(PMC/private military contractors ஒரு நாட்டின் ராணுவத்தை விட மிகச் சக்தி வாய்ந்த, சட்ட திட்டங்களால் கட்டுப்படுத்த முடியாத, அதிக செயல்திறன், சுதந்திரம், ஆயுத சப்போர்ட், பணம் மிகப் புழங்கும் தனியார் ராணுவம்.
ஆனால், மிகவும் சர்ச்சைக்குரியவை. இரகசிய நடவடிக்கைகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்றவை. ‘Off the book operations’ என்று சொல்லப்படும் எங்குமே பதிய படாத ராணுவ நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்றவை.
Brutal force எனப்படும் தேவையைவிட அதிக கடுமையை பயன்படுத்தி தாங்கள் செய்ய வேண்டியதை செய்யத் தயங்காதவை.
இராஜதந்திர ரீதியில் தீண்டத் தகாத, ஆபத்து நிறைந்த கொடுங்கோல் ஆட்சியாளர்கள், கடல் கொள்ளைக்காரர்களை, தீவிரவாதிகள் நிறைந்த பகுதிகளில் இந்தத் தனியார் ராணுவம் செயல்படுகிறது.
உலக அளவில், அமெரிக்கா வளர்ந்து வரும் பி.எம்.சி.களின் மையமாக இருந்து வருகிறது, 5,883 security contractors நிறுவனங்கள் அமெரிக்காவில் இருக்கிறது.
Guarding facilities, protecting key personnel, transporting sensitive material, எண்ணெய் வயல்கள், வைர சுரங்க பாதுக்காப்பு, அணு ஆராய்ச்சி நிறுவன பாதுக்காப்பு, பிரபலங்கள், ராயல்டி, வணிகர்கள் மற்றும் சூப்பர் பணக்காரர்கள் போன்ற உயர்மட்ட நபர்களுக்கு, தளவாட சங்கிலியின் பெரிய பகுதிகளை இயக்குதல்/ logistics chain, பொது கட்டிடங்கள் மற்றும் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு வழங்குதல், சோதனைச் சாவடிகளை (சென்னை ஹைவே சோதனை சாவடி பாதுகாப்பை கற்பனை செய்ய வேண்டாம். தீவிரவாதிகள் அதிகம் நிறைந்த பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகள்) நிர்வகித்தல் என்று இவர்களின் பணி மிக மிக ஆபத்து நிறைந்தவை.
இந்தியாவில் தனியார் இராணுவ நிறுவனங்கள்/PMC கிடையாது. தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள்/PRIVATE SECURITY FIRMS தான் இருக்கின்றன. வங்கிகளுக்கு, வீடுகளுக்குக், அபார்ட்மெண்ட்களுக்கு காவலாளி அனுப்ப, vip செக்யூரிட்டி கொடுக்க மட்டுமே இவை பயன்படுத்தப் படுகின்றன.
FICCI இன் ஒரு அறிக்கையின் படி, 8 மில்லியனுக்கும் அதிகமான மக்களை இந்தியாவில் தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் அமர்த்தியுள்ளன.
ஆனால் இவை PMC இல்லை. காரணம்?)
அத்தியாயம் 17
ஈஸ்வரையும் அவன் நண்பர்களையும் சென்னைக்குள் வைத்தே கதையை முடிக்கத் தன் தந்தை போட்ட பிளான் அப்போதைக்கு தன்னால் நிறுத்தப்பட்டு இருப்பதை அறியாத சம்யுக்தா, மன கலக்கத்துடன் விமான நிலையத்தை நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கி இருந்தாள்.
கோவாவில் வைத்து ஈஸ்வர் கதையை முடிக்கப் பல்தேவ் தகுந்த நேரம் பார்த்துக் காத்திருந்தார்.
மகளைக் காப்பாற்ற மற்றவர்களைப் பலி கொடுக்கத் துணிந்து விட்ட அந்தத் தந்தை அறியவில்லை, தன் மகளுக்கு நிஜமான ஆபத்து அவளைத் தேடி சென்னையை சலித்து கொண்டிருப்பதை.
கோயிலுக்குள், கோயிலுக்குப் பின்புறம் நடந்தவற்றையும், சம்யுக்தா கிளம்பிய பின், மலை எருமை மாடுகள்போல் வந்திறங்கிய சத்ருஜித் ஆட்களையும் கண்டு, நடப்பதற்கு மௌன சாட்சியாய் நின்றது கவிதா, கேசவன், மணி மட்டும் இல்லை, அத்தனை நேரம் அந்தக் கோயிலில் இருந்த அந்தப் பெரியவரும் தான்.
சம்யுக்தா மொபைலுக்கு பல வருடமாய், ‘பிளாங்க் அழைப்பு’ கொடுக்கும் அந்த வயதானவர், கோயில் வாசலில் நின்று எதையோ யோசித்து விட்டுத் தன் காரை ஏர்போர்ட் நோக்கிக் கிளப்பினார்.
பைஜாமா ஜிப்பாவில், தலையில் டர்பன் கட்டி, தாடி, மீசை, கண்ணாடி அணிந்த சீக்கியர் அவர்.
தன் காதில் இருந்த ப்ளூ டூத் ஹெட் செட்டை அவர் கழற்ற, அதுவரை ஜெவியருடன் பல்தேவ் பேசியது எல்லாமுமே அந்தப் பெரியவரும் கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறார் என்று சொல்லாமல் சொன்னது.
