தொலைந்தேன் 08 💜

eiU0D228288-8ebb3849

சனா திருதிருவென  விழித்தவாறு நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்திற்கு முன்,

அங்கிருந்து சிறிது தூரம் தள்ளியிருந்த வீதியோர பொட்டிக்கடையில் சாணக்கியா ஆஹா ஓஹோ என இரவு நேர குளிரை ரசித்துக்கொண்டு தேநீர் அருந்திக்கொண்டிருக்க, சரியாக அவளெதிரே வந்து நின்றனர் ப்ரவினும் அவன் நண்பர்களும்.

சனாவோ பார்த்தும் பார்க்காதது போல் பாவனை செய்ய, கடுகடுவென முகத்தோடு அவள் முகத்திற்கெதிரே வந்து நின்ற ப்ரவின், “ஏய் அடங்காபிடாறி! உனக்கு அவ்வளவுதான் மரியாதை, நேத்து என்மேல நீ கை வைச்சதுலயே செம்ம காண்டுல இருக்கேன். இதுக்கப்றம் ஜாக்கிரதையா இருந்துக்கோ! எப்போவும் பொண்ணாச்சேன்னு பார்த்துட்டு இருக்க மாட்டேன். புரியுதா?” என்று ஒற்றை விரலை நீட்டி கத்தலோடு மிரட்டலிட்டான்.

ஆனால், அவனுடைய கத்தலெல்லாம் சனாவிடத்தில் காற்றில் கரைந்த கற்பூரம்தான். முகத்தில் எந்த பாவனையுமின்றி தேநீரை ஒவ்வொரு மிடறாக மெல்ல மெல்ல அருந்திக்கொண்டு அவனையே அவள் குறுகுறுவென அமைதியாகப் பார்த்து நிற்க, அவளின் பார்வையில் மேலும் நெருப்பில் எண்ணெய்யை விட்டது போன்றாகியது அவனிற்கு.

“ஏய், என்னடீ பார்க்குற? அதான், என்கிட்ட வம்பு வச்சிக்காதேன்னு மொதல்லையே சொல்லியிக்கேனே, நேத்து அந்த பேச்சு பேசின… இப்போ என்னடீ அமைதியா கேட்டுட்டு இருக்க? ஆனா,  சனாவோட இந்த அமைதியும் நல்லாதான் இருக்கு.” என்று ஏளனமாகப் பேசி கத்திவிட்டு தன் நண்பர்களோடு கையடித்துக்கொண்டு அவன் நகரப் போக, சரியாக ஒரு சொடக்கிடும் சத்தம்.

அந்தச் சத்தம் சனாவிடத்தில் வருவதை உணர்ந்து அவளை நோக்கி ப்ரவின் திரும்பி முடிக்கவில்லை, அடுத்ததணம் கையிலிருந்த தேநீரை அவன்மேல் விசிறியடித்துவிட்டு அங்கிருந்து ஓடியவள்தான் ரிஷியின் காரிலேயே வந்து மோதி நின்றிருக்கிறாள்.

சாணக்கியா நடந்ததைச் சொல்லி முடிக்க, அனைத்தையும் அதிர்ந்துக் கேட்டுவிட்டு, “அடிப்பாவி! அவனுங்ககிட்ட வாங்கிக் கட்டியிருக்க வேண்டியவ நீ! அத்தனையும் பண்ணிட்டு இப்போ எதுவுமே தெரியாத அப்பாவி பொண்ணாட்டம் இருக்கியா கேடீ சாணி!” என்று ரிஷி வாயில் கைவைத்துத் தீவிர முகபாவனையில் சொல்ல, அவ்வளவுதான். அவன் சாணி என்றதில் பொங்கியெழுந்துவிட்டாள் சாணக்கியா.

“அடிங்க! ஒன்னு சனான்னு கூப்பிடு, இல்லைன்னா சாணக்கியான்னு கூப்பிடு. சாணி கீனின்னு சொன்ன… பல்லை பேத்துருவேன்.” என்று அவள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க கோபமாகக் கத்த, அவளின் கோபத்தை உள்ளுக்குள் ரசித்து மேலும் தூண்டும் ஆசையில், “அதெப்படி சாணி? சாணக்கியாவ சுருக்கினா சாணிதானே வரும், சனா எப்படி வரும்?” என்று பதிலுக்கு கேலியாகச் சொன்னான் ரிஷி.

