நளவெண்பா 05🕊

eiZ7X2J5395-d9d7bed2

நளவெண்பா 05🕊

 

 

நடந்து வரும் வழியிலேயே வெண்பாவின் விழிகள் குளம் கட்டியிருந்தன. அதனை கவனித்த நளன், “ஏய்… எதுக்கு அழுற?” 

அவளிடம் பதிலில்லை. வீட்டிற்கு வந்தவுடன் பல்லவி வரவேற்றாள். என்ன விடயமென்று அறியாமலேயே!

வெண்பாவின் சோர்வை உணர்ந்த பல்லவி, தனது அண்ணனிடம் கண்ஜாடையில் என்னவென்று கேட்க, “எல்லாம் முடிஞ்சு போச்சு பவி” என்றான் நளன், பல்லவியின் சுருக்கம் பவி. 

அரக்க பறக்க அச்சுதம் ஓடோடி வந்தார்.  

“என்ன ராசா இப்படி பண்ணிபுட்ட,  எல்லார் முன்னாடி ஐயாவ தலைகுனிய வச்சிட்டியே! ஏன் ராசா நமக்கு வேண்டாத வம்பு, அவங்க எம்புட்டு பெரிய ஆளுங்க…  நம்மளால தங்காச்ச நல்லா பார்த்துக்கதான் முடியுமா?” 

பொறுமையாக பேசினாலும் அவருடைய குரலில் அளவுகடந்த துக்கம். 

“அம்மோவ்! அவங்க இதுக்கு முன்னாடி என்னைய எத்தன வாட்டி மட்டம்தட்டி பேசியிருக்காங்க. அப்போ எல்லாம் நீ தலை குனிஞ்சுதானே இருந்த அம்மோவ்!

நானும் எவ்ளோ பொறுமையா இருந்தேன். நானும் வெண்பாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்ன்னு சொன்னா எனக்கு கோவம் வராதா? 

நானும் வெண்பாவும் மாறி மாறி இல்ல இல்லேன்னு சொல்றோம். திருப்பி திருப்பி அதையே சொன்னா நானும் எவ்ளோதான்  பொறுமையா இருக்கதாம். அவருக்கு ஒரு பாடம் கத்துகுடுக்கணும் அதான்.  

பல்லவிக்கு தலை புரியவில்லை. வால் மட்டும் புரிந்தது. குழப்பான நிலையில் என்னவென்று கேட்டால்,  பெரியவர்கள் பேசும்போது பேசுவியா என்று அச்சுதம் கையால் குட்டு வேறு விழும். அப்படியே வாயில் கையை வைத்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். 

வளர்மதி பெற்ற ஒரே பெண்பிள்ளையை நினைத்து கண்ணீர் வடிக்க, நல்லசிவம் மற்றும் ஞானேஷின் கண்களுக்கு மண்ணை தூவிவிட்டு சர்வேஷும் பதற்றமான நிலையில்தான் வந்தான். 

பேசும் வார்த்தைகள் எல்லாம் வெண்பாவின் செவிகளுக்குள் சென்ற வண்ணம்தான் ஆனால் வாய்திறந்து பேச மனமில்லை.

“அதுக்காக… ஆமா கல்யாணம் பண்ணிட்டேனே சொல்லுவியா?  நான் உன்ன அப்படிதான் வளர்த்தேனா? 

தங்காச்சு எம்புட்டு வசதியா வாழ்ந்த புள்ள, நம்ம வீட்ல வாழுறது எம்புட்டு கஷ்டமா இருக்கும்ன்னு யோசிச்சு பாரு ராசா. காலம்பூரா வச்சி காப்பத்தணும் அதை மட்டும் மனசுல வச்சிகோ ராசா”

“விட்டா தாலிய குடுத்து கட்டுன்னு சொல்லுவ ம்மோவ்” எடுத்தோம் கவிழ்த்தோம் என நளன் கூற, 

அச்சுதம் பல்லவி உட்பட வாசலில் நின்றுக்கொண்டிருக்கும் சர்வேஷுக்குமே அதிர்ச்சி! இவன் என்ன பேசுகிறான்? அப்போதுதான் வெண்பாவின் பார்வையும் தெளிந்து மாறியது. 

