நினைவு – 06

சாவித்திரி தன் முகத்தில் கவலை பரவ தன் முன்னால் அமர்ந்திருந்த தன் கணவன் ராமநாதனைப் பார்த்து கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தார்.

 

சற்று நேரத்திற்கு முன்பு மாணிக்கம் மற்றும் ஜெயலஷ்மியுடனான ராமநாதனின் உரையாடலை பற்றி கேட்டதன் பின்னரே அவரிடத்தில் அந்த அமைதி நிலவியது.

 

“கடைசியாக நீங்க என்னங்க சொன்னீங்க?” சாவித்திரி தயக்கத்துடன் ராமநாதனைப் பார்த்து வினவ

 

அவரோ

“நான் என்ன சொல்லி இருப்பேன்னு நினைக்குற சாவித்திரி?” புன்னகையுடன் அவரைப் பார்த்து பதில் கேள்வி கேட்டார்.

 

“அது! அது! எனக்கு தெரியலைங்க நீங்களே சொல்லுங்க! நான் ஒண்ணு நினைத்து சொல்லப் போய் நீங்க வேறு எதுவும் சொல்லி இருந்தால் எதற்கு வம்பு? நீங்களே சொல்லுங்க என்ன சொன்னீங்க?” 

 

“நம்ம வீட்டுக்கு அவங்க பொண்ணு தான் மருமகள்ன்னு சொல்லிட்டு வந்தேன்!” இயல்பாக தன் தோளை குலுக்கி கொண்டபடியே ராமநாதன் கூற ஆச்சரியமாக அவரைத் திரும்பி பார்த்த சாவித்திரி

 

“நிஜமாகவாங்க?” தன் காதில் விழுந்த வார்த்தைகள் உண்மை தானா என்று நம்பமுடியாமல் அவரைப் பார்த்து மறுபடியும் வினவினார்.

 

“ஆமா! ஆமா! ஆமா! இதோ அவங்க பொண்ணு போட்டோ கூட வாங்கிட்டு வந்துட்டேன் பொண்ணு பேரு ஹரிணிப்பிரியா எல்லோரும் ஹரிணின்னு தான் கூப்பிடுவாங்களாம் அடையாரில் ****கம்பெனியில் வேலை பார்க்கிறா! அவங்க பொண்ணுக்கு நடந்த விபத்தை பற்றி சொன்னதற்கு அப்புறம் தான் எனக்கு இந்த பொண்ணு தான் நம்ம வீட்டுக்கு மருமகளாக வரணும்னு உறுதியான எண்ணமே வந்தது இனி வருணைப் பேசி சம்மதிக்க வைப்பதில் தான் பெரிய சிக்கலே இருக்கு! அவங்களுக்கு வாக்கு கொடுத்துட்டேன் அதை எப்படியாவது காப்பாற்றியே ஆகணும்!” 

 

“நிச்சயமாக வருண் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுவான் அந்த பொண்ணு முகத்தை பார்த்துட்டு வேணாம்னு சொல்ல யாருக்கு மனது வரும்? ஏதோ ஒரு கஷ்ட காலம் அந்த பொண்ணு பழைய விடயங்களை மறந்துட்டா! அதைப் போய் பெரிதாக யாராவது எடுப்பாங்களா? எனக்கு நீங்க சொன்ன விடயத்தை கேட்டதில் இருந்து ரொம்ப கஷ்டமாகிடுச்சு நம்ம வீட்டிலேயும் அப்படி ஒரு நிலைமையில் நம்ம பையன் இருக்கான் என்பதனால் அப்படி இருக்கோ தெரியல!” 

 

“அதைப்பற்றி எல்லாம் யோசிக்காதே சாவித்திரி! எல்லாம் நல்லதே நடக்கும்! ஆமா ஹாஸ்பிடல் போன வருணும், அர்ஜுனும் இன்னும் திரும்பி வரலயா? ஆபிஸில் அந்த டாக்டர் வந்து வெயிட் பண்ணிட்டு இருக்காரோ என்னவோ தெரியல” என்றவாறே ராமநாதன் தங்கள் வீட்டின் வாயில் புறமாக திரும்பி பார்க்க அதேநேரம் வருணின் காரும் அந்த வாயிலின் முன்னால் வந்து நின்றது.

