தொலைந்தேன் 04💜

தொலைந்தேன் 04💜
இருவரும் இருவேறு திசையில் கோபமாக திரும்பி நிற்க, முதலில் பேசத் துவங்கியது சனாதான்.
“இப்போ என்ன பண்றதா உத்தேசம்?” காட்டமாக அவள் கேட்க, “என்னால இங்கயிருந்து தனியா ஹோட்டலுக்கு போக முடியாது. ராகவன் சாருக்கு மட்டும் விஷயம் தெரிஞ்சிச்சுன்னா அவரே என்னை கூப்பிட ஆளுங்கள அனுப்புவாரு. ஆனா என்ன, அவர கான்டேக்ட் பண்ண முடியாது. சோ, வேற வழியிலில்லை.” ரிஷி சொல்ல, “நேரா பாய்ன்ட்டுக்கு வா!” என்றாள் அவள் பதிலுக்கு.
“என்னால தனியா போக முடியாது. அது எனக்கு சேஃப் கிடையாது. பத்து பேரை பந்தாடுற அளவுக்கு இது ஒன்னும் படம் கிடையாது. இதைப் பத்தி உனக்கு சொன்னாலும் புரிய போறதில்லை. சோ, நான் இங்கயிருந்து போற வரைக்கும் நீதான் எனக்கு பாதுகாப்பா இருக்கணும்.” என்று ரிஷி சொல்ல, “யூ மீன் பாடிகார்ட்?” சந்தேகமாகக் கேட்டாள் சனா.
“யாஹ்.” அவனும் தோளை குலுக்கி கூலாகச் சொல்ல, அதில் பொங்கியெழுந்தவள், “நினைப்புதான்…” என்று சொல்லி முடிக்கவில்லை, “பொழக்க கெடுக்குமாக்கும். அதானே!” அவளை போல் நீட்டி முழக்கி சொல்லிக் காட்டி கேலிச் சிரிப்பு சிரித்தான் ரிஷி. இதில் அவளுக்குதான் பிபி எகிறியது.
“உன்னை…” என்று கோபமாக இழுத்து ஏதோ சொல்ல வந்து, பின் விழிகளை அழுந்த மூடித் திறந்தவள், ஒரு பெருமூச்சுவிட்டு, “இங்க பாரு, இந்த காட்டுப்பாதையில நல்லா இருக்குற நாளுல வாகனம் வாரதே அதிசயம். அதுவும் இன்னைக்கு சன்டே. ஆனா, எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இங்க கொஞ்சதூரம் தள்ளி மணல் திருடுறதுக்குன்னு க்ரூப் ஒன்னு வரும். அவங்ககிட்ட வேணா கால்ல விழாத குறையா கெஞ்சி ஹெல்ப் கேக்கலாம். ஆனா, இதுல ஒரு சிக்கல் இருக்கு.” என்று சொல்ல, அவனோ, “வாட்?” என்று புருவத்தை நெறித்து கேள்வியாக நோக்கினான்.
“அவங்க ராத்திரிதான் வருவாங்க. அதுவரைக்கும் நீ இங்கதான் இருந்தாகணும்.” சனா சொல்ல, “இங்கேயா?” என்று கேட்டு அதிர்ந்து விழித்த ரிஷிக்கு அத்தனை எரிச்சல். ஆனால், வேறு வழியுமில்லை.
ஏதோ யோசித்து, “ம்ம் சரி.” அவன் ஒத்துக்கொண்டவாறு அங்கிருந்த கல்லொன்றின் மேல் அமர்ந்துக்கொள்ள, “அப்பாடா!” நிம்மதி பெருமூச்சுவிட்ட சனாவோ மரக்கிளையில் தொங்கவிட்டிருந்த தன் ஷர்ட்டை இடுப்பில் கட்டிக்கொண்டு தன் கேமராவை கையிலெடுத்தாள்.
