நினைவு – 10

eiE6SA598903

எட்டு வருடங்களுக்கு முன்பு……

“வருண்! டேய் வருண்! எந்திரிடா! காலேஜுக்கு போக நேரமாகுது இன்னும் என்னடா உனக்கு தூக்கம்?” அர்ஜுன் கண்ணாடி முன்னால் நின்று கொண்டு தன் தலையை வாரிக் கொண்டே தன் அருகில் இருந்த கட்டிலில் கவிழ்ந்து படுத்துக் கொண்டிருந்த தன் ஆருயிர் நண்பனை எழுப்ப அவனோ அதை காதிலேயே வாங்கிக் கொள்ளாதவன் போல நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான்.

“நீ சரிப்பட்டு வரமாட்ட!” தன் பார்வையை சுற்றிலும் சுழலவிட்டபடியே அவனை எழுப்ப ஏதாவது பொருள் கிடைக்குமா என்று பார்த்தவன் அங்கே கிடந்த ஒரு தடியைப் பார்த்து விட்டு அதை எடுக்க தன் கையை நீட்ட அங்கே மேஜை மீது கிடந்த ஒரு காகிதம் அவன் கையில் வந்து விழுந்தது.

‘இப்போ நீ எப்படி எழும்பி உட்காரப்போற பாரு!’ அந்த காகிதத்தைப் பார்த்து புன்னகைத்த படியே அவனருகில் சென்று அமர்ந்து கொண்டவன்

“வருண் இன்னைக்கு என்ன நாள்ன்னு நினைவு இருக்கா? இரண்டு, மூணு நாளாக நைட் நைட்டாக இருந்து பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸை வரவேற்க போர்ட் எல்லாம் வரைந்தோமே நினைவு இருக்கா? இன்னைக்கு தானே நம்ம காலேஜிற்கு நியூ பட்ஜ் எடுக்குறேன்னு சொன்னாங்க இல்லை! இப்போ மணி எட்டு ஆகுது அப்படின்னா இப்போவே பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் வர ஆரம்பித்து இருப்பாங்க! அதுவும் இன்னைக்கு எல்லா டிபார்ட்மெண்டிற்கும் ஸ்டூடண்ட்ஸ் வருவாங்க இல்லை!” தன் கன்னத்தில் தட்டி யோசித்தபடியே கூறிக் கொண்டிருக்க

“டேய் அர்ஜுன்! காலேஜுக்கு போக‌ நேரமாகுது நீ என்னடா பண்ணுற? சீக்கிரமா வா!” அறை வாயிலின் அருகே கேட்ட வருணின் குரலில் அதிர்ச்சியாக அவனை நிமிர்ந்து பார்த்தவன் தன்னருகே குழப்பத்துடன் திரும்பிப் பார்க்க அந்த இடம் வெறுமையாக காணப்பட்டது.

“அடப்பாவி! பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ் வர்றாங்கன்னு சொன்னதும் என்ன ஆர்வமாக ரெடியாகி வந்து இருக்க? இதே எப்போதாவது கிளாஸ்க்கு லேட் ஆகுதுன்னு சொன்ன போது வந்து இருப்பியா?”

“அர்ஜுன் கண்ணா நமக்கு எது முக்கியமோ அதை தானே நாம பார்க்கணும் இந்த கிளாஸ், லெக்சர்ஸ், பிராக்டிகல் இதெல்லாம் உன் டிபார்ட்மெண்ட்! சினிமா, பீச், மால், சைட்டிங் இதெல்லாம் என் டிபார்ட்மெண்ட்! என் டிபார்ட்மெண்டிற்கு நீ எப்போ வேணும்னாலும் தாராளமாக வந்து போகலாம் நான் எதுவும் சொல்ல மாட்டேன்! ஆனா உன் டிபார்ட்மெண்டிற்கு எக் காரணத்தைக் கொண்டும் நான் வரவும் மாட்டேன் நீ என்னை அழைக்கவும் கூடாது புரிந்ததா?”

