தீயாகிய மங்கை நீயடி – 13

ei34NQ073963-69fb4eba

தீயாகிய மங்கை நீயடி – 13

வைஜயந்தியின் கோபமான தோற்றத்தைப் பார்த்து சற்று குழப்பம் கொண்ட அருந்ததி அவர் கொண்டு வந்த பத்திரிகையைப் பிரித்துப் பார்க்க அதில் அச்சிடப்பட்டிருந்த செய்தியோ அவளை விழி விரித்து ஆச்சரியப்பட வைத்தது.

ஒரு நொடி தான் காண்பது கனவாக இருக்கக்கூடுமோ என்றெண்ணியபடி தன் கையை கிள்ளிப் பார்த்துக் கொண்டவள் தன் கையில் வலி ஏற்படுவதைப் பார்த்து, “அட! கனவில்ல நிஜம்தான்” என்றவாறே தன் கையிலிருந்த பத்திரிகையை தூக்கிப் போட்டு விட்டு வைஜயந்தியை இறுக்கி அணைத்துக் கொள்ள, அவரோ அவளைத் தன்னை விட்டும் வேகமாக விலக்கி விட்டார்.

“போதும், போதும் அருந்ததி. நீ விளையாடினது எல்லாம் போதும். உண்மையைச் சொல்லு, இந்த ஆக்சிடென்ட்க்கும், உனக்கும் சம்பந்தம் இருக்கு தானே?” என்று வைஜயந்தி வினவ,

அவரைப் பார்த்து தன் தலையில் கை வைத்துக் கொண்டவள், “ஐயோ! வைஜயந்தி ம்மா, ஊர்ல எவனோ ஒருத்தன் குடித்துக் விட்டு வண்டியை ஓட்டிட்டுப் போய் லாரியில் மோதி ஸ்பாட் அவுட் ஆனா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? அந்த இன்ஸ்பெக்டர் சந்திரனும், அவனோட மூணு பிரண்ட்ஸும் மூச்சு முட்ட முட்டக் குடிச்சுட்டு போய் லாரியில் மோதி அந்த இடத்திலேயே மேலே போய் சேர்ந்துட்டாங்க, இதில் எனக்கு என்ன சம்பந்தம் இருக்கு? ஏதோ நான் அவனை குடிக்க சொன்ன மாதிரியும், அப்படியே போய் லாரியில் மோதுன்னு சொன்ன மாதிரியும் இல்லையா நீங்க கேட்குறீங்க? நான் அன்னைக்கு பேசியதை வைத்து உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம் வைஜயந்தி ம்மா, அதற்காக இந்தளவுக்கு சந்தேகம் எல்லாம் கூடாது” என்றவாறே அவரது கன்னத்தைப் பிடிக்கப் போக, அவரோ சிறு சலிப்புடன் அவளது கையை மெல்ல இறக்கி விட்டார்.

“அப்போ நிஜமாகவே உனக்கும் இந்த ஆக்சிடென்ட்க்கும் எந்த சம்பந்தமும் இல்லையா அருந்ததி?”

“ஐயோ! வைஜயந்தி ம்மா, நான் எத்தனை தடவை தான் சொல்றது? சரி, நீங்களே நல்லா யோசிங்க, நேற்றும், அதற்கு முந்திய நாளும் நான் எங்கேயாவது வெளியே போனேனா? இல்லை தானே, ஏன் கோர்ட்டுக்கு கூட நான் போகல, உடம்பு சரி இல்லைன்னு என் ரூமிலேயும், உங்க பின்னாடியும் தானே சுற்றி சுற்றி வந்துட்டு இருந்தேன், அப்புறம் எப்படி இதெல்லாம் நான் பண்ண முடியும்? அதோடு ஆள் வைத்து அவங்களைக் கொல்லும் அளவுக்கு எனக்கு வசதி எல்லாம் இல்லை ப்பா” அருந்ததி தன் கைப்பையை ஒழுங்கு செய்தபடியே பேசிக் கொண்டு செல்ல, அப்போதும் வைஜயந்தியின் முகத்தில் இருந்த குழப்பத்தின் சாயல் குறையவில்லை.

