தோளொன்று தேளானது 24

தோளொன்று தேளானது 24

தோளொன்று தேளானது! 24

“எனக்கு நான் பண்ணாம ஊருல இருக்கற வேற எவனுமா வந்து பாப்பான்?” எதிர்கேள்வி வேதாவிடம் கேட்டிருந்தான் ஜேப்பி.

ஜேப்பியின் ஒவ்வொரு அசைவிலும் பேச்சிலும் சொல்ல முடியாத அலட்சியம். வேதாவிற்குமே ஜேப்பியின் அலட்சியம் தன்னிடம் எதனால் என்பது புரிந்தது. 

அவரைப்போல தெரிந்தோ, தெரியாமலோ வழிமாறிய பறவைகளுக்கு இது எல்லாம் பழகிப் போயிருக்கும் என்பதை ஜேப்பி புரிந்து கொள்ளவில்லையோ என வேதாவிற்குத் தோன்றியது.

முகத்தில் எந்த உணர்வையும் பிரதிபலிக்காத வேதா சிறு சுணக்கமும் இன்றிப் பேசினார்.

வேதா பேசியதன் மூலம், ‘நம்மைப் பத்தி எல்லாம் தெரிஞ்சிட்டுத்தான் கிழவி பேச வந்திருக்கு!’ ஜேப்பிக்கு புரிந்தது.

வேதா அறிந்த வகையில், எஸ்ப்பியின் வழிகாட்டுதல் எதுவுமின்றி தனியொருவனாக தனது தமையனை மட்டும் வைத்துக் கொண்டு, ஜேஜே பில்டர்ஸ் பிரைவேட் லிமிடட் மற்றும் சூம் நிறுவனத்தை திறம்பட நடத்தி, இந்தியாவின் முக்கிய நகரங்களில் பில்டர்ஸ்ஸின் கிளைகளை சமாளித்து வருவதே ஜேப்பி என்று.

வளவளவென தேவையற்றதைப் பேசாமல், “கார்த்திக் பூஜாவோட எதிர்காலத்துக்காக உங்க தாத்தாகிட்ட பேசி சம்மதம் வாங்க உன் ஒருத்தனாலதான் முடியும்னுதான் உன்னைப் பாத்துப் பேச வந்தேன்.  இதுல உன்னைத் தவிர வேற யாரும் போயி உங்க தாத்தாகிட்டப் பேச முடியாது.  முடிவா என்னதான் சொல்ற?” ஜேப்பியிடம் கேட்டார்.

“எனக்கு உங்களோட இந்த முடிவு ஏற்புடையது இல்லைங்கறப்போ, இதைப்பத்திப் போயி எங்க தாத்தாகிட்ட நான் எப்டி பேசுவேன்னு நினைக்கறீங்க?” எந்தத் தயக்கமும் இன்றி சட்டென பேசியிருந்தான் ஜேப்பி.

வேதா அசராமல் மான அவமானம் பார்க்காமல் பேசவும், ‘எம்புட்டுப் பேசுனாலும் தொடைச்சிக்கற கேசுன்னு தெரிஞ்சும் இதுக்கிட்ட வாயக் குடுத்தது தப்புபோலயே!’ ஜேப்பியின் மனதிற்குள் ஓடியது.

“அவனோட தனிப்பட்ட வாழ்க்கையில நாம்போயி எதுவும் செய்ய முடியாது.  அவனா எங்கிட்ட வந்து, எனக்கு பூஜாவை ரொம்பப் பிடிச்சிருக்கு.  அவ இல்லாம என்னால வாழ முடியாதுன்னு சொல்லியிருந்தா ஒருவேளை யோசிச்சிருந்திருப்பேனா இருக்கும்.  ஆனா அவன் அப்டி இல்லாதப்போ, எங்க தாத்தா பாத்த பொண்ணை அவன் சரினு சொன்னதுக்குப் பின்னாடி, எதுக்கு இந்த விசயத்துல தேவையில்லாத ரிஸ்க் எடுக்கணும்” தோளைக் குலுக்கிக் கேட்டான் ஜேப்பி.

