தீயாகிய மங்கை நீயடி – 10

ei34NQ073963-8013af17

கிருஷ்ணா அருந்ததியைப் பார்த்து வியந்து போய் அமர்ந்திருக்க, அவன் முகத்தின் முன்பு சொடக்கிட்டவள், “என்னாச்சு கிருஷ்ணா? எதற்காக இப்படி உட்கார்ந்து இருக்க? இப்படியே வாயைப் பிளந்துட்டு உட்கார்ந்து இருந்தால் எதுவும் நடக்காது, அடுத்தடுத்து நமக்குத் தேவையானதை நாமே தான் செய்துக்கணும். சரி, சரி, வா முதல்ல போய் வைஜயந்தி ம்மாவை சந்திக்கலாம்” என்றவாறே எழுந்து கொள்ள,

சட்டென்று அவளது கையை எட்டிப் பிடித்தவன், “அக்கா, எனக்காக நீங்க உங்க வேலையை எல்லாம் விட்டுட்டு வர வேணாம்க்கா. நீங்க உங்க வேலையை எல்லாம் முடிச்சுட்டு வாங்க, நம்ம சாயந்திரமாவே போகலாம்” என்று கூற, அவளோ அவனைப் பார்த்து தன் கண்களில் இருந்து நீர் வருமளவிற்கு சிரிக்கத் தொடங்கினாள்.

அருந்ததி எதற்காக இப்படி சிரிக்கின்றாள் என்று புரியாமல் கிருஷ்ணா குழப்பத்துடன் அமர்ந்திருக்க, அவனது தலையில் செல்லமாக தட்டியவள், “அட கிருஷ்ணா பையா, இங்கே படித்த படிப்புக்கு யாரும் வேலையை தர்றதில்லைப்பா. இந்த உலகத்தில் எல்லோரும் சமம்ன்னு சொல்லித் தர்ற நீதியைக் கூட எடுத்து வாதாட ஆணோ இல்லை பெண்ணோ தான் வர வேண்டுமாம், மூன்றாம் பாலினத்தவர்களாக இருந்தால் இந்த ஊரைப் பொருத்தவரை சட்டத்தில் கூட மதிப்பில்லை. என்னோட படிப்பையும், திறமையையும் நம்பாமல் என்னோட அடையாளத்தை வைத்துத்தான் எனக்கான வேலையையும் இங்கே எல்லோரும் முடிவு பண்ணுறாங்க. பார்க்கலாம், என்றாவது ஒருநாள் நிச்சயமாக எனக்கு ஒரு வாய்ப்பு வரும்ன்னு காத்திருக்கிறேன்” தன் பேச்சில் இருந்த வேகம் குறைந்து போக அவனைப் பார்த்து புன்னகைத்தபடியே,

“உன்னைப் பார்த்தால் நீ காலையில் இருந்து எதுவும் சாப்பிடவே இல்லை போல இருக்கு, முதலில் சாப்பிட்டுட்டு அப்புறம் வீட்டுக்கு போகலாம், வா” என்றவள் கிருஷ்ணாவை அழைத்துக் கொண்டு அந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்திருந்த ஒரு கேன்டீனை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

அருந்ததி அந்தக் கேன்டீனில் உள் நுழைந்ததுமே புன்னகை நிறைந்த முகத்துடன் அவள் முன்பு வந்து நின்ற ஒரு வயதான நபர், “அருந்ததி வாம்மா, தம்பி யாரு தெரிஞ்சவங்காளா?” என்று கேட்க,

அவரைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவள், “ஆமா ராமு தாத்தா, தெரிஞ்ச தம்பி தான், இன்னும் கொஞ்ச நாளில் தெரிஞ்ச தங்கையாக மாறப் போறாங்க” என்று கூற, சட்டென்று கிருஷ்ணாவைத் திரும்பிப் பார்த்தவர் கண்கள் கலங்க அவனது தலையை வருடிக் கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

அந்த கேன்டீனில் உள் நுழைந்ததில் இருந்து அங்கே நடப்பது எதுவும் புரியாமல் கிருஷ்ணா நின்று கொண்டிருக்க, அவனது தோளில் தட்டி அவனை உட்காரும் படி சைகை செய்த அருந்ததி, “நீ என்ன யோசிக்கிறேன்னு புரியுது கிருஷ்ணா, ராமு தாத்தா எதற்காக உன்னைப் பார்த்து கண் கலங்கினாருன்னு தானே யோசிக்குற?” என்று கேட்க, அவனும் தனது தலையை அவசரமாக ஆமோதிப்பாக அசைத்தான்.

