தோளொன்று தேளானது 25

தோளொன்று தேளானது 25

தோளொன்று தேளானது! 25

செல்லுமிடத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது தெரிந்துதான் ஜேப்பியுடன் அமராவதிக்குக் கிளம்பி வந்திருந்தாள் சுமி. 

தன்னை அவர்களின் வீட்டில் எப்படி நடத்துவார்களோ என்கிற பரிதவிப்பைக் காட்டிலும், ஷ்யாம் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறதோ?  தன்னைக் காணாத பிள்ளை தனித்து எத்தனை துன்பங்களை அனுபவித்தானோ?  தன்னைத் தேடிக் களைத்திருப்பானோ? விபத்து அவனை எத்தனை தூரம் பாதித்ததோ? காயங்களோடு குழந்தை மிகவும் கஷ்டப்பட்டிருப்பானே! இப்படி அவளின் எண்ணத்தில் ஷ்யாமைப் பற்றியே தொடர்ச்சியாக மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

சில நேரங்களில் தன்னை மீறி ஜேப்பியிடம் புலம்பவும் செய்திருந்தாள் சுமித்ரா.

“எப்பவோ நடந்து முடிஞ்சதைப் பத்தி இப்ப ஃபீல் பண்றதால என்ன மாறிடப் போகுது சுமி” மனைவியைத் தேற்ற முயன்றான் ஜேப்பி.

வீட்டை அடையும் முன்பே கார்த்திக்கிற்கு அழைத்து தானும் சுமித்ராவும் அங்கு வந்துகொண்டிருப்பதைப் பற்றி பேசியிருந்தான் ஜேப்பி. 

கார்த்திக், “நல்ல வேளை பண்ணடா! வா வா! இன்னும் எவ்ளோ நேரத்தில இங்க இருப்ப?” அதீத ஆவலோடு கேட்டதே ஜேப்பிக்கு வித்தியாசமாகத் தோன்றியது.

‘என்னாச்சு இவனுக்கு!   எப்பவும் இப்டிப் பேச மாட்டானே!’ என்று.

பெற்றோருடன் சகோதரர்கள் இருவரும் தங்களின் குடும்பத்தோடு ஒன்றாக வசிப்பதற்கு ஏற்ற வகையில் மிகவும் பிரமாண்டமாக அமராவதியில் கட்டப்பட்டிருந்த வீட்டின் சுற்றுச் சுவருக்குள் வாகனம் நுழைந்ததும் கார்த்திக், ஷ்யாம் இருவருமே வாகனம் நிறுத்துமிடம் வந்து, வந்த இருவரையும் மட்டற்ற மகிழ்ச்சியோடு வரவேற்றிருந்தனர்.

மற்றவர்களைக் காணவில்லை.  அது தற்செயலாக நடந்தாற்போலத் தோன்றவில்லை ஜேப்பிக்கு.  பெற்றோர் ஜேப்பியின் செயலைக் கண்டிக்கும் விதமாக ஒதுக்கமாக இருப்பதாகவே தோன்றியது. மயூரி குழந்தை இருப்பதால் வர இயலவில்லைபோலும் என நினைத்துக் கொண்டே இறங்கினான் ஜேப்பி.

வண்டியில் இருந்து முதலில் இறங்கியவளை, “வா சுமித்ரா!” வரவேற்ற கார்த்திக்கை நோக்கி புன்முறுவல் செய்தாள்.

“எப்டி இருக்கீங்க கார்த்தி? குழந்தை எப்டி இருக்கான்? மயூரி அவங்க எங்க?” என்றவாறு, தன்னைத் தேடி வந்த ஷ்யாமிடம் பார்வையைச் செலுத்தியபடி அவனை நோக்கி தனது கரங்களை ஆவலாக நீட்டியவாறு கார்த்திக்கிற்கு பதில் கூறியவளைக் கண்ட கார்த்திக், “முதல்ல அவனைப் பாரு சுமி.  அப்புறம் நாம பேசலாம்” ஷ்யாமின் ஆர்வத்தோடுடனான தேடலைக் கண்டு அவ்வாறு கூறிவிட்டு ஒதுங்கினான்.

