தேன் பாண்டி தென்றல் _ 20

தேன் பாண்டி தென்றல் _ 20

 
20
 
 
 
“ பதிலைச் சொல்றியா? இப்படியே இருக்கறியா? ரெண்டும் எனக்கு சம்மதம். சந்தோசம்” என்று இரண்டு கைகளையும் கழுத்துக்குப் பின்புறம் கோர்துக் கொண்டு சடவு (சோம்பல்)  முறித்தான்.
 
 
தென்றல் இதயம் தடதடத்தது அவள் விழிகளில் தெரிந்தது.
 
‘ என்கிட்ட என்ன அச்சம் இவளுக்கு?’ என்று அங்கலாய்ப்பாக இருந்தது அவனுக்கு.
 
 
“ சரி. நானே ஆரம்பிக்கிறேன். அன்னிக்கு அத்தையும் நானும் ஒரே பஸ்ல வந்தோம். அந்த டிராவல் டைம்ல அவங்களுக்கு எப்படியோ என்னைப் பிடிக்காமல் போச்சு.
 
இங்க வந்தப்புறம் என்னை அப்படியே கட் பண்ணிட்டு போய்ட்டாங்க.
 
 
சரி. எப்படியும் உன்கிட்ட பேசுவாங்க. நீ எனக்கு அதை சொல்லுவன்னு வெயிட் பண்ணேன். 
 
உனக்கும் பல தடவை ஃபோன் பண்ணேன். நீ எடுக்கவே இல்ல.
 
அத்தை நம்பர் என்கிட்ட இருந்துச்சு. என்ன முழிக்கிற? ஃபர்ஸ்ட் அவங்க தானே உனக்கு எஸ்எம்எஸ் அலர்ட் வந்துச்சு? அதை மாத்த வந்துதானே நாம இன்ட்ரோ ஆனோம்?
 
 
அக்கவுண்ட் நம்பரையும் ஆதார் நம்பரையும் லிங்க் பண்ணதுல ஆதார் கார்டுலயும் அந்த நம்பர்தான் குடுத்திருக்கே.
 
 
 
அத்தை நம்பருக்கு நான் அப்பவே அத்தனை ஃபோன் பண்ணேன். வேலைக்கு நடுவுல இதுவே எனக்கு அத்தனை டென்ஷன். ஆனா அதைப் பாத்தா முடியுமா? 
 
அப்போ சரவணன் சாரும் இல்ல. எனக்குதான் ஃபுல் ரெஸ்பான்சிபிலிடி. முடியைப் பிச்சுக்கிட்டேன் நிசமாவே.
 
 
சிரிக்கிரியா? சிரிச்சுக்கோ. அப்படியே ஒரு முத்தமும்…. மூட்டும் வலிக்குது. கொஞ்சம் பிடிச்சு விடுறியா?” என்று குழறினான்.
 
 
சம்மதமாக தலையசைத்து அவன் கால்களை மெல்லப் பிடித்து விட்டாள்.
 
 
 
உள்ளே பிளேட் வைத்திருப்பதாக அறிந்த நாள் முதல் அவளுக்கு அவன் கால்களைக் குறித்து பயம் அதிகம். எப்போது என்ன சொல்வானோ என்று பயந்து இத்தனை நாள் அவன் முகத்தைப் பார்க்காமல் கால்களைப் பார்த்தே கடத்தி இருந்தாள்.
 
அவள் மருத்துவமனையில் இருந்தபோது அவள் இன்றைய மனநிலையில் இருந்திருக்கவில்லை. 
 
 
பயம்! இந்த ஒரு உணர்ச்சி மட்டும்தான் வியாபித்து இருந்தது அவள் மனதில்.
 
 
அன்று இவனை பல நாட்களுக்குப் பின் பார்த்த அதிர்ச்சியில் மயங்கி விட்டாள்.
 
 
எந்த நிலையிலும் அவனை எப்படி அவள் மறப்பாள்?
 
 
 
 
அவனையும் உயிராக நினைவு இருந்தது. அவளை உயிரோடு கொன்ற அன்னையின் அந்த வார்த்தையும் நினைவு இருந்தது .
 
 
உன்னைப் பார்த்து பார்த்து காதல் வளர்த்தேன்
 அது பூத்து நின்றது
உன்னைக் கூந்தலில் முடிந்தேன்.
இப்போது
தேடித் தேடிக் கண்ணீர் வளர்க்கிறேன்.
கண்ணீர் கருகுமா?
உன் தரிசனம் கிடைக்குமா?
 
