kkavithai27
kkavithai27
கவிதை 27
பாஸ்கர் தங்கள் வீட்டிலிருந்து நேராக பவித்ராவின் வீட்டிற்கு வந்திருந்தார். உள்ளுக்குள் ஏதோ ஒரு அனல் கொதித்துக் கொண்டிருந்தது. செல்வம் ஊரிலுள்ள பெரிய மனிதர்களை அழைத்து வந்து பேசியதிலிருந்து அவர் அவராக இல்லை.
“பவித்ரா!” வாசலில் நின்றபடி சத்தமாகக் குரல் கொடுத்தார் மனிதர்.
உள்ளே பேசிக்கொண்டிருந்த ரிஷியும் பவித்ராவும் திடுக்கிட்டுப் போனார்கள். அது பாஸ்கரின் குரல்தான் என்பதை இருவருமே உணர்ந்தார்கள்.
“அத்தான்! இது அப்பா குரல் மாதிரி இல்லை?!”
“ஆமா பவி.” ரிஷி சொன்னதுதான் தாமதம், பவித்ரா வாசலுக்கு விரைந்து வந்தாள். அவள் சந்தேகம் பொய்க்கவில்லை. சாட்சாத் அவள் அப்பாவேதான் வாசலில் நின்றிருந்தார்.
“அப்பா!” வாசலில் கூவிய மனைவியின் குரல் உள்ளே இருந்த ரிஷிக்கும் கேட்டது. தன் மாமனார் அத்தனைச் சுலபத்தில் நடந்தது அனைத்தையும் மறந்துவிட்டுத் தன்னோடு உறவு கொண்டாட வரமாட்டார் என்று நன்கு தெரிந்திருந்ததால் ரிஷி சற்றே நிதானித்து வெளியே வந்தான்.
“உள்ள வாங்கப்பா, ஏன் அங்கேயே நின்னுட்டீங்க?” மகளின் வரவேற்பை ஒரு கையை உயர்த்தித் தடுத்தார் பெரியவர்.
“உன்னோட உறவு கொண்டாட நான் இப்போ இங்க வரலை பவித்ரா.” உஷ்ணமான வார்த்தைகள். வாழ்வின் மேடு பள்ளங்கள் பெண்ணுக்கு இப்போது ஓரளவு பழக்கம் என்பதால் அதை அவள் கண்டு கொள்ளவில்லை.
“எதுவா இருந்தாலும் உள்ள வந்து பேசுங்கப்பா, உங்க பொண்ணு வீட்டுக்கு இப்போதான் முதல் முறையா வந்திருக்கீங்க.” பவித்ரா சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரிஷியின் தலை அங்கே தெரிந்தது. மருமகனைப் பார்த்த மாத்திரத்தில் பாஸ்கரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. பார்க்கக் கூடாததைப் பார்த்து விட்டது போல அவர் முகத்தில் ஒரு அசௌகரியம்.
“உள்ள வாங்கப்பா.”
“என்னைக் கொஞ்சம் பேச விடுறியா! நான் பேச வந்ததைப் பேசி முடிச்சிட்டுப் போயிடுறேன்.” பாஸ்கர் கத்தவும் பவித்ரா அதற்கு மேல் எதுவும் பேசவில்லை, அமைதியாகிவிட்டாள்.
“நாலு பொண்ணுங்களைப் பெத்ததை நான் என்னைக்குமேப் பாரமா நினைச்சதில்லை, நாலையும் பொண்ணுங்களா எனக்குக் குடுத்த ஆண்டவனுக்குத் தெரியாதா, இதை இவன் தாங்குவானா மாட்டானான்னு!”
“….”
