நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…19

மனமெங்கும் விரவிய குற்ற உணர்ச்சியும் இடைவிடாத அலைச்சலும் சேர்ந்து ஆனந்தனின் உடலோடு உள்ளத்தினையும் சோர்வைடையச் செய்திருந்தது. இப்பொழுது தனது தரப்பினை சொல்லிப் பேசுவதற்கோ வார்த்தையாடுவதற்கோ ஜீவனில் சக்தியற்றுப் அலுத்துப் போயிருந்தான்.

தம்பியிடம் கடுமை காட்டிய தேஜஸ்வினியின் அதிரடியில் விருட்டென்று நகுலேஷையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான் ஆனந்தன்.

அந்த சமயம் அங்கு வந்து கொண்டிருந்த ஆதியும், “என்னடா கிளம்பியாச்சா? விவரம் எல்லாம் தேஜுகிட்ட சொல்லிட்டியா?” எனக் கேட்க, பெருமூச்செறிந்து நின்றார்கள் இருவரும்.

“என்னடா… யாரவது பதில் சொல்லுங்க!” எனக் கேட்டவனாக அறைக்குள் திரும்பிப் பார்த்தான்.

மனைவி நின்ற கோலத்திலேயே அவளின் கோபத்தை அறிந்து கொண்டு, “ஏதாவது திட்டினாளா?” மெதுவாக கேட்க,

“இல்ல, அடிச்சுட்டா… நல்லா பலமா!” கன்னத்தை காட்டி சிறுவனாக புகார் கூறினான் நகுலேஷ்.

“ச்சோ… இவளோட முடியலடா!” சலிப்போடு அறைக்குள் வந்தவன்,

“பைத்தியமாடி உனக்கு? இப்ப எதுக்காக தம்பிய அடிச்சே?” உறவுமுறையுடன் அழுத்திக் கேட்டு மனைவியை முறைத்தான் ஆதித்யன்.

உள்ளுக்குள் எரிமைலையாக குமறிக் கொண்டிருந்தவளுக்கு கணவனது உரிமைப் பேச்சு இன்னும் கொதிப்பை தூண்டிவிட, “நான், என் தம்பியத் தானே அடிச்சேன்! அதுக்கு கூட உங்கட்ட பெர்மிசன் கேக்கணுமா?” வீம்புச் சண்டைக்கு நின்றாள் தேஜஸ்வினி.

இவளது கோபம் ஒட்டு மொத்தக் குடும்பத்தையே ஆட்டி வைத்து தவிக்க விட்டுத்தான் அடங்கும் என்பதை புரிந்து கொண்ட ஆனந்தன்,

“பதிலுக்கு பதில் நீயும் பேசாதே ஆதி! இங்கே இருந்து பார்த்துக்கோ… ஹெல்ப் வேணும்னா சொல்லு, இப்ப நான் கிளம்புறேன்!” என்றவன் வம்படியாக நகுலேஷை இழுத்துக் கொண்டு புறப்பட்டான்.

கார் பார்க்கிங் வரையில் அவனுடன் வந்த நகுலேஷ், காரில் ஏறாமல், “நான் இங்கே அக்கா கூடவே இருக்கேன் மாமா… நீங்க புறப்படுங்க” மெதுவாகக் கூற, அலுப்புடன் முகம் திருப்பிக் கொண்டான் ஆனந்தன்.

“நீ இங்கே இருந்தா, உன்னை திட்டித் திட்டியே சாகடிச்சுடுவாடா உன் அக்கா!”

“பரவால்ல மாமா… ஆனா, இந்த நேரத்துல அவங்களை தனியா விட்டுட்டு வர்றது அவ்வளவு நல்லதில்லை. பாவம் அவங்க…”

“அதான், உங்கப்பா வரேன்னு சொல்லியிருக்காரே நகுல்!”

“அவர் வந்தா பொண்ணுங்கள பார்த்து அழறதுக்கே அவருக்கு சரியா இருக்கும். இந்த நேரத்துல நான் இங்கே இருந்தே ஆகணும் மாமா… திட்டோ, அடியோ எங்க அக்காதானே! நான் வாங்கி வச்சு, சேர்த்து திருப்பி கொடுத்துடுவேன். நீங்க கிளம்புங்க!” தன்னை சமாதானப்படுத்தி கிளப்பி விட்டவனை ஆச்சரியத்துடன் பார்த்தான்.

உடன்பிறப்பின் பாசத்தை இதுவரை உணர்வுப்பூர்வமாய் உணர்ந்ததில்லை இவன். ஆதியிடம் கூட தன்னுடன் வளர்ந்தவன் என்ற இரக்கத்துடன் மட்டுமே நடந்து கொள்வானே தவிர, தன்னையும் மீறி அவனுக்காக ஒருபோதும் இறங்கி வரமாட்டான் ஆனந்தன்.