“என் கூட வர்றீயா? ஒரு ஃபோட்டோ எடுக்கணும். நேத்து நீ குதிக்க போன மலையுச்சிக்குதான் போறேன்.” அவள் செல்ல தயாராகியவாறுக் கேட்க, “நோ, ஐ அம் சோ டயர்ட். என்ட், எனக்கு பசிக்குது.” எரிச்சலாக ரிஷி சொல்ல, “இது என்ன உன் ஹோட்டலா, நீ நினைக்கும் போது சாப்பிடுறதுக்கு? அதுமட்டுமில்லாம சாரு காலையில எழுந்ததுலயிருந்து அப்படி என்ன வெட்டி முறிச்சீங்க, டயர்ட் ஆகுறதுக்கு?” என்ற அவளின் வார்த்தைகளில் ஏளனம் தாண்டவமாடியது.
அதில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவளை ரிஷி முறைக்க, “அய்யடா! மூக்கால முறைச்சா பயந்துடுவோமா? இங்க பாரு வேது, நான் எனக்கு போதுமான அளவுதான் சாப்பிட எடுத்து வந்தேன். இப்போ சாப்பிட்டேன்னா மறுபடியும் பசிக்கும். அப்றம் சாப்பாட்டுக்கு எங்க போறது? என்னென்ன நேரத்துல எப்படி இங்க சர்வைவ் பண்ண முடியும்னு எனக்கு தெரியும்.” என்றுவிட்டு அவள் நகர, அவள் சொன்னது எதுவும் அவன் காதில் விழவேயில்லை.
‘வேது‘ என்ற சனாவின் அழைப்பிலேயே உறைந்துப் போன ரிஷி, “என் அம்மாவும் என்னை வேதுன்னுதான் கூப்பிடுவாங்க.” என்றான் ஒரு மாதிரிக் குரலில். அதில் அவனைத் தாண்டி நகரப் போனவள், சில கணங்கள் நின்று அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்தவாறு, “ஓ…” என்று யோசனையாக இழுத்து, “நான் போறேன். நீ வாரதுன்னா வா!” என்றுக்கொண்டே முன்னே சென்றாள்.
அவனும் சட்டென அவளை நிமிர்ந்து நோக்கி, “வர்றேன் வர்றேன். வேற வழி!” என்று கடுப்பாக முணுமுணுத்துக்கொண்டே அவள் பின்னே செல்ல, கொடுப்புக்குள் சிரித்தவாறு முகத்தைத் திருப்பிக்கொண்டாள் சாணக்கியா.
அடுத்த சில நிமிடங்கள் கடக்க, அந்த மலையுச்சிக்கு இருவரும் வந்து சேர, “யோசனையில இருந்தா எங்க போறோம், என்ன பண்றோம்னே தெரியாம இருப்பியா? ராத்திரி மலையேறுறது ரொம்பவே டேன்ஜர். ஆனா நீ…” காட்டமாக சனா கேட்க, ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு “நானும் அதான் யோசிக்கிறேன். நான் இருந்த மனநிலை அப்படி! இது உனக்கு சொன்னாலும் புரியாது.” என்றான் மீண்டும்.
“அட! என்ன நீ எது சொன்னாலும் எனக்கு புரியாதுன்னே சொல்லிக்கிட்டு இருக்க. சொன்னாதானே அது எனக்கு புரியுதா, இல்லையான்னு தெரியும்.” சலித்துக்கொண்டவாறு அவள் கேமராவை தயார்படுத்த, “ஆமா… நீ என்னை எப்படி இங்கயிருந்து இப்போ நாம தங்கியிருக்குற இடத்துக்கு கூட்டிட்டு போன?” சந்தேகமாகக் கேட்டான் ரிஷி.
“கூட்டிட்டு போகல. கைத்தாங்கல தூக்கிட்டு போனேன். அதெல்லாம் எனக்கு சல்ப மேட்டரூ.” ஸ்டைலாக கெத்தாக கைகளை தட்டிக்கொண்டவள், கேமராவை சூரியன் உதிக்கும் திசையை நோக்கி வைத்து அவள் எதிர்ப்பார்த்த தருணத்துக்காக காத்திருக்க, சரியாக பின்னால் ஒரு சத்தம்.