“யாரையும் நம்பி நான் எம் பொண்ணுங்களைப் பெத்துக்கலை! பொண்ணைக் குடுத்த பாவத்துக்கு அழைப்பு வைப்பேன், வந்து சபையை அலங்கரிச்சாப் போதும்! அதை விட்டுட்டு உங்கப் பணப் பவுசை எங்கிட்டக் காட்டாதீங்க!” வார்த்தைகள் ஒவ்வொன்றும் சாட்டையடி போல வீழ்ந்தன. மனம் முழுவதும் ரணமாக வலித்தாலும் அந்த வார்த்தைகளைக் கேட்ட பின்பு கூட ரிஷி எதுவும் பேசவில்லை. அமைதியாகவே நின்றிருந்தான். பேசுவது பவித்ராவின் அப்பா. பிரச்சனைக்கு முழுமுதற் காரணம் தான் செய்த தவறே என்ற அவனுடைய நியாய புத்தி அவன் வாயை அடைத்திருந்தது.
“ஏம் ப்பா இப்பிடியெல்லாம் பேசுறீங்க?” கண்ணீர்க் குரலில் கேட்ட மகளைத் தீர்க்கமாகப் பார்த்தார் பாஸ்கர்.
“உனக்கு இந்தக் கல்யாணத்தை நாந்தான் பண்ணி வெச்சேன் பவி, இது நீயாத் தேடின வாழ்க்கைக் கிடையாது, அப்பா நமக்கு நல்லது பண்ணுவாங்கன்னு நினைச்ச எம் பொண்ணுக்கு நானாத் தேடிக் குடுத்த வாழ்க்கை இது.”
“நான் நல்லாத்தானே ப்பா இருக்கேன்!”
“ஊருக்கு வேணும்னா நீ ஒரு நாடகத்தைப் போட்டு நடிக்கலாம், ஆனா எங்கிட்டயே உன்னோட சாமர்த்தியத்தைக் காட்ட நினைக்காதேம்மா.”
“ஐயோ அப்பா! நான் உங்களுக்கு எப்பிடி என்னைப் புரிய வைப்பேன்! ஆரம்பத்துல எனக்குமே அத்தான் மேல கோபம், வருத்தம், ஆத்திரம் எல்லாமே இருந்துச்சு, அதை நான் மறுக்கலை, ஆனா அதையே என்னாலக் காலம் பூராத் தொடர முடியலை! நீங்க எனக்காகப் பார்த்த மாப்பிள்ளைதான், ஆனா நானும் ஆசைப் பட்டுத்தானேப்பா அத்தானைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன், அவரை என்னால வெறுக்க முடியலைப்பா! நான் அவரை எப்பிடி வெறுப்பேன்?!”
“ஆசைப்பட்ட உன்னோட மனசு நடந்தது அத்தனையையும் மறந்திருக்கலாம், ஆனா நம்பிக்கை வெச்ச என்னோட மனசு எதையும் மறக்கவும் தயாரில்லை, மன்னிக்கவும் தயாரில்லை!” பாஸ்கர் கர்ஜனையாகச் சொல்லி முடித்த போது ரிஷியின் முகத்தில் அவ்வளவு வேதனைத் தெரிந்தது.
“அப்பா, நான் உங்கப் பொண்ணுப்பா, எத்தனை நாளைக்குத்தான் நீங்களும் நானும் இப்பிடித் தள்ளியே நிற்க முடியும்? எனக்காகவாவது நீங்க அத்தானை மன்னிக்கக் கூடாதா? அவரில்லாம என்னோட வாழ்க்கையில இனி எதுவுமே இல்லையேப்பா.”
“எல்லாத்தையும் தூக்கித் தூரப் போடு, உனக்கு இந்த வாழ்க்கையே வேணாம்னுதான் நான் சொன்னேன், ஆனா நீ எம் பேச்சைக் கேட்கலை பவித்ரா.”
“அது என்னால முடியாதேப்பா! அத்தானை விட்டுட்டு நான் எப்பிடிப்பா இருப்பேன்.”
“அப்போ அந்த வாழ்க்கையால வர்ற வேதனைகளையும் வலிகளையும் நீயே அனுபவி, எம் பொண்ணு உள்ளுக்குள்ள நொறுங்கிக்கிட்டு ஊருக்காக ஒரு வாழ்க்கை வாழுறதை என்னாலப் பார்க்க முடியாது.”
