Uyir Vangum Rojave–EPI 31

ROSE-2fc79615

அத்தியாயம் 31

மனுசன ஒரு மனுசன் அநியாயமா அடிக்கும் போது அதை இன்னொரு மனுசன் தட்டிக் கேக்கறதுக்கு, அவன் ஒரு மனுசனா மட்டும் இருந்தா போதும்டா. வேற எந்த சம்பந்தமும் தேவை இல்ல.

(சிம்பு – படம் தெரியல )

 

“மேடம் உங்க தங்கச்சியா?” அதிர்ந்தாள் லட்டு.

ஆமென தலையசைத்தான் கார்த்திக். இவ்வளவு நேரம் அவளை கையணைப்பிலேயே நிறுத்தி தன் வாழ்க்கையில் நடந்தவைகளை பகிர்ந்து கொண்டான

“மேரிம்மாவும் டேனும் இறக்கறதுக்கு முத நாளே அம்மாக்கு அவங்க போன் பேசியிருக்காங்க. ரொம்ப டிஸ்டர்பா இருந்தாங்கன்னு அம்மா சொன்னாங்க. அவருக்கு பணம் குடுத்தது, டேன் வேணும்னு கேட்டது எல்லாத்தையும் சொல்லி அழுதுருக்காங்க.அந்த ஆளு நடந்துகிட்ட விதத்துல அம்மா ரொம்ப மனசு ஒடஞ்சி போயிட்டாங்க. ஸ்கூல் லீவுக்கு அம்மாவ பார்க்க நான் வந்திருந்த சமயம் அது. எனக்கு ஒரு 9 இல்லனா 10 வயசு இருக்கும் அப்போ” கண்களை மூடிக் கொண்டான் கார்த்திக். அவனின் அம்மாவின் கலங்கிய முகம் அவன் கண் முன் வந்து போனது.

“மேடம் ஓடி போய் பக்கத்து வீட்டுல உள்ளவங்க ஹெல்ப் கேட்டுருக்காங்க. அவங்க போலிஸ்கு இன்பர்ம் பண்ணி, லாஸ்ட் போன் கால் பார்த்து போலிஸ் அம்மாவுக்கு பேசியிருக்காங்க. மேரிம்மாவோட இறப்பு செய்திய கேட்டு அம்மா கதறிட்டாங்க. அந்த டைம்ல நடக்க முடியாம இருந்தாங்க அவங்க. இருந்தும் இத்தாலிக்கு போயே ஆகனும்னு அடம் பிடிச்சாங்க. போன் போட்டு அந்தாளுக்கும் விஷயத்த சொன்னாங்க. அவர் குடுத்த ஒரே ரியக்சன் ‘என் மகன கொன்னுட்டாளே படுபாவி’ன்றதுதான். ஆள் மறுபடியும் காணா போயிட்டாரு. கொதிச்சுப் போயிட்டாங்க அம்மா”

“எங்க அண்ணி ரொம்ப பாவம் கார்த்திக்” மேடம் எங்கள் அண்ணியாக மாறியிருந்தது.

“அம்மா என்னையும் கூட்டிட்டுப் போனாங்க. அவங்கள வீல் சேருல வச்சு, நானும் பி.ஏ அங்கிளும் போனோம். அம்மா ஹெல்புக்கு ஒரு நர்சும் வந்தாங்க. நாங்க போறதுக்குள்ள ப்யூனரலுக்கு ரெடி பண்ணீட்டாங்க. ஒரு மண்டபம் மாதிரி இருந்தது. அங்க ரெண்டு சவப்பெட்டியையும் வச்சிருந்தாங்க. அந்த வயசுலயும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. நாற்காலில வரிசையா ஆளுங்க உட்கார்ந்திருந்தாங்க. எல்லாரும் கருப்புல உடை அணிஞ்சிருந்தாங்க. பெட்டி பக்கத்துல கருப்பு ட்ரெஸ் போட்டு ஒரு குட்டி பொண்ணு. கண்ணை கண்ணை துடைச்சிட்டே உட்கார்ந்து இருந்தது. என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டி புடிச்சிக்கிட்டா டேன் டேன்னு. தேவியா தான் இருக்கும்னு ஒரு யூகம். அப்பல்லாம் இப்படி வாட்ஸாப் எல்லாம் இல்லையே. போன்ல பேசிருக்கோம், ஆனா பார்த்துக்கிட்டது இல்ல. பேசுனது கூட ரொம்ப குறைவு. ஏன் என்னை டேன்னு கூப்பிட்டான்னு எனக்கு தெரில. டேனோட முகத்தைப் பார்த்தப்ப தான் புரிஞ்சது. அவன் என்ன மாதிரியே இருந்தான். கலர் மட்டும் வெள்ளையா. உயரம் கூட என்ன விட சில பல இன்ச் தான் குறைவா இருக்கும். வெள்ளக்காரவங்கதான் வயசுக்கு மீறின வளர்ச்சியில இருப்பாங்களே.”

