மிரட்டும் அமானுஷ்யம் எபிலாக்

மிரட்டும் அமானுஷ்யம் எபிலாக்

 

 

 

 

எபிலாக்

 

அந்த சம்பவம் நடந்து எட்டு மாதங்கள் கடந்திருந்தன…

இப்போது ஜான்வி (எ) ஜனனி, தன் தந்தை மற்றும் அண்ணனுடன் மும்பையில் வசிக்கிறாள். 

அர்ஜுன் இப்போது மீண்டும் படம் இயக்குகிறான். அவனின் குருவான விகாஸ் கண்ணாவின் உதவியுடன், தங்கள் குடும்ப கதையையே படமாக இயக்கி, அந்த படமும் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாகி அவனிற்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

ஜான்வியும், அர்ஜுனின் படத்தில் பிரபல ஆடை வடிவமைப்பாளருக்கு உதவியாக இருந்து பயிற்சி பெற்று, அவனின் அடுத்த படத்திற்கு அவளே ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றவிருக்கிறாள்.

சதீஷ், முன்போலவே தன் நண்பனிற்கு உதவியாக இருக்கிறான். அவனிற்காக பத்து வருடங்களாக காத்திருந்த அவனின் அத்தை மகளை திருமணம் செய்து கொண்டு, காதலை அனுபவித்து வாழ்கிறான். அர்ஜுன் மற்றும் நிஷாவின் காதலை நேரில் கண்டவனாயிற்றே… அதே அளவு இல்லையென்றாலும், தன் மனைவியை, தனக்காக காத்திருந்தவளை கண்களுக்குள் வைத்து பார்த்துக் கொள்கிறான்.

அவனின் வாழ்க்கை வண்ணமயமாக மாறியதை எண்ணி ஒரு பக்கம் மகிழ்ந்தாலும், நண்பனின் வாழ்க்கையை எண்ணி கவலையுற்றவன், ஜான்வியிடம் அதைப் பற்றி கூற, இருவரும் அர்ஜுனிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினர்.

“என்ன பேசுறீங்க ரெண்டு பேரும்… என் லைஃப்ல இன்னொரு பொண்ணா… சான்ஸே இல்ல… அது என் நிஷுக்கு நான் பண்ற துரோகம்… டேய் சதீஷ் உனக்கே தெரியும்ல, அவ என்ன எவ்ளோ லவ் பன்னான்னு… எனக்காக அவ உயிரையும் குடுத்துருக்கா… அவ இன்னும் இங்க இருக்குறப்போ, எப்படி டா இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக்க சொல்ற…” என்று தன் இதயத்தை தொட்டு காட்டினான்.

ஜான்வி மற்றும் சதீஷிற்கு நிஷாவின் அளவில்லா காதலும், அதற்கு சற்றும் குறையாத அர்ஜுனின் காதலும் தெரிந்தே இருந்தது.

“அர்ஜுண்ணா எங்களுக்கு உங்க மனசு எங்களுக்கு புரியுது… ஆனா உங்க வாழ்க்கை இப்படியே முடிஞ்சுடாது அண்ணா… இன்னும் நீண்டு இருக்க இந்த பயணத்துல, உங்களுக்கு ஒரு துணை கண்டிப்பா வேணும்…” என்றாள் ஜான்வி கெஞ்சலாக…

அதில் லேசாக சிரித்த அர்ஜுன், “எனக்கு துணை இல்லன்னு யாரு சொன்னா… என் நிஷு எப்பவும் என்கூடவே இருக்குறப்போ, வேற துணை எனக்கு எதுக்கு…” என்றான் காதலாக…

ஜான்வியும் சதீஷும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, “என்ன எனக்கு பைத்தியம் பிடிச்சுருச்சுன்னு நினைக்குறீங்களா…” என்று கூறியவன் லேசாக சிரித்து, “நிஷா இங்க தான் இருக்கா… ஆனா என்ன தவற வேற யார் கண்ணுக்கும் தெரிய மாட்டா… அவளுக்கு நான் பண்ணின ப்ரோமிஸ காப்பாத்துன மாதிரி, அவளோட ப்ரோமிஸ காப்பாத்த என்கூடவே தான் இருப்பா எப்பவும்…” என்றான் அர்ஜுன்.

அவர்களின் காதலின் ஆழத்தை கண்ட மற்ற இருவருக்கும், அதற்கு மேல் அர்ஜுனை திருமணத்திற்கு கட்டாய படுத்த விருப்பமில்லை. 

“சாரிண்ணா, இதுக்கு மேல கல்யாணத்துக்கு உன்ன ஃபோர்ஸ் பண்ண மாட்டோம்… நீ சந்தோஷமா இருக்கணும்னு தான் நாங்க நெனச்சோம்… நிஷா அண்ணி கூட இருக்குறப்போ தான் உனக்கு சந்தோஷம்னா, அதை நாங்க தடுக்க மாட்டோம்…” என்று கண்களில் நீருடன் கூறிய ஜான்வி அவனை அணைத்துக் கொண்டாள்.

அவளின் ‘அண்ணி’ என்ற அழைப்பில், அர்ஜுனின் முகம் விகசித்ததைக் கண்டு, மீன்டும் பிரமிப்பில் ஆழ்ந்தான் சதீஷ்.

“எங்கள பத்தி நெனைக்குறத விட்டு, நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணனுமாம்… உங்க அண்ணியோட ஆர்டர்…” என்று சிரிப்புடன் கூறினான்.

பின் அண்ணனாக தன் தங்கையின் கல்யாணத்தை எவ்வாறு நடத்த வேண்டும் என்று அவன் அப்போதே திட்டங்களை போடத் துவங்கினான். ஆனால், அவனின் தங்கை, அவன் திட்டங்களையெல்லாம் ஒன்றுமில்லாமல் செய்யப் போகிறாள் என்றோ, அவனின் வார்த்தைகளையே பயன்படுத்தி அவனை மடக்கப் போகிறாள் என்றோ அந்த பாசமிகு அண்ணனிற்கு தெரியவில்லை.

ஜான்வியோ அர்ஜுனின் திட்டங்களை கவனத்தில் கொள்ளாமல், அவளின் எண்ணத்தில் மூழ்கிப் போனாள். இப்போதெல்லாம் அவளின் எண்ணத்தின் நாயகனாக இருப்பவன், ஆதர்ஷ் ஒருவனே… ஆனால் அதற்கான விடை தான் இத்தனை நாட்களாக ஜான்விக்கு தெரியாமல் இருந்தது.