தனது சகோதரனைத் தேடி ஜேப்பியின் அருகே செல்ல, வண்டியிலிருந்து இறங்கியவன் “என்ன கார்த்தி டல்லடிக்கிற!” என்றவாறு தமையனின் அருகே வந்து இருவரும் ஆரத் தழுவிக் கொண்டனர்.

தம்பியை தனது தோளோடு அணைத்தபடியே பதிலுக்கு, “என்னடா நீயும் ரொம்ப இளைச்சுத் தெரியற! ரொம்ப லோடா?” மேலிருந்து கீழாகப் பார்த்துக் கூறியவாறே, “எப்டிச் சமாளிச்சடா பெருச?” என்றதும் ஜேப்பி புரியாமல் பார்க்க, “எல்லாம் நம்ம ஜுனியர் சொல்லித்தான் தெரிய வந்துச்சு” ஷ்யாமைக் கண்ணால் காட்டி கிசுகிசுப்பாக எஸ்ப்பியின் செயல்களைப் பற்றிப் பேசினான் கார்த்திக்.

“அவந்தான…! ரொம்ப டேஞ்சரஸ்… பட் ஓவர் மெச்சூர்ட் செயில்ட் அவன். என்னை இமிடேட் பண்ண இப்பவே ட்ரை பண்றான்.  அதான் ஆளுக்கொரு திசையில இருக்கற மாதிரிப் பாத்துக்க வேண்டியதா இருக்கு!” கார்த்திக்கிற்கு மட்டும் கேட்குமாறு இளநகையோடு  ஷ்யாமைப் பற்றிப் பெருமையாக உரைத்த ஜேப்பி,

“ஆல் கிரடிட்ஸ் ஃபார் ஹிஸ் பெர்ஃபார்மன்ஸ் கோஸ் டூ யூ…!”  என்றபடியே கார்த்திக்கின் வயிற்றில் செல்லமாகக் குத்தி கண்ணடித்துச் சிரித்தான் ஜேப்பி.

“என்னடா சொல்ற? நீயும் எம்மேல குண்டைத் தூக்கிப் போடத்தான் வந்தியா?” அதிர்ந்து எதுவும் தெரியாததுபோலக் கேட்டவனிடம்,

“நீ இப்டி ஷாக்கானா எப்படி?” ஜேப்பி அதே சிரிப்போடு கேட்டான்.

“நிஜமாத்தான் சொல்றியாடா!” என்ற கார்த்திக், “அப்டியேனாலும் அவன் ஏன் உன்னை மாதிரி இருக்கான்!” தனது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளவேண்டிக் கேட்டான்.

          “சில குழந்தைகளுக்கே உரிய அப்சர்விங் கேபபபிலிட்டி இது. சிலது மந்துனு இருக்கும்.  சிலது சூட்டிகையா இருக்கும்.  சிலது கமுக்கமா எல்லாத்தையும் அப்சர்வ் பண்ணி இமிடேட் பண்ணுங்க. இப்டி குழந்தைகள் பல தினுசா இருக்குங்க.  இதுல நான் சொன்ன கடைசி ரகம் இவன்!” விளக்கமளித்தபடியே ஷ்யாமை பார்த்துக் கொண்டே பேசினான் ஜேப்பி.

          ஷ்யாம், சுமித்ராவோடு பேசிக் கொண்டிருந்தாலும் அவனது கவனம் முழுமையும் ஜேப்பியிடம் இருந்தது.  அதனைக் கண்ணுற்ற ஜேப்பி, “சட்டுனு திரும்பாத! பய சுதாரிச்சிருவான். எதேச்சையா திரும்பற மாதிரி அவனைப் பாரு.  சும்மா சுமிகிட்ட வாயடிக்கறான்.  ஆனா கவனம் எல்லாம் நாம என்ன பண்றோம்கிறதுலதான் இருக்கு!” என்று கூறினான்.

          கார்த்திக்கும் அதேபோல திரும்பிப் பார்த்து, “ஆனாலும் செம ஸ்மார்ட்டா வளத்திருக்குடா சுமி” மெச்சுதலாகக் கூறியவன், “யாருகிட்ட இருந்து இவனை…” அதற்குமேல் என்ன பேசலாம் எனத் தயங்கிய சகோதரனைக் கண்டு,

          “அப்ப ஒரு ஆளில்லையா?” ஜேப்பி அதிர்ச்சியாகக் கேட்க, தலைகுனிந்தவாறே யோசிப்பதுபோல இருந்தாலும், கார்த்திக்கின் தர்மசங்கடம் ஜேப்பிக்கு புரிந்தது.

