நான் பிழை… நீ மழலை… 37

நான்… நீ…37

தயங்கித் தயங்கியே மேலே வந்த மனஷ்வினி, தங்களின் அறையில் உறங்கிப் போயிருந்த ஆனந்தனைப் பார்த்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டு ஆசுவாசமடைந்தாள்.

‘குளிச்சிட்டு சத்தமே இல்லாம ஷோஃபால படுத்துடு மனு! நல்ல பிள்ளையா அமைதியா நடந்து போ!’ தனக்குத்தானே அறிவுறுத்திக் கொண்டு, சத்தமில்லாமல் நடந்தவள், குளித்து முடித்து அறைக்குள் வந்த நேரத்தில், உறக்கம் கலைந்து ஷோஃபாவில் அமர்ந்திருந்தான் ஆனந்தன்.

முழிப்பதா, அதிர்ந்து நிற்பதா எனத் தெரியாமல் இவள் திருதிருத்து நிற்க, அதிசயமாய் சிரித்தான்.

‘ஹப்பாடி, சிரிச்சுட்டான்… பதிலுக்கு சிரிச்சு வைச்சுட்டு படுக்கப் போயிடுவோம்!’ நினைத்துக் கொண்டே சிரிப்புடன் கடந்து செல்ல முயன்றவனை தடுத்து நிறுத்தினான் ஆனந்தன்.

“சத்தமில்லாம நடக்கணும்னு நினைக்கிறவ கொலுசை கழட்டி வைக்கணும் செல்லாயி!” என்றபடி அவளை பிடித்து இழுக்க முன்வர,

“வேண்டாம்… எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லன்னு சொல்லிட்டேன்!” உள்ளுக்குள் பதறியபடி பின்னடைந்தாள் மனு.

“அடச்சே… எப்பவும் அதே நினைப்புல இருப்பேன்னு நினைச்சியா? ஜஸ்ட் பஃன்… உன்னோட ரியாக்ஷன் எப்படி இருக்குன்னு பார்க்கறதுக்காக அப்படிச் சொன்னேன்!” சகஜமாக கூறி கண்சிமிட்டிய நேரத்தில், மனு இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தாள்.

“தேங்க்யூ சோ மச் மச்சான்… குட்நைட்!” நிம்மதி பெருமூச்சுடன் அவசரமாக கட்டிலுக்கு செல்ல ஆரம்பித்தவளை, மீண்டும் தடுத்து நிறுத்தியது அவனது பேச்சு!

“ஈவ்னிங் போட்டுக்கறேன்னு சொன்னதைச் செய்யல நீ! மறந்துட்டியா… இல்ல, அவ்வளவு அலட்சியமா?” தன்னருகில் இருந்த உடையை சுட்டிக்காட்டி குத்தலாகப் பேச ஆரம்பிக்க,

‘அடப்பாவி… சண்டை போட எப்படியெல்லாம் காரணம் தேடிப் பிடிக்கிறான்!’ உள்ளுக்குள் புலம்ப ஆரம்பித்தாள் மனு.

“மறந்துட்டேன், நாளைக்கு போட்டு காட்டுறேன்!” சமாளிப்பாக கூற,

“நம்ப மாட்டேன்… இப்பவே போட்டு காட்டு!” அடமாக நின்றவனை மடை மாற்றும் சக்தி சத்தியமாய் இப்போதில்லை என நினைத்தவள், அவன் போக்கிற்கே இறங்கி வந்தாள்.

“சரி குடுங்க!” கையை நீட்டி உடையை கேட்க,

“ஆனா, என் முன்னாடி மாத்திக்கோ!” என்றதும் ஜெர்க்காகி போனாள். மனுவின் சுயம் முழுதாய் விழித்துக் கொண்டது.

“தோடா… விவரம்தான்! அத்தனை ஆசை இருந்தா நீங்களே போட்டு அழகு பாருங்க… என்னை ஆளை விடுங்க!”

“அப்போ எனக்கு போட்டு விடு, கமான்!” என்றபடி டி-ஷர்ட்டினை கழட்ட முற்பட, பயந்து பின்னடைந்தாள்.

“இன்னைக்கு சண்டை இழுக்க வேற எந்த காரணமும் கெடக்கலயா?” இவள் நகர்ந்து கொண்டே இருக்க இவன் முன்னால் வந்து கொண்டே இருந்தான்.

அழுத்தமாய் கேட்ட வாக்கிங் ஸ்டிக்கின் சத்தம் வேறு, அவளுக்குள் இல்லாத கலவரத்தை உண்டு பண்ணியது.