இன்று, அர்ஜுன் கூறிய கல்யாணம் என்றதில், ஆதர்ஷின் முகம் மின்னல் வேகத்தில் மனதில் தோன்ற, பாவையவளிற்கு அப்போது தான் புரிந்தது, ஆதர்ஷை அவளின் மனம் எந்த இடத்தில் வைத்திருக்கிறது என்பதை…

மனம் புரிந்த மங்கையவளின் முகம் சிவக்க, அவளிற்கும்  ஆதர்ஷிற்குமான முதல் சந்திப்பான புனே இரயில் நிலையத்தில் முறைத்துக் கொண்டதிலிருந்து இறுதி சந்திப்பான, ஆதரவிற்காக அவன் தோளில் சாய்ந்தது வரை அனைத்தும் காட்சிகளாக அவள் மனதில் ஓடின…

ஆம்… அது தான் அவர்களின் இறுதி சந்திப்பு… அதற்கு பின் ஜான்வி எவ்வளவு முயன்றும் , அவனை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. சாக்ஷி மற்றும் விஷ்வாவிடம் கேட்டுப் பார்க்க, அவர்களும் அதே பதிலைத் தான் கூறினர்.

அவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கவனம் இங்கில்லை என்பதை உணர்ந்த அர்ஜுன், அவளின் தோளை தொட்டு அழைத்து, “ஜானி, இப்போலா அடிக்கடி ட்ரீம்ஸுக்கு போயிடுறியே…” என்று கிண்டல் செய்தான்.

“அர்ஜுண்ணா…” என்று சிணுங்கினாள் அவனின் ஜானி.

“சரி டா… நீ எப்போ சென்னை கிளம்புற..” என்று கேட்டான் அர்ஜுன்.

அர்ஜுனின் படம் வெற்றிபெற்றதைக் கொண்டாட, ஒரு வெற்றி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புனேவிலுள்ள அதே ப்ளூ மூன் ஹோட்டலில். எங்கு தன்னவளைக் கண்டு காதலில் விழுந்தானோ, அந்த இடம் கேட்பாரற்று கிடப்பதை காண சகியாமல், தானே அதை வாங்கியவன், அதை புணரமைத்து அங்கு தான் படத்தின் வெற்றி விழாவைக் கொண்டாட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தான். அதனால் தான் படம் வெற்றி பெற்று இரண்டு மாதங்கள் ஆன நிலையில், விழா நடப்பது சற்று தாமதமாகியது.

அந்த விழாவிற்கு நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அழைப்பு விடுக்க அனைவரும் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தனர். அவ்விழாவிற்கு தன் தோழி நந்தினி மற்றும் அவளின் குடும்பத்தை அழைக்க சென்னை செல்கிறாள் ஜான்வி. இந்த காரணத்தை வெளியே சொன்னாலும், அவளின் மனம் கவர்ந்தவனை நேரில் காணச் செல்கிறாள் என்பது அவள் மனம் மட்டுமே அறிந்த உண்மை.

“இன்னைக்கு நைட் ஃபிளைட்ல கிளம்புறேன் அண்ணா…”

“கவனமா போயிட்டு வா டா… நானும் வந்துருப்பேன்… ஆனா இங்க கொஞ்சம் வேலை இருக்கு…”

“ண்ணா… அதெல்லாம் நான் தனியா போயிட்டு வந்துடுவேன்… சென்னை டூ புனே நானா தனியா தான ட்ராவல் பண்ணேன்…” என்று ரோஷமாக சொல்ல, அவளின் மனமோ, அன்று அவளுடன் இருந்த ஆதர்ஷின் நினைவிற்கு சென்றது.

‘ஸ்ஸ்ஸ் எப்போ பாத்தாலும் அவன் நெனப்பு தான்… ஆதர்ஷ் பைத்தியம் ஆகிட்ட ஜானு நீ…’ 

அடுத்த நாள் சென்னை வந்திறங்கியவளின் மனம் முழுக்க, தன்னவனைக் காணப் போகும் ஆவல் இருக்க, முயன்று அதை அடக்கியபடி நந்தினியின் வீட்டை நோக்கி சென்றாள். சென்னைக்கு வரும்போது இருக்கும் உற்சாகம், சென்னையை விட்டு போகும் போது இருக்குமா…

“ஹே நந்து…” என்று சந்தோஷமாக அழைத்தபடி உள்ளே நுழைந்தாள் ஜான்வி.

“ஜானு…” என்று ஓடி வந்து கட்டிக்கொண்டாள் நந்தினி. 

தோழிகள் இருவரும் வெகு நாட்கள் கழித்து சந்தித்ததால், வாசலிலேயே பேசிக் கொண்டிருக்க, “பிரெண்ட்ஸ் ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சா சுத்தி என்ன நடக்குதுனே தெரியாது… ஏய் நந்து… அவ உள்ள வரதுக்கு வழிய விடு டி…” என்றார் பத்மா, நந்தினியின் தாய்.

பின் நலவிசாரிப்புகள் முடிந்ததும், அவர்களை விழாவிற்கு அழைத்தாள் ஜான்வி.

“ம்மா, இனி நம்ம ஜானு சாதா ஜானு இல்ல, தி ஃபேமஸ் டைரக்டர் மிஸ்டர். அர்ஜுனோட தங்கச்சி, தி ஃபேமஸ் காஸ்ட்யூம் டிசைனர் மிஸ்.  ஜனனி…” என்றாள் நந்தினி. அவளின் குரலில் பொறாமை அல்ல பூரிப்பே நிறைந்திருந்தது.

அவர்கள் மூவருக்கும், அந்த வீட்டில் நடந்த விஷயங்கள் தெரிந்தாலும், அதைப் பற்றி விசாரிக்க வில்லை. அவள் மறந்திருப்பதை கிளற வேண்டாம் என்று அமைதியாக இருந்தனர்.

காலை உணவை முடித்த ஜானு, தன் தோழனைப் பார்க்கப் போவதாக கூறிவிட்டு நந்தினியை அழைத்துக் கொண்டு சென்றாள்.

