நினைவு தூங்கிடாது 6.2

நிழல்

என்னை காயப்படுத்த

கல்லடி தேவை இல்லை…

உன் கண்ணடி போதுமடி…

உன் மேல் நான் கொண்ட உணர்வை

என்னவென்று நான் சொல்ல…

சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்த மாலைப் பொழுதில். ஈஸ்வர் சொன்ன ஆற்றங்கரை, ஆள் நடமாட்டம் இல்லாத இடம், காத்திருந்தது இரு மனங்கள். ஒரு மணம் கோபத்தின் தகிப்பில், ஒரு மனம் இயலாமையின் தவிப்பில்.

“உன்கிட்ட நேத்து என்ன சொன்னேன்? நீ என்ன பண்ணி வச்சிருக்க? உன்னை எங்கெல்லாம் தேடுறது?” என கோபத்தோடு வெடித்துக் கொண்டிருந்தான் ஈஸ்வர்.

“சார் நிஜமாவே நீங்க இங்க வரச் சொன்னதை நான் மறந்துட்டேன். பசங்க மாங்காய் வேணும்ன்னு சொன்னாங்க. அதனாலதான் அங்க…” எனத் தன்னிலை விளக்கம் அளித்துக்கொண்டிருந்தவள், எப்படி முடிப்பது என தெரியாமல் அம்மு திருதிருவென முழித்தாள்.

அவள் விழி மொழியை ரசிக்க தூண்டிய மனதை அடக்கி,”இப்படி ஒன்னும் தெரியாத மாதிரி முகத்த வச்சுக்கிட்டா, நான் உன்னை நம்பிடுவேனா?” என சற்றே நிறுத்தி அவளது முகத்தை கூர்ந்த படி, மீண்டும் தொடர்ந்தான், “ஆமா நான் வர சொன்னதை மறப்ப, ஆனா அங்க தோப்புல போய் ஆட்டம் போடுறதுக்கு மட்டும் மறக்க மாட்ட?” என வார்த்தையை தாறுமாறாக விட்டான்.

எதற்காக இந்த கோபம்? கல்லை கொண்டு மண்டையை உடைத்ததற்காகவா? நிச்சயம் இல்லை. அவள் தன்னை கடந்து வேறு ஆடவனின் கைப்பற்றியதற்காக.

“என்ன சார் விட்டா ரொம்ப பேசுறீங்க? நான் சொல்றேன்ல நீங்க வரச் சொன்னதையே மறந்துட்டேன்னு. அதுக்கு இப்ப என்ன பண்ண முடியும்?” என எகுரினாள். அவனின் தாறுமாறான வார்த்தையில் அவளது பயம், குற்றஉணர்வு எல்லாம் விலகி பழைய திடம் மீண்டது.

“என்ன சொன்ன? நான் வரச் சொன்னதை மறந்துட்ட இல்ல.” என நக்கலாக கூறி,”சரி என்னோட காரை உடச்சதுக்குண்டான, ஒரு லட்சம் பணத்தை எடுத்து வச்சுட்டு கிளம்பு.”

“ஆசை தோசை அதுவே கட்டவண்டி. அதுல பால் பட்டதற்கு ஒரு லட்சமா? இது உங்களுக்கே அநியாயமா தெரியல.” அவளது விளையாட்டுத்தனம் தலை காட்டியது.

தனது கோடி ரூபாய் மதிப்புள்ள காரை கட்டவண்டி என்றதில் கோபம் கொண்ட ஈஸ்வர், அவளை தலை முதல் பாதம் வரை ஆராய்ச்சி பார்வையை செலுத்தி,”என்னோட கார் உனக்கு கட்டவண்டியா? அதோட விலை என்னனு உனக்கு தெரியுமா? அதை தொடுறதுக்கான தகுதியாவது உனக்கு இருக்கா?” என அவளை மட்டம் தட்டினான்.

அவன் தனது வறுமையை சுட்டிக் காட்டியதில் கோவம் கொண்ட அம்மு,”இது என்ன சார் பெரிய காரு? நான் படிச்சு பெரியாளாகி இதைவிட பெரிய கார் வாங்குவேன்.” என சவாலிட்டாள்.

ரோஷத்தில், கோடி ரூபாய் காரின் மதிப்பு தெரியாமல், அவள் சவாலிட்டதை பார்த்து சிரிப்பு வந்தாலும் அதை மறைத்து,”நீ இதைவிட பெரிய கார் வாங்கு. அதை நான் அப்ப பார்த்துக்கறேன். இப்ப வா உங்க வீட்டுக்கு போய் நடந்ததை சொல்லி நியாயம் கேட்கறேன். உங்க அம்மாகிட்டயே பணத்தையும் கேட்டுக்கறேன். உங்க வீடு எங்க இருக்கு?” என்றான் அசால்ட்டாக.