          “ஆள் யாருன்னு நான் சொல்லமாட்டேன்.  நீயே கண்டுபிடிச்சுக்கோ” ஜேப்பி கூறியதும் லஜ்ஜையாக உணர்ந்தான் கார்த்தி.

இதைப்பற்றிய பேச்சைத் தொடர விரும்பாத கார்த்திக், “ரொம்ப நேரமா வெளிய நின்னுட்டே பேசிட்டு இருக்கோம்.  அம்மா அப்பாகிட்ட சுமிய இன்ட்ரோ பண்ணு ஜேப்பி.  வா உள்ளார…” என்றதும் அதற்குமேல் தாமதிக்காது உள்ளே செல்லத் திரும்பினர் சகோதரர்கள்.

 வந்ததும் இருந்த கார்த்திக்கின் முகம் நினைவில் வர நடந்தவாறே, “என்ன பிரச்சனை உனக்கும் மயூரிக்கும்?” என்றதோடு, “நீந்தான் ஏதோ பேயறஞ்ச மாதிரி இருந்த.  என்னாச்சு?” வினவிய ஜேப்பி கார்த்திக்கையும் உள்ளே அழைத்துக் கொண்டு செல்ல,

“சுமிய இன்ட்ரோ பண்ணச் சொன்னா என்னைய எதுக்கு உங்கூட இழுத்துட்டு வர” நழுவினான் கார்த்திக்.

ஒத்த வயதுக் குழந்தையின் செயல்களைப் பற்றி அதீத விமர்சனம் செய்து அதில் தனது தவறை மறைக்கச் செய்யும் உத்தி, வளர்ந்த ஜேப்பியிடம் தென்பட அவ்வாறு கூறினான் கார்த்திக்.

தான் கார்த்திக்கிடம் கேட்டதும் அப்படி நழுவுகிறான் என ஜேப்பி கிண்டல் செய்ய மெல்லிய குரலில், “எல்லாஞ் சொல்றேன்” என்ற கார்த்திக்கின் பார்வை ஷ்யாம், சுமித்ராவின் பாசப் பிணைப்பு மற்றும் பேச்சில் இருந்தது.

ஆவெனப் பார்த்தபடி பேசியவனைக் கண்ட கார்த்தியை, உலுக்கி நிகழ்விற்கு கொண்டு வந்த ஜேப்பி, “இதப் பாத்து ஷாக்கானா எப்டி?  இன்னும் பாக்க எவ்ளோ இருக்கு!” என்றதோடு கார்த்திக்குடன் சென்றவன், “அப்பா அம்மா எங்கடா இருக்காங்க?” சுற்றிலும் பார்த்தபடியே கேட்டான்.

கார்த்திக் லிவிங் ஏரியாவில் நின்றவாறு அவர்களின் அறையைக் காட்ட, ஜேப்பி சுமித்ராவை அழைத்தான்.  அதற்குள் அங்கு விரைந்த மயூரி ஜேப்பியை இன்முகமாக வரவேற்றாள்.

“எங்க ஜூனியர்?  அவரை மொதல்ல கண்ணுல காட்டுங்க” சிரித்தபடியே மயூரியிடம் கேட்டான் ஜேப்பி.

“தூங்கறான்.  எழுந்ததும் தூக்கிட்டு வரேன். இல்ல தூங்கறவனை வந்து பாக்கறதா இருந்தா வாங்க.” கார்த்திக்கை முறைத்தபடியே, ஜேப்பியிடம் அவர்களின் அறையை நோக்கிக் கைகாட்டிக் கூறியவள் அவனிடம் சிரிக்க முயன்றவாறு பேசினாள்.

ஜேப்பியின் கண்களுக்கு அது தப்பவில்லை.  கார்த்திக்கை பார்த்தான்.

வந்த சிறிது நேரத்திற்குள், தாயிடம் தான் விபத்தில் சிக்கிய நாள் முதல் அன்று நடந்தவரை அனைத்தையும் மறக்காமல் கூறிக் கொண்டு வந்தான் ஷ்யாம்.

