நினைவு தூங்கிடாது 2.1

நிஜம் 2

பாலும் கசந்ததடி

உணவும் வெறுத்ததடி 

 என் அருகில் நீ இல்லாததால்

 என்  மஞ்சமும் எரியுதடி 

என் அவல நிலையை

 என்னவென்று நான் சொல்ல

ருத்ரேஸ்வரன்! எரிமலையின் கொந்தளிப்போடு கொதித்துக் கொண்டிருந்தான்.

அவனால் உண்ண முடியவில்லை; உறங்க முடியவில்லை; எந்த வேலையிலும் கவனத்தை செலுத்த முடியவில்லை. ஏன்?

ஒரு வாரம் முன்பு விருது வழங்கும் விழாவில், நடந்த அனைத்து நிகழ்வுகளும் மாறி, மாறி அவன் கண் முன்னால் தோன்றி அவனது நிம்மதியை குலைத்தது.

அன்று விருது வழங்கிய பின் மேடையிலிருந்து இறங்கிய ருத்ரேஸ்வரன், தன் இருக்கைக்கு சென்றுவிட்டான். எப்படியும் மித்ரா அவனருகில் தான் அமர்வாள் (அங்கிருந்து எழுந்து சென்ற பெண் திரும்ப அங்கு தான் வருவாள்) என்ற நம்பிக்கையோடு அமர்ந்திருந்தான்.

ஆனால் அவனின் நம்பிக்கையை பொய்யாக்கிய ரிஷி வர்மா, அவளை அழைத்துச் சென்று, அவனருகே அமர்த்திக் கொண்டான். அதன் பிறகு, மீறி போனால் பதினைந்து நிமிட நிகழ்ச்சி நடந்திருக்கும். அந்த நேரம் முழுவதும், ருத்ராவின் பார்வை இவர்கள் மேல் நிலைத்திருந்தது. அந்த குறுகிய நேரத்தில், ருத்ரா தன் கை முஸ்டியை, ஆயிரம் முறையாவது கோவத்தில் இறுக்கியிருப்பான். 

ருத்ரா கோபப்படும் படி என்ன நடந்தது?

மித்ரா, ரிஷி இருவரும் சுற்றியிருந்த கூச்சலுக்கு மத்தியில், நெருங்கி பேச வேண்டியதாக இருந்தது. அவர்கள் பேசினார்கள், சிரித்தார்கள், பேசி சிரித்தார்கள், பேசும் போது தோள்கள் உரசிக் கொண்டது. மித்ராவும் அந்த உரசலை கண்டு கொள்ளவில்லை. அவர்களின் நெருக்கத்தை, காண காண ருத்ரேஸ்வரனின் கோபம் பன்மடங்காக பெருகியது.

விழா முடிந்து விருந்து தொடங்கியது. அங்கு நடந்த காட்சிகளை கண் கொண்டு பார்க்க முடியவில்லை ருத்ரேஸ்வரனால். ரிஷி வர்மாவுக்கு மித்ரா உணவு பரிமாறினாள். உணவின் இடையில் பெண் ஏதோ சொல்ல, அவள் தட்டில் இருந்த எச்சில் உணவை, எந்த வித சங்கோஜமுமின்றி ரிஷி வர்மா எடுத்து உண்டான். இதைப் பார்த்த ருத்ராவின் ரத்தம் கொதித்தது. 

கிளம்பும் சமயம் மித்ரா ஏதோ சொல்ல, அவளின் காதை செல்லமாக பற்றிய ரிஷி, அவளது காதருகில் ரகசியம் பேச அவள் முகம் சிவந்தது. அது கோபத்தாலா? வெட்கத்தாலா?

இது அனைத்தையும் பார்த்த ருத்ராவின் மனம் கொதித்தது.’யார் சொத்தை? யார் உரிமை கொண்டாடுவது?’ மனம் முழுவதும் கோபத் தீ கொழுந்து விட்டெரிந்தது. கஷ்டப்பட்டு தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டவன், பெண்ணை நெருங்கினான்.