ஜேப்பியின் நேரடியான பதிலில்  தளராத வேதா, எப்படியேனும் கார்த்திக்குடன் பூஜாவைச் சேர்த்து வைக்கும் எண்ணத்தில், “நான் கார்த்திக்கிட்ட பேசி சம்மதிக்க வச்சா, அப்ப நீ அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுவியா?”

வேதாவின் கேள்வியில் எரிச்சலானவன், “அதுக்கு அவசியமே இல்லைங்கறேன்.  அந்தஸ்துல இருந்து எல்லாத்துலயும் அவனுக்கு பெஸ்ட்டா ஒரு பொண்ணு கிடச்சதுக்குப்பின்ன, இந்தக் கேள்வியே இப்பத் தேவையில்லாதது. 

அப்படிக் கிடைக்கவே இல்லைனாலும் பூஜா கார்த்திக்கிட்ட இருந்து ஒதுங்கிக்கறதுதான் எல்லாருக்குமே நல்லது.  அதனால நீங்க இதைப்பத்தி இனி பேசாதீங்க!” நேரடியாகவே தனது எண்ணத்தை திடமாக உரைத்திருந்தான் ஜேப்பி.

அதற்குமேலும் வேதாவால் அங்கிருந்து கிளம்ப மனமில்லாமல், “இதுவே உனக்கு இப்டி யாரையும் பிடிச்சிருந்தா என்ன செய்திருப்ப?” வினவ,

“அது என் கவலை.  இதுக்குமேல இதைப்பத்தி வந்து எங்கிட்டப் பேச வேணாம்” முகத்திலடித்தாற்போல பேசி வேதாவை அங்கிருந்து அனுப்பியிருந்தான்.

ஆனாலும், அவனுக்குள் ஏதோ நெருடல்.  தன்னை, தனது குடும்பத்தை இந்த மாதிரியான தொழிலில் இருக்கும் பெண்ணுக்கு நன்கு தெரிந்திருக்கிறது என்றால் எப்படி?

வேதா, பூஜாவை வளர்த்தவர் என்பதை மட்டுமே இதற்குமுன்பு சேகரித்து அறிந்திருந்தான்.  அவர் வந்துசென்றபின், வேதாவைப் பற்றிய கடந்தகால நிகழ்வுகளைச் சேகரிக்க மிகவும் மெனக்கெட்டான்.  ஆனால் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேதாவைத் தெரிந்தவர்கள் யாரும் அங்கில்லை.

 தனக்குத் தெரிந்த உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் துணையோடு எதாவது செய்ய இயலுமா என யோசித்து, அவர்களிடம் ஆரம்பத்தில் உதவி கேட்டிருந்தார் வேதா.

அவர்கள் முதலில் சட்டென ஆமோதித்து ஆவேசமாக அந்தப் பொறுப்பினை ஏற்றிருந்தாலும், பிறகு ஜேப்பி எனும் ஒருவனைப் பற்றி அறிந்து கொண்டதும், அவனை மீறி அந்தக் குடும்பத்தில் ஒரு குண்டூசியைக் கூட இடமாற்றம் செய்ய முடியாது என்பதனை அவர்கள் கூற அறிந்து கொண்டிருந்த வேதாவிற்கு ஏமாற்றமே.

நிதர்சனம் புரிந்தபோதும், எப்படியேனும் பூஜாவை கார்த்திக்கோடு வாழ வைத்திடும் கடுகளவு முயற்சி என்பதாகவே வேதாவிற்குத் தோன்றியது.

ஜேப்பியை மட்டுமே இறுதியாக நம்பியிருந்தார்.  ஆனால் அவன் பிடிவாதமாக மறுத்துவிட அதன்பின் பூஜாவிடம், “அவனை விட்டா உலகத்தில வேற ஆம்பிளையே கிடையாதா என்ன?  அவனையே எதுக்கு யோசிச்சிட்டு உன்னோட வாழ்க்கைய வீணாக்கிட்டு இருக்க?  வேற யாரையும் உனக்கு கல்யாணம் பண்ணிக்கற ஐடியா இருந்தாச் சொல்லு.  பண்ணி வைக்கறேன்” என்றதை பூஜா ஏற்றுக்கொள்ளாமல், கார்த்திக்கின் வாயிலாக சுமந்த குழந்தையை வேதா மறுத்ததையும் மீறி பெற்றுக் கொண்டாள்.