சுமிக்கு கண்களில் நீர்கோர்த்தாலும், அதனை கீழே விடாமல் சமாளிக்க, “எதுக்கு மீம்மா அழத?  எனக்கு எல்லாம் சதியாயிதுச்சு. நீ அழாம இது மீம்மா” ஷ்யாமின் மாற்றங்கள் சுமிக்குத் தெளிவாகத் தெரிந்தது.

தன்னிடம் பேசினாலும் அவனது கவனம் முழுமைக்கும் ஜேப்பியிடம் இருப்பதைக் கண்டவளுக்கு, ‘எப்டி இந்தக் கொஞ்ச நாள்ல மாறிட்டான்’ எனத் தோன்றியது சுமிக்கு.

ஆனாலும் அதில் வருத்தமில்லை.  எப்படியோ ஷ்யாமை தன் குழந்தையாக ஜேப்பி பாவித்தால் அவளுக்கு மகிழ்ச்சியே.

கணவன் அழைக்கும்வரை ஷ்யாமோடு இருந்தவள் அதன்பின் அவனோடு வந்து நெருங்கி நின்று கொண்டு ஜேப்பி மயூரியிடம் பேசுவதை இன்முகத்தோடு பார்த்தவாறு நின்றிருந்தாள்.

மயூரிக்கு முதல் பார்வையிலேயே சுமியின் சிரித்த வதனத்தைக் கண்டு பிடித்துப் போனாலும், ஷ்யாமைப் பற்றிய சந்தேகம் இன்னும் தீராததால் ஒதுக்கமாகவே இருந்தாள்.  மயூரியின் ஒதுக்கம் சுமிக்குப் புரிந்தாலும் அதனைப் பெரிதுபடுத்தாமல் நின்றிருந்தாள் சுமி.

கார்த்திக் சென்று பெற்றோர்களை அழைத்து விசயத்தைக் கூற, வந்த இருவரும் வந்தவர்களை பெயருக்கு வரவேற்றார்கள்.  அதில் உயிர்ப்பில்லை.

ஜேப்பிக்கு புரிந்தது.  அதற்காக அவன் வருந்தவில்லை.  சதானந்தன் ரூபிணி இருவருக்கும் சுமியைப் பார்த்ததும், ‘என்ன இருந்தாலும் நம்ம மயூரி அளவுக்கு இல்லை’ தோன்றிட,

அருகே இருந்த கார்த்திக்கிடம், “என்னடா இந்தப் பொண்ணுக்காகத்தான் இவன் நம்மையெல்லாம் வேணானு எங்கிட்டோ போயி அவளோட திரிஞ்சானாடா?” காதில் கிசுகிசுப்பாய்க் கேட்டார் ரூபிணி.

கார்த்திக்கிற்கு, ‘இருக்கற பிரச்சனையில இந்தம்மா வேற புதுப் பிரச்சனையக் கிளப்பிரும்போலயே’ தோன்றினாலும் அந்த இடத்தில் அதனைக் காட்டிக் கொள்ளாமல் இயல்பாக இருக்க மிகவும் சிரமப்பட்டு நின்றிருந்தான்.

சுமித்ராவிற்கு ஜேப்பி பெற்றோரின் செயல்பாடுகளைக் கொண்டு அவர்கள் தன்னைப்பற்றி என்ன யோசிக்கிறார்கள் என்பது தெளிவாகப் புரியாதபோதும், தான் வேண்டாத மருமகள் என்பது தெளிவாகப் புரிந்துபோனது.

ஜேப்பிக்கும் சுமித்ராவின் நிலை புரிய, அதிகம் தாமதிக்காது, “லாங்க் ட்ராவல்னால டயர்டா இருக்கு.  ரெஸ்ட் எடுத்துட்டு ஊருக்குக் கிளம்புவோம்” என்றவன், எத்தனை மணிக்கு கிளம்பலாம் என்பதைப் பற்றி அனைவரிடம் கூறிவிட்டு, தேவி கொடுத்த உணவை உண்டதாகப் பெயர் செய்துவிட்டு சுமித்ராவை கையோடு அழைத்துக்கொண்டு அவர்களுக்கானஅறைநோக்கிச் சென்றுவிட்டான்.

அறைக்குச் சென்ற சுமியும், ஷ்யாமும் மீதிக் கதையைப் பற்றிப் பேச, ஜேப்பி படுத்துவிட்டான்.

