நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…2

மறுநாள் அதிகாலை… ஆதவன் தனது பயணத்தை துவங்க முற்படும் பிரம்ம முகூர்த்த நேரத்தில், பணக்கார பதவிசை பறைசாற்றும் ஆடம்பரங்களை சூட்டிக் கொண்டு ஜெகஜோதியாய் ஒளிர்ந்தது அந்தத் திருமண மண்டபம்.

செல்வச் செழிப்புடன் மதிப்பும் மரியாதையும் ஏறுமுகத்தில் இருக்கும் தெய்வத்திரு செல்வராஜன் – ரூபாவதி தம்பதியரின் இரட்டைப் புதல்வர்களின் திருமணம்.

பரம்பரை செல்வாக்கும் அந்தஸ்தும் தலைமுறைகளுக்கு ஏணிப்படியாக அமைய, சுற்றார் மற்றும் தொழில் வட்டாரத்தில் ரூபம் குடும்பத்தாரை அறியாதவர் தெரியாதவர் எவரும் இல்லை.

இளைய தலைமுறையின் சாட்சியாக இரட்டைச் சிங்கங்கள் தொழில் துறையில் ஒன்றாக களம் இறங்கிய பிறகு, இவர்களை மிரட்டிப் பார்க்கவோ, அடித்து அதட்டவோ யாருக்கும் தைரியம் இல்லை.

இருபத்தியேழின் தொடக்கத்தில், ஆளுமை குறையாத மாப்பிள்ளை தோரணையுடன், விடிவெள்ளி நேரத்தில் மங்கலநாணில் பொன்தாலி பூட்டி தேஜஸ்வினியை மனைவியாக்கிக் கொண்டான் ஆதித்யரூபன்.

இளையவர்களின் திருமணத்திற்கு அடுத்த இரண்டு மணி நேரத்தில் முகூர்த்தம் குறித்திருந்தபடியால், மூத்தவர்களின் சுபமுகூர்த்தம் இத்தனை சீக்கிரமாய் நடந்தேறியது.

தேகமெங்கும் தங்கமும் வைரமும் அலங்கரித்து நிற்க, கணிசமான இலகரங்களில் பட்டுடுத்தி, மெய்யான கோடீஸ்வரினியாக அமர்ந்திருந்த தேஜஸ்வினிக்கு நடந்து முடிந்த திருமணம் சற்றும் நிறைவைக் கொடுக்கவில்லை.

தன்னருகே மிடுக்கு குறையாமல் அமர்ந்திருந்த கணவனை ஒருமுறை ஏறெடுத்து பார்க்க முயன்று தோற்றுப் போனாள் புது மனைவி. தொடர் தோல்விகள் மனதைக் கலங்க வைக்க, அதுவே அவளின் ரூபத்திலும் எதிரொலித்து வேரறுந்த கொடியாகக் காட்சி தந்தாள். 

மனைவியின் அதீத பரிதவிப்பு கணவனுக்கும் அலுப்பு சலிப்பை வரவழைத்தது. நேற்று மாலையில் ஆரம்பித்த இருவருக்குமான பார்வைப் போராட்டம் இன்னும் முடிவிற்கு வரவில்லை.

இவன் நேருக்குநேராக பார்க்க நினைக்க, அவளோ தலைதாழ்த்திக் கொண்டு மறுதலிக்க, ஜோரான கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது.

முகமும் மனமும் கடுப்பை சுமந்து கொண்டு மனையாளை அத்தனை ஆத்திரத்துடன் மனதிற்குள் அர்ச்சித்துக் கொண்டிருந்தான் ஆதித்யன்.

‘நிமிர்ந்து என் முகத்தை ஏறெடுத்து பாக்கறாளா இவ? நேத்து மேடையேறினதும் என்னை பார்த்து மயங்கி விழுந்தா… இப்பவும் மணவறையில உக்காந்த நேரத்துல இருந்து முகத்தை தொங்கப் போட்டுட்டு இருக்கா!’ கடுப்பை தாளித்துக் கொட்டியவனின் கோபத்திலும் நியாயம் இருக்கத்தான் செய்தது.