“அவங்க அம்மா இறந்துட்டாங்க தெரியும். டேன் பற்றி இது வரை யாருக்கும் தெரியாதே. போட்டோ கூட பார்த்தது இல்ல” கேட்டாள் லட்டு.

“மேடம் என்னை தான் டேனா நினைக்கிறாங்க. என் மூலமா அவன பார்க்குறாங்க.”

“என்ன சொல்லுறீங்க?” குழம்பினாள் லட்டு.

“இருடா சொல்லுறேன். ப்யூனரல் அன்னிக்கு என் கைய பிடிச்சவங்க விடவே இல்ல. அழுதுகிட்டே என் பக்கத்துலயே இருந்தாங்க. என் கைவளைவிலே தான் வச்சிருந்தேன். இறந்தவங்கள ஜெபம் படிச்சு குழிக்குள்ள இறக்கனப்ப, இவங்க என் கைய விட்டு ஓடிப் போய் அந்த குழியில பாஞ்சிட்டாங்க. எல்லாரும் பதறிட்டோம். வெளிய பிடிச்சி இழுத்து வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு. அப்போதான் அந்த ஹிஸ்டிரீயா அட்டாக் வந்தது. ரொம்ப கஸ்டப்பட்டு கால்ம் பண்ணோம். அம்மாவால இதெல்லாம் பார்க்க முடியலை. அழுதுட்டே இருந்தாங்க , இந்த பாவத்தை எங்க கொண்டு போய் தீர்க்கப்போறோம்னு.”

கண்கள் கலங்கியது கார்த்திக்குக்கு. குரலை சரி செய்தவன்,

“எல்லாம் முடிஞ்சவுடனே மேடத்தை யார் பார்த்துக்கறதுன்னு பிரச்சனை வந்தது. அவங்க ஆன்ட்டி யூ.எஸ்கு மைகிரேட் பண்ணிட்டாங்க. அவங்களால கூட்டிட்டுப் போக முடியாது. தாத்தா ரொம்ப வயசாயிருச்சு. அவராலயும் பார்த்துக்க முடியாது. நாங்களும் கூட்டி வர முடியாது. என் அப்பா அவள லீகலா டாட்டரா ஏத்துக்கனும். அந்த ஆளுதான் எஸ்கேப் ஆயிட்டாறே. இப்படி பல சட்ட பிரச்சனை. அம்மாவால அவள விட்டுட்டு வரவே முடியல. 18 வயசு ஆகற வரைக்கும் ஹாஸ்டல்ல இருக்கட்டும்னு அங்கேயே ஸ்கூல் சேர்த்து விட்டாங்க. அவ எங்கள திரும்பி திரும்பி பார்த்துக் கிட்டு ஸ்கூல் உள்ள போனது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. அதுக்கு முன்ன என் கிட்ட வந்து, என்னால ரெண்டு பேருமே செத்துப் போய்ட்டாங்கன்னு நினைக்க முடியல கார்த்திக். டேன் உனக்குள்ள இருக்கறதா எனக்கு ஒரு பீலிங். உன்ன டேனா நினைச்சுக்கட்டுமான்னு பாவமா கேட்டா. நானும் உச்சியில முத்தமிட்டு உனக்கு நான் இருக்கேன்னு சொன்னேன். அதுக்கப்புறம் என் வாழ்க்கையிலும் பல சிக்கல். அம்மாவோட உடம்பு நலிஞ்சுகிட்டே போச்சு. என்னோட படிப்பு, புதுசா உன் கூட முளைச்ச காதல், எக்ஸ்ட்ரா அக்டிவிட்டிஸ்னு நானும் ரொம்ப பிசியா இருந்தேன். மேடத்தை மறந்துட்டேன்.” குற்ற உணர்ச்சியில் பேசினான் அவன்.

