தீயாகிய மங்கை நீயடி – 03

ei34NQ073963-2c77b3d5

தங்கள் வீட்டின் முன்னால் தன் வண்டியை நிறுத்தி விட்டு அந்த வழியாக போவோர் வருவோர் எல்லோரிடமும் தன் புது வண்டியைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டு நின்ற அருந்ததியைப் பார்த்து வைஜயந்தி பூரித்துப் போய் அமர்ந்திருந்தார் என்றால் மிகையாகாது.

சிறு வயதிலிருந்தே அவளது முகத்தில் மலரும் ஒரு சிறு புன்னகைக்காக தன்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்ய அவர் தயங்கியதே இல்லை.

சமூகத்தினால் ஒதுக்கப்பட்ட தனக்கு அன்னை என்ற ஒரு ஸ்தானத்தை தந்த அருந்ததி அவருக்கு எப்போதும் ஒரு வரப்பிரசாதமே.

தன் மகளின் சேட்டைகளை பார்த்து புன்னகைத்துக் கொண்டே இரவுணவு தயாரிக்கும் வேலைகளைக் கவனிக்க வைஜயந்தி சென்று விட, மறுபுறம் அருந்ததி தன் அன்னை கொடுத்த அந்த விலைமதிப்பற்ற பரிசை ஆசையாக வருடிக் கொடுத்தபடி அமர்ந்திருந்தாள்.

ஒருவேளை தன்னைப் பெற்றவர்கள் தனது உடலில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு தன்னை அவர்களுடனேயே வைத்திருந்தால் கூட வைஜயந்தி காண்பிக்கும் இப்படியான ஒரு பாசத்தை அவர்கள் காட்டியிருப்பார்களா என்பது கூட அவளுக்குத் தெரியாது.

காலை விடிந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை நித்தமும் தன்னைச் சுற்றியே வைஜயந்தியின் நினைவுகள் சுழன்று கொண்டிருக்கும் என்பது அவளுக்கும் நன்றாகவே தெரியும், அதனாலேயே அவர் மனது நோகும்படி எந்த ஒரு செயலையும் செய்து விடக்கூடாது என்பது அவளது எண்ணமாக இருந்தது.

அந்த ஒரு எண்ணத்தினால்தான் இன்றுவரை அவள் கதிரின் காதலைக் கூட ஏற்றுக் கொள்ள முயன்றதில்லை.

பல சமயங்களில் அவனது நடவடிக்கைகளையும், தன் மீதான கரிசனத்தையும் பார்த்து அவள் தன் மனதை அவன் வசம் தொலைத்திருக்கிறாள் தான், ஆனால் அவளது இலட்சியமும், சூழ்நிலையும் அந்தக் காதலை வெளிக்காட்ட அவளை அனுமதிக்கவில்லை.

அவளுக்குள்ளும் பல ஆசைகள், ஏக்கங்கள், விருப்பங்கள் என சொல்லிலடங்கா பொக்கிஷமான நினைவுகள் நிறைந்து போய் கிடந்தாலும் அதை இன்றுவரை யாரிடம் அவள் வாய் திறந்து சொன்னதில்லை.

என்றாவது ஒரு நாள் தன்னைப் போன்ற நபர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளும், தேவைகளும் பூர்த்தியாகும் போது தனது ஆசைகளையும் தன் விருப்பப்படி நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று அருந்ததி எண்ணியிருக்க, அத்தனை எளிதில் எல்லாம் நடந்து விடுமா என்ன?