அவன் முகம் காண, அவளது விழிகள் உயர்ந்தது. அவளின் விழியோடு தன் விழியை கலக்க விட்டவன்,”நீ என்னவள். எனக்கே எனக்கு மட்டும் சொந்தமானவள். இனி உன்னை விடுவேன்னு கனவில் கூட நினைச்சுடாத. இந்த ருத்ராவின் சொத்து, இப்படி பப்ளிக்ல மத்தவங்க கூட இழஞ்சு சீன் கிரியேட் பண்ண கூடாது. விரைவில் சந்திப்போம். வரட்டா பொம்முக்குட்டி.” என ரிஷியுடனான அவளின் நெருக்கத்தை சுட்டிக்காட்டி, அவளின் கன்னம் தட்டி, ரிஷி வர்மாவை ஒரு எச்சரிக்கும் பார்வையோடு விடைபெற்றான். அந்தப் பார்வைக்குண்டான அர்த்தம் என்னவோ? ஆனால் அந்தப் பார்வை மித்ராவின் மனதில், குளிரை பரப்பியது உண்மையே.

ரிஷியும் மித்ராவும், ருத்ராவின் பார்வை, பேச்சு, அதுக்கும் மேல் அவனது செயல், என அனைத்தையும் கண்டு உறைந்து போனார்கள். சிறிது நேரத்தில் சுயநினைவடைந்த ரிஷி, மித்ராவை சமாதானம் செய்து, அவளை அழைத்துச் சென்று அவன் வாகனத்தில் ஏற்றி, அவளருகே அமர்ந்து காரை கிளப்பினான். இது அனைத்தையும் பார்த்த ருத்ரா,”கூடிய சீக்கிரம் இவர்களை பிரிக்க வேண்டுமென’ முடிவு செய்துகொண்டான். 

வீட்டுக்கு சென்ற ருத்ரேஸ்வரன் தன் தந்தை ஈஸ்வர மூர்த்தியிடம்,”நான் ஃபங்ஷன்ல அறிவிச்ச மாதிரி மித்ராலினி கூட நடிக்க போறேன். கதையை நான் எழுதரேன். அதுக்கு இயக்குநரை ரெடி பண்ணுங்க.” என வேண்டுகோளாக இல்லாமல், கட்டளையாக சொல்லி சென்றான்.

ஈஸ்வர மூர்த்தி குழம்பிப் போனார். ‘இவன் நம்ம கிட்ட சொன்னானா? இல்ல நமக்கு கட்டளையிட்டானா? திரையுலகத்திற்கு வர மாட்டேன்னு சொன்னான். இப்போ நடிக்க தயாராகிட்டான். இதுல கதையை வேற இவனே எழுத போறான்னா? இது எங்க போய் முடியுமோ?’ என மனதில் சலித்துக்கொண்டு, அப்போதுதான் அங்கே வந்த தன் மனைவியிடம்,

“இவன் மனசுல என்ன நினச்சிட்டு இருக்கான் அம்பி? இவன் நினைக்கிறதை செஞ்சிட்டு போய்க்கிட்டே இருக்கான். ஒரு வார்த்தை சொல்லுறது இல்ல.” என கோபம் கொண்டார்.

ஈஸ்வர மூர்த்தியின் மனைவியான அம்பிகாவோ,”அவன் எப்போ யார் சொல்லி கேட்டு இருக்கான்? இப்போ கேட்க? பிஸ்னஸ் பண்றேன்னு போய் துரோகத்தை சந்திச்சான். அப்பறம் ‘எனக்கு துரோகம் பண்றவங்களுக்கு தண்டனை கொடுக்கிறேன்னு’ சொல்லி, இப்போ ஊரே அவனைப் பார்த்து பயந்திட்டிருக்கு. இன்ஃபர்மேஷனாவது கொடுத்தானே அதுல சந்தோஷ பட்டுக்கோங்க.” என அசால்ட்டாக கூறி படுக்க சென்றார்.

“அம்மாவும் பிள்ளையும் சேர்ந்து நம்மள ஒரு வழி பண்ணாம விட மாட்டாங்க” என ஈஸ்வர மூர்த்தி, பல்லை கடித்து மனைவியின் பின் சென்றார்.

மறுநாள் காலை அனைத்து பத்திரிகைகளிலும், மித்ராலினியும் ருத்ரேஸ்வரனும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் முதன்மை பெற்றிருந்தது. இனி ரிஷியின் பெயருடன் மித்ராவின் பெயர் அடிபடவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தான் ருத்ரேஸ்வரன். தலைப்புச் செய்தியே இவர்களைப் பற்றி வர செய்திருந்தான்.