“நீங்க இப்படியே யோசித்துக் கொண்டு நில்லுங்க, எனக்கு நேரமாகுது, நான் கோர்ட்டுக்கு கிளம்புறேன். அப்புறம் நான் வரும்போது ஸ்வீட் வாங்கிட்டு வருவேன், எதுக்கு தெரியுமா? இப்போ நீங்க சொன்ன இந்த நல்ல செய்தியைக் கொண்டாடணும் இல்லையா? அதுதான். ஹ்ம்ம்ம், என்ன பண்ணுறது என் கையால அந்த சந்திரனைக் கொல்ல முடியலையே, அந்த ஒரு கவலை என் மனதில் இருக்குத்தான், இருந்தாலும் அந்தப் பாவிங்க இன்னும், இன்னும் இந்த பூமியை அசுத்தம் பண்ணாமல் அழிந்து போயிட்டாங்க இல்லையா? அதுவரைக்கும் சந்தோசம் தான்” என்றவாறே அருந்ததி தன் கைப்பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்று விட, வைஜயந்தியோ கவலை தோய்ந்த முகத்துடன் அவள் சென்ற வழியையே பார்த்துக்கொண்டு நின்றார்.

முகம் முழுவதும் நிறைந்து போயிருந்த புன்னகையுடன் தனது வாகனத்தை நிறுத்திய அருந்ததி கோர்ட்டில் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு செல்லாமல் நேராக கேன்டீனை நோக்கி நடை போட ஆரம்பித்தாள்.

அங்கே அவள் சென்ற தருணம் அவளது வருகைக்காகவே காத்திருந்தது போல அந்தக் கேன்டீன் வாயிலில் நின்று கொண்டிருந்த ராமு தாத்தா அருந்ததியைப் பார்த்ததும் புன்னகை முகமாக அவளை வரவேற்று அழைத்துச்சென்று அவள் வழக்கமாக அமரும் பகுதியில் அவளை அமரச் சொல்லி விட்டு அவரும் அவளெதிரில் அமர்ந்து கொண்டார்.

அருந்ததியும், ராமு தாத்தாவும் சில நிமிடங்கள் எதுவும் பேசிக்கொள்ளாமல் ஒருவரை ஒருவர் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்க அவர்கள் இருவரது முகங்களிலும் வெற்றிக் களிப்பு தாண்டவமாடிக் கொண்டிருந்தது.

அந்தக் கேன்டீனில் இருந்து ஆட்கள் எல்லோரும் கலைந்து வெளியே சென்று விட்டதை உறுதிப் படுத்தி விட்டு ராமு தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்ட அருந்ததி, “ராமு தாத்தா! நீங்க சொன்னது போலவே செஞ்சிட்டீங்க, உண்மையாக சொல்லப் போனால் என்னால் இப்போ கூட இதெல்லாம் நம்ப முடியல தெரியுமா? அந்த சந்திரன் ஸ்பாட் அவுட்ன்னு நியூஸ் படிச்சதிலிருந்து அப்படியே இறக்கை கட்டி பறக்கிற மாதிரி இருக்கு. சட்டத்தையும், நீதியையும் காப்பாற்றும் பதவியில் இருந்துட்டு அவன் எவ்வளவு ஆட்டம் ஆடி இருப்பான்? ஆனா, இப்போ மொத்தமாக அவன் ஆட்டம் அடங்கிப் போச்சு” என்று கூற,

அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்த ராமு தாத்தா, “யாரு ரொம்ப அதிகமா ஆட்டம் போடுறாங்களோ, அவங்க ஆட்டம் கூடிய சீக்கிரமே அடங்கிப் போவது வழமை தானே?” எனவும்,

அவரைப் பார்த்து புன்னகை முகமாக தலையசைத்தவள், “ஆமா தாத்தா, நீங்க சொல்லுவது சரிதான், ஆனா நான் ரொம்ப பயந்துட்டே இருந்தேன் தெரியுமா? நீங்க இப்படி தைரியமாக இதைப் பண்ணுவீங்கன்னு நான் சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை. ஒருவேளை உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்துடுமோன்னு ரொம்ப, ரொம்ப பயந்துட்டேன்” என்று கூற, அவரோ அவளது கரத்தை மெல்ல அழுத்தி கொடுத்தார்.