மயக்கத்திலிருந்து விழித்த தேவி, தான் கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்தாள். தன்னை பீச்சிலிருந்து தூக்கி வந்தவன் எங்கே என கண்கள் தேடியது. கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் வேந்தன். கையில் ஆவி பறக்கும் சீரியல் கஞ்சி இருந்தது.

“எழுந்துட்டீயாடா? மணி ஏழு ஆகுது. பசிக்குமேன்னு கீழே போனேன். பல் துலக்கிட்டு வா. ஊட்டி விடறேன்.” மேசை மேல் உணவை வைத்தவன், அவளை கைப்பிடித்து எழுப்பிவிட்டான்.

பிரஸாகி வந்தவளை அமர வைத்து, ஊதி ஊதி ஊட்டி விட்டான். சாப்பிட்டு முடித்தவள் வாயை துடைத்தவன், மென்மையாக உதட்டில் முத்தமிட்டான்.

மெல்ல முன்னே சாய்ந்து வேந்தனைக் கட்டிக் கொண்டாள் தேவி. அவன் காதோரம்,

“ஐ லவ் யூ மலர். ப்ரம் போட்டம் அப் மை ஹார்ட்”

“ஐ லவ் யூ டூ டி மை பட்டுக்குட்டி” இருவரும் அணைத்தபடியே இருந்தார்கள் சிறிது நேரம். தீடீரென ஞாபகம் வந்தவளாக அவன் கையைப் பிடித்துப் பார்த்தாள் தேவி. அவள் கடித்த இடம் கன்றி சிவந்திருந்தது. கண்கள் கலங்க,

“சாரி மலர்.” அவனது கையை முகத்தில் அழுத்திக் கொண்டாள்.

“அழாதே ரோஜா. நீ கெத்தா இருந்தா தான் எனக்கு பிடிக்கும். இப்படி அழுதா நல்லாவே இல்லை.” அவள் மூக்கைப் பிடித்து ஆட்டினான்.

“எப்படிடி இப்படி, ஆளுமையா இருக்க? உன்னப் பார்த்தாலே எனக்கு ஆச்சரியம் தான்” அவள் மூட்டை மாற்ற வேண்டி கேட்டான். அவள் அளித்த பதிலில், நொந்து வெந்து போனான் வேந்தன்.

“ஐந்து வயசுல இருந்து தனியா இருந்து பாரு ஆளுமையும், தற்காப்பு உணர்ச்சியும் தானா வந்துரும்” அவன் விழிப்பதைப் பார்த்து மெல்ல சிரித்தவள்,

“சாந்திம்மா என்னை பெண்கள் பள்ளியில தான் சேர்த்துட்டு போனாங்க. ஆனாலும் வயசு ஏற ஏற எனக்கு பிரச்சனைங்களும் ஏறுச்சு.”

“என்னடா ஆச்சு?”

“நான் அழகா இருக்கேனா மலர்?” சம்பந்தமில்லாமல் கேட்டாள்.

“நீ அழகி இல்லடா, பேரழகி.

“கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ – இ(அ)வள்  செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள் “

என பாடினான் வேந்தன்.

கசந்த முறுவலை வெளியிட்டவள்,

“இப்ப கரெக்டான பாட்டுதான் நீ பாடினே மலர். பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் இந்த அழகு தான் என்னை தினம் தினம் கொன்னுச்சு.”

மீண்டும் ஏதோ பெரியதாய் வர போகிறது என புரிந்தது வேந்தனுக்கு. அவளது கையை இறுகப் பற்றிக் கொண்டான்.