“ஆமா இதெல்லாம் நல்லா பேசு! எக்ஸாம்ன்னு வந்தால் மட்டும் தலை தெறிக்க ஓடு!” வருணோடு இயல்பாக சிரித்து பேசிக்கொண்டே படியிறங்கி வந்த அர்ஜுன் அவர்களுக்காக ஹாலில் காத்து நின்ற சாவித்திரியைப் பார்த்ததுமே

“சாவித்திரிம்மா!” என்றவாறே அவரை வந்து அணைத்துக் கொள்ள பதிலுக்கு அவரும் அவனை புன்னகையோடு அணைத்துக் கொண்டு அவனது நெற்றியில் முத்தம் வைத்தார்.

“க்கும்! க்கும்! இங்கே நானும் ஒரு ஆள் இருக்கேன்” வருண் தன் தொண்டையை செருமிக் கொண்டு அவர்கள் முன்னால் வந்து நிற்க

“அவன் கிடக்கிறான் பொடிப்பையன்! நீங்க வாங்கம்மா!” அர்ஜுன் அவனைப் பார்த்து பழிப்பு காட்டி விட்டு சாவித்திரியோடு டைனிங் டேபிளை நோக்கி நகர்ந்து சென்று விட

“காலக் கொடுமை கதிரவா!” வருண் தன் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு தனக்குள் முணுமுணுத்தபடியே அவர்களைப் பின் தொடர்ந்து சென்றாலும் அவன் மனதிற்குள் தன் அன்னையினது அர்ஜுன் மீதான பாசப் பிணைப்பை பார்த்து பெருமையாகவே இருந்தது.

சிறு வயதில் அன்னையை இழந்து தன் தந்தையோடு தயங்கி தயங்கி இந்த வீட்டினுள் நுழைந்த அர்ஜுனின் அந்த அப்பாவித் தனமான முகம் இன்றும் அவன் மனதிற்குள் பசு மரத்தாணியாக பதிந்து தான் இருக்கிறது.

எட்டு வருடங்களாக தன் அன்னை, தந்தையோடு தன் நாட்களை செலவழித்து கொண்டிருந்த வருணின் மனதிற்குள் தனக்கு ஒரு தம்பியோ, தங்கையோ இருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஆசை பல நாட்களாக இருந்து கொண்டு தான் இருந்தது.

வருண் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே சாவித்திரிக்கு கர்ப்பப்பையில் பிரச்சினை உருவாகி அதை அகற்ற வேண்டிய நிலை வந்ததால் அவர்களுக்கு வருண் மட்டுமே குழந்தையாகிப் போனான்.

இந்த விடயம் வருணிற்கு அந்த வயதில் தெரியாததால் வெளியே எங்கே சிறு குழந்தைகளைப் பார்த்தாலும் அவர்களைப் போல் தனக்கும் ஒரு தம்பி, தங்கை வேண்டும் என்று அடம்பிடிக்கத் தொடங்கி விடுவான்.

அந்த நேரங்களில் எல்லாம் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அவனை சமாதானப்படுத்தி விடும் ராமநாதனும், சாவித்திரியும் மனதளவில் மிகவும் கலங்கிப் போய் தான் இருந்தனர்.

அப்படியான ஒரு தருணத்தில் தான் விஸ்வநாதன் தன் மகன் அர்ஜுனோடு ராமநாதனின் வீட்டிற்கு வருகை அளித்தார்.

ஒரே வயதினராக இருந்ததனால் என்னவோ தங்கள் வீட்டிற்கு வந்த அர்ஜுனை முதல் பார்வையிலேயே வருணிற்கு பிடித்து விட அன்றிலிருந்து அவனை எங்கேயும் செல்ல விடாமல் தன்னோடு சேர்த்து வைத்து இருப்பதே அவனின் வேலையாகிப் போனது.

விஸ்வநாதனும் பல வருடங்களாக தனிமை, வேலைக்காரர்களின் பராமரிப்பு என்று மட்டுமே வளர்ந்து வந்த அர்ஜுனின் மனமாற்றத்திற்காக அவனை அங்கேயே தங்க வைத்து விட நாளடைவில் அவனும் அந்த வீட்டின் ஒரு பிள்ளையாகவே மாறிப் போனான்.

அர்ஜுன் தன் தந்தையை இழந்த போது அவனுக்கு தோழனாக மட்டுமின்றி ஒரு சகோதரனாக வந்து நின்றவன் தான் வருண்!