அப்படி பாசம், பரிவுடன் செய்யும் ஆதியின் அத்தனை செயல்களையும் கிண்டல் செய்தே நக்கலடிப்பான். “சரியான எமோசனல் இடியட்… சென்டிமென்டல் ஃபூல் டா நீ!” என அவனை ஆயிரம் முறை திட்டியதும் உண்டு.

இப்பொழுது அவனைப் போலவே மற்றுமொரு பாசமலரை பார்த்து அசந்து நின்றான். தன்னை விட வயதில் சிறியவன், சகோதரிகளின் மீதான பாசத்தில் தன்னையே தாழ்த்திக் கொண்டு அவர்களுக்கு துணையாக நிற்கிறான்.

‘இதையெல்லாம் எந்த வகையில் சேர்ப்பது? என்ன மாதிரியான உணர்விது!’ என அவனுக்கு சுத்தமாகப் புரியவில்லை. அதை வாய் விட்டுச் சொல்லவும் செய்தான்.

“சத்தியமா எனக்குப் புரியலடா! அவ்வளவு திட்டும் அடியும் வாங்கி, இவங்க கூட இருக்கணுமா நீ? எக்கேடோ கெட்டுப் போங்கன்னு விட்டுட்டு வா நகுல்!” அவனை வற்புறுத்தி அழைக்க, வரமறுத்து விட்டான் சிறியவன்.

“எனக்கு அப்படி வரத் தெரியாது மாமா… என்னால முடியவும் முடியாது. எந்த இடத்திலயும் அக்காக்களுக்கு சப்போர்ட்டா மட்டுமே இருக்கணும்னு எங்கப்பா எப்பவும் சொல்லிட்டே இருப்பாரு… இப்படி அவங்களுக்காக எல்லாமும் விட்டுக் கொடுத்து இருக்கிறதுலயும் தனி ஃபீல் கிடைக்கும். இதெல்லாம் சொன்னாப் புரியாது, அனுபவிக்கணும்!” கண்ணைச் சிமிட்டிக் கூறியவன்,

“நீங்க போயி ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க… அதுக்குள்ள எல்லாரையும் நைஸ் பண்ணி வைக்கிறேன்!” சிரித்த முகமாக வழியனுப்ப, பதில் புன்னகையை பரிசளித்து விட்டுக் கிளம்பினான் ஆனந்தன்.

இங்கு அறையில் மனைவியின் கேள்விக்கு எதிர் கேள்வி கேட்காமல் மௌனம் காத்துக் கொண்டிருந்தான் ஆதித்யன். அவனுக்கு இன்னும் தன் தம்பியை, அவன் இவன் என்று தேஜூ ஒருமையில் பேசி அவமதித்தது தெரியாது.

‘தெரிந்தால், இவனுமே மலையேறி முறுக்கிக் கொண்டு நிற்பானோ?’ கணவனைப் பார்க்கும்போது நினைத்தவளுக்கு, தான் பேசியதும் அதிகப்படி தானோ எனத் தோன்றியது.

இனிமேல் ஆனந்தனை ஒருமையில் பேசுவதை தவிர்க்க வேண்டுமென்று மனதிற்குள் அந்த நேரமே முடிவெடுத்தும் கொண்டாள்.

நகுலேஷையும் தனது தம்பியாக நினைத்தே ஆதி கேள்வி கேட்க, அதை வேறு அர்த்தத்தில் எடுத்துக் கொண்டு தப்பிதமாகவே பதில் அளித்து விட்டாள் தேஜஸ்வினி.

‘இதுவும் தனது அவசரபுத்தியில் சேர்த்தி தானே!’ என எண்ணி உள்ளுக்குள் நொந்து போனவளாய் அமைதியாக கணவனின் முன்பு பேசா மடந்தையாக நின்று கொண்டிருந்தாள்.

வேர்க்க விறுவிறுக்க வந்து நின்ற நகுல், “என்னக்கா… இன்னும் அப்படியேதான் நிக்கறியா? டாக்டர்ஸ் ரிப்போர்ட் எடுத்து பார்க்கலையா நீ!” விசாரித்தவனாக சகஜமாய் பேசத் தொடங்க, இவளுக்குதான் மிகுந்த சங்கடமாகிப் போனது.

“நீ, என் தம்பியா, இல்ல அவ தம்பியாங்கிற குழப்பத்துல இப்ப உங்க அக்கா, நின்னுட்டு இருக்கா… நீ வாடா… நாம டாக்டரை போயி பார்த்துட்டு வரலாம்!” என்றவனாக ஆதி, அவனை அழைத்துக் கொண்டு வெளியில் வந்து விட்டான்.

தேஜுவின் மனதிற்குள் பெருங்குழப்பம். இத்தனை நாள் தங்கைக்காக அனைவரையும் எதிரியாகவே பார்த்தாள். இன்று சொந்தத் தம்பியையும் அவர்களில் ஒருவனாகவே பாவித்து கையை ஓங்கி விட்டாள்.

