நினைவு – 15

eiE6SA598903(1)

நினைவு – 15

அர்ஜுனுக்கு நடந்த விடயங்களை பற்றி எல்லாம் வருண் கூறிய பிறகு ஹரிணிப்பிரியாவிடமிருந்தோ, விஷ்ணுப்ரியாவிடமிருந்தோ எந்தவொரு கேள்வியும் வரவில்லை மாறாக அந்த இடமே நிசப்தத்தில் உறைந்து போய் இருந்தது.

தன் அக்கா ஒருவரை நேசித்து இருக்கக்கூடும் என்று விஷ்ணுப்பிரியா இது நாள் வரை கனவிலும் நினைத்திருக்கவில்லை அப்படியிருக்கையில் வருண் கூறிய விடயங்கள் எல்லாம் அவளுக்கு பேரதிர்ச்சியாகத் தான் இருந்தது.

அவளுக்கே இந்த நிலை என்றால் இந்த விடயத்தில் நேரடியாக தொடர்பு பட்ட ஹரிணிப்பிரியாவின் நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

நடந்த எதுவுமே தனக்கு நினைவு இல்லையே என்ற கவலை ஒரு புறம்

தன் விபத்தின் பிண்ணனியில் இன்னொருவரின் வாழ்க்கையும் நிலை குலைந்து விட்டதே என்ற பச்சாதாபம் ஒரு புறம்

வெவ்வேறு உணர்வுகள் அவளை ஆக்கிரமிக்க தன் தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டவள் கண்கள் இரண்டையும் இறுக மூடி கொண்டு கண்ணீர் வடிக்க தொடங்க
“ஹரிணி! என்ன இது?” விஷ்ணுப்பிரியா சிறு கண்டிப்போடு அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள எண்ணி நெருங்கி செல்ல அதற்குள் அர்ஜுன் அவளைத் தள்ளி விட்டு விட்டு ஹரிணியின் கண்களை மெல்லத் துடைத்து விட்டான்.

அவனது அந்த திடீர் நடவடிக்கையில் சிறிது முகம் சுருங்க அவனைத் திரும்பிப் பார்த்த விஷ்ணுப்பிரியா ஹரிணியுடனான அவனது கரிசனம் மிகுந்த நடவடிக்கையைப் பார்த்த பின்னர் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டு அர்ஜுனை அப்போதுதான் நன்றாக கவனித்து பார்த்தாள்.

முதல் தடவை சாதாரணமாக அவனைப் பற்றி எதுவும் தெரியாமல் பார்ப்போருக்கு அவனிடம் இப்படி ஒரு குறை இருக்கும் என்றே கூற முடியாது.

சாதாரண மனிதர்களைப் போலவே அவனும் முகம் கொள்ளாப் புன்னகையுடன் எல்லோருடனும் இயல்பாக பழகுவது போல இருக்கும்.

ஆண் மகனுக்கே உரிய கம்பீரமும், இதழில் மாறாத புன்னகையும், அந்த புன்னகைக்கும் தருணங்களில் அவனது கன்னத்தில் தோன்றும் குழியும் நிச்சயமாக அவனை எந்தப் பெண்ணையும் திரும்பி பார்க்கவே செய்யும்.

சித்த பிரமை தன்னை ஆட்கொண்டுள்ள நிலையிலும் தன் மனதிற்குள் பொதிந்துள்ள காதலை மறக்காமல் இன்று வரை அந்த நினைவுகளுடனும், ஏழு வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த விபத்தின் பின்னர் யாருமே இதுவரை சரியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாத ஹரிணியை மனதார உணர்ந்து அவளையே சுற்றி சுற்றி வரும் அவனது அந்த காதலின் ஆழத்தையும் எண்ணி விஷ்ணுப்பிரியாவிற்கு மலைப்பாகவே இருந்தது.