***

          ஜேப்பியிடம், மச்ச விசயத்தினால் தான் மயூரியிடம் வகையாக மாட்டிக் கொண்டதைப் பற்றிக் கார்த்திக் கூறி புலம்ப, அன்றே அதற்குத் தீர்வு கண்டுவிடும் எண்ணத்தில் திருச்சி செல்லும் பயணத்தை தள்ளிப் போட்டான் ஜேப்பி.

ஜேப்பி ஜேக்கே சுமித்ரா மயூரி நால்வருமாக அந்த லிவிங் ஏரியாவில் இருக்க, குழந்தையை ரூபிணி வைத்திருந்தார்.  ஷ்யாம் குழந்தையிடம் பேசி விளையாட்டு காட்டியவாறு நின்றிருந்தான்.

          சுமித்ரா அங்கிருந்ததால் முதலில் மிகவும் தயங்கினாள் மயூரி.  சுமி, “நான் வேணா போயிறேன்” எழுந்தவளைக் கண்டதும், “நீங்க இருங்க” தயங்கிக் கூறியவள், தனது மனக்கலக்கத்தை மறையாது உள்ளபடியே உரைக்க அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த ஜேப்பி, “வயசுல அவன் ஏதோ தெரியாம பண்ணது…”

கார்த்திக்கின் முகத்தை, ‘இதுக்குத்தான் அப்பப் படிச்சிப் படிச்சுச் சொன்னேன். நீ காது குடுத்துக் கேக்கலை. இப்பப் பாத்தியா?’ என பார்வையில் பகிர்ந்தபடியே மயூரியிடம் பேசினான் ஜேப்பி.

          ஜேப்பியது பார்வையின் பொருள் விளங்க கார்த்திக் தலையைக் குனிந்துகொண்டான்.

ஜேப்பியின் பேச்சைக் கேட்ட மயூரி, “இவரை இவ்ளோ நாளா கண்மூடித்தனமா நம்பியிருந்ததை நினைச்சு எம்மேலயே கோபம் கோபமா வருது!” என்றவள்,

“இவரை நம்பி எப்டி என்னால நிம்மதியா இனி வாழ முடியும்னு தெரியலை ஜேப்பி.  இந்த மாதிரி இன்னும் எத்தனை பேரோடனு யோசிக்கும்போது அருவெறுப்பா இருக்கு.  எனக்கு இவரு மூஞ்சில முழிக்கவே புடிக்கலை” மனதில் உள்ளதை அப்படியே கூறினாள்.

இடையில் கார்த்திக், “அது கல்யாணத்துக்கு முன்ன தெரியாம…” பேசத் துவங்கியவனைக் கண்டு எரிப்பதுபோலப் பார்த்த மயூரியின் பார்வையில் அமைதியாகியிருந்தான்.

“அப்ப கல்யாணத்துக்கு முன்னனா எப்டி வேணாலும் இருக்கலாமா?  நீ அப்டித் தப்புப் பண்ணியிருந்தா உன்னை மாதிரி ஊர்க்காட்டுல தெரிஞ்ச பொண்ணாப் பாத்துல்ல நீ கல்யாணம் பண்ணி இருந்திருக்கணும். 

அதவிட்டுட்டு, நல்லவன் வேசம் போட்டுட்டு வந்து என்னை ஏமாத்தியிருக்க! உன்னை மாதிரி ஆள கல்யாணம் பண்ணிக்கிட்ட என்னை மாதிரிப் பொண்ணுங்க எல்லாம், இவன் இன்னைக்கு என்ன பண்ணிட்டு வந்தானோ?  யாருகிட்டப் போனானோ?

வேலைக்குன்னு போறான்.  உண்மையிலேயே வேலைக்குத்தான் போறானா?  இல்லை வேலைங்கற பேருல வேற எவகூடவும் படுத்து எந்திரிச்சு வந்திட்டானோனுதான் மனசுல பதக் பதக்குன்னு இருப்போம்.  அந்த நரக வேதனை உனக்குப் புரியாது.  படற என்னை மாதிரிப் பொண்ணுகளுக்குத்தான் புரியும்” கத்தித் தீர்த்திருந்தாள் மயூரி.