 

வருண் முகம் கொள்ளாப் புன்னகையுடன் காரில் இருந்து இறங்கி அர்ஜுன் இருந்த புறமாக கார் கதவைத் திறந்து விட அவனோ கைகள் முழுவதும் பல வண்ணப் பலூன்களுடன் சிரித்துக் கொண்டே காரில் இருந்து இறங்கி

“சாவித்திரிம்மா!” என்றவாறே துள்ளிக்குதித்து கொண்டு அவரை நோக்கி ஓடி வந்து நின்றான்.

 

“அர்ஜுன் கண்ணா! என்னப்பா இவ்வளவு பலூன்? எதற்கு?” அவரின் கேள்வியில் வருணின் புறம் திரும்பி பார்த்தவன்

 

“ஒரு அங்கிள் நிறைய பலூன் வைச்சுட்டு நின்னாரு! நான் வாங்கிட்டேன்!” கண்களை உருட்டி பாவனையோடு கூறி விட்டு அந்த பலூன்களை காற்றில் மிதக்க விட்டு அவற்றை துரத்திக்கொண்டு ஓடிப் பிடித்து விளையாடத் தொடங்கினான்.

 

“நல்ல பையன்!” சிறு புன்னகையுடன் அவனைப் பார்த்து கொண்டு இருந்தவர்

 

வருணின் புறம் திரும்பி

“ஹாஸ்பிடலில் டாக்டர் என்னப்பா சொன்னாரு?” என்று கேட்க

 

“அம்மா! ஒரு குட் நியூஸ்!” முகம் நிறைந்த சிரிப்போடு அவரருகில் வந்து அமர்ந்து கொண்டவன் அவரது கன்னத்தில் முத்தமிட்டு விட்டு அவரது தோளில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

 

“நாங்களும் உனக்கு ஒரு குட் நியூஸ் வைத்து இருக்கோம்” ராமநாதனின் கூற்றில் சட்டென்று தன் முகம் மாற எழுந்து அமர்ந்தவன்

 

“என்ன அது?” குழப்பத்தோடு அவரைப் பார்த்து வினவ

 

“முதலில் நீ சொல்ல வந்ததை சொல்லுடா கண்ணா! அதற்கு அப்புறம் நாங்க சொல்லுறோம்!” சாவித்திரி அவனது தலையை மெல்ல கலைத்து விட்டபடியே கூறவும்

 

“ஓகே! ஓகே சொல்லுறேன்!” புன்னகையுடன் அவர்கள் இருவரையும் பார்த்து தலையசைத்தவன் சற்று நேரத்திற்கு முன்பு ஹாஸ்பிடலில் வைத்து வைத்தியர் தன்னிடம் சொன்ன விடயங்களை எல்லாம் கூறினான்.

 

வருண் எல்லாவற்றையும் கூறி முடித்த அடுத்த கணமே

“வருண் நிஜமாகவாடா கண்ணா?” கண்கள் கலங்க கண்களில் ஆவலைத் தேக்கி சாவித்திரி கேட்க அவரைப் பார்த்து புன்னகையுடன் ஆமோதிப்பாக தலையசைத்தவன் இதுவரை தான் அர்ஜுனிடம் உணர்ந்த மாற்றங்களையும் அவரிடம் கூறினான்.

