emv21

emv21

எனை மீட்க வருவாயா! – 21

 

“ஹாய்  கேப்பி(கருவா பையா).. எப்ப வந்தீங்க” என ஹாலில் யோசனையோடு அமர்ந்திருந்தவனின் காதருகே வந்து திவ்யா கிசுகிசுப்பாய் கேட்க

என்ன பதில் பேச என புரியாமல் விழித்தவனிடம், “நீங்க வருவீங்கன்னு நான் ரொம்ப நேரமா கிளம்பி வயிட் பண்ணிட்டு இருந்தேன்” என உள்ளே சென்றவள், கையில் ஒரு பேகோடு வர, ஜெகன் வாயே திறக்காமல் தன்னவளோடு கிளம்பிவிட்டான்.

ஈஸ்வரி, காளியம்மாளைப் பற்றிப் பேச எண்ணி, உறவினருக்கு அழைக்க, ஜெகன் அங்கிருந்தமையால் சங்கடத்தைத் தவிர்க்க அவரின் அறைக்குள் சென்று பேசிக் கொண்டிருந்தார்.

அதேநேரத்தில் கணவனோடு கிளம்பியவள், “ம்மா நான் போயிட்டு வரேன்” என வெளியில் ஜெகனோடு செல்ல, பேச்சு மும்முரத்தில் மகளைக் கவனிக்க மறந்திருந்தார் ஈஸ்வரி.

கணவனிடம், “நேரா வீட்டுக்கா.  இல்லை வேற எங்கேயும் போகலாமா?” ஆசையோடு வினவ

“சொல்லு, எங்கேயும் போக வேண்டியிருக்கா?”

“ரொம்ப நாளாச்சுங்க.  இன்னைக்கு தியேட்டர் போகலாமா?” தலையை வேகமாய் ஆட்டிக் கேட்டதிலேயே, அதில் அவளின் விருப்பம் புலப்பட, அடுத்து வந்த கெஞ்சல் குரலில் மறுக்கவே தோன்றவில்லை ஜெகனுக்கு.

“ம்ஹ்ம்” சிரிப்போடு ஆமோதித்தான்.

“அப்ப, படம் பாத்திட்டு இங்க வந்து சாப்பிட்டிட்டு, அப்றம் ஊருக்குப் போயிக்கலாம்” என அன்றைய நாளுக்கான அவர்களின் நேரப் பயன்பாட்டை திட்டம் தீட்டியவள், வேகமாய் வீட்டிற்குள் செல்ல முற்பட்டாள்.

வேகமாய் சென்றவள் அவளின் உடைகள் மற்றும் இத்யாதிகள் அடங்கிய பேகை வைத்துவிட்டு, கணவனோடு கிளம்பிவிட்டாள்.

இன்னும் காளியின் செயல்களைப் பற்றியே, வருத்தம் தொணிக்கும்படி மும்முரமாய் பேசிக் கொண்டிருந்த ஈஸ்வரி, எதையும் கவனித்தாரில்லை. பேசி முடித்ததும் வந்து மகளைத்தேட, எங்கும் அவளைக் காணவில்லை.

அதேநேரம் ஜெகன் வீட்டிற்கு வந்தது நினைவில்வர, ‘அவருகூட கிளம்பிப் போயிட்டாளா? கூறுகெட்டவ!  இவ நல்லதுக்கு நாம பேசிக்கிட்டுருந்தா, யாருக்கு வந்த விதியேன்னு அந்த மனுசங்கூடயே கிளம்பிப் போயிட்டாளா?’ என யோசித்தபடியே, அடுத்து திவ்யாவிற்கு அழைக்க, தியேட்டருக்குள் இருந்த சத்தத்தில் அலைபேசியின் அழைப்பு சத்தம் கேட்காமல் இருக்கவே, திவ்யாவால் அழைப்பு ஏற்கப்படவில்லை.

