IthayamNanaikirathey-2

IthayamNanaikirathey-2

இதயம் நனைகிறதே…

அத்தியாயம் – 2

       இதயா, அவள் மின்னஞ்சலை பார்த்து சலிப்பாக, “ம்… ச்…” கொட்டினாள்.

மீட்டிங் பதினோரு மணிக்கு போஸ்ட்போன் பண்ணிருக்காங்க. இதுக்கு நான், இவ்வளவு அவசரமா ஓடி வந்திருக்கவே வேண்டாம்.அவள் மனம் ஒரு பக்கம் சலித்து கொள்ள, மறுப்பக்கம் வேறு திசையில் தீவிரமாக சிந்தித்து கொண்டிருந்தது.

   சுமார் ஆறு வருடங்கள், அதுவும் அவன் குரலை கேட்டு சுமார் ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. இத்தனை வருஷம் இல்லாமல் விஷ்வா எதுக்கு இப்ப என்னை தேடி வரணும்?’  அவளால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.

       அவள் கண்கள் மடிக்கணினியை பார்த்து கொண்டிருக்க, அவள் கைகள் மடிக்கணினியை இயக்கி கொண்டிருக்க, அவள் சிந்தனை மட்டும் எங்கோ தொலைந்திருந்து.

   அவள் சிந்தனையை கலைப்பது போல, “ஹே… இதயா” என்ற உல்லாச குரல் அவளை நனவுலகத்திற்கு திருப்பியது.

    ம்... சொல்லு நித்திலா.”  இதயாவின் கவனம் நித்திலாவின் பக்கம் திரும்பியது.

நம்ம புது டெலிவரி ஒனரை பார்த்தியா செம்ம ஸ்மார்ட். ஆளு சும்மா ஹீரோ மாதிரி இருக்கார்.” நித்திலா சிலாகிக்க, அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்தாள் இதயா.

ம்… உண்மை இதயா. இன்னைக்கு டாக் ஆப் தி ஆஃபீஸே விஷ் தான்.” என்று நித்திலா கண்சிமிட்டினாள்.

விஷ்?” இதயா கேள்வியாக கண்களை சுருக்க, “விஷ்வா ஷார்ட் ஃபார்ம்.” நித்திலா தோள்களை குலுக்கினாள்.

    இதுவும் ஆஃபீஸில் எல்லாரும் வச்ச பேரா?” இதயா தன் கவனத்தை மடிக்கணினியில் செலுத்திய படியே கேட்டாள்.

   நோ, நான் வச்ச பேரு. நம்ம  காஸிப் பேச வசதியா இருக்குமில்லை?” நித்திலா கேள்வியை தொடுக்க, “பேசுறது வம்பு. அதுக்கு  ஸ்டைலா நிக் நேம் வேற ஒரு கேடு. இது தேவையா?” என்று கடுப்பாக கேட்டாள் இதயா.

  விஷ்க்கு…” என்று நித்திலா ஆரம்பிக்க, “நீ விஷ்ன்னு சொல்லும் பொழுது, எனக்கு ஃபிஷ்ன்னு கேட்குது” என்று இதயா நக்கலாக கூறினாள்.

  நீ அவரை பார்க்கலை இதயா. அவரை பார்த்தா இப்படி பேச மாட்ட. ஸோ ஹன்சாம் அண்ட் நைஸ் பர்சன். இந்த விஷ், ஃபிஷ் எல்லாம் வேணாம். நான் விஷ்வான்னே சொல்றேன்.” நித்திலா தன் கண்களை விரித்தாள்.

   அந்த ஹன்சமில் தான் நான் மயங்கினேனோ?’ கழிவிரக்கம் கொள்ள ஆரம்பித்து, தன்னை தானே மீட்டுக்கொண்டு, “நைஸ் பர்சன்னு அதுக்குள்ளே எப்படி கண்டுபிடிச்ச நித்திலா?” என்று இதயா கேட்டு வைத்தாள்.

   இப்ப கேட்டியே இது கேள்வி.” என்று நித்திலா, தன் தோழியை மெச்சுதலாக பார்த்தாள்.

    வந்த கொஞ்ச நேரத்தில் ஆல் டீடெயில்ஸ் தெரிஞ்சிகிட்டோமில்லை.” என்று பெருமையாக பேச ஆரம்பித்தாள்  நித்திலா.