அதில் சற்று அடங்கிய பெண்,”அம்மாகிட்ட வேண்டாம் சார். அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு எங்கள பார்த்துக்கறாங்க. அவ்வளவு பணத்தை எங்களால் குடுக்க முடியாது.” குரல் இறங்கி ஒலித்தது. 

அந்தக் கெஞ்சலில் மனம் இறங்கினான். “இப்பதான் பெரிய கார் வாங்க போறேன்னு சவால் எல்லாம்விட்ட? அதுக்குள்ள ஏன் பம்முற” என்றான் ஒற்றை புருவமேற்றி தெனாவெட்டாக.

அவனின் தெனாவெட்டில் முகம் சுருங்கிய பெண், “சார்…” என ஏதோ சொல்ல முயல அதை தடை செய்து,”சரி போனப்போ ரொம்ப கெஞ்சி கேட்கற அதனால விடுறேன்.” என அவன் கூறியதை கேட்டு அவள் முகத்தில் புன்னகை பூசிக்கொள்ள,

“நீ இன்னைக்கு செஞ்ச தப்புக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?” என்ற அடுத்த வரிகளில் அவளது புன்னகை தொலைந்தது.

நேற்று மாதிரி இன்னைக்கும் முத்தமிட்டு விடுவானோ?’ என்ற பயத்தில் பெண்ணின் முகம் ரத்த பசையை இழந்தது.

“சார் கண்டிப்பா நாளைக்கு நான் சொன்ன மாதிரி, சொன்ன டயத்துக்கு வந்துடறேன்.” என்றாள் இறங்கிய குரலில். ஏனோ ஈஸ்வருக்கு அந்த இறங்கிய குரல், மேலும் கோபத்தை கூட்டியது. 

“அது நாளைக்கு பிரச்சினை. இன்னைக்கு செஞ்ச தப்புக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?” என தீவிரமாக சிந்தித்தான்? 

“யோவ் கட்டவண்டி! நான் தான் இவ்வளவு சொல்றேன்ல, நாளையிலிருந்து நான் கரெக்டா வருவேன்.”

அவள் யோவ் என்றதில் ஜெர்கான ஈஸ்வர்,” என்னது யோவ் கட்டவண்டியா? நேத்து காரை உடைச்ச, இன்னைக்கி மண்டையை உடைச்ச, இப்போ மரியாதையையும் குறைக்கிற? உன்னோட தப்புகள் கூடிக்கிட்டே போகுது. நாளைக்கு வா என்ன தண்டனைன்னு சொல்றேன். எஸ்கேப் ஆகலாம்னு நினைச்ச நேரா உங்க வீட்டுக்கு வருவேன்.” 

அவன் வீட்டுக்கு வருவேன் என்றதில் பயந்த பெண்,’அவனுக்கு தன் வீடு தெரியாது’ என்பதை மறந்து எல்லா பக்கமும் மண்டையை உருட்டி, அங்கிருந்து விட்டால் போதுமென ஓட்டமெடுத்தாள் தன் கூட்டை நோக்கி. 

அவளின் பேச்சு, நடவடிக்கை அனைத்தையும் பார்த்த ஈஸ்வரின் முகம் இறுக்கத்தை விடுத்து, புன்னகையை பூசிக்கொண்டது. பாவம் அதை அறியாத பேதை, அவனின் மேலுள்ள வெறுப்பில் அவனைத் திட்டிக்கொண்டே இல்லம் நோக்கி ஓடினாள். 

ஆற்றினோரம் இருந்த ஈஸ்வரனின் மனமும், வீட்டை நோக்கி ஓடும் அமிர்தாவின் மனமும், சற்று முன்னர் மாந்தோப்பில் நடந்த நிகழ்விற்கு பயணித்தது.

†††‡†††

மாந்தோப்பில் தன்னவளின் குரலை அடையாளம் கண்டு கொண்டான் ஈஸ்வர். தான் தேடி அலைந்த பொக்கிஷம் கிடைத்த மகிழ்ச்சி. பிறகு எங்கே செல்வது?

அவன் முகம் பிரகாசமாக, கால்கள் தானாக குரல் வந்த திசையை நோக்கி சென்றது. நேற்று அவளுடன் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசிய தனக்கு, அவளின் குரல் எப்படி மனதில் உள்ளது என யோசித்திருக்க வேண்டாமா?

அங்கே தன் சுட்டி வானரங்களுடன் மாங்காய் அடித்துக் கொண்டிருந்த பெண்ணவளை, சில நொடிகள் ரசனையோடு தழுவியது அவனது கண்கள். சட்டென்று சுதாரித்த அவனது மூளை, அவன் சொன்ன நேரத்துக்கு, சொன்ன இடத்திற்கு வராத அவளின் மேல் குற்றச்சாட்டை சுமத்தியது. அவளை தழுவிய ரசனை பார்வை, கோபத்திற்கு மாறியது.