என்னதான் அவர்கள் ஒருவரை மாற்றி ஒருவர் கேலி செய்து கொண்டாலும் அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் இந்த நட்பு கலந்த பந்தம் அர்ஜுனுக்கும் சரி வருணுக்கும் சரி ஒரு வரப்பிரசாதமே!

வழக்கமான தங்கள் சேட்டைகளோடு சாவித்திரியையும், ராமநாதனையும் வயிறு வலிக்கும் வரை சிரிக்க செய்தவர்கள் தங்கள் காலை உணவை முடித்து கொண்டு காலேஜை நோக்கி புறப்பட்டு சென்றனர்.

வருண், அர்ஜுன் இருவருமே ஒரு சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் இருக்கும் பிரபலமான கல்லூரி ஒன்றில் பி.காம் நான்காம் வருடத்தில் காலெடியெடுத்து வைத்திருந்தனர்.

அர்ஜுன் எல்லா பாடங்களிலும் முதல் மாணவனாக தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு படித்தால் வருண் தேர்ச்சி பெற்றால் போதும் என்ற நிலையில் தான் படிப்பான்.

ஒரு சில விடயங்களில் அவர்கள் எதிரும் புதிருமாக இருந்தாலும் நட்பு என்று வந்து விட்டால் தளபதி படத்தில் வரும் ரஜினி மற்றும் மம்மூட்டியை போல் மாறி விடுவர்.

கல்லூரி நுழைவாயில் முதல் ஒவ்வொரு இடங்களிலும் பல்வேறு விளம்பரப் பதாகைகளும், வரவேற்பு பதாகைகளும் நிறைந்திருக்க அதைப் பார்த்து கொண்டே தன் பைக்கில் இருந்து இறங்கி நின்ற அர்ஜுன்
“பார்த்தியா வருண்? பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ் வர்றாங்கன்னு எவ்வளவு அலங்காரம்? எவ்வளவு வரவேற்பு? இதே நாம காலேஜ் வந்த முதல் நாளை யோசித்து பாரு!” என்று கூறவும்

“இரு பார்க்கிறேன்” தன் கன்னத்தில் தட்டியபடியே யோசித்தவன் கண்களின் முன்னால் தங்கள் முதல் நாள் கல்லூரி வருகை படமாக விரிந்தது.

பலவிதமான கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும் தங்கள் முதல் நாள் கல்லூரி வாழ்க்கையை எண்ணி சந்தோஷம் கொண்டவர்களாக அர்ஜுன் மற்றும் வருண் கல்லூரி நுழைவாயிலில் கால் வைத்த அடுத்த கணமே அவர்களை வரவேற்றது கழிவுநீர் அபிஷேகம்.

முதல் நாள் கல்லூரிக்கு செல்கிறோம் என்ற ஆசையோடு வெண்ணிற சட்டை அணிந்து வந்தவர்கள் தாங்கள் இருக்கும் நிலையை பார்த்து மௌனமாக கண்ணீர் வடிக்க அதைத் தொடர்ந்து பல்வேறு விதமான அபிஷேகங்கள் அவர்களுக்காக நடந்தது.

புது மணமகன் போல காலையில் கல்லூரிக்கு வந்தவர்கள் அன்று மாலை கல்லூரி முடிந்து செல்லும் போது டிரெயின் எஞ்சினிற்கு கரி அள்ளிப் போட்டவர்கள் போன்ற நிலைமையில் தான் தங்கள் வீடு போய் சேர்ந்தனர்.

அன்றைய நாள் அது ஒரு பெரிய துக்கமான சம்பவமாக அவர்களுக்கு இருந்தாலும் நாளடைவில் அதை எண்ணி அவர்கள் சிரிக்காமல் இருந்ததில்லை.