  நம்ம பழைய டெலிவரி ஓனர் நாம ஒன்பது மணிக்கு வரணுமின்னே, ஒன்பது மணிக்கு மீட்டிங் வைப்பாரு. பட் விஷ்வா, வந்த உடனே டென்ஷன் வேண்டாமுன்னு இனி டெய்லி மீட்டிங்  பதினோரு மணிக்குன்னு மாத்திட்டாரு. ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதமில்லையா? ஸோ, விஷ்வா இஸ் எ நைஸ் பர்சன்.” நித்திலா கள்ளங் கபடமில்லாமல் சிரித்தாள்.

   இதயாவும் புன்னகைத்துக் கொண்டாள்.

  ஆனால், எனக்கு ஒரு சந்தேகம்” நித்திலா நிறுத்த, இதயாவுக்கு தூக்கி வாரிப்போட்டது.

 நித்திலா எதையும் கண்டு கொண்டாளோ?’ என்ற பதட்டம் இதயாவின் முகத்தில் தெரிய, ‘அதை எல்லாம் கண்டுகொள்வேனா?’ என்று பேச்சை தொடர்ந்தாள் நித்திலா.

அவருக்கு ஒரு பையனும் பொண்ணுமாம். பையனுக்கு எட்டு வயசாம். பொண்ணுக்கு ஐந்து வயசாம்.” நித்திலா கூற, இதயாவின் கண்கள் கலங்கியது.

தன் தோழிக்கு தெரியாமல் தன் முகத்தை மடிக்கணினியின் பக்கம் திருப்பி கொண்டு, தன் கண்களை இறுக மூடி தன் கண்ணீரை உள்ளித்துக் கொண்டாள் இதயா.

அவளுக்கு அது பழக்கம் தான் என்பது போல் இருந்தது அவள் செய்கை.

  நித்திலா பேச்சை முடித்துக்கொண்டு, தன் தோழியை பார்த்தாள்.

அவளிடமிருந்து பதில் வராமல் போக, அவளை தோள் தொட்டு, “இதயா, நான் கேட்டது உன் காதில் விழுந்ததா இல்லையா?” என்று கேட்டாள் நித்திலா.

எ… என்ன கேட்ட?” இதயா தடுமாற, “அது சரி, உனக்கு உன் வேலையை பார்க்க ஆரம்பிச்சிட்டா எதுமே தெரியாதே.” சலித்துக் கொண்டு மீண்டும் கூறினாள் நித்திலா.

அவரை பார்த்தா ரெண்டு குழந்தைங்க இருக்கிற மாதிரி தெரியலைல. ரொம்ப யங்கா இருக்காரில்லைனு கேட்டேன்?” என்று நித்திலா நிறுத்த, “எதாவது லவ் அப்படி இப்படின்னு சீக்கிரமே கல்யாணம் பண்ணிருப்பாங்களா இருக்கும். அப்படின்னா வயது முன் முப்பதுகளில் தானே இருக்கும்.” இதயா தன் தோழியின் முகம் பார்க்கமால் முணுமுணுத்தாள் .

அது எப்படி பார்த்த மாதிரி சொல்ற லவுன்னு?” என்று நித்திலா சந்தேகம் கேட்க, “உனக்கு வேலை இல்லையா?” என்று இதயா, நித்திலாவை பார்த்து சிடுசிடுத்தாள்.

அது தான் தினமும் இருக்கே. சென்னையில் இருக்கிற ஆஃப் ஷோர் டீம் தலையில் கொஞ்சத்தை கட்டுவோம். நீ சொல்லு.” நித்திலா, அவள் கேள்வியின் பதிலுக்காக காத்திருந்தாள்.

இதை தெரிஞ்சிக்க என்ன பெரிய அறிவா வேணும். எல்லாம் ஒரு யூகம்  தான்.” என்று இதயா தோள்களை  குலுக்கி வேலையில் மூழ்குவது போல் பாவனை செய்தாள்.

அதற்கு மேல் பேசி பயனில்லை என்று உணர்ந்த நித்திலா தலை அசைத்துக் கொண்டு அவள் கவனத்தை தன் மடிக்கணினியின் பக்கம் திருப்பினாள்.