‘நான் ஆறறிவு உள்ள மனுஷி தானா? அல்லது சுயபுத்தி இல்லாத ஜடமா!’ தன்னைத்தானே கடிந்து கொண்டு கலக்கத்துடன் அமர்ந்து விட்டாள். என்றுமில்லாத சோர்வும் அவஸ்தையும் அவளுக்குள் முளை விட்ட உணர்வு!

அதன் பிறகு ராஜசேகர் வந்து தன் பங்கிற்கு அழுகையில் கரைய, அவரை சமாதானப்படுத்தி ஒய்ந்தபோது தேஜஸ்வினியோடு நகுலும் சேர்ந்து சோர்ந்து போனான்.

“நீயும் அப்பாவும் சேர்ந்து வீட்டுக்கு போங்க… நான் இங்கே இருக்கேன் க்கா!” தானாக முன்வந்து சொன்ன தம்பியிடம்,

“இல்லடா… நீயும் நானும் இருப்போம். அப்பாவை வீட்டுக்கு அனுப்பிடலாம்!” முடிவாகக் கூறியவள்,

“இங்கே என்கூட இருப்ப தானே?” சந்தேகமாகவே கேட்டாள். தமக்கையின் பேச்சு தம்பிக்கு மிக நன்றாகவே புரிந்தது.

“அக்கா… நான் மாமா கூட இருக்கிறதை ஏன் இத்தனை எரிச்சலா பாக்கிற? நம்ம அக்காவுக்காகத் தானே அவங்க இவ்வளவு தூரம் கஷ்டப்படுறாங்க…” என்றவனை குழப்பத்துடன் பார்த்தாள் தேஜஸ்வினி.

“ம்ஹூம்… நீ ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கேன்னு உன் முகமே காட்டிக் கொடுக்குது. இனி பயமில்லாம இரு, எல்லா பிரச்சனையும் சீக்கிரமா முடிவுக்கு வந்திடும்!” அனுபவத்தில் முதிர்ந்தவனாக பேசிய தம்பியை இமைக்காமல் பார்த்தாள்.

“இப்படி எல்லாம் அனுசரணையா உனக்கு பேசத் தெரியுமாடா?” தேஜு நம்பமுடியாமல் கேட்க, இலகுவாய் தோள்களை குலுக்கிக் கொண்டே,

“யாருக்கு தெரியும்? ஆதி மாமாதான், உங்க அக்கா என்ன கோபப்பட்டாலும் நீ பொறுமையா அவளுக்கு புரியுற மாதிரி பதில் சொல்லுன்னு சொல்லி இருக்காரு! நிறைய வேலைகள் நடந்திருக்கு க்கா! அதெல்லாம் உனக்கு சொன்னாப் புரியாது.

தானா தெரிய வரும்போது நீயும் தெரிஞ்சுக்கோ! அதுவரைக்கும் உன் கோபத்தை மட்டும் கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணிக்கோ… ப்ளீஸ்!” என மீண்டும் பேச்சை தொடரப் போக, இடையிட்டாள் தேஜு.

“போதும்டா… உன் அட்வைஸ் மழையை நிப்பாட்டு! மச்சானை கையில போட்டுட்டு உன் ரெண்டு மாமாவையும் ரொம்ப ஆட வேணாம்னு சொல்லி வை! விஷயம் இதுதான்னு என்கிட்டே சொல்ல மாட்டாராம்… உன்கிட்ட பேசி எனக்கு புரிய வைக்கச் சொல்வாராமா உங்க மாமா?” கோபத்தில் முறுக்கிக் கொள்ள,

“ஐயோ… திரும்பவுமா? முடியலக்கா, முடியல… முடியல!” மனுவைப் போல இவன் பேசிவிட, அந்த பாவனையில் சிரித்து விட்டாள்.

“தம்பியும் பாவம் டா பாப்பா… மாப்பிள்ளைங்க ரெண்டு பேர் சொல்றதையும் தப்பாம கேட்டு, உங்களையும் பார்த்துட்டு ரொம்பவே தளர்ந்து போயி அல்லாடுறான்!” ராஜசேகரும் மகனின் சார்பாக பேசி மகளைச் சமாதானப்படுத்தினார்.

“என் தம்பி இதுக்கெல்லாம் அசரமாட்டான் ப்பா! இவன் எப்படின்னு எனக்கா தெரியாது?” பெருமையாக கூறிய தேஜு,

“சோ சாரிடா… யார் மேலயோ இருந்த கோபத்துல உன்னை அடிச்சுட்டேன். ரொம்ப வலிக்குதா?” வாஞ்சையுடன் தம்பியின் கன்னத்தை தடவி விட்டாள்.

