Kalangalil Aval Vasantham 24
Kalangalil Aval Vasantham 24
23
“இல்ல சர். இன்னொரு நாள் வர்றேன். இப்ப கசகசன்னு இருக்கு. வேலைக்கு டைமாச்சு. லேட்டா போனா புல் டாக் என்னை கடிச்சு கொதறிடும்…” என்று புன்னகை மாறாமலே தவிர்க்கப் பார்த்தாள்.
“ஜஸ்ட் டென் மினிட்ஸ் பேபி. பக்கத்துல தான் இருக்கு. வீட்டையும் பார்த்த மாதிரி இருக்கும்.” சர்க்கரையாக அழைத்தார்.
“பயப்படாத ப்ரீத். பின்னாடியே தான் நாங்க வந்துட்டு இருக்கோம். பெப்பர்ஸ்ப்ரே எடுத்துக்க…” என்று ஷான் அவசரமாக கூற, ப்ரீத்தி அவளுடைய ஷோல்டர் பேகை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
“இல்ல சரண் சர். புரிஞ்சுக்கங்க. இன்னொரு நாள் கண்டிப்பா வர்றேன்…” என்று கூறுவது எல்லாம் சரண் சிங்கின் காதில் விழவே இல்லை. அடுத்த இரண்டாவது நிமிடம், ஒரு பெரிய வீட்டின் முன் கார் நின்றது.
“இதோ வந்தாச்சு… ஜஸ்ட் டென் மினிட்ஸ் தான் பேபி. அதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட கிடையாது.” என்று வற்புறுத்த, அதற்கும் மேல் மறுக்க வழி தெரியவில்லை.
கார் கேட் முன் நிற்கவும், கேட் தானாக திறந்தது. ரிமோட் சென்சார் கதவு போல! நுங்கம்பாக்கத்தின் பாஷ் ஏரியா அது. விவிஐபிக்கள் மட்டுமே வசிக்கும் பகுதி.
கார் மெதுவாக உள்ளே நுழைய, வெளிகேட் கதவு தானாக மூடியது.
அவளது மனம் திக் திக்கென்று அடித்துக் கொண்டது!
ஷான் தொடர்பில் தான் இருக்கிறான் என்றாலும், சுற்றிலும் பாதுகாப்புக்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்றாலும், அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. லேசாக வியர்வை அரும்ப தொடங்கியது!
“கேஷுவலா இரு பேபி. உன்னை முழுங்கிட மாட்டேன். ஜஸ்ட் ஹேவ் எ லுக்…” என்று சாதாரணமாக சரண் சிங் பேசினாலும் அவளுக்கு பயத்தில் ஜுரம் வந்துவிடும் போல இருந்தது.
ஸ்பை வீடியோவை இயக்கினாள். என்ன நடக்கிறது என்பதை வெளியில் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்த!
“பயத்தை காட்டிக்காத ப்ரீத். நான் இங்கயே தான் இருக்கேன். டோன்ட் வொர்ரி. எமெர்ஜென்சின்னா எதை பத்தியும் நினைக்க மாட்டேன். உள்ள வந்துருவேன். முடிஞ்ச அளவு மட்டும் சமாளி…” என்று ப்ரீத்திக்கு தைரியம் சொன்னாலும், அவனால் எளிதாக உட்கார முடியவில்லை. என்னாகுமோ என்ற அச்சம்!
திரையில் அவள் முன்பிருந்தவைகள் எல்லாம் தெரிய ஆரம்பித்தது!
அந்த பிரம்மாண்டமான மாளிகை கெஸ்ட் ஹவுசா?
“வாவ்… ஆசம் ஹவுஸ் சரண் சர்…” பயத்தை மறைந்துக் கொண்டு ஆச்சரியப்பட, அவருக்கு இன்னும் தனது பெருமைகளை காட்ட வேண்டும் என்று தோன்றியது.
அந்த பக்கம், ஷான் மகேஷை பார்த்து, “லைடார் ஸ்கானர் கொண்டு வந்துருக்கீங்களா மகேஷ்?” என்று கேட்க, “எஸ் பாஸ்…” என்றான் அவன்.