“ராமு தாத்தாக்கு சொந்தம்ன்னு சொல்லிக்க இருந்தது அவரோட ஒரே ஒரு பேரன் தான். சின்ன வயசிலேயே அம்மா, அப்பாவை ஆக்சிடென்டில் பறி கொடுத்த தன்னோட பேரனுக்காக ராப்பகலாக உழைக்க ஆரம்பிச்சவரு இப்போ வரைக்கும் தன்னோட உழைப்பை நிறுத்தல, ஆனா காலத்தோட விளையாட்டு அவரோட பேரனை வைத்து ஒரு பெரும் புயலையே உருவாக்கிடுச்சு. அவரோட பேரனும் நம்மை மாதிரி மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஆளு தான், அந்த விஷயம் அந்தப் பையனுக்கே ரொம்ப நாள் கழிச்சுத்தான் தெரிய வந்திருக்கு.
தனக்குள்ள இப்படி ஒரு மாற்றம் உருவாக ஆரம்பிச்சுடுச்சேன்னு அந்தப் பையன் ரொம்பவே பயந்து போயிட்டான், ஆனா இந்த விஷயம் ராமு தாத்தாவுக்கு தெரிய வந்ததும் அவர் செய்த முதல் வேலை என்ன தெரியுமா? தன் பேரன் ஆசைப்படியே அவனை திருநங்கையாக வாழ வழி செய்து கொடுத்தது தான். அக்கம் பக்கத்து ஆளுங்களும், இங்கே இருக்கும் ஆளுங்களும் அவரையும், அவரோட பேரனையும் ரொம்பவே அவமானப்படுத்தினாங்க, ஆனா ராமு தாத்தா அது எதையும் கணக்கிலேயே எடுக்கல, தன் பேரனை முழுமையாக ஒரு பெண்ணாக மாற்றணும்னு எவ்வளவோ கஷ்டப்பட்டாரு, ஆனா அவரோட அக்கம் பக்கத்து ஆளுங்களுக்கு அது பிடிக்கல.
அந்தப் பையன் அவங்க கூட சரிசமமாக அந்தப் பகுதியில் இருந்தால் அது அவங்களுக்கு அவமானம்ன்னு சொல்லிச் சொல்லியே தினமும் ராமு தாத்தாவை திட்ட ஆரம்பிச்சிருக்காங்க, அதற்கு அப்புறம் நாளாக நாளாக நேரடியாகவும், மறைமுகமாகவும் ராமு தாத்தாவை ஊரை விட்டு அனுப்ப முயற்சி பண்ணாங்க, அதுவும் சரி வரலேன்னு தெரிஞ்சதும் கடைசியில் அவரோட பேரனை அந்த ஆளுங்க எல்லாம் சேர்ந்து அடிச்சே கொன்னு போட்டுட்டாங்க”

“அக்கா!” கிருஷ்ணா அதிர்ச்சியாக அருந்ததியை நிமிர்ந்து பார்க்க,

அவனைப் பார்த்து விரக்தியாக புன்னகைத்தவள், “அப்படி கொலை செய்யும் அளவுக்கு அந்தப் பையன் என்ன தப்பு பண்ணான்? தன்னோட உடலில் ஏற்பட்ட மாற்றத்திற்காக அவனைக் கொலை பண்ணணுமா? இந்த விஷயத்தை சட்ட ரீதியாக எடுத்து வாதாடலாம்ன்னு ராமு தாத்தா எவ்வளவோ முயற்சி பண்ணாரு, ஆனா யாரும் அவரோட வழக்கை எடுத்து வாதாட முன் வரல, நான் இங்கே வந்த பிறகு இந்த விஷயத்தைப் பற்றி எல்லாம் தெரிஞ்ச பிறகு நான் அவருக்காக வாதாடலாம்ன்னு போய் நின்னப்போ அவரு கேட்டது ஒரு விஷயம் தான்.
‘என்னோட வாழ்க்கையே என்னை விட்டுப் போயிடுச்சு, இனி இதற்கு மேலே இதைப் பற்றி பேசி, வாதாடி, நியாயம் கிடைத்தால் மட்டும் என் பேரன் திரும்பி வந்துடுவானா?’.
இப்படி அவரு கேட்ட பிறகு என்னால எதுவுமே பேச முடியல, அதற்கு அப்புறம் எல்லோரும் அவங்க அவங்க அன்றாட வாழ்க்கைக்குள்ளே திரும்பி போயிட்டோம், ராமு தாத்தாவும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பாக இருக்க ஆரம்பிச்சுட்டாரு, ஆனாலும் அவரு திருநம்பியையோ, திருநங்கைகளையோ, ஓரிலிங்கத்தைச் சேர்ந்தவர்களையோ கண்டால் ஒரு சில நிமிஷம் தன்னை மறந்து அவங்களுக்காக கடவுள் கிட்ட வேண்டிப்பாரு. அதனால் தான் உன்னைப் பற்றி சொன்னதும் அவரு அப்படி ரியாக்ட் பண்ணாரு” என்று கூற, கிருஷ்ணாவோ ஒரு சில நிமிடங்கள் அமைதியாக தலை குனிந்து அமர்ந்திருந்தான்.