“ஹே ஜானு… உண்மைய சொல்லு டி… வெறும் ஃபிரெண்டா இல்ல பாய் ஃபிரெண்டா…” என்று நந்தினி செய்த கலாட்டாக்கள் உள்ளுக்குள் இனித்தாலும், வெளியே அவளை அடக்கியபடியே வந்தாள்.

“ஹே என்ன டி வீடு பூட்டியிருக்கு… இந்த அட்ரஸ் தானா…” என்று பூட்டியிருந்த கதவைப் பார்த்து நந்தினி கேட்க, “ஆமா டி, இந்த அட்ரஸ் தான் முன்னாடி ஒரு தடவ ஆதி என்கிட்டசொன்னான்….” என்று கூறியபடி அந்த வீட்டை சுற்றி பார்த்தனர்.

அவ்விரு பெண்கள், வீட்டை பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர், “என்னமா என்ன வேணும்…” என்று கேட்டார்.

“இது ஆதர்ஷோட வீடு தான… அவர பார்க்கத்தான் வந்துருக்கோம்…” என்றாள் ஜான்வி.

“ஏம்மா உங்களுக்கு விஷயமே தெரியாதா… அந்த பையன் இறந்து எட்டு மாசமாச்சே… புனேக்கு எதுக்கோ படிக்க போன பையன், ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டான்… இது தெரிஞ்ச அவங்க அப்பாவும் கொஞ்ச நாள்ல இறந்துட்டாரு…” என்றார்.

அதைக் கேட்ட ஜான்விக்கு உலகமே சுழல்வது போலிருந்தது. அவளின் மனமோ ‘ஆதி… ஆதி’ என்று அவளவனின் பெயரையே விடாமல் உச்சரித்துக் கொண்டிருந்தது. 

அவளின் நிலை கண்ட நந்தினிக்கும் வருத்தமாக இருந்தது. அவனைக் காண அவள் அவ்வளவு உற்சாகமாக வந்ததிலேயே நந்தினிக்கு புரிந்தது, ஜான்வி அவனை காதலிக்கிறாள் என்று… இப்போது அவன் உயிருடன் இல்லை என்பதை நந்தினியாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்னும்போது ஜான்வியின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது.

நந்தினி ஜான்வியின் தோளை தொட, “நந்து… என் ஆதி.. “ என்று வெடித்து அழ ஆரம்பித்தவளை அணைத்த நந்தினிக்கு என்ன சொல்லி அவளை சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை.

அப்போது மேகம் கருத்து மழை வருவது போலிருக்க, அங்கிருந்து செல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்த நந்தினி, ஜான்வி இருக்கும் நிலையில் அவளை அலைய வைக்க வேண்டாம் என்று நினைத்தவள், “ஜானு நீ இங்கேயே இரு… நான் போய் ஆட்டோ கூட்டிட்டு வரேன்..” என்று அவளை அந்த வீட்டின் திண்ணையில் அமர வைத்தவள், ஆட்டோவை அழைக்கச் சென்றாள்.

ஜான்வியோ அழுது அழுது சோர்ந்திருந்தாள். அவளின் கண்களிலிருந்து அவளின் கட்டுப்பாடின்றி கண்ணீர் வழிந்து கொண்டிருக்க, அவளிற்கு போட்டியாக மேகமும் மழையைப் பொழிய ஆரம்பித்திருந்தது.

அப்போது, “ஜானு…” என்ற குரல் மெலிதாக அவளை வருடுவதாகக் கேட்டது. அது அவனின் குரல்… அவளின் ஆதியின் குரல்…

அதில் பதறி எழுந்தவள் சுற்றிலும் அவனைத் தேடினாள். வாய் “ஆதி… ஆதி…” என்று முணுமுணுக்க, கண்கள் நான்கு திசைகளிலும் சுழன்றன.

“ஆதி எங்க இருக்க…” என்று அழுதுக் கொண்டே கத்தினாள்.

“ஜானு…” என்று அவளின் பின்னால் அந்த குரல் ஒலிக்க, வேகமாகத் திரும்பினாள்.  அங்கு யாரும் இல்லாது இருக்க, சற்று கூர்ந்து பார்த்தவள், அவனைக் கண்டாள்… அருவமாக…

ஆம் உருவம் இல்லாதவனின் உருவத்தை மழைநீர் அவளிற்கு தெரியப்படுத்த முயன்றதோ… அவனை அவ்வாறு கண்டவள், “ஆதி…” என்ற அலறலுடன் மயங்கினாள்.

சில தெளிவற்ற குரல்களை மயத்திலேயே உணர்ந்தவள், கண்களை மெல்லத் திறந்தாள். சுற்றிலும் பார்த்தவள், அது ஒரு மருத்துவமனை என்பதை அறிந்து கொண்டாள். பின் அவளின் மனம், அவள் இங்கு வந்த காரணத்தை எடுத்துக் கூற, ‘ஆதி’ என்று மெல்ல முணுமுணுத்தாள்.

அப்போது காற்று வேகமாக வீச, ஜன்னலில் தொங்கிக் கொண்டிருந்த திரைசீலை ஜான்வியின் முகத்தை வருடியது. அதை எடுத்தபோது அவளின் முன் நின்றிருந்தான் ஆதர்ஷ்.

அவனைக் கண்டதும், மகிழ்ச்சி, சோகம், ஏமாற்றம், ஆச்சர்யம் என்று பல்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாட்டாய், தன்னிலை மறந்து, கட்டிலிலிருந்து, “ஆதி…” என்ற கூச்சலுடன் எழுந்தாள்.

“ஸ்ஸ்ஸ் ஜானுமா ரிலாக்ஸ் டா…” என்று அவனின் வார்த்தைகளால் தெம்பூட்டினான் ஆதர்ஷ்.

அவனின் குரலில் சற்று தெளிந்தவள், “ஆதி… நீ எங்க போன, இவ்ளோ நாள்..? உன்ன நான் எவ்ளோ தேடுனேன்… உன்ன பார்க்க உங்க வீட்டுக்கு போனா, அங்க ஒருத்தர், நீ இறந்துட்டன்னு சொன்னாரு… எனக்கு அப்போ எப்படி இருந்துச்சு தெரியுமா…” என்றவளின் கண்களில் கண்ணீர் திரையிட்டு நின்றது.

அப்பேதையின் உள்ளம், இன்னும் அவளவனின் மறைவை ஏற்றுக்கொள்ள வில்லை.