“அப்பிடியெல்லாம் எதுவுமே இல்லைப்பா! நீங்களா எதையாவது கற்பனைப் பண்ணிக்காதீங்க.”
“சந்தோஷம்! இப்ப என்னோட ரெண்டாவது பொண்ணுக்கு ஒரு நல்ல சம்பந்தம் வந்திருக்கு, அதை நடத்த எங்கிட்டத் தெம்பிருக்கு, நீங்க யாரும் இதுல மூக்கை நுழைக்க வேணாம்.”
“ஏம் ப்பா, அகல்யா என்னோட தங்கைதானே, அவளுக்கு நான் செய்யக் கூடாதா?”
“நீ கஷ்டப்பட்டுச் சம்பாதிச்ச பணம் உங்கிட்ட இருந்தா அதை நீ தாராளமா உன்னோட தங்கைக்குக் குடு, நான் வேணாங்கலை, அதை விட்டுட்டு யாரோட பணத்தையும் என் வீட்டு வாசப்படிக்குக் கொண்டு வந்து என்னை அவமதிச்சிடாதே.”
“அத்தான் வேற நான் வேற இல்லைப்பா.”
“அது உனக்கு, என்னைப் பொறுத்தவரைக்கும் அது என்னைக்குமே வேற வேறதான்.”
“இப்போ நீங்கதான் என்னை ரொம்பவேக் காயப்படுத்துறீங்கப்பா!” பவித்ராவின் கண்களில் இப்போது கண்ணீர் வழிந்தது.
“இந்த வாழ்க்கையில நீ மனசு நெறைஞ்சு சந்தோஷமா வாழ்ந்தின்னா இந்த அப்பாவை விட அதிகமாச் சந்தோஷப்படுறவன் வேற யாரும் கிடையாது, அதுக்காக அந்த ஆண்டவனை நானும் பிரார்த்திக்கிறேன்.”
“அப்பா!” பவித்ரா இப்போது தனது அப்பாவைக் கட்டிக் கொண்டாள்.
“இந்த பாஸ்கரோட மனசு ஒரு அப்பாவா எவ்வளவு வேதனைப் படுதுன்னு நாளைக்கு உனக்கு ஒரு பொண்ணுப் பொறக்கும் போது உனக்குப் புரியும் பவித்ரா!” இப்போது பாஸ்கரும் கண் கலங்கினார்.
“எனக்குப் புரியுதுப்பா, நீங்க நினைக்கிற அளவுக்கு அத்தான் கெட்டவங்க இல்லைப்பா! அவங்க தப்புப் பண்ணி இருக்கலாம், ஆனா அவங்க எம்மேல வெச்சப் பாசம் பொய்யில்லைப்பா.”
“நல்லது, நீ சந்தோஷமா இரு! எனக்கு அது போதும்!” மகளின் தலையை வருடிக் கொடுத்த பாஸ்கர் அத்தோடு கிளம்பி விட்டார். உள்ளே வரவேயில்லை.
“அத்தான்!” ரிஷியை அப்போதுதான் அங்கேப் பார்த்த பவித்ரா ஓடி வந்து அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். இருவர் முகத்திலும் அத்தனை வலி தெரிந்தது. கேவிக் கேவி அழுத மனைவியின் முதுகைத் தடவிக் கொடுத்தான் ரிஷி.
“அழாதே பவி.”
“அப்பா எப்பிடிப் பேசுறாங்க பார்த்தீங்களா த்தான்.”
“விடும்மா, இந்தளவுக்கு இறங்கி வந்தாரே… அந்த மட்டுக்குச் சந்தோஷம், கூடிய சீக்கிரமே எல்லாம் சரியாகிடும்.”
“எனக்கு நம்பிக்கை இல்லை த்தான்.”
“இல்லைடா, யூ மார்க் மை வேர்ட், இதே அப்பா நம்மக்கூட சந்தோஷமா இருக்கிற ஒரு காலமும் வரும்.” ஆரூடம் சொன்ன ரிஷி மனைவியை அழைத்துக்கொண்டு உள்ளேப் போய்விட்டான்.