“நான் ரொம்ப அமைதி அப்போ. யார் என்னை வம்பிழுத்தாலும் தெரியாத மாதிரி போயிருவேன். ஹோஸ்டலிலே ரெண்டு பொண்ணுங்க. எப்படி சொல்லறது? பார்க்கத் தான் பொண்ணுங்க, ஆனா அதுங்க முடி ஸ்டைல், நடை உடை, பழக்க வழக்கம்லாம் ஆம்பிளை மாதிரி இருக்கும். நாங்க டோம்பாய்(tomboy)னு சொல்லுவோம். என்னை எப்ப பாரு இடிக்கிறது, கிண்டல் பண்ணுறது, தட்டிட்டு போறதுன்னு ஒரே டாச்சர். ரொம்ப ஓவரா போகவும் வார்டன் கிட்ட சொல்லிட்டேன். அவங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு கண்டிச்சாங்க. அதுல வெறியே வந்துருச்சு அதுங்களுக்கு. நான் எப்பவும் நைட் குளிச்சுட்டு தான் படுக்கப் போவேன். என் ரூம் மேட் ரொம்ப நல்லவ. அவ கிட்ட சொல்லிட்டு என்னோட பக்கேட், பேஸ்ட் எல்லாம் எடுத்துட்டு பாத்ரூம் போனேன். ஒவ்வொரு ப்ளோருக்கும் கடைசியிலே பாத்ரூம் இருக்கும். நிறைய குபிக்கள்ஸ் இருக்கும். சிலதுல தாப்பாள் கூட இருக்காது. நான் போனப்போ யாரும் இல்ல. நான் தாப்பாள் போட்டுட்டு குளிக்க ரெடியானேன்.”

அவள் கதை போல் சொல்லிக் கொண்டிருந்தாள். வேந்தனுக்கு இங்கே கை கால்கள் நடுங்கியது. மனம் திக் திக்கென அடித்துக் கொண்டது.

“அப்போ பாத்ரூம் கதவ வெளியே இருந்து இடிக்கற சத்தம். நான் யாரு யாருன்னு கத்துனேன். அவளுக ரெண்டு பேரும் கதவ இடிச்சுத் தள்ளிட்டு உள்ளே வந்துட்டாங்க. ஒருத்தி கத்துன என் வாய பொத்திட்டா. இன்னொருத்தி என் மேல கைய வச்சா. அவங்க ரெண்டு பேரு, நான் ஒருத்தி. என்னால போராட முடியல. கண்ணுல கண்ணீர் ஊத்துது. என்னை விடுங்க ப்ளிஸ்னு கத்துறேன், சத்தம் வெளிய வரல. அவளுக கை எல்லை மீற ஆரம்பிச்சப்போ எங்கிருந்து தான் எனக்கு அப்படி ஒரு வெறி வந்ததுனு தெரியல. அவளுகள உதறி தள்ளிட்டு, குளிக்க எடுத்து வந்துருந்த ப்ளாஸ்டிக் பக்கேட்ட எடுத்து விளாசி தள்ளிட்டேன். பக்கேட் ஒடஞ்சி அவளுக உடம்பு முழுக்க கீறி ரத்தம் கொட்டுனதோ என் கைய குத்தி ரத்தம் வந்ததோ எதுவுமே எனக்கு உறைக்கல. மனசு முழுக்க வெறி, என்ன பெத்தவன் மேல, என்னை விட்டுட்டு போனவங்க மேல. வெறி, வெறி, வெறி மட்டும். அடி துவைச்சு எடுத்துட்டேன். என்னைக் காணோம்னு தேடி வந்த என் ரூம் மேட்தான் ஓடி வந்து என்னைப் பிடிச்சு நிறுத்துனா. பெரிய கேசா ஆகி என்னை போலிஸ்ல ஹேண்ட் ஓவர் பண்ணிட்டாங்க.”

“என்னம்மா சொல்ற? உன் மேல என்ன தப்பு? இது தற்காப்பு தானே?.” வெகுண்டெழுந்தான் வேந்தன்.

“தற்காப்புதான் மலர். அடிப்பட்ட ஒருத்திக்கு மூக்கு கிழிஞ்சிருச்சு, இன்னொருத்திக்கு காது பிஞ்சிருச்சு. அதோட எனக்கு யாரும் இல்ல, அவங்களுக்கு பேரண்ட்ஸ் இருந்தாங்க சப்போர்டுக்கு. ஸ்டேசன்ல அன்டர் ஏஜ்னால காப்பகத்துல விட்டாங்க. அதுக்கு முன்னுக்கு கார்டியன் நம்பருக்கு கூப்பிடாங்க. சாந்திம்மா போன் எடுக்கல. ரெண்டாவதா இருந்த அந்தாளு நம்பருக்கு போட்டாங்க. அவரு அப்படி ஒரு மகளே இல்லன்னு சொல்லிட்டாரு. அப்புறம் பாவப்பட்ட அந்த ஆபிசர் என்கிட்ட போன் குடுத்து அவர் கிட்ட பேச சொன்னாங்க. என் வாழ்க்கையில முதல் முறையா அந்த ஆளுகிட்ட பேசுனேன். இல்ல, இல்ல  கெஞ்சுனேன். டாடி, என்னை காப்பாத்துங்க, பயமா இருக்குன்னு.”