அப்போதும், “அவனுக்கே தெரியாம இந்தக் குழந்தைய எதுக்குச் சுமக்கணும்.  பேசாம அழிச்சிரு” வேதா கூறியதையும் மீறி,

மருத்துவர், “அஞ்சு மாசம் முடிஞ்சிருச்சு.  இவ்ளோ நாள் என்ன பண்ணிட்டு இருந்த?  இனி ஒன்னும் செய்ய முடியாது” என்றதால் தனியொருத்தியாகவே அனைத்தையும் சமாளித்து ஷ்யாமைப் பெற்றிருந்தாள் பூஜா.

ஷ்யாம் பிறந்த சில மாதங்களில் வேறு வேலை தேடிக்கொண்டு பணியில் கவனம் செலுத்தத் துவங்கியிருந்தாள் பூஜா.

கடந்து போன கசப்பான நிகழ்வுகள் அத்தனையையும் நினைத்துப் பார்த்தபடியே கிளம்பியவர், ‘இனி அந்த செவப்பிரகாசம் ஃபியூஸ் போன பல்பு மாதிரி.  இவன் பண்ண எல்லாத்துக்கும் இனி தனியொருத்தனா கஷ்டப்படப் போறான்.  எத்தனை பேரோட வயித்தெரிச்சலைக் கொட்டிட்டான்.  டக்குனு மட்டும் அவன் செத்திரக் கூடாது.  கொஞ்சம் கொஞ்சமா சித்தரவதையை அனுபவிச்சுச் சாகணும்’ மனதோடு இறைவனிடம் வேண்டிக் கொண்ட வேதா மகதீராவிற்குள் ஏதோ நிறைவு.  அந்த மகிழ்ச்சியோடு நேரடியாக பூஜாவை சந்திக்கக் சென்றார் வேதா.

பூஜாவிடம் விசயத்தைக்கூற, “அவன் தாத்தா செத்தான்னு இல்லை, இவன் செத்தாலும், பேயா வந்து என்னை கார்த்தியோட நிழலைக்கூடத் தொட விடமாட்டான்.  பாவிப் பய!” உண்மையை உணர்ந்து கூறினாள்.

***

சிவபிரகாசம் திடீரென உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்து, அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  ஆனாலும் கனவுபோல, அவர் நினைவுகள் எங்கும் ஜேப்பியும், அவனது நிராகரிப்புமே நிரம்பியிருந்தது.

எஸ்ப்பியின் வாழ்நாள் முழுமைக்கும் அவரது அனைத்து சாம்ராஜ்யங்களிலும் ஜேப்பி தனக்கு தோள் தந்து உதவிடுவான் என்று நம்பியிருக்க, முதலில் சகோதரர்களாக இணைந்து தனியே தொழில் துவங்கினார்கள்.

அப்போதே அவனை தனித்துச் செயல்பட அனுமதித்திருக்கக் கூடாது என்று காலம்கெட்ட நிலையில் வேதனைப்பட்டார்.

அதன்பின், சுமித்ரா எனும் ஒரு பெண்ணுக்காக தனக்கெதிராகச் செயல்பட்டு ஆரம்பத்தில் தனது மனத்தாங்கலுக்கு காரணமாகியிருந்தான் என்றே எண்ணியிருந்தார்.

விசாரணைக்குச் சென்றபோதுதான், அவனைக் கொண்டு தான் செய்திருந்த குற்றங்கள், பாதகங்கள், சில விபத்து வழிக் கொலைகள் அனைத்தையும் மறைமுகமாக காவல்துறைக்குப் பகீரங்கப்படுத்தியதோடு, அதிலிருந்த ஜேப்பியின் பங்களிப்பையும் அதற்கான அனைத்து ஆதாரங்களையும் சமயோசிதமாக நீக்கி அதிலிருந்து முழுமையாக விலகிக் கொண்டதை அறிந்ததும், நிலைகுலைந்து போயிருந்தார் எஸ்ப்பி.