“சில் தேஜுக்கா… நமக்குள்ள ஏன் இத்தனை பார்மாலிடீஸ் கொண்டு வர்ற? அவ்வளவு வலியில்ல… ஆனா, இனிமே இப்படி அடிக்காதே! எதுவா இருந்தாலும் தனியா கூப்பிட்டு பெண்டை நிமிர்த்து… ஐ வில் மேனேஜ்!” மனம் திறந்த பேச்சில் தேஜுவும் வாய்விட்டு சிரிக்க, அந்த நேரத்தில் கண் முழித்த மனஷ்வினியும் அவர்களுடன் இணைந்து கொண்டாள்.

“ஹாய் குட்டிக்கா… என்னைத் தெரியுதா? உங்க ரெண்டு பேர்கிட்டயும் நல்லா வாங்கி கட்டிட்டு நிக்கிற இந்த அப்பாவியை ஞாபகம் இருக்கா?” கண் சிமிட்டிக் கேட்டவனுக்கு செல்லக் கொட்டு ஒன்றினை பரிசளித்தாள் தேஜு.

“நீ எதுக்குடா இங்கே வந்தே? உன்னையும் கட்டிப் போட்டாங்களா? அக்கா உன்னையுமா!” கண்களை முழுதாக திறக்கவும் சிரமப்பட்ட மனு, அதே குழறலான மொழியில் உளறிக் கொட்டினாள்.

அவளின் சிரமத்தையும் தடுமாற்றத்தையும் கண்ட தேஜு, கட்டிலில் அமர்ந்து, தங்கையின் தலையை தனது மடியில் தாங்கிக் கொண்டாள்.

“ரிலாக்ஸ் மனுகுட்டி… நீ இப்ப எங்ககிட்ட வந்துட்ட டா… உன்னை யாரும் அடைச்சு வைக்க மாட்டாங்க… நல்லா நிம்மதியா தூங்கி ரெஸ்ட் எடு! என்ன வேணுமோ கேளு… தம்பியும் ஆனந்தனும் சேர்ந்து உன்னை ஷேஃப்-பா கூட்டிட்டு வந்துட்டாங்க!” கனிவுடன் கூறியபடி தலையை தடவிவிட, அந்த ஆறுதலில் தன்னால் கண்ணயர்ந்தாள் மனஷ்வினி.

அதற்கடுத்த மூன்று நாட்கள் மிக அமைதியாகவே கழிந்தது. தேஜு மருத்துவமனையில் நிரந்தரமாக தங்கிக் கொள்ள, நகுல் அவளுக்கு துணையாக வந்தும் சென்று கொண்டும் இருந்தான்.

அருணாச்சலமும் தன் பங்கிற்கு வந்து விசாரித்து சென்ற வண்ணமாய் இருந்தார். அவருடைய ஆசைப்பேத்தி வாடி வதங்கிப் போயிருப்பதை பார்த்து கண்ணீர் வடிக்கும் போதெல்லாம் ராஜசேகரும் கண்கலங்கி விடுவார்.

இந்த இடைவெளியில் ராஜசேகர், சுலோச்சனாவை பிறந்த வீட்டில் விட்டுவிட்டு, ‘இனி உன் உறவே வேண்டாம்!’ என்றும் தலை முழுகிவிட்டு வந்திருந்தார்.

மகள்களின் மீதுள்ள பாசத்தில் ஒரு சதவீதம் கூட மனைவியிடத்தில் இல்லை என்கிற பொறாமையில் சுலோச்சனாவின் அண்ணனும் ராஜசேகரை பேசி விரட்டி அடித்திருந்தார்.

இவற்றை எல்லாம் வாய்மொழியாக சொல்லிவிட்டு “இனி அவளுக்கும் நமக்கும் எந்தவித உறவுமில்லை!” ராஜசேகர் முடிவாகக் கூறும்போது, அவரின் பிள்ளைகள் மூவரும் அமைதியாக கேட்டுக் கொண்டனர்.

என்ன முடிவெடுப்பது, எப்படி இருப்பது என்றே புரிபடாத இப்போதுள்ள சூழ்நிலையில் தனியாக இந்தப் பிரச்சனையும் சேர்த்து இழுத்து வைத்துக் கொள்ள யாருக்கும் விருப்பமில்லை.

அதோடு கொஞ்சம் கொஞ்சமாக சகஜநிலைக்கு திரும்பும் மனஷ்வினியை கவனிப்பதை மட்டுமே முக்கியமாகக் கருதி செயல்பட்டவர்களுக்கு வேறு எதைப் பற்றியும் சிந்தனை இல்லை.

தினமும் ஆனந்தன் வருவான். நகுலிடம் மருத்துவர் கூறும் விவரங்களைக் கேட்டுக் கொள்வான். மனைவி உறங்கி இருந்தாலும் சரி, விழித்திருந்தாலும் சரி பார்வையில் அவளது கை காயத்தையும் பாதத்தின் தீப்புண்ணையும் கண்களால் ஆராய்ந்து விட்டு பத்து நிமிடம் அங்கும் இங்கும் நடந்தவாறு சென்று விடுவான்.