“நல்ல வில்லனுக்கு இதெல்லாம் அழகில்ல மச்சான்!” தளர்ந்து பேசினாலும், அவனது பாவனையோ முன்னே நடந்து வருவதோ மாறவே இல்லை.

“வில்லன்னு பேரெடுத்தாச்சு! இதுல எந்த கேட்டகிரியா இருந்தா என்னடி? கமான்… நானே உனக்கு கட்டி விடுறேன்!”

“வேண்டாம், இதெல்லாம் சரியில்ல…” அழுகுரலில் அவள்!

“பொண்டாட்டி கிட்ட நல்ல பேரு வாங்கினவன்னு எவனும் இல்ல… நானும் அந்த மந்தையில சேரப்போறேன்!” என்றவன் அவளது தோளில் கை வைக்க,

“டிரிங்க்ஸ் எடுத்தியா… இல்ல, ட்ரக்ஸ் யூஸ் பண்ணி இருக்கியா? இல்லாத கிறுக்குத்தனம் பண்ற!” என்றபடி பின்னால் நடந்தவளை நடை மாற்றி கட்டிலுக்கு அழைத்து வநதிருந்தான்

“அட லூசே! இதெல்லாம் எடுத்தா மட்டையாகி படுக்கத்தான் தோணும். ஏன், இதெல்லாம் எடுக்காம தப்பு பண்ண முடியாதா?” என்றவனின் கைகள் அவளது தோள்பட்டையில் அழுந்தப் பதிந்து, இடம் வலம், முன்பின் என விரலால் கோலங்கள் போட்டது

“வேணாம்… படிப்பு முடியட்டும்!”

“பேச்சு ட்ரெஸ் பத்தி தானே… எதுக்கு படிப்பை இழுக்கற?” என்றபடி அவனது கைவிரல் அவளின் கன்னத்திற்கு சென்று கோலத்தை தொடர்ந்தது.

இயல்பாய் எழுந்த கூச்சம், மெலிதாய் ஆரம்பித்த பயம், அதோடு சேர்ந்த பதட்டம் என எல்லாம் சேர்ந்து அவளை வெகுவாகத் தடுமாற வைக்க, கட்டிலில் தோய்ந்து அமர்ந்து விட்டாள் மனு.

“என்ன செல்லாயி அமைதியாகிட்ட… இவ்வளவு தானா உன்னோட தைரியம்?” கேட்டவனின் கையை தடுக்க முயன்றாலும், அதை மறு கையால் தட்டி விட்டான் ஆனந்தன்.

“எதையும் யோசிக்காமதான் பேசுவியா மனு? மூளையே இல்லையா!” கன்னங்களை அவன் விரல்கள் உரசும் போதே மனுவிற்குள் அதிகபட்ச உடல் நடுக்கம். ‘எப்போது என்ன பேசினோம்?’ என யோசிப்பதைக் கூட மறக்க வைத்தான் ஆனந்தன்.

“எதுவா இருந்தாலும் தள்ளி நின்னே பேசுங்க!” வார்த்தை தடுமாறி வர, உதடு கடித்து தலை குனிந்தவளின் இதழை பற்களில் இருந்து விடுவித்தான்.

சட்டென்று அவள் அருகில் அமர்ந்தவன், “நான் எவ்வளவு உடைஞ்சி போயிருக்கேன் தெரியுமா? என் மனசு முழுக்க வலி… காரணம் நீதான்!” அழுத்தமாகக் கூறியவன் நொடியில் அவளை வன்மையாக அணைத்து கோபத்தைக் காண்பித்தான்.

எலும்பு நொறுங்கிப் போகுமளவிற்கு இறுக்கமான அணைப்பிற்குள் சிக்கித் தவித்தவளுக்கு இயல்பாக சுவாசிக்கக் கூட முடியவில்லை.

“என் மேல அப்படியென்ன கோபம்?” தடாலடியாக ஆனந்தன் கேட்டதில் புரியாமல் முழித்தாள்.

“எதுக்கு என்னை அவாய்ட் பண்றே? என்கூட சரியா பேசுறதே இல்ல நீ!” அணைப்பு விலகாமல் குறைபாட்டு படிக்க,

“அது… டைம் இல்ல அவ்வளவுதான்! இனிமே பேசுறேன்! இப்ப விடுங்க ப்ளீஸ்!” நெளிந்து கொண்டே தவித்தாள் மனு.

“தம்பி கூட ஓடிப்பிடிச்சு விளையாட டைம் கிடைக்குதா? அக்கா கூட சிரிச்சு பேச பொழுது இருக்கா!”