“அப்படீன்னா இந்த பில்டிங் மேல பறக்க விடுங்க. முழுசா மேப் பண்ணுங்க. பில்டிங் உள்ள வெளியன்னு அவ்வளவும் மேப் ஆகணும். போற வழி, உள்ள இருக்க ரூம்ஸ் எல்லாமே…” என்று இறுக்கமான குரலில் கூற, அடுத்த இரண்டாவது நிமிடம், அந்த கட்டிடத்தின் மேலே லைடார் பறந்து கொண்டிருந்தது. அந்த கட்டிடத்தை முழுவதுமாக படம் பிடித்துக் கொண்டு!
லைடார் ஸ்கானர் என்பது சிறு ட்ரோன் கேமரா அளவிலானது மட்டுமே! அது குறிப்பிட்ட இடத்தை படம் பிடிக்க லேசர் கதிர்வீச்சை உபயோகப்படுத்தும். அதில் சிறப்பம்சம் என்னவென்றால் எதை மறைக்க வேண்டுமோ, அந்த அடுக்குகளை மறைத்து விட்டு உள்ளே என்ன இருக்கிறதோ அதை மட்டும் காட்டிக் கொடுக்கும்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த ப்ரீத்திக்கு சற்று பயம் தெளிந்தது.
பயம் தெளிந்தவுடன் அந்த மாளிகையை ரசித்துப் பார்த்தாள்!
பணத்தை வாரி இறைத்து கட்டியிருந்தார் மனிதர். மொத்தமாக பத்து கிரௌண்ட் இருக்கலாம். நடுவில் பங்களா, சுற்றிலும் நந்தவனம்! நான்கு கார்கள் நிறுத்துமளவு கார் பார்க்கிங் வெளியே பூட்டபட்டிருந்ததை பார்த்திருந்தாள்.
அட்டகாசமான லான். சிட் அவுட்டுக்கு பக்கத்தில் பெரிய புத்தர் சிலை, அதற்கு மேல் புத்தர் மேல் வழிந்த தண்ணீர், சிலைக்கு பின்னால் இருந்த வாஸ்து மூங்கில் மரங்கள் என நுழையும் இடமே சொர்க்கம் தான்!
கதவுக்கு நம்பர் லாக் போல. அவர் அழுத்தும் நம்பர்களை கவனித்துக் கொண்டாள். வீடு இன்னும் அழகாக இருந்தது. அழகாக இருந்தது என்பதை விட பிரம்மாண்டமாக, இன்னும் சொல்லப் போனால் மினி அரண்மனையை போல இருந்தது. இட்டாலியன் மார்பிளும், தேக்கும் இழைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொன்றுமே ஆட்டோமைஸ்ட். அதாவது தானியங்கி செயல்பாடுகள். அவரது ஐபோனிலேயே லைட்டை போட்டார், ஸ்க்ரீன்களை விலக்கினார்.
“சர்… கலக்கறீங்க!” திகைத்தாள்.
“இன்னும் இருக்கு வா பேபி…” என்றழைக்க, அவர் பின்னே போனாள். ஸ்பை கேமராவும் படம் பிடித்துக் கொண்டிருந்தது.
கதவை திறக்கவும் திக்கென்று இருக்க, சட்டென பின்னடைந்தாள்! அவர் அழைத்துப் போனது படுக்கையறை. பூலோக சொர்க்கமே தான். உண்மையிலேயே மனிதருக்கு ரசனை அதிகம் தான் போல… குட்டி அரண்மனையின் படுக்கையறையில் அத்தனை ஆடம்பரம்!
“ரசிகன் சர் நீங்க…” என்று அவரை பாராட்ட, சரணுக்கு தலைகால் புரியவில்லை.
“ஒவ்வொரு இன்ச்சும் ரசிச்சு தான் எதையுமே செய்வேன் பேபி. இது சாம்பிள் தான்.” என்றவர், “என்னோட குடும்பம், ஃபிரெண்ட்ஸ் தவிர இங்க யாரையும் அழைச்சுட்டு வந்ததில்ல, நீ தான் ஃபர்ஸ்ட் பேபி…” அவளுக்கு மிக அருகில் வந்து ஆழ்ந்த குரலில் கூற, சட்டென பயந்தவள், இரண்டடி பின்னடைந்தாள்.