ஆதர்ஷின் நிலையோ இன்னும் மோசமாக இருந்தது. இதோ அவன் எதைக் கேட்க, புனேயில் ஒவ்வொரு நாளும் காத்திருந்தானோ, அதை அவனின் காதலில் கூறியிருக்கிறாள். ஆனால், அதை அனுபவிக்க முடியாத சூழ்நிலையில் அல்லவா, விதி அவனை தள்ளியிருக்கிறது.

எத்தனை எத்தனை கனவுகள்… அவளிடம் காதலை சொல்லி, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து, திகட்ட திகட்ட காதலில் கரைந்து வாழ வேண்டும் என்று பல பல ஆசைகள்… இன்று அனைத்தும் கேள்விக்குறியாகிப் போனதே…

எந்த கண்களில் இனி கண்ணீர் வரவே கூடாது என்று எண்ணினானோ, இன்று அவற்றில் கண்ணீர் அருவியாகக் கொட்ட, அதைத் துடைக்கக் கூட வழியில்லாமல் அவனை நிறுத்திய விதியை மனதிற்குள் சபித்தான்.

முயன்று சாதாரண குரலில் பேசினான். “ஜானுமா… இப்போ நான் சொல்லப் போறத நெனச்சு டென்ஷனாகக் கூடாது.” என்று முதலிலேயே அவளை தயார்படுத்தினான்.

ஜான்விக்கோ, அவனைக் கண்டதில் அனைத்தும் மறந்திருந்தது. அவன் சொல்வதெக்கெல்லாம் தலையசைத்தாள்.

“அவரு சொன்னது உண்மை தான் ஜானு மா… நா… நான் இப்..போ உயிரோட இல்ல…” என்று தயங்கியபடி கூறினான்.

அதில் அதிர்ந்தவள், மீண்டும் மயங்கி விழ, “ஜானுஉ…” என்று வேகமாக சென்று அவளைத் தாங்கிக்கொள்ள முயன்றவன், அப்போது தான் அதை உணர்ந்தான். அவனால் அவளைத் தாங்க முடியாதே…

மயங்கிய ஜான்வி கட்டிலில் விழ, ஆதர்ஷ் அவளையே வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஜான்வி மீண்டும் மயக்கத்திலிருந்து எழ, அவளருகே நந்தினி அவளின் கைகளைப் பிடித்தவாறு அமர்ந்திருந்தாள்.

“ஹே ஜானு… இப்போ எப்படி இருக்கு…” என்று பதட்டத்துடன் வினவினாள்.

“இப்போ ஓகே டி…” என்று சோர்வுடன் கூறியவள், அவ்வறையை சுற்றிப் பார்த்தாள்.

அந்த அறையின் மூலையில் அவளையே தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ஆதர்ஷ் கண்ணில் பட்டான். அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனின் பிம்பத்தை கண்ணில் சேமித்துக் கொண்டிருக்கிறாளோ…

இதையறியாத நந்தினி, “நீ முழிச்சா, டாக்டர் இன்ஃபார்ம் பண்ண சொன்னாங்க… நான் போய் அவங்கள கூட்டிட்டு வரேன்…” என்று வெளியே சென்றாள்.

அவள் சென்ற மறுநொடி, அவளின் அருகே வந்த ஆதர்ஷ், “ஜானு… இப்போ எப்படி இருக்கு…?” என்று கேட்டான்.

ஜான்வியோ, அதற்கு பதிலளிக்காமல், “எப்படி…” என்று ஒரு வார்த்தையில் கேட்டாள்.

அவள் எதைப் பற்றி கேட்கிறாள் என்பதை புரிந்தவன், “அப்பாவ பார்க்க கிளம்பி வந்தப்போ ஆக்ஸிடென்ட்…” என்று அவன் கூறிக் கொண்டிருக்க, “நான் உண்மைய கேட்டேன் ஆதி…” என்றாள் ஜான்வி, குரலில் அழுத்தத்துடன்.

அதற்கு மேல் மறைக்க விரும்பாதவன், அவனின் இறப்பைப் பற்றிக் கூறத் துவங்கினான்.

அன்று… ஜான்வியை பத்திரமாக வெளியே அழைத்து வந்து விட்டாலும், அவனின் காதுகளில், “இது நிரந்தரம் இல்ல… நான் திரும்ப வருவேன்… அவள கொல்லுறதுக்காக வந்தே தீருவேன்…” என்ற அதன் குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது.

அவனிற்கும் அது புரிந்தே இருந்தது. இது தற்காலிகமான வெற்றி தான். அது கூறியது போல, மீண்டும் அதனிடம் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. இதிலிருந்து ஜான்வியை எப்படி மீட்பது என்று யோசனையில் இருந்தவன், அவனிற்கு அருகிலிருந்த கங்காதரின் பையைக் கண்டான்.

அதைக் கண்டதும், சற்று நேரத்திற்கு முன்பு, கங்காதரும் சதீஷும் பேசிய காட்சி மனதில் தோன்றியது.

கங்காதர் அவரின் கருவியை பொறுத்திக் கொண்டிருக்கும் வேளையில், “சார் அந்த மெஷின்ல எல்லாத்தையும்  ஃபிக்ஸ் பண்ணிட்டீங்கனா இது எதுக்கு…” என்று கைகளில் சிறிய உருளை வடிவிலான பொருளைக் காட்டினான்.

“இது ஒர்ஸ்ட் கேஸுக்கு சதீஷ். இந்த கருவிய வச்சு, அத சமாளிக்க முடியலைனா அத யூஸ் பண்ண வேண்டியதிருக்கும்… ஆனா  இத விட நீ கைல வச்சுருக்க டிவைஸுக்கு சக்ஸஸ் ரேட் ஜாஸ்தி…” என்றார் கங்காதர்.