இதயா, சில நொடிகள் மௌனத்திற்கு பின், “புது டெலிவரி ஓனர் அவர் மனைவி பத்தி எதுவும் சொல்லலியா?” என்று நித்திலாவை ரக் கண்களால் பார்த்தபடி ஆசையாக கேட்டாள்.

 மனைவியை பத்தி சொல்ல என்ன இருக்கு? எல்லாருக்கும் ஒன்னு தானே இருக்கும்.” என்று பெரிய ஹாஸ்யத்தை கூறிவிட்டது நித்திலா சிரிக்க, அவளை முறைத்துவிட்டு, ‘இவ கிட்ட போய் கேட்டேன் பாருஎன்று தன்னை தானே நொந்து கொண்டு வேலையில் மூழ்கினாள் இதயா.

மணி பத்து ஐம்பத்தி எட்டு.

அனைவரும் கான்ஃபெரன்ஸ் அறையில் குழுமி இருக்க, “எல்லாரும் வந்தாச்சா?” என்று கண்களை சுழல விட்டபடி கேட்டான் விஷ்வா.

அவன் கண்கள், இதயாவை தேடியது.

 “இதயா மட்டும் தான் இன்னும் வரலை. இதோ வரேன்னு சொன்னாங்க.” நித்திலா அனைவரையும் பார்த்தபடி இயல்பாக கூறுகையில், இதயா உள்ளே நுழைந்தாள்.

பழைய டெலிவரி ஓனர் பேச ஆரம்பித்தார். அனைத்து உரையாடல்களும், ஆங்கிலத்திலே இருந்தது. கதையின் போக்கிற்காக  அனைத்தும் தமிழில்.

“நம்ம ப்ரொஜெக்ட் எல்லா லீட்ஸும் இருக்காங்க. மேனேஜர்ஸ்சும் இருக்காங்க. இதயா, உங்களுக்கு டிரெக்ட் ரிப்போர்டிங்.” அவர் கூற, அவன் உதடுகள்  புன்னகையில் மடிந்தது.

அந்த புன்னகை அனைவருக்கும் அழகாகவும், இதயாவுக்கு அர்த்தம் பொதிந்ததாகவும் இருந்தது.

அவர்கள் ப்ராஜெக்ட் பற்றி தொழில் நுட்பத்தோடு பேச தொடங்க, “இது ஜஸ்ட் பிரெண்ட்லி மீட் தான். உங்களை பத்தி சொல்லுங்க போதும். டெக்னீகலி  நான் போக போக தெரிஞ்சிக்குறேன். ஒரே நாளில் எல்லம் தெரிஞ்சிக்க  முடியாதில்லையா?” என்று சிரித்த முகமாக பேசினான் விஷ்வா.

  பார்த்தியா? நான் சொன்னேனில்லை. நைஸ் பர்சன்என்று நித்திலா இதயாவை பார்க்க, ‘இதுக்கெல்லாம் நைஸ் பர்சனா?’ என்பது போல் இதயா அவளை முறைத்தாள்.

    அனைவரும், அவர்களைப் பற்றியும் பணியின் அனுபவம் பற்றியும், அவர்கள் குடும்பம் குழந்தைகள் பற்றியும்  ஓரிரு வார்தைகள்  கூற, இதயா பேசும் கட்டமும் வந்தது.

   இதயா, அவள் இங்கு வந்த வருடத்தையும், பணியின் அனுபவம் பற்றியும் கூறி நிறுத்திக்கொள்ள, யாரிடமும் எதையும் கேட்காத விஷ்வா, “உங்க ஹஸ்பண்ட்?’ என்று கேள்வியாக நிறுத்தினான்.

 அனைவரும் சற்று அதிர்ச்சியாக பார்த்தனர். பெரும்பாலும் யாருக்கும் இதயாவை பற்றி எதுவும் தெரியாது.

   தெரிந்தவர்களுக்கும், அவள் ஒரு ஐந்து வயதிருக்கும் பெண் குழந்தையோடு தனியாக வசிக்கிறாள் என்று மட்டும் தான் தெரியும்.

நித்திலா உட்பட!

 அதற்கு மேல் இதயா யாரிடமும் நெருங்கி பழகியதுமில்லை. நெருங்க விட்டதுமில்லை.

    உங்க ஹஸ்பண்ட்?’ இந்த கேள்வி பலரையும் வாயடைக்க செய்தது.