***
“இது நியாயமே இல்லைத்தான்.”
“எனக்கும் புரியுது அகல்யா, ஆனா என்னால என்னப் பண்ண முடியும் சொல்லு.”
“ஏன்? உங்கக் கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க அக்காவைப் பார்க்கலையா? நான் அதுக்கு உங்களுக்கு எவ்வளவு ஹெல்ப் பண்ணினேன், நீங்க எல்லாத்தையும் மறந்துட்டீங்க.” அகல்யா குறைப்பட்டாள்.
“நான் எதையும் மறக்கலைம்மா, இப்பக்கூட உனக்கு ஹெல்ப் பண்ண நான் ரெடி, ஆனா அதைச் சொன்னாலே உங்கக்கா பத்ரகாளி ஆகிடுறாளே?” பயந்தவன் போல ரிஷி சொல்லவும் பவித்ராவின் தங்கைகள் மூவரும் சிரித்தார்கள்.
“ஆமா, உங்கத்தான் பொண்டாட்டிக்கு ரொம்பப் பயந்தவர்தான்.” சொல்லிய படியே கையில் பெரிய ட்ரேயோடு வந்தாள் பவித்ரா. தங்கைகள் அனைவரும் அன்று அக்காவின் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அகல்யாவின் கல்யாணம் துரித வேகத்தில் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருந்தது. மாப்பிள்ளையின் ஃபோட்டோவை அகல்யாவிடம் காட்டியதோடு சரி. அதற்கு மேல் பாஸ்கரோ ரேணுகாவோ பெண்ணிடம் எந்த அபிப்பிராயமும் கேட்கவில்லை. அதில் இளையவர்கள் மூவருக்குமேக் கொஞ்சம் வருத்தம் இருந்தது. அதைத்தான் இப்போது தங்கள் அத்தானிடம் புகார் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
“அக்கா, நீயாவது அத்தான்கிட்ட எடுத்துச் சொல்லக் கூடாதா?” அகல்யா மீண்டும் ஆரம்பித்தாள். அவளுக்குத் திருமணத்துக்கு முன்பாக மாப்பிள்ளையை ஒரு முறையாவது பார்த்துப் பேச வேண்டும் என்றிருந்தது.
“எதை எடுத்துச் சொல்லச் சொல்றே அகல்யா, உங்கப்பாக்கு எம் புருஷன்னா சும்மாவே ஆகாது, இதுல நீ வேற ஏன் கோர்த்து விடுறே?”
“எங்கப்பா உனக்கு யாருக்கா?” கடைக்குட்டி குறும்பாகக் கேட்கவும் அவளை முறைத்துப் பார்த்தாள் பவித்ரா.
“அத்தான், ப்ளீஸ் அத்தான், நீங்களாவது என்னைப் புரிஞ்சுக்கோங்க, வெறும் ஃபோட்டோவை பார்த்துட்டு ஒரு மனுஷனைக் கல்யாணம் பண்ணிக்க முடியுமா?” அகல்யா திரும்பவும் புலம்பினாள்.
“அதை எதுக்குடி எம் புருஷன் கிட்டச் சொல்றே? உங்கப்பாக்கிட்டப் போய் சொல்லு.” பவித்ராவிற்கு அப்பா வீடு வரை வந்து தன் கணவனை அவமானப் படுத்திய வருத்தம். அதைத் தன் தங்கைகள் மீது காட்டிக் கொண்டிருந்தாள்.
“அக்கா, நீ கொஞ்சம் சும்மா இருக்கியா, நான் உங்கிட்டப் பேசல்லை, என்னோட அத்தான்கிட்டப் பேசுறேன்.” அகல்யா சட்டென்று சொல்லவும் பைரவியும் தர்ஷினியும் வாய் பொத்திச் சிரித்தார்கள்.