சர்வேஷ் வெளியே நிற்பதை கண்டு அச்சுதம் உள்ளே அழைத்தார்.  

அனைவரின் பார்வையும் அவனை ரௌண்டு கட்டுவதை உணர்ந்தவன், “ஏன் என்னை எல்லாரும் இப்படி பார்க்குறிங்க. நான் என்ன தப்பு பண்ணேன்.  

இன்னும் ஒரு மாசத்துல  சென்னைல ட்ரொர்னமண்ட் இருக்கு வெண்பாக்கு, அவங்க வீட்ல இருந்தா கண்டிப்பா அவளால விண் பண்ண முடியாது. இங்க இருந்தா கண்டிப்பா அவ விண் பண்ணுவா எனக்கு நம்பிக்கை இருக்கு. காம்படிஷன் முடிஞ்சதும் வெண்பாவ அவங்க வீட்லயே விட்டுறேன் ம்மோவ்.” 

அவன் கூறிமுடித்த அடுத்த வினாடி, வெண்பாவின் கை நளனின் கன்னத்தில் பதிந்தது. அனைவருக்கும் பேரதிர்ச்சி!

சர்வேஷுக்கு அளவுகடந்த ஆத்திரம்  அவன் தங்கையென்ன கடையில் விற்க்கும் பொம்மையா? 

“என்ன சொல்லி என்னைய கூட்டிட்டு வந்த? வா வெண்பா நம்ம வீட்டுக்கு போகலாம்… திரும்பி கொண்டு வந்து விடுறேன்னு சொன்னியா?” வெண்பாவின் கோபம் நியாயமானதுதானே! 

மறுத்து தலை அசைத்தான் நளன். நல்லசிவத்தை நளன் எதிர்த்து பேசும்போது அதில் இருந்த உறுதியை நம்பியே அவனுடன் வந்தாள் அவள். 

“நான் வெண்பாவ கல்யாணம் பண்ற நோக்கத்துல கூட்டிட்டு வரல. அவ ட்ரொர்னமண்ட்ல விண் பண்ணணும். அதுக்காகதான் கூட்டிட்டு வந்தேன். அதான் நானும் ஐயாவ எதிர்த்து பேசினேன். நம்ம கிராமத்துல பொண்ணா பொறந்த பாவமா? நெனைச்சது எதையும் சாதிக்க முடியாதா! அந்த கோவத்துலதான் அப்படி பேசிட்டேன்.” 

நளனின் தங்கை பல்லவியைகூட ஆசிரியராக்க முயற்சிப்பதும் நளனின் பெரிய போராட்டம்தான். அவ்வழியே வெண்பாவும் அவள் நினைத்ததை சாதிக்க வழிவகுக்கிறான். 

“ஓ… அதுவரைக்கும் பல்லவி  பெரிய வீட்ல இருக்கட்டும். தங்காச்ச மறுபடியும் பெரிய வீட்ல விடும்போது பல்லவிய அழச்சிட்டு வா.” என அச்சதம் நளனிடம் கூறிவிட்டு, “நீ பொறுமையா இரு தங்காச்சோ, அவனுக்கு இன்னைக்கு நேரம் சரியில்ல.” என வெண்பாவிடம் கூறினார். 

அதெப்படி அவன் தங்கையை இன்னொருத்தர் வீட்டில் விடுவான். 

“என்ன ராசா முழிக்கிற?” 

“அதெப்படி அம்மோவ்…. நம்ம வீட்டுப் பொண்ண அங்க வீட்ல விடமுடியும். ஏதோ ஒரு விசயத்துக்கு ஏதோ ஒன்ன முடிச்சு போடுற!” நளனின் மனநிலையை யாரும் புரிந்துகொள்ளும் அளவில் இல்லை. 