“தப்பு பண்ணுவதையே வழக்கமாக வைத்திருக்கும் அவங்களே எல்லாத் தப்பையும் பண்ணிட்டு தைரியமாக இருக்கும் போது, அந்தத் தப்பை சரி செய்யும் நம்ம எதற்காக பயப்படணும் அருந்ததி ம்மா? அதோடு எனக்கென்ன ஆனாலும் கவலை இல்லைம்மா, ஏன்னா இனி நான் இந்த உலகத்தில் வாழ்வதற்கு எனக்கு என்ன பிடிப்பு இருக்கு? நான் என் வாழ்க்கையை எண்ணி எண்ணி கடத்தியதே என் பேரன் ஒருத்தனுக்காகத் தான், அவனே இல்லைன்னு ஆன பிறகு இனி என்ன இருக்கு? எனக்குன்னு இருந்த என் ஒரே சொந்தத்தை அழிச்சிட்டாங்க, அந்த கிருஷ்ணாவை பார்த்ததுக்கு அப்புறம்தான் என் பேரன் இன்னொரு ரூபத்தில் வந்து இருக்கான்னு சந்தோஷப்பட்டேன், ஆனா அந்த சந்தோஷத்தையும் எனக்கு கிடைக்க விடாமல் பண்ணிட்டாங்க. இந்த உலகத்தைப் பற்றி எதுவுமே தெரியாத அந்த பிஞ்சு மண்ணையும் கொன்னுட்டானுங்க. இப்படியே அவங்களை விட்டால் இன்னும் எத்தனை பேரை அவனுங்க காவு வாங்குவாங்களோ தெரியல, அதனாலதான் என் கையாலே அவங்களுக்கு தண்டனை கொடுத்துட்டேன். இனி எந்த பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக் கொள்ளுவேன் அருந்ததி ம்மா, நீ கவலைப்படாதே! உன்னோட அம்மா விருப்பப்படி நீ இந்தத் தப்பை அழிக்கும் கரடுமுரடான பாதையில் வர வேண்டாம்” என்று கூற, அவளோ கண்கள் கலங்க அவரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“ராமு தாத்தா, நான் ஒரு உண்மையை சொல்லவா? என்னால் இப்ப கூட நடந்ததை எல்லாம் நம்பவே முடியலை, ஏதோ கனவு போலவே இருக்கு. நீங்க இவ்வளவு பெரிய காரியத்தை இவ்வளவு சுலபமாக செய்து முடிப்பீங்கன்னு இப்ப கூட என்னால நம்ப முடியல பாருங்க” என்று அருந்ததி கூற, மறுபுறம் ராமு தாத்தா அமைதியாக புன்னகை நிறைந்த முகத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

அவரது அமைதியான தோற்றத்தைப் பார்த்து நீண்ட பெருமூச்சு விட்டவள், “சரி தாத்தா, நான் கிளம்புறேன்” என்றவாறே தனது கேபினை நோக்கிச் சென்று விட, ராமு தாத்தாவும் தனது வேலைகளை கவனிக்க எண்ணி மெல்ல எழுந்து நடந்து செல்ல ஆரம்பித்தார்.

இப்போது வரை சந்திரனின் மரணத்தை நம்ப முடியாதவளாக தன் முன்னால் கிடந்த பத்திரிகையை விரித்துப் பார்த்துக் கொண்டிருந்த அருந்ததியின் மனமோ நான்கு நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை நோக்கி ஆசை போட ஆரம்பித்தது. வைஜெயந்தியின் பிடிவாதமான பேச்சைக் கேட்டு தன்னால் கதிரையும், அவனது சகாக்களையும் எதுவும் செய்ய முடியாதோ என்கிற கவலையான மனநிலையுடன் அருந்ததியின் நேரம் நகர்ந்து கொண்டிருக்க, அவளது சிந்தனை வாய்ந்த முகத்தை ராமு தாத்தா கவனிக்காமல் இல்லை. அன்றும் வழமை போல அருந்ததி தன்னோடு கலகலப்பாக பேசாமல் வெகு அமைதியாக அமர்ந்திருக்க, அவளுக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது, அதற்கு தன்னால் முடிந்த உதவியை செய்யலாம் என்று எண்ணிக் கொண்டவர் அவளிடம் சென்று, “அருந்ததி, என்னம்மா ரொம்ப கவலையாக இருக்க, ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்க, தனது கவலைகளை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருந்த அருந்ததியும் மடை திறந்த வெள்ளம் போல தனது உள்ளக் குமுறலை ஒரு வார்த்தை விடாமல் அவரிடம் முழுமையாக கொட்டித் தீர்த்தாள்.

தனது கையாலாகத தனத்தை எண்ணி வருந்தியவளாக அருந்ததி அமர்ந்திருக்க, சிறு புன்னகையுடன் அவளது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்த ராமு தாத்தா, “நீ எதற்கும் கவலைப்படாதே அருந்ததிம்மா, இந்த பிரச்சனைக்கு நான் ஒரு முடிவு பண்ணிடுறேன்” என்று கூற, அவளோ அவரை அதிர்ச்சியாக நிமிர்ந்து பார்த்தாள்.

“உங்களால் என்ன பண்ண முடியும் ராமு தாத்தா? அவங்க கையில் பதவி, பணம்ன்னு எல்லாம் இருக்கே” அருந்ததி கவலையுடன் அவரைப் பார்த்து வினவ, அவரோ அவளைப் பார்த்து புன்னகைத்தபடியே அங்கிருந்து மெல்ல எழுந்து நடந்து சென்றார்.