அவளோ அங்கு ஒருவன் வந்ததை அறியாமல், மாங்காய் ஒன்றே குறியாக அதை மட்டுமே இலக்காகக் கொண்டு கையிலிருந்த கல்லை பறக்கவிட்டாள். அந்தோ பரிதாபம் அவள் கையிலிருந்த கல் பறப்பதற்கும், அவன் அங்கு வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. அந்த கல் குறி தவறாமல் அவன் நெற்றியில் பட்டு கீழே விழுந்தது. 

அதுவரை குறும்புடன் சிரித்துப் பேசி கொண்டிருந்த அவளது சிரித்த முகமும், துருதுரு பார்வையும் மறைந்து அங்கே பயம் குடியேறியது. அவளது முகம் பயத்தில் வெளிறிப் போனது, ஈஸ்வர் அதை அறவே வெறுத்தான்.’என்னை பார்த்தா பேய், பிசாசு மாதிரி இருக்கா? இப்படி பேயைப் பார்த்த மாதிரி பார்குறா?’ என எதற்கென்றே தெரியாமல் அவளை மனதில் திட்டிக் கொண்டிருந்தான்.

அவன் தலையில் அடிபட்டதை உணர்ந்ததும், அந்த சின்ன வாண்டுகள் இந்தமுறை அவளை விட்டுவிடாமல் அவள் கரங்களைப் பற்றி,”அம்மு வா ஓடிடலாம்.” என அழைக்க, அவள் அங்கயே சிலையென சமைந்து நின்றாள்.

நேற்று அவனிட்ட கட்டளைகளை, இந்த நிமிடம் தான் அவளது நினைவு அடுக்குகளில் தேடிக் எடுத்தாள். அதன்பிறகு அந்த இடத்தைவிட்டு எங்கனம் அவள் ஓட? அதுவும் இல்லாமல் இன்று அவன் தலையில் அடித்தது வேறு குற்ற உணர்வை தந்தது.

அந்த இடத்திலிருந்து அவனை நோக்கி அவள் கால்கள் தானாக நகர்ந்தது. அவள் ஓடிவிடுவாள் என எதிர்பார்த்த ஈஸ்வர், அவள் தன்னை நோக்கி வரவும், ஆச்சரியமாக அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு அங்கயே நின்றான். 

“அம்மு எங்க போற? வா நம்ம ஓடிடலாம். அந்த அண்ணா திட்ட போறாங்க.” பப்பு அவளை தடுத்தான்.

“டேய் பப்பு அவங்களுக்கு அடிபட்டிருக்கு. அப்படியே விட்டுட்டு எப்படி போறது?”

“வேண்டாம் அம்மு. நேத்தே அவங்க உன்னை அடுச்சிருக்காங்க. அதுனால இன்னைக்கு ஃபுல்லா மூட் அவுட்டா இருந்த. மறுபடியும் போய் மாட்டிக்காத.” என தடுத்தான் சோட்டு.

அவன் கூறியதில் அவளது கால்கள் ஒரு நொடி தயங்கினாலும், தன் மேல் தவறு உள்ளதால் பெண் அவனிடமே சென்றாள்.

“அம்மு சொன்னா கேளு. அவங்ககிட்ட போகாத” என தடுக்க முயன்றான்.

“இல்ல தப்பு நம்ம மேல இருக்கு. நீங்க வேணா போங்க. நான் வரமாட்டேன்.” எனக் கூறி அவனை நோக்கி சென்றாள். அவளை விட்டு செல்ல முடியாமலும், அங்கயே நிற்க முடியாமலும் குழந்தைகள் தவித்தது.

தன் மேல் தவறு இருந்தாலும், எத்தனை பேர் அதை ஒத்து கொள்வார்கள்? இந்த சிறு பெண்ணிடம் இருக்கும் நேர்மை குணம் ஈஸ்வரனை வெகுவாக கவர்ந்தது.

தன்னை நோக்கி வரும் அவளையே, விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தவன் சட்டென்று சுய நினைவடைந்து,”நீலாம்பரி, நீ சொன்ன மாதிரியே என் மண்டையை உடைச்சுட்ட இல்ல?” என்றான். அந்த குரலில் கடுகளவு கூட கடுமை இல்லாததை, கவனிக்க தவறினாள் பெண்.

அவனின் நெற்றியை தொட சென்ற பெண்ணின் கரங்கள், அவன் கூறியதில் ஒரு நொடி அசைவற்று அந்தரத்தில் தேங்கியது. பின்னர் அதை அலட்சியம் செய்து, அவன் நெற்றியில் அடிபட்ட இடத்தை, பற்றியிருந்த அவனது கைகளை விலக்கி அதை ஆராய்ந்தாள்.

