வைத்தியர் இளங்கோ, மனநல மருத்துவர் என்ற பெயர்ப்பலகை தாங்கி நின்ற அறைக்கதவை திறந்து கொண்டு வருணும், அர்ஜுனும் உள் நுழைய அங்கே அவர்களைப் பார்த்து புன்னகையுடன் அமர்ந்திருந்தார் டாக்டர் இளங்கோ.
நாற்பது வயதை தாண்டி விட்டேன் என்பதை காண்பிப்பது போல தலையிலும், தாடியிலும் வெள்ளை முடிகள் அங்கங்கே எட்டிப் பார்க்க, முகத்தில் சிறு சிறு சுருக்கங்களும் சேர அமர்ந்திருந்த வைத்தியர் இளங்கோவின் முன்னால் அமர்ந்து கொண்ட வருண் அர்ஜுனையும் கைப் பிடித்து இழுத்து தன்னருகில் அமர்த்திக் கொண்டான்.
“ஹாய் அர்ஜுன்? எப்படி இருக்கீங்க? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு!” இளங்கோவின் கேள்வியில் தனது நண்பனைத் திரும்பி பார்த்தவன்
“டாக்டர் கேட்குறாங்க இல்லையா? சொல்லுடா!” அவனின் அன்பான கட்டளையில்
“ஐ யம் பைன்!” என்று விட்டு தன் தலையை குனிந்து கொண்டான்.
“குட்! குட்! அர்ஜுன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல கத்துக்கிட்டாரு போலவே!”
“நானே இன்னைக்கு தான் டாக்டர் அவன் இப்படி சரியாக பதில் சொல்லுவதைப் பார்க்கிறேன்” வருண் தன் வியப்பு மாறாத குரலில் தன் முன்னால் அமர்ந்து இருந்தவரைப் பார்த்து கூறவும் புன்னகையுடன் அவனைப் பார்த்து கொண்டிருந்தவர் தன் முன்னால் இருந்த டெஸ்ட் ரிப்போர்ட்களை எல்லாம் அவன் முன்னால் சிறிது தள்ளி வைத்தார்.
அவரது செய்கையில் வருண் அவரைக் கேள்வியாக நோக்க
“இது எல்லாம் அர்ஜுனோட பழைய ரிப்போர்ட்ஸ்” அந்த மேஜையின் ஒரு புறம் இருந்த ரிப்போர்ட்களை எல்லாம் சுட்டிக் காட்டியவர்
இன்னொரு புறம் இருந்த காகிதங்களை எல்லாம் இன்னும் நன்றாக அவன் புறம் தள்ளி வைத்து விட்டு
“இது இன்னைக்கு எடுத்த அர்ஜுனோட ரிப்போர்ட்ஸ்! இது இரண்டுக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம் இருக்கு தெரியுமா?” கேள்வியாக அவனை நோக்க
பதட்டத்துடன் அவரை நிமிர்ந்து பார்த்தவன்
“டாக்டர்! அப்போ அர்ஜுனுக்கு ஏதாவது சீரியஸான பிரச்சினையா?” தடுமாற்றத்துடன் வினவினான்.
“சேச்சே! நான் அப்படி சொல்லலையே வருண்! அர்ஜுனுக்கு நிறைய மாற்றங்கள் தான் வந்து இருக்குன்னு சொன்னேன் பிரச்சினை இருப்பதாக சொல்லலையே!அதாவது இன்னும் தெளிவாக சொல்லப்போனால் அர்ஜுன் மெல்ல மெல்ல குணமாகி வந்து கொண்டு இருக்கிறான்”
“டாக்…டாக்டர்! நிஜமாகத் தான் சொல்லுறீங்களா? ஹையோ! என்னால் நம்பவே முடியல! இத்தனை வருஷமா காத்துட்டு இருந்ததற்கு பலன் கிடைக்கப் போகுதா? என் அர்ஜுன் மறுபடியும் எனக்கு திரும்பி வரப் போகிறானா?” ஆனந்தமும், வியப்பும் போட்டி போட துள்ளலோடு வருண் பேசிக் கொண்டிருக்க
“வருண் ரிலாக்ஸ் மேன்! நான் இன்னும் முழுமையாக சொல்லி முடிக்கல ஜஸ்ட் ரிலாக்ஸ்!” அவனது கையை மெல்ல அழுத்தி கொடுத்து அவனை நிதானத்திற்கு கொண்டு வந்தவர்
“நான் சொல்ல போறது ஒரு பக்கம் உனக்கு சந்தோஷத்தை தந்தாலும், இன்னொரு பக்கம் கவலையைக் கூடத் தரலாம் ஆனால் எதுவாக இருந்தாலும் நீங்க எல்லோரும் பொறுமையாக தான் அதையெல்லாம் கையாளணும் ஏன்னா அர்ஜுன் இன்னும் முழுமையாக குணமடையவில்லை அதை மனதில் வைத்துக் கொள்ளுங்க!” பீடிகையுடன் நிறுத்த அவனோ குழப்பமாக அவரைப் பார்த்து கொண்டு இருந்தான்.
