ஜீவநதியாக நீ…
அத்தியாயம் – 23
சில மாதங்கள் கழித்து, அன்று காலை.
தாரிணி விறுவிறுப்பாக செயல்பட்டு கொண்டிருந்தாள். ரவையை போட்டு உப்புமா கிளற, அவளை பின்னோடு அணைத்து, “தாரிணி…” கோபமாக அழைத்தான் ஜீவா. அவன் செயலுக்கும் குரலுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது அவன் அழைப்பு.
“காலேஜ் கிளம்பும் பொழுது இந்த வேலை தேவை தானா? நான் தான் செய்றேனில்லை ? நீ படிச்சா மட்டும் போதும். மத்த வேலை எல்லாம் நான் பார்க்குறேன்” அவன் அழுத்தமாக கூற, “உனக்கு என் மேல கோபமா? அக்கறையா?” அவள் முகத்தில் புன்னகையோடு கேட்டுக் கொண்டே உப்புமாவை கிளற, “கோபம்…” என்றான் அவன் அவள் கன்னத்தில் இழைந்து கொண்டு.
‘நான் காலேஜ் போக ஆரம்பிச்சதுக்கு அப்புறம், ஜீவா என் மேல் உரிமையா இருக்கான். சந்தோஷமாவும் இருக்கான். ஜீவா, யோசிக்குறதெல்லாம் எனக்காக’ அவள் சிந்தித்தபடியே, அவன் பக்கம் திரும்பி, அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக கோர்த்துக் கொண்டு, அவனை ஆழமாக பார்த்தாள்.
“என்ன பார்வை?” அவன் அவள் தலையில் மோதி கேட்க, “உன் கோபத்தை பார்த்துட்டு இருக்கேன் ஜீவா” அவள் நமட்டு சிரிப்பு சிரிக்க, அவன் பெருங்குரலில் சிரித்தான். “ஜீவா, ரொம்ப நாளைக்கு அப்புறம் உன் முகத்தில் சந்தோஷத்தை பார்க்குறேன்.” அவள் அவன் முகத்தை கைகளில் ஏந்தி கூற, அவன் கண்கள் கலங்கியது.
“அம்மா, அப்பா பிரச்சனை நம்ம வாழ்க்கையில் சரியே ஆகாது போல தெரியுது தாரிணி. நான் அதை இப்போதைக்கு யோசிக்க கூடாதுன்னு இருக்கேன். ஆனால், நீ காலேஜ் போறதுல எனக்கு சந்தோசம். நான் வாழ்க்கையில், யாராவது ஒருத்தருக்காவுது நியாயம் செய்யணுமில்லை?” அவன் கேட்க,
“நீ நியாயஸ்தான் ஜீவா. உன் செயலால் வருத்தம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், உன் செயலுக்கு பின்னாடி நிச்சயம் நியாயமான காரணம் ஒன்னு இருக்கும். நீ தப்பு பண்ணிருந்தா… அதுக்கு…” அவள் ஆரம்பிக்க, அவன் அவள் இதழ்களை மூடி, மறுப்பாக தலை அசைத்தான். அவன் கண்களில் காதலும் அக்கறையும் வழிய, அதை அவன் நெஞ்சிலிருந்து உள்வாங்கியபடி அவன் மார்பில் சாய்ந்து கொண்டு தலையசைத்தாள் தாரிணி.
“நான் இன்னைக்கு செய்ய போற செயல், நம்மளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும். நாம நம் எதிர்காலத்தை பத்தி பேசுவோமா?” அவன் அவளை நேராக நிறுத்தி அங்கிருந்த உப்புமாவை எடுத்து அவளுக்கு ஊட்டியபடி கேட்க, அவள் புன்னகையோடு தலையசைத்தாள்.