 
 
இவளின் முக மாற்றத்தில் அவன் கலங்கி விட்டான்.
 
 
“ எதுனாலும் சொல்லும்மா. நான் பாத்துக்கிறேன்” என்றவன் தன் கால்களை அவள் மடியில் இருந்து எடுத்துக் கொண்டான்.
 
 
“ வலிக்குதா?” என்று மென்மையாகக் கேட்டவனுக்கு ‘இல்லை ‘ என்பதாகத் தலையாட்டினாள்.
 
 
“ நீ பேசுறது எனக்கு கேக்கலை. வயசாகுது பாரு” என்றவன் அவளை நெருங்கி அமர்ந்து கொண்டான்.
 
 
“ வயசாகுதா?” என்று விழி விரித்தவள் ‘நாம இப்ப ஒன்னும் பேசலியே?’ என்று ஒரே யோசனையாகப் போய்விட்டது.
 
அவள் யோசித்ததைக் கண்டு கொள்ளாதவன் –
 
 
“ ஆமா. உன்னை விட எனக்கு வயசாகுது தானே?” என்று சமாளித்தான்.
 
 
மெல்ல அவள் கைவிரல்களை வருடியவன் “ அப்புறம்?” என்றான்.
 
இனி அவள்தான் சொல்ல வேண்டும். அவள் குணமானதே பெரிதாக யாரும் இதுவரை அவளிடம் அவள் கடந்தகாலம் பற்றிக் கேட்டிருக்கவில்லை. ஆனால் அது தன் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதிக்குமோ என்ற பயத்தில்தான் அவன் கேட்டுக்கொண்டு இருக்கிறான்.
 
தென்றல் ஒரு பெருமூச்சினை இழுத்து விட்டாள்.
 
 
அவன் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான். 
 
 
“ அன்னிக்கு அம்மா என்னைப் பாக்க வந்ததும் எப்போதும்போல சந்தோசமா பேசிட்டு இருந்தோம்.
 
 
 
என்ன நினச்சாங்களோ? திடீர்னு ‘ வேலம்மா… இங்க உன் படிப்பு முடிஞ்சதும் நம்ம இந்த வீட்டை வித்துட்டு கிராமத்துக்கு போடலாம்னு சொன்னாங்க. எனக்கு ஒன்னும் புரியல. 
 
 
 
போறதுதான் கிராமத்துக்கு போறோம். எதுக்கு படிப்பை முடிக்கணும்னு நினைச்சேன்” என்றவளை முடிந்தவரை முறைத்தான்.
 
“ என்ன விட்டுப் போறதைப் பத்தி கவலை இருக்கலை.  படிக்கணுமேன்னுதான் உன் கவலை!”  என்று மீண்டும் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
 
 
 
“ ப்ச்! உங்களை எப்படி விட்டுப் போவேன்? எப்படியும் அம்மாகிட்ட சம்மதம் வாங்கி  உங்களைத்தான் கட்டிக்கப்  போறேன். அதுவரை அம்மா சொல்றத கேக்க வேண்டியது தானேனு யோசிச்சேன். அதுல என்ன குத்தத்தைக் கண்டிங்க?” என்றவள் அந்த நாட்களுக்குள் சென்றாள்;.
 
 
ஆறு  ஏழு வருடங்களுக்கு முன்பு மல்லிகா கிராமத்தில் ஒரு ஆரம்பப்  பள்ளியில் அப்போது வேலை பார்த்து இருந்தார். 
 
அங்கே இருக்கும் குழந்தைகளின் மன வளர்ச்சிக்கேற்ப்ப அவரும் தன்னை மாற்றிக் கொண்டிருந்தார். 
 
சிறு குழந்தைகளின் இயல்புகள் சில அவருக்கு வந்திருந்தது.
 
அந்த மன மாற்றத்திற்கு அதற்கு சில வருடங்கள் முன்பு அதே பள்ளியில் நடந்த ஒரு நிகழ்ச்சியும் காரணமாக இருக்கலாம்.
 
ஒரு மழையை எதிர்பார்க்காத நாளில் பழுதடைந்த அந்த பள்ளிக் கூட வகுப்பறையில் பயந்துகொண்டே இவர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது பெரும் சத்தத்துடன் அது இடிந்து விழுந்தது.
 