“ரெண்டும் பொண்ணுங்க விசயம்தான். அவங்க வீட்டு பொண்ண கூட்டிட்டு வரும்போது இனிச்சுது. நம்ம வீட்டு பொண்ண அங்க விட கசக்குதாக்கும்.” 

“நீ கூட்டிட்டு வரும்போது என் தங்கச்சிய நல்லபடியா பார்த்துப்பேன்னுதான் அவ்ளோ வீராப்பா பேசி அனுப்பி வச்சேன். நீ என்னனா… பொம்மை கல்யாணம் மாதிரி பேசிட்டு இருக்க டா.” 

சர்வேஷுக்கு ஆத்திரம்  இருந்தாலும் தங்கையின் வாழ்க்கையை எண்ணி பொறுமை பூண்டிருந்தான். அதுமட்டுமின்றி நளனிடம் சர்வேஷ் அடிதடியாக பேசி பழக்கமும்மில்லை. 

 நளன் வீடு பழைய காலத்தில் கட்டிய களிமண் வீடு இடையிடையே மூங்கில்களும் வைத்து கட்டப்பட்டிருந்தது. 

இரண்டு சிறிய அறைகள், பத்துக்கு பத்து அளவில் வீட்டில் மண்டபம். இரண்டு பேர் நிற்குமளவில் சமையலறை. வீட்டுக்கு வெளியே ஓலையால் பிண்ணிய கழிப்பறை. வீட்டை சுற்றி பூந்தோட்டம். 

சுவர் கரடு முரடாக இருக்க நளன் பத்தாவது படிக்கும்போது சீமெந்து பூசினர் அவ்வளவுதான்.

இந்தமாதிரியான வீட்டில் வெண்பாவை எப்படி வாழ வைப்பது. அவன் இன்னும் படித்து முடிக்கவில்லை. வீடு கட்டவில்லை. 

தொழிலுக்கு செல்லவில்லை. தங்கைக்கு திருமணம் செய்யவில்லை. பல யோசனைகள் தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்தது நளனின் மூளைக்குள். 

இவற்றைவிட வெண்பாவை தோழியாய் பார்த்து, சிறுபிள்ளைப் போல் அவள் குறும்புகளை இரசித்து பழகியவன், எப்படி காதலியாய் பார்க்கப் போகிறானோ? 

நல்லசிவத்தை மாமா, ஞானேஷை மச்சானென்றது வெறும் வாய் வார்த்தையாக அழைத்தது விளையாட்டா? அல்லது வெறுப்பேற்றவா? நளனுக்கு வெண்பாவின் மீது பிடித்தமுண்டு ஆனால் எந்த அளவு என்றுதான் தெரியவில்லை. 

வெண்பா அப்படி அல்ல. நளனின் மீது அக்கறை, அன்பு, அர்ப்பணிப்பு எல்லாமே உண்டு. காதலென்று கேட்டால் இல்லையென்றுதான் கூறுவாள். அதற்கு நல்லசிவம் ஒத்துக்கொள்ளமாட்டார் என்ற ஒரே காரணத்தினால் வீண் ஆசையை வளர்த்துக்கொள்ளாமல் இருந்தாள். 

ஆனால் பிரம்மன் விதியை எப்படியெல்லாம் எழுதியிருக்கான். இருவரின் வாழ்க்கை வியக்குமளவில்!

சில நிமிடம் யாரும் பேசவில்லை. வெண்பா விம்மும் சத்தம் மாத்திரம் விடமால் கேட்டுக்கொண்டிருந்தது. 

“சர்வேஷ் தம்பி, நாளைக்கு நளன் அப்பா வீட்டுக்கு வந்ததும் பேசி ஒரு முடிவு பண்ணிறலாம். செல்லுல சொல்ற அளவுக்கு இது ஒன்னும் சின்ன விசயம் இல்ல. நேர்லயே பேசுவோம். இனி குலசாமி அங்காளம்மன்தான் துணை இருக்கணும்.” என்று இருகைகளையும் கூப்பி தலைக்கு மேல் உயர்த்தி மனதில் வேண்டிக்கொண்டார். 