கவனம் தவற வேகமாக ரிஷியை நோக்கி அவள் திரும்பிப் பார்க்க, அங்கு அவனோ சுயநினைவின்றி தரையில் மயங்கிக் கிடந்திருந்தான். அதைப் பார்த்ததும் கொஞ்சமும் அதிர்ச்சியாகவில்லை அவளுக்கு. மாறாக, எரிச்சல்தான் வந்தது.
“இந்த இடத்துல இவனுக்கு காத்து கருப்பு ஏதாச்சும் அடிக்குதோ? பொசுக்கு பொசுக்குன்னு மயங்கி விழுறான். டூ பேட்.” இடுப்பில் கைக்குற்றி சலித்துக்கொண்டாள் சனா.
அடுத்த சில நிமிடங்களில் முகத்தில் உணர்ந்த ஈரத்தில் மெல்ல ரிஷி விழிகளைத் திறக்க, “அப்பாடா! எழுந்திருச்சிட்டான்.” என்றொரு குரல் அவன் காதுகளில்.
மெல்ல அவன் நிமிர்ந்துப் பார்க்க, தன் மார்பில் படுத்து தன்னையே புதிதாக பார்த்துக்கொண்டிருந்தவனை உற்று உற்று பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.
அவனும் அசையாது தன் முகத்தருகே தெரியும் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க, “என்ன பெக்க பெக்கன்னு முழிக்குற? கொஞ்சம் தண்ணீ குடி!” என்று திட்டிக்கொண்டே அவனுக்கு சனாவே நீரை புகட்ட, இரண்டு மிடறு அருந்தியவனுக்கு அப்போதுதான் கொஞ்சம் மூளை தெளிவடைந்தது.
சற்று ஆசுவாசமடைந்தவாறு அப்போதும் அவளை விட்டு நகராது அவள் மார்பிலேயே அவன் கிடக்க, ஏனோ சனாவும் எதுவும் சொல்லவில்லை. அமைதியாகவே அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஆனால், தன்னை சுதாகரித்துக்கொண்டது ரிஷிதான். ‘என்ன காரியம் பண்ற ரிஷி?’ அவன் மூளை எச்சரிக்க, அப்போதே தானிருக்கும் இடம் புரிந்து வேகமாக அவன் விலகி அமர, அவளுக்கு அது போன்ற எந்த சங்கடமும் இல்லை போலும்!
அவனின் பதறியபடியான விலகலை புரியாது பார்த்துக்கொண்டு தன் பையிலிருந்த பொலித்தீனில் சுற்றி வைத்திருந்த ப்ரெட்டை அவனை நோக்கி நீட்டினாள்.
“கொஞ்சம் கூட உடம்புல சத்தே இல்லை. நான் எல்லாம் முன்னாடி ஒருநாளைக்கு ஒரு வேலைதான் சாப்பிடுவேன். சரியான பச்ச மண்ணு வேது நீ.” தீவிரமாகச் சொல்லிக்கொண்டு கால்களை இரு கரத்தால் கட்டிக்கொண்டு அவள் அமர்ந்திருக்க, “எனக்கு இதெல்லாம் பழக்கமில்லை. நான் இவ்வளவு வீக்கா என்னை ஃபீல் பண்ணதும் இல்லை.” என்றான் ப்ரெட்டை ஒரு வாய் கடித்துச் சாப்பிட்டுக்கொண்டே.