“என்னாச்சு கிருஷ்ணா?” அருந்ததியின் கேள்வியில் மெல்ல அவளை நிமிர்ந்து பார்த்தவன்,

“இப்படி ஒரு தாத்தா எனக்கும் கிடைச்சு இருக்கலாம்” என்று கூற,

அருந்ததியோ, “அட கிருஷ்ணா! எதற்காக இப்படி எல்லாம் பேசுற? இந்த உலகத்தில் ஒரு சில ஆட்கள் தான் மூன்றாம் பாலினத்தவர்களை இன்னமும் ஏதோ தீண்டத்தகாத பொருள் போல பார்க்கிறாங்க, ஆனா பலபேர் இந்த உடலியல் மாற்றங்களை ஏத்துக்கிட்டாங்க, ஆனா என்ன, அந்த ஒரு சிலர் இந்த பல பேருக்கு நடுவில் மறைந்திருந்து அவங்களைத் தைரியமாக அவங்க மனதில் உள்ளதை சொல்லவோ, செய்யவோ விடுவதில்லை, அதனால்தான் ஒரு ஊரில் நூற்றுக்கு தொண்ணூறு வீதம் நம்மை ஒதுக்கி வைக்கும் ஆளுங்களாகவே இருப்பாங்க” என்று விட்டு சிறிது நேரம் அவனை வேறு விடயங்களைப் பற்றி பேச வைக்கச் செய்திருந்தாள்.

சிறிது நேரம் கழித்து கிருஷ்ணாவை தங்கள் இல்லம் அமைந்திருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றவள் தன் அன்னையிடம் அவனைப் பற்றி எல்லா விடயங்களையும் எடுத்துக் கூற, வைஜயந்தியும் அவனை இன்முகத்துடன் வரவேற்றது மட்டுமின்றி அவனது சிகிக்சைகளுக்கான ஏற்பாடுகளையும் தன்னால் முடிந்த அளவுக்கு செய்து கொடுத்திருந்தார்.

கிருஷ்ணாவிற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து விட்டு வைஜயந்தி தங்கள் வீட்டுக்கு திரும்பி வந்த தருணம் அருந்ததி பலத்த சிந்தனையுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்து அவளது தோளில் தன் கையை வைத்தவர், ” என்னாச்சு அருந்ததி? ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்க,

அவரைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவள், “பிரச்சினை எல்லாம் எதுவும் இல்லை வைஜயந்தி ம்மா. நான் யோசிக்கிறது நம்மைப் பற்றித்தான். எதற்காக இந்த சமூகத்தில் இருக்கும் ஆளுங்க நம்மளை இன்னும் இன்னும் ஒதுக்கி வைக்கணும்னு யோசிக்குறாங்க? அவங்களை மாதிரியே நமக்கும் இரண்டு கை, இரண்டு கால், கண், காது, மூக்குன்னு எல்லாம் இருக்குத்தானே? ஏதோ இறைவனின் படைப்பில் வந்த அதிசயமாக நம்ம உடம்புக்குள்ள வந்த மாற்றத்திற்காக நம்மை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைக்கணுமா? எத்தனையோ சட்டங்கள், எத்தனையோ படங்கள், கருத்துக்கள்ன்னு எல்லாவற்றிலும் நமக்கான உரிமையை எடுத்துச் சொன்னாலும் அதை யாருமே மதிப்புக் கொடுத்து கவனிப்பது கூட இல்லையே வைஜயந்தி ம்மா. ஏன் இப்படி இருக்காங்க?
ஏன் என்னையே எடுத்துக்கோங்க, நல்லா படிச்சு, நல்ல மார்க் எடுத்து பாஸ் ஆகி ஒரு வக்கீல் ஆகியிருக்கேன், அப்படியிருந்தும் இன்னைக்கு வரைக்கும் என்னை நம்பி ஒரு வழக்கைத் தரக்கூட யாரும் முன் வரல, காரணம் நான் மூன்றாம் பாலினத்தவர்களை சேர்ந்த ஒரு நபர். இதையெல்லாம் பார்க்கும்போது எதுவுமே வேணாம்னு விட்டெறிஞ்சுட்டு போயிடலாம்ன்னு தோணுது வைஜயந்தி ம்மா. நம்ம வாழ்க்கை இப்படியே ஏக்கத்துடனேயே முடிஞ்சு போயிடுமோன்னு கவலையாக இருக்கு” என்று கூற, அவளது கையை மெல்ல வருடிக் கொடுத்தவர் அவளது கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வீட்டின் வாயிலில் சென்று நின்றார்.

