Kandeepanin Kanavu-11

WhatsApp Image 2020-07-22 at 9.05.41 AM

                  காண்டீபனின் கனவு 11

 

கோடங்கிக்கு வருண் தென்படவே இல்லை. மாறாக வெள்ளி மான்கள் மட்டுமே தென்பட்டது.

“ஐயா, நீங்க சொன்ன அந்த வருண என்னால பார்க்க முடியல.அவன ஏதோ ஒன்னு காவல் காக்குது. அதோட சக்தி எனக்கு இங்கிருந்து புலப்படல.”

“என்ன வல்லய்யா சொல்ற? ஒரு வேளை நம்ம குல தெயவத்த கட்டு லேந்து விடுவிக்க முடியாம மறுபடியும் அந்த தீய சக்தி தடுக்குதா? என் பேரன் கதி என்ன? சொல்லு..” தாத்தா ஆவேசமானார்.

“தம்பிக்கு வயசு என்ன?” கோடங்கி கேட்க,

“இருபத்தி ஏழு.” தாத்தா எச்சில் விழுங்கினார்.

“ஐயா, தம்பிக்கு வயசு சரியா இருபத்தி ஏழுனா இது சரியான சமயம். எல்லா சுமையும் அவர் தலையில சுமக்கனும். பிரச்சனைகளை தாங்கனும். நிச்சயம் இருபத்தி எட்டு வயசு முடியறத்துக்குள்ள எல்லாம் நல்ல படியா முடியனும். முடியும். இருங்க அவரோட ஆயுசு பார்க்கறேன்.” என மீண்டும் சோழியை உருட்ட,

அது மீண்டும் சுழன்றது.

கோடங்கியின் முகம் சுருங்கியது. இருபுறமும் தலையை அசைத்து,

“ஐயா. ஒன்னும் சரியா படல. தம்பிக்கு இது மிகப் பெரிய கண்டம். அவரோட ஆயுசு காக்க நாம எதாவது செஞ்சே ஆகணும்.”

“இங்க இருந்து நாம என்ன செய்ய முடியும்?அவன் அந்த ஊர்ல இருக்கான்.” தாத்தா தலையில் கை வைத்துக் கொண்டார்.

“சொல்றத கேளுங்க. எல்லாத்துக்குமே இடம் ரொம்ப முக்கியம். பெரியவங்களே இடம், பொருள், ஏவல்ன்னு சொல்லிருக்காங்க. உடனே நாம் ஊருக்குப் போகலாம் வாங்க. அங்க இருந்து தான் எல்லாமே செய்ய முடியும்.” தாத்தாவை உடனே கிளப்பினார்.

பேரன் விஷயத்தில் தாத்தா எந்த ஒரு தவறும் நிகழக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

“அங்க நம்ம உதவிக்கு யாராவது இருக்காங்களா?” வல்லய்யா கேட்க,

“வெளி ஆளுங்கள இப்போ சேர்க்கறது நல்லதில்ல இல்லையா? அதுனால நாம தான் பாத்துக்கணும்.” தாத்தா உள்ளதைத் கூறினார்.

“சரிங்க. நாம உடனே கிளம்புவோம்.” கோடங்கி சொல்ல,

“வீட்ல நான் பேசிட்டு வரேன். நீங்க கிளம்பி தயாரா இருங்க” என தாத்தா தன் குடும்பத்தினரை அழைத்துப் பேசச் சென்றார்.

வேதாவும் சுஜாதாவும் ஹாலில் அமர்ந்திருக்க,

“மோகன் எங்க மா?” பொதுவாகக் கேட்டார் தாத்தா.

“இங்க தான் பா இருக்கேன்.” மாடியிலிருந்து இறங்கி வந்தார் மோகன்.

“கிருஷ்ணா எங்க?”

“அவர் வெளில போயிருக்காரு ப்பா. என்ன விஷயம் அப்பா? எதுக்கு வல்லய்யா வந்திருக்காரு?” சுஜாதா பதட்டமாகக் கேட்டாள்.