“பயப்படுத்திட்டேனா?” என்று அவர் சிரிக்க, அவள், “இ… இல்ல…” என்று தடுமாறியவள், “எனக்கு இது பெரிய கௌரவம் சரண் சர்…” என்றாள்.
அவர்களின் பேச்சை கடினமான முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவன், அதற்கு மேலும் தாமதிக்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டான்.
“மகேஷ் மேப் பண்ணியாச்சா?” என்று கேட்க, “நைன்டி பர்சன்ட் முடிஞ்சுடுச்சு பாஸ்…” வேலை பார்த்துக் கொண்டிருந்த ஆல்வினின் ஆட்களை பார்த்தவாறே!
“ப்ரீத்தி, நீ அந்த ரூம்ல இருந்து வெளிய வா. வெளிய வந்து நின்னு பேசு…” என்று இறுக்கமான குரலில் கூறினான். அதை கேட்டவள், இயல்பாக வெளியேறுவது போல,
“உங்க கிட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு சரண் சர்…” என்று பேசிக் கொண்டே வெளியே வந்தாள்.
“உனக்கு என்ன வேணும் சொல்லு பேபி. கத்து தர்றதுக்கு நான் ரெடியா இருக்கேன்…” என்று அவளது கையை பிடிக்க வர, அவள் லாவகமாக பின்வாங்கினாள்.
அந்த பக்கம், “ஒரு ரூம்ல மட்டும் காஸ்ட் ஐயர்ன் அதிகமா இருக்க மாதிரி காட்டுது பாஸ்…” என்று வெர்கீஸ் குரல் கொடுத்தான், அவன் இருந்த இடத்திலிருந்தே!
“அது லாக்கர்ஸ்ஸா இருக்க நிறைய சான்ஸ் இருக்கு வெர்கீஸ். சைஸ் என்ன?” என்று ஷான் கேட்க,
“த்ரீ பை பைவ் சைஸ், கிட்டத்தட்ட பதினஞ்சு இருக்கு பாஸ்…” என்றான் சஞ்சீவ்.
“கண்டிப்பா லாக்கர்ஸ் தான். அவ்வளவு பெரிய லாக்கர்ஸ் எதுக்கு?” என்று யோசித்தவன், “ப்ரீத்தி… எல்லா ரூமையும் ஒரு ரவுன்ட் வா. நான் சொல்ற இடத்துல ஸ்பை கேமராவ பிக்ஸ் பண்ணிடு…” என்று கூறினான்.
இங்கு ப்ரீத்தி, “ஒவ்வொரு ரூமையும் இழைச்சுருக்கீங்க சரண் சர்…” என்றபடியே ஒவ்வொரு அறையாக பார்வையிட்டாள். சரணும் அவள் மேல் கொண்ட பித்தில் தலைகீழாக நடக்காத குறையாகத்தான் சுற்றினார்.
“இதென்ன ரூம் சர்?” கடைசியாக அந்த அறை முன் நின்றாள் ப்ரீத்தி. அவர் திறக்க சற்று தயங்க, “உங்களுக்கு காட்ட வேணாம்ன்னா வேண்டாம் சரண் சர்…” அவள் வெளியே போக எட்டு வைக்க,
“உன்கிட்ட காட்ட கூடாதது என்கிட்ட என்ன இருக்கு பேபி?” என்று இழைந்தவர், கதவைத் திறந்தார். மற்ற அறை போல அலங்காரங்கள் இல்லை. வெற்று அறை மட்டுமே!
அந்த பக்கம், “இந்த ரூம் தான் ப்ரீத்தி. சரியான இடத்தை பார்த்து பிக்ஸ் பண்ணு.” என்று ஷான் கூற, “என்ன சர். ஒண்ணுமே இல்ல?” என்று ப்ரீத்தி சிரித்தபடியே சரணை கேட்டாள்.