“அப்போ எதுக்கு அத யூஸ் பண்ணிட்டு… டைரெக்ட்டா இதையே யூஸ் பண்ணலாம்ல…”

“ஹ்ம்ம்… அத யூஸ் பண்றது ரொம்ப ரிஸ்க் சதீஷ்… அது ஒரு பாம் மாதிரி… இந்த கருவி மாதிரி தூரத்துல இருந்து அதால வேலை செய்ய முடியாது…  அதோட நேரடி தொடர்புல இருந்தா தான் வேலை செய்ய முடியும்… நாம அது பக்கத்துல போறப்போவே இத கண்டுபிடிச்சுடும்… சப்போஸ் அது கண்டுபிடிக்காட்டியும், இத ட்ரிக்கர் பண்றப்போ, வெடிச்சு நாமளும் அதோட இறந்துடுவோம்… இட்ஸ் லைக் அ சூசைட் அட்டெம்ப்ட்…” என்று கூறி அந்த ‘பொருளை’ அவனிடமிருந்து வாங்கி அவரின் பைக்குள் வைத்திருந்தார்.

இதை ஆதர்ஷ், அவ்வீட்டினுளிருந்த ஜன்னல் வழியே கேட்க நேர்ந்தது. 

ஒரு பெருமூச்சு விட்டவன், தான் செய்ய நினைக்கும் செயல்களின் சாதக பாதகங்களை மனதிற்குள் கணக்கிட்டான். அப்போது தன்னவளின் சிரிப்பு சத்தம் காதில் விழ, திரும்பிப் பார்த்தான். 

ஜான்வி, அவள் தந்தையிடம் பேசி சிரித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அக்காட்சி அவனின் முடிவை திடப்படுத்த, கங்காதரின் பையிலிருந்த பொருளை கையில் எடுத்துக் கொண்டான்.

அப்போது தான் விஷ்வா அவனைக் கண்டான். அவன் கையில் வைத்திருந்ததை பார்த்து விட்டானா என்று ஒரு நொடி பயந்தவன், பின் அவனை எப்படியோ சமாளித்து அங்கிருந்து செல்வது போல், அவ்வீட்டிற்கு பின்பக்கம் சென்று அவர்கள் அங்கிருந்து செல்வதற்காக காத்திருந்தான்.

சற்று நேரத்தில், அனைவரும் அங்கிருந்து கிளம்பினர். மனதில் தைரியத்தை வளர்த்துக் கொண்டவன், மீண்டும் அவ்வீட்டிற்குள் பிரவேசித்தான்.

மெல்ல நடுகூடத்தை அடைந்தவன் சுற்றி பார்க்க, அங்கு ஒரு ஓரத்தில் அது அமர்ந்திருப்பது தெரிந்தது.

அவனின் காலடிச் சத்தத்தை கேட்டு ‘அது’, “பெரிய தப்பு பண்ணிட்ட… போனவன் அப்படியே போகாம, திரும்பி வந்து  ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட…  உன் மனசுல ஹீரோன்னு நெனப்பா… அவள காப்பாத்த போறேன்னு, உன் சாவ தேடி நீயே வந்துருக்க…” என்று உறுமலாக சொன்னது ‘அது’.

ஆதர்ஷோ, தன்னிடம் அதை அழிக்கக்கூடிய பொருள் இருக்கிறது என்பதை அது தெரிந்து கொள்ளக்கூடாது என்று வேண்டுமென்றே அதை திசை திருப்பினான்.

“ஹீரோவான்னு எனக்கு தெரியாது… ஆனா என் ஜானுக்காக உயிர கூட குடுப்பேன்… ஏன்னா நான் அவள் உண்மையா காதலிக்குறேன்… ஹ்ம்ம் உனக்கு எங்க  அதெல்லாம் தெரியப்போகுது… என் ஜானு சொன்னது உண்மை தான்… உனக்காக வருத்தப்படவே இங்க ஆளு இல்ல… த்ச்சு…” என்று எதைக் கூறினால், ‘அது’ கோபம் கொள்ளுமோ அதைக் கூறினான்.

அவன் எதிர்பார்த்த மாதிரியே கோபம் கொண்டு வேகமாக அவனருகில் வந்தது, “என்ன ‘என் ஜானு’ ‘ என் ஜானு’ன்னு ஒளறிட்டு இருக்க… நீ காதலிக்குறகு கூட அவளுக்கு தெரியாது… இப்போ தேவையில்லாம அவளால நீ சாகப் போற “ என்று கூறிய ‘அது’ அவனின் கழுத்தை தன் கைகளால் பற்றி, நகம் கொண்டு அழுத்தியது.

“என்னமோ அவள காப்பாத்த போற மாதிரி வந்த… இப்போ உன்ன கொன்னுட்டு அவளையும் உங்கூட துணைக்கு அனுப்பி வைக்கிறேன்… மேல போய் உங்க காதல தொடருங்க….” என்று பெருங்குரலில் சிரித்தது.

“ஹாஹா அது உன்னால முடியாது…” என்று வெற்றி சிரிப்பு சிரித்தான் ஆதர்ஷ்.

‘அது’ புரியாமல் பார்க்க, நொடியும் தாமதிக்காமல் அந்த பொருளை கையிலெடுத்து அதை அழுத்தியிருந்தான்.

அடுத்த நொடி, அப்பொருள் வெடிக்க அதிலிருந்தது வந்த சிறு துகள்கள் அதன்மேல் பட, அது வலியில் அலறி துடித்து மறைவதைக் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டான்.

‘அது’ முற்றிலுமாக மறைய, ஆதர்ஷோ அவனின் இறுதி நொடிகளை எண்ணிக் கொண்டிருந்தான்.

அப்போது தான் ஜான்வியை அர்ஜுன், விக்னேஷ்வரன், சதீஷ், கங்காதர் ஆகியோருடன் புனேக்கு அனுப்பி வைத்த விஷ்வாவும், சாக்ஷியும் அந்த வீட்டில் ஏதோ சத்தம் கேட்டு, அங்கு சென்று பார்த்தனர்.

அவ்வீட்டிற்குள் பயந்து கொண்டே சென்றவர்கள் கண்டது, இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த ஆதர்ஷை தான்.

“டேய் ஆது…” என்று அழைத்தபடி அருகே சென்று நண்பனின் கைகளைப் பற்றிக் கொண்டான் விஷ்வா. அவனை அர்த்தத்துடன் பார்த்து சிரித்தான் ஆதர்ஷ்.  

“டேய் நீ எப்படி டா இங்க… அப்பாவ பார்க்கப்போறேன்னு தான கிளம்புன…” என்று நண்பனின் நிலையைக் காண முடியாமல் கேட்டான் விஷ்வா.