அதில் கோபமாக அவனின் சட்டைக் கோலரைப் பற்றி தன் முகத்திற்கு நேரே அவன் முகத்தை இழுத்து, “இதுக்குமேல சாணின்னு சொன்ன அம்புட்டுதான் நீனு…” என்று சனா மூச்சு காற்று படும் இடைவெளியில் அவனை மிரட்ட, அவனுக்கோ அவளின் அருகாமையில் உள்ளுக்குள் ஏதோ ஒரு படபடப்பு. ‘இந்த இடைவெளி எதற்கு? இதை விடவும் குறையாதா?’ என்ற ஏக்கத்தோடு அவள் விழிகளையும் இருவருக்குமிடையே இருந்த இடைவெளியையும் மாறி மாறிப் பார்த்தன அவன் விழிகள்.

கூடவே, அவனை கோபமாக முறைத்துக்கொண்டிருக்கும் அவளிதழ்களோ அவனின் கட்டுப்பாட்டை உடைத்து தங்களை பார்க்க வைத்தன. ஏதேதோ எண்ணங்கள் அவனுக்குள் அலைபாய, தன் மனம் போகும் போக்கில் எச்சிலை  விழுங்கிக்கொண்டு மெல்ல அவளின் விழிகளை கொடுப்புக்குள் சிரித்தவாறு நோக்கிய ரிஷி, “அப்படிதான் கூப்பிடுவேன், என்னடீ பண்ணுவ?” என்றான் ஹஸ்கி குரலில்.

ஏனோ அந்த குரலிலிருந்த எதுவோ ஒன்று சனாவையே உள்ளுக்குள் அதிர வைத்துவிட்டது. மனம் ஒரு மாதிரியாகிவிட, அவனின் இரு விழிகளை மூச்சு வாங்கியவாறு மாறி மாறிப் பார்த்தவள், சட்டென அவனின் சட்டைக்கோலரை விட்டு முன்னே நடக்க, பின்னந்தலையில் தட்டி வெட்கப்பட்டுச் சிரித்தவாறு அவள் பின்னே நடந்தான் ரிஷி.

அவனின் கார் நிற்கும் இடத்திற்கு இருவரும் வர, வேகமாகச் சென்று தன் கார் கதவை திறந்துவிட்டவன், விழிகளால் ஏறும்படிச் சொல்ல, அதில் அவன் முதுகில் ஒரு அடிப்போட்டு கேலியாகப் பார்த்தவள், “என்ன வேது, ஃப்ரீ சர்வீஸா?” என்றுக்கொண்டே காரில் அமர்ந்துக்கொள்ள, அவளை பொய்யாக முறைத்தவாறு ஓட்டுனர் சீட்டில் அமர்ந்துக்கொண்ட ரிஷி முதல் வேலையாக காரை நடு வீதியிலிருந்து வீதியோரமாகச் கொண்டுச் சென்று நிறுத்தினான்.

சனாவோ அவனை கேள்வியாகப் பார்க்க, உள்ளிருந்து அன்று இருவரும் சந்தித்த போது சனா கொடுத்த தொப்பியை எடுத்தவன், “இது நியாபகம் இருக்கா?” என்று புருவத்தை உயர்த்தி சிரித்தவாறுக் கேட்க, “அடப்பாவி வேது! திருட்டுப்பயலே! அன்னைக்கு பாவமேன்னு உன் பாதுகாப்புக்கு என் தொப்பிய உனக்கு கொடுத்தா உன் பாட்டுக்கு எடுத்துட்டு போயிட்டல்ல, முன்னூறு நூபா தொப்பிடா இது. எங்கெல்லாம் தேடி அலைஞ்சேன் தெரியுமா?” என்று காட்டுக் கத்து கத்திக்கொண்டே சனா தன் தொப்பியை பிடுங்கிக்கொள்ள, அடுத்தகணம் வேகமாக அவளிடமிருந்து அதை பிடுங்கிக்கொண்டான் அவன்.

“இது என்னோடது.” என்று ரிஷி முறுக்கிக்கொண்டுச் சொல்ல, “எதே!” என்று அதிர்ந்தவள், “அய்ய… இம்புட்டு பெரிய காரு வச்சிருக்க. ஒரு தொப்பி கூட வாங்க வக்கில்லையா உனக்கு? கஞ்சப்பிசினாரி!” என்று அவனை மேலிருந்து கீழ் ஒரு மார்கமாகப் பார்த்துக்கொண்டே கோபமாகச் சொல்ல, அவனோ அவளுக்கு பதிலெதுவும் கொடுக்காது சிரித்துக்கொண்டே காரை மெதுவாகச் செலுத்தினான்.