தேஜு, அவனை வா என்றும் அழைப்பதில்லை, எந்தவொரு விவரத்தையும் பகிர்ந்து கொள்வதில்லை. அவனும் அவளுடன் எந்தப் பேச்சினையும் வைத்துக் கொள்ளாமல் தன்போக்கில் வந்தும் சென்றும் கொண்டிருந்தான்.

அதுவே பெரியவளுக்கு கடுப்பைக் கிளப்பியது. இதன் காரணமே சமயத்தில் ஆதி வரும் போதும் பாராமுகமாக நடந்து கொண்டாள். அவனது செயல்களும் மனைவியை ஒத்தே அமைந்தன.

“புருஷன்ங்கிற கடமையை கண்ணும் கருத்துமா செய்யுறார் போல… கோபம் என்மேல தானே? உன்கூட பேசவும் அவருக்கு கசந்து போகுதா?” தங்கையிடம் ஆனந்தனைப் பற்றிக் கூற, அவளோ அமைதியாக சிரித்தாள்.

“என்னடி? நீயும் மௌனச் சாமியாரிணியா சிரிச்சு வைக்கிற! ஜாடிக்கேத்த மூடியா மாறிட்டு வர்றியோ!” தேஜு கோபத்துடன் கேட்க,

“இல்லக்கா… இவரை இந்தளவுக்கு அமைதியா இப்பதான் பாக்கிறேன். இல்லன்னா எப்பவும் டிஞ்சர் ஊத்தின புண்ணு மாதிரி கடுகடுன்னு எரிச்சலோடதான் பேசிட்டு இருப்பாரு!” மனஷ்வினி எதார்த்தமாக கூறிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்.

இந்தத் தம்பதிகள் பேசிக்கொண்ட அழகு யாருக்கும் தெரியாது. இப்பொழுது அந்த லட்சணத்தை மனு வெளியில் சொல்லிவிட, தேஜுவிற்கு மனம் பாரமாகிப் போனது.

“இப்படி இருக்கிறோம்னு முன்கூட்டியே சொல்லியிருக்கலாமே மனு? நீயும் கொஞ்சநாள் விலகி நின்னு பார்த்திருக்கலாம். ரெண்டு பேருக்கும் மனசு ஒட்டாம, எதையும் ஒழுங்கா பேசி புரிஞ்சுக்காம… இப்ப எங்கே வந்து நிக்குதுன்னு பார்த்தியா!” ஆதங்கத்துடன் பெருமூச்சு விட்டாள் தேஜு.

“இனி எதுவா இருந்தாலும் எங்கிட்ட ஷேர் பண்ணிக்கோ மனுகுட்டி… உன்னை எது எதுக்கோ பலியாடா நிக்க வைக்க, நான் தயாரா இல்ல!” உறுதியாக கூறிய நேரத்தில் அன்றைய முறையாக ஆனந்தன் வந்து நின்றான்.

“நான் ஃபார்மஸி வரைக்கும் போயிட்டு வர்றேன்!” பொதுவாகக் கூறியவள், தங்கையின் காதில், “ஏதாவது பிரச்சனையா பேசினா சொல்லு… இல்லன்னா, நீயும் அவர் போக்குலயே போய் பேசு!” கிசுகிசுத்து விட்டு வெளியே சென்று விட்டாள்.

கிடைத்த தனிமையில் தன்னிடம் பேசுவானா என மனஷ்வினி எதிர்பார்த்திருக்க, ஆனந்தனோ எப்பொழுதும் போல அவளின் மீது பார்வையை சுழல விட்டிருந்தான்.

கைக் காயத்திற்கு கட்டப்பட்டிருந்த கட்டு அன்றுதான் அவிழ்த்து விடப்பட்டிருந்தது. ‘தண்ணி படமா வைச்சிருந்தா, டிரஸ்ஸிங் வேண்டாம்.” நர்ஸ் சொல்லிவிட்டு சென்றிருக்க, சற்றே இலகுவாய் இருக்க வேண்டுமென்று மனுவும் அப்படியே விட்டு விட்டாள்.

இப்பொழுது இவளின் இரண்டு கைகளையே உற்று பார்த்தபடி இருந்தவனின் விழி வீச்சினை தாங்க முடியாமல், கட்டிலில் இருந்தபடியே தனது இரு கைகளையும் கணவனது முகத்திற்கு முன்னே நீட்டி விட்டாள்.

“சிரமப்படாம கண்ணை விரிச்சு வைச்சு பாருங்க!” நக்கலாக இவள் கூற, முகம் சுருக்கினான் ஆனந்தன்.

இவள் கையை கீழிறக்கும் நேரத்தில் சட்டென்று அவளின் கையை இறுக்கப் பற்றிக் கொண்டவன், வேண்டுமென்று மீண்டும் உறுத்துப் பார்க்க, இப்பொழுது முறைக்கத் தொடங்கி விட்டாள் மனஷ்வினி.