அன்றைய நாள் கல்லூரி வளாகத்தில் நடந்த கதிருடனான தனது உரையாடலை எண்ணியபடி தங்கள் வீட்டு முற்றத்தில் அருந்ததி அமர்ந்திருந்த நேரம், “என்ன வக்கீல் அம்மா? உட்கார்ந்துட்டே தூங்குறீங்க போல?” என்றவாறே வசந்தி அவள் எதிரில் வந்து அமர்ந்து கொள்ள,

தன் சிந்தனையை தற்காலிகமாக இடைநிறுத்தி விட்டு புன்னகையுடன் அவரைத் திரும்பிப் பார்த்தவள், “நானாவது உட்கார்ந்துட்டே தூங்குறேன் வசந்திக்கா, ஆனா ஒரு சிலர் நடக்கும் போது கூட தூங்கிட்டே போய் எதிரில் வர்றவங்க எல்லோரையும் இடித்து தள்ளியதாக கேள்விப்பட்டேன், நீங்க கேள்விப்படலையா வசந்தி அக்கா?” என்று வினவ,

அவளை முறைத்துப் பார்த்துபடியே அவளது காதை பிடித்து கொண்டவர், “ஏன்டி வாயாடி! எப்போ பாரு என்னை ஏதாவது சொல்லிட்டே இருக்கணும்னு உங்க அம்மா கோயிலுக்கு ஏதாவது நேர்த்திக்கடன் செய்து விட்டுருக்காங்களா என்ன?” என்று வினவ, அவரைப் பார்த்து வாய் விட்டு சிரித்தவள் அவர் சுதாரித்துக் கொள்ளும் முன்னரே அவரது பிடியிலிருந்து லாவகமாக விலகி அமர்ந்து கொண்டாள்.

“அட! இது என்னங்க அநியாயம்? வக்கீல் ஐயாவோட சம்சாரம் எல்லோரையும் கலாய்ப்பாங்களாம், ஆனா அவங்களை யாராவது கலாய்ச்சா அதை ஏற்றுக் கொள்ள மாட்டாங்களாம். இதெல்லாம் அடுக்குமா? இதை யார் கிட்ட போய் முறையிடுறது? என்ன கொடுமை சரவணன் இது?”

“ஐயோ! ஆத்தா, தெரியாமல் சொல்லிட்டேன் மன்னிச்சுடுடிம்மா. வக்கீலுக்கு படிக்கப் போனதும் போன உன் வாய்க்கு ஓய்வே இல்லாமல் போயிடுச்சு. உன்னை எல்லாம் எந்த மகராசன் வைத்து சமாளிக்கப் போறானோ?” என்றவாறே வசந்தி வேண்டுமென்றே சோகமாக கேட்பது போல வானைப் பார்த்துப் பேசியபடி அமர்ந்திருக்க, அருந்ததியோ அவரது கேள்வியில் கதிரின் நினைவுகள் மேலோங்க சட்டென்று அமைதியாகிப் போனாள்.

எப்போதும் தனது பேச்சுக்கு பதிலுக்கு பதில் பேசும் அருந்ததி இப்போது திடீரென அமைதியாக அமர்ந்திருப்பதைப் பார்த்து சிறு குழப்பம் கொண்டவராக அவளது தோளில் தன் கையை வைத்து வசந்தி, “அருந்ததி, என்னடி ஆச்சு? ஏன் திடீர்னு அமைதியாகிட்ட? நான் சொன்னது ஏதாவது தப்பா?” என்று வினவ,

அவரைப் பார்த்து அவசரமாக மறுப்பாக தலையசைத்தவள், “ஐயோ! அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைக்கா. நான் எப்போதும் போலத்தான் இருக்கேன்” என்று கூற, அவரோ அவளது முகத்தை ஆராய்ச்சியாக உற்று நோக்கினார்.

“அக்கா, எதற்கு என் முகத்தை இப்படி பார்க்குறீங்க?”

“இல்லை, நீ என்னடான்னா எப்போதும் போலத்தான் இருக்கேன்னு சொல்லுற, ஆனா உன் கண்ணு அப்படி சொல்லலையே. ஏதோ ஒரு விஷயத்தை நீ மறைச்சு வைத்திருக்கிற மாதிரி இருக்கே. அருந்ததி, உனக்கு ஏதாவது பிரச்சினையா?”