“நீ நைட் அர்ஜுன் ரொம்ப அமைதியாக நீ சொன்ன வேலையை செய்து தந்து விட்டு எந்த குழப்பமும் பண்ணாமல் அவன் பாட்டிற்கு போய் தூங்கினான் என்று சொன்ன இல்லையா?”
“ஆமா டாக்டர்! ஒரு நிமிஷம் எனக்கே அதை நம்ப முடியல! இந்த ஏழு வருஷத்தில் எத்தனையோ தடவை இதே மாதிரி கேள்வியை நான் அவன்கிட்ட கேட்டு இருக்கேன் அப்போ எல்லாம் அவன் ரொம்ப சின்ன பிள்ளை மாதிரி, இல்லேன்னா ரொம்ப கோபமாக தானே நடந்து கொள்ளுவான்! ஏன் உங்க முன்னாடியும் எத்தனையோ தடவை அப்படி அவன் நடந்து இருக்கான்! ஆனா நேற்று நடந்தது ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது அதுதான் உங்க கிட்ட பேசணும்னு இன்னைக்கு வந்தேன்”
“ஹ்ம்ம்ம்ம்! அப்போ வெறும் ரிப்போர்ட் ரீதியாக மட்டும் இல்லாமல் மனரீதியாகவும் அர்ஜுனுக்குள்ள மாற்றம் வந்து இருக்கு! ஆல்ரைட்! வருண் நீங்க இரண்டு பேரும் என்னைக் கடைசியாக சந்தித்து விட்டு போனதற்கு அப்புறம் ஏதாவது வித்தியாசமாக அர்ஜுன் நடந்து கொண்டானா?”
“அப்படி எதுவும் இல்…” அவரது கேள்விக்கு மறுப்பாக பதிலளிக்க போனவன் மூன்று நாட்களுக்கு முன்பு அந்த பேரூந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணைப் பார்த்த பிறகு இப்படியான மாற்றங்கள் அர்ஜுனிடம் இருந்து வரத் தொடங்கின என்பதை யூகித்தவனாக
“ஆமா டாக்டர் ஒரு மூன்று நாளைக்கு முன்னாடி நானும், அர்ஜுனும் அடையாறில் இருக்கும் ஒரு கடைக்கு போய் இருந்தோம் அப்போ எனக்கு போன் வந்ததன்னு நான் போனில் பேசிட்டு இருந்த நேரம் இவன் அந்த கடைக்கு எதிரில் இருந்த ஒரு பஸ் ஸ்டாண்டில் நின்னுட்டிருந்த பொண்ணு கிட்ட போய் வழக்கமாக எல்லோர் கிட்டவும் சொல்லுற அதே வசனத்தை சொல்லிட்டு இருந்தான் நான் உடனே போய் அவனை அங்கே இருந்து கூட்டிட்டு வந்துட்டேன் அன்னைக்கு நைட் அம்மா கூட பேசிட்டு இருக்கும் போது அர்ஜுன் பிரியாவைப் பார்த்தேன்னு வேற சொன்னான்!” என்று கூறவும்
“வாட்? அந்த பொண்ணை பார்த்தீங்களா?” இளங்கோ அதிர்ச்சியாக அவனைப் பார்த்து வினவினார்.