சிறிதுநேரம் இருவரிடத்திலும் அமைதி. அந்த மௌனத்தை முதலில் கலைத்தது என்னவோ ரிஷிதான்.

“எங்க உன் வீடு?” என்று கேட்ட ரிஷியின் நினைவுகளோ, சனா தன் வீடிருக்கும் இடத்தைச் சொன்னதுமே தன் சிறுவயதில் நண்பனொருவன் சொன்ன வார்த்தைகளை நினைவுப்படுத்தியது.

டேய், அந்த ஏரியாவுக்கு போகாத! அங்க இருக்குற ஆளுங்க ரொம்ப மோசமானவங்க. அவங்கெல்லாம் ரொம்ப டேன்ஜர்னு அம்மா சொல்வாங்க. நீயே பாரு, அவங்களும் அவங்க ட்ரெஸ்ஸிங்கும். இதுலயே தெரியுதுல்ல, அவங்கெல்லாம் எப்படிப்பட்ட ஆளுங்கன்னு.   கண்டிப்பா அங்க போனா அம்மா திட்டுவாங்க. நாம வேற ஃபுட்பால் வாங்கிக்கலாம். நீ வா ரிஷி!”

கையிலிருந்த கூடைப்பந்தாட்டப் பந்து தெரியாத்தனமாக அந்த நெருங்கிய வீடுகளிருக்கும் பகுதிக்குள் உருண்டுச் சென்றுவிட, அதை எடுக்கச் சென்ற பதினாறு வயது ரிஷியிடம் அவனின் சிறுவயது நண்பனொருவன் சொன்ன வார்த்தைகளே இவை.

அவனை செல்லவிடாது தரதரவென அவன் நண்பன் அன்று இழுத்துச் சென்றதோடு சரி, அதன்பிறகு அவன் அந்த பகுதிக்குள் சென்றதேயில்லை.

அதை நினைவுக் கூர்ந்தவன், “நிஜமாவே அங்கதான் இருக்கியா?” என்று கேட்க, அவளும் விழிகளை மூடி சீட்டின் பின்னால் தலையைச் சரித்து சாய்ந்தவாறு, “ஆமா.” என்று சாதாரணமாகச் சொன்னாள்.

அடுத்த சில நிமிடங்களில் ரிஷியின் கருப்புநிற ஜாகுவார் அந்த ஏரியாவின் முன் நின்றிருந்தது. கண்ணாடி வழியாக அந்த இடத்தை பார்த்தவனுக்கு லேசாக முகம் அஷ்டகோணலாக மாறியது.

அங்கு வீடுகளிருக்கும் பகுதிக்கு செல்லும் பாதை முழுக்க சேறும் சகதியுமாக நீர் தேங்கி நிற்க, அந்த ஏரியா ஆடவர்கள் சிலர் மேல்சட்டையில்லாமல் லுங்கியோடு அங்குமிங்கும் கூடி பீடி, சிகரெட் பிடித்து புகையை ஊதிக்கொண்டு நின்றிருந்தனர்.

இன்னும் சொல்லப்போனால், நீர் செல்வதற்கும் வழி விடாது கால்வாய்களுக்கு மேல் வீடுகளை மக்கள் கட்டி வைத்திருக்க, இரு வீடுகளுக்கிடையே கழிவுநீர் செல்லும் கால்வாய்கள் வேறு.

விழிகளாலேயே அந்த இடத்தை அலசியவன், எதேர்ச்சையாகத் திரும்பும் போதே சாணக்கியா காரிலிருந்து இறங்கப் போவதை கவனித்தான். அடுத்தகணம் வேகமாக  அவளை தன்னை நோக்கி இழுத்த ரிஷி, அவள் கையிலிருந்த அவளின் அலைப்பேசியை பிடுங்கி, அவனின் அலைப்பேசிக்கு ஒரு அழைப்பையெடுத்தான்.

அவளுக்கு காட்டாது மறைத்தவாறு தன் அலைப்பேசியில் அவளின் எண்ணை ‘அரக்கி’ என்று சேமித்துக்கொண்டவன், அவளின் அலைப்பேசியில் தன் எண்ணைக் காட்டி, “லுக், இதான் என் நம்பர். சேவ் பண்ணிக்கோ! அப்பப்போ கூப்பிடுவேன். என் கூட பேசணும். இல்லைன்னா… நான் உன்னை தேடி இங்க வந்துடுவேன்.”  என்றான் மிரட்டலாக.