“ஆமா அக்கா, இரண்டு நாளா சரியாக தூக்கமே இல்லை, ஒரே கொசுத்தொல்லை”

“அடி போடி இவளே!” அருந்ததியின் பேச்சில் சிறு கோபம் கொண்டவராக அவளது தோளில் தட்டிய வசந்தி,

“அருந்ததி, நான் விளையாட்டாக பேசல, உண்மையைச் சொல்லு. உன் முகமே சரியில்லை. காலேஜில் ஏதாவது பிரச்சினையா? யாராவது ஏதாவது சொன்னாங்களா? ஏதாவது பிரச்சினை இருந்தால் தயங்காமல் சொல்லும்மா, நான் மாறன் கிட்ட சொல்லி என்ன, ஏதுன்னு பார்க்க சொல்லுறேன்” எனவும்,

சிறு புன்னகையுடன் அவரது கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவள், “என் செல்ல அக்காவே! எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. போதுமா?” என்று வினவ, அவரோ அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தார்.

“இல்லை, நான் நம்ப மாட்டேன். இப்போ நீ என்ன விஷயம்ன்னு சொல்லலேன்னா நான் வைஜயந்தி அக்காவைக் கூப்பிட்டு அவங்க கிட்ட பேசுவேன், பரவாயில்லை தானே?” என்றவாறே வசந்தி வீட்டிற்குள் செல்லப் போக,

வேகமாக எட்டி அவரது கைகளைப் பிடித்துக் கொண்ட அருந்ததி, “ஐயோ அக்கா! ஏன் இப்படி பண்ணுறீங்க? அம்மாவுக்கு ஏற்கனவே என்னை நினைத்து ரொம்ப பயம், தினமும் நான் காலேஜ் போயிட்டு வீடு வர்ற வரைக்கும் ஒரே பதட்டத்துடன் இருப்பாங்க, அவங்க கிட்ட போய் நீங்க இப்படி ஏதாவது கேட்டால் அப்புறம் அவங்க எதுவும் இல்லாமலேயே இன்னும் பயப்பட ஆரம்பிச்சுடுவாங்க, ஷோ ப்ளீஸ், தயவுசெய்து உங்க பொன்னான வாயைக் கொஞ்சம் ஆஃப் பண்ணி வைங்கக்கா” என்று கூற,

அவளது தோளில் இன்னும் இரண்டு அடிகளைப் பரிசாக கொடுத்தவர், “எவ்வளவு சீரியஸாக பேசுனாலும் இந்த நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை” என்றவாறே அவளருகில் அமர்ந்து கொண்டவர் அவளது தலையை ஆதரவாக வருடிக் கொடுக்க ஆரம்பித்தார்.

“அருந்ததிம்மா, நம்மை மாதிரி ஆளுங்களுக்கு எந்த ரூபத்தில் எப்போ பிரச்சினை வரும்ன்னு சொல்லத் தெரியாது. ஆனா அதற்காக அதை வெளியே சொல்லாமல் மறைத்து வைக்கவும் கூடாது, நாளைக்கு நமக்கு நடந்த அதே பிரச்சினை நம்மைப் போல இன்னொருத்தருக்கு நடந்து அதற்கு அப்புறம் ஆரம்பத்திலேயே இதைப்பற்றி எல்லோரிடமும் பேசியிருக்கலாமேன்னு நினைத்து கவலைப்படுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லைம்மா. அதனால்தான் சொல்லுறேன், உனக்கு என்ன பிரச்சினை வந்தாலும் சரி வெளியே சொல்லிடு. ஒருவேளை வைஜயந்தி அக்கா கிட்ட சொல்லத் தயக்கமாக இருந்தால் இந்த வசந்தி அக்கா கிட்ட சொல்லு. இல்லைன்னா என் கிட்டவும் சொல்லத் தயக்கமாக இருந்தால் இங்கே இன்னும் எவ்வளவோ பேரு இருக்காங்க, அவங்க கிட்ட சொல்லு, ஆனா தயவுசெய்து எல்லாவற்றையும் மனதில் வைத்துக் கொண்டு கவலைப்படாதேம்மா. ஏதோ சொல்லணும்னு தோணுச்சு சொல்லிட்டேன், அவ்வளவுதான். நான் வர்றேன்” என்று விட்டு வசந்தி அங்கிருந்து எழுந்து கொள்ளப் போக,