வெளியே மழை அடித்து ஊற்றியதால் தான் அந்த வகுப்பறைக்குள் வந்திருந்தனர். இல்லை என்றால் மரத்தடியில் வைத்து பாடம் நடத்தி இருப்பார்.
 
 
கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமும் சேர்க்கப்பட்டும் அதில் ஒரு குழந்தை இறந்து விட்டது.
 
அதில் இருந்து குற்றவுணர்வு மல்லிகாவை அரித்தது.
 
குழந்தைகளுக்கு விடுப்பு விட்டிருந்தால் கூட  இப்படி ஆகி இருக்காதே என்று அவரால் தாள முடிய வில்லை.
 
அது ஒரு எதிர்பாராத மழை.
 
இவர்கள் வாழ்வை மாற்ற வந்த மழை.
 
 
அப்படியும் பெற்றவர்களுக்கு தகவல் சொல்லி இருந்ததால் பிள்ளைகளை அழைத்துச் செல்ல வந்து கொண்டு இருந்தவர்கள் கேள்விப்பட்டது பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்த செய்தியைதான்.
 
கட்டிடம் இடிந்த விசயம் தெரிந்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவரும் வந்துவிட்டார் உடனடியாக. அவர் அப்போதுதான் அங்கே சார்ஜ் எடுத்திருந்திருந்தார். 
 
பள்ளிக் கட்டிடத்தைக் கவனிக்கத் தவறிய அலுவலர்களுக்கு சஸ்பென்சனும் சார்ஜஸூம் போட்டுவிட்டு காயமடைந்த மற்றும் மரணமடைந்த குழந்தைக்கும் நஷ்ட ஈட்டுத்தொகை வழங்கப்பட்டது.
 
மருத்துவம் இலவசமாகப் பார்க்கப்பட்டது. இதில் மல்லிகா டீச்சரின் மீது எந்தப் பிழையும் இருக்கவில்லை. பழைய கட்டிடம் குறித்து பலமுறை புகார் தெரிவித்து இருந்தனர்.
 
அன்று மழையாக இல்லாவிட்டால் அங்கே வைத்து பாடம் எடுத்திருக்கமாட்டார். இருப்பினும் ஒரு ஐந்து நிமிடம் பொறுத்திருந்தால் இத்தனை நடந்திருக்காதே? பெற்றவர்கள் வந்து பிள்ளைகளை அழைத்துச் சென்றிருப்;பார்களே? 
 
எல்லாவற்றையும் விட மற்றவர்களை நம்பி அந்த அறையை விட்டுவிட்டோமே? சம்பளப்பணத்தில் சிறிது சிறிதாக செய்திருக்கலாமே? என்ற எண்ணம் அவரை வாட்டி எடுத்தது. 
 
இது சாதாரண விசயம் அல்ல. அப்போதைய நாளிதழ்களில் பெரிதாக பேசப்பட்ட விசயம். 
 
அதன்பின் அவர் தன் வேலையை விட்டுவிட்டார்.
 
ஆனால் அன்றைய நிகழ்வில் அவரது தலையில் ஒரு ஓடு விழுந்ததில் அவர் கொஞ்சம் நிதானம் தவறித்தான் போனார்.
 
அதன்பின் அடிக்கடி மறதி இருந்தது. ஓரோரு சமயம் வலிப்பு வந்தது.  அப்போது பத்தாவது  படித்துக் கொண்டு இருந்த தென்றல்தான் நிலைமையைக் கையில் எடுக்க வேண்டியதாகிவிட்டது.
 
 
படிப்பை முடித்தவள் கோவையில் இருந்த அவள் அப்பாவின் வீட்டிற்கு அன்னையை அழைத்து வந்து விட்டாள்.
 
அப்பாவின் வீடு அங்கே இருந்தது. ஆனால் அப்பா? அவர் இவளது சின்ன வயதிலேயே மறைந்து விட்டார். அவர் வாழ்ந்த வீட்டில் தனியாகக் குழந்தையுடன் வாழ இயலாமல் கிராமத்திற்குச் சென்ற மல்லிகா அதன் பின்பு தனியார் பள்ளி ஆசிரியர் ஆகி இருந்தார்.
 
அப்போது இந்த நிகழ்ச்சிக்குப் பின் அந்த ஊரில் – மல்லிகாவின் சொந்த ஊரில் இருக்க விரும்பாமல் இங்கே வந்துவிட்டனர்.
 