“என்ன வருண் வெள்ளை நிற சர்ட் காவி நிற‌ சர்ட் ஆன வரலாற்றை நினைத்து பார்த்தியா? அதுவும் அந்த சீனியர் உன்னை மா மரத்தில் ஏறி தேங்காய் பறிச்சுட்டு வான்னு சொன்னப்போ நீ பார்த்தியே ஒரு பார்வை! ப்ப்ப்ப்ப்பா! அதை மறக்க முடியுமா என்ன?” மேலே வானத்தை பார்த்தபடி யோசித்து கொண்டு நின்ற வருணின் காதின் அருகில் வந்து நின்றவாறே தன் சிரிப்பை சிரமப்பட்டு மறைத்து கொண்டு அர்ஜுன் கேட்கவும்

தன்னையும் அறியாமல் ஆமோதிப்பாக தலையசைத்தவன் பின்னர் உடனே தன்னை சுதாரித்து கொண்டு
“அடச்சீ! அந்த சாதனை சம்பவங்களை எல்லாம் ஏன்டா யோசிக்க வைக்கிற? காலையிலேயே என்னை டென்ஷன் படுத்தாதே! பர்ஸ்ட் இயர் வர்ற நேரம் வா அப்படியே ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்” என்று கூறவும்

அவனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவன்
“நான் வரல நீ வேணும்னா போ!” என்று விட்டு அங்கிருந்து செல்ல முயன்றான்.

“அட! இதெல்லாம் இங்க செல்லாது! நீ என்னோட வர்ற! அவ்வளவு தான்!”

“டேய் வருண் நான் வரலடா! இன்னைக்கு நான் வந்ததே ஒரு டவுட் கேட்கணும்னு தான் அதைக் கேட்டுட்டு வீட்டுக்கு போகணும்”

“இந்த சப்பாணி டைலாக் எல்லாம் என்கிட்ட வேணாம் ஒழுங்காக என் கூட வர்ற” வருண் அர்ஜுனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல அவனோ கெஞ்சலாக தன்னை விட்டு விடும் படி கேட்டுக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்து சென்றான்.

பன்னிரண்டு வருட பாடசாலை வாழ்க்கையை முடித்து விட்டு முதல் நாள் கல்லூரி வாழ்க்கையை ஆவலாக எதிர் நோக்கி பல்வேறு விதமான கனவுகளுடன் பல மாணவர்கள் அந்த கல்லூரி வளாகத்தில் ஒன்று கூடியிருக்க அவர்களை எல்லாம் பார்த்ததுமே வருண் தன் மனதிற்குள்
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா? ஆசையா? ஆசையா?’ மூன்று முறை தன் தலையை வேறு வேறு புறம் திருப்பிக் கேட்டவாறே அர்ஜுனின் கையை உதறி விட்டு முன்னே நடந்து சென்று விட

“இவன் மாறமாட்டான்!” சிறு புன்னகையுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவன் தன் பார்வையை சுற்றிலும் படரவிட்டான்.

“ஹாய் ஐ யம் வருண்! இந்த காலேஜில் தான் மெனேஜ்மெண்ட் டிபார்ட்மெண்டில் ஃபைனல் இயர் படிச்சுட்டு இருக்கேன் உங்க பேரு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?” ஒரு இடத்தில் பெண்கள் சிலர் கூட்டமாக இருப்பதை பார்த்து விட்டு வருண் தன் கடலை போடும் பணியைத் தொடங்கி இருக்க அவனைப் பார்த்து தன் தலையில் அடித்துக் கொண்ட அர்ஜுன் சிறிது தள்ளி ஒரு பெஞ்ச் காலியாக இருப்பதை கண்டு கொண்டு அந்த இடத்தை நோக்கி நகர்ந்து சென்றான்.

அர்ஜுனுக்கு பெண்கள் என்றால் பிடிக்காது, அவன் ஆஞ்சநேயர் பக்தன் அப்படி என்று எல்லாம் எதுவும் இல்லை.

அவனும் மேலோட்டமாக பெண்களைப் பார்ப்பான், அவர்களோடு பேசுவான் ஆனால் அது எல்லாம் ஒரு அளவிலேயே இருக்கும் வருணைப் போன்று ஒரே நிமிடத்தில் அவர்களோடு கலந்து போய் விட மாட்டான்.

அர்ஜுனுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அவன் அன்னையை தெரியாது அவர் எப்படி இருப்பார் என்று கூட அவனுக்கு நினைவில்லை.