“தாரிணி, நான் ஒரு ஸ்கூல்க்கு பக்கத்துல கட்டிடத்தை குத்தகைக்கு எடுக்க போறேன். கொஞ்சம் கடன் வாங்கியிருக்கேன். ஆனால், நாம அதை சீக்கிரம் அடைச்சிடலாம். அங்க டியூஷன் சென்டர் ஆரம்பிக்க போறேன். ஸ்கூல் பக்கத்துல இருக்கிறதால, பசங்க அப்படியே வந்திட்டு போறதுக்கு வசதியா இருக்கும். அப்படியே, எண்ட்ரன்ஸ் எக்ஸாம் கோச்சிங் சென்டர், ஐஎஸ் கோச்சிங் சென்டர் எல்லாம் ஆரம்பிக்கலாமுன்னு திட்டம். எனக்கு அந்த மாதிரி வேலைக்கு போறதில் விருப்பம் இல்லை. ஆனால், சொல்லி கொடுக்கிறதுக்கு எனக்கு ரொம்ப இஷ்டம். நான் எல்லா பாடத்தையும் நல்லாவும் படிச்சிருக்கேன்.” அவன் கூற, அவள் அவனையும் சாப்பிட சொல்லி செய்கை காட்ட, அவனும் பேச்சினோடே சாப்பிட்டான்.
“பெரிய பதவியில் வேலைக்கு போனா, நீக்குபோக்கா நடந்துக்கணும். எனக்கு அதெல்லாம் சரிவராது தாரிணி.” அவன் வெளிப்படையாக பேச, அவள் சிரித்துக்கொண்டாள்.”என்ன தாரிணி சிரிக்கிற?” அவன் கேட்க, “உன் கோபம் குறைஞ்சிருக்கு ஜீவா. இருந்தாலும், நான் உன்னை எதிலையும் காட்டாயப்படுத்த மாட்டேன். நீ உனக்கு பிடித்ததை செய் ஜீவா. நீ இப்படி இருக்கிறதை விரும்பித்தான் நான் உன்னை காதலிச்சேன். நமக்கு நிறைய கஷ்டம் தான். நான் இல்லைனு சொல்லலை. ஆனால், என் ஜீவா இப்படி இருக்கிறது தான் எனக்கு பிடிச்சிருக்கு” அவள் கூற, அவன் முகத்தில் மென்மை பரவியது.
“நீ கல்யாணத்துக்கு அப்புறமும் மாறவே இல்லை தாரிணி” அவர்கள் சாப்பிட்டு முடித்து பேசிக்கொண்டே கிளம்பினர். “ஏன் ஜீவா, மாறிடுவேன்னு நினைச்சியா?” அவள் குரலில் வருத்தம் இருக்க, “…” அவன் மறுப்பாக தலை அசைத்து, “நமக்கு வர்ற கஷ்டத்தில் என்னை ஏத்துக்க கஷ்டப்படுவியோன்னு நினச்சேன்” அவன் கூற, “லவ் யூ ஜீவா…” அவள் அவனை பார்த்து கண்சிமிட்டி மடமடவென்று படியிறங்கினாள்.
“அது என்ன எப்பப்பாரு லவ் யூ ஜீவா” அவன் அவள் கைபிடித்து நிறுத்தி கேட்க, “நீ ஒரு தடையாவது அப்படி காதலில் கசிந்துருகி, லவ் யூ தாரிணின்னு சொல்ல மாட்டியான்னு தான்” அவள் கேலிச் சிரிப்பில் இறங்க, அவன் அவள் பேச்சை ரசித்து சிரித்தபடியே, அவள் கல்லூரி நோக்கி வண்டியை செலுத்தினான். ‘நம் காதல் அனைத்தையும் கடந்து, வாழ்வில் வெற்றி பெறச் செய்யும்’ இருவரும் ‘லவ் யூ…’ என்ற சொல்லுக்கு பின் இருக்கும் அர்த்தத்தை அறிந்தவர்களாக அருகாமையை ரசித்து வண்டியில் பயணம் செய்தனர்.