கனவுக்கன்னி மித்ராலினியுடன் கைகோர்க்கும் புதுமுகம்’

‘பிரபல ஈஸ்வர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் வாரிசான ருத்ரேஸ்வரன், தற்போது கதாநாயகனாக திரையுலகில் அறிமுகமாகிறார். புதுமுக நடிகரான இவருடன் கைகோர்க்க உள்ளார் கனவுக்கன்னி மித்ராலினி. இதுவரை நான்கு படங்களில் நடிகர் ரிஷிவர்மாவுடன் மட்டுமே இணைந்த நடிகை, இப்பொழுது புதிதாக களம் இறங்கும் ருத்ரேஸ்வரனுடன் இணைய உள்ளார். தமிழ் திரையுலகில் சிறந்த ஜோடியாக இருந்த, ரிஷி வர்மா மித்ராலினியின் ஜோடியை, முறியடிக்குமா இந்த ருத்ரேஸ்வரன் மித்ராலினியின் கூட்டணி?’ என்ற கேள்வியோடு, அனைத்து பத்திரிக்கைகளிலும் இச்செய்தியே முதன்மை பெற்றிருந்தது. 

பத்திரிக்கை பரபரப்பிற்காக இன்னும் பல கட்டுக் கதைகளை பிணைத்திருந்தனர்.

இளவரசிக்கு செக் வைத்து காத்திருந்தான், தொழிலில் முடிசூடா அந்த மகாராஜா. இனி அவளால் ஓடவும் முடியாது; ஒதுங்கவும் முடியாது; இவனுடன் நடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்கி இருந்தான். அவளிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வருமென்று  காத்திருந்து இந்த ஒரு வாரம் கடந்திருந்தது.

‘நீ செக் வைத்தால் அதில் மாட்டிக்கொள்ள நான் இளவரசி அல்ல, அதிலிருந்து தப்பிக்க பல வழிகள் தெரிந்த ராணி நான்’ என இவனுக்கு போக்குக் காட்டிக் கொண்டிருந்தாள், அந்த அடப்பாவிப் பெண் மான்.

இந்த ஒரு வாரமாக கதையை எழுத முயன்று விட்டான், அவனால் முடியவில்லை. அவன் சிந்தனை முழுவதும் மித்ரா ரிஷியுடன் இழைந்து கொண்டிருந்த காட்சிகள், மாறி மாறி அவன் மனதில் வலம் வந்தது. 

அதிலிருந்து எப்படி வெளிவருவது என்று தெரியாமல் யோசித்து, யோசித்து அவன் மண்டை சூடு ஏறியது தான் மிச்சம். 

ஒரு வழியாக அவர்களை பிரிப்பதற்கான திட்டத்தை வகுத்து விட்டான். அப்படி பிரிக்க முடியவில்லை என்றால் ரிஷி வர்மாவை உலகத்தை விட்டே அனுப்பிவிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டான். 

†††††

விருது வழங்கும் விழாவிலிருந்து மித்ராவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான் ரிஷி. ரிஷியின் வீடும் மித்ராவின் வீடும் அடுத்தடுத்து இருந்தது. 

அவளை இறக்கிவிட்ட ரிஷி, சிறிது நேரத்தில் திரும்ப வருவதாகக் கூறி அவன் இல்லம் சென்றான்.

அந்த இரு வீட்டுக்கும் நடுவே இருந்த இணைப்பு கதவு வழியாக மீண்டும் ரிஷி இவள் வீட்டை அடைந்தான். இன்னமும் உடையை கூட மாற்றாமல், சிந்தனையோடு அமர்ந்திருந்த மித்ராவை நெருங்கினான். “மிரு” என அழைக்க அவள் சிந்தனை இங்கே இல்லை, அதை உணர்ந்தவன் அவளது தோளை பிடித்துலுக்கி சுயநினைவடைய வைத்தான்.

“வரு! யாருக்காக இத்தனை நாள் காத்திருந்தமோ? அவன் வந்துட்டான். நான்! இந்த மித்ராலினி அவனது பார்வையில் விழுந்துடேன். அவன் தன் ஆட்டத்தை தொடங்குமுன், ஒவ்வொரு காயா நகர்த்தி அவனை நம் வலையில் சிக்க வைக்கணும்?” என வேட்டையாட காத்திருக்கும் புலியின் சீற்றத்துடன் கண்கள் பளபளக்க கூறினாள்.

பதிலேதும் கூறாமல் இருந்த ரிஷியை உணர்ந்து, அவன் முகம் பார்த்து,”ஏன் வரு பதில் சொல்ல மாட்டேங்குற?”

“புலி வரும் புலி வருமென்று காத்திருந்தபோது பயம் இல்ல. ஆனா இப்ப உண்மையில் புலி வந்துருச்சு. கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு.”