“ம்ம். வெண்பாவ நல்லபடியா பார்த்துக்கோங்க அத்தமா” என்று வித்தியாசமாக கூற, அச்சுதம் பேந்து பேந்து விழித்தார். 

“என் தங்கச்சிக்கு அத்தென்னா எனக்கும் அத்ததானே! இனி நீங்க அச்சுமா கெடையாது. அத்தமா! போயிட்டு வாரேன் அத்தமா.” 

சர்வேஷ் இரட்டை அர்த்தத்தில் கூறவில்லை. ஆனால் பல்லவி இரட்டை அர்த்தத்தில் எடுத்துக்கொண்டாள். இதயம் படபடத்தது. அவள் அவனை அண்ணார்ந்து பார்க்க, அவனோ அவளை கடைகண் பார்வையால்கூட பார்க்கவில்லை. 

பல்லவி அவனை பார்ப்பாளென்று சர்வேஷுக்கு நன்றாகதெரியும். 

சர்வேஷ் நளனிடம் எதுவும் கூறவில்லை. கூறினாலும் புரிந்துகொள்ளும் மனபக்குவத்தில் அவனில்லை. தங்கையின் தலையை வருடிவிட்டு சென்றான். 

புயலுக்கு பின் அமைதி போல வீடே நிசப்தமாய் இருந்தது. “இப்படியே செவத்த பார்த்துட்டு இருந்து என்ன ஆகும். மணி ஆச்சு சாப்பிடலாம்.” என அச்சுதம் இரவு உணவை நினைவு படுத்த, பல்லவியும் நளனும் கை கழுவ சென்றனர். 

இவனால மட்டும் எப்படி சாப்பிட முடியுமென பார்த்தாள். “ஏய் வெண்பா நீயும் போய் கை கழுவிட்டு வா” 

‘குண்டா தடியா… எப்போ கூப்பிட்டாலும் சாப்பிட ரெடியா இருக்கான்.’ 

நளன், வெண்பாவை சாப்பிட வைப்பதற்காக, “உனக்கு வேணாம்னா சொல்லு, சாப்பாட வேஸ்ட் பண்ணாம அதையும் நான் சாப்பிடுறேன்.” 

ஒரு முறைப்போடு எழுந்தவள் கையை கழுவி விட்டு அமர்ந்தாள். 

அன்றிரவு உணவு சாதத்தோடு மீன் குழம்பு. இதுவே வெண்பாவின் வீடாக இருந்தால், இட்லி, தோசை, குழல் புட்டு என அவளுக்கு பிடித்தவை ஏதோ அது அவளது உணவு தட்டில்.

இப்போதைய சூழ்நிலைக்கு பாதி வயிற்றை நிரப்பிவிட்டு மல்லாக்கு படுத்து உறங்க வேண்டும்.

குளித்துவிட்டு பல்லவியின் உடையை அணிந்து, கொஞ்சமாக சாப்பிட்டு உறங்கச் சென்றால், உறங்குவதற்கு பாய்! வேறுவழி அசதியை போக்க கண்ணயர்ந்தாள். 

காலை விடிந்தது. சதானந்தம் வேலை முடிய வீட்டிற்கு வருகை தந்தார். 

காலேஜ் செல்லாமல் வெண்பா வெளியே அமர்ந்திருந்தாள். அவளை பார்த்தவுடன், “நல்லாருக்கியா மா, எப்போ வந்த?” என அன்பும் அக்கரையுமாய் வினவினார். வெண்பாவை எப்பொழுதும் தனது மகள் பல்லவி போல எண்ணவார்.

“நேத்து நைட்டே வந்துட்டேன் அப்பா” சாதாரணமாகதான் கூறினாள். 

ஆனால், அவருக்கு வெண்பா வழக்கம் போல துடுக்குதனமாக கூறியதாய் தோன்றியது. 

வெண்பா அச்சுதத்தை அச்சுமா என்பதுபோல நளனின் தந்தையும் அப்பா என்றே அழைப்பாள்.