வாழ்நாள் முழுமைக்கும் தனக்கு உறுதுணையாகத் தோள் தருவான் தனது பேரன் ஜேப்பி என நம்பியிருக்க, தோளுக்குச் சொந்தமானவனே தனக்கு தேளாகிப் போனதை எண்ணி, ‘இது எல்லாம் நிரூபிச்சா, ஆயுளுக்கும் ஜெயில்லதான் இருக்கணும்.  மொதல்ல வெளிய போயிட்டு இதையெல்லாம் சரிகட்டணும்’ உள்ளுக்குள் துடித்தார்.

அந்தஸ்து அதிகாரம் என்று வாழ்ந்த நிலைமாறுவதை தெரிந்தே யாரும் விடமாட்டார்கள் அல்லவா.  அதேநிலையில்தான் எஸ்ப்பி தவிப்பாகச் செயல்பட்டார்.

ஜேப்பியின் செயலால் மேலும் வன்மம் கூடிட, ‘அவங்கப்பன் ஆத்தாவை வச்சி இவனுக்கு நான் யாருன்னு காட்டுறேன்’ பழிவெறியோடு அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்தவருக்கு, அடுத்தும் ஏமாற்றமே மிஞ்சியது.

பெற்றோரை அதற்குமுன்பே கார்த்திக் மூலம் தங்களது விட்டிலிருந்து அழைத்துச் சென்ற செய்தி அறிந்ததும் மேலும் அவன்மேல் வஞ்சினம் கூடியிருந்தது.

‘எப்டியாச்சும் அவனை இங்க வர வைக்கணும்.  எப்டி வரவைக்கறது?’ இப்டியான அதீத சிந்தனையில் மன அழுத்தம் அதிகமானதோடு, காதின் காயம் வேறு பரவியிருக்க, வயோதிகம் அதன் வேலையைச் சரியாகக் காட்டத் துவங்கியிருந்தது. அதனால் மனஅலைச்சுழல் கூடி மயங்கியிருந்தார்.

பொது மருத்துவப் பிரிவு மருத்துவர்கள் முதலில் ஆரம்பகட்ட சிகிச்சையை மேற்கொண்டிருக்க, பரிசோதனைகள் துவங்கியிருந்தது.

உடல்நலக் குறைபாட்டின்போது, சலனமில்லா மனதோடு நம்பிக்கையும் நல்ல உணவு, ஓய்வு,மருந்து அவசியம்.  எஸ்ப்பிக்கு சலனமடைந்து கொண்டேயிருந்த மனதால் எவ்வளவு உயர்தர சிகிச்சை அளித்தபோதும் மேலும் உடல்நலன் குன்றியது.

***

எஸ்ப்பியின் உடல்நலனைப் பற்றி அறிந்து கொண்டதும் அவரது இளையமகன் சதானந்தன், “எங்கப்பா ரொம்ப முடியாம இருக்கும்போது நான் இங்க இருந்தா நல்லாவா இருக்கும்.  முதல்ல ஊருக்கு கிளம்பறேன்.  அதுக்கு ஏற்பாடு பண்ணு” கார்த்திக்கிடம் கூறினார்.

மனைவி மயூரியின், “இந்தப் பையன் ஜேப்பியோட குழந்தையில்ல போலயே!  எனக்கென்னமோ நீங்க பண்ண தப்புக்கு, உங்க தம்பி சிலுவை சுமந்த மாதிரித் தெரியுதே!

எப்டிங்க? 

தப்பே பண்ணாதவரு மாதிரி முகத்தை வச்சிட்டு ஏமாத்துனீங்க?  மனசுல உறுத்தலே இல்லாம, எங்கூட எப்டி?

இது ஒன்னு தானா? இல்லை… இன்னும்…!

அந்த ஷ்யாம் சொல்றானே அவனோட அம்மானு, அவ கூடவா? ச்சேய்… அப்புறம் எப்டி அவளைப்போயி உங்க தம்பி…” அதுவரை மனைவியின் பேச்சைக் கேட்டும் கேளாததுபோல இருந்தவன், அவளின் இறுதி வார்த்தையில் கோபமடைந்து, “மயூ நிறுத்து.  எதுவும் நான் பண்ணலை.  தேவையில்லாம என்னைச் சந்தேகப்படறதை முதல்ல நிறுத்து” என்று கத்திவிட்டு அமர்ந்திருந்தான்.

மயூரி சிறிது நேரம் கணவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள்.  ஆனாலும் விடவில்லை.