“க்கும்! இப்போ பாரு உன்னாலதான் நான் எடுக்க வேண்டியதை மிஸ் பண்ணிட்டேன். இன்னைக்கு நைட்டு வேற நான் கிளம்பியாகணும்.” சூரிய உதயத்தை எடுக்க தான் போட்ட திட்டம் சொதப்பிய கடுப்பில் முறைத்துக்கொண்டே சனா சொல்ல, “எனக்கென்ன வேண்டுதலா மயங்கணும்னு. அதுவா நடந்துருச்சு. பட், எனிவேய் இந்த சீன்ன விட பெஸ்ட்டா ஒன்னு உனக்கு கிடைக்கும். அதுக்கு நான் கேரண்டி.” என்ற ரிஷிக்கு ‘நானா இப்படி பேசுவது?’ என்று தன்னை நினைத்தே ஆச்சரியம்.
அவனின் பதிலில் விழிகளை உருட்டி சலித்துக்கொண்டவள், அடுத்து அந்த இடத்தைச் சுற்றி புகைப்படமெடுக்கவென அலைய ஆரம்பித்துவிட்டாள். அதுவும், தனியாக அல்லாமல் ரிஷியையும் கூடச் சேர்த்து படாத பாடுபடுத்திவிட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்.
“இன்னைக்கு ஒரு பெஸ்ட்டு ஃபோட்டோ எடுக்காம ஓய மாட்டேன். எனக்கே லந்தா? இன்னைக்கு நான் எடுக்கப் போற ஃபோட்டோ பார்த்து எல்லாரும் வாய பொழக்க போறாங்க.” சனா புலம்பிக்கொண்டே சுற்றி விழிகளைச் சுழலவிட்டு நடக்க, ஆரம்பத்தில் தன்னால்தான் அவள் எதிர்ப்பார்த்தது எடுக்க முடியவில்லையென வருத்தப்பட்ட ரிஷி, பின் அவள் சாப்பிட கூட எதுவும் கொடுக்காது அலைய வைப்பதில் கடுப்பாகிவிட்டான்.
‘இதெல்லாம் ரொம்ப ஓவரு’ உள்ளுக்குள் புலம்பிக்கொண்டவாறு, “ரொம்ப டயர்டா இருக்கு. டென்ட்டுக்கு போகலாமா?” பாவமாக அவன் கேட்க, “எதே?” கோபமாக அவனை நோக்கியவள், “நான் என்ன டூரா வந்திருக்கேன்? வேலைப் பார்க்க வந்திருக்கேன். இன்னைக்கு எடுக்குற ஃபோட்டோவ ஃப்ரேம் பண்ணி விக்க போட்டாதான் அடுத்த மாசம் என்னால பொழப்ப நடத்த முடியும். இது எதுவும் தெரியாம முட்டாள் மாதிரி பேசுற முட்டாப்பயலே!” படபடவென பொரிந்து தள்ளிவிட்டாள்.
அவளின் படபட பேச்சில் அவனுக்குதான் நாக்கு தள்ளிவிட்டது. “ஏம்மா, நீ ஒன்னுமே இல்லாத இந்த வானத்தை ஃப்ரேம் பண்ணி போட்டா கூட நானே காசு கட்டி வாங்கி தொலையுறேன். ப்ளீஸ் போகலாமே, முடியல.” ரிஷி தன்னிலையை மறந்து அச்சிறு பெண்ணிடம் கெஞ்ச, திருதிருவென விழித்தவளின் விழிகளுக்குச் சிக்கியது அந்தக் காட்சி.
நீண்ட பெரிய மரக்கிளையில் இரு ஓணான்கள் பிணைந்திருப்பது போலான காட்சி. அதைப் பார்த்ததும், “என் பொழப்புக்காக உங்க ப்ரைவசிய கலைக்கிறதுக்கு என்னை மன்னிச்சு!” வாய்விட்டே மன்னிப்புக் கேட்டவாறு தான் நினைத்தது போல் ஒரு புகைப்படத்தை எடுக்க, அவளின் ஒவ்வொரு செய்கைகளிலும் ரிஷிக்கு சிரிப்புதான் வந்தது.
ஆனாலும் விடாது இன்னும் புகைப்படம் எடுக்கின்றேனென அந்த பாடகனை ஒருவழிப்படுத்தியே தன் இருப்பிடத்துக்கு அழைத்து வந்தாள் சனா.
