நான் பிழை… நீ மழலை..!

pizhai-53e4de94

நான்… நீ…1

 ‘செல்வரூபா திருமண மாளிகை!

ரூபம் தொழில் நிறுவனங்கள் மற்றும் குழுமங்களின் இல்லத் திருமண விழாவிற்கு அனைவரையும் வருக வருகவென வரவேற்கிறோம்.’ என்ற வரவேற்பு வாசகங்கள் நெகிழிப் பலகையில் பளிச்சென்ற வெண்ணிற எழுத்துக்களில் பளபளத்துக் கொண்டிருந்தது.

அதற்கு கீழே,

‘ஆதித்யரூபன் வெட்ஸ் தேஜஸ்வினி.

ஆனந்தரூபன் வெட்ஸ் மனஷ்வினி.’

மணமக்களின் பெயர்கள் பொன்னெழுத்துக்களில் தங்கக் கிரணங்களை வாரியிறைத்து ஜெகக்ஜோதியாய் ஜொலித்துக் கொண்டிருந்தன. பொள்ளாச்சி நகரின் மிகப் பிரபலமான, முற்றிலும் குளிரூட்டப்பட்ட மிகப்பெரிய திருமண மாளிகை அது.

மண்டபமெங்கும் வானில் மிதக்கும் நட்சத்திரங்களுக்குப் போட்டியாக வண்ண வண்ண விளக்குகள் மின்னிக் கொண்டிருக்க, மிக்கி-மவுஸ் வேடம் தரித்த மனிதர்கள், இருபக்கமும் நின்று விருந்தினர்களுக்கு வணக்கம் வைத்துக் கொண்டிருந்தார்கள்.

நான்கடிக்கு ஒன்று என்ற இடைவெளியில் மண்டபம் முழுக்க கட்டப்பட்ட வாழைமரங்களும் மாவிலைத் தோரணங்களும் காற்றின் இசைக்கேற்ப நடனமாடி வந்தவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றுக் கொண்டிருந்தது. 

பனாரஸி, காஞ்சிவரம் பட்டு அணிந்த மூத்தப் பெண்மணிகளும், சில்க் காட்டன், கோரா காட்டனில் பாந்தமாகப் பொருந்திய பேரிளம் பெண்களும், லெஹங்கா மற்றும் அனார்கலியில் மிளிர்ந்த யுவதிகளும் மண்டபம் எங்கும் சலசலத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு போட்டியாக, ஃபார்மல், கேசுவல் ஜீன்ஸ் மற்றும் பட்டு வேஷ்டிகளில் ஆடவரும் கலகலத்தவாறு நடமாடிக் கொண்டிருந்தனர்.

இளையவர்களுக்கு போட்டியாக முதியவர்களும் தங்களின் பங்களிப்பை கொடுத்து விழாவினை சிறப்பிக்கும் வண்ணம் ஆங்காங்கே கூடியிருந்து ஆர்பரித்துக் கொண்டிருந்தார்கள். 

நட்சத்திரப் பூக்களாய் மின்னிக் கொண்டிருக்கும் விருந்தினர்களின் பார்வையை புரிந்து சிரமேற்கொண்டு கவனித்துக் கொண்டிருந்தது புகழ்பெற்ற கேட்டரிங் நிறுவனம். நுண்ணிய இடுக்கிலும் ஆடம்பரமும் பகட்டும் மிளிர்ந்து செல்வச்செழிப்பின் நறுமணத்தை வீசிக் கொண்டிருந்தது. 

நுழைவுவாயிலில் நின்று அத்தனை ஏற்பாடுகளையும் சரிபார்த்துக் கொண்டிருந்த ராஜசேகரை, “அப்பா, உங்கள மேடையில கூப்பிடுறாங்க!” பதினெட்டு வயது மகன் நகுலேஷ் வந்து அழைக்க, விரைந்து உள்ளே சென்றார்.