“அத்தான், இவளுங்க பேச்சைக் கேட்டுக்கிட்டு நீங்க எதுவும் பண்ணிடாதீங்க, அப்புறம் இவங்கப்பா இங்க வந்து சத்தம் போடுவாரு, அப்பிடி ஏதாவது நடந்துச்சு, அதுக்கப்புறம் நான் பொல்லாதவளா ஆகிடுவேன்!” கணவனை மிரட்டினாள் பவித்ரா.
“ஐய்யோ! நம்ம பவிக்காக்கு எவ்வளவு கோபம் வருது!” தர்ஷினி வாயைப் பிளக்க இப்போது ரிஷி கூடச் சிரித்தான்.
“என்னோட நிலைமையைப் பார்த்தியா தர்ஷி? சத்தமாப் பேசாத உன்னோட அக்காவே இப்போ என்னை எப்பிடி மிரட்டுறா!”
“ஆமாத்தான்.” அத்தானோடு பெண்கள் மூவரும் கூட்டுச் சேர்ந்து விட பவித்ரா எழுந்து உள்ளேப் போய்விட்டாள். ஆனால் ரிஷி அவள் பின்னோடு வந்தான்.
“பவி, அகல்யா பாவம் டா.”
“அது எனக்கும் புரியுது த்தான், ஆனா நாம என்னப் பண்ண முடியும்? பெத்தவங்களுக்கு அது புரியணுமில்லை!”
“அத்தான் ஏதாவது பண்ணுவாங்க எங்கிற நம்பிக்கையில கிளம்பி வந்திருக்காடா.”
“நீங்க ஏதாவது செய்யப் போய் அது அப்பா காதுல விழுந்தா அவ்வளவுதான்!”
“அதெல்லாம் பார்த்துக்கலாம் பவி, நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி உன்னைப் பார்க்காம நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன், அப்போ இந்தச் சின்னப் பொண்ணுங்க எவ்வளவு ஹெல்ப் பண்ணினாங்க, நீ மறந்துட்டியா பவி?” சரசம் பண்ணிய கணவரைப் பார்த்துப் புன்னகைத்தாள் பவித்ரா.
“ஒரு முடிவோடதான் இருக்கீங்க அப்போ?!”
“ஜஸ்ட் ஒரு ஹாய் சொல்லிட்டு வந்தர்றோம் பவி.” மனைவியின் நாடியைப் பிடித்துக் கொஞ்சியவன் மெதுவாக அகல்யாவோடு வெளியேப் போய்விட்டான்.
“எங்கடி போறாங்க ரெண்டு பேரும்?” பைரவியிடம் பாய்ந்தாள் பவித்ரா.
“அதுவா பவிக்கா, நம்ம வீட்டுக்கு வரப்போற மாப்பிள்ளை அத்தானைப் பார்க்கணும்னு சொன்னாராம்.”
“எதுக்கு?”
“அது தெரியலையே.”
“அதுக்கு அகல்யா எதுக்குக் கூடப் போறா?”
“அக்கா… மாப்பிள்ளை அத்தான் கூடப் பேசும் போது அகல்யாவும் அவரைப் பார்த்த மாதிரி ஆகுமில்லை.”
“ப்ளீஸ் அக்கா… நல்ல அக்கா இல்லை…” இப்போது தர்ஷினி பவித்ராவின் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ள பெரியவள் சிரித்துவிட்டாள்.
“ஹேய்! அக்கா சிரிச்சுட்டா, அக்கா சிரிச்சுட்டா!” இளையவர்கள் இங்கே ஆர்ப்பரிக்கும் போது அங்கே…
“ஹாய், ஐம் கார்த்திக்.” ப்ளாக் ஆடியிலிருந்து இறங்கிய ரிஷியை நோக்கிக் கையை நீட்டினான் அந்த இளைஞன். ஜீன்ஸ், ஷர்ட்டில் இருந்தவன் பார்க்க நன்றாக இருந்தான். ரிஷிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
‘அகல்யாக்கு இந்தப் பையன் பொருத்தமா இருப்பான்.’ என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டான்.