அவனிடம் நடந்ததை சுருக்கமாகக் கூறியவன், “இனி ஜானுவுக்கு எந்த ஆபத்தும் இல்ல டா…” என்றான்.
“ஹே ஆது… அதுக்காக நீ இப்படி… ஏன் டா…” என்று பேச்சு வராமல் திக்கினான்.  பின் சற்று நிதானித்தவன், “வா டா இப்போவே ஹாஸ்பிடல் போகலாம்…” என்று அவனைத் தூக்கப்போக, “ஹூம் இல்ல டா… நா… நான் பிழைக்க… மாட்டேன்… இன்… னும் கொஞ்ச… நேரம் தான்… என்…எனக்கு இருக்கு… அதுக்…அதுக்குள்ள நான் சொல்..லி முடிச்சுடுறேன்… நா…நான் இறந்த… விஷயம்… ஜானுக்கு எப்…போவுமே தெரியக்கூடாது… தேங்க் காட்…இன்னும்… நான் அவள லவ்… பண்றது அவ…ளுக்கு தெ…ரியாது… நீ இத… சொன்…னேனா… அவ லை..ஃபயும் சந்தோ…ஷமா வாழ மாட்..டா… இப்போ…தான் அவ…ளுக்கு அவ கு…டும்பம் மீண்டும் கெடச்…சுருக்கு… அவ சந்தோ…ஷத்த கெடுக்க வே…ண்டாம்… என்..னக்கு ப்ரோமிஸ் பண்…ணு… அவ… கிட்ட இத சொல்…ல மாட்டேன்னு…” என்று தன் கடைசி மூச்சை இழுத்து பிடித்து பேசினான். 

நண்பனின் கடைசி கோரிக்கையை நிறைவேற்றுவதை தவிர, விஷ்வாவிற்கு வேறு வழியில்லை. அவனும் சம்மதமாக தலையசைக்க, ஆதர்ஷின் உயிர் உடலை விட்டு பிரிந்தது.

இதை ஆதர்ஷ் கூறி கேட்டவளின் நெஞ்சை யாரோ அழுத்துவது போல மிகவும் பாரமாக உணர்ந்தாள் ஜான்வி. அவள் கதறி அழவில்லை…  ஆனால் அவளின் மனமோ இரத்தக் கண்ணீர் வடித்தது.

தனக்காக ஒருவன் உயிரைக் கொடுத்தது கூட தெரியாமல், இத்தனை நாட்களாக மகிழ்ச்சியாக இருந்தது, அவளை வதைத்தது.

ஆதர்ஷ் அவளின் மனநிலையை சரியாக யூகித்தவன், “ஜானு மா இல்ல டா… இதுல நீ கில்டியா ஃபீல் பண்ண எதுவும் இல்ல…” என்று மறுத்து பேசினான்.

“ எப்படி உன்னால இப்படி பண்ண முடிஞ்சது ஆதி… எனக்காக… உன்ன காதலிக்குறாளான்னு தெரியாத ஒரு பொண்ணுக்காகவா உயிர கொடுத்த… அப்படி நான் என்ன பண்ணிட்டேன் உனக்கு…”

“நான் உன்ன காதலிக்கு… காதலிச்சேன் ஜானு மா….” என்றான் காதலாக. அவன் வேண்டுமென்றே தான் காதலித்ததாக இறந்த காலத்தில் கூறினான். இதனால் அவளின் வாழ்க்கை பாழாகக் கூடாது என்பதற்காக…

அதை ஜான்வியும் கவனித்தாள். “அட்லீஸ்ட் என்ன லவ் பண்றதையாவது முன்னாடியே சொல்லிருக்கலாம்ல…” என்று அவள் நிகழ்காலத்தில் கேள்வியைத் தொடர்ந்தாள்.

‘இதுக்கே உன்னால தாங்க முடியலையே… நான் முன்னாடியே சொல்லிருந்தா எப்படி தாங்கியிருப்ப…’ என்று அப்போதும் அவளிற்காகவே மனதினுள் யோசித்துக் கொண்டிருந்தான் அந்த காதலன்.

அப்போது நந்தினி மருத்துவருடன் அறைக்குள் நுழைய, அவர்களின் உரையாடல் முடிவுக்கு வந்தது.

அதன்பின் ஜான்விக்கு தனிமை கிடைக்காமல், நந்தினி அருகிலேயே இருந்து கவனித்துக் கொண்டாள்.  ஜான்வியும் அவளின் நேரத்தை யோசிப்பதிலேயே கழித்தாள்.

இரண்டு நாட்கள் வேகமாக உருண்டோட, ஜான்வி மும்பை செல்லும் நாளும் வந்தது.

அவளிற்காக ஒதுக்கப்பட்ட அறையில் ஜான்வி மட்டும் தனித்திருக்க, “ஆதி..”என்று அழைத்தால்.

எந்த எதிர்வினையும் இல்லாமல் போக, “ஆதி… நீ இங்க தான் இருக்கன்னு எனக்கு தெரியும்…” என்று அவள் உறுதியுடன் கூற, அவளின் முன் தோன்றினான் அவளின் ஆதி.

“நான் ஊருக்கு கிளம்புறேன்…” என்று அவள் கூற, “ஹாப்பி ஜர்னி ஜானு மா… இனி உன் வாழ்க்கை முழுக்க நீ சந்தோஷமா இருக்க என் வாழ்த்துக்கள்…” என்று ஆதர்ஷ் உண்மையான அன்புடன் கூறினான்.

அதில் விரக்தியாக சிரித்தவள், “சந்தோஷமா… அது உன் கைல தான் இருக்கு…” என்று அவள் கூறவும், அவன் புரியாமல் பார்த்தான்.

“அன்னிக்கு உன் லவ்வ தெரிஞ்சுக்காம உன்ன மிஸ் பண்ணிட்டேன் ஆதி… ஆனா அந்த தப்ப இன்னோரு தடவ பண்ண மாட்டேன்… ஐ லவ் யூ ஆதி… இத உங்கிட்ட வேற சூழ்நிலைல வேற மாதிரி கொல்லணும்னு ஆசப்பட்டேன்… ஹ்ம்ம் எனக்கு உன்கூடவே எப்போவும் இருக்கணும்…” என்று அவள் கூறியதைக் கேட்ட ஆதர்ஷ் திடுக்கிட்டான்.