இப்படியான குணாம்சங்களுடைய ஒருவனை எந்த பெண்ணும் தன் வாழ்வில் இனி அடைய முடியுமா என்பது அவளுக்கு தெரியவில்லை.

அர்ஜுனுக்கு மாத்திரம் இந்த ஒரு நிலைமை ஏற்பட்டு இருக்காவிட்டால் தானே அவனை விரும்பி இருக்கக்கூடும் என்று நினைத்து கொண்டவள் தன் மன எண்ணங்களை எண்ணி தன்னைத் தானே மனதிற்குள் கடிந்து கொண்டவளாக ஹரிணியின் அருகில் சென்று
“ஹரிணி ரொம்ப லேட் ஆச்சு வீட்டுக்கு போகலாமா? அம்மா காத்துட்டு இருப்பாங்க எதுவாக இருந்தாலும் வீட்டுக்கு போயிட்டு அப்புறமாக பேசலாம்” என்று கூறவும்

அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவள் அங்கிருந்து எழுந்து கொள்ளப் போக அவளது கைகளை அவசரமாக பிடித்துக் கொண்ட அர்ஜூன்
“ப்ளீஸ் பிரியா என்னை விட்டுட்டு போகாதே! ப்ளீஸ்!” கண்கள் இரண்டும் கலங்கி கண்ணீர் துளிகள் இப்போது விழவா? வேண்டாமா? என்ற நிலையில் இருக்க அவனை அப்படியான நிலையில் பார்த்ததுமே ஹரிணி அவன் கைகளை தன் கைகளுக்குள் எடுத்து வைத்துக் கொண்டு அவன் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து கொண்டாள்.

“அ…அர்ஜுன்! உங்களோட இந்த நிலைமைக்கு நானும் ஒரு காரணம்னு நினைக்கும் போதே எனக்கு அழுகை அழுகையாக வருது! நானும் உங்களை விரும்பித்தான் இருந்து இருக்கேன் போல! ஆனால் எனக்கு எதுவும் ஞாபகம் இல்லையே! இவ்வளவு விஷயங்களை சொல்லியும் எனக்கு ஒரு துளி கூட ஞாபகம் வரமாட்டேங்குதே ஏன்? ஏன்? ஏன்?” அர்ஜுனின் கைகளை பிடித்து இருந்த தன் கையை எடுத்து தலையில் அடித்து கொண்டு ஹரிணி அழ ஆரம்பிக்க

அவளது அந்த செய்கையில் சிறிது அச்சம் கொண்டவன் தான் இருந்த இடத்தில் இருந்து பின்னால் நகர்ந்தவாறே
“வருண்! வருண்! வருண்! எனக்கு பயமாக இருக்கு! என்னை கூட்டிட்டு போ! என்னை கூட்டிட்டு போ டா!” தன் பங்கிற்கு சத்தமிட நொடி நேரத்துக்குள் அந்த இடமே அல்லோலகல்லோலப்படத் தொடங்கியது.

வருண் விஷ்ணுப்பிரியாவை ஹரிணியின் அருகில் செல்லுமாறு ஜாடை காட்டி விட்டு அவசரமாக அர்ஜுன் அருகில் சென்று அவனைத் தன்னோடு சேர்த்து நிறுத்திக் கொள்ள அவர்கள் காலடியிலேயே மண்டியிட்டு அமர்ந்து இருந்தவள் விஷ்ணுப்பிரியாவினதும், கிருஷ்ணாவினதும் கட்டளையின் பேரில் மெல்ல அந்த இடத்தில் இருந்து எழுந்து நின்றாள்.