ஆதியைப் பொறுத்த வரையில் நிழற்படத்தில் பார்த்து, சம்மதம் என்ற பதிலைப் பெற்றாகி விட்டது என்ற சேதி கிடைத்த பிறகுதான் திருமணத்திற்கான பேச்சு வார்த்தைகளே தொடங்கியது. காணொளியில் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசுவதற்கு ஆண்களின் தொழில் நிமித்தங்களும், பெண்களின் தேர்வுப் பரபரப்புகளும் சுற்றி வளைத்து தடை விதித்தன.

‘உண்மையில் இவள், என்னை ஃபோட்டோவில் பார்த்தாளா இல்லையா?’ என்ற ஆகப்பெரிய சந்தேகம், மாங்கல்ய தாரணம் நடந்து முடிந்த பிறகு மனதிற்குள் நின்று ஆட்டம் காட்டியது. ஆனால் அதைக் கேட்பதற்கும் நினைப்பதற்கும் கூட ஆதித்யனுக்கு நேரம் கிட்டவில்லை.

அக்னியை வலம் வந்து சம்பிரதாயச் சடங்குகள் முடிந்த பொழுதிலும் மனைவி, கணவனின் முகத்தை நேர்கொண்டு பார்க்காமல் தவித்தபடி இருக்க, ஒரு கட்டத்தில் சபையினரின் முன்பே தனது கரத்தை உதறிக் கொண்டு தனியே சென்று விட்டான் ஆதித்யரூபன் 

கணவனது விலகலில் உருக்குலைந்து உலர்ந்து நின்றவளின் மனம் மேலும் பதட்டப்பட்டுப் போனது. நேற்றைய தினம் அதிர்வில் மயங்கிய பெண்ணவளை தண்ணீர் தெளித்து, கன்னத்தில் தட்டி நிகழ்விற்கு கொண்டு வரும் வேலையைச் செய்தது ஆதியின் கரங்களே!

சுயத்திற்கு வந்த பின்னரும் தேஜஸ்வினி மீண்டும் திகில் பார்வையுடன் அவனை நோக்க, சுட்டெரிக்கும் சூரியனாய் உஷ்ணப் பார்வையில் அவளை அமர வைத்து விட்டு விலகி நின்று கொண்டான் ஆதி.

அவனுக்கு நன்றி தெரிவிக்கவும் வார்த்தை வராமல், இவள் கலக்கத்துடன் பார்த்து முழிக்க, அவனது பார்வை கூர் அம்புகளாகி இதயத்தை குத்தி ஊடுருவியது.

எதிர்காலக் கனவு முற்றிலும் தகர்ந்து போனதொரு மாயத் தோற்றத்தில், இயந்திரத்தனமாய் அனைவரின் ஏவலுக்கும் செவிசாய்த்து, தலையாட்டும் பதுமையாகிப் போனாள்.

அவ்வண்ணமே இப்பொழுது வரை நடந்தும் கொண்டதில் ஆண்மனம் தனது சுபாவத்தை நடுக்கூடத்தில் மேடையேற்றி நகன்றுவிட, மூத்தோரின் பழிச் சொல்லுக்கு ஆளாகி நின்றாள் தேஜஸ்வினி.

“என்ன சேகரா? பொண்ணுக்கு நாலும் சொல்லிக் கொடுத்து வளக்கறதில்லையா… பிடித்தம் இல்லாம வந்து நிக்கிற மாதிரி இருக்கு. இப்படி இருந்தா எந்த ஆம்பளைக்குதான் கோபம் வராது?” பெருத்த கண்டனக் குரலில் குற்றம் சாட்டினார் அருணாச்சலம். 

மாப்பிள்ளை வீட்டின் பெரியவர். சகோதரர்களை எடுத்து வளர்த்தவர். சுருங்கக் சொன்னால் இரட்டையர்களின் ‘கட்டப்பா’ இவர். இவரது மூச்சும் பேச்சும் என்றென்றும் ரூபன்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கும், செயல்படும்.

பாரபட்சம் பார்க்காமல் பேரன்களுக்கு மட்டுமே நியாயம் செய்யும் நீதிமான் இந்த அருணாச்சலம். அவரது குறைபாட்டில் ராஜசேகரும் கலக்கம் கொள்ள, சுலோச்சனா சூழ்நிலையை சகஜமாக்கினார்.

“நேத்துல இருந்து தலைவலின்னு சொல்லிட்டு இருக்கா பெரியவரே! வேற ஒன்னும் இல்லை.” என்றவர், ‘வாயை தொறந்து பேசித் தொலை!’ கண்டனப் பார்வையில் மகளைப் பார்த்தார்.

