தோளொன்று தேளானது 6
தோளொன்று தேளானது 6
தோளொன்று தேளானது! 6
சுமித்ராவிற்கு, தலை வேதனையாக உணரத் துவங்கியிருந்தாள். வேலைக்குச் செல்லத் துவங்கியது முதல், ஒரு நாள்கூட இப்படி எந்தப் பணியுமின்றி, யாருடனுடம் பேசாமல், தனிமையில் இப்படி ஒரு நிலையில் இருந்ததில்லை.
இங்கு அவளுக்கு நேரத்திற்கு உணவும், நல்ல கவனிப்பும் இருந்தாலும், அங்கு தங்கியிருக்கப் பிடிக்கவில்லை சுமிக்கு.
கண்விழித்த இரண்டாவது நாளில் அவளுக்கு என முதல்தளத்தில் ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் செல்லுமாறு, தேவியின் வாயிலாக செய்தி பரிமாறப்பட்டது. சுமி எவ்வளவோ மறுத்தும் அங்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டிருந்தாள்.
அனைத்து வசதிகளும் அவளின் அறைக்குள் செய்யப்பட்டிருந்தது. அவளுக்கான உடைகளும் நேர்த்தியாக, அவளின் உடல்வாகிற்கு ஏற்றாற்போல, கச்சிதமான அளவுகளில், அவளுக்காகவே தைக்கப்பட்டாற்போலிருந்ததைக் கண்டவளுக்கு மனதில் பீதியாக உணர்ந்தாள்.
‘யாரு இப்டியெல்லாம் பண்றது. எதுக்காக இந்த மாதிரியெல்லாம் பண்றாங்கன்னு ஒன்னுமே புரியலையே’ என மனதிற்குள் புலம்பித் தவித்தாள் சுமி.
தேவியின் பேச்சைக் கேட்டு, ஆரம்பத்தில் சுமி புதிய அறைக்குச் செல்ல மறுக்க, தேவியோ, “அய்யா அங்கதான் உங்களை தங்க வைக்கச் சொல்லி சொல்லிருக்காங்க. இங்க உங்களுக்கு அத்தனை வசதியா இருக்காதாம். அதுதான் உங்க ரூம்னு அங்க தங்கிக்கச் சொல்லிட்டாங்க. அதனால, இனி நீங்க அங்கேயே இருந்துக்கலாம்” என்று விசயத்தினைக் கூற,
நீண்ட நாழிகைக்குப்பின் ஒருவழியாக தேவி கூற வந்ததை பாதி சரியாகவும், மீதி தவறாகவும் புரிந்து கொண்ட சுமித்ரா, “யாரு உங்க அய்யா, எதுக்கு என்னை இங்க அடச்சு வைக்கணும். அந்த அய்யாகிட்ட நான் பேசணும். உடனே அதுக்கு ஏற்பாடு பண்ணு. என்னால எங்கேயும் போக முடியாது” விடாப்பிடியாக அவளிடம் மறுத்துப் பேசினாள்.
“சாரிக்கா. அவராதான் கூப்பிட்டு எங்கட்ட பேசுவாரு. நாங்க இதுவரை அவருக்கு பேசினதில்லை. அடுத்த முறை பேசினா, கட்டாயமா நீங்க சொன்னதைச் சொல்றேன்” தேவி கூறியும் சுமி விடவில்லை.
“அடுத்து எப்பப் பேசுவாறு. வேற யாருக்குமே அவரோட காண்டாக்ட் நம்பர் தெரியாதா? உன் போனைக் குடு. நான் அதுல இருந்து உன்னோட காண்டாக்ட் பாத்து எல்லாத்துக்கும் ட்ரை பண்ணிப் பாக்கறேன்” பிடிவாதமாகக் கேட்க,
“அக்கா நீங்களா போயிட்டா உங்களுக்கு நல்லது. நீங்க மறுத்தா, வலுக்கட்டாயமா கொண்டுபோயி அங்க உங்களைத் தங்க வைக்கச் சொல்லி, இங்க வேலைக்கு இருக்கற அண்ணங்ககிட்டயும் சொன்னதா சொல்லிக்கிட்டாங்க” என்றதுமே, அதற்குமேல் ஒரு வார்த்தை பேசாமல் மாடிக்கு விரைந்திருந்தாள் சுமி.