அப்போதும் அவள் கண்களில் இருந்து கண்ணீர் விடாமல் வடிந்து கொண்டிருக்க
“ஹரி… ப்ரியா ப்ளீஸ் நீங்க அழாதீங்க! நீங்க இப்படி அழுவதால் எதுவும் மாறப் போவது இல்லை வீணாக மனக்கஷ்டம் தான் கூடும் நடந்த விடயங்களை நம்மால் மாற்ற முடியாது இனி நடக்கப்போகும் விடயத்தை பார்ப்போம் முதல்ல நீங்க வீட்டுக்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க அதற்கு அப்புறம் என்ன பண்ணுவது என்று நாம யோசிக்கலாம்” வருண் தன்னால் முடிந்த மட்டும் அவளை சமாதானப் படுத்த முயல அப்போதும் அவள் பார்வை அர்ஜுனை விட்டு அகலவில்லை.

‘எனக்கு ஏன் எதுவும் ஞாபகம் வரமாட்டேங்குது? ஏன்? ஏழு வருடங்களாக எவ்வளவோ கஷ்டப்பட்டு இருக்கேன் அப்போ கூட ஏன் எனக்கு எதுவும் ஞாபகம் வரல? இத்தனை நாள் இந்த ஏழு வருட நினைவுகளே போதும் என்று இருந்தேன் ஆனால் இப்போ அது மட்டும் எனக்கு போதாது எனக்கு பழைய விடயங்களும் ஞாபகம் வரணும்! ஞாபகம் வந்தே ஆகணும்’ தன்னைத்தானே வருத்திக் கொண்டு பழைய விடயங்களை எல்லாம் யோசிப்பது தன் உயிருக்கே ஆபத்தாக அமையக்கூடும் என்று தெரிந்து இருந்தும் எப்படியாவது அர்ஜுனைப் பற்றி ஒரு சிறு நினைவாவது தனக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தோடு ஹரிணி தன்னை மேலும் மேலும் வருத்திக் கொண்டு நின்றாள்.

மனதையும், உடலையும் அவள் தன்னை மீறி வருத்த அதன் விளைவு தலைக்குள் பாறாங்கல்லை வைத்து அழுத்துவது போல வலி அவளது தலையெங்கும் பரவ ஆரம்பித்தது.

மெல்ல மெல்ல அந்த வலி தலை முழுவதும் பரவ கண்களை இறுக மூடி கொண்டு தன் தலையை பிடித்து கொண்டவள்
“ம்மா! ப்பா!” என்றவாறே மயங்கி சரிய நொடி கணத்திற்குள் கிருஷ்ணா அவளை தன் கைகளில் தாங்கி கொண்டான்.

“பிரியா!”

“ஹரிணி!” ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான அழைப்புகளோடு ஹரிணிப்பிரியாவை நெருங்க அதற்குள் கிருஷ்ணா அவளை ரெஸ்டாரன்டின் வெளிப்புறமாக தூக்கி கொண்டு வந்திருந்தான்.

அவர்கள் அந்த இடத்தை வந்து சேருவதற்குள் தன் காரை எடுத்துக் கொண்டு வந்த வருண் அவர்கள் அனைவரையும் அருகில் இருந்த வைத்தியசாலையை நோக்கி அழைத்துச் செல்ல அவனருகில் அமர்ந்திருந்த அர்ஜுனோ பயத்தில் நடுங்கிப் போனவனாக வருணின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு அவன் தோளில் சாய்ந்து கண் மூடி அமர்ந்திருந்தான்.

சில நொடித்துளிகள் கரைந்து செல்ல வைத்தியசாலையில் ஹரிணியை அனுமதிக்க செய்து சிகிச்சை நடக்கும் இடத்திற்கு அவளை அனுப்பி வைத்தவன் அப்போதும் தன் கையோடு ஒன்றி நிற்கும் அர்ஜுனைப் பார்த்து கவலையுடன் அவனது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தபடியே நின்று கொண்டிருந்தான்.

ஹரிணியினது உடல் நிலை பற்றி கிருஷ்ணா அங்கிருந்த வைத்தியர்களிடமும், தாதியினரிடமும் தெரிவித்து இருக்க அவர்களும் அதைக் கருத்தில் கொண்டு ஹரிணிக்கு சிகிச்சை அளித்த வைத்தியரின் உதவியை நாடி இருந்தனர்.