“என்ன சொன்னான் அந்த ஆளு?”

“எனக்கு ஒரே மகன் தான். மக யாரும் இல்ல. சொந்தம் கொண்டாடிகிட்டு எனக்கு போன் செய்யாதன்னு சொல்லி பட்டுன்னு வச்சிட்டான். அப்ப முடிவு பண்ணேன், என் வாழ்க்கையில இனி யாருகிட்டயும் கெஞ்ச கூடாதுன்னு. அதனால தான் உன் கிட்ட கூட கெஞ்சாம, மிரட்டி கல்யாணம் பண்ணேன்.”

“எனக்கு சரியான கோபம் கார்த்திக் மேலயும் சாந்திம்மா மேலயும். பல்லக் கடிச்சுகிட்டு கேஸ் நடக்கற வரைக்கும் அந்த காப்பகத்துல இருந்தேன். கேஸ் நடக்கறப்போ கரேக்டா கார்த்திக் வந்தான், காப்பாத்துனான்”

இங்கே லட்டுவிடம் கார்த்திக்,

“அந்த சிக்கல்ல மாட்டிக்கிட்டு அவங்க போன் பண்ணப்ப எனக்கு பதினெட்டு வயசு. அம்மாவுக்கு காது கேட்காம போயிருந்த சமயம் அது. பேசும் சக்தி மட்டும் கொஞ்சம் இருந்தது. இத்தாலில இருந்து போன் வந்ததும் என்ன வரவச்சாங்க. என் கிட்ட அதே நம்பருக்கு போட்டு பேச சொன்னாங்க. போலிஸ் ஸ்டேசன்கு போச்சு. அவங்க கிட்டயும், மேடத்தோட ஸ்கூலுக்கும் போன் பேசி விஷயத்தை வாங்குனேன். கை ஜாடையிலேயே அம்மாவுக்கு அவங்களுக்கு விஷயத்தை விளக்கினேன். பதறிட்டாங்க.

“அப்போதான் என் கிட்ட ஒரு சத்தியம் வாங்குனாங்க அம்மா. சொத்தையேல்லாம் மேடத்துக்கு எழுதி வைக்க சொன்னாங்க. அவங்களுக்கு நல்ல வாழ்க்கைய அமைச்சிக் குடுத்து கண் கலங்காம பார்த்துக்க சொன்னாங்க. அவ நல்லா இருந்தா தான் உங்கப்பா செஞ்ச பாவத்துக்கு கொஞ்சமாச்சும் பிராயச்சித்தம் கிடைக்கும்னு அழுதாங்க. அவங்க சொல்ல சொல்ல ஒரு லெட்டர் எழுதுனேன் மேடத்துக்கு. அப்படியே சொத்து பத்திரம், என் பாட்டி எங்க அப்பா, தாத்தா பற்றி எழுதன வண்டவாள கடிதம் எல்லாத்தையும் என் கிட்ட கொடுத்தாங்க. என்னோட 21 வயசுல அவரு தொழிலுல இருந்து விலகுனோன, மேடத்தை அதுல உட்கார வைக்க சொன்னாங்க. இது தான் என் கடைசி ஆசைன்னு சொன்னப்ப, நான் அவங்க வாயைப் பொத்துனேன். ஆனா சொன்ன மாதிரியே, மறுநாள் காலையில நான் திரும்பி வரும் போது யாரும் இல்லாம அனாதையா போய் சேர்ந்துட்டாங்க. அவங்க காரியம் எல்லாம் முடிச்சு, காலேஜ்ல இருந்து என் மூட்டை முடிச்செல்லாம் கட்டிக்கிட்டு இத்தாலி போனேன். மேடம் என்னைப் பார்க்க கூட மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அவ்ளோ பணம் செலவு பண்ணி, வக்கீல் வச்சு, அந்த ரெண்டு பொண்ணுங்களுக்கு பணம் கொடுத்துன்னு கேசை முடிச்சேன். தனியா அபார்ட்மேண்ட் எடுத்து அவங்க காலுல விழுந்து, சாந்திம்மாவோட இறப்ப சொல்லி, கெஞ்சி என் கூடவே வச்சிக்கிட்டேன். நாங்க அங்கேயே படிப்ப தொடர்ந்தோம். ஒரே வீட்டுல இருந்தாலும், என்ன ஒரு நண்பனா கூட அவங்க ஏத்துக்கல. என் கூட தங்கி இருக்கறதே பெரிய விஷயம்னு விட்டுட்டேன். பார்த்து பார்த்து கவனிச்சுக்கிட்டேன் என் தங்கச்சிய. அவளுக்கு நடந்த கொடுமையால, லேடிஸ் கண்டாலே அவளுக்கு ஒரு அவர்ஷென். தேவை இல்லாம பேச மாட்டாங்க. ஐ காண்டேக்ட் கூட குடுக்க மாட்டாங்க. அதனாலேயே வேலைக்கு யாரும் வைக்காம நானே சமைச்சுப் போட்டு, வீடு கிளீன் பண்ணி, சீக்கு வந்தா கேர் குடுத்து இப்படின்னு கண்ணுக்குள்ள வச்சிக்கிட்டேன். இன்னும் வச்சிருக்கேன். என் உயிர் அவங்க. அவங்கள மறந்து நான் என் வாழ்க்கைய மட்டும் பார்த்துகிட்டு சுயநலமா இருந்துட்டேன் லட்டுமா. உங்க அண்ணன் அளவுக்கு எனக்கு பாசத்த காட்ட தெரியல தங்கச்சி மேல.”