 

“கடவுளே! எங்க குடும்பத்தில் இத்தனை வருஷமா இருந்த கஷ்டங்கள் எல்லாம் மெல்ல மெல்ல விலகிப் போகப் போகிறதா? இத்தனை நாட்களாக நாம காத்திருந்ததற்கு பலன் கிடைக்கப் போகிறது!” தன் கண்களை மூடிக் கொண்டு தன் இரு கரங்களையும் கூப்பி மனதார கடவுளுக்கு நன்றி செலுத்தி கொண்டிருந்த தன் அன்னையின் கண்களை மெல்ல துடைத்து விட்டவன்

 

“இன்னும் கொஞ்ச நாள் தான்ம்மா! அதற்கு அப்புறம் அர்ஜுன் நம்ம பழைய அர்ஜுனாக நம்மகிட்ட வந்து சேர்ந்துடுவான்” தனக்குள் எழுந்திருக்கும் நம்பிக்கை உணர்வோடு அவரைப் பார்த்து கூற

 

மறுபுறம் அவனருகில் வந்து நின்று அவனது தோளில் ஆதரவாக கை வைத்து அழுத்தி கொடுத்த ராமநாதன்

“இந்த சந்தோஷமான தருணத்தில் உங்க அம்மாவோட சந்தோஷத்திற்காக ஒரு விடயம் செய்து கொடுப்பாயா வருண்?” கேள்வியாக அவனை நோக்க 

 

“கண்டிப்பாக!” உறுதியான குரலில் கூறியவன் என்ன அந்த விடயம் என்பது போல கேள்வியாக அவரை நோக்கினான்.

 

****************************************

 

ஹரிணி தன் முகமெல்லாம் வாடிப் போக கன்னத்தில் கையை வைத்து கொண்டு சோகமே மறு உருவாக அமர்ந்திருக்க அவள் முன்னால் அமர்ந்திருந்த விஷ்ணுப்பிரியா அவளது முகத்தையே உற்றுப் பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

“இப்போ என்ன ஆச்சுன்னு உன் முகத்தை நீ இத்தனை முழத்துக்கு தூக்கி வைத்துட்டு இருக்க ஹரிணி?” விஷ்ணுப்பிரியாவின் கேள்வியில் அவளை முறைத்துப் பார்த்தவள்

 

“ஏன் உனக்குத் தெரியாதா? வெளியே ஹாலில் நடந்ததை எல்லாம் கேட்டுட்டு தானே இருந்த? இப்போ எதுவுமே தெரியாத மாதிரி கேட்குற?” சீற்றத்தோடு அவளைப் பார்த்து கேட்டு விட்டு மீண்டும் தன் முகத்தை சோகமாக வைத்துக் கொள்ள 

 

சிறு புன்னகையுடன் அவள் அருகில் வந்து அமர்ந்துகொண்டே விஷ்ணுப்பிரியா

“இப்போ அம்மா, அப்பா என்ன சொன்னாங்க? உனக்கு கல்யாணம் பண்ணி வைப்பதைப் பற்றி தானே பேசினாங்க? அதுக்கு போய் ஏதோ உன்னை கொலை செய்ய சொன்ன மாதிரி இப்படி இருக்க! இந்த வயதில் கல்யாணம் பண்ணாமல் அப்போ அறுபது வயதில் அறுபதாம் கல்யாணமா பண்ணிக்க போற?” சிரித்துக்கொண்டே அவளைப் பார்த்து கேட்டாள்.

 

“போ பிரியா! உனக்கு எப்போதும் விளையாட்டு தான்! இப்போவே கல்யாணம் பண்ண என்ன அவசரம்? இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே!” 

 

“ஐயோ! யக்கா! நீ இன்னும் சின்ன பாப்பா இல்லை! உனக்கு இருபத்தேழு வயது ஆகுது இந்த வயதில் அம்மாவுக்கு நம்ம ரெண்டு பேருமே பிறந்துட்டோமாம் அது தெரியுமா உனக்கு?” 

 

“இருபத்தேழா?” சற்று அதிர்ச்சியாக தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டவள் அப்போதுதான் தனக்கு நடந்த விபத்தின் பின்னர் தான் பழைய விடயங்களை மறந்து மீண்டும் முதலிலிருந்து எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கொள்ள தொடங்கினோம் என்பதை தனக்கு மீண்டும் நினைவு படுத்தி கொண்டாள்.