“இல்லை டாக்டர் நாங்க பார்க்கல! அர்ஜுன் அப்படி சொன்ன உடனே நான் அவன்கிட்ட அதைப் பற்றி கேட்டேன் ஆனா அவன் எப்போதும் போல வானத்தில் பார்த்தேன்னு சொல்லிட்டான் ஆனா எனக்கு என்னவோ அந்த பொண்ணுக்கு பிரியாவைத் தெரிந்து இருக்குமோன்னு தான் தோணுது டாக்டர்! அர்ஜுனை அங்கே இருந்து நான் திருப்பி கூட்டிட்டு வரும் போது அவனுக்கு எப்படி இப்படி ஆச்சுன்னு அவங்க வந்து கேட்டாங்க”
“ஹ்ம்ம்ம்ம்! இவ்வளவு நடந்து இருக்கு ஏன் என்னை முன்னாடியே சந்திக்கல வருண்?” அவர் சற்று கண்டிப்பான குரலில் அவனைப் பார்த்து கேட்கவும்
தயக்கத்துடன் அவரை நிமிர்ந்து பார்த்தவன்
“ஸாரி டாக்டர் எனக்கே இப்போ தான் ஒவ்வொரு விடயமாக புரியுது” கவலையோடு முகம் வாடிப் போக கூற
“இட்ஸ் ஓகே!” என்று அவனது கையில் தட்டிக் கொடுத்தவர் அர்ஜுனின் முன்னால் சென்று நின்று கொண்டார்.
“அர்ஜுன் என்னை நிமிர்ந்து பாருங்க!” இளங்கோவின் அழைப்பில் அவரை நிமிர்ந்து பார்த்தவன் எதுவும் பேசாமல் அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டு நின்றவர்
“அர்ஜுன் நீங்க பிரியாவைப் பார்த்தீங்களா?” என்று கேட்க
மெல்ல மெல்ல தயங்கியபடியே அவரை நிமிர்ந்து பார்த்தவன்
“ஆமா நான் பார்த்தேன் ஆனா இந்த வருண் தான் நம்பமாட்டேங்கிறான்! பேட் பாய்! எனக்கு ஊசி போட மாட்டேன்னு சொல்லி ஊசி போட்டுட்டீங்க நீங்களும் பேட் பாய்! நான் சாவித்திரிம்மா கிட்ட போகணும் என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போகச் சொல்லுங்க” சிறிது நேரம் எந்தவொரு பிரச்சினையும் இல்லாதவன் போல பேசிக் கொண்டே சட்டென்று தன் வழமை போன்ற பேச்சை பேசத் தொடங்கி இருந்தான்.
அவனது பேச்சை எல்லாம் உன்னிப்பாக கவனித்து கொண்டு நின்ற வைத்தியர் இளங்கோ அவனது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்து விட்டு மீண்டும் தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார்.
“வருண் இப்போ நான் சொல்லப் போற விடயத்தை கவனமாக கேட்டுக் கொள்ளுங்க! அர்ஜுன் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகிட்டு வருகிறான் தான் அது உண்மை தான்! ஆனா அந்த பழைய விடயங்களை எல்லாம் அவன் இன்னும் முழுமையாக உள்வாங்கிக் கொள்ளல அதாவது அந்த ஆக்ஸிடென்ட், தன் கண் முன்னாடி அந்த பொண்ணு இரத்தத்தில் விழுந்து கிடந்தது இது எதையுமே அர்ஜுன் உள்வாங்கி கொள்ளல! அவனுக்கு தெரிந்தது எல்லாம் அந்த பொண்ணு கிட்ட தன்னோட காதலை சொல்ல போனது தான் இப்போ அர்ஜுன் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய பழைய நிலைக்கு திரும்பி வந்து கொண்டு இருக்கிறான் அவன் முழுவதும் பழைய நிலைமைக்கு வந்ததும் அவனுக்கு நடந்த விடயங்களை கொஞ்சம் கொஞ்சமாக தான் புரிய வைக்கணும் மொத்தமாக எல்லா விடயங்களையும் ஒன்றாக சொல்லப் போனீங்கன்னா மறுபடியும் அர்ஜுனுக்கு இந்த மனநிலை முற்றாக குழப்பம் அடைய வாய்ப்பு இருக்கு! அது தான் இதில் உள்ள சிக்கல்!”
“ஐயோ டாக்டர்! அப்படி எதுவும் நடக்கக் கூடாது!”