தாரிணியை கல்லூரியில் இறக்கி விட்டுவிட்டு, ஜீவா தான் புதிதாக தொடங்க இருக்கும் கோச்சிங் சென்டர் நோக்கி சென்றான். அவன் அங்கு சென்றதும், அங்கிருந்த பள்ளி நிர்வாகத்திடமிருந்து அழைப்பு வர, அவனும் பள்ளிக்குள் சென்றான். கீதா, அங்கு தான் ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டிருக்க, அப்பொழுது ரவி கீதாவை பள்ளியில் இறக்கிவிட்டான். இருவரும் ஜீவாவை பார்த்துவிட, ஜீவா இவர்களை கவனிக்கவில்லை. ‘எதற்காக இந்த அழைப்பு?’ என்ற கேள்வியோடு பள்ளி அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தான்.
கீதா, மறைந்திருந்து தன் சகோதரனை பார்த்தாள். ‘அண்ணா, எதுக்கு வந்திருப்பாங்க?’ என்ற கேள்வி அவளுள் வந்தது. ரவி காரை ஓரமாக நிறுத்திவிட்டான். ஜீவாவின் செயல்கள் ரவிக்கு அத்துப்பிடி. ஆனால், ஜீவாவின் வளர்ச்சிக்கு ரவி இப்பொழுது குறுக்கே நிற்பதில்லை. ‘தாரிணியை ஏத்துக்க வேண்டாம். ஆனால், அதே நேரம் அவளை கஷ்டப்படுத்தவும் கூடாது.’ என்ற புஷ்பவள்ளியின் வார்த்தைக்கும், தன் மனைவி கீதாவின் மனதிற்காகவும் ரவி முழு பொறுமையை கைப்பிடிக்க ஆரம்பித்திருந்தான். இருந்தாலும் ஜீவா எதற்காக பள்ளிக்குள் செல்கிறான் என்ற கேள்வி எழ, ரவி அங்கு நின்று கொண்டான்.
ஜீவா, நிர்வாகத்திடம் பேசுவதை கீதாவால் பார்க்க முடிந்தது. ஆனால், என்ன பேசுகிறான் என்று கேட்கமுடியவில்லை. ஜீவா, சில மணித்துளிகளில் கோபமாக வெளியே செல்ல, ‘ஐயோ, பிரச்சனையோ? அண்ணன் முகமே சரி இல்லையே’ அவள் புருவம் சுருங்கியது. வெளியிலிருந்து ஜீவாவின் நடை முகம் காட்டிய பாவனையில், ‘அது தானே, இவன் குணத்துக்கு இவன் எங்க அனுசரித்து போகப்போறான்?’ ரவியின் முகத்தில் கேலிப் புன்னகை.
கீதா மடமடவென்று உள்ளே சென்றாள். ரவிக்கு மிக நெருக்கமான இடம் என்பதாலும், கீதா சிறப்பாக பணிபுரிவதாலும் அவளுக்கு அங்கு மரியாதையும், நட்பும் இருக்க, “என்ன பிரச்சனை?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.
“கீதா, இங்க கோச்சிங் சென்டர் ஆரம்பிக்க போறாங்களாம். அதுக்கு அப்படி எல்லாம் ஸ்கூல் ஒத்துக்காது. அப்படி ஒதுக்கணும்முன்னா, கொஞ்சம் பணத்தை அங்க இங்க வெட்டணும்னு சொன்னோம்” அங்குள்ளவர்கள் கூற, “என்னது…” என்று கீதா கண்களை விரிக்க, “என்ன நீயும் வந்துட்டு போன ஆள் மாதிரியே அதிர்ச்சி ஆகுற? நாங்க என்ன வேணுமுன்னேவா கேட்குறோம். மேலிடத்து உத்தரவு.” அவர்கள் கூற, அவளிடம் மௌனம்.