வந்ததும் தரையில் கால்களை நீட்டி அமர்ந்துக்கொண்டு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ரிஷி அவளை முறைக்க, அவளோ எதுவும் நடவாததுபோல் எடுத்த கொலைப் பசியில் தன் ப்ரெட்டை வேகவேகமாக உண்ண ஆரம்பித்தாள். ஆனால், இப்போது ரிஷியின் பார்வை முறைப்பிலிருந்து பாவமாக மாறியது.
அவனோ அவள் கையிலிருந்ததை இதழை ஈரமாக்கியவாறு நோக்க, அதை இனங்கண்டுக்கொண்டதும் “அய்ய…” என்று சலித்துக்கொண்டவள், “இப்போ எதுக்கு என்னையே வெறிச்சு பார்த்துக்கிட்டு இருக்க, அதான், அப்போவே சாப்பிட்டல்ல?” என்றாள் எரிச்சலாக.
“அது எனக்கு எப்படி பத்தும்? நான் எல்லாம் வர்க்அவுட் பண்ணா சாப்பிடுற அளவுல டென் பர்சன்ட் கூட நீ கொடுத்தது இல்லை.” ரிஷி பதிலுக்குச் சொல்ல, முறைத்தவாறு அடுத்த வேளைக்கென வைத்திருந்த ப்ரெட்டில் பாதியை அவனுக்கு கொடுக்க, “வேற சாப்பாடே இல்லையா? இதையே சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சு.” என்றான் அவன் சலிப்பாக.
“அடிங்க! அடிச்சு மூஞ்ச பேத்துருவேன் பார்த்துக்க. ஒழுங்கா கொடுத்ததை சாப்பிடு, இல்லைன்னா பிடுங்கிருவேன்.” அவள் மிரட்டவும், முகத்தைச் சுருக்கியவன், “இங்க பாரு, மலையேறும் போது அதிகம் வெயிட் வச்சிருக்க முடியாதுன்னு கம்மியா எனக்கு போதுமான அளவுதான் சாப்பாடு கொண்டு வந்தேன். நீ வந்து என் கூட ஒட்டிக்குவன்னு எனக்கு எங்க தெரியும்! ஈவினிங் வரைக்கும் இருக்குறதை வச்சிதான் சமாளிக்கணும். சோ, சும்மா பொசுக்கு பொசுக்குன்னு மயங்கி விழுந்துறாத!” என்ற சனாவின் வார்த்தைகளில் உதட்டைச் சுழித்தான் ரிஷி.
” நா…நான் உன்கிட்ட ஒட்டிக்கிட்டேனா?” அவன் ஒரு மாதிரிக் குரலில் முறைப்பாகக் கேட்க, “அது… ஆங் அது வந்து…” என்று திருதிருவென முழித்தவள் பின் சட்டென்று, “ஆமா.” என்றுவிட, கோபமாக முகத்தைத் திருப்பி வேகவேகமாக சாப்பிட்டான் அவன்.
அப்போதுதான் ஏதோ ஞாபகம் வந்தவளாக, “ஆமா… நான் உன்கிட்ட ஒன்னு கேக்கலாமா? நீ காலையில பேசும் போது தனியா போறது உனக்கு பாதுகாப்பில்லைன்னு சொன்னியே, நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா?” அவனின் உயரம் தெரியாமல் சனா பேச, முழு ப்ரெட்டையும் சாப்பிட்டு முடித்து, “உனக்கு வைவா கம்பனிய பத்தி தெரியுமா?” என்று கேட்டான் விரலை சப்பிக்கொண்டே.