“புள்ளையா பெத்து வளத்திருக்கேன்.  இந்த லூசப் பெத்ததுக்கு பேசாம நாலு செங்கலையாது பெத்திருந்திருக்கலாம்போல. அது சொவரு கட்டவாவது ஆகியிருக்கும்” எனும் முணுமுணுப்போடு ஈஸ்வரி அலைபேசியை வைக்க, அதேநேரம் கணவனோடு இழைந்தபடியே படம் பார்க்கத் துவங்கியிருந்தாள் திவ்யா.

…………………………………

திவ்யாவைப் பொறுத்தவரையில், ஜெகனோடுடனான வாழ்வே சொர்க்கம் எனுமளவிற்கு மாறியிருந்தாள்.

ஜெகன் அவளை அன்போடும் அணுசரணையோடும் கவனித்துக் கொள்வதாகட்டும், அவளுக்கு வேண்டியதை அவள் கேளாமலேயே, விகற்பமோ, அகம்பாவமோ இன்றி மனமுவந்து செய்வதாகட்டும் என திவ்யாவைத் தாங்குவதில் தரணியில் அவனுக்கு நிகரில்லை எனுமளவிற்கு இருந்தான். அவனின் செய்கைகளில் மகுடிக்கு கட்டுண்ட நாகமாய், முழுமனதோடு அவனுக்காகவே தனது எதிர்காலத்தையும் அர்ப்பணித்திடும்படியான மனநிலைக்கு மாறியிருந்தாள் திவ்யா.

காளியம்மாளின் இடையூறுகளைக்கூட பெரிதுபடுத்த தோன்றாமைக்குக் காரணம் ஜெகனின் இச்செயல்களே.

காளியம்மாள் வந்து தங்கும் நாட்களில், தன்னை நாடி வருபவனை அவளாகவே தவிர்த்து, “போங்க, இங்க வந்ததும் உங்கம்மா கூப்பிடுவாங்க.  அதனால அவங்க போறவரை இந்தப் பக்கமே தலை வச்சுப் படுக்கக்கூடாது, சொல்லிட்டேன்” என மிரட்டும் குரலில் அடிக்காத குறையாக விரட்டுவாள்.

ஆனால் அதில் எள்ளளவும் கோபமிருக்காது. ஜெகன்தான் பரிதவித்துப் போவான்.  மனைவியியோடுடனான நேரம் செலவளிக்க எண்ணுபவன், தாயிக்கு எதாவது ஒரு வழியில் டிமிக்கி கொடுத்துவிட்டு வருவான். நேரங்காலம் தெரியாமல் அழைப்பார் காளி.  அந்த நேரங்களில் எழும் கோபத்தை தாயிடம் காட்டுவான்.

சில நேரங்களில் மனைவியிடம், “இது தாயா இல்லை வேற எதுவுமான்னே புரிய மாட்டிங்குது” என புலம்பினாலும், சிரிப்பாளே அன்றி, காளியைப் பற்றி கருத்து எதுவும் கூறமாட்டாள்.

“என் நிலைமை எல்லாம் உனக்கு சிரிப்பாத்தான்டி இருக்கும்.  இரு அதைப்போயி எப்டி ஆஃப் பண்ணிட்டு அய்யா சட்டுன்னு வரேனு” என செல்பவன், பத்தே நிமிடத்தில் மனைவியிடம் திரும்பி, ஆவேசமாய் வந்து அணைத்துக் கொள்வான்.  அல்லது அவள் வேலையாக இருந்தால், அவளோடு அவனும் சேர்ந்து செய்வான்.

“என்ன இப்ப நடந்திருச்சு கேப்பி.  இதுக்கே இவ்வளவு டென்சனானா இன்னும் பாக்க எவ்ளோ இருக்கு?” என கேலி செய்வாள்.

அத்தோடு, அந்தத் தருணங்களிலெல்லாம், நமுட்டுச் சிரிப்பாய் கடிகாரத்தில் நேரம் பார்ப்பாள் திவ்யா.

‘இன்னும் எவ்வளவு நேரத்துக்குன்னு பாக்கறேன்’ என்பதாய் இருக்கும் அவளின் பார்வை.

அவள் நினைத்தது போலவே, அடுத்து வரும் பதினைந்தாவது நிமிடத்தில் அழைத்துவிடுவார்.