ஹரிணிக்கு சிகிச்சை நடக்கும் அந்த நேரத்திற்குள் விஷ்ணுப்பிரியா தன் தாய், தந்தையருக்கு தகவல் சொல்லி இருக்க அதைக் கேட்ட அடுத்த கணமே அவர்கள் இருவரும் பதட்டத்துடன் அடித்து பிடித்து கொண்டு அங்கே வந்து சேர்ந்திருந்தனர்.

ஹரிணியின் இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்று கேட்ட தன் பெற்றோருக்கு வருண் பதிலளிக்க போக அவசரமாக அவனைப் பார்த்து வேண்டாம் என்பது போல தலையசைத்தவள்
“அக்கா பழைய விடயங்களை எல்லாம் பேசும் போது கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டா! அதனால் தான்!” உண்மையான நிலையை உண்மையாக நடந்த சம்பவத்தை மறைத்து கூறி இருந்தாள்.

“இதற்காக தான் நான் அத்தனை தூரம் அன்னைக்கே சொன்னேன்! நாமே இந்த விடயத்தை மாப்பிள்ளை கிட்ட பேசிடலாம் ஹரிணி இதைப் பற்றி அதிகமாக யோசிக்க வேண்டாம்னு! யாரு என் பேச்சைக் கேட்டீங்க? எல்லாம் உங்க உங்க இஷ்டம்!” ஜெயலஷ்மி தன் மகளின் நிலையை எண்ணி வருந்தியவாறாக ஏதேதோ பேசிக் கொண்டு நிற்க மாணிக்கம் மாத்திரம் ஹரிணிக்கு சிகிச்சை நடக்கும் அந்த அறையின் புறமாக சென்று நின்று கொண்டார்.

‘இன்னும் எங்களை எல்லாம் எவ்வளவு தூரம் கஷ்டப்படுத்தப்போற கடவுளே!’ மனதிற்குள் தங்கள் நிலையை எண்ணி வருந்தியவாறாக திரும்பியவர் அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி நின்று கொண்டிருந்த வருணைப் பார்த்ததும் சங்கடத்துடன் தன் தலையை குனிந்து கொள்ள

அவரது சங்கடத்திற்கான காரணத்தை உணர்ந்து கொண்டவன்
‘இந்த திருமணம் நடக்காது என்று நான் இவரிடம் எப்படி கூறுவது? பிரியாவின் நிலையைப் பார்த்து நான் வேண்டாம் என்று சொல்லுவதாக அவர் நினைத்துக் கொண்டால்? அர்ஜுன் மற்றும் பிரியாவின் காதலைப் பற்றி இவர்களிடம் நான் எப்படி சொல்வது?’ இப்போது தான் இரு படகில் கால் வைத்து நிற்பவனைப் போன்ற ஒரு நிலையில் நிற்பதை எண்ணி மனம் உடைந்து போனான்.

மாணிக்கம் மற்றும் வருண் ஒருவரையொருவர் பார்த்து சங்கடத்துடன் நின்று கொண்டிருக்க அதே நேரம் சரியாக ஹரிணிக்கு சிகிச்சை அளித்து விட்டு வைத்தியரும் அந்த அறையில் இருந்து வெளியேறி வந்தார்.