அன்னை இல்லை என்ற கவலை தன் மகனை பாதித்து விடக் கூடாது என்பதற்காக அவர் பற்றிய விடயங்கள் எதையும் விஸ்வநாதன் அவன் முன்னால் அதிகமாக பேசியதில்லை.

அர்ஜுனின் சிறு வயதில் அவன் பள்ளிக்கூடத்தில் எல்லா சிறுவர்களும் தங்கள் அன்னை, தந்தையோடு ஒன்றாக விளையாடுவதைப் பார்த்து அந்த பிஞ்சு மனதில் எத்தனையோ ஏக்கங்கள் பரவிக் கிடக்கும் ஆனால் மாலை நேரம் தன் அலுப்பு, களைப்பு எல்லாம் மறந்து விஸ்வநாதன் அவனோடு விளையாடும் போது அந்த ஏக்கங்கள் எல்லாம் காணாமல் போய் விடும்.

தன் தந்தை தான் தன் உலகம் என்று இருந்தவனுக்கு அவரின் இறப்பு எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உணர்வு பூர்வமான விடயம்.

அந்த இழப்பின் பின் வருணின் குடும்பம் தான் அவனது குடும்பம்!

அர்ஜுன் சிறு வயதில் தான் இழந்த தன் அன்னையின் பாசத்தை சாவித்திரியின் மூலமாக பதின்ம வயதில் மீண்டும் பெற்றான்.

வளர வளர அவரைப் போலவே அன்பைப் பொழியும் ஒரு பெண் தான் வாழ்நாள் முழுவதும் கிடைத்தாலே போதும் என்ற மனநிலை அவனிற்குள் ஆழமாகப் பதிந்து போனது.

இந்த விடயத்தை வருணிடம் கூட பலமுறை அவன் பகிர்ந்து இருக்கிறான்.

தன் மனதிற்குள் இருக்கும் ஆசைகளோடு மெய்மறந்த படி அமர்ந்திருந்த அர்ஜுன்
“இந்த சீனியர்க்கு எல்லாம் என்ன இரண்டு கொம்பா முளைத்து இருக்கு? எல்லோரும் ரொம்ப ஓவராக பேசுறாங்க! இங்கே நடக்கும் கூத்தை எல்லாம் யாருமே கண்டு கொள்ள மாட்டாங்களா?” தன்னருகில் ஒலித்த படபடப்பான குரலில் திரும்பி பார்த்தான்.

ஆகாய நீல நிற முழுக்கை சுடிதார், கார் மேகங்கள் போல தோளின் இருபுறமும் அலைபாயும் கூந்தல், சற்று சிவந்த நிறம் கொண்ட தேகம், படபடப்புடன் அடித்துக் கொள்ளும் இமைகள், அந்த படபடப்பை மறைக்க தன் இதழ்களை அழுத்தமாக கடித்து இருந்த அந்த கன்னியை அர்ஜுனின் விழிகள் ஆராய்ச்சியாக பார்த்து கொண்டு இருந்தது.

தன்னருகே இருந்த நபர் தன்னையே உற்றுப் பார்ப்பதைப் போல உள்ளுணர்வு தோன்றியதால் என்னவோ அந்த உணர்வு தன் முகத்தில் பிரதிபலிக்க மெல்ல அவள் திரும்பி பார்க்க இவற்றை எல்லாம் சற்று தள்ளி வருண் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றான்.

“என்ன?” அவளின் அதட்டலான குரலில் திடுக்கிட்டு போய் அவளைப் பார்த்தவன் ஒன்றும் இல்லை என்பது போல இடம் வலமாக தலையசைக்க

“அப்போ என்ன‌ இங்க லுக்கு?” அவள் தன் இடுப்பில் கை வைத்து கொண்டு அவனை முறைத்து பார்க்க அவனோ சட்டென்று தன் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.

“சொர்ணாக்கா பரம்பரையில் வந்த ஆளாக இருப்பா போல! யம்மா! இரண்டு கேள்வி கேட்டதற்கே காதில் சில்லுவண்டு கத்துவது போல ‘கொய்ங்’ன்னு சத்தம் கேட்குது” அர்ஜுன் என்னவோ தனக்குள் மெதுவாகத் தான் அந்த வார்த்தைகளை பேசிக் கொண்டிருந்தான் ஆனால் அவனருகில் இருந்தவள் அவன் ஏதோ தன்னைப்பற்றி பேசுகிறானோ என்ற எண்ணத்தோடு அவனருகில் மெல்ல நகர்ந்து சென்று நன்றாக காது கொடுத்து கேட்க அவன்‌ பேசியவை எல்லாம் அவள் செவிகளுக்குள் ஒரு வார்த்தை விடாமல் வஞ்சகமில்லாமல் சென்றடைந்தது.