அவரை நகர விடாமல் அவரது கையைப் பிடித்துக் கொண்டவள், “நான் சொல்லப் போகும் விடயத்தை தயவுசெய்து அம்மாகிட்ட சொல்லிடாதீங்க” என்றவள் சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்து விட்டு தன் கல்லூரி முடிந்து வரும் வேளையில் பேருந்து நிறுத்தத்தில் வைத்து நடந்த விடயங்களைப் பற்றி அவரிடம் பகிர்ந்து கொள்ள, அவரோ அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டு நின்றார்.

“அட கிறுக்குப் பொண்ணே! இந்த விடயத்தைப் பற்றி யோசித்துத்தான் இவ்வளவு நேரம் என்னைப் பதட்டப்பட வைத்தியா? இதெல்லாம் ஒரு விடயமா என்ன? இப்படியான விடயங்கள் எல்லாம் நம்ம தினசரி வாழ்க்கையில் நடக்கலேன்னாத்தான் அதிசயம், மற்றபடி இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. இந்த சின்ன விடயத்திற்கு போய் இப்படி தொண்டைத் தண்ணீர் வற்றிப் போகும் அளவிற்கு என்னைப் பேச வைச்சுட்டியே. கிறுக்குப் பயபுள்ள!” என்றவாறே அருந்ததியைப் பார்த்துக் கொண்டு நின்ற வசந்தி,

சட்டென்று ஏதோ நினைவு வந்தவராக, “உண்மையாக இது மட்டும்தான் விடயமா?” என்று வினவ,

அவரைப் பார்த்து தன் தலையில் கை வைத்துகொண்டவள், “ஐயோ! இந்த வக்கீல் ஐயாவோட சம்சாரத்துக்கிட்ட இருந்து என்னை யாராவது காப்பாற்றுங்களேன். கணவனே கண் கண்ட தெய்வம்ன்னு சொன்னதும் சொன்னாங்க இந்த அம்மா இப்போ இருந்தே அவரோட வீட்டுக்காரருக்கு படையல் வைக்கிற மாதிரி கேஸ் பிடிச்சுக் கொடுக்க என்னைப் போட்டு பாடாய்படுத்துறாங்களே. இந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா? ஐயோ! முடியலையே. என்னை யாராவது காப்பாற்றுங்களேன், ஐயா காப்பாற்றுங்க! அம்மா காப்பாற்றுங்க!” என்றவாறே அழுது புலம்புவது போல பேசிக் கொண்டிருக்க,

அவசரமாக அவளது வாயைத் தன் கையால் இறுக மூடிய வசந்தி, “ஆத்தா அருந்ததி, உன் வாயைக் கொஞ்சம் மூடுடிம்மா. எட்டு மணிக்கு ஊதும் சங்கை இப்போவே ஊதிட்டாங்கன்னு எல்லோரும் வெளியே வந்து பார்க்குறாங்க பாரு. எல்லாம் என் நேரம்டி, உன் கிட்ட போய் பாசமாக பேசுனேன் பார்த்தியா? என்னை…” என்று கூற, அவரது கையை மெல்ல சுரண்டியவள் அவரது காலை ஜாடை காட்ட,

சிறு குழப்பத்துடன் குனிந்து பார்த்தவர் அவள் தனது காலணிகளைத் தான் சுட்டிக் காட்டுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டு, “உங்க உதவிக்கு ரொம்ப நன்றி அம்மணி” என்றபடியே அவளைப் பார்த்து இரு கரங்களையும் வேகமாக அடித்து கும்பிட்டு விட்டு அங்கிருந்து சென்று விட, அருந்ததியோ அவரைப் பார்த்து சத்தமாக சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

தன் மேல் இங்கிருக்கும் அனைவருக்கும் எந்தளவிற்கு அன்பும், அக்கறையும் இருக்கிறது என்பதை நினைத்து ஒரு புறம் அவளுக்குப் பெருமையாக இருந்தாலும், மறுபுறம் கதிரின் குடும்பப்பிண்ணனி மற்றும் ஆள்பலத்தை எண்ணி அவளுக்கு சிறிது அச்சம் இருக்கவே செய்தது.