“இது ஜஸ்ட் ஒரு எம்ப்டி ரூம் ப்ரீத்தி. பின்னாடி ப்ளான் பண்ணிக்கலாம்ன்னு விட்ருக்கேன்…” என்று கூற, அவள் நிதானித்தாள்.
அந்த பக்கமோ, “இந்த ரூம்ல சரியான இடமா பார்த்து பிக்ஸ் பண்ணு ப்ரீத். இங்க தான் லாக்கர்ஸ் இருக்கு…” என்று வேகக் குரலில் ஷான் கூற, அவள் சற்று ஆராய்ந்தாள்.
“ஏன் ஒரு ஜிம் ப்ளான் பண்ண கூடாது? இங்க ஜிம் இல்லைல்ல?” என்று கேட்க, அவர், “சூப்பர் ஐடியா பேபி!” என்றார்.
சுவர்களை கவனமாக பார்த்தபடி, “இங்க ஒரு ட்ரெட்மில், இங்க ஒரு ஹோம் ஜிம், இங்க ஒரு சைக்கிள்…” என்று வரிசையாக திட்டமிட, “அப்படீன்னா அதையெல்லாம் நீயே பண்ணு…” என்று அவளிடமே பொறுப்பை அவர் விடுவது போல கூற, “கண்டிப்பா…” என்று குதூகலமாக கூறினாள்.
அந்த நேரத்தில் வெளியே ஏதோ சப்தம் கேட்க, என்னவென்று பார்க்கப் போனார் சரண் சிங். தப்பித்தவறி அவரது மனைவியோ, மகளோ வந்துவிடக் கூடாதே என்ற பயமும் அவருக்கு இருந்தது.
அவர் போன இடைவெளியில், ஸ்பை கேமராவை எடுத்தவள், அதை ஆன் செய்து, யாருடைய பார்வையையும் உறுத்தாத இடமாக பார்த்து ஒட்டி வைத்துவிட்டாள். அது மிகச்சிறிய வகை கேமரா. ஷர்ட் பட்டனை விட சிறிய மிக மிக நவீன கேமரா. அந்த கேமரா இருப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதாவது ஸ்பை கேமரா இருப்பதை மற்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் காட்டிக் கொடுத்து விடும். செல்பேசியை அதற்கு பக்கத்திலிருந்து பேசினால் கொர் என்று சப்தம் வருவது போன்ற செய்கைகளால் ஸ்பை கேமரா இருப்பதை கண்டுகொள்ள முடியும். ஆனால் இது போன்ற நானோ கேமாராக்கள் இருப்பதை எந்த சாதனங்கள் கொண்டும் கண்டுபிடிக்க முடியாது.
கேமராவை வைத்துவிட்டு அவர் வருவதற்குள், இயல்பாக வெளியே வருவது போல அறையிலிருந்து வெளியேறியும் விட்டாள்.
“என்ன சர் அவசரமா போனீங்க?” தன்னை நோக்கி வந்தவரை பார்த்து இயல்பாக கேட்க,
“யாரோ வந்த மாதிரி இருந்துது…” என்று கூறியவர், “ஜிம் எப்ப எனக்கு ப்ளான் பண்ணி தர போற பேபி?” என்று அவளை நோக்கி நெருக்கமாக வர பார்த்தார்.
மானிட்டரில் பார்க்கையில் அவரது நோக்கம் ஷானுக்கு புரிந்தது.
சட்டென யோசனை தோன்ற, பேசியை எடுத்து அவளுக்கு அழைத்தான்.
இங்கு, செல்பேசியை எடுத்து பார்க்க, அதில் ஷான் என்ற பெயர் ஒளிர்ந்தது.
அந்த பக்கம், “போனை அட்டென்ட் பண்ணு ப்ரீத். பாஸ் கூப்பிடறான்னு சொல்லிட்டு வெளிய வர பாரு…” என்று கூற,
இங்கு, ப்ரீத்தி, “ஓ ஷிட்… எப்படித்தான் எங்க பாஸுக்கு மட்டும் மூக்குல வேர்க்குமோ? கொஞ்ச நேரம் நிம்மதியா விட மாட்டார்…” என்று சரணிடம் சலித்துக் கொண்டு, பேசியை எடுத்து காதில் வைத்து, “எஸ் பாஸ்…” என்றாள்.