“முதலில் கொஞ்சம் பணம் கொடுத்தா, அப்புறம் பேசி சமாளிச்சிக்கலாமுன்னு சொன்னோம். அந்த ஆள் அதெல்லாம் முடியாது. முடிந்ததை பாருங்கன்னு சட்டம் பேசுறான். நம்ம மேலிடத்தை மீறி எப்படி திறப்பான்? லஞ்சம் வாங்குறது தப்பு சரி. ஆனால், கொடுக்கறதும் தப்புன்னு எப்படி வாழ முடியும்?” அவர்கள் வியாக்கியானம் பேச, “பணம் கொடுத்திட்டா, கோச்சிங் சென்டர்க்கு பிரச்சனை வராதில்லை?” கீதா கூர்மையாக கேட்க,
“ம்… பணம் கொடுத்துட்டா அதெல்லாம் பேசிறலாம். ஆனால், இதில் உனக்கென இவ்வளவு அக்கறை?” அவர்கள் கேட்க, “அப்ப, நான் பணம் தரேன். நான் தான் பணம் கொடுக்கறேன்னு யாருக்கும் தெரிய வேண்டாம். ஆனால், கோச்சிங் சென்டர் அங்க வரணும். நான் தரட்டுமா?” அவள் தீவிரமாக கேட்க, அவர்கள், ‘சரி…’ என்று தலையசைக்க, கீதா பபடவென்று வெளியே செல்ல எத்தனிக்க, “அது யாருன்னு சொல்லவே இல்லையே?” என்று அவர்கள் கேட்க, வாசல் வரை சென்றவள், அவர்கள் பக்கம் திரும்பி, “என் அண்ணன்…” என்றாள் பாசத்தோடு, “சூப்பெரா சொல்லிக் கொடுப்பான்…” என்று கம்பீரமாக கூறிக்கொண்டு வாசலை நோக்கி நடந்தாள்.
கீதா வெளியே செல்ல ஆரம்பித்த வேகத்தில், அவள் ரவியை கவனிக்கவில்லை. அவள் வேகமாக நடக்க, அவளை பின்தொடர்ந்தான் ரவி. கொஞ்சம் தூரத்தில் இருக்கும் அடகு கடைக்கு முன் நின்று, ஒரு நொடி யோசித்தாள். சட்டென்று தன் கழுத்தில் இருக்கும் சங்கிலியை தடவினாள். அவள் கண்களில் கண்ணீர் கோர்த்தது.
‘அண்ணா, முதல் சம்பளத்தில் வாங்கி கொடுத்தது. அண்ணன் உறவு எனக்கு இனி இருக்குமோ? இல்லையோ? இந்த செயின் என் கிட்ட இருக்கும் பொழுது, அண்ணன் என் கூட இருக்கிற மாதிரியே இருக்கும்.’ அவள் விரல்கள் அதை அழுத்த, அவள் கைகள் நடுங்கியது. ‘இதை எல்லாம் விட, அண்ணனின் வளர்ச்சி முக்கியம். அண்ணனை அப்பா ஏத்துக்கணுமுன்னா அண்ணா வாழ்க்கையில் உயரணும்’ எண்ணங்கள் மேலே எழும்ப… எழும்ப தன்னை நிதானிப்படுத்திக் கொண்டாள்.
அவள் தன் சங்கிலியை கழட்ட, அவள் கரங்களை அழுத்தி பிடித்திருந்தான் ரவி. அவள் அவனை அதிர்ச்சியாக பார்க்க, அவள் கைகளை பற்றியபடி காரை நோக்கி நடந்தான். கீதா எதுவும் பேசவில்லை. அவளை காருக்குள் தள்ளி, அவன் மறுப்பக்கம் ஏறினான்.
“என்ன ஆச்சு?” அவன் கேட்க, அவள் சுருக்கமாக நடந்ததை கூறிவிட்டு, மீண்டும் சங்கிலியை கழட்ட, அவன் அவள் கைகளை பிடித்து மறுப்பாக தலை அசைக்க, “இதை தடுக்குற உரிமை உங்களுக்கு கிடையாது. இது என் அண்ணன் வாங்கி கொடுத்தது.” அவள் கூற, “அதனால் தான் கழட்ட வேண்டாமுன்னு சொல்றேன். தடுக்குற உரிமை இல்லாமல் இருக்கலாம். எனக்கு உன் மேல அக்கறை இருக்கலாம் இல்லையா?” அவன் புருவம் உயர்த்த, அவள் தன் கைகளை கீழே இறக்கி கொண்டாள்.