தான் ஏதோ ஒரு வேகத்தில் கதிரைப் பற்றி யாரிடமாவது சொல்லி, அது பெரிய பிரச்சினையாக உருவெடுத்து, நாளை அவனது குடும்பத்தினரால் தங்களைப் போன்ற நபர்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் தங்களுக்கு ஆதரவு அளிக்கக் கூட யாரும் முன் வரமாட்டார்கள் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.

தன்னுடைய இத்தனை வருட வாழ்க்கையில் அவள் கற்றுக் கொண்ட பாடங்களில் இதுவும் ஒன்று, அதனால்தான் வசந்தி அத்தனை முறை கேட்டும் கதிரைப் பற்றியோ அவன் மீதான தன் மன அபிப்பிராயத்தைப் பற்றியோ அவரிடம் ஒரு வார்த்தை கூட அவள் சொல்லியிருக்கவில்லை.

தான் கதிரைப் பற்றி இப்போது யாரிடமும் சொல்லாமல் இருப்பது சரிதான் என்கிற எண்ணத்துடன் பெருமூச்சு விட்டபடியே அருந்ததி தன் வேலைகளைப் பார்க்கச் சென்று விட, அவள் எடுத்த அந்த முடிவு தன் வாழ்வில் தான் செய்த மிகப் பெரும் தவறு என்று அவளாகவே நினைக்கப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

**********

எப்போதும் போல காலை நேரத்திற்கே உரிய பரபரப்புடன் தன் தூக்கத்தை விட்டு எழுந்து அமர்ந்த அருந்ததி அன்றைய நாள் என்றுமில்லாதவாறு சந்தோஷமான மனநிலையுடன் தன் கல்லூரி நோக்கிச் செல்ல தயாராகிக் கொண்டு நின்றாள்.

அவளது சந்தோஷத்திற்கான ஒரேயொரு காரணம் அவளது புதிய வண்டிதான் என்றால் மிகையாகாது.

இனிமேல் யாருடைய ஏளனப் பார்வைகளும் தன்னைப் பின் தொடராது, யாருடைய கேலிப் பேச்சுக்களையும் சகித்துக் கொண்டு நிற்கத் தேவையில்லை என்கிற நிம்மதியான மனநிலையே அவளது சந்தோஷத்திற்கான மிகவும் முக்கியமான காரணம் என்றும் கூறலாம்.

அதிலும் கதிர் இனி தன்னைப் பின் தொடர்ந்து வரும் பழக்கத்தையும் விட்டு விடுவான் என்பதை நினைக்கும் போதே அவளுக்கு ஒரு புறம் எதையோ பெரிதாக இழப்பது போல் இருந்தாலும் மறுபுறம் அதுவும் நன்மைக்கே என்று நினைத்துக் கொண்டாள்.

ஒருவழியாக தன் அன்னையுடனான தனது அன்றாட சேட்டைகளை முடித்து விட்டு தன் வண்டியை எடுத்துக் கொண்டவள் தான் வழக்கமாக பேருந்திற்காக காத்து நிற்கும் நிறுத்தத்தைப் பார்த்ததும் தனது வண்டியின் வேகத்தை சிறிது குறைத்துக் கொண்டாள்.