“அது புலி இல்லை, நாய் கேடுகெட்ட ஓநாய். அத பார்த்து பயப்படக்கூடாது. இந்த நாளுக்காக கிட்டத்தட்ட மூணு வருஷமா நாம காத்திருக்கோம்.”

“அது சரிதான் மிரு. அது மனுஷ பிறவியா இருந்தா பயம் வேண்டாம். ஒரு ஓநாயைப் பார்த்து பயந்து தான் ஆகணும். அதுவும் பணயம் வைக்க போறது உன்னை. அதுனால கூடுதல் பயம் இருக்கத்தான் செய்யும்.”

“நீ பயப்படாத வரு! நான் ரொம்ப ஜாக்கிரதையா இந்த கேமை பிலே பண்ணுவேன்.”

“நீ ஜாக்கிரதையா இருப்ப. ஆனாலும் இந்த பயம், காரியம் முடிகிற வரை மனசில் இருந்துகிட்டே இருக்கும்.”

“ரிலாக்ஸ் வரு” என அவன் கரங்களைப் பற்றிக் கொண்டாள். 

அவன் கரம்பற்றிய அவளின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்ட ரிஷி, “பேசாம நம்ம கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் இந்த ரிஸ்கை எடுக்கலாமா?” 

“என்ன வரு ஜோக் அடிச்சுட்டு இருக்க?” விளையாட்டாகவே எடுத்துக்கொண்டு பதிலளித்தாள்.

“நான் ஜோக் அடிக்கல. சீரியஸா சொல்றேன் நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்.” என்றான் சீரியசான குரலில், “நான் உன்னை விரும்பலை மிரு. எங்க உன்னையும் இழந்துடுவேனோன்னு பயமா இருக்கு.”

“ரிலாக்ஸ் வரு எனக்கு ஒண்ணும் ஆகாது. நான் இழந்த வரை போதும். இனி அவனுக்கு நரகமென்றால் என்னன்னு காட்டுறேன். உயிரோடு இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும்,’எப்படா நமக்கு சாவு வரும்?’ அப்படின்னு ஏங்க வைக்கிறேன்.” என பல்லை கடித்துக்கொண்டு கொடூரமாக கூறியவள், சற்று நிதானமாக “அப்படி எனக்கு ஏதாவது ஆகுமென்ற சூழ்நிலை வந்தால், நிச்சயம் நீ சொல்றதை நான் கேட்கிறேன்” என உறுதியளித்தாள்.

“சரி மிரு! உன் வழிக்கே வரேன். ஏதாவது தவறா நடக்குமென்று தோணுச்சுன்னா, நான் சொல்லறதை நீ கண்டிப்பா கேட்டு தான் ஆகணும்.” என்ற கட்டளையுடன் அங்கே படுத்துவிட்டான்.

††††††

மறுநாள் விடியும் போது நாளிதழில் வந்த செய்தியை கண்டு,’ருத்ரா தன் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டான்’ என்பதைப் புரிந்து கொண்டனர் ரிஷியும் மித்ராவும். இனி தாங்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்பதை உணர்ந்து,

“மிரு நான் சொன்னேன் கேட்டியா? அவன் ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டான். அத்தனை செய்தித்தாளிலும் உன் பெயரையும் அவன் பெயரையும் இணைத்து, தலைப்புச் செய்தியா ஆக்கிட்டான். அவன் கூட சேர்ந்து நீ நடிக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி இருக்கான். இப்போ என்ன பண்ணுறது?”

“விடு வரு. செய்தித்தாளில் பெயர் வருவது நமக்குப் புதிதா? நம்ம பெயரை இன்னச்சு எத்தனை செய்தி வந்திருக்கு. இதுவும் அதுமாதிரி விட்டுத்தள்ளு. பாத்துக்கலாம்.”  அசால்டாக அந்த செய்தித்தாளை விட்டிருந்தாள்.

இதை அறியாத ருத்ரா. அந்த செய்தியைப் பார்த்து நம்மைத் திட்டவாவது மித்ரா அழைப்பாளெனக் காத்திருந்து ஒரு வாரம் கடந்திருந்தது. 

ருத்ரா மித்ராவை தன்னிடம் வரவைக்க அடுத்த ஆயுதத்தை எடுத்தான்.

மித்ராவும் ரிஷியும் அவர்களின் எதிரியை பந்தாட முதலடியை வைத்தனர்.