“நான் பணம் தரேன். நீ கொண்டுபோய் கட்டிடு” அவன் கூற, “அதெல்லாம் வேண்டாம். என் அண்ணனுக்கு உங்க தயவு எல்லாம் தேவை இல்லை” அவள் முறுக்கி கொண்டு முகம் திருப்ப, அவன் அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான். “எனக்கு உன் அண்ணனை பிடிக்காது. இப்பவும், எப்பவும் அவன் எனக்கு விரோதி தான். ஆனால், உன்னை பிடிச்சிருக்கே” அவன் கூற, அவள் விழிகள் அவன் முகத்தை வாத்சல்யத்தோடு பார்த்தன.
“இந்த ஜென்மத்தில் உன் அண்ணன் கூட நீ சமாதானமா பேச முடியுமான்னு எனக்கு தெரியலை. உன் அண்ணன் கொடுத்த செயினை நீ இழக்கிறது எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால், நீ வருத்தப்படுறது எனக்கு பிடிக்காது கீது.” அவள் விழியோரம் துளிர்த்த நீரை, அவன் துடைக்க… “அது…” அவள் தடுமாற, “நீ கொடுத்தால் என்ன? நான் கொடுத்தால் என்ன? நான் பிசினெஸ் விஷயமா கொஞ்சம் பணம் எடுத்திட்டு வந்தேன். இதை கொடுத்து, பிரச்சனையை முடி” அவன் கண்களும் சேர்ந்து சமிஞ்சை காட்ட, அவள் எம்பி அவன் கன்னத்தில் இதழ் பதித்து, “தேங்க்ஸ்…” என்றாள் உணர்ச்சிவசப்பட்டு.
அவன் எதிர்பாராத நேரத்தில் அவள் கொடுத்த பரிசில் அவன் ஓர் நொடி ஸ்தம்பித்து நிற்க, அவளை மீறி அவள் செய்த செய்கையில் நாணம் கொண்டு அவள் முகத்தை மூடி கொண்டாள். முகத்தை மூடிக்கொண்டு செம்மை படர்ந்த முகத்தோடு அமர்ந்திருந்த மனைவியை மையலோடு பார்த்தான் ரவி.
“உன் பரிசுக்கு விலை மதிப்பு ரொம்ப அதிகமா இருக்கே” அவன் சுதாரித்துக் கொண்டு கேலி பேச, அவள் மறுப்பாக தலை அசைத்தாள். “பரிசுக்கு விலை அதிகமில்லை. என் பரிசு, உங்கள் அன்போட வெளிப்பாடு. அது விலை நிர்ணயிக்க முடியாத அளவு உயர்ந்தது. உங்களுக்கு பிடிக்காத என் அண்ணனுக்கு, எனக்காக உதவி பண்ணனுமுனு நினைக்குற உங்க அன்புக்கு விலை மதிப்பு இருக்குமா?” அவள் கேட்க, அவன் சிரித்துக் கொண்டான்.
“இது உனக்காக மட்டும் தான் கீதா. எனக்கு என் தங்கை மேல் கோபம். உன் அண்ணன் எனக்கு விரோதி.” அவன் குரலில் அழுத்தம் இருக்க, ‘காலம் அனைத்தையும் மாற்றும்’ கீதா உறுதியாக நம்பினாள். ‘அண்ணனின் வளர்ச்சி அனைத்திற்கும் ஆதரவாக இருக்கும்.’ அவள் நம்பிக்கையோடு பணத்தை வாங்கிக்கொண்டு பள்ளி நிர்வாகிகளை பார்க்கச் சென்றாள்.
***
சில நாட்களுக்கு பின். விடியற்காலை நேரம்.