திண்ணையில் முறுக்குடன் நளன் அமர்ந்திருந்தான். பல்லவி கல்லூரிக்கு சென்றிருந்தாள். 

“என்னப்பா காலேஜ் போகலயா?”

“இல்லப்பா” என்றவன் குரலில் அத்தனை தடுமாற்றம். தந்தை என்ன கூறுவாரென்று.

வீட்டுக்குள்ளே செல்ல, அச்சுதம் அவரை கண்டவுடன் பேசாமல் முழுசிக்கொண்டிருக்க, “என்னாச்சு, ஒரு வாரம் கழிச்சு வீட்டுக்கு வந்துருக்கேன். வான்னு கூட கூப்பிடாம அப்படியே பார்த்துட்டு இருக்க?” என அச்சதத்தை பார்த்து கேட்க, 

“வாங்க,  குளிச்சுட்டு சாப்டலாம்.”  மறுவார்த்தை பேசாமல் குளிக்க சென்றார். குளித்து முடித்தவுடன் உணவை வைக்க, பொறுமையாக  உண்ண ஆரம்பித்தார். 

“நளன், வெண்பா சாப்டாங்களா?” 

“ஆமாங்க. புள்ளைங்க சாப்டாங்க.”

“என்னாச்சு, எதும் பிரச்சனையா?” அச்சுதத்தின் முகவாட்டத்தை வைத்தே கேட்டார். 

“ஒன்னுமில்லங்க. நீங்க சாப்பிடுங்க.”

“சாப்பிட்டு முடிச்சதும் சொல்லுவியா?” 

அச்சதத்துக்கு பகீரென்றானது பதில் பேசாது திகைத்துப் போயிருந்தார்.

ஒரு வாரத்திற்கு பிறகு வீட்டிற்கு ஓய்வெடுக்க வந்த மனிதனின் தலையில் எப்படி குண்டை போடுவதென்று தெரியவில்லை.

அவரும் உணவருந்தி முடித்தார். 

“என்னங்க…” அச்சுதத்தின் இழுப்பில், 

“சொல்லுமா?”

“ராசா…. தங்காச்சோ” என கூப்பிட இருவரும் உள்ளே நுழைந்தனர். 

இருவர் முழிக்கும் முழியே சரியில்லை. இருவரையும் அழைத்து பஞ்சாயத்து வைக்க,  சதானந்தத்தின் எண்ணம், 

“என்னமா உன்னைய இவன் கிண்டல் பண்ணானா?” 

“இல்லப்பா” 

“சரிமா, அப்பா தேட முன்னாடி வீட்டுக்கு போயிரு” 

வெண்பா அச்சுதத்தை பாவமாக பார்க்க, “தங்காச்சு இதுக்கு அப்பறம் இங்கதாங்க இருக்கும்.” 

“அவங்க அப்பா சம்மதிச்சுட்டாரா?” 

“இல்லங்க” என அச்சுதம் கணவனிடம் கூறிவிட்டு, ‘விஷயத்த சொல்லு’ நளனுக்கு ஜாடை காட்ட, அவனும் மறுத்து தலையை அசைத்தான். 

நடப்பதை பார்த்து வெண்பா சர்வேஷை அழைக்க, அவன் சரியாக வாசலிலே வந்து நின்றான். 

சதானந்தத்தை அப்பாயென்று அழைக்கும் சர்வேஷ், இன்று வழமைக்கு மாறாக, “மாமா…!” என்று அழைத்தான்.

வித்தியாசத்தை உணர்ந்தாலும் அதனை பெரிது படுத்தவில்லை.

“உள்ள வாப்பா” அழைத்ததோடு, “அம்மா நல்லா இருக்காங்களா?”  என்று வினவ, 

“நல்லாருக்காங்க மாமா” 

நீ சொல்லு நான் சொல்லு என ஆளாளுக்கு முழி பிதுங்கி நிற்க,  சர்வேஷ் கூற ஆரம்பித்தான். 