அவளின் அறை என தேவி காட்டியதைக் கண்டவளுக்கு, தலைசுற்றியது. அத்தனை வசதிகள். படத்திலும், சில விளம்பரங்களில் மட்டுமே பார்த்திருந்தாற்போல அந்த அறை அத்தனை பிரமாண்டமாக இருந்தது.
அங்கிருந்த வார்ட்ரோப்களைத் திறந்தவளுக்கு, அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சேலைகள் மற்றும் அதனைச் சார்ந்த ஆடைகள், சுரிதார், மேக்ஸி, லெஹங்கா, பட்டியாலா, குர்தி இப்படி நீண்டது. சில ஆடைகள் எந்த வகையைச் சேர்ந்தது என சுமித்ராவிற்கு விளங்கவில்லை.
அதிசயிக்கத் தோன்றவில்லை. ஆடம்பரத்தைப் பார்த்து மனதோடு, உடலும் ஆடியது பயத்தால்.
அன்றைய தினம் முழுமைக்கும் அதிக மன பாதிப்பிலிருந்து மீள முடியாமல் உணவைத் தவிர்த்தாள் சுமி. அடுத்தடுத்த வேளைகளிலும் உணவைத் தவிர்த்தவளை தேவி கெஞ்சினாள். ஆனால், உண்ணாவிரதம்போல இருந்தாள் சுமி.
அதற்குமேல் அவளால் சமாளிக்க இயலாமல் தடுமாற, அனைத்தையும் தனது சிசிடிவி மூலம் பேசியின் வழியே பார்த்துக் கொண்டிருந்த ஜேப்பியே சண்டிகா தேவிக்கு அழைத்திருந்தான்.
முதலாளியின் எதிர்பாரா அழைப்பில் பதறியவள், பவ்வியமாக எடுத்துப் பேச, “உன் போனை சுமிக்கிட்ட குடு” எனும் அதிகாரக் குரலில், எதிரில் நின்றவளிடம் பவ்வியமாக நீட்டினாள் தேவி.
எதுவும் புரியாமல் பேசியை நீட்டியளைப் பார்த்த சுமி, “என்ன?” என்றிட,
“அய்யா உங்ககிட்ட பேசணுமாம்” என்றதும், தேவியின் கையில் இருந்த பழைய நோக்கியா போனை கையில் வாங்கியவள், “ஹலோ” என்றாள்.
“மேடம் நல்லாயிருக்கீங்களா?” எனும் ஜேப்பியின் குரலைக் கேட்டதுமே, சட்டென மூளையில் மின்னல்வெட்ட,
‘இது.. என்.. ஜேப்பி மாதிரி’ என உள்ளம் குதூகலிக்க, “நீ.. நீ ஜேப்பியா” என பரிதவிப்போடும், ‘அவனா? அவன் எதற்காக தன்னை இப்படிக் கொண்டு வந்து, தனியாக யாருமறியாமல் இது போன்ற ஒரு இடத்தில் தங்க வைக்க வேண்டும்’ எனும் கேள்வியோடு பேசத் துவங்கினாள் சுமித்ரா.
“வெல்!” எனும் பாராட்டுதலோடு துவங்கியவன், “எஸ்… ஜேஜே.. ஜேப்பிதான்! எப்டி இத்தனை வருசத்துக்குப் பின்னயும் என் வாய்சை டக்குனு கண்டுபிடிச்ச சுமீ!” பரவசத்தோடு பேசினான் ஜேப்பி.
“எதுக்கு இப்டி பண்ணே ஜேப்பி. உன்னை இந்தளவுக்கு நான் யோசிச்சதே இல்லை. ஏன் இப்டி?” நம்பமுடியாமலும், மனதோடு கருகிப்போன காதல், ஜேப்பியின் வார்த்தையில் துளிர்ப்பதை உணர்ந்தாலும், அவனது செயலில் வெம்பிய மனதோடு கேட்டாள் சுமி.
“எல்லாம் நேருல வந்து பேசுறேன் சுமி. இன்னும் ட்டூ டேஸ் வெயிட் பண்ணு” கெஞ்சுதலோடு, கொஞ்சலாய் ஜேப்பி.
“எனக்கு முதல்ல ஷ்யாமைப் பாக்கணும். அவனை என்ன பண்ண?” பதற்றத்தோடு கேட்டாள் சுமி.