“ஒன்னுமில்ல சுஜா. எல்லாம் நம்ம குடும்ப நன்மைக்குத் தான். நீ பயப்படாத.” அவளுக்கு ஆறுதல் சொல்லி,

“மோகன், நான் நம்ம ஊருக்கு போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வரலான்னு இருக்கேன். நம்ம கோடங்கியும் என் கூட வருவாரு.” தகவல் சொன்னார் மோகனிடம்.

மோகனுக்கு ஊர் என்றாலே இப்போது உள்ளூர உதறல் எடுத்தது.

“இப்போ எதுக்குப்பா அங்கலாம் போய்கிட்டு. அதான் முருகன் வேற இறந்துட்டான்னு சொன்னீங்களே! அப்பறம் உங்களுக்கு யார் துணைக்கு இருப்பா? எப்படி சமைச்சு சாப்பிடுவீங்க?” எதாவது கூறி தடுக்க முயன்றார் மோகன்.

“ இல்லப்பா. இப்போ நான் போயே ஆகணும். நம்ம குடும்பத்துக்கு எது நல்லதோ, அத நான் செஞ்சாகனும். நீ தடுக்காத.” உள்ளர்த்தம் கொண்டு பேசினார் தாத்தா.

“அப்பா, என்கூட கொஞ்சம் வாங்க.” தனியாக அழைத்துச் சென்றார்.

அவரது அறைக்கு வந்ததும், “அப்பா. என்னப்பா இப்போ திடீருன்னு ஊருக்குப் போறேன்னு கிளம்பறீங்க? எனக்கு நீங்களும் முக்கியம், என் பையனும் முக்கியம். இப்போ நீங்க எதுக்கு அங்க போகணும். குலதெய்வத்த பத்தி யோசிக்காம நிம்மதியா இருங்களேன். அது பாட்டுக்கு ஒரு இடத்துல தூங்கிட்டு இருக்கட்டும். நீங்களே எதுக்கு ஆபத்த தேடித் போறீங்க?” தடுத்துப் பார்த்தார்.

“மோகன், உனக்கு சில விஷயங்கள் புரியறதில்ல. எனக்கப்பறம் யார் நீலக்கல் பூஜை செய்வாங்க? அது செய்யறதுனால தான் இப்போ வரை குடும்பம் நல்ல படியா இருக்கு. நம்ம குல தெய்வத்த கட்டுலேந்து விடுவிச்சா தான் இந்த கவலை இல்லாம நான் நிம்மதியா சாக முடியும். இல்லனா நம்ம குடும்பமே கஷ்டத்துல மூழ்கிடும். அதெல்லாம் தடுக்கத் தான் நான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன். தயவு செஞ்சு தடுக்காத.

நம்ம குல தெய்வம் ஒரு இடத்துல தூங்கல. அதை மறச்சு சக்தி வெளிப்படாம மந்திரக் கட்டு போட்டு வெச்சிருக்காங்க. அதை நாம வெளிய எடுத்து அதற்குரிய இடத்துல சேர்க்கணும். அப்போ தான் இந்த நீலக் கல் பூஜை ஒரு முடிவுக்கு வரும். இதெல்லாம் உனக்குப் இப்போ புரிய வைக்கற நிலைல நான் இல்ல. நேரம் ரொம்ப குறைவா இருக்குப்பா.

உன்கிட்ட சொல்லிட்டுக் கிளம்பத் தான் வந்தேன்.” தாத்தா உள்ளதைக் கூறி கிளம்பத் தயாரானார்.

“அப்பா இதுனால என் பையனுக்கு எதாவது ஆபத்து வருமா?” தான் எதற்காக பயப்படுகிறாரோ அந்தக் கேள்வியைக் கேட்க,

தாத்தா உண்மையைக் கூற முடியாமல் தவித்தார்.

“அவனுக்கு எதுவும் ஆகா நான் விடமாட்டேன். என் உயிர் போனாலும் அவன உனக்கு பத்திரமா கொடுத்துட்டுத் தான் நான் போவேன். கவலைப் படாத மோகன்.”

