பா, இவரைப் போல் இல்லாமல், கடவுளுக்கு பயந்து வாழ்ந்தவர். மகனின் குத்தாட்டாம் பிடிக்காமல், சொத்தை எல்லாம் மருமகள் பெயருக்கு எழுதி வைத்திருந்தார். சொத்தை அனுபவிக்க மட்டும் அவருக்கு உரிமை இருந்தது. மேனேஜிங் டைரக்டராக இருந்து தொழிலை நடத்தினாலும் எதையும் விற்கவோ, புதிதாக வாங்கவோ சாரதாவின் அனுமதி தேவையாக இருந்தது. சாரதாவும் எதையும் கண்டு கொள்ளாமல், நீட்டிய இடத்தில் சைன் செய்ததால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் எல்லோருடைய வாழ்க்கையும் நகர்ந்தது.
“வாங்க சார். நான் சொன்ன மாதிரி டாக்குமெண்ட்ஸ் எல்லாம் ரெடி பண்ணீட்டீங்களா?” வந்து அமர்ந்தார் சாரதா.
குடும்ப உறுப்பினர் அனைவரும் கூடி இருந்தனர் அங்கே. தலையாட்டிய வக்கீல், அனைவரும் கேட்கும் படி சாரதா செய்த மாற்றங்களைப் படித்துக் காட்டினார். சொத்துக்கள் அனைத்தும் கார்த்திக்கின் பெயருக்கு மாற்றப் பட்டிருந்தன. அதிலிருந்து ஒரு பைசா கூட நடராஜனுக்கும், ராகவனுக்கும் சேராது. தொழிலும் கார்த்திக் தலை எடுக்கும் வரை சாரதா தேர்ந்தெடுத்த கைத்தேர்ந்த மேனேஜரால் நடத்தப் படும். சாந்தியின் சீதனமாக வந்த சொத்துக்கள் மட்டும் அவர் பெயரிலேயே இருக்கும். இது தான் வக்கீல் படித்த உயிலின் சாராம்சம்.
ஆடிப் போய் அமர்ந்து விட்டனர் அப்பாவும், மகனும்.
“நோ, இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன். ஏண்டி, இப்படி பண்ண? பேரனுக்கு எழுதி வச்ச சரி, ஆனா தொழில பார்க்கா அந்த மேனேஜர் யாருடி? உன் கள்ளக் காதலனா?” கத்தினார் நடராஜன்.
“அம்மா, என்னை இப்படியே கட் பண்ணி விட உங்களுக்கு எப்படிம்மா மனசு வந்தது? என்னை நீங்கத் தான் பெத்தீங்களா? இல்ல குப்பை தொட்டில இருந்து எடுத்துட்டு வந்தீங்களா?” கத்தினான் ராகவன்.
இருவரின் காட்டுக் கத்தலுக்கும் அமைதியாகவே பேரனை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார் சாரதா.
“வாய திறந்து பேசுடி. கமுக்கமா இருந்து கட்டுன புருஷன் கழுத்த அறுத்துட்டல்ல? இப்ப எதுக்குடி இந்த திடீர் முடிவு?”
“என் பேரனுக்காக தான்”
“அவனுக்கு என்ன? ராஜா வீட்டு சிங்கக் குட்டிடி அவன்.”
“சொத்து அவன் பேருலயே இருக்கட்டும். பழைய படி அதை அனுபவிக்கற உரிமைய உங்க ரெண்டு பேருக்கும் தரேன். ஆனா ஒரு கண்டிஷன் இருக்கு”
“சொத்து உன் கையில இருக்கவும் ஆடிப்பார்க்கறீயா? இருடி உன் ஆட்டத்தை அடக்குறேன்”
மெலிதாக புன்னகைத்தார் சாரதா.
“ஆடனும்னா, உங்கப்பா எனக்கு எழுதி வச்சப்பவே ஆடியிருப்பேன். இப்படி புருஷன், குழந்தைன்னு உங்களுக்காகவே வாழ்ந்திருக்க மாட்டேன். “ தொண்டையை செருமியவர்,
“கண்டிஷன சொல்லுங்க வக்கீல் சார்” என்றார்.
“கார்த்திக் தம்பிய, அம்மா ஊட்டில இருக்கற கேர் செண்டருக்கு மாத்தறாங்க. அவரு காலேஜ் போகற வரை அங்கேயே வளர்வாரு. அதுக்கு அப்புறம் அவருக்குப் பிடிச்ச காலேஜ்ல அவர் சேர்துக்கலாம். நீங்க ரெண்டு பேரும் வருசத்துல ரெண்டு தடவை மட்டும் அவர போய் பார்க்கலாம். வெளிய எங்கயும் கூட்டிட்டுப் போக முடியாது. அவரோட பதினெட்டு வயசுல அதிகாரம் எல்லாம் அவர் கையில வந்துரும். இருபத்தி ஒரு வயசுல தொழிலுல இருந்து நீங்க விலகி எல்லாத்தயும் அவர் கிட்ட ஒப்படைக்கனும். சொத்தையும், தொழிலையும் இவர் என்ன வேணும்னாலும் செய்யலாம். இதுக்கு நீங்க ஒத்துக்கிட்டா, பழைய படி கையில பணத்தோட இருக்கலாம், தொழில பார்க்கலாம். இந்த ரெண்டாவது ஒப்சன்ல இன்னொரு கிளை கண்டிஷன் இருக்கு. முன்ன மாதிரி எடுத்தோம் கவுத்தொம்னு செலவு பண்ண முடியாது. எல்லா கணக்கையும் ஆடிட்டர்கிட்ட பக்காவா காட்டனும். அதோட மாசம் பிறந்தா சுளையா ஒரு அமொண்ட் உங்களுக்கு சம்பளமா வந்துரும்.”