‘அட பொறாமை புடிச்சவனே… உன் பிரச்சனை இதுதானா!’ கேட்கத் துடித்த நாவை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

குத்தல் மொழி பேசி இடை அழுத்திக் கொண்டிருப்பவனை கழுத்தை நெரித்து கொன்றால் என்ன? தலையால் முட்டி தள்ளிவிடத் தோன்றியது. அதற்கு வழியில்லாமல் இளித்து வைத்தாள்.

இவளின் சிரிப்பு அவனுக்குள் தீப்பற்ற வைத்ததுவோ! அவனது அணைப்பும் உரசலும் இறுகிப் போனது. அவளை தலையணையில் சாய்த்து, அவளை ஒட்டியே அவனும் படுத்துக் கொண்டான்.

அவனோடு இருந்த இந்த நிலை மனுவின் இதயத்தை அதீத படபடப்பில் துடிக்கச் செய்து கொண்டிருந்தது. தனது உணர்வையும் சிந்தனையையும் தாண்டி ஆனந்தன் சொல்வதை மனதில் வாங்குவது அவளுக்கு சற்று சிரமமாகவே தோன்றியது.

“சாரி!” மெதுவாக கூறியவளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு, “இனி இந்த மாதிரி சாரி கேக்கணும்!” அன்புக் கட்டளையாகவே கூறினான்.

“என்ன ஆச்சு உங்களுக்கு?”

“ஏன் என் முத்தம் பிடிக்கலையா?”

“உங்களுக்கு பைத்தியம் எதுவும் பிடிக்கலையே?” மனதின் அதிர்வை கண்களில் தேக்கி வைத்து மனு கேட்க, இல்லையென்று தலையசைத்தான்.

மீண்டும் கன்னத்தில் அவன் வைத்த முத்தம், கொஞ்சம் அழுத்தமாகப் பதிய, உரசிச் சென்ற பார்வையும் விரல்களும் அவன் கொண்ட காமத்தை சொன்னது.

அவனது அருகாமையை அவளால் சுத்தமாய் சகித்துக் கொள்ள முடியவில்லை. கட்டிலில் அவன் அமரும் பொழுதே எழுந்து ஓடியிருக்க வேண்டுமோ என்று இப்போது நினைத்தாள்

இதற்கு முன்னர் இப்படி மார்போடு ஒட்டி உரசிப் படுத்து பேசிக் கொண்டவர்கள்தான். அப்போதெல்லாம் எந்த முன்னெடுப்பும் செய்யாமல் அவளை விட்டு விடுவான் ஆனால் இன்று… ‘மனு… நீ காலி! உன் மச்சானோட படையல் இன்னைக்கு நீதான்!’ மனசாட்சி நையாண்டி செய்தது.

முகத்தில் வலம் வந்த உதடுகள் ஈர்ப்பு விதியின் பயனாக இதழில் இளைப்பாறியது. அவனது கைகள் இடையில் தந்த அழுத்தமும் மூச்சின் வெப்பமும் அவளுக்குள் கரையத் தொடங்கிய நேரத்தில், “மச்சான்… ஆனந்த்!” என தடுக்க முயன்றவளின் முயற்சியை தடைசெய்து,

“மூச்… மூட் ஸ்பாயில் ஆகுது செல்லாயி!” அவளுக்கே புத்தி கூறி விட்டு காரியமே கண்ணாகினான்.

மனுவின் நிலையில் தயக்கமோ வெறுப்போ இல்லை ஆனால் பயமாக புரியாத புதிராக அவனுக்கு ஒத்துழைத்தாள். ஒருவேளை வன்மையாக அவளை, அவன் கையாண்டிருந்தால் எதிர்த்திருப்பாளோ!

‘யாரும் எட்டிப் பார்க்காத அவனுடைய பிரத்யேக அறையில்தான் மனைவியுடன் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டுமென்று நினைத்தானோ!’ கணவனின் இத்தனை நாள் ஒதுக்கத்தில் இப்படியொரு சிந்தனையும் இடையில் புகுந்து அவளின் சித்தம் கலக்கியது.

“எனக்கு நீதான்… உனக்கு நான் எப்படி?” திடீரென்று காதல் யாசகம் கேட்பவனைப் பார்த்து கிறுகிறுத்து போனாள் மனு.

“உங்களை வேணாம்னு நான் சொன்னதே இல்லையே அந்த மிரு பிரச்…” தொடர விடாமல் அவள் இதழ் அடைத்தவனின் கைகள் இடைச்செருகலாய் இருந்ததை களைய ஆரம்பித்தன.