அவளை சீண்டுவதற்காகவே கைகளில் முகத்தை புதைத்துக் கொள்பவனைப் போல மிக அருகில் கொண்டு பார்க்க, இவளின் மனதில் மெல்லிய பயம் பிடித்துக் கொண்டது.

‘ஐயோ இது என்ன புது பழக்கம்? இப்படியெல்லாம் இவன் நடந்து கொண்டதில்லையே… தொட்டுப் பேசும் பழக்கம் இவனிடத்தில் சுத்தமாய் இல்லை. இப்போது மட்டும் ஏன் இப்படி?’ யோசனையோடு அவனையே பார்த்திருக்க, அவளது காயம்பட்ட கையை தன் கையில் வைத்து பார்த்தபடி இருந்தவன், காயத்தில் மெல்ல வாயால் ஊதி கைப்புண்ணிற்கு ஒத்தடம் கொடுத்தான்.

அவனது உஷ்ணக் காற்று ஆறிவரும் காயத்திற்கு கூசச் செய்ய, கைகளை மெதுவாக அசைத்து விலகிக்கொள்ள முயற்சிக்க அவளால் முடியவில்லை.

அதிகப்படியாக இவன் ஊதித் தள்ள, “காயத்துல கூசுது… விடுங்க!” இவள் வாய்விட்டு கூறிய பிறகே, பிடித்த கையை விட்டான்.

அவளிடம் நேருக்கு நேராய் ஒரு வார்த்தை பேசவில்லை என்ன பேசுவது என்றும் அவனுக்குத் தெரியவில்லை.

சென்ற இரண்டு நாட்களாகத்தான் உளறாமல் தட்டுத் தடுமாறி தெளிவாக பேச முயன்று கொண்டிருக்கிறாள் மனஷ்வினி.

இவள் படும் சிரமங்களைப் பார்க்கும் போதெல்லாம் மனதிற்குள் ஏதோ ஒன்று பிசையத்தான் செய்கிறது. ஆனால் அதை எப்படி எடுத்துக் கொள்வது என்றும் இவனுக்குத் தெரியவில்லை.

அந்த நேரத்தில் நகுலும் வந்து நிற்க, அவனிடம் பேசத் தொடங்கி விட்டான் ஆனந்தன். ‘அவ்வளவுதான்… இனி இவன் கண் பார்வைக்கு நான் தெரியமாட்டேன்!’ என்ற கடுப்புடன் மனஷ்வினியும் கண்மூடி உறங்க ஆரம்பித்தாள்.

இப்பொழுதெல்லாம் கண்ணை மூடிக் கொண்டால் போதும், தூக்கம் தன்னால் வந்து இவளை அடிமைப்படுத்தி விடுகிறது. உள்ளே சென்றிருக்கும் மருந்தின் வீரியம் அப்படி!

இதன் காரணமே, ‘என்ன நடந்தது, எப்படி தெரியாத நபருடன் சென்றாள்.’ என்ற விசாரணையை இதுநாள் வரையில் யாரும் இவளிடம் கேட்கவில்லை.

முதலில் இவள் திடமாக எழுந்து நடமாடினால் போதும் என்ற மனப்பாங்கு மட்டுமே அனைவருக்கும் வந்து விட்டிருந்தது.

தொடர்ந்து நான்கு நாட்களாக அலைகழித்துக்  கொண்டிருந்த மருத்துவமனை வாசத்தில் தேஜஸ்வினி நன்றாக இளைத்திருந்தாள். கண்களுக்கு கீழே கருவளையம் வந்து முகமும் வெளிறிப் போய் காட்சியளித்தது.

“ரெண்டுநாள் ஆள் மாத்தி இருந்துக்கலாம். வீட்டுக்கு போயி உன் நாட்டாமை அக்காவை ரெஸ்ட் எடுக்க சொல்லு!” நகுலிடம் ஆனந்தன் கூறியது, செவிவழிச் செய்தியாக தேஜுவை சென்றடைய, வேண்டாமென்று மறுத்து விட்டாள்.

“இப்ப எல்லாம் அவ யாரோட பேச்சையும் கேக்கறதில்ல ஆனந்த்! எனக்கும் சொல்லிச் சொல்லி சலிச்சுப் போச்சு. விட்டுத்தள்ளு… ஓயாம பாவம் பார்க்க எனக்கும் பிடிக்கல. ஒரேடியா அங்கேயே இருந்து அழட்டும்!” சலிப்புடன் மனைவியை தட்டிக் கழித்தான் ஆதி.

ஆனந்தனின் அலைபேசியில் இந்த உரையாடல் நடக்க, தேஜுவை எதிரில் வைத்துக் கொண்டே சகோதரர்கள் பேசிக் கொண்டார்கள்.