“ஆங்… ஏதோ தெரியும். நிறைய மியூஸிக் பேன்ட்ஸ்ஸ ரன் பண்றாங்க. அவ்வளவு சீக்கிரம் அவங்களோட எந்த மியூஸிக் பேன்ட்லேயும் சேர்ந்துற முடியாது. அவங்களோட ட்ரெயினிங் எல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன்.” அவள் பேசிக்கொண்டே போக, “அவங்களாலதான் எனக்கு ஆபத்தே. ஒன்னு இரண்டு தடவை கிடையாது. நிறைய தடவை என்னை போட்டுத்தள்ள ப்ளான் போட்டிருக்காங்க. நிறைய கொலை மிரட்டல் கால்ஸ் வேற. இது சொன்னா உனக்கு புரியுமா என்ன?” என்று கேட்டான் ஏளனச் சிரிப்போடு.
“ஆ…” என்று அவனின் பதிலில் வாயைப் பிளந்தவள், “ஏன், எதுக்கு, எதற்காக?” என்றாள் அதிர்ச்சியாக.
“யூ க்னோ வாட், ஆறு வருஷத்துக்கு முன்னாடி வைவா கம்பனி அவங்களோட ஃபர்ஸ்ட் பேன்ட்ட இன்டர்டியூஸ் பண்ணப்போ ஏகப்பட்ட வரவேற்பு. அதுக்கேத்த மாதிரி பெஸ்ட் சாங்க்ஸ்ஸ அவங்களும் கொடுத்தாங்க. ஆனா, சில வருஷத்துல அவங்களோட சில ஸ்ட்ரிக்ட்டான கன்டிஷன்னால சில சிங்கர்ஸ் அங்கயிருந்து விலகி சோலோவா பர்ஃபோர்ம் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டாங்க.
இப்போ ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி சிங்கர் மேக்னா சௌத்ரி கூட வைவா கம்பனியோட கான்ட்ரேக்ட்ட ப்ரேக் பண்ணியிருக்காங்க. இந்த மாதிரி நடந்ததுல ஏற்கனவே ரொம்ப கோபத்துல இருந்தவங்களுக்கு எரியுற நெருப்புல எண்ணெய்ய ஊத்துற மாதிரி இருந்துச்சு என் வளர்ச்சி. என்னோட ஆல்பம் அவங்களோட ஆல்பம்ம பீட் பண்ணதை அவங்களால ஏத்துக்க முடியல. அதான், எல்லா இன்டர்ஸ்ட்ரீல நடக்குற மாதிரி கொலை மிரட்டல் விடுறாங்க. பட், ஐ டோன்ட் க்யார். பிகாஸ் இதெல்லாம் இந்தத் துறையில சகஜம்.” என்று பொறுமையாக விளக்கிச் சொல்லி முடித்தான்.
அத்தனையையும் கேட்டவள், ப்ரெட்டை வாயில் திணித்து “ஓஹோ…” என்று மட்டும் யோசித்தவாறு இழுக்க, அப்போதுதான் அவளை சிறு சிரிப்புடன் கவனித்தான் ரிஷி.
“நிஜமாவே எனக்கு ஒன்னு ஆச்சரியமா இருக்கு. எப்போவுமே கேர்ள்ஸ் என்னை நெருங்க ரொம்ப ட்ரை பண்ணிருக்காங்க. இதை நான் பெருமைக்கு சொல்லல்ல. ஐ கென் ஃபீல் இட். அவங்களோட கண்ணுல ஒரு மயக்கம் தெரியும். பட், உன் கண்ணுல சின்னதா எக்ஸ்ஸைட்மென்ட் கூட தெரியல. என்னை நீ ஒரு சாதாரண மனுஷனாதான் பார்க்குற.” அவன் சொல்லிக்கொண்டே போக, ‘ஙே’ என அவனைப் பார்த்திருந்தவள், “அப்போ நீ என்ன ஏலியனா?” இடையிட்டுக் கேட்டாள் சலிப்பாக.