“உங்க கவலை, பதட்டம் எல்லாம் எனக்கு புரியுது வருண் ஆனால் நிதர்சனத்தை சொல்லி தானே ஆகணும் நீங்க பயப்பட வேண்டாம் அர்ஜுன் கூடிய சீக்கிரம் குணமாகி விடுவான் அதற்கு அப்புறம் உங்க பிரண்ட் எப்போதும் போல ஒரு சாதாரண மனிதனாக நடமாட முடியும்! ஆனா அது உங்க கையில் இருக்கு! எதையும் அவசரப்பட்டு செய்ய கூடாது அர்ஜுன் விடயத்தில் பொறுமை ரொம்ப ரொம்ப முக்கியம் இந்த ஏழு வருடங்கள் பொறுமையாக எல்லாவற்றையும் கையாண்ட நீங்க இனியும் அந்த பொறுமையை இழந்து விடக் கூடாது நான் சொன்னது எல்லாம் புரிந்தது தானே வருண்?”
“ஆமா டாக்டர் ரொம்ப ரொம்ப புரிந்தது! நீங்க அர்ஜுன் கூடிய சீக்கிரம் குணமாகி விடுவான்னு சொன்னதே எனக்கு ஆயிரம் மடங்கு சந்தோஷத்தை தந்தது போல் இருக்கு! இனி நான் அர்ஜுன் விடயத்தில் முன்னரை விடவும் கொஞ்சம் அதிகமாகவே கவனம் எடுத்து கொள்ளுவேன் ரொம்ப தாங்க்ஸ் டாக்டர் நாங்க வர்றோம்!” மனதிற்குள் நிறைந்திருக்கும் சந்தோஷம் முகத்திலும் பிரதிபலிக்க முகம் கொள்ளாப் புன்னகையுடன் தன் நண்பனை எழுந்து நிற்க செய்தவன் அவனைத் தன் தோளோடு சேர்த்து அணைத்தவாறே அந்த ஹாஸ்பிடல் கட்டடத்தில் இருந்து வெளியேறி தங்கள் காரை நோக்கி சென்றான்.
அந்த சந்தோஷமான செய்தியை தன் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு தன் தொலைபேசியை எடுத்து அவர்களை அழைக்க பார்த்தவன்
“இல்லை இந்த விடயத்தை நேரில் போய் தான் பேச வேண்டும்!” என்று எண்ணிக் கொண்டு தன் தொலைபேசியை மீண்டும் தன் சட்டைப் பாக்கெட்டில் போட்டு கொண்டு தங்கள் வீட்டில் அவனுக்காக காத்திருக்கும் ஒரு அதிர்ச்சி தரும் விடயத்தை பற்றி அறியாமலேயே தன் காரை செலுத்தத் தொடங்கினான்.
************************************
சென்னை மாநகராட்சி சபை – அடையார் பிரிவு
மாணிக்கம் மற்றும் ஜெயலஷ்மி ஒருவரை ஒருவர் வியப்பாக பார்த்து கொண்டிருக்க அவர்களின் முன்னால் தன் கைகளை கட்டிக் கொண்டு இயல்பாக புன்னகைத்த வண்ணம் ராமநாதன் நின்று கொண்டிருந்தார்.
ஏற்கனவே ராமநாதன் பற்றி சிறிதளவு மாணிக்கத்திற்கு தெரிந்து இருக்க அத்தனை பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை கட்டி காப்பவர் தங்களின் மகள் சம்பந்தமாக பேச வேண்டும் என்று வந்து அவரது குடும்ப விபரங்களை எல்லாம் ஒன்று விடாமல் கூறி விட்டு திடீரென அவர்கள் மகள் தங்கள் வீட்டுக்கு மருமகளாக வர வேண்டும் என்று கேட்டால் அவர்களால் வேறு எப்படி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும்.
“என்னங்க இரண்டு பேரும் ரொம்ப அமைதியாக இருக்கீங்க? உங்களுக்கு இந்த கல்யாணப் பேச்சில் விருப்பம் இல்லைன்னா நீங்க தயங்காமல் சொல்லுங்க நான் எதுவும் தப்பாக எடுக்க மாட்டேன்” ராமநாதன் அவர்கள் இருவரையும் சிறு தவிப்போடு பார்த்துக் கொண்டே கூற
அவரைப் பார்த்து அவசரமாக மறுப்பாக தலையசைத்த மாணிக்கம்
“சேச்சே! நாங்க அப்படி எதுவும் நினைக்கலைங்க இவ்வளவு பெரிய இடத்தில் இருந்து எங்க பொண்ணுக்கு ஒரு சம்பந்தம் வந்து இருக்குன்னா அதற்கு நாங்க ரொம்ப கொடுத்து வைத்து இருக்கணும் எங்க தயக்கம் வேறு ஒரு காரணத்திற்காக தான்!” தன் மனைவியையும் ஒரு முறை திரும்பி பார்த்துக் கொண்டே கூறினார்.