மயூரி கேட்டது அனைத்துமே நியாயமாகப்பட ஜேப்பியால் பேச முடியாமல் அமர்ந்திருந்தான்.  மயூரியின் பேச்சு சத்தத்தில் அங்கு வந்த ரூபிணி, “என்ன பிரச்சனை?” என்றபடியே சுமித்ராவை, ‘இவ வந்த நேரம்.  என்னாச்சுன்னு தெரியலையே!’ என்பதுபோல சந்தேகத்தோடு நோக்க,

ஜேப்பி, “ஷ்யாமோட பொறுப்பை யாரு ஏத்துக்கறதுன்னு பேசிட்டு இருக்கோம்மா!” சட்டெனக் கூற, சுற்றிலும் பார்வையைச் செலுத்தினார் ரூபிணி. 

கார்த்திக் தலை கவிழ்ந்தபடி அமர்ந்திருந்ததைக் கண்ட ரூபிணி, “பெத்தவன்தான பொறுப்பேத்துக்கணும்.  அத எதுக்கு கார்த்திக்கிட்ட வந்த பேசிட்டுருக்க?” ஜேப்பியிடம் கேட்டார்.

“எல்லாம் காரியமாத்தன் பேசிட்டுருக்கேன்மா” என்றவன், “பெத்தவங்ககிட்ட விடணும்னா, கார்த்திக்கிட்டேயே அவனை விட்ரலாமாம்மா” ஜேப்பி நறுக்குத் தெரித்தாற்போல தாயிடமே கேட்டான்.

ரூபிணிக்கு புரியாமல் கையில் வைத்திருந்த குழந்தையை மயூரியிடம் குடுத்தவாறே, “என்னடா உளர்ற?” என்றார் எரிச்சலோடு.

மயூரி கோபமாக விசயத்தைக் கூற, கேட்ட ரூபிணிக்கு தலையை சுற்றிக் கொண்டு வந்ததும் அங்கிருந்த ஷோஃபாவில் அமர்ந்தவாறு, “என்னடா கார்த்தி இது?  உண்மையிலேயே நீயாடா? இல்லை இது வேற யாரும் உம்மேல போடற பழியாடா?” என்றபடியே சுமித்ராவைப் பார்க்க,

“இவ்ளோ நாள் ஷ்யாமை வளத்தது மட்டுந்தான் சுமித்ரா.  ஆனா புள்ளைக்காரன் இவந்தான்” கார்த்திக்கைக் காட்டிக் கூறிய ஜேப்பி, “விசயம் தெரிஞ்சதுல இருந்து மயூரி ரொம்ப அப்சட்.  இப்ப அவங்க அப்பா வீட்டுக்கு போறேங்குது.  என்ன சொல்றீங்கம்மா?” கேட்டான்.

ரூபிணியால் ஏற்றுக்கொள்ள முடியாமல், அது எப்டி அவன் கார்த்திக்கோட பையன்னு சொல்ற? தனது ஐயத்தைக் கிளப்ப, மயூரியே அவர் கூறிய மச்ச விசயத்தை மாமியாரிடம் கூறி நியாயம் கேட்டாள்.

அப்போதும் அதனை சமாளிக்க எண்ணிப் பேசிய ரூபிணியிடம், “கார்த்தியோட டிஎன்ஏவும், ஷ்யாமோட டிஎன்ஏவும் ஒன்னுங்கறதுக்கு ரிப்போர்ட்டை காமிச்சா நம்புவியாம்மா” கோபமாகவே கேட்டான் ஜேப்பி.

அதற்குமேல் கணவரையும் அழைத்துப் பேசிய ரூபிணி அவரிடம் புலம்ப, “முடிஞ்சதைப் பத்திப் புலம்பறதை விட்டுட்டு, இப்ப இதுக்கு என்ன வழின்னு கேக்கற மயூரிக்கு நல்ல பதிலைச் சொல்லுங்க” என்றான் ஜேப்பி.

“அய்யோ. இதுலாம் பத்தி எனக்கு ஒன்னுமே தெரியாதே” என்ற சதானந்தன், “எப்பவும் அப்பாகிட்டதான் இந்த மாதிரி விசயத்தைக் கொண்டு போவோம். இதையெல்லாம் அவருகிட்டப் போயிச் சொன்னா, நம்ம குடும்பத்தைப் பத்தி இன்னும் கீழாவுல நினைப்பாங்க” என்றவர் மயூரியிடம் சென்று கெஞ்சி மன்றாடினார்.