“உன் வீட்டு பாலிடிக்ஸ் எனக்கெதுக்கு? நான் இன்னைக்கு இந்த ரூம்லதான் தங்கப் போறேன்! அவங்களை வேற ரூம் எடுத்து தங்கிக்க சொல்லு!” அலட்டிக் கொள்ளாமல் கூற, பல்லைக் கடித்தாள் தேஜு.

“என்னைக்கும் இல்லாத கரிசனம் இன்னைக்கு எதுக்கு?” நக்கலுடன் தேஜு கேட்க,

“என் பொண்டாட்டிய பார்த்துக்க நான் வந்திருக்கேன்! நீங்க முட்டிட்டு தனித்தனியா நின்னா நானும் அப்படியே நிக்கணுமா? இடத்தை காலி பண்ணச் சொல்லுடா நகுல்… எனக்கு இந்த தூங்குமூஞ்சிகிட்ட நிறைய பேச வேண்டி இருக்கு!”

“என் அக்கா தூங்குமூஞ்சியா?” நகுலும் அவன் பங்கிற்கு பேச,

“பின்ன ஸ்லீப்பிங் பியூட்டின்னு இவளை கொஞ்சச் சொல்றியா? அவ்வளவு பெரிய ரசனைக்காரன் நான் இல்லடா!” என்றவன் ஜாடைப்பார்வையில் தேஜுவைப் பார்த்தவன்,

“சீக்கிரம் போயி அட்டெண்டர்ஸ் ரூம் புக் பண்ணிக்கச் சொல்லுடா… நீயே அழைச்சிட்டு போ!” விரட்டி விட்டவனின் குரலில் எகத்தாளம் கொட்டிக் கிடந்தது. 

ஆனந்தனின் ஒவ்வொரு பேச்சும் அலைபேசியில் அப்பக்கம் கேட்டுக் கொண்டிருந்த ஆதியையும் உசுப்பேற்றி விட, மருத்துவமனைக்கு விரைந்து வந்து விட்டான்.

ஆனந்தனுடன் வம்பு வளர்க்க விரும்பாமல், தன்னை வந்து அழைத்துப் போகச் சொல்லி அப்பாவை அழைத்து விட்டாள் தேஜு.

இத்தனை நாட்கள் கணவனுடன் முகம் கொடுத்து பேசாமல் இருந்தவளுக்கு தனது தேவைக்கென அவனை அழைப்பதற்கு மனம் வரவில்லை.

அதுபோக இன்னும் ராஜசேகர் தனது சொந்த வீட்டிற்கு செல்லவில்லை. பிரச்சனைகள் அனைத்தும் முடியும்வரை அனைவரும் கேட்டுக் கொண்டபடி மகள்களின் வீட்டிலேயே தங்கியிருந்தார்.

தந்தைக்காக இவள் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் பெருங்கோபத்துடன் வந்து நின்றான் ஆதித்யன்.

“மனசுல என்னதான்டி நினைச்சுட்டு இருக்க? ஒரு அவசர ஆத்திரத்துக்கு கூட புருஷன் இருக்கான்ற நினைப்பு உனக்கு வராதா?” பல்லிடுக்கில் கோபத்தை அடக்கி கொண்டு கேட்டவனிடம் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக நின்றாள் தேஜு.

நகுல் ஏதோ சொல்ல வாயை திறக்க, அவனது கையை அழுத்தி, ‘பேசாதே!’ என ஜாடை காட்டினான் ஆனந்தன்.

உள்ளதை சொல்லவும் முடியாமல் மென்று முழுங்கியபடியே ஊமையாக கணவனுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் தேஜஸ்வினி.

இரவு உணவினை தங்களின் அறைக்கே வரவழைத்தவன் மனைவி மேற்கொண்டு எந்த வேலையையும் செய்யவிடாமல் பார்த்துக் கொண்டான். அனைத்தும் அமைதியாகவே நடந்தது.

“இப்ப எதுக்காக வம்படியா என்னை இழுத்துட்டு வந்துருக்கீங்க? எதுலயாவது சைன் பண்ணனுமா? இல்ல, வேற ஏதாவது புது பிரச்சனை கிளம்பி இருக்கா!” குத்தலாக பேசி தேஜு வாயை விட, முறைத்து பார்த்தான் ஆதி.

“இல்ல… உங்க தம்பிக்கு புதுசா பொண்டாட்டி பாசம் பொங்கினதுல, சட்டமா ஹாஸ்பிடல்ல வந்து உக்காந்தாரே… அதான் கேட்டேன்!” என்றவளின் குரல் இறங்கி ஒலித்தது.

“அவன்கிட்டயே கேட்டிருக்க வேண்டியது தானே! உன்கிட்ட விளக்கம் சொல்லாம இதுவரைக்கும் நான், உன்னை எதுலயும் சைன் பண்ண விட்டதில்லை. நீதான் அதை மனசுல பதிய வச்சுக்காம காத்துல பறக்க விட்டுட்டு இருக்க… படிச்ச படிப்புக்கு மட்டுமே வேலை பார்க்கணும்ங்கிற எண்ணத்தை மறந்திடு!