மீண்டும் முகத்தைத் தூக்கி வைத்தபடியே, அதே நெஞ்சுரத்தோடு செல்வான்.  இப்படியே நாள்கள் இதுவரைச் சென்றிருந்தது.

காளி இல்லாத நாள்களில், ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரமே போதவில்லை எனப் புலம்புவான் ஜெகன்.

“ரொம்ப ஓவராத் தெரியலை உங்களுக்கு?” என்பாள் திவ்யா

“எது ஓவரு.  எம் பொண்டாட்டிகூட நேரம் செலவளிக்க நினைக்கறது ஓவரா?”

“பின்ன, உங்கம்மா இருக்கற அன்னிக்கு எல்லாம் ஒரு நாளைக்கு மொத்தமே இரண்டு மணி நேரங்கூட சேந்தாப்புல இருக்க முடியறதில்லைல.  அப்ப அதக்காட்டிலும் நாலு மடங்கு நேரங் கிடைச்சா, அத நினைச்சு சந்தோசந்தான படணும்” என்பாள்.

மனைவியின் பேச்சு புரிந்தாலும், புரியாததுபோலவே நடந்து கொள்வான் ஜெகன்.

காளியம்மாள் வரக்கூடிய தினங்களில் தனக்கென சில வேலைகளை பெண்டிங் வைத்திருப்பாள் திவ்யா.

எப்படியும் கணவனோடு நேரம் செலவளிக்க தடையாய் காளி இருப்பார் என்பதால், அந்த நாள்களில் படிப்பு, ஒப்படைப்பு மற்றும் இதர பணிகளை ஒதுக்கி வைத்திருக்கப் பழகிக் கொண்டாள்.

கிடைத்த வாழ்வினை, மனம்போல, இனிமையானதாய், இலகுவானதாய் மாற்றிக்கொள்ள முன்வந்திருந்தாள்.

வேலைக்குச் சென்று வருபவன், அவனது சம்பாத்தியம் முழுவதையும் மனைவியிடமே கொடுக்கத் துவங்கியிருந்தான்.

திவ்யாவும் முறையாக அதனைப் பயன்படுத்தப் பழகிக் கொண்டாள்.  அது எல்லாம் ஈஸ்வரியின் பாடம்.  அதனால், திட்டம் போட்டு ஒவ்வொன்றிற்கும் பணத்தை எடுத்து வைத்து, கணவன் கேட்கும் முன்பே, இந்தாங்க என பணத்தைக் கொடுத்து, வேண்டியதை வாங்கி வரக் கூறுவாள்.

இதுபோக மிச்சமிருக்கும் தொகையை சேமிப்பாக்கி வைத்து, மாத இறுதியில் கணவனிடம் கொடுக்க வைத்திருந்தாள்.

ஆரம்பத்தில் அமைதி காத்திருந்த காளி ஒரு முறை மகனிடம் நேரிடையாய் கேட்டிருந்தார்.

“செகனு, இப்பல்லாம் செலவுக்கு எனக்குப் பணமே குடுக்க மாட்டிங்கறீயே”

மெதுவாய் வந்து தாயருகே அமர்ந்தவன், “உனக்குச் செலவுக்குப் பணம் வேணுனா, அப்பாகிட்ட கேளு.  எங்கிட்ட வந்து கேக்குற?”

“ஏண்டா, இப்டி மாறிட்டே! கைகால் நல்லா இருக்கும்போதே இப்டிச் சொன்னா, தள்ளாத வயசில என்னடா பண்ணுவேன்” என வராத அழுகையோடு மகனிடம் கேட்க

“ம்மா.  இவ்வளவு நாளு உங்கிட்டதான் எல்லாப் பணத்தையும் குடுத்தேன். அதையெல்லாம் என்ன செஞ்ச?”

“என்னடா இப்டிக் கேக்குற? வீட்டுல ஆயிரம் செலவிருக்கும்.  அப்புறம் உன்னோட கல்யாண செலவு.  இப்ப ஆக்கிப் பொங்கித் திங்கனு ஆகாதா?”