தாத்தாவின் பதிலில் மோகனுக்கு மனது கனத்துத் தான் போனது. இருந்தாலும் தன் தந்தையின் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது.

தாத்தாவும் வல்லய்யாவும் ஊருக்குக் கிளம்பினர்.

அதிகாலை நேரம், வருண் எழுந்து வீராவை எழுப்ப வந்தான். அதற்குள் வீரா தனது ஷூவை மாட்டிக் கொண்திருந்தான்.

“குட் மார்னிங் வீர்.” டென்ட் வாசலில் நின்று குரல் கொடுக்க,

“ஹே வருண். வெரி குட மார்னிங்.” இப்போ தான் உன்னை வந்து எழுப்பலான்னு இருந்தேன்.

“ஐ அம் ரெடி. நீயும் சம்ரக்ஷாவும் ரெடினா நாம கிளம்பலாம்.”

“ அவளும் ரெடி தான். பேக்பாக் ரெடி பண்ணிட்டு இருக்கா” பேசிக்கொண்டே வீர் வெளியே வந்தான்.

இருவரும் சேர்ந்து தேவையானதை எடுத்துக் கொண்டு கிளம்ப, சாம் வந்து சேர்ந்தாள்.

“நானும் ரெடி” என்றாள்.

அதற்குள் மெல்ல எழுந்து கில் வெளியே வர,

“எதுக்கு கில் ஸ்ட்ரெயின் பண்ணிக்கறீங்க. நீங்க ரெஸ்ட் எடுங்க. இன்னிக்கு வெறும் ட்ரையல் தான.நாங்க போயிட்டு வரோம்.” பரிவோடு வீரா கூற,

“பரவால்ல வீர். என்னால தான் வர முடியல. அட்லீஸ்ட் உங்களுக்கு விஷ் பன்னவாச்சும் செய்யலாமே. ஆல் தி வெரி பெஸ்ட். உங்களுக்கு நல்ல விஷயங்கள் கண்ணுல பட, வாழ்த்துகள்” என வீராவைக் கட்டிக் கொண்டு வாழ்த்தினார்.

சாம்மிற்கு வீரா அவருக்கு எத்தனை முக்கியம், வீரா கில்லிடம் கூட எப்படி பாசாமாக நடந்து கொள்கிறான் என்பதைக் கண்டாள்.

வீராவை நினைத்தால் பெருமையாக இருந்தது. அதை அவள் ரசித்துப் பார்ப்பதை வருணும் கண்டு கொண்டான்.

‘இவளுக்குள்ளையும் கண்டிப்பா அவன் மேல ஒரு ஈர்ப்பு உள்ளூர இருக்கு. ஆனா அது ரெண்டு பேருக்குமே புரியல.’ மனதில் குறித்துக் கொண்டான்.

மூவரும் மீண்டும் அந்த படகில் பிரயாணம் செய்து அந்த சிறு சிறு குகைகள் இருக்குமிடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

வீரா இறங்கி நின்று நேற்று சென்ற அந்த குகையைப் பார்த்துக் கொண்டிருக்க, வருண் அதற்குள் படகை கரையில் இழுத்துப் போட்டான். சாம் வீராவுடன் நின்று அந்த இடத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“வருண் , இன்னிக்கு நாம இதே குகைக்குள்ள போக வேண்டாம். வேற ஒரு குகைக்குள்ள போய்ப் பார்க்கலாமா?” வீரா அவனைக் கேட்க,

“சரி வீர். நானும் அந்த ஒரு குகை தவிற வேற எதுக்குள்ளையும் போனதில்ல. உன்னோட கனவுல வந்தது வேற எங்கயாவது கூட இருக்கும். போய்ப் பார்ப்போம்.” வருணும் சம்மதிக்க,

“ஓ! உன் கனவ பத்தி சொல்லிட்டியா வீர்?” சாம் ஆச்சரியாமாகக் கேட்டாள்.