“இப்டியெல்லாம் நடந்துக்கறது அருவெருப்பாவே இருக்காதா?

ஷ்யாமோட வயச வச்சிப் பாக்கும்போது, நமக்கு என்கேஜ்மெண்ட் நடந்ததுக்கு அப்புறந்தான்ங்கற மாதிரி வருது.  எந்த மூஞ்சிய வச்சிட்டு, வேற பொண்ணுகிட்ட இப்டி நடந்திட்டு, எங்கிட்ட நல்லவன் மாதிரி வந்து பேசுனீங்க?

இதுவே நான் அப்டிப் பண்ணியிருந்தா, என்ன செஞ்சிருப்பீங்க?

ஆம்பிளைங்களுக்கு ஒரு நியாயம்.  பொம்பிளைங்களுக்கு ஒரு நியாயம்.  என்ன அநியாயம் இது?

எங்க வீட்டுல சொன்னா அதுக்கப்புறம் மாப்பிள்ளை மிடுக்கல்லாம் அங்க வேகாது.

இன்னும் இவனை மாதிரி எங்கெல்லாம் புள்ளைங்க இருக்கோ?

உங்களை மாதிரி ஆளுங்களையெல்லாம் நடுரோட்டுல கட்டி வச்சி விசயத்தைச் சொல்லித் தண்டிக்கணும்.  அப்பத்தான், மத்தவங்க தப்புப் பண்ணப் பயப்படுவாங்க.

இந்த மச்சம் இல்லைனா தெரிஞ்சிருக்கவே செய்யாது.  அதனாலதான் கடவுள் எங்கிட்ட இந்தப் பையன் மூலமா காட்டிக் குடுத்திருக்கான்.

உங்களுக்கு பிறக்கற எல்லா குழந்தைக்கும் மச்சம் இப்டியே வருமாங்க?”

 இப்படி மயூரி கணவன் தனியாக தன்னிடம் மாட்டும்போது கேள்வி மூலம் வேள்வியைத் தொடர்ந்திருந்தாள்.

 தேளின் கொடுக்கு போன்ற மனைவியின் வார்த்தைகளிலிருந்து தப்பிக்கும் மார்க்கம் தெரியாமலும், ஷ்யாம் கூறிய நிகழ்வுகளின் வாயிலாக தனது தாத்தாவா இத்தனையையும் செய்தார்.  அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறான் குழந்தை என நடந்ததை ஓரளவு யூகித்து மிகுந்த மன உளைச்சலோடும் இருந்தவன்,

தந்தையின் பேச்சைக் கேட்டதும், “வயசானா உடம்புக்கு முடியாமல்லாம் வரத்தான் செய்யும்.  அதுக்காக  கிளம்பிப் போயி என்ன செய்யப் போறீங்க?

ஹாஸ்பிடல்ல சேத்துருக்கு.  அங்க நல்ல ட்ரீட்மெண்ட் போகுது. எல்லாரும் அங்கதான் இருக்காங்க. நீங்க போகலைன்னா என்னாயிரப் போகுது. பேசாம இங்கதானா இருங்க” சுள்ளெனப் பேசியிருந்தான் கார்த்திக்.

கார்த்தியின் நீண்ட நேர அமைதிக்குப் பிறகான கத்தலைக் கண்டு அருகே வந்த ஷ்யாம், “கூல் காத்தி.  எதுக்கு இவ்ளொ தென்சன்.  வெளிய ஒரு வாக் போயித்து வதுவோம் வா” கையைப் பிடித்து இழுத்தான்.

முதலில் அசையாது இருந்தவன், ஷ்யாமின் அடுத்தடுத்த பேச்சில் மனம் இலகுவாக எழுந்து தான் அணிந்திருந்த ஷார்ட்சின் பின்புறம் தனது இரு கரங்களாலும் தட்டிவிட்டவன், அவனோடு நடக்க வெளியில் சென்றான் கார்த்திக்.

நடந்து கொண்டிருந்தபோது ஜேப்பியிடமிருந்து அழைப்பு வர, “சொல்லுடா” சோகமாக உரைத்தான்.