“என்ன என் பிரண்டோட பையனை என் பையன் பார்த்துட்டு இருக்கிறதா?”
“ஐயோ! அதெல்லாம் நான் தப்பாக சொல்லுவேனா சார்? உங்க பையனோட நல்ல மனதுக்கு உதாரணமே இந்த விடயம் தான் அதை போய் நான் தவறாக பேசலாமா?”
“அப்போ வேறு என்ன?”
“இது என் பொண்ணைப் பற்றிய ஒரு விடயம்!” மாணிக்கத்தின் கூற்றில் அந்த இடத்தில் கனத்த அமைதி நிலவ அந்த அமைதியை கலைப்பது போல தன் பேச்சை தொடங்கினார் ராமநாதன்.
“எதுவாக இருந்தாலும் பரவாயில்லை தயங்காமல் சொல்லுங்க சார்” ராமநாதனின் கூற்றில் மாணிக்கம் சிறிது தயக்கத்துடன் ஜெயலஷ்மியின் புறம் திரும்பி பார்க்க அவரது தயக்கம் உணர்ந்தவராக அவரது தோளை ஆதரவாக பற்றிக் கொண்டவர் ஏழு வருடங்களுக்கு முன் தன் மகளுக்கு நடந்த விபத்தைப் பற்றி விவரமாக கூறத் தொடங்கினார்.
“சரியாக ஏழு வருடங்களுக்கு முன்னாடி எங்க பொண்ணு ஹரிணி வாழ்க்கையில் ஒரு பெரிய விபத்து நடந்தது அது தான் எங்களுடைய இந்த தயக்கத்திற்கு காரணம்! ஹரிணி அப்போ காலேஜில் செகண்ட் இயர் படித்துட்டு இருந்தா அவ எப்போதும் அவ பிரண்ட்ஸ் கூட தான் காலேஜ் போய் வருவா! அன்னைக்கு நானும், என் வீட்டுக்காரரும் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்துட்டு இருக்கும் போது எங்களுக்கு ஒரு கால் வந்தது ஹரிணிக்கு காலேஜ் முடிந்து வரும் வழியில் ஒரு ஆக்சிடென்ட் நடந்து பேச்சு மூச்சில்லாமல் இருக்கான்னும், அவளை ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கான்னும் அதில் சொன்னதைக் கேட்டதுமே எங்களுக்கு பாதி உயிர் போயிடுச்சு” ஜெயலஷ்மி சற்று தடுமாறவே அவரது கையை சிறிது ஆதரவாக தட்டிக் கொடுத்த மாணிக்கம்
“அந்த நேரம் எங்க மற்ற இரண்டு பசங்களும் ரொம்ப சின்னவங்க ஹரிணிக்கு ஏதோ சின்ன விபத்தாகத் தான் இருக்கும் என்று நினைத்து அவங்க இரண்டு பேரையும் ஹாஸ்பிடலுக்கு அக்கம் பக்கத்தில் இருந்த ஆளுங்க மூலம் தகவல் சொல்லி அழைச்சுட்டு வந்தோம் அங்கே அவங்க இரண்டு பேரும் ஹரிணி இருந்த நிலைமையைப் பார்த்து பேசக்கூட முடியாமல் அழுதழுதே மயக்கம் போடுற அளவுக்கு போயிட்டாங்க
அடித்து பிடித்து அவசரமாக நாங்க அங்கே போகும் போது இரத்தத்தில் உறைந்து போன அவ டிரெஸ்ஸை தான் பார்த்தோம் வெள்ளை நிறத்தில் இருந்த அவ டிரெஸ் சிவப்பு நிறத்தில் மாறிப் போய் இருந்தது அதைப் பார்த்து லஷ்மி அங்கேயே மயக்கம் போட்டு விழுந்துட்டா ஒரு நிமிஷத்தில் ஒட்டுமொத்த குடும்பமே உடைஞ்சு போயிட்டோம்! அந்த இடத்தில் எனக்கு யாரைப் பார்ப்பதுன்னு கூடத் தெரியல! உள்ளே பேச்சு மூச்சில்லாமல் ஒரு குழந்தை! வெளியே என்ன நடக்குதுன்னு உணரமுடியாமல் இரண்டு குழந்தைக்கு! இன்னொரு பக்கம் என் மனைவி!” அன்றைய நாளின் தாக்கத்தில் முகம் இறுக தன் கண்களை மூடி கொள்ள ராமநாதன் அவர் தோளில் தன் கையை வைத்து ஆதரவாக அழுத்திக் கொடுத்தார்.