“ஜானு… நீ என்ன பேசுறன்னு புரிஞ்சு தான் பேசுறியா… நீ எப்படி… என்கூட… இல்ல அது நடக்காது… நீ உனக்கானவன கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கணும் ஜானு மா…” அவன் இதைக் கூறும்போது உள்ளுக்குள் வலிக்கவே செய்தது. இருப்பினும் அவளின் நலனுக்காக கூறினான்.

“ஏன் ஏன் நடக்காது ஆதி… அர்ஜுண்ணா நிஷா அண்ணி இல்லையா… நான் உன்ன லவ் பண்றேன், ஆதி… உன்னால எப்படி அவ்ளோ ஈசியா உன்ன மறந்துட்டு வேற ஒருத்தனோட வாழ சொல்ல முடியுது… திரும்பவும் சொல்றேன் எனக்கு உங்கூட இருக்கணும்… அது எப்படி, எங்கன்னாலும் எனக்கு ஓகே தான்…” அவள் கண்களின் உறுதி கண்டு, ஆதர்ஷே திகைத்து போனான்.

“உனக்கு அர்ஜுண்ணா படத்துக்கான பார்ட்டி வரைக்கும் தான் டைம்… அதுக்குள்ள நீ என்கூட இருக்க வரலைனா, நான் உங்கூட இருக்குறதுக்கான ஸ்டெப் எடுக்க ஆரம்பிச்சுடுவேன்…” என்று அவனை மிரட்டி விட்டே அங்கிருந்து மும்பை சென்றாள்.

மும்பை சென்றதும், முதல் வேலையாக, விஷ்வா மற்றும் சாக்ஷியை அழைத்தவள், ஆதர்ஷைப் பற்றி கூறவில்லை என்று சண்டையிட்டாள். பின் அர்ஜுன், சதீஷ் மற்றும் விக்னேஸ்வரனிடம் நடந்தவற்றையும், ஆதர்ஷின் காதலையும் சொன்னாள்.

அர்ஜுனை அணைத்துக் கொண்டவள், “கடைசி வரைக்கும் அவன் என்ன லவ் பண்ணது எனக்கு தெரியவே இல்லண்ணா… அவன் எனக்காக உயிர குடுத்துருக்கான்… ஆனா இந்த எட்டு மாசமா அதக் கூட தெரிஞ்சுக்காம சந்தோஷமா இருந்துருக்கேன்…” என்று கண்ணீர் விட்டவளின் தலையைக் கோதியவனிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

தன்னைப் போலவே தங்கையின் நிலையும் இருக்க, அவனால் ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை. இருப்பினும் தங்கையின் வாழ்க்கை அல்லவா…

“ஜானி… எனக்கு புரியது டா… ஆனா…”

“அர்ஜுண்ணா பிலீஸ்… நீயும் அவன மாதிரி வேற ஒருத்தவன கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லாத… எனக்கு மனசு வலிக்குது…” என்றாள்.

ஆதர்ஷின் மேல் அர்ஜுனிற்கு ஏற்கனவே நல்லெண்ணம் இருக்க, இப்போது அவன் மனதில் பல படிகள் உயர்ந்து நின்றான் ஆதர்ஷ்.

‘கடவுளே… இவ்ளோ நல்லவன எதுக்கு அதுக்குள்ள சாக விட்ட…’ என்று உள்ளுக்குள் வருந்தினான்.

“ஆனா ஜானி… நீ எப்படி தனியா…”

“நான் தனியா இருக்க மாட்டேன் அர்ஜுண்ணா… நிஷா அண்ணி எப்படி உங்கூட இருக்காங்களோ, அதே மாதிரி என் ஆதி எங்கூட இருப்பான்…” என்று அர்ஜுன் பேசுவதற்கு கூட வாய்ப்பளிக்காமல் பேசினாள். 

தன் பேச்சைக் கொண்டே தன்னை மடக்கிய தங்கையின் செயலில், அந்த நேரத்திலும் அர்ஜுனிற்கு சிரிப்பு வர, அவன் சிரித்தான்.

அவன் சிரித்ததைக் கண்டவள், “அர்ஜுண்ணா சிரிச்சுட்டீயா… அப்போ உனக்கு ஓகே தான…” என்றாள் எதிர்பார்ப்புடன்…

அவளின் மனமும் அதிலுள்ள ஆசையும் அர்ஜுனிற்கு தெளிவாக புரிந்தது. அவனும் அதைக் கடந்து வந்தவனாயிற்றே… காதலின் சுகமும் வலியும் புரிந்த அவன், தங்கையின் ஆசைக்கு உடன்படுவதை நேரடியாக சொல்லாமல், மறைமுகமாகக் கூறினான்.

“நான் ஓகே சொல்றது இருக்கட்டும்… மிஸ்டர். ஜானி என்ன சொல்றாரு…” 

அவன் இப்படி கூறியதும், அவனை அணைத்துக் கொண்டு, “தேங்க்ஸ் அர்ஜுண்ணா…” என்றாள் கண்களில் கண்ணீர் வழிய…

அவளை பாசத்துடன் அணைத்துக் கொண்டவன், சூழ்நிலையை மாற்றும் பொருட்டு, “சரி சரி நான் கேட்ட கேள்விக்கு பதில் வரலையே…” என்றான்.

“அவனுக்கு வேற சாய்ஸே இல்ல…” என்று மர்மமாக சிரித்தாள். அர்ஜுனும் அவளுடன் சேர்ந்து நகைத்தான். அவளின் ‘சாய்ஸ்’ என்னவென்று தெரிந்தால், அப்போதும் இவ்வாறு நகைப்பானா…

இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த விக்னேஸ்வரனைக் கண்ட ஜான்வி, “ப்பா… உங்களுக்கு இதுல சம்மதமில்லையா…” என்று தயங்கியபடியே கேட்டாள்.

மெல்ல சிரித்தவர், “என் பொண்ணு சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்…” என்று வாஞ்சையாக அவளின் தலையைத் தடவினார்.

மனதிலோ, ‘அவ நெனச்சத நடத்திட்டா…’ என்று நினைத்து வருந்தினார்.

**********

ப்ளூ மூன் ஹோட்டல்…

ஜான்வி தன்னறையில் விழாவிற்காக தயாராகி அமர்ந்திருந்தாள். அவளின் மனம் தன்னவனின் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தது. சற்று பதட்டமாக தான் இருந்தாள்.