இச்செயல் தனது தன்மானத்தை உரசுவது போலத் தோன்ற வீம்புடன் அமைதியாக நின்றாள் தேஜு. ‘பதில் சொல்லட்டும்… இவருக்கு தானே இந்த கல்யாணம் தேவையா இருக்கு!’ பிடிவாத பாவனையில் பெரியவள் நிற்க, மனஷ்வினி அருகில் வந்தாள்.

“சகஜமா இரு… அழுத்திக்காதே தேஜுக்கா!” கிசுகிசுப்பாய் தங்கை கூற, கனல் பார்வையை பரிசளித்தாள் தமக்கை.

“அவரோட உதாசீனத்துக்கு, நான் சமாதானம் சொல்லணுமா?” காரமாய் கேட்க, உச்சுக் கொட்டினாள் மனு.

“எனக்கு மட்டுமில்ல… உனக்கும் தானே?” தங்கையைக் கண்டு கொண்டவளாய் தேஜு கேட்க, தர்மசங்கடத்துடன் தலைகுனிந்தாள் தங்கை.

நேற்றைய தினம் மேடையில் தடுமாறி கீழே விழப் போன ஆனந்தனை தாங்கிப் பிடித்தது மனஷ்வினியின் நினைவில் வந்து போனது. எத்தனை எள்ளல் அவன் பார்வையில்? மனிதாபிமானத்துடன் செய்த செயலுக்கு அவனது சுடுசொல் பரிசாகக் கிடைத்தது தான் மிச்சம்.

“பாவம் பார்த்து, தாங்கிப் பிடிக்கிற வேலையெல்லாம் என்கிட்டே வச்சுக்காதே! யாரோட தயவையும் எதிர்பார்த்து நான் இல்ல.” கோபத்துடன் முணுமுணுத்த ஆனந்தரூபன், தன்னை தாங்கிப் பிடித்திருந்தவளின் கையை அப்பொழுதே உதறியிருந்தான். 

“சரியான ஹெட்வெயிட் கும்பல்ல வந்து மாட்டிகிட்டோம் க்கா!” முன்தின நினைவில் மனு பேச,

“இந்த ரூப்டாப் பிரதர்சை நினைச்சாலே எனக்கு பத்திகிட்டு வருதுடி!”

எல்லோரும் தங்களையே பார்ப்பதை அறிந்து கொண்டு அமைதியாக ஆதிக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டாள் தேஜுஸ்வினி.

மறைக்க இயலாத மச்சமாக இடது முகம் கருமையும் செம்மையும் குழைத்து பூசியிருக்க, அதை அழகாய் மறைத்தது ஆதியின் மாப்பிள்ளை முண்டாசு.

கணவனின் தோற்றத்தில் முகம் சுருக்கிய மனைவிக்கு, வெறுமையின் தீவிரம் இன்னமும் அதிகமாய் கூடிப் போனது. ‘காலம் முழுக்க இப்படிதான் வேஷம் போட்டுட்டு இருப்பாரா?’ மனதில் நினைத்ததை கேட்காமல் அடக்கிக் கொண்டாள் தேஜு.

அடுத்த ஜோடிக்கு மணவறை தயாராகி விட, மணமக்கள் நீளமான சற்றே உயரமான பலகையில் அமர வைக்கப்பட்டனர். ஆனந்தனுக்கு கீழே அமர இயலாத காரணத்தால் இந்த ஏற்பாடு.

பொறுப்பான தனயனாய், தகப்பன் ஸ்தானத்தில் ஆதியும் புரோகிதரின் அருகிலேயே அமர்ந்து விட, தங்கையை அழைத்து வந்து மனையில் அமர்த்தினாள் தேஜு.

தமக்கைக்கு குறையாத அலங்காரத்தில் மனஷ்வினியும் வந்து அமர திருமணச் சடங்குகள் ஆரம்பமாகின. ‘இன்றாவது சிரிக்கின்றானா அல்லது நேற்றைய சிடுசிடுப்புடன் தான் இருக்கிறானா?’ என்ற ஆவலில் மனு, ஆனந்தனின் முகத்தை பார்க்க, அவனோ கடனே என்று அக்னி குண்டத்திற்கு நெய் வார்த்துக் கொண்டிருந்தான்.