“அங்கே பார்த்தியா? அவங்க எல்லாம் உன்னையும், என்னையும் மாதிரி மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஆளுங்க தான், அவங்க எல்லோரும் எவ்வளவு சந்தோஷமா ஒருத்தரோடு ஒருத்தர் பேசிட்டு இருக்காங்கன்னு பார்த்தியா? அதே நேரம் இந்த வீதிக்கு அந்தப் பக்கமாக நடந்து போகும் அந்த ஆட்களைப் பாரு, அவங்களும் அதே சந்தோஷம், சிரிப்போடு தான் நடந்து போறாங்க. இங்கே விஷயம் என்னன்னா நம்ம வீதிக்கு அந்தப் பக்கமாக இருக்கும் ஆளுங்களைப் போல இருக்கோமா, அல்லது இந்தப் பக்கம் இருக்கும் ஆளுங்களைப் போல இருக்கோமா என்பதில்லை. சந்தோஷம்! அது எங்கே இருக்குன்னு தான் விஷயமே.
ஒரு பழமொழி சொல்லுவாங்க இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சைன்னு, அதோட சரியான அர்த்தம் வேறு எதுவோ இருக்கலாம், ஆனா எனக்கு தெரிஞ்சது இதுதான், நீ இந்தப் பக்கம் இருந்து பார்க்கும் போது உனக்கு எல்லாமே அநீதியும், அநியாயமும் நடப்பது போலத்தான் இருக்கும், அதே அவங்க பக்கம் இருந்து பார்க்கும் போது எல்லாம் சரியாகத்தானே இருக்கும்னு தோணும். இதற்கு எல்லாம் ஒரே தீர்வு என்ன தெரியுமா? முதல்ல நீ மாறணும், உன் மனதில் இருக்கும் அந்த ஒப்பிட்டுப் பார்க்கும் தன்மை மாறணும். ஒவ்வொரு தடவையும் நீ தோற்றுப் போகும் போது உன் மனசு உன்னையும் அறியாமல் உன்னை மற்ற நபர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டும், ஆனா அதை நீ கடந்து வரணும். நீ உன்னை மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஆளுன்னு சொல்வதில் எவ்வளவோ பெருமையாக உணர்கிறாயோ அதே பெருமையை உன் மனதிற்குள்ளேயும் பதிச்சுக்கணும். ஒவ்வொரு தடவை நீ விழும் போது உன் பின்னாடி நடந்த விடயங்களை யோசித்துப் பார்க்கக் கூடாது, உன் முன்னால் இருக்கும் இலக்கை நோக்கித்தான் உன் கவனம் போகணும்.
நான் பார்த்த அவமானங்களை சொல்லப் போனால் ஒரு புத்தகமே எழுதலாம், அவ்வளவு இருக்கும், ஆனால் நான் அதை சொல்வதில்லை, ஏன்னா நமக்கு நடந்த அநீதி, அநியாயங்களை நினைத்தால் நம்ம மனது பலவீனமாகி விடும். அதேநேரம் அந்த கஷ்டங்களை உன் முன்னேற்றத்திற்கு படிகளாக வைத்துப் பாரு, நீ நினைச்சுக் கூடப் பார்க்க முடியாத இடத்திற்கு உன்னை அது அழைச்சுட்டுப் போயிடும். இதற்கு அப்புறம் என் அருந்ததி அவமானங்களைக் கண்டு துவண்டு போய் இப்படி சோகமாக உட்கார்ந்துட்டு இருக்கக் கூடாது, உன் பெயரில் இருக்கும் தீ உன் செயலிலும் இருக்கணும். உன்னைத் தேடி வழக்கு வரலேன்னா என்ன, நீ வழக்கைத் தேடிப் போ. உனக்கான பாதையை நீயே தான் அமைச்சுக்கணும். அந்தக் கிருஷ்ணா அவனுக்கான பாதையைத் தேடி எத்தனையோ தடைகளைத் தாண்டி வந்திருக்கான், அதேமாதிரி அருந்ததியும் நிச்சயமாக ஒருநாள் அவளுக்கான வெற்றிப் பாதையை அமைச்சுட்டு இந்த வைஜயந்தி ம்மாவைத் தேடி வருவா” என்றவாறே வைஜயந்தி அருந்ததியின் கையைப் பிடித்து அழுத்திக் கொடுத்து விட்டு உள்ளே சென்று விட, இத்தனை நாட்களாக தான் தன்னைத் தானே தைரியமாக இருப்பது போல காட்டி ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறோம் என்று புரிந்து கொண்ட அருந்ததி இனி தனக்கான வெற்றிப் பாதையை தானே அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்துடன் காலை விடியலை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