“நீ இங்கதான பாதி நாளு இருக்க.  அப்ப செலவு ஒன்னும் இல்லல.  அங்க அப்பா சம்பாத்தியம் எல்லாம் உங்கிட்டதான தராரு.  அப்புறம் என்னம்மா?”

“இருந்தாலும்…” என இழுத்தவர் தனது கேள்விக்கு தகுந்த நியாயம் கிடைக்காத ஏமாற்றத்தில், “பெத்தவ மனசு பித்து, புள்ளைங்க மனசு கல்லுன்னு சும்மாவா சொல்லி வச்சிட்டுப் போயிருக்காங்க” என நீலிக் கண்ணீர் வடிக்க

“சும்மா, சும்மா இப்டி கண்ணுல தண்ணிய வச்சிட்டு ஏமாத்தற வேலயெல்லாம் எங்கிட்ட வேணாம்.  உனக்கு இத்தனை வருசம் சம்பாதிச்சுக் குடுத்த, பதினைஞ்சு லெட்சத்துல பாதிக்குமேல எல்லாத்தையும் நகையாச் செஞ்சு கழுத்துல போட்டிருக்க.  அதுபோக வெள்ளாமையில வந்ததும் நகையாத்தான் மாறிருக்குன்னு நினைக்கிறேன்.  எங்கப்பா குடுக்கற காசும் மிச்சம் புடிச்சு, சேத்து வைச்சிருக்க சிறுவாட்டுக் காசு, எங்க ஒளிச்சு வச்சிருக்கனு தெரிய மாட்டிங்குது.  எங்கல்யாணத்துக்கு நாந்தான் உங்கிட்ட காசு குடுத்தேனே.  அப்புறம் நீ செலவழிச்சேங்கிற?” என தாயிடம் கேட்க, அழுது அரற்றியவர், அத்துடன் அன்றே அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

அடுத்து ஐந்து நாள்களுக்குப் பிறகே அங்கு மீண்டும் வந்தார்.

அப்போதே ஜெகனுக்கு தாயிடம் என்ன பேசினால் தனது காரியம் சித்தியாகும் எனப் புரிந்தது.

………………………………………….

இடைவேளைவரை வேறு எதையும் சிந்திக்க இயலாது இருவரும் படம் பார்ப்பதில் கவனமாய் இருந்தனர்.  அடுத்து வந்த இடைவேளையில் அவளுக்கு வேண்டியதைக் கேட்டு வாங்கிக் கொடுத்தான்.

உல்லாசமான அனுபவம் இருவருக்கும். அத்தோடு இருவரும் படத்தைப் பார்த்துவிட்டு வீடு திரும்ப, ஈஸ்வரி மகளை வாயிலில் நிறுத்தி வைத்துக் கேள்வியைத் துவங்கியிருந்தார்.

“ஏண்டி, உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா.  உனக்காக நான் எல்லாருகிட்டயும் பேசிக்கிட்டு இருக்கேன்.  நீயென்னனா எனக்கென்னானு வெக்கமில்லாம அவருகூடயே கிளம்பிப் போயிட்டு வர?”

“எதுனாலும் வீட்டுக்குள்ள கூப்பிட்டு பேசறதா இருந்தாப் பேசு.  இல்லனா இப்டியே எம்புருசன்கூட கிளம்பிப் போறேன்” என வீராப்பாய் பதில் கூறினாள் திவ்யா.

ஜெகனுக்குமே மனைவி என்னடா இவ்வளவு பேசுகிறாள் எனத் தோன்றாமலில்லை.

“ஓஹ்.  அந்தளவுக்கு பெரிய மனுசியாயிட்டீங்களாக்கும்” எனச் சிரித்தவர், உள்ளே வா என செய்கை காட்ட, தங்கு தங்கென  உள்ளே நுழைந்தவள், கணவனையும் ஒரு கையில் பிடித்தபடியே வந்திருந்தாள்.

“நான் உனக்கு எப்பவும் மகதான்.  என்னை நீ எப்டி வேணா நடத்தலாம்.  அதுக்கு உனக்கு ஃபுல் ரைட்ஸ் இருக்கு.  ஆனா எம்புருசனை இப்டி வெளிய நிக்க வச்சா அது நல்லாவா இருக்கும்?”