“ஹாய் கார்த்திக்.” ரிஷியும் அந்த இளைஞனின் கையைப் பிடித்துக் குலுக்கினான்.
“ரொம்ப தேங்க்ஸ் ங்க, கூப்பிட்டதும் எந்த மறுப்பும் சொல்லாம வந்ததுக்கு.”
“இதுல என்ன இருக்கு கார்த்திக், அப்புறம்… கல்யாண வேலையெல்லாம் எப்பிடிப் போகுது?”
“அது நல்லாப் போகுதுங்க, அதைப் பத்தி உங்கக்கிட்டப் பேசத்தான் நான் கூப்பிட்டேன்.”
“ஓ… ஏதாவது பிரச்சினையா கார்த்திக்? எதுவா இருந்தாலும் எங்கிட்ட நீங்கத் தாராளமாப் பேசலாம்.”
“பிரச்சினை எதுவும் இல்லை… ஆனா…” பையன் எதையோச் சொல்லத் தயங்கினான்.
“சொல்லுங்க.”
“அகல்யாவோட ஃபேமிலியை எனக்கு ரொம்ப நாளாவேத் தெரியும்.”
“ஓஹோ! எப்பிடி?” இந்போது ரிஷியின் முகத்தில் சிரிப்புத் தோன்றியது. கார்த்திக்கின் முகம் சிவந்து போக தலையைக் குனிந்து கொண்டு அவனும் புன்னகைத்தான்.
“பாஸ்கர் சாரோட ஸ்கூல்லதான் நானும் படிச்சேன், அப்ப இருந்தே எனக்கு அகல்யாவை தெரியும்… ஆக்சுவலி… எனக்கு அகல்யாவை ரொம்பப் புடிக்கும்…”
“அட்ரா சக்கை… கதை இப்பிடிப் போகுதா?! அப்போ ஏன் இதை அகல்யாக்கிட்ட நீங்க இதுவரைக்கும் சொல்லலை?”
“ஐயையோ! பிரின்சிபாலோட பொண்ணு, அதோட எங்க வீட்டுல தெரிஞ்சா அப்பா தோலை உரிச்சிடுவாங்க!”
“அடடா!” சுவாரஸ்யமாக ஆச்சரியப்பட்டாலும் ரிஷியின் மனதுக்குள் ஆயிரம் சிந்தனைகள் தோன்றின. தான் வாழ்ந்த வாழ்க்கை முறைக்கும் தன்னெதிரே நிற்கும் இந்தப் பையனின் வாழ்க்கை முறைக்கும் எத்தனை வித்தியாசம் என்று யோசித்தான்.
“ஆனா எம்மனசுல இப்பிடியொரு ஆசை இருக்குன்னு அப்பாக்கு எப்பிடியோத் தெரிஞ்சிருக்கு, அதுதான் தானாவே இந்தப் பேச்சை ஆரம்பிச்சிருக்கணும்.”
“சூப்பர் கார்த்திக்.”
“நான் இதெல்லாம் எதுக்கு இப்ப உங்கக்கிட்டச் சொல்ல வர்றேன்னா…”
“ரிஷி ன்னு கூப்பிடலாமே!”
“ரிஷி… எங்கப்பா டௌரி விஷயமா அகல்யாவோட வீட்டுல பேசி இருப்பாங்க…”
“ம்…”
“அதுல எனக்கு உடன்பாடு இல்லைத்தான், ஆனாலும்… பெரியவர்களை என்னால எதுவுமேச் சொல்ல முடியலை.”
“இட்ஸ் ஓகே கார்த்திக்.”
“இல்லை ரிஷி, அப்பா சொல்லுற அமௌன்ட் அகல்யா வீட்டைக் கஷ்டப்படுத்தும்.”
“இப்போ என்னப் பண்ணலாம்னு நினைக்கிறீங்க? இந்தக் கல்யாணப் பேச்சை நிறுத்திடலாமா?” குறும்பாகக் கேட்டான் ரிஷி.