“டாக்டர் என் பொண்ணுக்கு என்ன ஆச்சு? அவளுக்கு எதுவும் இல்லை தானே?” மாணிக்கத்தின் பதட்டம் நிறைந்த கேள்வியில் அவரைத் திரும்பி பார்த்த வைத்தியர்

“மாணிக்கம் உங்களுக்கு பல தடவை சொல்லி இருக்கேன் ஹரிணியை இப்படி மனதை வருத்தி எந்த விடயத்தையும் யோசிக்க கூடாதுன்னு! அந்த விபத்து நடந்து பல வருடங்கள் முடிந்து இருந்தாலும் இன்னும் உங்க பொண்ணு குணமாகல அதை நல்லா ஞாபகம் வைத்துக் கொள்ளுங்க நல்ல வேளை இன்னைக்கு சரியான நேரத்தில் ஹாஸ்பிடல் கொண்டு வந்தீங்க இல்லைன்னா என்ன நடந்து இருக்குமோ சொல்ல தெரியாது! இன்னொரு தடவை இப்படி நடந்தால் உங்க பொண்ணு உயிருக்கே ஆபத்தாகி விடும்! ரொம்ப ஜாக்கிரதையாக ஹரிணியை பார்த்துக்கோங்க! எக்காரணத்தைக் கொண்டும் அவங்களை ரொம்ப எமோஷனல் ஆக விட்டுடாதீங்க!” என்று விட்டு இன்னும் சில பல அறிவுரைகளை கூறி விட்டு சென்று விட அதையெல்லாம் கேட்டுக் கொண்டு நின்ற வருணுக்கோ தர்மசங்கடமாகி போனது.

தான் எல்லா விடயங்களையும் கூறி இருக்காவிட்டால் ஹரிணிக்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காதோ என்ற எண்ணம் அவன் மனதிற்குள் தோன்ற தான் அவசரப்பட்டு விட்டோமே என்ற கவலையுடன் அங்கிருந்த நாற்காலியில் சோர்ந்து போனவனாக அமர்ந்து கொள்ள அவனைப் போலவே அர்ஜுனும் அவனருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

தன் நண்பனை இந்த நிலையில் இருந்து சரி செய்து விட வேண்டும் என்ற தன்னுடைய ஆர்வம் ஹரிணிக்கு இந்த நிலையை ஏற்படுத்தி விட்டதே என்ற கவலையோடு வருண் தன் கரத்தில் முகம் புதைத்து அமர்ந்திருக்க
“வருண் அழாதேடா! பிரியாவுக்கு ஒண்ணும் இல்லை அவ சரியாகிடுவா! நாம இரண்டு பேரும் போய் அவளைப் பார்க்கலாமா? அவ என்னை தேடுவாடா! அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம் டா! சரின்னு சொல்லுடா!” அர்ஜுன் அவனது கைகளை பிடித்து விலக்கி விட்டபடியே கூறவும் கண்கள் கலங்க அவனை நிமிர்ந்து பார்த்தவன் அவனது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்து விட்டு ஹரிணி வைக்கப்பட்டிருந்த அறையின் புறமாக திரும்பி பார்த்தான்.

தாதியொருவர் தற்போது சென்று ஹரிணியைப் பார்க்கலாம் என்று கூறியிருக்க அவர் அங்கிருந்து சென்ற அடுத்த கணமே மாணிக்கம் மற்றும் ஜெயலஷ்மி விரைவாக அந்த அறைக்குள் உட்பிரவேசித்து கொண்டனர்.

தன் தாய் தந்தையரை பின் தொடர்ந்து உள்ளே செல்லப் போன விஷ்ணுப்பிரியா அவர்களையே தயக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வருணையும், அவனது கையைப் பிடித்து கொண்டு புன்னகையுடன் பேசிக் கொண்டிருந்த அர்ஜுனையும் பார்த்து விட்டு கிருஷ்ணாவிடம் ஏதோ கூறி விட்டு உள்ளே சென்று விட அவனோ பெரு மூச்சு விட்டபடியே அவர்கள் இருவரையும் நோக்கி நடந்து வந்தான்.

“விஷ்ணு உங்களையும் உள்ளே வரச்சொன்னா!”

“விஷ்ணு?”

“அது அக்கா பேரு விஷ்ணுப்பிரியா! எனக்கு விஷ்ணுன்னு கூப்பிட்டு பழகிடுச்சு அது தான்! உள்ளே போகலாமா?”