முதலில் வார்த்தைகள் பிசிர் தட்டி தந்தி அடித்தாலும் கூற வேண்டிய விடயத்தை சரியாக கூறி முடித்தான். 

சதானந்ததின் தலையில் பெரிய பாராங்கல்லை தூக்கி வைத்ததுபோல உணர்வு. 

ஒரு முறைப்போடு அச்சதத்தை பார்க்க, “நான் எதிர்த்து பேசாதேன்னு எவ்வளவோ சொன்னேன். அவன் கேக்கவே இல்லங்க.” 

“அப்பா என்மேல தப்பில்ல.” நளன் தலைகுனிந்து கூறினாலும் குரலில் வீரியமிருந்தது. 

“டேய் நீ வாய மூடு” நளனை கடிந்துவிட்டு, “என்னங்க பண்றது, எல்லாமே நீங்க எடுக்குற முடிவுதான்.” 

“நடந்து முடிஞ்சதுக்கு அப்பறம் யாரு மேல தப்புன்னு ஆராய்ரத நிறுத்திட்டு அடுத்து என்ன நடக்குறதத்தான் பார்க்கணும்.”

நளன் எதிர்த்து பேசியது எந்தவிதத்திலும் தவறாக தெரியவில்லை. இருப்பினும் வெண்பாவை அழைத்துக்கொண்டு வந்து விட்டானே! 

“அதுமட்டுமில்லங்க, தங்காச்ச கூட்டிட்டு வந்ததுக்கு ஒரு காரணம் சொன்னான். பாருங்க!” அச்சுதம் கூறும் தோரணையில், சதானந்தம் நளன் புறம் திரும்ப, 

“ஏன் கூட்டீட்டு வந்தீங்க துரை” 

“அது வந்துப்பா…” இராகம் பாட ஆரம்பித்தவன், ஓட்டப்போட்டிக்காகத்தான் அழைத்து வந்தானென கூற, 

“ஓ… நீங்களே எல்லா முடிவு எடுக்குறீங்க. இப்போ அவ்ளோ பெரிய ஆள் ஆகிட்டீங்க உங்களுக்கும் தங்கச்சி இருக்கத மறந்துறாதீங்க.” என அவர் உரைக்கும் தொனியே புதிதாக இருந்தது. 

எப்போதும்போல வா போ என்று பேசமால் வாங்க போங்க என்று பேசும் தந்தையை நளன் எதிர்ப்பார்க்கவில்லை. 

“அப்பா!” ஏக்கத்தோடு அவன் அழைக்க, சதானந்தத்தின் ஒரு பார்வைதான், நளனின் உதடுகள் ஒட்டிக்கொண்டது. 

வெண்பாவிடம், “அம்மாடி, நளன கல்யாணம் பண்ணிக்கிறியா?” சதானந்தம் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. 

உள்ளுக்குள்ளே இருக்கும் சிறு இதயம் நளனை வேண்டும் வேண்டுமென்றது. அவள் உதடுகளில் குட்டி குட்டி அசைவுகள்.

“சொல்லுமா பயப்படதா, புடிக்கிலனாகூட பரவாயில்ல.” அவரது தீவிரமான கேள்வி மென்மையான குரலில். 

நளனின் முகத்தை வெண்பா பார்க்க, “அவன பார்க்காதமா,  என்னைய பார்த்து பதில் சொல்லு, உனக்கு புடிச்சிருக்கா இல்லயா?”

சர்வேஷ் வெண்பாவை பார்த்து சரியென்று கூறு, என்பதுபோல கண்ஜாடை செய்தான். 

“நான் நளன கல்யாணம் பண்ணிக்கிட்டா, உங்களுக்கு பிரச்சனை வரும்ப்பா அதான் யோசிக்கிறேன்.” 

“உனக்கு விருப்பம்னா எவ்ளோ ரிஸ்க் வேண்ணாலும் எடுக்கலாம் மா” 

சில வினாடி மௌனம். “எனக்கு ஓகே அப்பா!” மிகவும் மெல்லிய குரலில் கூறினாள். 