அவரது அமைதியான தோற்றம் அவளுக்கு எதையோ உணர்த்துவது போல இருக்க தனது தோளை குலுக்கிக் கொண்டு அங்கிருந்து எழுந்து கொண்டவள் அதன் பிறகு அதைப் பற்றி அவரிடம் பேசவே இல்லை.

இன்று காலையில் வைஜயந்தி பத்திரிகையைக் கொண்டு வந்து தன்னிடம் கொடுத்த பின்னர் தான் அவளுக்கு அந்த சம்பவமே நினைவுக்கு வந்தது.

தன்னிடம் சொன்னது போலவே எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் தான் செய்து முடிக்க வேண்டிய காரியத்தை இத்தனை சுலபமாக அவர் செய்து விட்டார் என்று எண்ணிக் கொண்டவள் அதே பிரமிப்போடு மாலை நேரம் வேலைகளை முடித்து விட்டு தனது வீட்டிற்குச் செல்ல எண்ணி தயாராகி வந்தாள்.

அவள் அந்த நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறும் தருணம் அந்த வாயிலில் ஒரு வயதான தம்பதியர் தவிப்புடன் அந்தப் பக்கமாக போவோர், வருவோரை எல்லாம் பார்த்துக் கொண்டு நிற்க, அவர்களுக்கு எதுவோ உதவி தேவைப்படுகிறது போல என்று எண்ணிக் கொண்டவள் அவர்கள் முன்னால் சென்று நிற்க, அப்போது அவளைக் கடந்து சென்ற ஒரு சிலர் அவளைப் பார்த்து, “இந்த ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத பிறப்பு எதற்காக இந்த இடத்தில் நிற்கிறா?” என்று கேட்டுக் கொண்டே சென்று விட, அருந்ததியின் முகமோ சட்டென்று வாடிப் போனது.

எத்தனை முறை, எத்தனை வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இப்படியான நபர்களின் எண்ணங்களை மாற்றவே முடியாது போல என்று எண்ணிக் கொண்டவள் தன் சிந்தனையைக் கை விட்டு விட்டு தனக்கு எதிரே நின்று கொண்டிருந்த அந்த தம்பதியினரிடம் பேசப் போக, அதற்குள் அவர்கள் இருவரும் அவளைப் பார்த்து மிரண்டு போனவர்களாக சட்டென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றிருந்தனர்.

அந்த தம்பதியினரின் செயல் அருந்ததியின் மனதை மேலும் மேலும் காயப்படுத்த, அதற்கு மேலும் அந்த இடத்தில் நிற்கவே அவளுக்கு அத்தனை வெறுப்பாக இருக்க, தன் வண்டியை எடுத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாள்.

தங்கள் வீட்டிற்கு வந்த பின்னரும் அவளது மனதிற்குள் எரிந்து கொண்டிருந்த வெறுப்பு அடங்காது இருக்க, வைஜயந்தியிடம் கூட ஒரு வார்த்தை பேசாமல் தனது அறைக்குள் அடைந்திருந்தவள் அடுத்த நாள் காலையில் தான் தனது அறையில் இருந்து வெளியேறி வந்திருந்தாள்.

அதுவும் தனது வேலைக்கு செல்வதற்காக புறப்பட்டு வந்தவள் வைஜயந்தியிடம் எதுவும் பேசிக் கொள்ளாமல் தனது வண்டியை இயக்க, அவளது நேரம் அதுவும் இயங்காமல் அவளது பொறுமையாக வெகுவாக சோதித்துப் பார்த்தது.

தன் கோபம் தாளாமல் அந்த வண்டியை எட்டி உதைத்தவள் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு பேருந்து நிலையத்தை நோக்கி நடந்து செல்ல, அதே சமயம் அருந்ததியின் பகுதியில் வசிக்கும் இன்னும் சில திருநம்பிகளும், திருநங்கைகளும் கல்லூரி செல்வதற்காக வேண்டி அந்தப் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டு நின்றனர்.

அவர்கள் அனைவரும் அருந்ததியைப் பார்த்ததுமே, “அருந்ததி க்கா, எப்படி இருக்கீங்க?” என்று சிநேகமாக புன்னகைக்க,

அவர்களிடம் தன் கோபத்தைக் காட்டக் கூடாது என்று எண்ணிக் கொண்டவள் தன் கோபத்தை தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்து புன்னகையுடன், “நல்லா இருக்கேன் ம்மா” என்று கூறியபடி அங்கே நின்று கொண்டிருந்த மற்றைய நபர்களின் புறம் திரும்ப, அவர்களோ அங்கே நின்று கொண்டிருந்த அத்தனை மூன்றாம் பாலினத்தவர்களையும் பார்த்து அருவருப்புடன் தங்கள் முகத்தை சுழித்துக் கொண்டனர்.