“இல்லை! அது! நாங்க எப்படி? அம்மா, அப்பாவுக்கு நான் சொன்னது எல்லாம்…” வருண் தயக்கத்துடன் தன் முன்னால் நின்று கொண்டிருந்த கிருஷ்ணாவைப் பார்க்க

“நீங்க இப்போ உள்ளே வரலேன்னா தான் அம்மா, அப்பா என்ன நடந்ததுன்னு துருவித்துருவி விசாரிப்பாங்க! உள்ளே வந்து அவங்க கூட கொஞ்ச நேரம் பேசிட்டு போனீங்கன்னா அவங்களுக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் அது தான் சொல்லுறேன்” பதிலுக்கு அவனைப் பார்த்து கூறியவன்

அர்ஜுனின் புறம் திரும்பி
“அர்ஜுன் ஸார்! உள்ளே போகலாமா?” என்று கேட்கவும் சிறிது தயக்கத்துடன் வருணைத் திரும்பி பார்த்தவன் அவனது முகத்தையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு நின்றான்.

அவர்கள் இருவரது பார்வையும் தன் மீது இருப்பதை உணர்ந்து கொண்டவனாக அர்ஜுனை ஒரு முறை திரும்பி பார்த்த வருண்
‘பிரியாவைக் கண்டுபிடித்தாகி விட்டது! பிரியாவின் விபத்தின் பின்னர் என்ன நடந்தது என்று கட்டாயம் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் காலேஜிலும் சரி, அவளது பிரெண்ட்ஸ் திடீரென ஊரை விட்டு போனதிலும் சரி எதுவுமே சரியாக இல்லை அதில் ஏதோ மர்மம் மறைந்து இருக்கின்றது ! அதைக் கண்டு பிடித்தே ஆக வேண்டும் அதன் பின்னராவது அர்ஜுனுக்கு குணமாகி விட்டால் போதும்!’ என்று எண்ணிக் கொண்டே கிருஷ்ணாவை முன்னால் செல்லும் படி கூறி விட்டு அர்ஜுனின் கையைப் பிடித்து கொண்டு அவனையும் அழைத்துக் கொண்டு ஹரிணியைப் பார்ப்பதற்காக நடந்து செல்ல மருந்துகளின் தாக்கத்தினால் அசந்து தூங்கிக் கொண்டிருந்தவள் அப்போது தான் மெல்ல மெல்ல தன் சுயநினைவுக்கு திரும்பி கொண்டிருந்தாள்.

மாணிக்கம், ஜெயலஷ்மி மற்றும் விஷ்ணுப்பிரியா அத்தனை நேரம் இருந்த படபடப்பு மறைய அவளைப் பார்த்து சிறிது நிம்மதியோடு புன்னகைத்துக் கொள்ள
தன்னை சுற்றி நின்றவர்களை எல்லாம் பார்த்து பதிலுக்கு சிறிது புன்னகைத்துக் கொண்டவள் தன் பார்வையை வாயில் புறமாகத் திருப்ப அங்கே அர்ஜுனும், வருணும் நின்று கொண்டிருந்தனர்.

அவர்கள் இருவரையும் பார்த்து தன் இமை தாழ்த்திக் கொண்டவள் ஏதோ சிந்தனை வந்தவளாக விஷ்ணுப்பிரியாவின் புறம் திரும்பி பார்க்க அவளது சிந்தனை எதற்காக இருக்கும் என்று எண்ணிக் கொண்டவள்
‘அப்பா, அம்மாவுக்கு நடந்த எதுவும் தெரியாது!’ என்று சைகையில் கூற சிறிது பதட்டம் நீங்கியவளாக தன் விழிகளை மூடி திறந்து கொண்டவள் தன் தந்தையின் புறம் திரும்பி பார்த்தாள்.