 

“நான் இப்போதான் வேலைக்குப் போகத் தொடங்கியிருக்கேனா அதுதான் நான் இன்னும் என் வயதை சரியாக கவனிக்கவே இல்லை! பழைய விடயங்களை எல்லாம் மறந்து போன நான் என் வயதையும் மறந்து போயிட்டேன் போல!” குரலில் வெறுமை நிரம்ப விரக்தியோடு ஹரிணிப்பிரியா கூறவும் 

 

அவசரமாக அவளை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்ட விஷ்ணுப்பிரியா

 “ஓய் யக்கா! உன் கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? இப்படி என் முன்னாடி சோககீதம் பாடக் கூடாதுன்னு! அப்புறம் ஏன் திரும்பத் திரும்ப அதே விடயத்தை பண்ணுற?” அவளது நெற்றியில் செல்லமாக முட்டிக்கொண்டே கேட்கவும் 

 

உடனே தன் முகத்தை இயல்பாக வைத்து கொண்டு அவளைத் திரும்பிப் பார்த்தவள் “யாரு நீங்க சோக கீதம் பாடுவதை பற்றி சொல்லுறீங்களா மேடம்? நேற்று காலங்கார்த்தாலேயே ஒருத்தங்க ஒப்பாரி கீதம் பாடுனாங்க அவங்களை உங்களுக்குத் தெரியுமா?” சிரித்துக்கொண்டு கண்ணடித்தபடியே அவளைப் பார்த்து வினவினாள்.

 

“சரி சரி விடு! ஒரு வி.ஐ.பி வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் தான்! நீ உன் விஷயத்துக்கு வா! இதுவரைக்கும் நிறைய இடத்தில் நம்ம அம்மா, அப்பா அவங்களாகவே உனக்கு சம்பந்தம் கேட்டுப் போய் அவங்க எல்லோரும் கல்யாணம் வேணாம்னு தான் சொன்னாங்க ஆனா இவங்க உன்னைப் பற்றி எல்லாம் விரிவாக சொன்னதற்கு அப்புறம் தான் இந்த கல்யாணத்திற்கே சம்மதம் சொல்லி இருக்காங்க! இப்படி நம்மளை சரியாக புரிந்து கொண்ட ஒரு குடும்பம் கிடைக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம்க்கா! அதுவும் இந்த காலத்தில் கல்யாணம் பண்ணுறதே கஷ்டம் என்கிற நிலைமை உருவாகிடுச்சு! அப்படி இருக்கும் போது தானாக வர்ற சம்பந்தத்தை தட்டிக் கழிக்க வேணாம்க்கா! ஏதோ என் மனதுக்கு தோணுனதை சொல்லனும்னு நினைத்தேன் சொல்லிட்டேன் இனி உன் இஷ்டம்! உனக்கு பிடிச்சு இருந்தா ‘உம்’ன்னு சொல்லு! பிடிக்கலேன்னா..”

 

“பிடிக்கலேன்னா?” ஹரிணி அவளை கேலியாக பார்த்து கொண்டே வினவ

 

அவளோ

“பிடிக்கலேன்னா கொஞ்சம் யோசித்துப் பார்த்துட்டு அப்புறமாக ‘உம்’ன்னு சொல்லு! எப்படியோ ‘உம்’ன்னு சொன்னால் சரி!” தன் இடுப்பில் கை வைத்து தன்னருகில் அமர்ந்திருந்தவளை முறைத்து பார்த்து கொண்டே கூறினாள்.

 

“அது சரி நீ ஏன் இந்த கல்யாண விடயத்தில் இவ்வளவு ஆர்வமாக இருக்க?”

 

“உன் ரூட் கிளியர் ஆனால் தானே எனக்கு மாப்பிள்ளை பார்ப்பாங்க! எவ்வளவு நாள் தான் நானும் சிங்கிளாகவே இருக்குறது? நானும் மிங்கிள் ஆக வேணாமா?” 