அப்போது உள்ளே வந்த அர்ஜுன், “ஜானி, என்ன ரெடியாகிட்டு யோசிச்சுட்டு இருக்க… ஆதர்ஷ் வந்தாச்சா…” என்றான்.

“இல்லண்ணா… நீ கீழ போ… கொஞ்ச நேரத்துல வரேன்…” என்றாள்.

நேரம் ஓடிக் கொண்டேயிருக்க, மனதினுள் ஒரு பயம், அவன் வரமாட்டானோ என்று…

சற்று பொறுத்து பார்த்தவள், “உன் டைம் முடிஞ்சுருச்சு ஆதி… நீ என்ன தேடி வரல… சோ நான் உன்னை தேடி வரப்போறேன்…” என்று முணுமுணுத்தவள், பால்கனி கதவைத் திறந்து வெளியே வந்தாள்.

“ஆதி வில் மீட் யூ சூன்…” என்று கூறியவள், அவள் நினைத்ததை நடத்தப் போகும் சமயம், அவள் காதில், “ஜானுமா…”என்ற குரல் கேட்க, சிலிர்த்துக் கொண்டு திரும்பினாள்.

அங்கு சன்ன சிரிப்புடன் நின்றிருந்தவனைக் கண்டவள், “ஆதி…” என்று கூறி அவனை தொட முயன்றாள்.

ஆனால் அவளால் அது முடியவில்லை… அதைக் கண்டவனின் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்தது.

“இதுக்கு தான் சொன்னேன் ஜானு மா…” என்று விலகினான்.

“அப்போ நான் உன் உடம்ப தான் லவ் பண்றேன்னு சொல்ல வரியா, ஆதி… ஃபிசிகல் டச்சால தான் உன் லவ்வ நானும் என் லவ்வ நீயும் சென்ஸ் பண்ணுவோமா…”

“ஜானு… என்ன பேசுற…”

“நீ செய்யுறது அப்படி தான் இருக்கு ஆதி…” என்றவளின் கண்ணீர் அவனைத் தாக்கியது. அவனின் செயல் அவளை எந்தளவிற்கு காயப்படுத்தி உள்ளது என்பதை புரிந்து கொண்டான்.

“ஜானு மா… நான் அத மீன் பண்ணி அப்படி பண்ணல டா…” என்று அவளிடம் கெஞ்சினான்.

அவளிற்கும் அது புரிந்தேயிருந்தது. ஆனாலும் அவன் கெஞ்சுவதை இன்னும் கேட்க நினைத்தவள், வெளியே கோபமாக காட்டிக் கொண்டாள்.

“ஜானு மா இப்போ நீ பேசலனா நான் இங்கயிருந்து போயிடுவேன்… அப்பறம் எப்பவும் வரமாட்டேன்…” என்று அவன் கூறியதில், வேகமாகத் திரும்பியவள், “ஓ உனக்கு அந்த எண்ணம் வேற இருக்கா… நீ போ உன் பின்னாடியே நானும் வருவேன்….” என்று கண்களால் பால்கனியை சுட்டிக் காட்டினாள்.

அவளருகே வந்தவன் அவன் உதட்டை தன் கைகளால் அடிப்பது போல செய்து, “நல்ல பேச்சே இந்த வாயில வராதா…” என்றான்.

இப்போதும் அவனால் அவளைத் தீண்ட முடியவில்லை தான்… ஆனாலும் அவனால் அவளை உணர முடிந்தது… அவர்களின் காதல் அவர்களுக்கு உணர்த்தியது…

“இப்போ கூட நீ எனக்கு ப்ரொபோஸ் பண்ணல…” என்று அவள் உதட்டை பிதுக்கி கூற, அங்கே முட்டிக்கால் போட்டு அமர்ந்தவன், “உடல் அழிஞ்சாலும் உயிர் இருக்க வரைக்கும் என்கூட இருக்க சம்மதமா…” என்று கேட்டான்.

உதட்டில் சிரிப்புடனும், கண்களில் கண்ணீருடனும் சம்மதமாக தலையசைத்தாள் ஜான்வி.

“இப்படி சினிமடிக்கா அப்போ ப்ரொபோஸ் பண்ணியிருந்தா, திரும்பிப் பார்க்காம ஓடியிருப்பேன்…” என்று வேண்டுமென்றே கூறியவள், ஓடத்துவங்க, “ஓ…என்ன விட்டு ஓடிடுவியா…” என்று கண்ணிமைக்கும் முன் அவள் முன்னே நின்றிருந்தான் அவளின் ஆதி.

“ஆதி… திஸ் இஸ் நாட் ஃபேர்…” என்று செல்லமாக சினுங்கினாள்.

*********

குளிரூட்டப்பட்ட அறைக்குள் இருந்தாலும், அவளிற்கு வியர்த்தது. ‘வேணாம் வேணாம் என் ‘ஆதி’ய ஒன்னும் பண்ணாத… நான்.. நானே.. வரேன் விட்டுடு…” என்று அவள் ஏதோ முணுமுணுத்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனிற்கு, அவளின் கனவு என்ன என்பது தெரிந்தது. அதற்கு காரணம் யாரென்றும் தெரிந்தது.

“ஜானு… ஜானு மா…” என்று மென்மையாக அழைத்தவனின் குரலைக் கேட்டதும் மெல்ல கண்விழித்தவள், “ஆதி…” என்று அவனை அணைத்துக் கொண்டாள். அவனும் “ஜானு மா… ஒன்னும் இல்ல டா… ரிலாக்ஸா இரு…” என்று அவளை ஆறுதல் படுத்தி தூங்க வைத்தான்.

“விடமாட்டேன் டா… அவள கொன்னே தீருவேன்…” 

“நான் இருக்குறவரைக்கும் ஜானுவ உன்னால ஒன்னும் செய்ய முடியாது… உன்கிட்டயிருந்து அவள காப்பாத்தணும்னு இறந்தவன் நான்… உன்னால முடிஞ்சா என்ன மீறி அவள கொல்லு…”

முப்பது வருட பகையை மறக்காத ‘அது’ ஒருபுறம், தன்னவர்களைக் காக்க அவர்களுக்கு அரணாக மாறியிருக்கும் நிஷாவும், ஆதர்ஷும்  ஒரு புறம்… இவர்களின் போராட்டம் தொடரும்…

அமானுஷ்யம் தொடரும்…???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!