“இப்போ உடம்புக்கு பரவாயில்லை தானேடா ஹரிணிம்மா?” மாணிக்கத்தின் கேள்வியில் கண்கள் கலங்க அவரைப் பார்த்து

“பரவாயில்லை ப்பா!” என்று கூறியவள் தன் அன்னையின் புறம் திரும்பி அவரை தன் அருகில் வருமாறு சைகை செய்ய அவரும் உடனடியாக அவளின் அருகில் சென்று அமர்ந்து கொண்டார்.

தலையணையில் இருந்த தன் தலையை மெல்ல விலக்கி தன் அன்னையின் மடியில் கண் மூடி சாய்ந்து கொண்டவள் தன் தந்தையின் கையை ஒரு கையால் பற்றி கொண்டு சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

கடிகாரத்தின் ஓசை மாத்திரம் அந்த அறையில் விடாமல் கேட்டுக் கொண்டிருக்க அந்த அமைதியை கலைப்பது போல தன் தொண்டையை செருமிக் கொண்ட வருண்
“அங்கிள் அப்போ நான் கிளம்புறேன்! அப்பாவும், அம்மாவும் வீட்டில் காத்துட்டு இருப்பாங்க பிரி…க்கும்…ஹரிணிக்கு கொஞ்சம் குணமானதும் நான் உங்களை வந்து சந்திக்கிறேன்” என்று விட்டு அங்கிருந்து செல்லப் போக

அர்ஜுனோ அவனது கையை உதறி விட்டு ஹரிணியின் மற்றைய புறமாக வந்து அமர்ந்து கொண்டு
“நான் பிரியா கூட தான் இருப்பேன் நான் எங்கேயும் வர மாட்டேன்! வரமாட்டேன்!” என்றவாறே அங்கிருந்த கட்டிலை இறுக்கி பிடித்து கொள்ள அவனுக்கு தான் மிகவும் தர்மசங்கடமாகிப் போனது.

“அர்ஜுன் ப்ளீஸ் நான் சொல்லுறதைக் கேளுடா! அவங்களுக்கு உடம்பு சரி ஆனதும் வந்துபார்க்கலாம் இப்போ கிளம்பலாம் வாடா!” வருண் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அர்ஜுன் அந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்பது போல அமர்ந்திருந்தான்.

நொடித்துளிகள் கரைந்து செல்லச் செல்ல அர்ஜுனின் பிடிவாதம் அதிகரித்து கொண்டே செல்ல சிறிது நேரம் அவர்களையே பார்த்து கொண்டு இருந்த ஜெயலஷ்மி
“பரவாயில்லை தம்பி! கொஞ்ச நேரம் அந்த தம்பி இருக்கட்டும் பிடிவாதமாக அவரை இங்கே இருந்து கூட்டிட்டு போய் ஏதாவது ஆச்சுன்னா உங்களுக்கு தானே சிரமம்? அவரு அமைதியான அப்புறம் கூட்டிட்டு போகலாம் நீங்களும் உட்காருங்க” என்று கூறவும் சிறிது தயக்கத்துடன் அவர்கள் எல்லோரையும் திரும்பிப் பார்த்தவன் அதே தயக்கமான மனநிலையுடன் அங்கிருந்த முக்காலி ஒன்றில் அமர்ந்து கொண்டான்.

ஆரம்பத்தில் எதுவும் பேசாமல் ‘பிரியா! பிரியா!’ என்ற பெயரையே திரும்பத் திரும்ப கூறிக் கொண்டு இருந்த அர்ஜுன் சில நிமிடங்கள் கழித்து எல்லோருடனும் சிரித்துப் பேசத் தொடங்க அவனது வெகுளித் தனத்தைப் பார்த்து அங்கிருந்த எல்லோருக்குமே மனதிற்குள் என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு வந்து அடைத்துக் கொள்ள அவனுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு இருக்க வேண்டாமே என்பது தான் பெரும்பாலும் அவர்களின் எண்ணமாகவும் இருந்தது.