 

“அடிப்பாவி!” ஹரிணி அதிர்ச்சியாக தன் வாயில் கையை வைத்து கொள்ள

 

அவளைப் பார்த்து வெட்கப்படுவது போல தன் நகத்தை கடித்துக் கொண்ட விஷ்ணுப்பிரியா

“அப்படி உற்று பார்க்காதேக்கா! எனக்கு வெட்கம் வெட்கமா வருது!” என்று கூறவும்

 

“இந்த கொடுமையைப் பார்த்து எனக்கே வெட்கமாக இருக்கு!” கிருஷ்ணா தன் தலையில் தட்டிக் கொண்டே அவர்கள் இருவருக்கும் முன்னால் வந்து அமர்ந்து கொண்டான்.

 

“என் இரத்தத்தின் இரத்தமே! வந்துட்டியா ராஜா? எங்கடா இன்னும் ஆளைக் காணோமேன்னு நினைத்து ஐந்து நிமிஷம் ஆகல அதற்கிடையில் வந்துட்ட ஆமா இந்த வீட்டில் நான் எங்கே இருந்து பேசினாலும் உன் காதுக்கு கேட்டுடுமா ராஜா?” விஷ்ணுப்பிரியா தன் முகத்தை பாவமாக வைத்து கொண்டு அவனைப் பார்த்து கேட்கவும்

 

தன் சட்டைக் காலரை உயர்த்தி விட்டபடியே அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டவன்

“யாஹ்! அஃப்கோர்ஸ்!” என்று விட்டு ஹரிணியின் புறம் திரும்பி

 

“இந்த கவரை அப்பா உன்கிட்ட கொடுக்க சொன்னாங்கக்கா!” எனவும்

 

“என்ன அது?” கேள்வியாக அவனைப் பார்த்துக் கொண்டே அந்த கவரை வாங்கி பிரித்துப் பார்த்தாள்.

 

*********************************

 

சூரியன் மறையும் நேரம் வானில் நிற மாற்றங்கள் பலவிதமாக அரங்கேறிக் கொண்டிருக்க அந்த நிற மாற்றங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றான் வருண்.

 

காலையில் சந்தோஷமான மனநிலையுடன் தன் அன்னையின் அருகில் அமர்ந்திருந்தவன் அவரது சந்தோஷத்திற்காக எதையும் செய்வேன் என்று தன் தந்தையிடம் உறுதியாக கூறியிருக்க அவர் கேட்ட விடயமோ அவன் முற்றிலும் எதிர்பாராதது.

 

அந்த சந்தோஷமான மனநிலையில் அவர்கள் தன் திருமணத்தைப் பற்றி பேசுவார்கள் என்று அவன் சிறிதளவேனும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.

 

“உனக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு நாங்க ஆசைப்படுறோம் வருண்!” தன் அன்னையின் கூற்றில் சிறிது நேரத்திற்கு முன்பிருந்த இயல்பு நிலை மறைய தடுமாற்றத்துடன் அவரை நிமிர்ந்து பார்த்தவன் எப்போதும் போல இப்போதும் மறுப்பு சொல்ல முடியாமல் தவிப்போடு அமர்ந்திருந்தான்.

 

முதல் நாள் இரவு தன் அன்னையினது மனம் வருந்திய அந்த பேச்சைக் கேட்டு இருக்காவிட்டால் ஒரு வேளை இப்போது அவன் அதை மறுத்து பேசியிருப்பானோ? என்னவோ?

 

நேற்று அவன் காதில் விழுந்த சாவித்திரியின் கவலையான குரல் மீண்டும் மீண்டும் அவனுக்கு நினைவு வந்து கொண்டே இருக்க கண்களை மூடி சிறிது தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன் எதுவும் பேசாமல் அமைதியாக அங்கிருந்து எழுந்து தன்னறைக்குள் வந்து அடைந்து கொண்டான்.

 

அப்போது வந்து சிந்தனையோடு பால்கனியில் நின்று கொண்டிருந்தவன் தான் தன் பகலுணவைக் கூட உண்ணாது அப்படியே நின்று கொண்டிருக்கிறான்.