அவர்களது முகபாவனைகளைப் பார்த்ததுமே அத்தனை நேரம் அருந்ததியின் மனதிற்குள் எரிந்து கொண்டிருந்த கோபம் அவளது கோபத்தை மொத்தமாக தலைக்கேற செய்திருந்தது.

“இத்தனை அருவெறுப்பாக நீங்க பார்க்கும் அளவிற்கு நாங்கள் என்ன செய்தோம்?” என்ற கேள்வியுடன் அருந்ததி கோபமாக அந்த நபர்கள் முன்னால் சென்று நிற்க, அவள் திடீரென்று அங்கு வந்து நின்றதைப் பார்த்து அங்கே நின்று கொண்டிருந்த ஒரு பெண்மணி சட்டென்று இரண்டடி பின்னால் நகர்ந்து சென்றார்.

அந்த பெண்மணியின் மிரட்சியான பாவனையைப் பார்த்து அருந்தியின் கோபம் இன்னமும் அதிகரிக்க, “இப்போ எதற்காக நீங்க என்னைப் பார்த்து பயப்படுறீங்க? நான் வேறு ஏதாவது புதிய உயிரினம் போல இருக்கேனா? இல்லை வேறு ஏதாவது வித்தியாசமாக இருக்கா? உங்களுக்கு இருப்பது போல் ரெண்டு கண்ணு, ஒரு மூக்கு, ஒரு வாய், இரண்டு காது, இரண்டு கால், இரண்டு கைன்னு எல்லாம் அப்படியே தானே இருக்கு? வேறு ஏதாவது புதிதாக எனக்கு இருக்கா, என்ன? இல்லை என் தலையில் கொம்பு முளைத்திருக்கா? இல்லை என் நெற்றியில் பேய், பிசாசுன்னு ஏதாவது எழுதி ஒட்டி இருக்கா? சொல்லுங்க, எதற்காக எங்களை பார்த்து பயப்படனும்? நாங்களும் உங்களை மாதிரி மனுசங்க தானே? உங்களுக்கும், எங்களுக்கும் அப்படி என்ன வேறுபாடு இருக்குன்னு நீங்க இப்படி அருவருப்பாக எங்களைப் பார்க்குறீங்க?” அருந்ததி தன் கேள்விக் கணைகளை விடாமல் தொடுத்துக் கொண்டேயிருக்க, அவளெதிரில் நின்று கொண்டிருந்த நபர்களோ அவள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து அமைதியாக நின்றனர்.

“உங்களுடைய சமூக கருத்து எல்லாம் உங்களுடைய போனிலும், உங்களுடைய சமூக வலைத்தளங்களில் மட்டும் தான் போல. நிஜவாழ்க்கையில் ஒரு சக மனிதனை மதிக்க தெரியாத நீங்க சமூக கருத்து சொல்லி சமூகத்தை திருத்தப் போறீங்களா?” அருந்ததியின் கோபமான பேச்சில் இருந்த உண்மை அவர்களைக் கட்டிப் போட்டதால் என்னவோ அவளை நிமிர்ந்து பார்க்கவும் தைரியமின்றி அந்த நபர்கள் நின்று கொண்டிருக்க, மறுபுறம் அருந்ததிக்காக காலை உணவு செய்து முடித்துவிட்டு அவளை அழைக்கலாம் என்று எண்ணி சமையல் அறையில் இருந்து வெளியேறி வந்த வைஜயந்தி அவளை வீட்டில் எங்கேயும் காணாது போக சிறிது தவித்துத்தான் போனார்.

ஒரு வேளை அவசர வேலையாக சென்றிருப்பாளோ என்று எண்ணியபடி தங்கள் வீட்டின் வாயிலில் சென்று பார்த்தவர் அங்கே அவளது வண்டி இருப்பதைப் பார்த்து விட்டு, “இந்தப் பொண்ணு அப்படி எங்கே போயிட்டா?” என்றவாறே திரும்பிய தருணம் அவர்கள் வீட்டில் இருந்து சற்று தள்ளி இருக்கும் பேருந்து நிலையத்தில் கூட்டம் கூடி நிற்க, மறுபடியும் ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ என்ற பயத்துடன் அங்கே விரைந்து சென்றவர் அங்கே தான் கண்ட காட்சியில் ஒரு கணம் ஸ்தம்பித்துப் போய் நின்றார்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!