பலர் அதிர்ச்சியில் இருந்தாலும், “ஐ அம் சிங்கிள்.” அசட்டையாக கூறினாள் இதயா.

  ஓஹ் சாரி.” கிஞ்சித்தும் வருத்தமில்லாமல் வருத்தம் தெரிவித்தான் விஷ்வா.

சாரி சொல்ற அளவுக்கு எதுவும் நடக்கலை. ஐ அம் ஹாப்பி.” இதயாவின் உதடுகள் ஏளனமாக மடிந்தது.

நான் இல்லாமல், இவள் சந்தோஷமாக இருக்கிறாளா?’ என்ற எண்ணம் அவனை சாட்டையால் அடித்து கோபமுற செய்தது.

திமிர்…அவன் கண்கள் குற்றம் சாட்ட, ‘சுயமரியாதை…அவள் கண்கள் அவனுக்கு சவால்விட்டது.

     விஷ்வா சூழ்நிலை கருதி,  பேச்சை வேறுபக்கம் திருப்பினான்.

  மீட்டிங் முடிய, “இதயா… என் காபின்க்கு வாங்க. நான் உங்க கிட்ட மத்த டீடெயில்ஸ் கேட்டுக்குறேன்.” அவன் கூற, அவளும் தலை அசைத்துக் கொண்டாள்.

இதயா, தன் மடிக்கணினியோடும், ஒரு சிறிய குறிப்பேடோடும் அவன் அலுவலக அறைக்குள்,  கதவை தட்டி கொண்டு உள்ளே நுழைய எத்தனித்தாள்.

    இதயா கதவை திறக்க, அவன் விழிகள் அவளை ஆழ்ந்து நோக்கின. அவள் வழிகளும், அவன் விழியின் விசையில் வீழ்ந்து போயின.

         விஷ்வாவின் அலுவலக அறையில் இதயா. இருவருக்கும், அவர்கள் திருமணம் முடிந்த ஆராம்ப கால நினைவுகள் அலைமோதியது.

      அவர்கள் எண்ணமும் கடந்த காலத்தை நோக்கி பயணித்தது.

சென்னை ஐ.டி அலுவலகம்.

விஷ்வாவின் அலுவலக அறைக்குள் அவள் கதவை தட்டி கொண்டு உள்ளே நுழைந்தாள்.

       அவள் முகத்தில் ஒரு வெட்க புன்னகை. அவள் முகம் செவ்வானமாக சிவந்திருந்தது.

      புதுமண தம்பதி, என்று உறுதி செய்வது போல் அவனை பார்த்த நொடி  அவள் கன்னங்கள் நாணத்தில் சூடேறி செம்மையின் ஜூவாலையோடு ஜொலித்தது.

   அவளை பார்த்த நொடி அவன் முகத்திலும் ஒரு உல்லாச புன்னகை தொற்றி கொண்டது.

டேய்… நான் பாதி நேரம் உன் கேபினில் தான்டா இருக்கேன். அவள் அவன் கைகளை தட்டி முணுமுணுத்தாள்.

அது தான் சாக்கு என்று அவன் கைகளை பிடித்து கொண்டு, ‘ஏன் பிடிக்கலையா?’ அவன் கண் சிமிட்டினான்.

 பிடிக்காமல் போக என்ன?’ அவள் குறுஞ் சிரிப்போடு கைகளை மெல்ல உருவிக் கொண்டாள்.

 

எல்லாரும் என்ன நினைப்பாங்க?’ அவள் அவன் எதிரே அமர, ‘ஒய்… ஏன் அங்க உட்கருற? என் பக்கத்தில் வா. அவன் அவளை அவள் அருகே அமர்த்திக் கொண்டான்.

அவள் தயங்க, ‘நாம்ம என்ன லவ்வர்ஸா? எல்லாரும் தப்பா நினைக்க. நாம்ம, இப்ப ஹஸ்பண்ட் ஒய்ப். யாரும் எதுவும் நினைக்க மாட்டங்க. அவன் கூற, அவள் புன்னகைத்து கொண்டாள்.

அவள் சந்தேகம் கேட்க, அவன் பக்கம் சரிய… அவளுக்கு விளக்கமளிக்க, அவன் அவள் பக்கம் திரும்ப… இருவருக்கும் மற்றவர்களை அருகாமையில் இருத்தி கொள்ள ஒரு வாய்ப்பு.