 சற்றும் இளகாத முகம், யாரையும் நெருங்க விடாத அழுத்தப் பார்வை என நிமிர்வுடன் அமர்ந்திருந்தான். மறந்தும் மணப்பெண்ணின் பக்கம் திரும்பவே இல்லை.

இதனைக் கண்டு கொண்ட ஆதித்யன் மானசீகமாய் தலையில் கை வைத்துக் கொண்டான். ‘இதென்னடா சோதனை? இப்படி ஒரு பார்வை என் மனைவி பார்க்கவில்லை என்றுதானே நான் கோபித்துக் கொண்டு விலகியது!’ உள்ளுக்குள் முனங்கியபடியே மனையாளின் புறம் திரும்ப, அப்பொழுதும் கணவனின் பார்வையில் தலை தாழ்த்திக் கொண்டாள் தேஜு.

மங்கல வாத்தியங்கள் முழங்க மாங்கல்ய தாரணம் நடைபெற்று வெகு விமரிசையாக இளையவர்களின் திருமணமும் நடந்து முடிந்தது. 

அக்னியை சுற்றி வலம் வருவதற்கென எழுந்து நிற்கும் வேளையில் ஆனந்தன் சற்றே தடுமாற ஆரம்பிக்க, விரைந்து அவனின் கை பிடிக்க வந்தாள் புது மனைவி. 

அவளின் விரைவு கணவனுக்கு தன்மானக் குறைவாகத் தோன்றி விட, பார்வையால் எச்சரித்து அவளை தூர நிறுத்தினான்.

“எனக்கு நடக்கத் தெரியும்!” வீராப்பு பேசியவனின் இடதுகால் சரியாகத் தரையில் பாவாமல், நேராய் நடப்பதற்கு தடையாய் இருக்க, அதற்கு உதவியாய் வந்தது அவனின் கைத்தடி.

வலது கையில் அவளை பிடித்துக் கொண்டு, இடது கையில் தனது கைத்தடியுடன் மிகுந்த சிரமத்துடன் மூன்று சுற்று சுற்றினான் ஆனந்தன்.

‘வருத்திக் கொண்டு நடக்கிறானே!’ மனைவி பாவம் பார்த்த பாவனையில் வேண்டுமென்றே அவளின் கையை இறுக்கமாக அழுத்திப் பிடித்து அவளுக்கு வலியைக் கொடுத்தான்.

“எதுக்கு இவ்வளவு ஹார்சா பிஹேவ் பண்றீங்க ஆனந்த்!” மனஷ்வினி கேட்க, பார்வையால் எரித்தான் கணவன்.

“என்னை யாரும் பாவமா பார்த்தா, எனக்கு பிடிக்காது. நேத்து இதுக்கு தானே என்கிட்டே, நீ வாங்கிக் கட்டிகிட்ட… அது பத்தலையா உனக்கு?” கடுகடுப்புடன் கூற, கசந்த முறுவலில் தலைகுனிந்தாள் மனு.

தம்பியின் சிடுசிடுப்பில் நொந்து கொண்ட அண்ணனுக்கு எங்கே சென்று முட்டிக் கொள்வதென்றே தெரியவில்லை.

“டேய் சின்னவனே! மியூசியமா உன்னை மட்டுமே எல்லோரும் பாக்குறாங்க டா! இன்னைக்காவது உன் கோபத்தை பரண் மேல தூக்கி வை!” இறங்கிய குரலில் அறிவுறுத்தினான் ஆதி.

“இப்ப இருந்தே பொண்டாட்டிக்கு சலாம் போடச் சொல்றியா ப்ரோ? அதெல்லாம் உன்னோட வச்சுக்கோ! நான் எப்பவும் போலத்தான் இருப்பேன்.” வீம்புடன் பேச, “எப்படியோ போ!” என்ற பெருமூச்சுடன் அகன்றான் ஆதி.

திருமணம் முடிந்த கையேடு, ‘சீதா கல்யாண வைபோகமே…’ மெல்லிசைக் குழுவினரால் பாடப்பட்டு, மணமக்களின் ஊஞ்சலாடல் வைபவமும் முடிந்தது.