“இதுவரை அவன் எப்டியிருந்திருந்தாலும் எனக்காக இந்த ஒரு தடவை மன்னிச்சிரும்மா.  இனி அவன் அப்டிச் செஞ்சா நானே உனக்கு வேணுங்கற நியாயத்தை முன்ன நின்னு பண்ணிவேன்” என்று தீர்மானமாக உரைக்க,

அதன்பின் ஜேப்பியும், “ஷ்யாமோட அம்மா இனி தேடி வரதுக்குரிய வாய்ப்பு இல்லை.  அதனால நானும் சுமியுமே அவனோட பொறுப்பை ஏத்துக்கறோம்.  கார்த்தி, நீதான் மயூரிக்கு ஹோப் குடுக்கணும்.  இனி இந்த மாதிரி ஒன்னு நடக்காதுனு” என்றதும்,

“இந்த ஒரு குழந்தை மட்டும்னு நீங்க ஏத்துக்கறீங்க ஜேப்பி.  இனியும் இதுபோல வந்தா, அதையெல்லாம் என்ன பண்றதா இருக்கீங்க?” மயூரி நறுக்குத் தெரித்தாற்போல ஜேப்பியிடம் கேட்டாள்.

கார்த்திக்கைப் பார்த்த ஜேப்பி, “வராதுனு நம்புவோம்.”

“உங்க அண்ணங்கிற ஒரே காரணத்துக்காகத்தான எல்லாத்தையும் மறைச்சு இப்டிப் பண்ணுறீங்க?” ஜேப்பியிடம் மயூரி கேட்டதும்,

“நடந்து போன விசயத்துக்கு எதுவும் செய்ய முடியாது மயூரி.  இனி நடக்காம இருக்குங்கறதுக்கு அவனும் நீங்களுந்தான் பேசி ஒரு முடிவுக்கு வரணும்.  கல்யாணம் ஆனபின்ன ஒழுங்காத்தானே இருக்கான்” என்று கூறியதுமே,

“எங்க ஒழுங்கா இருக்கார்.  நாந்தான் கடிவாளத்தைப் போட்டுவிட்டு எல்லா இடத்துக்கும் கூட்டிட்டுப் போறேன். வரேன்.  இல்லைனா, புல்லு நல்லா பச்சையா இருக்கு, கொள்ளுன்னா எனக்கு உயிருன்னு ஃபுல் பாஃமுல பாஞ்சு மேயத்தான் போவாரு” கோபமாக உரைத்தவள்,

“இனிமே இதுமாதிரி ஒரு விசயம் எங்காதுக்கு வந்தா, கண்டிப்பா கார்த்திக்கு நானே என் கையால விசம் வச்சிருவேன்” என்றிருந்தாள் மயூரி முடிவாக.

அனைவருமே மயூரியின் வார்த்தையில் ஒரு கனம் ஸ்தம்பித்திருந்தனர் அவளைத் தவிர.

இறுதியாக, கார்த்திக்கிடம் உறுதிமொழியை வாங்கிக் கொண்ட மயூரி, “எனக்கு இன்னும் நடந்த விசயத்தை ஜீரணிக்க முடியல.  கொஞ்ச நாள் எனக்கு டைம் குடுத்தா, நான் பழையபடி மாறிருவேன்.  அதுவரை பொறுமையா, என்னைத் தொந்திரவு பண்ணாம, பொ..கிட்டு இருக்கணும்னு சொல்லிருங்க” ஆவேசமாகக் கார்த்திக்கைக் காட்டி ஜேப்பியிடம் கூறிவிட்டு, குழந்தையோடு அறைக்குள் சென்றுவிட்டாள் மயூரி.

மயூரி இதுவரை இப்படியெல்லாம் பேசியதில்லை.  ஆனால் கணவனின் செயலில் அவளின் இயல்பைத் தொலைத்து வாயில் வந்ததைப் பேசிச் சென்றவளின் செயல்களை, பூசி மெழுகி சமாளித்த மாமியாரை சுமித்ரா புதிராகப் பார்த்திருந்தாள். ஜேப்பியும் அனைத்தையும் கவனித்தாலும் கவனிக்காததுபோல இருந்து கொண்டான்.