 பயன்படுத்திகொள்ள அவனும் தவறவில்லை. அனுபவிக்க அவளும் தவறவில்லை.

அவள் ஏதாவது தவறு செய்தால், அவன் சிடுசிடுக்க… அவள் மனைவியாக கோபித்துக் கொள்ள… அவன் சரசமாக சமரசம் பேசி வேலையும் நடந்தது.

 

வேலையினோடு, ‘உன் சுடிதார் இன்னைக்கு அவ்வளவு அழகா இருக்கு. அவன் அவளை ரசித்தபடி கூற, ‘இதை காலையில் வீட்டில சொல்ல மாட்டியா? ஃப்பிஸ் நேரத்தில் என்ன தேவை இல்லாத பேச்சு?’ அவள் அவன் ரசனையை ரசித்து கொண்டே போலி கோபம் காட்டினாள்.

பொண்டாட்டியை ரசிக்க நேரம் காலம் எல்லாம் கிடையாது. காலையிலிருந்து ரசிச்சிகிட்டே தான் இருக்கேன். நீ தான் என் கிட்ட தனியா சிக்கவே இல்லை. இப்ப தான் தனியா சிக்கிருக்க.” அவன் அவளை குற்றம் சாட்டினான்.

 

இன்றும்…

காலையிலிருந்து ரசிச்சிகிட்டே தான் இருக்கேன். நீ தான் என் கிட்ட தனியா சிக்கவே இல்லை. இப்ப தான் தனியா சிக்கிருக்க…’ அவன் எண்ணம் கதவருகே, அவன் அனுமதிக்காக காத்துக் கொண்டிருந்த அவளை ரசித்தபடி தேங்கி நின்றது.

‘இன்னைக்கு காலையில் இருந்து விஷ்வா என்னை ரசித்து கொண்டு தான் இருக்கிறானோ? இப்பொழுது, தான் நான் தனியா சிக்கி இருக்கிறேனோ?’ அவள் எண்ணமும் அதே இடத்தில் தேங்கி நின்றது.

    அந்த நெகிழ்வு, அவளை அசைத்து பார்த்தது.

 இந்த சிந்தனை ஓட்டம் நல்லதிற்கில்லை. ஏமாற்றம். ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். ஆசை காட்டி, உன்னை ஏமாற்றிவிடுவான் விஷ்வா.தனக்கு தானே அறிவுறுத்திக் கொள்ள முயன்று கொண்டிருந்தாள் இதயா.

     எத்தனை முயற்சித்தும், ‘எங்கே சென்றது எங்கள் அன்பு ? எத்தனை அழகான நாட்கள்? அன்பு நிறைந்து தானே வழிந்தது? விஷ்வா ஏன் மாறிவிட்டான்? புரிதல் இல்லாத அன்பா? இல்லை…’ அவளால் மேலே சிந்திக்க முடியவில்லை.

         அவளின் விழிகளில் தன்னை தொலைத்த விஷ்வாவும், ‘எங்கே தொலைந்தது எங்கள் அன்பு?’ என்ற கேள்வியோடு அவளை பார்த்து கொண்டிருந்தான்.

அவள் கதவை பிடித்து கொண்டிருந்த சில நொடிகள் வலியை கொடுக்க, சுயநினைவு வந்தவளாக  க்… க்கும்…” அவள் தன்னை சமன் செய்து கொண்டாள்.

“கம் இன்…” என்று அவன் கை அசைக்க, உள்ளே நுழைந்து அவன் கை காட்டிய எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

இருவரின் கண்களும், அவர்களையும் மீறி, அவன் அருகே கடந்த நாற்காலியை தொட்டு மீன்டது.

“இதயா…” அவன் ஆழமான குரலில் அழைக்க, அவளோ தன் கவனத்தை மடிக்கணினியில் செலுத்தி அவர்கள் ப்ராஜெக்ட் பற்றி பேச ஆரம்பித்தாள்.

என் கிட்ட கேட்க எதுமே இல்லையா?” அவன் அவளை பார்த்தபடி இடைமறித்தான்.

   கேட்டா குடுத்திருவியா விஷ்வா?” அவள் சுள்ளென்று கேட்டாள்.