“நீங்க இவ்வளவு வருத்தத்துடன் சொல்லும் போதே அன்னைக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீங்கன்னு தெரியுது சார்! நீங்க இப்படி ஃபீல் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சு இருந்தால் நான் அந்த விடயத்தை பற்றி கேட்டு இருக்க மாட்டேன்”
“இல்லை சார் இந்த விஷயத்தை மறைக்க கூடாது இது எங்க பொண்ணு வாழ்க்கை இல்லையா அது தான்!
அன்னைக்கு நடந்த ஆக்ஸிடென்டில் ஹரிணிக்கு தலையில் பலமாக அடிபட்டு நிறைய இரத்தம் போனதால் அவ கோமாவுக்கு போயிட்டான்னு டாக்டர் சொன்னாங்க எங்களுக்கு அதை விளங்கிக் கொள்ளவே இரண்டு நாள் ஆனது அதற்கு பிறகு எவ்வளவோ ட்ரீட்மென்ட், எவ்வளவோ மருந்து, மாத்திரை எல்லாம் பாவித்து தான் அவளைக் கோமாவில் இருந்து கொண்டு வந்தோம் கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஹரிணிக்காக ரொம்ப போராடுனோம்! ஆனா அதற்கு பிறகும் எங்க பொண்ணுக்கு வந்த கஷ்டம் அவளை விட்டு போகல!
எங்க பொண்ணு கண்ணை முழித்து பார்த்த அந்த நேரம் சுற்றி நின்ற எங்க எல்லோரையும் பார்த்து நீங்க எல்லாம் யாருன்னு கேட்டா எங்களுக்கு ஒண்ணுமே புரியல அதற்கு அப்புறம் டாக்டர் எல்லாம் வந்து செக் பண்ணி பார்த்துட்டு அவ பழைய விடயங்களை எல்லாம் மறந்துட்டான்னு பெரியதொரு இடியை எங்க தலையில் இறக்கிட்டாங்க! பெற்ற அம்மா, அப்பாவைக் கூட எங்க பொண்ணுக்கு அடையாளம் தெரியல அதற்கு அப்புறம் அவளுக்கு ஒவ்வொரு விடயமாக சொல்லி சொல்லி புரிய வைத்தோம் இது தான் உன் அம்மா, இது தான் அப்பா, இது தான் தம்பி, தங்கைன்னு அவளுக்கு சொல்லி கொடுத்து அதற்கு அப்புறம் தான் அவ அதையெல்லாம் தன் நினைவில் வைத்துக் கொள்ள தொடங்கினா!
மொத்தத்தில் சொல்லப் போனால் அவளுக்கு இந்த உலகத்தைப் பற்றி கடந்த ஏழு வருடங்களாகத் தான் தெரியும் வேறு எதுவும் தெரியாது! இந்த விஷயத்தை இதற்கு முன்னாடி நாங்க யாருகிட்டயும் இவ்வளவு விவரமாக சொன்னது இல்லை சார் மேலோட்டமாக ஒரு ஆக்சிடென்டில் ஹரிணி பழைய விடயங்களை எல்லாம் மறந்துட்டான்னு மட்டும் தான் சொல்லி இருந்தோம் அதற்கே அவளுக்கு வந்த சம்பந்தம் எல்லாம் அவளை ஏதோ பெரிய ஒரு குறைபாடு உள்ள பொண்ணு மாதிரி பார்த்து வேணாம்னு சொல்லிட்டாங்க! இப்போ உங்க கிட்ட இந்த விஷயத்தை நாங்க விவரமாக சொல்லக் காரணம் நீங்க இவ்வளவு தூரம் எங்க பொண்ணுக்காக பேசியது தான்! இனி முடிவு உங்க கையில்!” மாணிக்கம் தான் சொல்ல வேண்டிய விடயங்களை சொல்லி விட்டேன் என்ற திருப்தியோடும், தான் சொன்னவற்றிற்கு ராமநாதனின் பதில் என்னவாக இருக்கும் என்ற பதட்டத்தோடும் அவர் முகத்தை ஆவலுடன் பார்த்து கொண்டு நின்றார்………