“ஓ! அதனால தான் என்னையும் அனுவையும் ஏறெடுத்துக் கூடப் பார்க்கலியா? நான் சரியான திமிர் பிடிச்சவங்கன்னு நினைச்சிட்டேன். போன் வச்சிருந்தீங்க தானே, ஒரு போன் பண்ணி கூட பேசலியா அவங்க கிட்ட?”

“ரெண்டு மாசத்துக்கு ஒருக்க ஹோஸ்டலுக்கு போன் பண்ணுவேன். ஹாய், நல்லா இருக்கியா, படிக்கிறியா அப்படின்னு. அவங்களும் ஹ்ம்ம், ஓகே இப்படிதான் பதில் சொல்லுவாங்க. நான் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருக்கலாம்”

“உன்ன நீயே வருத்திக்காத கார்த்திக். பத்து வயசுல நீ விளையாட்டுப் பிள்ள. அண்ணிக்கு ப்ராமிஸ் பண்ணது கூட உனக்கு ஞாபகம் இருந்துருக்காது. அதுவும் தூர தேசத்துல எப்பவோ ஒரு தடவ பார்த்த தங்கச்சிக்கு ரெண்டு மாசத்துக்கு ஒருக்க போன் பண்ணி நீ பேசனதே பெருசு” சமாதானப்படுத்தினாள். 

“ஹ்ம்ம். அங்க கூட இருந்த சில வருஷங்கள்ல என் வாழ்க்கையையே நரகமாக்கினாங்க. பேச மாட்டாங்க, சிரிக்க மாட்டாங்க, நானே போய் பேசுனா கையில கெடைச்சது பறந்து வரும். இவங்க ஒரு பக்கம்னா எங்கப்பன் ஒரு பக்கம். நீ ஏன்டா அங்க போய் விழுந்து கிடக்கற. வந்துரு, வந்துருன்னு. மேடத்துக்கு பதினெட்டு ஆகுற வரை பொறுத்துக்கிட்டேன். அப்புறம் துணைக்கு ஒருத்தவங்கள ஏற்பாடு பண்ணிட்டு இந்தியா வந்தேன். தொழில அந்த ஆளுகிட்ட இருந்து கத்துக்கிட்டேன். நான் இத்தாலியில இருந்தது அவருக்கு ரொம்ப கோபம். அப்புறம் திரும்ப வந்ததும் மேடத்தை தலை முழுகிட்டு வந்துட்டேன்னு சந்தோசப்பட்டாரு. நானும் ஒன்னும் சொல்லிக்கல. அங்க அவங்களயும் இஞ்சினியரிங் படிக்க வச்சேன். எனக்கு இருபத்து ஒரு வயசு ஆன கையோட சொத்து, தொழில் எல்லாம் அந்த ஆளுக்கு தெரியாம மேடம் பேருக்கு எழுதுனேன். அவங்கள லீகலா மகளா கூட்டி வர சொல்லி பிரஷர் பண்ணேன் அவர. முடியாதுன்னு சொன்னவர நானும் செத்துருவேன்னு சொல்லி பணியவச்சேன். அப்புறம் அவங்க கூடவே இருந்து எல்லாம் சொல்லிகுடுத்து ஹேட் ஆக்கினேன். இன்னும் கூடவே இருக்கேன், எப்பவும் இருப்பேன்.”