அங்கே நின்று கொண்டிருந்த ஒருசிலர் அருந்ததியை அடையாளம் கண்டு கொண்டது மட்டுமின்றி அவளைப் பார்த்து முகம் சுளித்தபடி தங்களுக்குள்ளேயே ஏதோ ஜாடையாக பேசிக் கொண்டு நிற்க, அவர்களைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவள், ‘அடுத்தவங்களோட வளர்ச்சியைப் பார்த்து சந்தோஷப்படும் பழக்கம் இன்னும் பலபேருக்கு வரவே இல்லை போல’ என்றெண்ணியபடியே அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட, அவள் எந்த விடயத்தை தவிர்த்து விட்டதாக நினைத்திருந்தாலோ அந்த விடயம் அவளை அறியாமலேயே அவளைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

ஆம், அது வேறு எதுவும் இல்லை, கதிர் மற்றும் சபரி தான்.

வழக்கமாக அருந்ததி பேருந்தில் ஏறும் போது அவள் அறியாமலேயே அவளோடு சேர்ந்து பேருந்தில் ஏறிக் கொள்ள எண்ணி சபரியோடு வந்து அந்த பேருந்து நிறுத்தத்தில் காத்து நிற்கும் கதிர் இன்று அருந்ததி அவளுக்கென்று ஒரு வண்டியை எடுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்து சிறிது அதிர்ச்சியாகித்தான் போனான்.

“இவளுக்கு எப்படி புது வண்டி கிடைத்தது?” சபரியின் கேள்வியில் குழப்பத்துடன் அருந்ததி சென்ற வழியையேப் பார்த்துக் கொண்டு நின்றவன்,

“அதுதான் டா எனக்கும் புரியல, நேற்று வரை பஸ்ஸில் தானே காலேஜ் வந்து போயிட்டு இருந்தா, இன்னைக்கு திடீர்னு எப்படி?” என்றவாறே தன் நண்பனைத் திரும்பிப் பார்க்க,

அவனோ, “ஒரு வேளை எங்கேயாவது கொள்ளை அடிச்சு இருப்பாங்களோ? இல்லைன்னா, இவங்களை மாதிரி ஆளுங்களுக்கு பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்குமே, அதில் ஏதாவது?” என்று கூற, கதிர் சலித்துக் கொண்டபடியே தன் தலையைக் கோதி விட்டுக் கொண்டான்.

“சபரி, உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன், அருந்ததியைப் பற்றி தப்பாக பேசக்கூடாதுன்னு. நீ திருந்தவே மாட்டியாடா?”

“அட! என் முன்னாடி நிற்கிறது கதிர்வேலன் சாரா? எப்போ இருந்து சாருக்கு ஞானோதயம் கிடைச்சதோ?”

“டேய்!”

“என்ன டேய்? உங்க ஓவர் ஆக்டிங் எல்லாம் என் கிட்ட வேணாம் தம்பி, நீங்க யாருன்னு எனக்கு நல்லாவே தெரியும், அதனால இந்த நல்லவன் வேஷம் எல்லாம் அருந்ததி முன்னாடி மட்டும் வச்சுக்கோ, என்கிட்ட எல்லாம் இந்த சீனே வேணாம், புரிஞ்சுதா?”

“போதும்டா, விட்டால் நீயே ஊரு பூராவும் தண்டோரா போட்டு சொல்லிடுவ போல இருக்கு. எது எப்படியோ அவளுக்கு எப்படி வண்டி கிடைத்தால் நமக்கு என்ன? இத்தனை நாளாக தனியாக அவளை எப்படி சந்திக்கிறதுன்னு தெரியாமல் ரொம்ப கஷ்டப்பட்டேன், ஆனா இப்போ அவளாகவே தனியாக அவளை எங்கே வேணும்னாலும் சந்திக்கலாம் என்பது போல ஒரு பெரிய உதவியை நமக்குப் பண்ணிட்டா. இனி எனக்கு எந்தவொரு பிரச்சினையும் இருக்காது. சரி, முதல்ல அவளை ஃபாலோ பண்ணு” தன் நண்பனைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவனது வண்டியில் ஏறி அமர்ந்து கொள்ள, சபரியோ கதிரின் மனதில் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமலேயே அருந்ததியைப் பின் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தான்……..