 

சாவித்திரியும், ராமநாதனும் பலமுறை அழைத்தும் வெளியே செல்லாதவன் அர்ஜுனின் ஒரு குரல் கேட்டதுமே அவசர அவசரமாக தன்னறையில் இருந்து வெளியேறி சென்றான்.

 

“வருண்! எங்கடா என்னை விட்டுட்டு போன?” அர்ஜுன் வருணின் வயிற்றில் அடித்தபடியே கேட்க

 

 சிறு புன்னகையுடன் அவனைப் பார்த்து தன் இரு காதிலும் கையை வைத்து கொண்டு தோப்புக்கரணம் போட்டு கொண்டவன்

“ஸாரிடா அர்ஜுன்! இனி உன்னை அப்படி விட்டுட்டு போகமாட்டேன் சரியா?” என்று கேட்டான்.

 

“இல்லை போ நான் உன்னோட பேசமாட்டேன்!” அர்ஜுன் மீண்டும் அவன் வயிற்றில் அடித்து விட்டு கோபமாக தன் முகத்தை திருப்பி கொண்டு அங்கிருந்த ஷோபாவில் சென்று அமர்ந்து கொள்ள யாராவது தனக்கு உதவிக்கு வருவார்களா என்று சுற்றிலும் திரும்பி பார்த்தவன் சாவித்திரி அவனைக் கவனியாதது போலவே தன் வேலைகளை செய்து கொண்டிருக்க பெருமூச்சு விட்டபடியே அர்ஜுன் அருகில் சென்று அமர்ந்து கொண்டு

 

“அர்ஜுன் கண்ணா!” என்றவாறே அவனது கன்னத்தைப் பிடிக்க போக அவனோ பட்டென்று அவனது கைகளை தட்டி விட்டான்.

 

“ஓஹோ! சாருக்கு இப்போ எல்லாம் அடிக்கடி கோபம் வருது போல!” 

 

“…….”

 

“சரி நான் என்ன பண்ணா என் மேல கோபம் போகும் சொல்லு பண்ணுறேன்” வருணின் கேள்வியில் தன் கண்களை மூடிக்கொண்டு கன்னத்தில் தட்டியபடியே யோசித்தவன் கண்களைத் திறக்காமலே

 

“நூறு தடவை டம்ப்பெல்ஸ் தூக்கு அப்போதுதான் பிரியா கிட்ட நீ நல்ல பையன்னு சொல்லுவேன் இல்லைன்னா நீ பிரியா சொன்ன மாதிரி பேட்பாய்!” என்று கூறவும் அவனோ அதிர்ச்சியாக தன் நண்பனைத் திரும்பி பார்த்தான்.

 

அர்ஜுன் கூறியதை கேட்டு வருண் மட்டுமல்லாமல் சாவித்திரியும் அதிர்ச்சியோடும், பதட்டத்தோடும் அவர்கள் முன்னால் வந்து நின்று ஏதோ பேசப் போக அவரைப் பார்த்து வேண்டாம் என்று தலையசைத்தவன்

“அர்ஜுன்! அர்ஜுன்! கொஞ்சம் கண்ணைத் திறந்து என்னைப் பாருடா!” அவனது தோளில் தட்டி அழைக்க தூக்கத்தில் இருந்து விழிப்பதைப் போல மெல்ல தன் கண்களை திறந்து கொண்டவன் 

 

“நூறு தடவை டம்ப்பெல்ஸ் தூக்குடா வருண்! அப்போ தான் நைட் உனக்கு சாப்பாடு!” இயல்பாக கூறி விட்டு அமைதியாக அங்கிருந்த ஷோபாவில் ஏறிக் குதித்து விளையாடத் தொடங்கினான்.