அவன் பேசியதில் சற்று அதிர்ந்தவள், பின் உதட்டைச் சுழித்து “ஏன் இல்லை ஏன்னு கேக்குறேன். உன்கூட பழகி, அது மீடியாவுக்கு தெரிஞ்சு, என் பேர நாரடிச்சு, எதுக்கு?” என்று நொடிந்துக்கொண்டவாறு, “இங்க பாரு வேது, இதுவே நாம பார்க்குறது கடைசியா இருக்கட்டும். உன் கூட பழகி நானே என்னை கெடுத்துக்க விரும்பல. இதெல்லாம் நமக்கு செட் ஆகாது பாஸு. மறுபடியும் சந்திக்கணும்னு இருந்தா அப்போ பார்க்கலாம்.” என்றுவிட்டு இறங்க, ரிஷியின் முகமோ சட்டென பாறை போன்று இறுகிப் போனது.

ஆனால், அடுத்தகணமே முகபாவனையை மாற்றிக்கொண்டான் அந்த மாயக்காரன். இதழை கேலியாக வளைத்துச் சிரித்தவன், “அதையும் பார்க்கலாம்.” என்று ஏதோ உள்ளர்த்தத்தோடுச் சொல்லி அவளையே பார்த்துக்கொண்டிருக்க, அவன் சொன்ன விதத்தில் புருவத்தைச் சுருக்கி அவனை கூர்ந்துப் பார்த்தவாறு காரிலிருந்து இறங்கினாள் அவள்.

அடுத்து வந்த நாட்கள் காலத்தின் சதியோ, என்னவோ? ரிஷியால் சனாவை அழைக்கவும் முடியவில்லை. அவளை சந்திக்கவும் முடியவில்லை. அதற்கு ரிஷியின் வேலைப்பழு ஒரு காரணமென்று கூட சொல்லலாம்.

சில முண்ணனி பாடகர்களோடு சேர்ந்து ரிஷியின் ஒரு ஆல்பம் பாடல் வெளியாகவிருக்க, அந்த வேலையோடுச் சேர்த்து இணையத்தில் வெளியாகவிருக்கும் ரிஷியின் முதல் வெப் சீரிஸின் படபிடிப்புக்களும் இணைந்துக்கொள்ள, இவனுக்குதான் வேலைச் சுமை தலைமேல் கிடந்திருந்தன.

காலையிலிருந்து இயந்திரம் போல் ஓடுபவன், தன்னையே மறந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் தூங்கும் சமயங்களும் உண்டு. இத்தனை கலவரத்தில் அவனால் சாணக்கியாவை தொடர்புக்கொள்ளவே முடியவில்லை.

இப்படியே பத்து நாட்கள் கடந்திருக்க, அன்று படப்பிடிப்பு முடிந்து சீக்கிரமாகவே காரை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டுவிட்டான் ரிஷி. இது இன்று நேற்றல்ல எப்போதுமே தனக்கென அவன் ஓட்டுனர் வைத்ததே இல்லை.

ராகவனே அவனின் பாதுகாப்பு கருதி தன் ஓட்டுனரையும் பாதுகாவலன் ஒருவனையும் அவன் பக்கத்தில் வைத்திருக்க, அப்போதும் அவர்களை திருப்பி அனுப்பி தன் வேலைகளை தானே செய்து, தன் விருப்பப்படி அங்குமிங்கும் சுற்றி அவரிடம் திட்டு வாங்குவது அவனுக்கு பழக்கப்பட்ட ஒன்று.

இவ்வாறு ரிஷி சனாவை நினைத்தவாறு காரை செலுத்திக்கொண்டுச் செல்ல, சரியாக அவனுக்கு ராகவனிடமிருந்து அழைப்பு வந்தது. காரை வீதியோரமாக நிறுத்தி உற்சாகமாக அழைப்பை ஏற்றவன், “சார் சார்! நான் அந்த பொண்ண கண்டுபிடிச்சிட்டேன்.” அத்தனை சந்தோஷத்தோடுச் சொல்ல, அவரிடத்திலோ அதிர்ச்சியுடன் கூடிய அமைதி.