“நேத்து நைட் அது பத்தித் தான் பேசிட்டு இருந்தோம்.” வீரா நடக்க ஆரம்பித்தான்.

அது நீளமான பாதை. ஐம்பது அடிக்கு ஒரு குகை வாயில் தெரிந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அது நீண்டு கொண்டே போனது.

தலையில் ஹெட் லைட் கையில் தண்ணீர் பாட்டில், சகிதம் மற்ற இருவரும் கூட சேர்ந்து நடக்க ஆரம்பிக்க,

“ஆளுக்கு ஒரு குகைக் குள்ள போலாமா?” சாம் கேட்டாள்.

“இல்ல, இந்த குகை எவ்வளோ தூரம் போகும், அப்பறம் ஒவ்வொன்னும் எங்க போய் முடியும்ன்னு நமக்கு ஐடியா இல்ல. அதுனால எல்லாரும் ஒன்னா போறது தான் பெட்டர். அதுவுமில்லாம கண்டிப்பா உன்ன தனியா அனுப்ப மாட்டேன்.” சிரித்தான் வீரா.

“நான் சின்ன பாப்பா வா தொலஞ்சு போக.” அவனுக்கு அழகு காட்ட,

“தாத்தா உன்ன இப்பவும் அப்படித் தான கூப்பிடறாரு.” மீண்டும் சிரிக்க,

அவள் முகத்தை தூக்கிகொண்டாள்.

“நீங்க ரெண்டுபேரும் எப்பவும் இப்படித் தானா? டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி” வருண் ரசித்துக் கேட்டான்.

“இவ பொறந்ததுலேந்தே அப்படித் தான்.” சலித்துக் கொண்டான் வீர்.

பேசிக் கொண்டே நான்கு ஐந்து குகை வாயிலைக் கடந்தனர்.

ஏழாவது குகை வாசலை அடையும் போது வீரா சட்டென நின்றான். அந்தக் குகையை எட்டிப் பார்க்க, அங்கு ஏதோ ஒரு மண் வாசனையை உணர்ந்தான். தனக்குப் பரிச்சயமான ஒன்றாகப் பட்டது.

“என்ன வீர்?” சட்டென நின்றவனை வருண் கேட்க,

“இதுக்குள்ள போலாம்.” என்றான்.

“ஏன் இது தான் அலிபாபா குகைன்னு உன் செவன்த் சென்ஸ் சொல்லுச்சா?” வழக்கம் போல் நக்கல் அடித்தாள் சாம்.

அவளை லேசாக முறைக்க, “ஓகே ஓகே … போலாம்” சரணடைந்தாள்.

“குட். முதல்ல நீ ஏறு.” அவளைக் கை காட்ட,

“நான் மாட்டேன்ப்பா. உள்ள எதாவது இருந்தா, மொதல்ல என்னைப் போட்ரும். நீ தான ஞான திருஷ்டில பாத்த..நீயே போ” இரண்டடி  பின்வாங்கினாள்.

வருணும் வீராவும் அவளது செய்கையில் மனம்விட்டுச் சிரித்தனர்.

வீரா முதலில் ஏறினான். பின் சாம், அவளுக்குப் பின் வருண் என உள்ளே செல்ல ஆரம்பித்தனர். இன்னும் சரியாக விடியவில்ல என்பதால் இருள் இருக்கவே செய்தது.

தலையில் மாட்டியிருந்த லைட் அவர்களுக்கு வழிக்காட்டியது. முந்தைய தினம் சென்ற குகை போலவே இதுவும் வெற்று குகையாகத் தான் இருந்தது.

ஆனால் இதையாவது கடைசி வரை சென்று பார்த்துவிட வேண்டுமென்று வேகமா எட்டு வைத்தான் வீரா.

அவனது உயரத்திற்கு சற்றும் அதிகமில்லாமல் சரியான அளவு அந்த குகை இருந்தது. கனவில் கண்டது போலவே. ஆனால் அவனுக்கு முன்னால் எந்த ஒளியும் தென்படவில்லை.