“பேசியே என்னை சூடாக்கற வித்தைய எங்கே இருந்துடி கத்துக்கிட்ட?” சொன்னவன் தன் உஷ்ணத்தை அவளுக்கு கடத்தி விட்டு சுகமாய் குளிர் காய்ந்தான்.

அதன் பிறகு மூச்சென்ன பேச்சென்ன… நடந்தது மனம் ஒன்றிய தாம்பத்தியமா அல்லது ஒருவனின் ஆதங்கங்களை உணர்ச்சிகளை இறக்கி வைத்ததின் பிரதிபலிப்பா! ஆராய்ந்தால் கலவரம் நிச்சயம். எல்லாம் மறந்து, கரைந்து, மகிழ்ந்தே உறங்கினர்!

மறுநாளின் விடியல்… ஆனந்தனால் கண்களை திறக்கவே முடியவில்லை. கால் மிகவும் கனத்து போனதாய் தோன்றியது.

‘கைகளில் தலையணையை கட்டிக்கொண்டு உறங்கிப் பழக்கமில்லை. ஆனால் இது என்ன மென்மையாக கைகளில் சிக்கி இருக்கிறதே!’ கண்களை மூடிக்கொண்டு கைகளை மூக்கின் அருகே கொண்டு செல்ல, குறுகுறுப்பில் கண்களைத் திறந்தான் ஆனந்தன்.

“அட… செல்லாயி முடி, அதான் செம்ம ஸ்மெல்!” சிரிப்புடன் தன் கழுத்தில் இருந்த முடிகளை ஓரம் தள்ளினான்.

அருகில் உறங்கி இருந்த அவள் முகத்தை பார்த்தான். தோள், முகம், கழுத்து என அவளை ஆராய்ந்த கண்களில் எல்லாம் தட்டுப்பட்டது அவனது முத்த சிவப்பினைதான்.

“பியூட்டி… சாஃப்டி… பிங்கி!” இன்னும் என்னென்னவோ சொல்லி கொஞ்சிக் கொண்டான்.

“போதும் மச்சான்!” முனகிக்கொண்டே அசைந்து அவன் மார்பில் தலைவைத்து படுத்துக் கொண்டாள் மனு.

“மனு… ஆர் யூ ஓகே?” அவள் முகம் பார்த்துக் கேட்டான்

“என் மேல இவ்வளவு அக்கறையா!”

“பெயின் இல்லையே… ஹாஸ்பிடல் போவோமா? ச்சே… உன்கிட்டே கேக்கறேன், பாரேன்! மெடிசின் எதுவும் வேணுமா சொல்லு… வாங்கிட்டு வர்றேன்!” அவன் அக்கறையில் பாகாய் உருகியது மனைவியின் உள்ளம்.

“டோன்ட் வொரி மை டியர் மச்சான்… ஐ அம் ஆல்ரைட்!”

அவனுக்கும் ஏக திருப்தி! மயக்கும் புன்னகையை சிந்தியவன் மனைவியின் கண்களுக்கு காதல் மன்னனாகவே தோன்றினான்.

“லவ் யூ மச்சான்!” தானாகவே முன்வந்து கன்னத்தில் முத்தம் பதித்தாள்.

“தேங்க்ஸ் டா!”

“எதுக்கு?”

“லவ் இல்லாம லஸ்ட்ல நடந்ததோன்னு குழம்பிட்டேன்!”

“சுத்தம்… உங்களுக்கு லஸ்ட் மட்டும் இருந்ததோ?” அவனது குழப்பத்திற்கு நெய் வார்த்தாள்.

“ச்சே… அப்படியெல்லாம் இல்ல.”

“அப்ப லவ்-ன்னு ஒத்துக்கோங்க!”

“லஸ்ட் இல்லாத இடத்துல லவ் எங்கே இருந்து வரும்?” என்றவனை அதிர்ந்து பார்த்தாள்

“அப்போ நேத்து நடந்தது?”

“இனிமே யார் கேட்டாலும் பரீட்சை எழுதியாச்சு… ரிசல்ட் மட்டும் ஒத்திப் போட்டுருக்கோம்னு சொல்லிடு!” என்றவனை முறைத்தபடி எழுந்து அமர்ந்தவள்,

“நேத்து பேசினதுக்காகத் தான் இத்தனை டிராமாவா?” முடிந்த மட்டும் கோபத்துடன் அவன் மார்பில் அடித்தாள். அவனும் சொரணையின்றி தாங்கிக் கொண்டான். அவளுக்கு கோபம் தீரவில்லை.

“எதை ப்ரூஃப் பண்ண இப்படி நடந்துக்கிட்ட… நீயெல்லாம் மனுசனே இல்ல!”