மகளின் கேள்வியில் இருந்த நியாயம் பிடிபட்டாலும், “ஏண்டி, அந்தப் பையன் ஒழுங்கா இருந்தா, இவ்ளோ பிரச்சனையே இல்லைனுதானே உன்னை ஹாஸ்டல்ல விடப்போறேன்னு பேசிக்கிட்டு இருந்தேன்.  இப்ப அந்தப் பையனுக்காகவே வந்த பேசுறியோ.  உனக்கு காளிதான் சரியான ஆளு.  போ.. இனி எதாவது குறை அது இதுன்னு எங்கிட்ட வந்து சொல்லு.  அன்னிக்கு இருக்கு” என பொறுப்பு துறப்பாய் பேசியதோடு மிரட்ட

“ஏம்மா, அந்த அப்பத்தா எப்டி, என்னானு கல்யாணத்துக்கு முன்னாடியே நீ விசாரிச்சிருக்கணும். அப்ப எதையும் விசாரிக்காம, வேணானு அழுதவளை கட்டாயப்படுத்திக் கட்டிக் குடுத்து தலை முழுகிட்டே”

மகளின் அதிரடியான பேச்சைக் கேட்டவர், “மெதுவா பேசுடீ” என என்றவரிடம்

“கல்யாணம் முடிஞ்சு மூனு மாசமா நான் சொல்லச் சொல்ல காதுல வாங்கவும் இல்லை, கண்டுக்கவும் இல்லை.  அப்புறம் ஏதோ மனசு இறங்கி வந்து பாத்துட்டு, பஞ்சாயத்து அது இதுன்னு வந்து தனிக் குடித்தனம் வச்சாச்சு. ஆனா  இன்னும் அந்த அப்பத்தா அடங்க மாட்டிங்குது.  இது எல்லாம் நீ ஆரம்பத்தில செய்யாம இப்பப் பண்றதால எதுவும் மாத்த முடியாது.  இவரோட அம்மாதான் காளிங்கறதை இனி உன்னால மாத்த முடியுமா.  முடியாதில்ல.  அப்ப அவங்களை சகிச்சுக்கிட்டுத்தான் போயாகணும்.  அதைவிட்டுட்டு, எடுத்ததுக்கெல்லாம் ஆளைக் கூப்பிட்டு பஞ்சாயத்து வச்சா, ஊருப் பயலுக அத்தனை பேரும் நம்ம வீட்டைப்பத்தி புரணிதான் பேசுவானேதவிர, இதுல எதையாவது மாத்த முடியுன்னு நினைக்கிற?”

“என்னடீ இந்தப் பேச்சு பேசுற?  எல்லாம் அந்த அத்தையோட ட்ரைனிங்கா?” என ஈஸ்வரி சிரிப்போடு கேட்க

“சிரிச்சு மழுப்பாத ஈசும்மா.  நீதான் இவருக்கு என்னைய கட்டி வச்சே.  எதாவது அங்க கஷ்டம்னா உங்கிட்ட ரெண்டு நாளோ, நாலு நாளோ, பத்து நாளோ எனக்கு எப்டித் தோணுதோ அப்டி வந்து இங்கதான் இருப்பேன்.  வந்த புள்ளைக்கு ஆறுதல் சொல்லு.  இன்னும் என்னலாம் செய்யணுமோ அதைச் செய்யி.  அதவிட்டுட்டு பொசுக்குனு இங்கலாம் வராதன்னு சொன்னா என்னா அர்த்தம்?  நானாவா இவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.  அப்டினாகூட நீ சொன்னதுல நியாயம் இருக்குனு நானே ஒதுங்கியிருப்பேன்.  ஆனா இதுல நீ எஸ்கேப்பு ஆயிரலாம்னு மட்டும் நினைக்காதே” என்றவள்

“ம்மா பசிக்குதுனு வந்தா, வந்த புள்ளைக்கு சோறு போடாம, வாசல்லயே நிக்க வச்சு கேள்வி மேல கேள்வி கேக்குற.  வரவர நீ சரியில்லை.  என்ன குழம்பு வச்சே” என இலகுவாகத் தாயிடம் பேசிய மனைவியை வியப்பாகப் பார்த்திருந்தான் ஜெகன்.