“அவனுக்கென்ன? அவன் நல்லாத்தான் இருப்பான்” அசட்டையாகக் கூறினான் ஜேப்பி.
“எனக்கு அவனைப் பாக்கணும். அவனை எங்க வச்சிருக்க?” சுமிக்கு ஜேப்பியா இதுபோல நடந்துகொள்கிறான் என நம்பமுடியாத நிலையில், வார்த்தைகள் தடுமாறினாலும், தான் விரும்பியதைக் கேட்டாள்.
“உனக்கு குழந்தை வேணும்னா, நீ என்ன செய்திருக்கணும் சுமி?” அந்நேரத்தில், சுமியின் மனநிலை புரியாமல் ஜேப்பி கேள்வி எழுப்ப,
“என்னோட பர்சனல்ல தேவையில்லாம தலையிடாத ஜேப்பி” கத்தறித்துப் பேசினாள் சுமி.
“எது உன்னோட பர்சனல்?” எனும் ஜேப்பியின் வார்த்தையைக் கேட்டு, சுமியும் கோபமாகப் பேசத் துவங்கினாள்.
“ஜேப்பி, தேவையில்லாம என்னோட விசயத்துல ஓவர் அட்வாண்டேஜ் எடுத்துட்டுருக்க. இது கம்ப்ளைண்ட் ஆனா, உன்னோட நிலைமை என்னாகும் தெரியுமா?” ஜேப்பியின் உண்மையான சுயரூபம் தெரியாமல் சுமித்ரா, தானறிந்த ஜேப்பியினை நினைத்துப் பேசினாள்.
அப்படி ஒரு அட்டகாசமான சிரிப்பு சிரித்தான் ஜேப்பி. அவனது சிரிப்பைக் கேட்டதில், அடிவயிற்றில் அமிலம் சுரந்தது சுமிக்கு. ‘இவன் ஏன் இப்டி சிரிக்கறான்?’
“நல்லா போயி கம்ப்ளைண்ட் பண்ணு சுமி. யாருகிட்ட பண்ணப்போறன்னு சொல்லேன். நானே உன்னை கூட்டிட்டுப் போறேன்” மீண்டும் அதே சிரிப்பைத் தொடர்ந்தான் ஜேப்பி.
“என்ன ஜேப்பி. ரொம்பத்தான் பயமுறுத்தற.” பயத்தைக் காட்டிக் கொள்ளாமல் பேசினாள் சுமி.
“உன்னைப் பயமுறுத்த முடியுமா சுமி. நாந்தான் இப்ப உன்னைப் பாத்துப் பயந்து போயிருக்கேன்” கேலியாகக் கூறினான் ஜேப்பி.
“என்னை விட்டுரு ஜேப்பி. நானும், என் குடும்பமுமா எங்காவது போயி வாழ்ந்துக்கறோம்” சுமி ஜேப்பியின் பேச்சைக் கேட்டு அவனிடமிருந்து எப்படியாவது தப்பிக்க எண்ணித் தளைந்து பேசினாள்.
“எதே!” என்று கேலியாகக் கேட்டவன், மீண்டும் நகைத்திட,
“எதுக்கு இப்ப இந்த சிரிப்பு?” கோபமாக சுமியும் கேட்க,
“சுமி, இப்ப நீ ரொம்பப் பொய், பொய்யாப் பேசுறியே ஏன்?” ஜேப்பி
“நான் என்ன பொய்யைச் சொன்னேன். அதுவும் உங்கிட்ட!” புரியாமல்தான் கேட்டாள் சுமி.
“இல்ல… எனக்குப் பிறக்காத மகனுக்கு ஷ்யாமள பிரகாஷ்னு பேரு வச்சியே. அத்தோட அப்பன் பேரு ப்ருத்வினு குடுக்காம, என் பேரை ஏன் குடுத்த?
சரி! அம்மா பேருல எதுக்கு உன் பேரு குடுத்திருக்க?
அதையும் விடு. வேலை உனக்கு ஈரோட்டுல. குடும்பம் கோயம்புத்தூர்ல. அவன்.. அதான் அந்தப் ப்ருதிவி சேலத்துல வேலை பாக்கறான். கேட்டாக்கா, நீங்க ஒரு குடும்பம்னு சொல்லுவ. அதான்…” என மீண்டும் நகைத்தான் ஜேப்பி.