எப்போதும் போல தன் காலை நேரப் பரபரப்புடன் தயாராகி வந்த அருந்ததி வைஜயந்தியிடம் சொல்லி விட்டு நீதிமன்ற வளாகம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றதுடன் முந்தைய நாள் தான் எடுத்த முடிவின் படி தன்னை யாரும் தேடி வராவிட்டால் என்ன, தானே தனக்கான வழக்கைத் தேடிச் செல்லலாம் என்று முடிவெடுத்துக் கொண்டு அந்த நீதிமன்ற வளாகத்தை பெரும் எதிர்பார்ப்புடன் சுற்றி வரத் தொடங்கினாள்.

அவள் எதிர்பார்த்ததற்கு மாற்றமாக அவள் தேடிச் சென்று விசாரித்தும் கூட யாரும் அவளை நம்பி தங்கள் வழக்கைக் கொடுக்க முன்வரவில்லை.

ஒரு சிலர் அவள் இந்த தொழிலுக்குப் புதியவள் என்று அவளைத் தவிர்த்திருக்க, இன்னும் சிலரோ அவளது அடையாளத்தை வைத்து அவளைத் தவிர்க்க ஆரம்பித்திருந்தனர்.

தனது திறமையை நிரூபிக்க தனக்கு ஒரேயொரு வாய்ப்புக் கொடுங்கள் என்று அங்கிருந்த அனைவரிடமும் அவள் மன்றாடிக் கேட்டும் கூட யாரும் அவளை சக மனிதனாகக் கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாதது போல தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அவளது நிலையைப் பார்த்து ஒரு சிலர் பரிதாபத்துடன் அவளை நோக்கிச் செல்ல முயற்சித்து விட்டு பின்னர் தங்களின் சமூக நிலையைக் கருத்திற் கொண்டு அந்த முயற்சியை அப்படியே கை விட்டுயிருந்தனர்.

இந்த சமூகத்தில் எல்லோரும் இப்படி மூன்றாம் பாலினத்தவர்களை ஒதுக்கி வைப்பதில்லை, அதற்காக எல்லோரும் அவர்களுடன் சகஜமாக பழகுகிறார்கள் என்றும் அர்த்தம் இல்லை.

அருந்ததி வாழும் அந்தப் பகுதியில் மூன்றாம் பாலினத்தவர்களை மொத்தமாக ஒதுக்கி வைத்தே அங்கிருந்தவர்கள் பழகியதால் என்னவோ, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைத்தும் கூட அவர்களால் அதை வெற்றிகரமாக செய்ய முடியவேயில்லை.

காலையிலிருந்து தன் தேடுதல் வேட்டையைத் தொடங்கிய அருந்ததிக்கு மதிய வேளை கடந்தும் எந்தவொரு வழக்கும் கிடைக்காமல் இருக்கவே, சோர்வோடு தன்னுடைய அறைக்குள் வந்து அடைந்து கொண்டவள் தன் நிலையை எண்ணிக் கலங்கிப் போனவளாக தன் முன்னால் இருந்த மேஜையில் தலை கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்.

எவ்வளவு நேரமாக அவள் அவ்வாறு அமர்ந்திருந்தாளே அவளுக்கே தெரியவில்லை, அவளது தொலைபேசி தன் ஒலியை எழுப்பித் தான் அவளை மீண்டும் இந்த உலகத்திற்கு அழைத்து வந்திருந்தது.

வைஜயந்தியிடமிருந்து இன்னும் பலரிடம் இருந்தும் மாறி மாறி பல அழைப்புக்கள் வந்திருக்க, சிறிது அச்சத்துடன் அவசரமாக அந்த தொலைபேசி அழைப்பை எடுத்து தன் காதில் வைத்த அருந்ததி மறுபுறம் சொன்ன செய்தியைக் கேட்டு தன் கையிலிருந்த தொலைபேசி நழுவி விழுந்ததைக் கூட உணர முடியாதவளாக அதிர்ச்சியில் உறைந்து போய் நின்று கொண்டிருந்தாள்………..