“என்னடா ஏன் டல்லாப் பேசுற?” ஜேப்பி

கார்த்திக்கிற்கு ஜேப்பியிடம் அனைத்தையும் கூற ஆசைதான்.  ஆனால் அருகே ஷ்யாம் இருப்பதைக் கண்டு, “தாத்தா மயங்கி விழுந்துட்டார்னு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கறதா நீ சொன்னதும், அப்பா அங்க போகணுங்கறார்டா” என்றான்.

“போயிட்டு வரலாம் ஒன்னும் தப்பில்லை.  ஆனா, வெயிட் பண்ணச் சொல்லு.  நானே வந்து பிக்கப் பண்ணிக்கறேன்னு சொன்னா, வாயத் திறக்கமாட்டாருடா” என்றான் ஜேப்பி.

பேசிக் கொண்டிருந்தவர்கள் வைக்கச் செல்லும்போது குறுக்கிட்ட ஷ்யாம், “தாதிக்கித்ததானே பேசுத.  நானும் பேசணும்” என்றான்.

ஷ்யாமின் குரல் கேட்டதும் அவனிடம் கொடுக்குமாறு ஜேப்பி கூற, “தாதி.  ஐ மிஸ் யூ.  எப்ப வதுவ இங்க” என்றான்.

“மீகூட வரேன் ஷ்யாம்.  அதுவரை சமத்தா இருக்கணும்” இப்படித் துவங்கி நடந்தவாறே பேசிக் கொண்டு வந்த ஷ்யாமைக் கண்ட கார்த்திக்கிற்கு, ஷ்யாமின் செயலில் ஜேப்பியின் பண்பேற்றத்தினைக் கண்டான்.

கார்த்திக்கிற்கு குழப்பமாக இருந்தது.  ஒரு வேளை உண்மையில் இது சுமி ஜேப்பியின் குழந்தைதானோ என்று.

ஷ்யாம், ஜேப்பியைப் பார்த்து தனது தந்தையைப்போல தனது நடை, உடை, பாவணைகளை மாற்றிக்கொள்ள முயன்றது கார்த்திக்கிற்குப் புரியவில்லை.

ஜேப்பி நேரில் வரட்டும் பேசிக்கொள்ளலாம் என நினைத்தவன் அழைப்பு வைக்கப்பட்டதும், வீட்டை நோக்கித் திரும்பத் துவங்கினார்கள்.

***

ப்ருத்வியை, “எப்ப கூப்டாலும் வரணும்.  வெளியூர் போகறதா இருந்தா சொல்லிட்டுப் போங்க” என்றிருந்தது காவல்துறை.  தெலுங்கானாவிற்குள் அவன் யாரால், எதற்காக கடத்தப்பட்டான் என்பதே தெரியாமல் விடுவிக்கப்பட்டிருக்க, கையில் நையா பைசா இல்லாமல் வெளிவந்தவனை மேனன் எதேச்சையாக சந்திப்பதுபோல சந்திக்கப் பணித்திருந்தான் ஜேப்பி.

மேனனது உதவியினால் சில நாள்கள் அங்கேயே தங்கியிருந்தவன் அவனிடமே, “எனக்கு எதாவது இங்கேயே கொஞ்ச நாளைக்கு வேலை வாங்கித் தர முடியுமா?”

ஜேப்பியின் மறைமுக உதவியால் அங்குள்ள கட்டிட நிறுவனம் ஒன்றில் மேனனது உதவியினால் வேலைக்குச் சேர்ந்திருந்தான்.

மேனன் கொடுத்துதவிய பணத்தின் உதவியால் சுமியின் எண்ணுக்கு அழைக்க, அது செயல்பாட்டில் இல்லை என்று வந்தது. மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்துவிட்டு, தாங்கள் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரின் எண்ணை நினைவு கூர்ந்து அழைத்தான்.

அவர்கள், “என்ன தம்பி? ஷ்யாம், சுமி எல்லாம் நல்லா இருக்கீங்களா?”என்று வினவ, பதில் சொல்ல இயலாமல் தடுமாறினான் ப்ருத்வி.