“எல்லா வேலையும் கவனிக்க ஆள் இருக்காங்க சேகர்… நீ பொண்ணுகளுக்கு அப்பாவா மேடையில வந்து உக்காரு!” பெரியவர் ஒருவர் வலுக்கட்டாயமாக அவரை மேடையேற்றி விட, ஐம்பத்தைந்து வயது ராஜசேகர் பெரும் சங்கோஜத்துடன் மேடையில் ஏறியமர்ந்தார்.

மனமெங்கும் சந்தோஷம் பூரித்து விகசிக்க, அவரின் முகம் அதை கிரகித்து ஆனந்தத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது. தான் பெற்ற இரண்டு பெண் பிள்ளைகளுக்கும், ஒரே நாளில் ஒரே மேடையில் திருமணம் நடக்கப் போவதை நினைத்தே நொடிக்கொரு முறை புளங்காகிதம் அடைந்து சிலிர்த்துக் கொண்டிருந்தார்.

இன்றைக்கு மாலை நிச்சயதார்த்த விழாவும் மறுநாள் காலை திருமணமும், மாலையில் வரவேற்பும் நடக்கப் போவதாக செய்யப்பட்டிருந்த ஏற்பாட்டில், அவரின் மனதில் முகிழ்ந்தெழுந்த சந்தோஷ ஆராவாரங்களுக்கும் ஆர்பரிப்புகளுக்கும் அளவேயில்லை.

மகிழ்விலும் அலைச்சலிலும் முகமெல்லாம் அலைபுற்று இருந்தாலும், அதையெல்லாம் மறக்கும்படியான கடமையுணர்ச்சியில் படபடத்துக் காணப்பட்டார் ராஜசேகர்.

“கார் பார்க்கிங்ல இடமில்லன்னு கேள்விப்பட்டேன். அதுக்கு ஏற்பாடு செஞ்சாங்களான்னு பார்க்க போனேன் அண்ணே!” கடமை வீரராக பேசியபடி மேடையில் ஏறி அமர்ந்தார் ராஜசேகர்.

“எல்லா வேலைகளுக்கும் ஆள் போட்டாச்சு சேகரா! நீ பதறாம ஜம்முன்னு உக்காந்து வேடிக்கை பாரு!” உடன்பிறப்பு ஒருவர் சொல்லிக் கொண்டிருக்க,

“நகுலா, கச்சேரிக்கு எல்லா ஏற்பாடும் சரியா இருக்கான்னு பார்த்துட்டு வா!” அடுத்த வேலைக்கு மகனை ஏவினார் தந்தை.

“அதெல்லாம் எப்பவோ பார்த்து, கச்சேரியும் ஆரம்பமாகப் போகுது. நீங்க குடும்பமா மேடையேறினா விசேசத்தை ஆரம்பிச்சுடலாம்.” மற்றொரு பெரியவர் துரிதப்படுத்த, அனைவரும் அதையே ஆமோதித்தனர். 

“பொண்ணுங்களோட அம்மா எங்கே? அழைச்சிட்டு வரச் சொல்லு சேகர்! நல்லநேரம் போகுது. மாப்பிள்ளைகளும் தயாராகிட்டாங்கன்னு சேதி வந்துடுச்சு!” சுபகாரியம் தொடங்க அவசரப்படுத்தினார் அக்குடும்பத்தின் பெரியவர்.

“அம்மாவை சீக்கிரம் வரச் சொல்லு!” மகனை பார்த்து கூறிய ராஜசேகர், அங்குள்ள ஏற்பாடுகளை சரி பார்க்க ஆரம்பித்தார்.

“இதோ ப்பா!” பதில் சொன்ன நகுலேஷ், மணமகளின் அறைக்கு வேகமாகச் சென்று நின்றான். அங்கே விழாவின் நாயகிகளாக இரண்டு மணப்பெண்கள் அழகு நிலையத்தாரிடம் தங்களை ஒப்படைத்து விட்டு அசையாமல் அமர்ந்திருக்க, அவர்களை உற்று கவனித்துக் கொண்டிருந்தார் சுலோச்சனா.

மணப்பெண்கள் மற்றும் நகுலேஷின் அன்னை அவர். நாற்பத்தியைந்து வயதை தொட்டிருக்கும் அவரின் உருவம், அதை பொய்யென்று அடித்துக் கூறியது.

“இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?” சுலோச்சனா, அழகு நிலையப் பெண்ணிடம் கேட்க,

“முகத்துக்கு டச்சப் பண்ணி விட்டுட்டா, முடிஞ்சிடும் மேடம்!” பதிலளித்தாள் அந்தப் பெண்.

“பொண்ணுகளா… கண்ணை கசக்காம முகத்தை சுருக்காமா இருக்கணும் டா! ஃபோட்டோ சூட் முடியுற வரைக்கும் எதையும் நினைச்சு அலட்டிக்கக் கூடாது.” அக்கறையுடன் சுலோச்சனா அறிவுறுத்த,

“சரிம்மா!” வாய்க்குள் முணுமுணுத்தார்கள் மணப்பெண்கள்.

அங்கே வந்து நின்ற நகுல், “அம்மா… உங்களை ஸ்டேஜ்ல கூப்பிடுறாங்க!” என அழைக்க, அந்த நேரம் தன் தம்பியை பார்த்த இளையவள் மனஷ்வினி,

“டேய் நகுல், இன்னைக்கு நாங்க தானே ஹீரோயின்ஸ்… நீ என்ன ஹீரோவாட்டம் ஷெர்வானில கலக்கிட்டு இருக்க?” செல்லச் சண்டைக்கு அடிபோட, முந்திக் கொண்டான் அவளது தம்பி.

“நீங்க மாம்ஸுக்கு மட்டும்தான் ஹீரோயின்ஸ். ஆனா, இங்கே வர்ற ஆல் டீன் ஏஜ் பியூட்டீஸ்களுக்கும் நான்தான் ஹீரோ! உங்களை விட நான்தான் அல்டிமேட் ஹாண்ட்சமா மேக்கப் போட்டுட்டு கலக்கணும்.” அசராமல் சட்டைக் காலரை உயர்த்திக் கொள்ள, அங்கிருந்த அனைவருமே அதைக் கேட்டு ஆவென்று வாயைப் பிளந்தனர்.

“இந்த நண்டுப் பய சொல்றதை கேட்டியாக்கா? இந்த குச்சி ஐஸ் குள்ளனுக்கு இப்பவே நினைப்பு போகுது பாரு!” தலையிலடித்துக் கொண்ட மனஷ்வினியை மென்மையாகப் பார்த்துச் சிரித்த தேஜஸ்வினி, அதே பார்வையில் தம்பியையும் அளந்தாள்.

“என் சோட்டாபீம் கொஞ்சமே கொஞ்சம் வளர்ந்துட்டானாடா!” கேலி இழையோடிப் பேசிய தமக்கையை பார்த்து சிணுங்கிக் கொண்டான் இளையவன்.

“போ தேஜுக்கா! குட்டியக்கா கூட சேர்ந்து நீயும் என்னை ஓட்டுற!”

“அந்த நல்ல காரியத்தை, இன்னும் கொஞ்ச நேரத்துல, வாடா என் பேராண்டின்னு நீ சைட் அடிக்கிற கிளவர் பாட்டீஸ் எல்லாரும் சேர்த்து வச்சு செய்வாங்கடா ராசா!” மனு அவளின் வழக்கமாக வாரிவிட, இன்னமுமே முகம் சுருக்க ஆரம்பித்தான் நகுலேஷ்.

“மனு, பேச்சை குறை… சீக்கிரம் ரெடியாகிட்டு வாங்க!” இளையவளை அதட்டிய சுலோச்சனா,

பெரிய பெண்ணிடம் திரும்பி, “தேஜு… உனக்கும் சேர்த்துதான் சொல்றேன். மசமசன்னு நிக்காம ரெடியாகுற வேலையைப் பாரு!” கண்டிப்புடன் கூறி விட்டு மகனுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

மிக அத்தியாவசிய இடைவெளியான பதினோரு மாதங்களே இரண்டு மணப்பெண்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாடு.