கல் பட்ட இடம் நன்கு புடைத்திருந்தது. அதைப் பார்த்து மனம் கலங்க, அவனின் நெற்றியை தன் உள்ளங்கையால் பரபரவென தேய்த்தாள், அந்தக் குழந்தை மனம் கொண்ட குமரி.

அவள் உள்ளங்கையின் வெப்பம், அவன் நெற்றியை உரச, உரச அவனிற்கு தலை முதல் உள்ளங்கால் வரை ஜிவ்வென்று உஷ்ணம் ஏறியது. அவனது பார்வை அவள் இதழின் மீது பதிந்தது. நேற்று கிடைத்த இதழின் சுவை இன்றும் அவன் நினைவில் தித்தித்தது. கொஞ்சம் கொஞ்சமாக உணர்ச்சிகளின் பிடியில் சிக்கிக் கொண்டிருந்தான்.

அவனது நிலை புரியாத பெண்ணும் அவன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க ஆரம்பித்தாள்.”நான் மாங்காயை தான் சார் அடிச்சேன். நீங்க குறுக்க வருவீங்கன்னு எதிர்பார்க்கல.” என தன்னிலை விளக்கம் அளித்தாள். 

அவள் ஈஸ்வரை நெருங்கிய நொடி பசங்கள் அனைவரும் அந்த இடத்திலிருந்து மறைந்திருந்தனர். இப்போது அவர்கள் இருவர் மட்டும் அந்த தோப்பில், அருகருகே நின்று வழக்காடிக் கொண்டிருந்தனர். 

ஈஸ்வரனின் மனம் அவளின் அருகாமையை ரசித்தாலும், அவனது ஈகோ அதை வெளியே சொல்ல விடாமல் தடுத்தது. தண்டனை என்ற பெயரில் அவளை தன் அருகில் வைத்துக் கொள்ள அவனது மனம் முடிவு செய்தது. அதைப் உணர்ந்த மூளையால் அதைத் தடுக்க முடியவில்லை.

“நீ பொய் சொல்ற நீலாம்பரி. இவ்வளவு பெரிய உருவம் வரது உனக்கு தெரியல? வேணும்னே என் மண்டையை உடைச்சிருக்க.” என அவளை சீண்டினான்.

“நான் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நான் தப்பு செய்தால் அதை ஒத்துக்கிற தைரியம் என்கிட்ட இருக்கு.” என நிமிர்ந்து அவனுக்கு பதில் அளித்தாள்.

பணத்திற்க்காக நெளிந்து, குழைந்து, படுக்கையை கூட பகிர்ந்து கொள்ளும் பெண்களை மட்டுமே கண்டிருந்த ஆண் அவனுக்கு, இந்த பெண்மையின் நிமிர்வு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அதை காட்டிக்கொள்ளாமல்,

“ஆமா ஆமா நீ ரொம்ப தைரியசாலி தான். நேத்து காரை உடச்ச, இன்னிக்கு என் மண்டையை உடைச்சிருக்க. வா உங்க வீட்டுக்கு போயி உங்க அம்மாகிட்ட உண்மைய சொல்லி, நியாயம் கேட்கலாம். நீ தைரியமா அவங்ககிட்ட நடந்ததை சொல்லு” என அவளது கரத்தை பற்றி அழைத்துச் செல்வது போல் இழுத்தான்.

அம்மா என்ற வார்த்தையில் அவளது வாய் அடுத்த வார்த்தையை பேச மறந்தது.

அவள் என்ன பதில் கூறுவது என தெரியாமல் கலங்கி நின்றாள். சரியாக அந்த நிமிடம், “அம்மு இங்க என்ன பண்ற?” என்ற உற்சாக குரல் அவள் செவியை அடைந்தது. 

குரல் வந்த திசையைப் பார்க்க, அங்கு நின்றிருந்தவரை கண்டதும், தெய்வத்தையே கண்டதுபோல், தன் கையை பற்றியிருந்த ஈஸ்வரின் கையை விலக்கி, ஓடிச் சென்று அவரது கரங்களைப் பற்றிக் கொண்டாள். 

அவளது கைப்பற்றலில், ஒருவரது மனம் மகிழ்ச்சியில் வானத்தை தொட்டு மீண்டது என்றால், மற்றொரு மனம் ‘எப்படி நீ என் கரத்தை விலக்கி, அவரை பற்றலாம்?’ என கொலை வெறியோடு அவளையும், இணைந்திருந்த கைகளையும் முறைத்தது.

அந்தக் கரத்திற்கு சொந்தக்காரர் யார்?