“யோவ்! நான் உனக்கு சில்லு வண்டா?” அவளின் கேள்வியில் திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்தவன் தனக்கு வெகு அருகில் அவளைப் பார்த்ததும் அதிர்ச்சியாகி என்ன சொல்வது என்று தெரியாமல் திருதிருவென விழித்துக் கொண்டிருக்க அவளின் பார்வையோ அவனை ஆராய்ச்சியாக அளவெடுக்க தொடங்கியது.

அர்ஜுனின் முக மாற்றத்தை பார்த்து வருண் தன் வயிற்றை பிடித்துக் கொண்டு கண்களில் நீர் வராத குறையாக சிரித்துக் கொண்டு நிற்க அவனைக் கடந்து போவோர், வருவோர் எல்லாம் அவனை வித்தியாசமாக பார்த்தபடியே நடந்து சென்று கொண்டிருந்தனர்.

“புருவம் பரவாயில்லை நல்ல கருகருவென அடர்த்தியாக தான் இருக்கு” அர்ஜுனின் புருவத்தில் கை படாமல் அதன் வடிவத்தை வரைந்தவள்

“கண்ணும் ஓகே! கருப்பா! குட்டியா! பரவாயில்லை ஓகே தான்!” அவனது கண்களையும் தொடாமல் அப்படியே காற்றில் வரைந்து காட்டினாள்.

“மூக்கு பரவாயில்லை ஷார்ப் தான் பட் க்யூட்!”

“உதடு லைட்டா சிவப்பா இருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை போல?” அவளின் கேள்வியான பார்வையில் அர்ஜுனின் தலை அவசரமாக மறுப்பாக தலையசைத்தது.

“உயரம் என்னை விட அதிகம் தான் போல பரவாயில்லை! தினமும் ஜிம் போவீயா? உடம்பை பிட்டா வைத்து இருக்க போல? எத்..”

“வாரத்திற்கு மூன்று தடவை ஜிம் போவேன்ங்க!” அவள் கேள்வியை முழுவதும் முடிப்பதற்குள் அவனிடம் இருந்து பதில் வந்திருந்தது.

“குட்! இனி இப்படி பெரியவங்களை சில்லு வண்டு அப்படி, இப்படின்னு எல்லாம் பேசக் கூடாது சரியா?”

‘நீ பெரியவளா? தம்மாத்தூண்டு இருந்துட்டு பேச்சை பாரு சில்லு வண்டு!’ மனதிற்குள் அவளை பல்வேறு விதமாக திட்டியவன் வெளியே முயன்று வரவழைத்து கொண்ட புன்னகையுடன் அவளைப் பார்த்து சரியென்று தலையசைக்க

“இது நல்ல பிள்ளைக்கு அழகு!” அவனது தோளில் தட்டி கொடுக்க கையை நீட்டியவள் பின்னர் தன் கையை பின்னிழுத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

“யாரு இவ? அவளாக வந்தா! அவளாகப் பேசுனா! இப்போ என்னை நல்ல பையன்னு சொல்லிட்டு போறா? ஒரு வேளை லூசாக இருப்பாளோ?” என்று யோசித்து கொண்டே அர்ஜுன் அவள் சென்ற வழியை நிமிர்ந்து பார்க்க அவன் பார்க்க வேண்டும் என்பதற்காகவே காத்திருந்தது போல ஒரு மர நிழலின் கீழ் நின்று கொண்டிருந்தவள் அவன் தன்னைப் பார்த்ததுமே புன்னகையுடன் அவனைப் பார்த்து கண்ணடித்து விட்டு சென்று விட அர்ஜுனுக்கோ உணவு, தண்ணீர் எதுவும் தொண்டைக்குள் இறங்காமல் புரையேற ஆரம்பித்தது…..