தன்னைப் பற்றிய விவரங்களை அவனுக்கு தெரியப்படுத்திடாமல் இருக்க எண்ணியே, சுமி இப்படி யோசித்து செயல்பட்டிருந்தாள். ஆனால், இது எப்படி இவனுக்குத் தெரிய வந்தது என்று ஒன்றும் புரியாமல், “அப்டிலாம் கிடையாது. ஷ்யாமுக்கு நாந்தான் அம்மா, ப்ருத்விதான் அப்பா. இப்ப அவனை எங்க வச்சிருந்தாலும் எங்கிட்ட கொண்டு வந்து விட்டுரு.” சுமி வாதிட,
“எல்லா ஃப்ரூஃப்பும் பக்காவா எங்கிட்ட இருக்கு சுமி. இனி நான், நீ, இனி நமக்கு வரப்போற குழந்தைகள்னு இப்ப நீ தங்கியிருக்கற இடத்திலேயே இனி வாழப் பழகிக்கோ.” என்றவன்,
“நம்மோட மேரேஜ்கு இன்னும் ஃபோர் டேஸ் இருக்கு. எதையும் போட்டுத் தேவையில்லாம யோசிக்காத. நேரத்துக்கு சாப்பிட்டு பீஸ்ஃபுல்லா ரெஸ்ட் எடு. ஆஃப்டர் மேரேஜ் நிறைய வேலையிருக்கும் நமக்கு” நமுட்டுச் சிரிப்பு சிரித்தவன்,
“யாரோடய குழந்தையவோ தத்து எடுத்து, அதுக்கு அம்மா நீயி, அப்பா நான்னு பொய்யான வாழ்க்கையெல்லாம் இனி நீ வாழத் தேவையில்ல. உன்னோட ஆசைப்படி, நம்ம ரெண்டு பேரோட சுய முயற்சியில, இன்னும் பத்து மாசத்துல நமக்குன்னு ஒரு குழந்தை. இன்னும் எத்தனை வேணுமோ அத்தனை பெத்துக்கலாம். அதனால அந்தப் பையன் நமக்கு வேணாம் சுமீ” தீர்மானமாகக் கூறியவனை இடைவெட்டியவள்,
“எனக்கு ஷ்யாம் வேணும். அவனைப் பாக்காம என்னால இருக்க முடியாது. அவனை எங்க வச்சிருந்தாலும் எங்கிட்டக் கொண்டு வந்து குடுத்துரு ஜேப்பி. ப்ளீஸ்” சுமி கெஞ்சுவதைப் பொருட்படுத்தாதவன்,
“பை டியர். ஒழுங்கா சாப்பிடு. ரொம்பப் பண்ணா, அப்புறம் உனக்குத்தான் கஷ்டம். நேருல பாக்கலாம்” வைத்துவிட்டான்.
***
இரவில் விழித்திருந்து யாருமறியாமல் இங்கிருந்து கிளம்பிவிடலாம் என்றெண்ணி இரண்டு முறை வெளியில் சென்ற சுமித்ராவிற்கு அதிர்ச்சியே காத்திருந்தது.
அந்நேரத்திலும் பகலைப் போலவே காவலுக்கு ஆள்களை நியமித்திருக்க, அவர்களின் உருவத்தையும், பார்வையையும் பார்த்துப் பயந்து உள்ளே வந்துவிட்டாள்.
தேவியும் இல்லை. யாருமற்ற நிலையில் தானொருத்தி மட்டும் அங்கிருப்பதே சுமிக்கு, மனஅழுத்தத்தைத் தந்தது.
அதற்குமேலும் அங்கிருந்து கிளம்புவது முயற்கொம்பு என்பதை உணர்ந்தவள், பட்டினி கிடந்து தனது மறுப்பைத் தெரிவித்தாள்.
இரண்டு நாள்களில் மிகவும் தொய்வடைந்த உடல்நிலையோடு இருந்தவளுக்கு, மூன்றாம் நாள் ட்ரிப்ஸ் ஏற்றுமளவிற்கு மயங்கியிருந்தாள்.
மயக்கம் தெளிந்தாலும், ஷ்யாம் ஜபம் மட்டும் ஒலித்தது. ஆனால் கண்ணைத் திறக்கவே இல்லை.