“சார்…” மீண்டும் ரிஷி அழைத்ததுமே, “ஆங் ரிஷி, எந்..எந்த பொண்ணு?” என்று ராகவன் கேட்க, “அதான் சார், நான் சொன்னேனே. சாணி, இல்லை இல்லை சனா. அதாவது சாணக்கியா.” என்று சந்தோஷத்துடன் கூடிய பதட்டத்தில் உளறிக்கொட்டினான் அவன்.

இதில் ராகவனுக்குதான் அத்தனை அதிர்ச்சி!

ரிஷியே மீண்டும் தொடர்ந்தான். “சார், நான் அவள சந்திச்சேன். அவ கூட பேசினேன். இப்போ அவளோட நம்பர் என்கிட்ட இருக்கு. வீடு கூட தெரியும். இத்தனைநாளா எனக்குள்ள இருந்த வெறுமை இப்போ இல்லை. இது என்ன வகையான ஃபீலிங்குன்னு எனக்கு தெரியல சார், பட் பிடிச்சிருக்கு.” என்று அவன் பேசிக்கொண்டேச் செல்ல, ராகவனுக்கு தலை சுற்றாத குறைதான்.

‘நான் ஒன்னு ப்ளான் பண்ணா, இவன் என்ன பண்ணிட்டு இருக்கான்? மொத்தத்தையும் சொதப்பிருவான் போலயே!’ உள்ளுக்குள் என்ன சொல்வதென்று தெரியாது ராகவன் அமைதியாகவே இருக்க, அவனும் ஏதோ ஞாபகம் வந்தவனாக, “சார், உங்க வெகேஷன் எப்படி போகுது? நெக்ஸ்ட் டைம் நானும் உங்க கூட வரலாம்னு இருக்கேன்.” என்று  அவன் பாட்டிற்கு பேசிக்கொண்டே போனான்.

அவரோ ஆழ்ந்த மூச்செடுத்து, ‘கர்த்தரே! சோதிக்காத என்னை!’ என்று உள்ளுக்குள் சலிப்பாக நினைத்து, “நாளைக்கே இந்தியா வரேன். வந்ததும் பேசிக்கலாம்.” என்று சொல்ல, ரிஷியோ புருவத்தை நெறித்து, “சார், நீங்க வெகேஷன்னு போனாலே வன் மன்த்துக்கு மேல இருந்துட்டு வருவீங்க. இப்போ என்னடான்னா அதுக்குள்ள கெளம்பி வர்றீங்க?” என்று சந்தேகமாகக் கேட்டான்.

‘இதுல எல்லாம் உஷாரா இரு!’ உள்ளுக்குள் கடுகடுத்தவர், “நான் வந்து உன்கிட்ட பேசிக்கிறேன்.” பட்டென்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

இங்கு ராகவன் அழைப்பை துண்டித்ததுமே ரிஷிக்கு சனாவின் நினைப்புதான். அவள் நினைவுகளில் தானாகவே அவனிதழ்களில் புன்னகை குடிகொண்டது. அடுத்தகணம் காரை வேகமாகச் செலுத்தியவன், சென்று நின்றது என்னவோ அவள் ஏரியாவின் முன்னே.

ஒருவித உள்ளுக்குள் எழுந்த பரவசத்தோடு சனாவுக்கு அழைத்து அவள் குரலுக்காக ரிஷி காருக்குள் காத்திருக்க, மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டதுமே, “ஹெலோ யாரு?” என்றொரு கேள்வி.

யோசனையில் புருவத்தை நெறித்தவன், காதிலிருந்த அலைப்பேசியை பார்வைக்கு கொண்டு வந்து திரையிலிருந்த பெயரை மீண்டும் கூர்ந்து கவனித்தான். அது அவளுடைய எண்தான். அவளுடைய குரல்தான். ஆனால், ஏன் இந்த கேள்வி?

‘என்னுடைய எண் தெரியவில்லையா அவளுக்கு?’ உள்ளுக்குள் நினைத்துக்கொண்டவனின் முகம் பாறை போன்று இறுகிப் போனது. ஏதோ ஒரு கோபம்.

அழைத்தவனிடத்தில் பதிலெதுவும் கிடைக்காது, “ஹெலோ யாருங்க அது? கால் பண்ணிட்டு கம்முன்னு இருக்குறது?” எரிச்சலாக சனா முணுமுணுக்க, “நான் உன் ஏரியா முன்னாடிதான் இருக்கேன். சீக்கிரம் வா!” என்று இறுகிய குரலில் ரிஷி சொல்ல, இப்போது மறுமுனையில் பலத்த அமைதி.