சூழ்ந்திருந்த அனைவருவரின் மனதிலும் நிம்மதி, நளனை தவற. 

வெண்பா விருப்பத்தை கூறிவிட்டால், நளனிடம் யாரும் அவன் விருப்பத்தை கேட்க மாட்டார்களா? என தந்தையின் முகத்தை கூர்ந்து பார்த்த வண்ணம். 

“என்ன அப்படி பார்க்குற?” சதானந்தம் விட்டேத்தியாக கேட்க, நளன் எதும் பேசவில்லை, மௌனித்தான். 

“உங்கிட்ட யாரும் விருப்பம் கேப்பாங்களான்னுதானே பார்த்துட்டு இருக்க?” நளனின் பார்வை ஆமாம் என்பதுபோல இருந்தது. இருந்து என்ன பிரயோஜனம்!

“அதுக்கு வாய்ப்பில்ல ராஜா” 

அதிர்ச்சியில் நளன், “அப்பாஆஆஆ…” 

 

“ப்ளீஸ் க்ளோஸ் த டோர்” என்று சர்வேஷ் நளனை கிண்டல் செய்தான். நளனுக்கு சிரிப்பு வரவில்லை, கடுப்புதான் வந்தது.

“அச்சு, இவங்க ரெண்டு பேருக்கும் ஜாதகம் பாரு. எதும் பரிகாரம் பண்ணணும்னா அதையும் பண்ணிரு. அப்படியே அடுத்த முகூர்த்தம் எப்போன்னு பார்த்துட்டு வா” சதானந்தம் கூறிட, இதற்கு மேல் நளனின் பேச்சு எடுபடாது என்பதனை புரிந்துக்கொண்டான்.

அச்சுதத்திற்கு ஒரே குஷி, “சரிங்க.”  சர்வேஷின் முகத்தை பார்த்து சந்தோஷத்தை பரிமாறிக்கொண்டார். 

“அத்தமா, நீங்க நேரம் பார்த்துட்டு வாங்க, நான் கல்யாணத்துக்கு தேவையான ஜாமான் எல்லாம் எனக்கு தெரிஞ்சளவு வாங்கிட்டு வாரேன்.” 

“இல்லபா, நாங்களே எல்லாம் பார்த்துகிறோம். உங்கப்பா காசு ஒருவாகூட வேணாம்.” சதானந்தம் இப்படி கூறுவாரென்று எதிர்ப்பார்க்கவில்லை. 

“மாமா நீங்க நெனைக்கிற மாதிரி  நான் செலவு பண்றது அப்பாவோட காசு இல்ல. நான் வேலை பார்த்து எனக்கும் வெண்பாக்கும் கொஞ்சம் சேர்த்து வச்சிருக்கேன்.” 

“சரிப்பா இருந்தாலும் பரவாயில்லை. நாங்களே செலவ பார்த்துக்கிறோம். நீ அந்த காசெல்லாம் வச்சிக்கோ உனக்கு கண்டிப்பா தேவப்படும்.” இதற்குமேல் சர்வேஷ் வற்புறுத்துவதாகயில்லை. 

நளன் வெண்பாவை திருமணம் செய்து கொள்வதில் ஒரே ஒரு பிரச்சனை, அவனுடைய படிப்புதான். 

சதானந்தமும் அச்சுதமும் சேர்ந்து அரும்பாடுபட்டு அவனை படிக்க வைக்கின்றனர். வாழ்க்கையில் இன்னும் செட்டில் ஆகவில்லையென்பது மற்றொரு கவலை. அதற்குள் திருமணமா?  அவன் யோசிப்பது நியாயம்தானே! 

தனக்கு திருமணம் நடக்கபோகிறது என்று வெண்பா எந்தவித உணர்வுகளையும் வெளிக்காட்டவில்லை. பல்லவியின் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டாள்.

அச்சுதம் நேரம் பார்த்த இடத்தில், மூன்று நாட்களுக்கு பிறகு திருமணம் நாள் குறிக்கப்பட்டது.

 

                         ******

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!