குடுத்துட்டு போக, நாம் ஏமாளி இல்லை.” என்று அவன் கர்ஜிக்க, “ஆசைப்பட்டு, ஏமாந்து போக, நானும் முட்டாள் இல்லை.” அவளும் கர்ஜித்தாள்.

எப்படி இதயா, இப்படி மனசே இல்லாமால் மாறிப்போன?” அவன் கேட்க, “மனசே  இல்லாத சிலரோடு வாழ்ந்த துரதிஷ்டமான காலம்  கற்று கொடுத்த பாடம்.” என்று அவள் அழுத்தமாக பேசி தன் சோகத்தை தன்னுள் அழுத்திக் கொண்டாள்.

ஏய்….” அவன் பற்களை நறநறக்க, “இந்த கத்துற வேலை, இந்த மிரட்டுற வேலை எல்லாம் இங்க வேண்டாம். டொமெஸ்டிக் வைலென்ஸ் கேஸில் உள்ள போக வேண்டி வரும்.” என்று அவள் அவனை எச்சரித்தாள்.

   அவன் எதுவோ பேச ஆரம்பிக்க, “எனக்கு நிறைய வேலை இருக்கு. என் பெண்ணை கூப்பிட போகணும். நான் வழக்கமா சீக்கிரம் கிளம்பிருவேன்.” அவள் நிறுத்த, “நான் என் பொண்ணை பார்க்கணும்.” அவன் நிறுத்தினான்.

நீ நினைக்குறது எதுமே நடக்காது. அப்படியே கிளம்பி போய்டு.” என்று அவள் உறுதியாக கூறினாள்.

என் பொண்ணு எப்படி இருக்கா?” அவன் கேட்க, அவள் கண்கள் கண்ணீரால்  திரையிட்டது. 

என் பையன்?’ அவள் மனம் ஓலமிட்டது.

‘அழக்கூடாது… அழவே கூடாது. என் பலவீனம் வெளிய தெரிய கூடாது.’ கண் மூடி அவள் தன் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.

என் பையனை என்கிட்டே இருந்து பிரிச்சி, என்னை கதற வச்சீங்களே. இப்ப என் பொண்ணு கேட்குதா?’ அவள் கண்களில் கேள்விக் கணைகள் ருத்திர தாண்டவம் ஆடியது.

நீயும் கேட்கலாம். உனக்கு எல்லா உரிமையும் இருக்கு.” அவன் சமரசம் பேசினான். அவன் கண்களில் பிடிவாதம்.

உனக்கு வெட்கமா இல்லை?” அவள் கேட்க, “என் பெண்ணை பற்றி கேட்க, எனக்கு என்ன வெட்கம்?” அவன் தன் சூழல் நாற்காலியில் இருந்து எழுந்து ஜன்னல் ஓரமாக சென்றான்.

திரும்பி போய்டு விஷ்வா.” அவள் குரலில் கட்டளை இருந்தது.

திரும்பி போகவா, நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன்?” அவன் சுவரில் சாய்ந்து கொண்டு கேட்டான்.

 தன் நாற்காலியில் சாய்ந்து, “இத்தனை வருஷம் கழித்து அப்படி என்ன அக்கறை என் பொண்ணு மேல?” ‘என்’ என்ற வார்த்தையில் சற்று அழுத்தம் கொடுத்து அவள் கடுப்பாகவே கேட்டாள்.

  நீ யு.எஸ்.  வந்துட்ட. நான் விசா இல்லாம இங்க எப்படி வரது? டூரிஸ்ட் விசால வந்து சரி பன்ற விஷயமா? என் விசா, ரெண்டு தடவைக்கு மேல ரிஜெக்ட் ஆகி இப்ப தான் கிடச்சுது. நீ இருக்கிற ஆஃபிஸில் ஒரு ஓப்பனிங் பார்த்து, கஷ்டப்பட்டு உன்னை தேடி வந்திருக்கேன்.” அவன் ஒரு நொடி நிறுத்தினான்.

“வெறுங் கையோடு திரும்பி போகவா வந்திருக்கேன்?” என்று தன் புருவம் உயர்த்தி சிரித்தான் விஷ்வா.

“உன் கதை ஒரு மூணு வருஷ கணக்குக்கு சரியா வருது. இன்னும் ரெண்டு வருஷம் இடிக்குதே.” கால் மேல் கால் போட்டு நக்கலாக கேட்டாள் இதயா.