சதானந்தன், ரூபிணி இருவருக்கும் விசயம் அனைத்தும் தெரிய வந்திட, “இது உங்க தாத்தா காதுக்குப் போச்சுன்னா, குடும்பத்தையே தீ வச்சிக் கொளுத்திருவாரேடா” ஜேப்பியிடம் பதற,

“அதுலாம் ஏற்கனவே வச்சி, தப்பிச்சாச்சு” சாதாரணமாக உரைத்துவிட்டு அங்கிருந்து அகன்ற ஜேப்பியை புரியாமல், ‘இவன் என்ன சொல்ல வரான்’ என்றவாறு பார்த்திருந்தனர் இருவரும்.

***

          மயூரி முழுமையாகச் சமாதானமாகாத நிலையில் அவளின் பிறந்தகத்திற்குச் செல்ல சில காலங்களுக்கு அனுமதிக்கக்கூடாது என்பதிலும், இயன்றவரையில் இந்தப் பிரச்சனையை அமராவதியிலேயே பேசி ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டும் என்பதிலும் தெளிவாக இருந்தனர் கார்த்திக், ஜேப்பியின் பெற்றோர்.

          அதுவரை ஷ்யாமை ஒரு பொருட்டாக எண்ணாமல் தள்ளி வைத்துப் பார்த்தவர்கள் அதன்பின் அவனது பொறுப்பை ஏற்க தாங்களும் முன்வந்ததைக் கண்ட மயூரிக்கு, ‘என்னதான் மகன் தப்பு பண்ணாலும் அதையெல்லாம் மறந்துராங்க.  எப்டித்தான் சட்டுனு மனசை மாத்திட்டு ஷ்யாமை ஏத்துக்கிட்டாங்களோ. 

ஷ்யாம் ஜேப்பியோட பையன்னு சொன்னதும் அவனை தூர வச்சிப் பாத்தாங்க.  இப்ப என்னடான்னா, அப்டி உல்டாவா மாறித் திரியறாங்க.  என்ன இவைங்க மண்டைக்குள்ள ஓடுதுன்னு ஒன்னுமே புரிய மாட்டுது’ குழம்பிப் போயிருந்தாள் மயூரி.

          ரூபிணி, சதானந்தன் இருவருக்கும் சுமித்ராவைக் கொண்டே ஷ்யாமைத் தள்ளி நிறுத்தியிருந்தனர் என்பதும், சுமித்ராவை அவர்களால் இன்றுவரை ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்பதும் மயூரிக்குப் புரியவில்லை.

          ஆனால் முகம் தெரியாத, எத்தகைய அந்தஸ்தில் உள்ள பெண்ணுக்கும், தனது மகனுக்கும் பிறந்த குழந்தை ஷ்யாம் என்பது புரியாமலேயே, தனது மகன் கார்த்திக்கின் குழந்தை எனும் ஒரேயொரு காரணத்திற்காக அவனை ஏற்றுக்கொண்ட பெற்றோரின் மனதைப் படிக்கவே செய்தான் ஜேப்பி.

***

          திருச்சியை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டிருந்தனர் ஜேப்பி குடும்பத்தினர்.

          எஸ்ப்பியின் நிலை கண்டு ஜேப்பியின் பெரிய தகப்பனார் சச்சிதானந்தன் ஜேப்பிக்கு அழைத்து, “அவரு பேசறது ரொம்ப குழறலா இருக்கு.  என்ன சொல்றாரு, ஏது சொல்றாருன்னு ஒன்னுமே புரிய மாட்டிங்குது. 

இதுவரை நீதான அவருகூட இருந்த.  அதனால நீ வந்து அவருகிட்டப் பேசினா, அவரு என்ன பேசுறாருங்கறது உனக்கு மட்டுமாது புரியும்னு நினைக்கிறேன்.  அதனால, எவ்வளவு சீக்கிரம் இங்க வர முடியுமோ வந்திரு ஜேப்பி” என்று வருந்தி அழைத்ததனால் அங்கு செல்லும் முடிவுக்கு வந்திருந்தான் ஜேப்பி.

          எஸ்ப்பி எதிர்பாரா தருணத்தில் அங்கு வந்த ஜேப்பியை எவ்வாறு எதிர்கொண்டார்?

***

Leave a Reply

error: Content is protected !!