வேந்தனிடம் தேவி,

“கார்த்திக்க படாத பாடு படுத்துனேன். எல்லாத்தையும் அமைதியாவே தாங்கிக்கிட்டான். படிப்பு முடிஞ்ச உடனே திரும்ப வந்தான். அவன் கையில ஒரு லெட்டர். சாந்திம்மாவோட. அத படிச்சப்ப, எனக்கு அவ்வளவு ஆத்திரம் மலர். எப்படி இப்படி பெண்கள் இருக்காங்கன்னு ஒரு கோப வெறியே வந்துச்சு. கார்த்திக் கெஞ்சுனான், அவங்க அம்மாவோட கடைசி ஆசைன்னு. சரியான கில்லாடி அவன். படிப்பு முடிஞ்சு ஊருக்கு வர சொல்லுறப்ப தான் லெட்டர குடுக்குறான். அதுக்கு முன்னேயே குடுத்துருந்தா நான் எங்கயாச்சும் ஓடி போயிருப்பேன்னு அவனுக்கு தெரியும்.”

“என்ன இருந்தது லெட்டருல?”

“என்ன இருந்தாலும் அந்த ஆளு என் அப்பாவாம். ஒரு வருசமாவது அவர் கூட நான் ஒன்னா தங்கியிருக்கனுமாம். பெத்த பிள்ளை மேல அவருக்கு பாசம் வர வாய்ப்பிருக்காம். பேனாத்தி வச்சிருந்தாங்க. இவ்வளவு நடந்தும் எப்படி மலர் அவர நம்புறாங்க? முடியாதுன்னு மூஞ்சில அடிச்சு சொல்லிட்டேன். அழதுட்டான் அந்த படவா கார்த்திக். நம்ம அம்மாவுக்காகனு செண்டிமெண்ட் வேற. ஸ்டுப்பிட். அப்புறம் யோசிச்சுப் பார்த்தேன். சாந்திம்மா இந்த ஆள பழிவாங்க தான் எனக்கு சான்ஸ் குடுத்துருக்காங்களோன்னு ஒரு டவுட்டு. அவரு தொழிலிலும் என் கூட ஒரு வருஷம் இருக்கனும்னு கண்டிஷன் போட்டு ஒத்துக்கிட்டேன் ” சிரித்தாள்.

“எதுக்குடி அந்த ஆளைக் கூட வச்சிகிட்ட?” கலவரமாக கேட்டான் அவன்.

“பழிக்குப் பழி வாங்கதான். எடுத்த முத ப்ராஜக்டுலே லட்சக் கணக்குல நஷ்டம்னு கணக்கு காட்டுனேன். நெஞ்சைப் பிடிச்சுட்டு சரிஞ்சிட்டாரு” இடியென சிரித்தாள்.

வாயைப் பிளந்தான் வேந்தன்.

“ஒரு மாசம் ஹாஸ்பிட்டல் வாசம். அப்போ டாக்டர மடக்கி, மருந்த மாத்தி குடுக்க வச்சேன்.”

“இது எதுக்குடி?”

“சுவிட்ச ஆப் பண்ண தான்” மீண்டும் இடி இடியென சிரிப்பு. பயப்பார்வை பார்த்தான் வேந்தன்.

“மலர், அவரால குல்பியோட செல்பி மட்டும் தான் எடுக்க முடியும். வேற ஒன்னும் முடியாது”

‘அடிப்பாவி!

“ஒரு குச்சி ஒரு குல்பி

வந்து நின்னு எடு செல்பி”னு திரியற மனுசனுக்கு வந்த சோதனைய பாரு!’ முகம் இஞ்சி தின்ன குரங்கு போல் ஆனது அவனுக்கு.