“ஐயையோ! அப்பிடி எதுவும் பண்ணிடாதீங்க! நான் என்னச் சொல்ல வர்றேனா… நீங்க என்னைத் தப்பா எடுத்துக்கக் கூடாது… இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்.” ஆயிரம் முஸ்தீபுகள் போட்ட இளையவனை ஒரு வியந்த பார்வையோடு பார்த்திருந்தான் ரிஷி.
‘இவன் இப்போது என்ன சொல்ல வருகிறான்?!’
“எங்கிட்ட ஒரு டென் லாக்ஸ் இருக்கு, அதை நான் உங்கக்கிட்டக் குடுக்கிறேன், அதை நீங்க எப்பிடியாவது அகல்யாவோட வீட்டுல சேர்த்துடுங்க, அவங்களுக்கு இப்போ இது உதவியா இருக்கும், ப்ளீஸ் ரிஷி.”
“ஹா… ஹா…” தன் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சிய இளையவனைத் தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான் ரிஷி. மனதுக்கு நிறைவாக இருந்தது. இவனால் அகல்யாவின் வாழ்க்கைச் சுகப்படும் என்ற நம்பிக்கை அந்த நொடி தோன்றியது.
“பணத்துக்கான எல்லா ஏற்பாடும் நான் பண்ணிட்டேன், அதைப் பத்தி நீங்க எந்தக் கவலையும் படாதீங்க, கல்யாணம் கல்யாணம்னு அதை நடத்திக்க மட்டும் பார்த்தாப் பத்தாது மாப்பிள்ளை சார், பொண்ணையும் கொஞ்சம் திரும்பிப் பார்க்கணும்.” ரிஷி கேலி பண்ணினான்.
“ஆசைதான்… ஆனா பாஸ்கர் சாருக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்!”
“அதுசரி… இந்தாங்க, இந்த கீயை புடிங்க.” ரிஷி தனது கார் சாவியைத் தன்னிடம் நீட்டவும் கார்த்திக் திகைத்தான்.
“எதுக்கு ரிஷி?”
“ஒருவேளை உங்களுக்குப் பிடிச்ச யாராவது எங்கார்ல இருக்காங்களோ என்னவோ?!” சட்டென்று ரிஷி சொல்லவும் கார்த்திக்கின் முகம் மலர்ந்து போனது.
“ரிஷி! நீங்க என்ன சொல்றீங்க?!”
“உங்களுக்கு அரை மணித்தியாலம் டைம் குடுக்கிறேன், யார் கண்ணுலயும் படாம, என்னை எந்த வம்புலயும் மாட்டி விட்டுடாம என்ஜாய் பண்ணிட்டு வாங்க.”
“நிஜமாவா?!”
“கார்த்திக், டைமை வேஸ்ட் பண்ணாதீங்க.” ரிஷி சொன்னதுதான் தாமதம், அவனை இறுக அணைத்த கார்த்திக் காரை நோக்கிப் போய்விட்டான். ரிஷியின் அட்டகாசமான சிரிப்பு அவனைத் தொடர்ந்தது.
சுற்றிவர இருந்த இயற்கையை ரசித்தபடி ரிஷி ஆழ்ந்து மூச்சு விட்டான். இந்தக் காதல் மனிதனை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது! இந்த கார்த்திக் நினைத்தால் ஊரிலிருக்கும் வசதியான வீட்டிலிருந்து பெண் எடுக்கலாம். ஆனால் தான் ஆசைப்பட்டவளோடு வாழவேண்டும் என்பதற்காகப் பெற்றவர்களுக்குத் தெரியாமல் பணம் தர முயலுகிறான்!
சட்டென்று ஃபோனை எடுத்த ரிஷி பவித்ராவை அழைத்தான். இங்கு நடந்தது எதையும் ஒன்று விடாமல் மனைவியிடம் ஒப்புவித்தவன் வாய்விட்டுச் சிரித்தான். பவித்ராவும் கொஞ்சம் நெகிழ்ந்துதான் போனாள்.