அப்பாவும், மகனும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டனர். தொழிலதிபர்களாக இருப்பதால் தான் தங்களுக்கு இந்த சமூகத்தில் மாலையும் மரியாதையும் கிடைத்து வருகிறது. இது காலி என்றால் கால் காசுக்கு யாரும் மதிக்க மாட்டார்கள் என புரிந்தது இருவருக்கும். அதோடு கையில் பணம் புரளாமல் இருட்டு வாழ்க்கை ஸ்தம்பித்து விடும் அபாயமும் இருந்தது. அதனால் வேறு வழியில்லாமல், பாசத்தை(கார்த்திக்) இழந்து பணத்தை மீட்டனர்.
கார்த்திக்கின் வாழ்க்கை ஒரு வயதில் இருந்தே ஊட்டியில் ஆரம்பித்தது. அழுது ஆர்ப்பாட்டம் செய்த சாந்தியை கெஞ்சியும் மிஞ்சியும் சமாளித்தார் சாரதா. சாந்திக்கு அப்பா மட்டும் தான் . அவரும் திருமணம் செய்து கொடுத்து சொத்தை சாந்திக்கு எழுதி வைத்தவுடன் கடமை முடிந்தது என வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்டார்.
கர்ப்பம் ஒன்பது மாதங்கள் நெருங்கியும் கூட சாந்திக்கு வாந்தி, மயக்கம், தலை வலி, உடல் வலி என படுத்தி எடுத்தது. வீக்காக வேறு இருந்தார். ஆபரேஷன் தான் செய்ய வேண்டும் என தேதி குறித்த டாக்டர்கள், பிள்ளையை வெளியே எடுத்ததும் தலையையும் அம்.அர்.ஐ டெஸ்ட் செய்து பார்த்து விடுவதாக சொல்லி இருந்தனர். ரத்தம் செக் செய்த போதே அவர்களுக்கு டியூமர் தான் என லேசாக சந்தேகம்.
குழந்தை பிறந்து டெஸ்ட் முடித்த டாக்டர்கள் அதையே ஊர்ஜிதப் படுத்தினார்கள். ஏற்கனவே பெண் பித்து பிடித்து அலையும் ராகவன், இதையே சாக்காக வைத்துக் கொண்டார்.
சாரதா தான் மருமகளுக்கு தாயாக நின்று இந்த நோயை எதிர்த்துப் போராட பக்கபலமாக இருந்தார்.
“சாந்தி, என் மகன் மேல எனக்கு நம்பிக்கை இல்ல. நான் இருக்கற வரைக்கும் உன்னைப் பார்த்துக்குவேன். உனக்கு தேவையான எல்லாம் நான் அரெஞ் பண்ணியிருக்கேன். தைரியமா போராடனும். உன் மகன ஒரு நல்ல இடத்துல சேர்த்துட்டேன். அவனுக்கு நல்ல ஒழுக்க முறைகள கத்துக் கொடுத்து அவங்க வளர்த்துருவாங்க. அவனுக்கு வயசு வரும் போது, வீட்டு நிலமை புரியனும். இந்த ஸ்தாபனத்த ஏற்று நடத்தும்போது ஒழுக்கமானவனாகவும், வேலை பார்க்கறவங்க மேல அக்கறை உள்ளவனாகவும் இருக்கனும். அவனுக்கு எல்லாம் தெரியனும்னு வக்கீல் கிட்ட என் கை பட எழுதிய லெட்டர் ஒன்னு குடுத்துருக்கேன். காலம் யாருக்கு என்ன எழுதி வச்சிருக்கோ தெரியலை. பார்கலாம்மா. நீ தைரியமா இரு. “ சொல்லிவிட்டு வீட்டுக்கு சென்றவர் மறுநாள் எழவில்லை. பதினைந்து வயது பெண்ணை விலைக்கு வாங்கி, தோட்ட வீட்டில் அடைத்து வைத்து லீலைகள் நடத்திய தொழிலதிபர் கைது என செய்தியை படித்து விட்டுப் படுத்தவர்தான்.
நடராஜனும் மானம் போனதில் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். பெற்றவர்கள் இருவருக்கும் ஈமச்சடங்கை நடத்துவதற்கு கூட தெம்பில்லாமல் ஓய்ந்து கிடந்தார் ராகவன். தந்தை பாசம் அவரை சுருட்டிப் போட்டிருந்தது. சாந்தி தான் தன் மன உறுதியால் எழுந்து வந்து காரியத்தை நடத்தினார். தாய்க்கு தாயாய் தாங்கிய அத்தையை மரியாதையாக அனுப்பி வைத்தார். வக்கீலை வைத்து மாமனாரின் கேசை வெளி வராமல் அமுக்கினார். இவ்வளவு போராட்டங்களின் நடுவில் ராகவனைக் கவனிக்கத் தவறினார் சாந்தி.
பாசமிழந்த பறவை நாட்டை விட்டு நாடோடியாக பறந்து சென்று இறங்கிய இடம்தான் இத்தாலி.

benvenuto in Italia (welcome to Italy)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!