தோழமைப் பண்பினையும் தாண்டிய பாசப்பிணைப்பு இருவரிடத்திலும் சற்றே அதிகம். சகோதரிகளின் ஒட்டுமொத்த கரிசனத்தையும் மொத்தமாக களவாடிக் கொண்டு அன்பினில் ஆழ்ந்து முக்குளிப்பான் தம்பி நகுலேஷ்.

அன்னையின் அதட்டலை கணக்கில் கொள்ளாமல் மனஷ்வினி தன்போக்கில் தயாராகிக் கொண்டிருக்க தேஜஸ்வினியால் அப்படி இயல்பாக இருக்க முடியவில்லை.

கண்ணாடியில் தெரிந்த அவளது வதனத்தில் அழகு இருந்தாலும் உள்ளத்தில் அமைதி இல்லை. ‘இந்த அலங்காரங்கள் எல்லாம் எதற்கு? மைவிழியை அழகூட்டிய மஸ்கராவும் ஐ-ஷேடும் சிந்திய கண்ணீரை மறைப்பதற்காகவா! இந்த உதட்டுச் சாயம் எதற்கு? அழுகையில் கடித்து காயப்பட்ட அதரத்தை மறைக்கவா!’ மொத்தத்தில் இந்த வாழ்க்கையே எதற்கென்று அவளுக்கு சுத்தமாக விளங்கவில்லை.

தேஜஸ்வினி… பிரம்மன் நிறுத்தி நிதானித்து, ரசனையுடன் எழுதிய ஐந்தரை அடி அழகியல் கவிதை. அழகிற்கு இலக்கணம் எழுத அவளை அரிச்சுவடியாக முன்னிறுத்தலாம். வர்ணனைகள் உவமைகளை தாண்டிய இருபத்தியிரண்டு வயது சிருங்காரச் சித்திரம் அவள்.

பி.டெக் ஃபேஷன் டெக்னாலஜி முடித்த கையோடு வைவா-வில் கலந்து கொள்ள வேண்டிய தினம் இன்று. ஆனால் நிச்சயத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறாள். இல்லாள் பட்டம் பெறுவதற்கான வைவா தான் இந்த நிச்சயத் தாம்பூலத் திருவிழாவோ!

தன் அழகினை ஆராதிக்கும் பாவையிடம் அதற்கான கர்வமும் சற்றே எட்டிப் பார்க்கும். அதன் காரணமே அதற்குரிய படிப்பினைப் படித்து அதில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பெரும் பாடுபட்டாள்.

தன்னைச் சுற்றி இருப்பவர்களும் அவளை வசீகரிப்பவர்களாக ரசனையாளர்களாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுபவள். தனது வாழ்க்கைத் துணைவன் இப்பேற்பட்ட சுந்தரனாய் இருக்க வேண்டுமென்று மனதிற்குள் பெரிய மனக்கோட்டையே கட்டியிருந்தாள்.

ஆனால் இன்றைய தினம் அவளது லட்சியத்தை, கனவைத் தட்டிப் பறித்து, பூஜ்ஜியமாக நிற்க வைக்கப் போகும் வைபவம் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருக்கிறது.

இதை நினைத்த மாத்திரத்தில் தேஜுவின் முகத்தில் விரக்திப் புன்னகையோடு கண்ணீர் திவலைகளும் மெதுவாய் எட்டிப் பார்க்க, தங்கை கிசுகிசுப்பாய் கண்டித்தாள்.

“போதும் தேஜுக்கா… பி பாசிடிவ்!” என்று தமக்கையை சமாதனப்படுத்தியவளுக்கும் அவளின் வேதனை புரியாமல் இல்லை. இவளின் மனமும் அல்லவா உள்ளுக்குள் உடைந்து அழுது கொண்டிருக்கிறது.

மனஷ்வினியின் மூன்றாம் ஆண்டு மருத்துவ படிப்பையும் கேள்விக்குறியாக்கி விட்டு நடைபெறும் இந்தத் திருமணம் சந்தோசங்களை அள்ளித் தரப் போகிறதா அல்லது மீட்க முடியாத இன்னல்களை பரிசளிக்கப் போகிறதா என்றே விளங்காத சுழலுக்குள் சிக்கித் தவிக்கின்றாள்.