அது ஒரு மாடியுடன் கூடிய வீடுதான். ஆனாலும் தனது தாயின் உடல்நிலைக் கருதி மாடிப்பகுதியை  வாடகைக்கு விடவில்லை அவள். 
 
 
போதிய பணம் டெபாசிட் இருந்ததால் அவர்களுக்கு பணப்பிரச்சனை இல்லை. இவள் கல்யாணத்திற்கும் நகைகளை லாக்கரில் வைத்துவிட்டுத்தான் போயிருந்தார் இவள் அப்பா. 
 
முன்கூட்டியே அப்படி எதைச் சிந்தித்தார் என்று தெரியவில்லை அத்தனையும் செய்து முடித்திருந்தார் அவள் அப்பா.
 
அதற்கு அவரது வயது ஒரு காரணமாக இருநதிருக்கலாம். மல்லிகாவிற்கும் அவர் கணவருக்கும் பதினேழு வயது வித்தியாசங்கள் இருந்தது. தனது காலம் சீக்கிரம் முடிந்துவிடும் என்று கருதியே இத்தனையும் செய்தவர் அவரே எதிர்பார்த்த காலத்திற்கு முன்பாவே இறைவனைப் போய்ச் சேர்ந்து விட்டார்.
 
அந்த ஆக்ஸிடென்டுக்குப் பின் பலநேரங்களில் நன்றாகத்தான் இருப்பார் மல்லிகா.  ஆனால் குழந்தைகள் – கட்டிடம் என்று ஏதாவது அவர் மனதை பாதித்தால் அவரைக் கட்டுப்படுத்த முடியாது.
 
இப்படி வைத்துக்கொண்டு இவளை சென்னைக்குப் படிக்க அனுப்பியதே பெரிய தவறுதான்.  ஆனால் அந்தக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசையை இவள் முகத்தில் பார்த்துவிட்டு அனுப்பி வைத்திருந்தார் அவர்.
அவள் அழகை இவரது பள்ளிக் குழந்தைகள் சிலாகிப்பதைப் பார்த்து பெருமிதப்பட்டவர் அவர் . அதனால் இங்கேயும் அவளை நன்கு பராமரித்துக் கொள்வார்.
 
யார் யாரை கவனித்துக் கொள்கிறார்கள் என்ற தெரியாமலே சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்ககை தென்றலின் சென்னைப் பயணத்தால் முற்றிலும் மாறிப் போனது.
 
 
தென்றலை சென்னையில் இருந்து அழைத்து வரும் முன்பு வரை கோவையிலும் இவர்கள் காலனிக்கு அருகில்  ஒரு தனியார் பள்ளியில் ஆரம்பத்தில் வேலை செய்திருந்தார். அந்தப் பிள்ளைகளுக்கும் தென்றலின் மீது அத்தனைப் பிரியம் உண்டுதான். 
 
 
அன்று சென்னையில் கல்லூரிக்கு இவளைப் பார்க்க வந்த  மல்லிகாவிடம் தென்றல் தயங்கித் தயங்கி எல்லாம் சொல்லிவிட்டாள்.
 
பூதப்பாண்டியனின் புகைப்படத்தையம் காட்டி இருந்தாள். அவனை பஸ்ஸில் வைத்துப் பார்த்ததை ஒத்துக் கொண்டவர் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
 
ஆனால் தாய் இப்படி முகத்தை வைத்துக் கொண்டால் சிக்கல்தான் என்பதை தென்றல் உணர்ந்திருந்தாள்.
 
 
“சரி. இதை அப்புறம் பாப்போம். “ என்றவர் கண்முன் தன் மாணவச் செல்வங்களிடம் மகளைப் பற்றிப் பெருமை பேசியது நிழலாடியது. 
 
“எம்பொண்ணு என் பேச்சைத் தட்ட மாட்டா. அவளுக்கு எல்லாம் நான்தான் செய்யனும்” என்ற அவரது பெருமை காற்றில் கரைந்து போனதாக மனம் இறுகினார்.
 
பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்த கல்வி –  ஒழுக்கம் அனைத்தையும் மறந்து போனவர் அவர்களிடம் தன் மகளைக் குறித்துப் பேசிய பெருமையை மட்டும் மறக்கவில்லை. இதுவே அவர் முன்னதை மறக்கக் காரணமும் ஆனதுதான் சோகம்.
 