“கேக்குதா, இல்லையா?” அவன் அவளுடைய அமைதியிலும் மேலும் கடுப்பாகி கோபமாகச் சொல்ல, அதில் உணர்வு பெற்றவளாக, “இரு வரேன்.” என்று மட்டும் சொல்லி பட்டென்று அழைப்பை அவள் துண்டித்துவிட, அவளுடைய செயலில் உண்டான கோபத்தில் ஸ்டீயரிங்கை ஓங்கி குத்தினான்  ரிஷி.

‘எவ்வளவு தைரியம் அவளுக்கு? இங்க நான் அவளை ரொம்ப மிஸ் பண்ணிட்டு இருக்கேன். அவளை பார்க்காம உள்ளுக்குள்ள ஒரு மாதிரி வெறுமையா இதுக்கு என்ன பெயருன்னு கூட தெரியாம குழப்பத்துல இருக்கேன். ஆனா அவ என்னை கொஞ்சமும் நினைச்சு பார்க்கல. என்னை பத்தி யோசிச்சிருந்தா என் நம்பர சேவ் பண்ணாம இருந்திருப்பாளா? அவள நான் தேடுற மாதிரி அவளுக்குள்ள என்னை பத்தின எந்தவிதமான தேடலும் இல்லை.’

ஏதேதோ தனக்குத்தானே கோபமாக புலம்பிக்கொண்டு, முகம் இறுகிப் போய் அவன் அமர்ந்திருந்த சில கணங்களில் பதட்டத்தோடு விழிகளை அங்குமிங்கும் சுழற்றியவாறு வேகமாக அங்கு வந்தாள் சாணக்கியா.

அவனுடைய வண்டியைக் கண்டதுமே யாரும் பார்க்காதவாறு வேகமாக அவள் அவனை நோக்கி வர, அவள் வருவதை உணர்ந்து கார் கதவை ரிஷி திறந்துவிடவும், காரில் ஏறிக்கொண்டவள், அடுத்தநிமிடம் படபடவென பொறிய ஆரம்பித்தாள்.

“என்ன நினைச்சிக்கிட்டு இருக்க நீ? உன் பாட்டுக்கு ஏரியாவுக்கு வந்து என்னை கூப்பிடுற. யாராச்சும் பார்த்தா என்னாகுறது? இதெல்லாம் என்கிட்ட வச்சிக்காத! இங்க பாரு வேது, உன் கூட பழகினா என்னாகும்னு எனக்கு தெரியும். இதை நான் உன்கிட்ட முன்னாடியே சொன்னேன். உன் சவகாசமே எனக்கு வேணாம் ராசா. சோஷியல் மீடியாவுல உன் கூட சேர்த்து என் பேர் வாரதுல எனக்கு உடன்பாடு இல்லை. ஏதோ அன்னைக்கு உன்னை காப்பாத்தினேன். அதுல உனக்கு என்மேல மரியாதை நன்றியுணர்ச்சி வந்திருக்கலாம். மத்தபடி எனக்கும் உனக்கும் எதுவுமில்லை. ஜஸ்ட் நீ என் ஃப்ரன்ட். புரியுதா? மறுபடியும் இப்படி எங்க ஏரியாவுக்கு வந்து என்னை பார்க்கணும்னு கூப்பிடுற வேலையெல்லாம் வச்சிக்காத!”

தாறுமாறாக சனா திட்டிக்கொண்டே செல்ல, சட்டென அவளின் முழங்கையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்தான் அவன். இருவருக்குமிடையில் வெறும் நூலிடைவெளிதான். மூச்சுக்காற்று படும் தூரத்தில் அவனை நெருங்கி நின்றிருந்தவளுக்கு அதிர்ச்சியில் விழிகள் விரிந்திருந்தன.

ஆனால், அவளை ஆக்கிரமித்திருந்தவனிடத்தில் வெறும் இறுக்கம் மட்டுமே.

அவள் விழிகளை ஊடுறுவும் பார்வைக்கொண்டு பார்த்தவாறு, “என் நம்பர் கூட நீ  சேவ் பண்ணலல்ல, என்னோட நினைவே இல்லல்ல உனக்கு?” என்று குற்றம் சாட்டும் விதமாக ரிஷி இறுகிய குரலில் சொல்ல, ‘ஙே’ என அவனை விழி விரித்து பார்த்திருந்தவளுக்கு, ‘நான் என்ன பேசிக்கிட்டு இருக்கேன், இவன் என்ன சொல்றான்?’ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.