சிறிது நேரம் கழித்து எல்லோரும் தங்களுக்குள் இயல்பாக பேசிக் கொண்டிருக்கையில் அர்ஜுன் மாத்திரம் முகத்தில் நிறைந்த புன்னகையுடன் அவள் அன்னையின் மடியில் தலை கவிழ்ந்து படுத்திருந்த ஹரிணியின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவளும் அதே நேரம் அவனது முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘முதன் முதலாக அந்த பேருந்து நிறுத்தத்தில் வைத்து அர்ஜுனைப் பார்த்த போது ஏதோ ஒரு உள்ளுணர்வு எனக்கு உணர்த்தியது போல இருந்ததே! அது தான் நான் அவன் மீது கொண்ட நேசமா?’ என் தன் மனதிற்குள் தனக்குத்தானே கேள்வி கேட்டு கொண்டவள் மறந்தும் தன் இமைளை மூடித் திறக்கவில்லை அவளது விழிகள் இரண்டும் அர்ஜுனின் புன்னகை தவழும் முகத்தையே அளவெடுத்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரமாக அர்ஜுனிடமிருந்து எந்தவொரு சத்தமும் வரவில்லை என்பதை உணர்ந்து கொண்ட வருண் தற்போது இங்கிருந்து சென்றால் சரியாக இருக்கும் என்று எண்ணியவனாக அர்ஜுனின் கையைப் பிடித்து கொண்டு
“அப்போ நான் கிளம்புறேன் அங்கிள், ஆன்ட்டி!” என்றவாறே எழுந்து நிற்க

வெகு நேரமாக தன் மனதிற்குள் இருக்கும் கேள்வியை கேட்டு விட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவன் முன்னால் வந்து நின்ற மாணிக்கம்
“தம்பி இந்த நிலையில் நான் இந்த கேள்வியை கேட்க கூடாது இருந்தாலும் மனது கேட்கல அதனால் கேட்கிறேன் உங்களுக்கு என் பொண்ணை கல்யாணம் பண்ணுவதில் சம்மதம் தானே?” என்று கேட்கவும்

அவரது அந்த நேரடிக் கேள்வியில் அதிர்ச்சியானவன் தயக்கத்துடன் தன் அருகில் நின்று கொண்டிருந்த அர்ஜுனையும், கட்டிலில் தன் அன்னை மடியில் தலை வைத்து படுத்திருந்த ஹரிணியையும் பார்த்து விட்டு
‘இப்போ நான் ஹரிணியை வேண்டாம்ன்னு சொன்னால் அவளோட இந்த நிலையை பார்த்து தான் நான் வேண்டாம்னு சொல்லுவதாக இவங்க நினைத்து கவலைப் படுவாங்க அதை விட ஹரிணியே இந்த திருமணம் வேண்டாம்னே சொல்லட்டும்’ என்று தன் மனதிற்குள் எண்ணிக் கொண்டே

“முதல்ல ஹரிணியோட சம்மதத்தை கேளுங்க! அவங்களுக்கு சம்மதம்னா மேற்கொண்டு பார்க்கலாம்” என்று விட்டு அவளைத் திரும்பி பார்க்க

அவளோ
“எனக்கு இந்த கல்யாணம் பண்ணுவதில் பூரண சம்மதம்பா!” ஒரு நொடியும் தாமதிக்காமல் பதிலளித்து இருந்தாள்.

அவளது பதிலைக் கேட்டு மாணிக்கம் மற்றும் ஜெயலஷ்மியின் முகங்கள் புன்னகையில் விரிய வருண், விஷ்ணுப்பிரியா மற்றும் கிருஷ்ணாவின் முகங்கள் அதிர்ச்சியில் உறைந்து போனது……

Leave a Reply

error: Content is protected !!