அதனை தொடர்ந்து நாச்சியார் திருமொழியின் வாரணமாயிரம் தொடங்கி, பத்து பாசுரங்களை பாடி, மணமக்களை விளையாட வைக்கும் வேடிக்கை நிகழ்வுகளும் ஆரம்பமாக, அனைவரின் ஆராவாரத்திலும் மகிழ்விலும் விளையாட்டு நடைபெற மண்டபம் களை கட்டியது.

ஒவ்வொரு விளையாட்டிலும் மனைவியை அகலாத விழி வீச்சில் ஆதி எதிர்கொள்ள, அவளின் பார்வையோ நிலமகளை மட்டுமே நோக்கிக் கொண்டிருந்தது.

மனதின் சிறுமையும் நெஞ்சத்தின் வெறுமையும் சேர்ந்து அவனை முழுதாய் பந்தாடிக் கொண்டிருக்க பல்லைக் கடித்து அமைதி காத்தான் ஆதி.

உண்மையில் அவனது இயல்பு அதுவல்ல. முதல் நாளிலேயே தன்னை இப்படி தவிர்க்க நினைக்கிறாளே என்ற தவிப்பும் துடிப்பும் ஆண்மகனின் மிதமிஞ்சிய கோபத்தைக் கிளறி விட, தனிமையில் மனைவியை பழி தீர்த்துக் கொள்வதாக சபதமே ஏற்றான் ஆதித்யன்.

இளையவர்களின் முறை வர, திருமண விளையாட்டுகள் வேண்டாமென்று ஆனந்தன் முறுக்கிக் கொண்டு நின்றான். ‘என்னை பார்த்த பிறகு தானே திருமணத்திற்கு சம்மதித்து இருப்பான். அப்படி இருந்தும் இவனிடத்தில் ஏன் இத்தனை விலகல்?’ மனதில் எழுந்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் நின்ற மனஷ்வினியின் உள்ளம், அன்றைய வேடிக்கை வைபவங்களை ரசித்து விளையாட வேண்டுமென்ற ஆசையில் சிணுங்கிக் கொண்டிருந்தது.

தன் விருப்பத்தை வெளிப்படையாகக் கூறினால், அதற்கும் தப்பர்த்தம் கற்பித்து தலைகுனியச் செய்வானோ! சபையினரும், ‘அதிகப்பிரசங்கி், கணவனின் விருப்பத்தை ஏற்க மாட்டாயா என்று பழிசொல்லும் தனக்கு வந்து சேருமோ?’ என்ற ஆதங்கத்தில் மருகிக் கொண்டு அமைதியாய் நிற்க, அருணாச்சலம் அவளின் துயர் துடைக்க வந்தார்.

“சின்னவரே! வாழ்க்கையில ஒருநாள்… இதுக்கப்பறம் உங்களை யாரும் வந்து இப்படி விளையாட கூப்பிட போறதில்ல. வாய்யா… எல்லாம் அனுபவிச்ச பார்த்தா தானே ருசி தெரியும். என்ற பேத்தி ஆசையா நிக்குது பாரு! அது முகத்துக்காகவாவது வந்து விளையாடு!” அன்பும் அனுசரணையுமாகக் கூறி ஆனந்தனை விளையாட்டில் ஈடுபட வைத்தார்.

ஒவ்வொரு விளையாட்டிலும் மனைவி ஆவலுடன் பங்குகொள்ள, வெடிக்கப் போகும் பட்டாசு சரமாய் பார்வையால் கணலை கக்கிக் கொண்டே விளையாட்டை தொடர்ந்தான் ஆனந்தன்.

‘முதல்நாளே என் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொள்கிறாளா? இதை இப்படியே விட்டால் நான் தொலைந்து போய் விட நேரிடும். இன்று இரவு இதற்கு தகுந்த பதிலடி கொடுத்து, இவளை என் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.’ என தீர்க்கமாக முடிவெடுத்த பிறகுதான் அவனால் தொடர்ந்து மனம் ஒன்றி விளையாட முடிந்தது.

அவரவர் மனநிலைகளில் சற்றும் மாற்றம் கொள்ளாமல் நால்வரும் இருக்க, மாலைநேர வரவேற்பும் முடிந்து, திருமண இரவும் வந்தது.

தங்களது மாளிகையில் தங்களுக்கான அறையில் ஆதியின் சபதமும் ஆனந்தனின் உறுதியும் சாஸ்வதமாகி, மனைவிகளை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் நேரத்திற்கு காத்துக் கொண்டிருந்தார்கள்.

***