“என்னமோ உன்னை கட்டிப்போட்டு காரியத்தை முடிச்ச மாதிரி பேசுற!”

“அந்த கஷ்டத்தை கூட உனக்கு கொடுக்காம, உன்னிஷ்டத்துக்கு வளைஞ்சு கொடுத்த என் புத்திய செருப்பால அடிச்சிக்கணும்!”

“அடிச்சிக்கோ… நோ அப்செக்சன்!”

“வாழ்க்கையில் உன்கூட இந்த கட்டத்தை தாண்டியே ஆகணும்ங்கிற கட்டாயத்துல மட்டுமே நேத்து உன்னை சகிச்சுகிட்டேங்கறதை சொல்ல வேண்டாம்னு நினைச்சேன்… ஆனா, சொல்ல வைக்கிறியே!”

“ஓஹ்… உனக்கும் இந்த மஞ்சக் கயிறு மேஜிக் எல்லாம் செட் ஆகுதா?”

“வேண்டாம்… நானும் பதிலுக்கு பேச வேண்டி வரும். இதோட நிறுத்திப்போம். சகிப்புங்கிற கசப்பான உண்மைக்கு முகமுடி போட்டுட்டு இனிப்பான பொய்யா நான் வாழ விரும்பல… எப்பவும் போல நீ யாரோ நான் யாரோன்னு இருந்துடுவோம்!” ரௌத்திரமாய் ஒலித்தது மனுவின் குரல்.

“அப்போ பதிலுக்கு நானும் லவ் யூன்னு இனிப்பான பொய்யை சொல்லியிருந்தா நீயும் சந்தோசப்பட்டுருப்ப… நாம பொய்யா வாழ்ந்திருக்கலாம். அது மட்டும் சரியா?” சுற்றி சுழற்றி அடித்து பேசுபவனின் மண்டையை உடைக்க ஏதாவது அகப்படுகிறதா என தேட ஆரம்பித்து விட்டாள் மனு.

“என்ன பிரச்சனைடா உனக்கு? சிலருக்கு தன்னோட வாழ்க்கை பிரச்சனை இல்லாம சந்தோசமா போயிட்டு இருந்தா, அது பிடிக்காதாம்! அந்த லிஸ்டுல மொத இடத்தை உனக்குத்தான் கொடுக்கணும். இனியும் என்னால முடியாது.

நமக்கு இடையில எந்தக் கருமமும் இருந்து தொலைக்க வேணாம். எப்பவும் பிரச்சனைன்னு சொல்லியே முட்டிட்டு திரிவோம். இப்ப திருப்தி தானே!” கோபம் கனன்று கூறியவள் ஒரு முடிவுடன் அன்றைய தினமே கோவைக்கு கிளம்பிச் சென்றாள்.

‘வாழ்க்கை தனக்கு இனிமேலும் என்ன தரக் காத்திருக்கிறது? இன்னும் இழந்து போவதற்கு தன்னிடம் என்ன இருக்கிறது!’ என அவளுக்கே புரியவில்லை.

அவளின் விளையாட்டுத்தனம், துடுக்குப்பேச்சு, துடிப்பான பார்வை என அனைத்தையும் மாற்றிக் கொண்டாள். ஏதோ ஒரு இயலாமை அவளை தலைகீழாய் புரட்டிப் போடத் தொடங்கியது.

அதற்கு நேர்மாறாய் ஆனந்தனின் தினசரிகள் எல்லாம் வண்ணமயமாய் மாற்றம் கொள்ள ஆரம்பித்தன. மனைவி தன்னை அடியோடு வெறுத்துச் சென்று விட்டாள் என்ற வலியைக் கூட அவனால் உணர முடியவில்லை.

அந்தளவிற்கு அவனது கழுத்தை நெருக்கி இருந்தன அவனது கடந்தகால பிரச்சனைகள். அவை அனைத்திற்கும் இறுதி வடிவம் கொடுத்து அனைத்தையும் சுமுகமாய் தீர்த்து வைக்கும் மிகப்பெரிய போராட்டத்தில் இறங்கி இருந்தான் ஆனந்தன்.

அதற்கு பக்கபலமாய் இருந்து சுலபமாய் முடித்துக் கொடுக்க வைத்தது ஆதித்யரூபனின் முன்னேற்பாடுகள். இவை அனைத்தும் முடிவடையும் நேரத்தில் கதிரேசனும் விடுதலை ஆகி வெளியில் வர, அவனுக்கும் சேர்த்தே முடிவுரையை எழுதினர் ரூபம் சகோதரர்கள்.

***