அத்தோடு அடுக்களைப் பகுதிக்கு சென்றவள், அங்கிருந்த ஒவ்வொன்றையும் திறந்து பார்த்து, “மீன் குழம்பு, நெய் மீன் புட்டு, இராட்டு வறுவல்.. இவ்ளோவையும் பண்ணிட்டு, நீயும், உன் மகனுமா திங்க பிளான் பண்ணி, எங்களை வாசலோட விரட்டிவிடப் பாத்திருக்க” என தாயையே குறை கூற

“ஏய்… இப்டியெல்லாம் நீ விளையாட்டுக்குப் பேசாதடீ.  அந்தப் பையன் இதுதான் உண்மைனு நினைச்சுக்கப் போவுது” என மகளைக் கண்டிக்க

அனைத்தையும் பார்த்திருந்த ஜெகனுக்குமே அப்போதுதான் உரைத்தது.  தனக்காக, தன்னை வெளியில் நிற்க வைத்துப் பேசியது பொறுக்காமல், தனது மாமியார் அதாவது ஈஸ்வரியிடம் மல்லுக்கு நின்றதுபோல, மனைவிக்காக தான் இதுவரை தனது தாயிடம் பேசியதில்லை என்பதுதான் அது.

ஈஸ்வரிக்குமே மகளின் பேச்சில் இருந்த நியாயம் புரிந்தாலும், “அப்ப நீ அங்க போயி அல்லல்படப் போற?” அடுக்களைப் பகுதியில் இருந்தபடியே மகளிடம் கேட்க

“ஏன் அல்லல்படணும்.  காலேஜ் போயிருவேன்.  அதனால முன்ன மாதிரி ரொம்பப் பிரச்சனையெல்லாம் இல்ல ஈசு.  அதனால நீ ரொம்ப பயப்படாதம்மா.  எதாவது ஒன்னுனா இப்பல்லாம் அவரை அந்தப் பக்கமா நேந்து விட்றது.  அவங்கம்மா இல்லாத அன்னைக்கு மட்டுந்தான் அவரை என்னோட ஆட்டத்துக்கு  சேத்துக்கறது” என சிரிக்க

“சூதனமா இருந்துக்கிட்டாச் சரிதான்டீ” என மகளுக்கும் மருமகனுக்கும் உணவுண்ண ஏற்பாடு செய்தார்.

சிலாகித்து, ரசனையோடு உண்டவளைக் கண்டவனுக்கு, தன் வீட்டில் அவள் ஆரம்பத்தில் பட்ட கஷ்டங்கள் நினைவில் வந்திட, இனியும் தான் அவ்வாறு இருக்கக்கூடாது எனத் தோன்றியது.

உண்டதும் கிளம்பியவர்களிடம், “பாத்துப் போயிட்டு, போனதும் போனைப் போடுங்க” என வழியனுப்பி வைத்தார் ஈஸ்வரி.

மகளின் பேச்சினை எண்ணியவருக்கு முன்புபோல மகளின் வாழ்வை சீரழித்திவிட்டோமோ என்கிற பயம் போயிருக்க, சற்றே நிம்மதி வந்திருந்தது.  இனி பயப்படத் தேவையில்லை எனும் நிம்மதியுடன் அடுத்த வேலையைக் கவனிக்கச் சென்றார் ஈஸ்வரி.

காரைக்குடிக்கு அவர்களின் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் பயணத்தை அனுபவித்தபடியே இடையில் அங்கங்கே நிறுத்தி, தங்களை புத்துணர்வாக்கிக் கொண்டு சென்றனர்.

எதிர்பாரா ஒரு விசயத்தை இவர்களிடம் கொட்டக் காத்திருந்தார் காளி.

இது தெரியாதவர்கள் விசயம் அறிந்ததும் செய்தது என்ன?

…………………………………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!