தன்னைக் கடத்தி இத்தனை விசயம் நடந்திருக்க, இந்த சுமியும், ஷ்யாமும் எங்கு சென்றிருப்பார்கள் என்று குழப்பத்தோடு, தான் மருத்துவமனைக்கு ஷ்யாமைப் பார்க்க வந்தபோது நடந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்தவன், வீட்டு உரிமையாளரைச் சமாளித்து பேசிவிட்டு, “நான் வெளியூர் வேலையாப் போயிட்டு இன்னைக்குத்தான் அங்க வரக் கிளம்பினேன்.  சுமிக்கு போன் போட்டா எடுக்கலை.  அதான் உங்க நம்பருக்குக் கூப்பிட்டேன்” என்றுவிட்டு வைத்தான்.

அவரும், “ஷ்யாமுக்கு இன்னும் சரியாகலை.  அதனால, அங்கேயே வேலை தேடீட்டு தங்கியிருந்து பாக்கப் போறேன்னு சொல்லி, ஆளுவிட்டு இங்க இருந்த பொருளையெல்லாம் எடுத்துட்டுப் போச்சே சுமித்ரா” என்று ப்ருத்வியிடம் கேட்டார்.

ப்ருத்வி சமாளிக்க எண்ணி, “சொல்லிச்சு.  ஆனா அதோட நம்பர் கால் பண்ணா இப்ப போகலை.  அதான் உங்களுக்கு எதுவும் தங்கியிருக்கற எடம் பத்தித் தெரியுமானு கேக்கக் கூப்பிட்டேன்” சமாளித்து வைத்திருந்தான் ப்ருத்வி.

***

எஸ்ப்பியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது.  பேச்சு குழறத் துவங்கியது. காது நரம்புகளின் பாதிப்பு பரவி, மூளை நரம்புகளைப் பாதித்ததால், ஒரு பக்க கைகால் செயலிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விசயம் கேள்விப்பட்ட ஜேப்பி, எஸ்ப்பியை நேரில் சந்திக்க முடிவு செய்தான். குடும்பத்தோடு கிளம்பும் உத்தேசத்தில், சுமியோடு கிளம்பியவன் அமராவதி நோக்கிக் கிளம்பினான்.

சுமிக்கு நீண்ட தூர பிரயாணம் அசௌகர்யத்தைத் தந்து விடக்கூடாது என மெனக்கெட்டிருந்தான் ஜேப்பி.

அவனது அதீத கவனிப்பு சுமிக்கு இனிமையைத் தந்தாலும், ஜேப்பியின் குடும்பத்தாரை முதன் முதலில் சந்திக்கப் போவது சிறு தயக்கத்தைத் தந்திருந்தது.

அங்கு சென்றதும் சட்டென ஷ்யாம் பற்றி உண்மை தெரியவர அவளின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு  பாதிப்பு ஏற்படக்கூடாதே எனும் விழிப்பில் சுமியிடம் ஜேப்பி பீடிகையோடு துவங்கி, அங்கு சென்றடையும் முன் ஷ்யாம் பற்றிய அனைத்தையும் கூறியிருந்தான்.

அனைத்தையும் பொறுமையோடு கேட்டவளின் உடலே நடுங்கியது.  ஆதரவாக அணைத்துப் பிடித்துக் கொண்டவாறே கூறியிருந்தான் ஜேப்பி.

“ரொம்ப அடியா?  வலி தாங்க மாட்டானே.  அந்த நேரத்தில நானும் இல்லாம குழந்தை ரொம்பக் கஷ்டப்பட்டிருப்பான்” இப்படி புலம்பித் தீர்த்திருந்தாள் சுமி.

அனைத்தையும் கேட்டு சந்தோசத்தில் அழுதவளை, “நல்ல விசயம் சொன்னாலும் அழற. உங்கிட்ட சொல்லாமக் கொண்டுபோயி அவன் முன்ன நிறுத்தியிருக்கணும்.  எதுக்கெடுத்தாலும் கண்ணுல தண்ணி வச்சிட்டு… கண்ணைத் துடை முதல்ல” அதட்டினான் ஜேப்பி.

ஷ்யாமைப் பார்க்கப்போகும் ஆவலில் சந்தோசமாக சுமியும், பெரும் பஞ்சாயத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பது புரியாமல் மனைவியின் மகிழ்வில் தானும் மகிழ்வாக ஜேப்பியும் பயணித்திருந்தனர்.

***

Leave a Reply

error: Content is protected !!