ஜேப்பி வந்தது முதலே கண்டது, மயங்கிய நிலையிலிருந்த சுமித்ராவைத்தான். அவனும் அருகே இருந்து பார்த்து, எத்தனையோ மருத்துவர்களை நகரிலிருந்து அழைத்து வந்து காட்டினாலும், சுமியின் உடல்நிலையில் முன்னேற்றமில்லாமல் இருந்தது.
ஷ்யாம், ஷ்யாம் எனும் முணுமுணுப்போடு கண்ணைத் திறவாமலேயே இருந்தவளைக் கண்ட மருத்துவர், “அவங்க ஷ்யாம் அப்டினு கேக்கறவங்களை கொண்டு வந்து நேருல காட்டுங்க. அப்பத்தான் அவங்க கண்ணு முழிப்பாங்க” என்றிட
வேறு வழியில்லாமல் சாந்தனுக்கு அழைத்தவன், “அந்த வாண்டை மட்டும் நான் சொல்ற இடத்துக்கு அனுப்பி வையி” எனக் கட்டளையிட, அடுத்து வந்த பத்து மணி நேரத்திற்குப்பின் அங்கு வந்திருந்தான் ஷ்யாம்.
ஜேப்பிக்கு, தனது மனம் கவர்ந்தவளின் நிலை, மிகுந்த கவலையைத் தந்திருக்க, வேறு எதையும் யோசிக்காமல், தான் இதுவரை பார்த்திராத ஷ்யாம் எனும் சிறுவனது வருகைக்காகக் காத்திருந்தவன், அழுது வடிந்த முகத்தோடு அம்மாவைத் தேடும் பாலகனைத்தான் எதிர்பார்த்திருந்தான்.
ஆனால் கண்டதோ, அழுக்குப்படாத உடையோடு வண்டியில் இருந்து இறங்க உதவியவனின் கையைத் தட்டிவிட்டபடி, தானே சுயமாக இறங்கிய ஷ்யாமைத்தான்.
அதனைக் கவனித்த ஜேப்பிக்கு ஏதோ வித்தியாசம் பிடிபட, பெரியதாக எண்ணாமல், “அவனைக் கூட்டிட்டுபோயி சுமீக்கிட்ட காட்டு தேவி” என்றிட, தேவியும் அதேபோல சிறுவனை நெருங்க, “மீ எங்க?” எனும் தெளிவான குரலில் அவளை நிறுத்தினான்.
“நான் உன்னைத் தூக்கிட்டுப் போறேன்” என தேவி தெலுங்கில் உரைக்க,
“என்ன பேசுத? நீ பேசுதது எனக்கு புதியலை” என தூக்க வந்தவளை மறுத்துவிட்டு, “எங்க மீ இருக்கானு சொன்னா, நானே போயிப் பாத்துப்பேன்” என்றவனது தமிழ் புரியாமல் தேவி விழிக்க,
இருவரின் சம்பாசனைகளைக் கேட்டுக் கொண்டிருந்த ஜேப்பி, ஷ்யாமின் தெளிவான மழலைப் பேச்சினைக் கண்டு, “ஃபர்ஸ்ட் புளோர்ல, லெப்ட்ல செகண்ட் ரூம்ல சுமி இருக்கா” என்றதுமே, ஜேப்பியின் குரலைக் கேட்டு அவனை ஆழ்ந்து பார்த்தவன், “நீங்க யாது?” எனும் கேள்வியை, ஜேப்பியிடம் முன்வைத்திருந்தான்.
“நான் யாருன்னு சொன்னா, உனக்குத் தெரியுமா?” எனும் ஜேப்பியின் கேள்வியில் அவனது அருகே சென்ற ஷ்யாம்,
“இப்பவே தெதியத்தான செய்தீங்க” என குறும்பாகக் கூறிச் சிரித்தவன், “யாதுன்னு சொன்னா உங்க பேது தெதுஞ்சுபேன்” சற்றும் மிரளாமல் தன்னிடம் பேசியவனைக் கண்ட ஜேப்பிக்கு ஏதோ நெருடல்.
“நான் ஜெயபிரகாஷ். எல்லாரும் ஜேப்பினு சொல்வாங்க” என தனது வீரபிராதாபத்தை, தனது கட்டுப்பாட்டையும் மீறி சிறுவனிடம் கூற,
ஷ்யாம் என்ன கூறினான்?
***