இதை அவரது பேச்சில்தான் தென்றல் கண்டு கொண்டாள். பின்னாட்களில். ஆனால் தாயை மாற்றிவிடலாம் என்று நினைத்ததுதான் அவள் செய்த தவறாகிப் போனது.
 
 
மல்லிகா மகளின் காதல் விவகாரம் கேள்விப்பட்டப்பின் “ இனி நீ இங்க தங்க வேண்டாம். படிப்பை டிஸ்கண்டினியூ செய்திடுவோம். ஊருக்கு வந்திடு. அந்தப் பையன்கிட்ட இப்ப எதுவும் சொல்ல வேண்டாம். நானும் கிராமத்துல நம்ம சொந்தக்காரங்ககிட்ட ஒரு வார்த்தை கலந்துகிடடு மத்தது அப்புறம் பேசுவோம்” எனவும் ‘அந்த சொந்தக்காரங்க நம்மளை மதிக்கறதில்லை. நாமளும் அதைக் கண்டுக்கறதிலலை. அப்புறம் எதுக்கு அவங்ககிட்ட கேக்கனும்?’ என்று அவள் நினைத்தாலும் – இது கல்யாண காரியம் அல்லவா? அப்படித்தான் செய்வார்கள் போல என்று விட்டுவிட்டாள்.
 
தாய் சொன்னதுபோல அவளுக்குப் பிடித்த படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பூதப்பாண்டியனை மணக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் அவள் தன் அன்னையுடன் கிளம்பினாள். 
 
உடன் பயின்ற தோழிகளிடமும் அங்கே போய்ப் படிப்பதாகச் சொல்லி வாயை அடைத்து விட்டாள். 
 
கோவையில் தங்கள் வீட்டிற்கு வரும் வழியில் அழகிய வீர பாண்டியன் கடையில் பால்பாக்கெட்  வாங்கிக் கொண்டு போனதுதான் அப்போது கடைசியாக அவள் வெளியுலகத்தைப் பார்த்தது.
 
வீட்டிற்குச் சென்றதும் அவர் சாதாரணமாகத்தான் இருந்தார். இவளே அறியாமல் இவளது வெளியுலகத் தொடர்புகளை முறித்தார். முக்கியமாக செல்போன். அதை சென்னையில் வைத்தே பறிமுதல் செய்தவர் தெரியாத எண்களில் இருந்து வந்த அழைப்புகளையும் ஏற்காததால் பூதப்பாண்டியன் அவரை அழைத்ததையும் அவா ஏற்றிருக்கவில்லை.
 
ஆறு  மாதங்கள் கழித்துதான் அன்னையின் மாற்றம் அதிர்ச்சியுடன் தென்றலுக்குப் புரியவே ஆரம்பித்தது. அதுவரை அன்னை சொன்னது போல நடந்ததில் அவள் வீட்டில் இருப்பதே வெளியில் தெரியவில்லை எனபதையும் அவள் அறிந்திருக்கவில்லை.
 
ஆனால் பூதப்பாண்டியனுடனான திருமணம் பற்றித் தயங்கித் தயங்கிக் கேட்டபோது இவளுக்கு ஜாதக தோசம் என்றும்  அதனால் ஒரு ஒருவருடம் திருமணம் முடிக்க முடியாது என்று கிராமத்தில் இருந்த உறவினர்கள் சொல்லிவிட்டதாக ஒரே போடாகப் போட்டு இவள் வாயை அடைத்து இருந்தார். 
 
அதற்குமேல் அவனுடன் பேசவேண்டும் என்றெல்லாம் ஆசை இருந்தாலும் அன்னையின் முகத்திற்காக அவள் அதைப் பொறுத்துக் கொண்டாள்.
 
அப்போது அவளது ஒரே குறிக்கோள் அன்னையின் சம்மதம் வாங்கி பூதப்பாண்டியனை மணப்பது மட்டுமே. அதற்காக அன்னைக்கு பிடிக்காத எதையும் செய்வதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டு நடமாடினாள்.
 
மனைவியின் முகம் கசங்குவதை உணர்ந்து குடிக்கத் தண்ணீர் எடுத்துக் கொடுத்து அவள் மீதி வைத்த நீரைத் தானும் பருகியவன் ‘மேலே சொல்லு’ என்பதாகத் தலையசைத்து விட்டு ஆறுதலாக அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டான் அவள் கணவன் .

Leave a Reply

error: Content is protected !!