 

கண்கள் கலங்க அவனது தலையை வருடிக் கொடுத்த வருண் அங்கு நின்று கொண்டிருந்த சாவித்திரியை சிறிது தள்ளி அழைத்துச் சென்று

“ம்மா! அர்ஜு! அர்ஜுன்! பழைய படி…” தான் சொல்ல வந்ததை முழுவதும் சொல்லி முடிக்காமல் குரல் தழுதழுக்க பாதியிலேயே நிறுத்தி விட 

 

அவனது கண்களைத் துடைத்து விட்டவர்

“நீ என்ன நினைக்கிறேன்னு எனக்கு புரியுது வருண்! அர்ஜுன் பழைய படி மெல்ல மெல்ல எல்லாம் பேச ஆரம்பிக்கிறான் அது தானே? இந்த ஏழு வருடங்களில் அவன் எதை எல்லாம் மறந்து இருந்தானோ அதை எல்லாம் நினைவு படுத்தி பேச ஆரம்பிக்கிறான் இல்லையா?” என்று கேட்க அவனது தலை ஆமோதிப்பாக அசைந்தது.

 

“அர்ஜுன் இப்போ சொன்ன விடயம் நாங்க இரண்டு பேரும் சின்ன வயதிலிருந்தே ஏதாவது தப்பு பண்ணால் எங்க இரண்டு பேருக்கும் மாறி மாறி கொடுத்து கொள்ளும் ஒரு சின்ன தண்டனை மாதிரி! இந்த தண்டனை அடிக்கடி அர்ஜுன் எனக்கு கொடுக்குறது! இப்போ மறுபடியும் அவன் அதை நினைவுக்கு கொண்டு வந்து ரொம்ப சாதாரணமாக சொல்லுறான்னா அவ… அவன்… அவனுக்கு குணமாகி கொண்டு வருகிறது என்று தானேம்மா அர்த்தம்?” ஆவலுடன் தன் அன்னையை பார்த்து வினவ 

 

கண்கள் கலங்க அவனைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவர்

“நம்ம அர்ஜுன் நம்ம கிட்ட பழைய படி திரும்பி வரப்போகிறான்!” என்று கூறவும்

 

முகம் கொள்ளாப் புன்னகையுடன் அவரை தூக்கி சுற்றி விட்டு இறக்கி விட்டவன்

“இப்போ சொல்லுங்கம்மா! நான் உங்களுக்காக என்ன வேணும்னாலும் பண்ண ரெடியாக இருக்கேன்! நான் கல்யாணம் பண்ணனுமா? பண்ணிக்கிறேன்! நான் என்ன பண்ணனும் அதை மட்டும் சொல்லுங்க” என்று கேட்க அவனது கேள்வியில் சாவித்திரி வியப்பாக அவனைப் பார்த்து கொண்டு நின்றார்.

 

“அம்மா! அம்மா! ஏதாவது பேசுங்கம்மா!” தன் அன்னை வெகு நேரமாக அமைதியாக இருப்பதைப் பார்த்து வருண் அவர் தோள் பற்றி உலுக்க

 

“ஆஹ்!” கனவில் இருந்து விழிப்பதைப் போல அவனைப் பார்த்துக் கொண்டு நின்றவர்

 

“வருண்! நீ…நீ  நிஜமாகத் தான் சொல்லுறியா?” அவன் மறுத்து சொல்லி விடக் கூடாதே என்ற ஆவலுடன் அவனைத் பார்த்து கேட்க 

 

அவரைப் பார்த்து புன்னகையுடன் மறுப்பாக தலையசைத்தவன்

“கண்டிப்பாக இல்லைன்னு சொல்ல மாட்டேன்!” எனவும்

 

“கடவுளே! என் வேண்டுதலை எல்லாம் நீ நிறைவிற்றிட்டப்பா!” கண்களை மூடி கடவுளுக்கு நன்றி செலுத்தி விட்டு சற்று தள்ளி மேஜை மீதிருந்த கவர் ஒன்றை எடுத்து அவனின் புறமாக நீட்டினார்.

 

“என்ன இது?” வருண் கேள்வியாக அவரை நோக்க

 

“நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு!” சாவித்திரி சிரித்துக் கொண்டே அவனது தலையை வருடிக் கொடுக்க சிறிது படபடப்போடும், தயக்கத்தோடும் அந்த கவரைப் பிரித்து பார்த்தவன் அதிலிருந்த ஹரிணியின் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியாகி நின்றான்…….