அவனோ அவளின் கேள்வியில் முறைக்க முயன்று பக்கென்று சிரித்துவிட, அவனுடன் சேர்த்து சிரித்துக்கொண்டே எழுந்து நின்றவள், “இங்க பாரு வேது, நான் யாருக்கும் ரசிகை கிடையாது. நான் எனக்குதான் ரசிகை. ஐ லவ் ஒன்லி மைசெல்ஃப்.” என்றுவிட்டு தன் அலைப்பேசியில் ஒரு பாடலை ஒலிக்கவிட்டு ஆட ஆரம்பிக்க, ரிஷியோ அவளின் செய்கையில் விழிகளை விரித்துக்கொண்டான்.
ஆடியவாறு அவனைக் கவனித்தவள், அவன் எழாததைப் பார்த்து, “வேது, என்ன பெக்க பெக்கன்னு முழிச்சிக்கிட்டு இருக்க. வா, வந்து ஆடு. இன்னைக்கு என் பர்த்டே வேற, பார்ட்டீ பண்ண வேணாமா?” என்று கேட்டுக்கொண்டே அவன் கையைப் பிடித்து இழுத்து நிற்க வைக்க, “அது… அது வந்து…” என்று திருதிருவென விழித்தவாறு திணற ஆரம்பித்துவிட்டான் அவன்.
எதற்கும் சளைத்தவன் இல்லை ரிஷி. எந்தளவு குரலில் காந்தம் போன்ற ஈர்ப்பை கொண்டுள்ளானோ அதேபோல் நடனத்திலும் அத்தனை திறமை. ஆனால் இப்போது அடுத்து என்ன செய்வது, ஏது செய்வது என்று கூட தெரியாமல் அச்சிறு பெண் முன் திருதிருவென விழித்துக்கொண்டிருந்தான்.
ஆனால் அவளோ கைக்கால்களை அசைத்து சந்தோஷமாக ஆடிக்கொண்டிருந்தவள், ரிஷி ஆடாததைக் கவனித்து அவனின் கரத்தைப் பற்றி தன் போக்கிற்கு இழுத்து ஆட, “என்ன பண்ற நீ?” முதலில் அலறியவன், பின் அவளின் முகத்தில் தெரிந்த சிரிப்பில் அமைதியாகிவிட்டான்.
கன்னக்குழி தெரிய அவள் சிரித்துக்கொண்டே நடனமாட, அதையே பார்த்துக்கொண்டு அவள் இழுத்த இழுப்பிற்கு ஆடிக்கொண்டிருந்த ரிஷி, பின் தன்னை மறந்து அவளோடு சேர்ந்து அவள் சொல்வதற்கெல்லாம் வசியம் செய்தது போல் நடந்துக்கொள்ள ஆரம்பித்தான்.
அவனால் அவன் செய்கைகளை நம்பவே முடியவில்லை. ‘இது நான்தானா?’ என்ற ஆச்சரியம் அவனுக்குள். நேற்று வரை வேலை வேலை வேலையேன்று இயந்திர வாழ்க்கை வாழ்ந்தவன்தான் இன்று ஒரு சிறு பெண்ணுடன் காட்டில் நடனமாடுகிறானென்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.
கூடவே, ‘இதை மட்டும் மீடியாவுல யாராச்சும் பார்த்தாங்கன்னா அவ்வளவுதான். வச்சி செஞ்சிருவாங்க’ உள்ளுக்குள் கேலியாக நினைத்து சிரித்தும் கொண்டான்.
ஒருகட்டத்தில் இருவருக்குமே முடியாது போக, ரிஷியோ தரையில் மூச்சுவாங்கியவாறு அமர்ந்துக்கொள்ள, அவன் சற்றும் எதிர்ப்பார்க்காது அவனருகே அமர்ந்து ஏதோ பல நாட்கள் பழகியது போன்ற நினைப்பில் அவன் தோளில் சாய்ந்துக்கொண்டாள் சனா.
ஆனால், அவளின் செய்கையில் ரிஷிக்குதான் திக்கென்று இருந்தது. தன்னை மீறி ஒருகட்டத்தில் தன் தோளில் விழிகளை மூடி சாய்ந்திருந்த சனாவின் இதழை மெல்ல நெருங்கினான் அவன்.