என்ன செய்வது? திரும்பி வரவே முடியாத ஒருவழிப் பாதையில் அல்லவா இவர்களின் பயணம் அமைந்து விட்டது. கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லை, மூத்தோர் கொடுத்த வாக்கு, எதிராளிகளின் பழிவாங்கல் என்ற நிர்பந்தத்தில் எல்லாம் இந்தத் திருமணம் நடைபெறவில்லை. முறைப்படி ஜாதகப் பொருத்தம் பார்த்து, பேசி நடக்கும் கல்யாணம் இது.

இந்த பந்தத்தை ஸ்த்திரமாக்கியது சுலோச்சனாவின் பிடிவாதம். குடும்பச் சூழ்நிலையை காரணம் காட்டி இருவரையும் ஒருசேர மணமுடித்துக் கொடுக்கும் அன்னைக்கு மகள்களின் மனவாட்டம் எல்லாம் கால் தூசிக்கு சமானம்.

பெரிய பெண் பொறுப்பானவள், சுயமரியாதையின் மொத்த உருவம். சிறியவள் அன்பானவள், பொறுமையில் தீர்க்கதரிசி. பெண்களின் சுபாவங்களை மனதில் கொண்டே, மகள்களை கிடுக்கிப்பிடி போட்டு மணவறைக்கு அழைத்து வந்து விட்டார் சுலோச்சனா.

“ரெடியாகிட்டீங்களா டா தங்கங்களா! கிளம்பலாமா?” மகள்களை அழைத்துச் செல்வதற்கென வந்து நின்ற ராஜசேகர், மணக்கோலத்தில் நின்ற தனது மக்கட் செல்வங்களின் அழகில் நெக்குருகி நின்றார்.

“என்னை படைச்ச ஆண்டவனுக்கும் இந்த கொடுப்பினை கிடைக்காது சாமி! ரெண்டு பொண்ணுகளை ஒன்னா மணக்கோலத்துல பாக்கற பாக்கியம் யாருக்கு கிடைக்கும்?” தழுதழுத்து சிலிர்த்தவர், மகள்களை தன் இரு தோள்களில் அணைத்துக் கொண்டு, ஒரு நிமிடம் கண்ணை மூடி நின்றார்.

தனது திருமணம், மகள்களின் வரவு, அதற்கு பிறகான தனது நிலை என கடந்த கால வாழ்க்கை நிழற்படமாக விரிய, தலையை உலுக்கிக் கொண்டு நிகழ்விற்கு வந்தார்.

கண்ணாடி மேஜையின் முன்பிருந்த கண்மையின் மீது அவரது பார்வை விழ, விரைந்து எடுத்து வந்து தன் மகவுகளுக்கு திருஷ்டி பொட்டினை செவியின் ஓரம் வைத்து விட்டார்.

“ஏற்கனேவே வச்சாச்சு ப்பா!” மனஷ்வினி சிணுங்க,

“இருக்கட்டும் சின்னத் தங்கம். அப்பா லேசா வைச்சு விடுறேன்!” ஆசையுடன் கூறி சின்ன தீற்றலை வைத்தவர்,

“செல்லத் தங்கம், நீயும் வச்சுக்கோடா!” பெரிய பெண்ணிற்கும் ஆசைதீர திருஷ்டி பொட்டு வைத்து விட்டார்.

அந்த நேரத்தில் அங்கே வந்த நகுலேஷ், ”அப்பா இன்னும் எவ்வளவு நேரம்? சீக்கிரம் வாங்க!” என அழைத்தவன்,

“மை டியர் அக்காஸ், உங்க ஹீரோஸ் அங்கே வெயிட்டிங். சும்மா நச்சு ஃபிகரா செம்ம பெர்சனாலிட்டியா இருக்காங்க!” தமக்கைகளை கலாய்க்கத் தொடங்கினான்..