“வீர். உன் கனவுல வந்த மாதிரி எதாவது இருக்கா?” வருண் கேட்க,

“இல்ல வருண். ஆனா குகை இதே மாதிரி தான் இருந்தது. இன்னும் கொஞ்ச தூரம் போவோம்.” பதிலளித்து முன்னே சென்றான்.

“கொஞ்சம் இருங்க தண்ணி குடிச்சுக்கறேன்.” சாம் அவர்களை நிறுத்த, மூவரும் அங்கேயே அமர்ந்தனர். தாராளமாக இல்லாவிட்டாலும் காலை மடக்கி அமர்ந்து கொண்டனர்.

சாம் தண்ணீர் குடிக்க, வீரா அந்த சுவரை தடவிப் பார்த்தான். பின் அவனது கைகளில் ஏதோ பொடியைத் தொட்டது போல இருக்க, கையை முகர்ந்து பார்த்தான்.

சந்தன வாசனையாகத் தெரிந்தது. நல்ல மனம் வீசியது. இப்போது குகையே அந்த வாசத்தில் இருந்தது போலத் தோன்றியது.

அவன் முகர்வதைப் பார்த்த வருண், அவனும் சுவரை தடவி முகர்ந்து பார்க்க, அவனுக்கு எதுவும் தோன்றவில்லை.

“என்ன வீர்?” என்க,

“எனக்கு சந்தன வாசனை வருது. உனக்கு வரலையா?” வீரா ஆச்சரியமாகக் கேட்க,

“இல்லையே.” என்றனர் இருவரும்.

சற்று சிந்தித்தவன், “கரெக்ட். என்னோட கனவுல, நாம என்ன நெனச்சு பீல் பன்றோமோ அப்படித் தான் இருக்கும்னு அந்த குரல் சொல்லுச்சு. குளிரா இருக்கும்னு ஃபீல் பண்ணா அப்டியே ஃபீல் ஆகும்னு சொன்னங்க. அது தானோ.” சரியாக யோசித்தான்.

“இருக்கலாம். அப்போ கண்டிப்பா இங்க தான் எதுவோ இருக்கும். சோ நாம முன்னேறிப் போலாம்.” வருண் அவனை உற்சாகப் படுத்தினான்.

சிறிது தொண்டையை நனைத்துக் கொண்டு அனைவருமே நடக்க ஆரம்பித்தனர்.

சம்ரக்ஷாவிற்கு இத்தனை நாள் இல்லாத நம்பிக்கை, ‘ஒரு வேலை உண்மையா இருக்குமோ!’ என யோசிக்க வைத்தது.

வீராவின் ஹெட் லைட் சட்டென அணைந்தது. பின்னால் வந்தவர்களின் ஹெட்லைட்டும் ஒளி குறைந்து கொண்டே வருவது புரிய.

வருண் சமயோஜிதமாக அவனது ஹெட்லைட்டை கழட்டி அணைத்தான்.

“இதுவும் போயடுச்சுனா அப்பறம் வர வழி தெரியாம போகாலம். சோ நான் அனைச்சுட்டேன்.” என்றான்.

“இந்த ஹெட் லைட் அனைஞ்சது கூட ஏதோ ஒரு காரணம் இருக்கும்னு சொல்லுவியே??!” சம்ரக்ஷா கேட்க,

“கண்டிப்பா இருக்கு சாம்.” வீர் விறைப்பாகக் கூற,

“அப்படி என்ன காரணம்?”

வீரா சொன்ன நேரம் அப்படியே உறைந்து நின்று விட்டான்.

“அங்க பாரு!” வீரா கை காட்ட,

வீராவின் முதுகைப் பிடித்துக் கொண்டு ஆளுக்கு ஒரு பக்கம் எட்டிப் பார்க்க,

அங்கே ஒரு ஒளி தெரிந்தது.

வீராவின் கனவில் வந்தது போன்ற ஒரு புள்ளியான ஒளி!

மூவரும் ஆச்சர்யத்தில் உறைந்தனர்.