சற்று விலை குறைவான புடவை தான் என்றாலும் மிக அழகாக புடவை வாங்கி கொடுத்திருந்தான் ஜீவா. தக்காளி நிற சிவப்பில் ஆங்காங்கே பச்சை நிற நூலில் இலைகள் இருப்பது போன்ற சேலையை கட்டிக் கொண்டிருந்தாள் தாரிணி. சட்டென்று உள்ளே நுழைந்த ஜீவா, “சாரி… சாரி…” அவன் வெளிய செல்ல எத்தனிக்க, “ஜீவா…” அவள் கோபமாக அழைக்க, அவன் ஆணி அடித்தாற்போல் அங்கு நின்றான்.
“ரொம்ப பண்ணாத ஜீவா. நான் சேலை எல்லாம் கட்டிட்டேன்.” அவள் கடுப்பாக கூற, “அடியேய், நீ படிச்சு முடிக்கணும். அது வரைக்கும் நான் எதுவும் பண்ணாம இருக்கணும்.” அவன் கண் சிமிட்ட, அவள் அவன் தலையில் தட்டினாள். “நான் நல்லா இருக்கேனா?” அவன் வாங்கி கொடுத்த புடவையை கட்டிக்கொண்டு அவன் முன் நின்று அவள் கேட்க, அவன் மறுப்பாக தலை அசைக்க, அவள் அவனை கோபமாக பார்த்தாள். “ரொம்ப நல்லாருக்க” அவள் அவன் கன்னம் பிடித்து கூற, இருவரும் சிரித்தனர். அவர்கள் மகிழ்ச்சி அங்கு புன்னகை முத்துக்களாக உதிர்ந்தன.
“ஜீவா…” அவள் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு செல்லம் கொஞ்ச, “இப்படி இல்லை, எப்படி கேட்டாலும் எதுவும் நடக்காது.” அவன் உறுதியாக கூறினான். அவர்கள் ஆரம்பிக்கும் கோச்சிங் சென்டரில் இவளும் சில வகுப்புகள் எடுப்பதாக கூற, அவனோ படிப்பு தான் முக்கியம். படிப்பு முடியும் வரை எந்த வேலையும் அவளுக்கு கிடையாது என்று தடா விதித்திருந்தான். அவன் மறுப்பு தெரிவித்ததால் தாரிணி கோபமாக முன்னே நடக்க, அவள் கோபத்தை ரசித்தபடி பின்னே நடந்தான்.
இருவரும் அவர்கள் இருசக்கர வாகனத்தில் கோச்சிங் சென்டெர்க்கு சென்றனர். உள்ளே சென்றதும் தாரிணி அவன் கைகளை பற்றிக் கொண்டாள். “உங்க வீட்டுக்கு அழைப்பு கொடுத்திருக்கோம். எங்க வீட்டுக்கும் அழைப்பு கொடுத்திருக்கோம். யாராவது வருவாங்களா ஜீவா?” அவள் விழிகளில் ஏக்கத்தோடு கேட்க, “நண்பர்கள் வருவாங்க தாரிணி. யார் வந்தாலும், வரலைனாலும் நாம ஒரு பூஜை பண்றோம். எல்லாருக்கும் சாப்பாடு ஏற்பாடு பண்ணிருக்கோம். நம்ம சென்டர் பத்தின விளம்பர பேப்பர் எல்லா இடத்துலயும் கொடுக்கறோம். நம்ம வேலை ஆரம்பமாகும்” உணர்ச்சி துடைத்த முகத்தோடு கூறிவிட்டு ஜீவா தன் வேலைகளை கவனிக்க சென்றுவிட்டான்.
அன்று என்னதான் தாரிணி வீராப்பாக பேசிவிட்டு வந்தாலும், ஜீவா உணர்ச்சி துடைத்த முகத்தோடு அழுத்தமாக பேசினாலும் யாராவது ஒருவர் இன்று வருவார்களா என்ற ஏக்கம் இருவருக்கும் இருக்கத்தான் செய்தது.
உறவுகளின் கரங்கள் இந்த காதலர்களை நோக்கி நீளுமா?
நதி பாயும்…