பிறகு தான் அவன் முகத்தைப் பார்த்தாள். மீண்டும் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

“நோ, டார்லி. உன்ன இப்படிலாம் பண்ண மாட்டேன். நீ ரொம்ப நல்லவன். அதனால பயப்படாதே”

“ஒரு வருஷம் அந்த ஆளுக்கு மரண பயத்தைக் காட்டுனேன். உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னப்போ அந்த ஆளு முகத்தை பார்க்கனுமே. அவர் மகன் சொத்து உனக்கு போகுதாம். உங்கம்மாவ கடத்தி உன்னை ஊரை விட்ட விரட்ட பிளான் போட்டாரு. அவருக்கு முன்னயே நான் கடத்தி என் கஸ்டடில வச்சிக்கிட்டேன். அந்த ஆளையும் அவுஸ் அரெஸ்ட் பண்ணேன். ஒரு வருஷ முடிவுல வீட்டை விட்டு துரத்துனேன். இன்னும் விட மாட்டேன். நான் விடாது வெள்ளை, அந்த ஆளு விஷயத்துல.”

“அப்போ அந்த ஆள பழி வாங்க தான் என்னை காதலிச்சியா?” முகத்தை தூக்கி வைத்தான் வேந்தன்.

“மண்டு மலர். அதுக்காகலம் இந்த மூஞ்ச கல்யாணம் பண்ண முடியாது.”

“என்னடி இப்படி சொல்லிட்ட!”

அவனை இறுக்கி, அடாவடியாக உதட்டில் முத்தமிட்டவள்,

“உன்னை மனசார விரும்பி தான்டா கட்டிக்கிட்டேன் என ஆசை அத்தான். எனக்கு அடிபட்டிருக்குன்னு நீ தவிச்ச விதம், உன் வலிய கூட பார்க்காம எனக்காக பயந்தது, உன் கண்ணுல தெரிஞ்ச கனிவு இதெல்லாம் தான் உன்னை ஆழ்ந்து பார்க்க வச்சது. யூ நோ மலர்? அந்த வீட்டை நான் உன் பேருக்கு ரிஜிஸ்டர் பண்ணியிருக்கேன். அந்த விஐபி கிட்ட கேட்துக்கும் மேல காசு குடுத்து நம் காதல் தாஜ்மகால வாங்கிட்டேன்” இன்னும் அணைப்பை இறுக்கினாள்.

“பார்த்துமா, வயிறு முட்டுது பாரு.”

அவளை தூக்கி மடியில் கிடத்திக் கொண்டான்.

“உன் கதைய கேட்டு எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியலைடா குட்டி. உனக்காக நான் ரொம்ப வருத்தப் படுறேன். பழைய விஷயங்களை என்னால மாத்த முடியாது. ஆனா இனிமே உன்னையும் நம்ம பிள்ளைகளையும் எந்த துன்பமும் நெருங்காம பார்த்துக்குவேன். இது எங்கம்மா மேல சத்தியம்டா” கண் கலங்கியது அவளுக்கு.

“மலர், பிள்ளைங்க எனக்கு மட்டும் தான்னு சின்ன பிள்ளை மாதிரி நடந்துகிட்டேன். ஒரு சின்ன பயம், உன் அன்ப அனுபவிச்சிட்டா அவங்களுக்கு என் மேல ஒட்டுதல் வராதோன்னு. என் மாம் எப்படி டேன் மேல கூடுதல் அன்பு வச்சி அவன மட்டும் கூட்டிட்டு போய்டாங்களோ, அத மாதிரியே நானும் சுயநலமா யோசிச்சிருக்கேன் பார்த்தியா. என்னை மன்னிச்சுரு மலர். இனிமே நீ எதிர்பார்த்த மாதிரி நாம எல்லோரும் ஒரு குடும்பம். அன்பு எல்லாருக்கும் அன்லிமிடேட் பேக்கேஜ் தான்” மனதார சிரித்தாள் அவள்.

அங்கே இந்துமா வீட்டில்,

“அடியே லட்டு, அனு சீக்கிரம் வாங்கடி. உங்க அத்தையும், மதனும் ஹாஸ்பிட்டல்ல இருக்காங்களாம்” கத்தினார்.

லட்டு கார்த்திக்கையும், அனு வீராவையும் ஆழமாக பார்த்தனர்.