“அவனாடா நீ? போயும் போயும் ஆம்பளையை சைட் அடிக்கிற! வாட் அபவுட் யூவர் கிளவர் பாட்டீஸ்?” மனஷ்வினி அவனுக்கு பின் பாட்டு பாட,

“என் விஷயத்தை விடு… உன் மேட்டருக்கு வா! அதுவும் உன் ஆளு இருக்காரே அய்யோ… அய்யோ! என்னா கலரு… என்னா தேஜஸு? நீ குடுத்து வைச்சவ குட்டியக்கா… நீ குடுத்து வச்சவ!” பெருமூச்செறிந்து சின்ன மாப்பிள்ளையின் புகழ் பாட, சின்னவளின் மனமும் முகமும் வெட்கத்தின் சாரலில் நனையத் தொடங்கியது.

மகனது கேலியில் பொய்யாய் முறைத்து, மகள்களின் கரம் பற்றி விழா மேடைக்கு அழைத்து வந்தார் ராஜசேகர். நிச்சய தாம்பூலப் பத்திரிக்கை முன்னரே வாசித்து முடிக்கப்பட்டிருந்த படியால், நேரடியாகவே பெண்களை மேடைக்கு ஏற்றி விட ஆயத்தமானார் தந்தை.

பெரியவள் விரக்தியோடும், சிறியவள் ஆசையோடும் மேடையேற எத்தனிக்க, “உங்க அக்கா மொதல்ல ஏறட்டும்!” ஆண்மையின் குரலில் தீர்க்கமாய் கூறி, தேஜஸ்வினி ஏற வலது கரத்தை நீட்டினான் ஆதித்தியரூபன். பெரியவளின் மணவாளனாக நிச்சயிக்கபட்டவன்.

எம்பிராய்டரி செய்யப்பட்ட பட்டு ஷெர்வானியில், மாப்பிள்ளை தலைப்பாகை இடதுபக்க முகத்தை மறைத்திருக்க, அதை பார்த்துக் கொண்டே கை கொடுத்து பாவையவள் படியேறினாள்.

மேடையில் ஏறியதும் மாப்பிள்ளையின் முகத்தை மிக அருகில் முழுதாகப் பார்த்து, அதிர்ந்து விழிக்கவும் மறந்து மூச்சடைத்துப் போனாள் தேஜஸ்வினி.

திரையில் காட்சிகளாக பார்த்துச் சலித்த சுனாமியும் பூகம்பமும், தனக்கே ஏற்பட்ட அதிர்வில் திகிலுடன் மணமகனைப் பார்த்து ஸ்தம்பித்து நின்றவள், தனது அதிர்வின் கனம் தாளாமல் அந்த மேடையிலேயே மயங்கிச் சரிந்தாள்.

மணப்பெண்ணின் மயக்கத்தில் மணமேடை ஏக களேபரமாகி விட, அங்கே அமர்ந்திருந்த சின்ன மாப்பிள்ளை விரைந்து எழ முயற்சி செய்தான். அதை மட்டுமே அவனால் செய்ய முடிந்தது.

தனது நிலையை மறந்து வேகத்துடன் எழுந்த ஆனந்தரூபன் அடுத்த நொடியே தட்டுத் தடுமாறி கீழே விழ ஆரம்பிக்க, விரைந்து வந்து அவனைத் தாங்கிப் பிடித்தாள் மனஷ்வினி. 

நான் பிழை நீ மழலை

எனக்குள் நீ இருந்தால்

அது தவறே இல்லை…

நீ இலை நான் பருவ மழை

சிறு சிறு துளியாய்

விழும் தருணம் இல்லை…

ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே

அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே

அடி அழகா சிரிச்ச முகமே

நான் நெனச்சா தோணும் இடமே…

அடி அழகா சிரிச்ச முகமே

நெனச்சா தோணும் இடமே…

நான் பிறந்த தினமே

கெடச்ச வரமே ஓ… ஓ!

அமர்க்களமாய் ஆரம்பமாகியிருந்த மெல்லிசைக் கச்சேரியும், விழா மனிதர்களின் சலசலப்பில் தடைபட்டு நின்றது.

***