“எப்ப வரீங்க மேடம்?” என்று கேட்க,
“இன்னொரு தர்ட்டி மினிட்ஸ்ல அங்க இருப்பேன் பாஸ்…” என்று கூறிவிட்டு வைத்தவள், சரண் சிங்கை பார்த்து,
“அர்ஜன்ட் மீட்டிங் சரண் சர். நான் தான் ஆர்கனைஸ் பண்ணனும். பாஸ் கால் பண்ணிட்டார். கிளம்பட்டுமா?” என்று தலையை சாய்த்து கொஞ்சலாக கேட்டவளின் தொனியில் முழுதாக விழுந்து விட்டார் மனிதர்.
“அப்புறம் எப்ப மீட் பண்ணலாம் பேபி?” ஏக்கமாக கேட்க, அந்த பக்கம் ஷானுக்கு புகைந்தது.
“கால் பண்றேன் சரண் சர்.” என்று அவரது கண்களை பார்த்தவள், அவரை அப்படியே கட்டியிழுத்தபடி வெளியே அழைத்து வந்தாள்.
அவள் இழுத்த இழுப்பிற்கு வந்தார் அந்த பெரிய மனிதன்!
“ஓகே பேபி…” என்று அவளை கட்டியணைக்க வர, அவள் சட்டென தவிர்த்து, “குளிக்கணும் சரண் சர்…” என்று கொஞ்சியபடியே காரை திறந்து ஏறிக் கொண்டாள்.
சரண் சிங்குக்கு தான் பெருத்த ஏமாற்றம். ஒரு சிறு அணைப்பு கூட இல்லையே என!
ஆதர்ச காதலனாக வருத்தப்பட்டார்!
இவளை ஒரு நாளைக்கு மட்டுமல்ல… நிரந்தரமாக கூடவே வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவுக்கே வந்துவிட்டார்!
காரை ஸ்டார்ட் செய்தவர், மீண்டும் கேட்டை விட்டு வெளியே வர, கேட் பழையது போல தானாக மூடிக் கொண்டது.
“எப்படி இவ்வளவு பெரிய வீட்டை அப்படியே விட்டுட்டு வரீங்க சரண் சர்?” ஒன்றும் அறியாதவள் போல இவள் கேட்க,
“வெளிய முழுக்க சர்வைலன்ஸ் கேமரா இருக்கு பேபி. அப்புறம் வீட்டை திறக்கணும்னா நம்பர் மட்டுமில்ல, என்னோட விரல் ரேகையும் வேணும். அப்புறம் வீட்டுக்குள்ள ஒவ்வொரு ரூமும் என்னோட பர்சனல் போன்ல இருந்து மட்டும் தான் ஆப்பரேட் பண்ண முடியும்…” என்று புன்னகைத்தார், தன்னுடைய பெருமைகளை பீற்றியபடி!
“செம இன்டெலிஜன்ட் சர் நீங்க. அதனால தான் இவ்வளவு பெரிய பொசிஷன்ல இருக்கீங்க…” என்று அவள் பாடிய துதியில் மயங்கி விட்டார்.
கார் சாலையில் வேகமெடுக்க துவங்கியிருக்க, “ஆமா நீங்க எனக்கு கொடுத்தது பெர்சனல் நம்பரா, ஜெனரல் நமபரா?” என்று வேண்டுமென்றே அவள் கேட்க,
“உனக்கு பப்ளிக் நம்பர் குடுப்பேனா பேபி? அது என்னோட பர்சனல் நம்பர். ரொம்ப குறைவான பேருக்கு மட்டும் தான் அந்த நம்பர் தெரியும். என்னோட பேமிலி, பர்ஸ்ட் சர்க்கிள் ஃப்ரெண்ட்ஸ். அவ்வளவுதான். இப்ப நீ…” ஒவ்வொரு இடத்திலும் அவள் எவ்வளவு முக்கியமானவள் என்று அவர் உணர்த்திக் கொண்டே இருக்க, உள்ளுக்குள் அவள் சிரித்துக் கொண்டாள்.