 நான் உனக்காக உன்னை தேடி வரலை. உன் கிட்ட பதில் சொல்லணும்னு எனக்கு அவசியமில்லை. என் பொண்ணை தேடி வந்தேன். பொண்ணை குடு. நான் போய்கிட்டே இருக்கேன்.” அவன் அசட்டையாக தோள்களைக் குலுகினான்.

‘பொண்ணை குடு.’ என்ற அவனின் சொற்களில் சீறு கொண்டு வேகமாக எழுந்து விஷ்வாவின் சட்டையை கொத்தாக பிடித்திருந்தாள் இதயா.

என்ன என் பையன் கிட்ட பண்ணதை என் பொண்ணு கிட்ட பண்ணலாமுன்னு நினைப்பா? அப்ப, எங்க அம்மா சொன்னாங்க, என் அப்பா சொன்னாங்கன்னு உங்க எல்லாரையும் சும்மா விட்டுட்டேன்.  அவள் முகம் சினத்தில் கொந்தளித்தது.

கோர்ட்ல ஏமாத்தி என்கிட்டே பிள்ளையை வாங்கிட்டிங்க. இப்ப என்னை நெருங்கி பாருங்க, மீடியா வரைக்கும் போய் உன்னையும் உங்க குடும்பத்தையும் சந்தி சிரிக்க வச்சிருவேன்.” அவள் அவனை ஆள் காட்டி விரலால் மிரட்டினாள்.

அவள் வார்த்தைகள் என்னவோ கோபத்தில் அவனை மிரட்ட தான் செய்தது.

ஆனால், உணர்ச்சி வசப்பட்டதில் பதட்டத்தில் அவள் குரல் நடுங்கியது. அவள் வார்த்தைகள் அவன் செவிகளை தீண்டினாலும் அவன் மனதை பாதிக்கவில்லை.

மாறாக, அவள் பதட்டம் அவனை சுட்டது.

அத்தனை நெருக்கதில், அவள் சுவாசம் அணுஅணுவாய் அவனை தீண்டி அவள் வேதனையை சொல்ல, அவன் தன் கண்களை இறுக மூடினான்.

அவளை அணைத்து ஆறுதல் சொல்ல அவன் கைகள் பரபரத்தது.

‘இரண்டு பேர் மேலையும் தப்பிருக்கு.’ அவன் மனம் கடந்த காலத்தை எண்ணி துடித்தது. 

அவன் கரங்கள், அவளை இடையோடு அணைத்து சமாதானம் செய்ய, அவள் இடையை நெருங்கிய நொடி, அவன் மூளை மின்னாலக செயல்பட்டு அவனை தடுத்து நிறுத்தியது.

‘என்ன செய்து கொண்டிருக்கிறேன்?’ அவன் கண்களை இறுக மூட, அவன் கண்களில் இருந்து ஒரு நீர் சொட்டு அவள் மேல் தெரித்து விழ, அவள் தன்னவனின் வலியை ஆழமாக பார்த்தாள்.

‘என்னாலையும் முடியலியே விஷ்வா.’ அவள் மனமும் காயம் தந்தவனின் பரந்த மார்பிலே சாய்ந்து கதற துடித்தது.

‘எதுவும் மாறவில்லை. நான் இவளிடம் இழகி நிற்பதா? இதயா சிறிதும் மாறவில்லை.’ அவள் சொற்கள் இப்பொழுது அவன் செவிகளை மீண்டும் தீண்டி அவனை எச்சரித்தது.

 ‘இதுக்காக எல்லாம் என்னால் என் பெண்ணை விட்டு தரமுடியாது.’ அவன் கண்களை திறந்து, அவளை பார்த்தான்.

‘ச்… ச்ச… இவனிடம் என் மனபாரத்தை சொல்லி அழுவதா?’  அப்படி எண்ணியதற்கு தன்னை தானே நிந்தித்து கொண்டாள் இதயா.

இருவரும் இழகி நின்றது ஒரு நொடி தான்.

அவள் சுதாரித்து கொண்டு, விலகி நின்று வெட்டும் பார்வை பார்க்க, அவன் முகத்தில் கேலி புன்னகை உதித்தது.

‘நீயா? நானா? என்று பார்த்துவிடுவோம்.’ என்று அவர்கள் மனம் சபதமிட்டு கொண்டது.

இதயம் நனையும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!