வெறுமென கையெழுத்து போட்டு தலையாட்டுற பொம்மையா இருக்க பார்க்காதே! எல்லாத்தையும் பழகிக்க முயற்சி பண்ணு தேஜு!” ஆதி ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்ல, ‘ம்ம்.’ கொட்டி கேட்டுக் கொண்டதோடு, கொட்டாவியும் சேர்த்து விட்டு, உறங்கிப் போனாள் தேஜஸ்வினி.

மறுநாள் விடியலில் தலைச்சுற்றலோடு வாந்தியும் சேர்த்து தேஜுவை காய்ச்சலில் தள்ளிவிட, வீட்டில் அவளுக்கு சிகிச்சை தொடங்கியது.

உடல் பலவீன அறிகுறிகளை வைத்தே கர்ப்ப பரிசோதனை செய்து, அதில் கரு உருவானதும் உறுதியாகி விட, அனைவரும் மகிழ்ந்தனர்.

“உனக்கு எந்த சிம்டம்ஸும் தெரியலையா தேஜுமா? நாள் கணக்கு கூடவா நீ பார்க்காம இருந்தே?” ஆதி ஆர்வத்துடன் கேட்க, அதிருப்தியாக முகம் சுழித்தாள் மனைவி.

“நான் போன வாரமே கிட் வாங்கி, கன்ஃபார்ம் பண்ணிட்டேன்!”

“பின்ன எதுக்குடி சொல்லல?”

“இந்த விசயத்தை வெளியே சொல்லிட்டு என்னால நிம்மதியா இருக்க முடியும்னு தோணல… இந்த வீட்டு வாரிசை அழிக்கணும்னு புதுசா யாராவது கிளம்பி வந்துட்டா நான் என்ன செய்ய? அதான், அமைதியா எனக்குள்ளேயே இந்த விசயத்தை புதைச்சுகிட்டேன்.”

“விஷயம் இவ்வளவு தானா? இன்னும் எதாவது மறைக்கப் பாக்கறியா!” கொதிப்புடனே கேட்டான் ஆதி.

மனைவி கூறும் நியாயத்தை எந்த விதத்திலும் சரியென்று ஏற்றுக்கொள்ள இவனது மனம் ஒப்புக் கொள்ளவில்லை. முற்றிலும் தான்தோன்றித்தனமான செயலை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடும் நோக்கத்தோடு இழுத்துப் பிடித்த பொறுமையுடன் மேற்கொண்டு விளக்கம் கேட்க, அதில் தலைசுற்றிப் போனான்.

“மனு ஹாஸ்பிடல் விட்டு வந்ததும் நாங்க தனியா எங்கேயாவது போயிடுறோம்! இப்ப என் தம்பியும் உங்களோட சேர்ந்துட்டான். அவன் படிக்கணும், மனுவையும் எப்படியாவது எம்பிபிஎஸ் கம்ப்ளீட் பண்ண வைக்கணும். அதோட ரெண்டு பேரையும் பத்திரமா பார்த்துக்க வேண்டிய பொறுப்பும் கூடிச் போயிடுச்சு எனக்கு! எங்க குடும்பத்தை விட்டுடுங்களேன்! நாங்க தனியாவே இருந்திடுறோம்!” அவள் மெதுவாக கெஞ்சலாக சொல்லிக் கொண்டே போக, இடிந்து போய் அமர்ந்து விட்டான் ஆதித்யன்.

“அப்போ இந்த குழந்தைய என்ன பண்ணப்போற?” காட்டத்துடன் கேட்க,

“அது என்ன பாவம் பண்ணிச்சு? குழந்தைய அழகா பெத்து வளர்க்க வேண்டியது என்னோட பொறுப்பு!” எனக் கூறி முடித்தவளை புரியாமல் பார்த்தான்.

“கிறுக்குத்தனமா உளறிக் கொட்டி என்னை வில்லனாக்காதே தேஜு! இந்த வீட்டை விட்டுப் போயி பாரு… உனக்கு இருக்கு!” கடுகடுத்தவனுக்கு, கோபத்தை அடக்கிக் கொள்வது பெரும்பாடாய் இருந்தது. 

‘இவளின் இந்த முடிவிற்கு காரணம் இவளின் அறியாமையா? அல்லது பயமா? எங்கள் குடும்பத்தையே வெறுத்து விட்டாளா? இத்தனை செய்தும் எங்களின் மேல் நம்பிக்கை வரவில்லையா இவளுக்கு?’ விதியே என தலையிலடித்துக் கொண்டு மனதிற்குள் புலம்பத் தொடங்கி விட்டான் ஆதித்யன்.

***