‘Third Eye’ என்ற ethical hacker குழுவில் அந்தப் பெரியவரும் கண்ணுக்குத் தெரியாத ஒரு அங்கத்தினர்.
கணினி, மொபைல், லேப்டாப், டிராபிக் கேமரா, ATM கேமரா, CCTV என்று இந்தப் பெரியவருக்குப் பார்க்க, கேட்கக் கோடி கண்களும், செவிகளும் உள்ளன.
சத்ருஜித் என்ற அரக்கன், சம்யுக்தா என்ற பெண்ணைக் குறி வைத்து விட்டதை பல்தேவ் வேண்டும் என்றால் அறியாமல் இருக்கலாம். ஆனால், அதை அறிந்து கொண்ட அந்தப் பெரியவரின் இதயம் துடிப்பதையே ஒரு கணம் நிறுத்தித் தான் விட்டது.
காரை ஓரமாக நிறுத்தி விட்டு, காரின் டேஷ் போர்டு திறக்க அதிலிருந்தது விமானத்தில் பணிப்பெண் பயன்படுத்தியது போன்ற கையடக்க சாட்டிலைட் மொபைல் ஒன்று.
அதை எடுத்து அவர் யாருக்கோ அழைப்பு விடுக்க, அந்த அழைப்பானது 1,344 கிமீ தாண்டி, அரபிக்கடலில் அமைந்திருந்த 1,200 சிறிய பவளத் தீவுகள், மணல் கரைகள், sandbanks, கொத்துகள் அடால்களில்/atoll கூட்டமைப்பை கொண்ட மாலத்தீவுகள் என்றழைக்கபடும் இடத்தில் இருப்பவரைச் சென்று அடைந்தது.
‘டிராவல்’ என்ற வார்த்தையுடன் இணைந்து, ‘லவ்’ என்ற வார்த்தையைப் பற்றி ஒருவர் நினைக்கும்போது, உடனடியாக மனதில் வரும் ஒரு இடம் மாலத்தீவுகள் Maldives.
அழகிய தெளிவான நீரைக் கொண்ட அமைதியான, அமைதியான இடம். இயற்கை அன்னையின் செல்லப் பிள்ளை. நீல நிற இந்திய பெருங்கடலில் பளபளப்பான முத்துக்களைப் வாரி இறைத்தது போல் இவை அமைந்துள்ளன.
‘Breathtaking, Picture perfect, பூமியில் சொர்க்கம், பாலைவன தீவு சுவர்க்கம்’ என்று மாலத்தீவுகளை எத்தனை மொழிகளில் உள்ள வார்த்தைகள் கொண்டு வர்ணித்தாலும், அந்த இயற்கை அழகுக்கு யாராலும் நியாயம் செய்யவே முடியாது. மனதை உருக்கும் இந்த அழகை, அங்கே சென்று கண்களால் பருகி, இதயத்தில் பதியவைக்க தான் முடியும்.
எங்கும் ஏகாந்தம்.
மனதில் பரவசத்தை ஏற்படுத்தும் இயற்கை அன்னையின் அதி உன்னத அழகு.
‘வான காதலன் சமுத்திர பெண்ணோடு கலந்து விட்டானோ!…’ என்று எண்ண தோன்றும் நீல நிறம் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை.
ஒற்றை நிறம் மனதை கொள்ளையடிக்க முடியுமா?… முடியும் என்று நிரூபித்துக் கொண்டிருந்தது மாலத்தீவுகள்.
நம்பமுடியாத படிக தெளிவான டர்க்கைஸ் நீர்/crystal clear turquoise waters, மென்மையான வெள்ளை மணல் கடற்கரைகள், தென்னம் தோப்புகள், கடலுக்குள் குடில்கள், ஆழமற்ற தடாகங்கள், முடிவற்ற சூரிய ஒளி மற்றும் கிரகத்தில் எஞ்சியிருக்கும் சிறந்த பவளப்பாறைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
பூமியில் சொர்க்கத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் அது இந்தத் தீவுகளில் கிடைக்கும். இறைவனின் படைப்பாற்றலானது நம் மூச்சை நிறுத்தி விடும் மனோகரம் கொட்டி கிடக்கும் இடம்.
200 வகையான பவளப்பாறைகள், ஆமைகள் மற்றும் 300 வகையான மீன்கள், ரீஃப் மீன்கள், ஸ்டிங்ரேக்கள் மற்றும் சுறாக்கள் கொண்ட நீர் வாழ் சாம்ராஜ்யத்தின் திறவுகோல்.
விண்ட்சர்ஃபிங், படகோட்டம் நீர்-பனிச்சறுக்கு, மீன்பிடித்தல், ஸ்கூபா டைவிங், என்ற நீர் விளையாட்டுகளும் மிகப் பிரபலம்.
இதில் இன்னொரு ஆச்சரிய படுத்தும் விஷயம் என்னவென்றால், வீட்டை வாடகைக்கு எடுப்பது போல், மாலத்தீவுகளில் உள்ள தீவினை அந்த நாட்டின் அரசாங்கத்திடமிருந்து லீசுக்கு வாங்க முடியும்.
35,000 ரூபாய்க்கு ஒரு தீவு உங்களுக்குச் சொந்தமாக முடியும். (ஒரு தீவு பார்சல்)
மாலத்தீவில் உள்ள தீவுகள் குத்தகை அடிப்படையில் விற்கப்படுகின்றன. இங்குக் குத்தகை காலம், 50 முதல் 99 ஆண்டுகள்வரை இருக்கும். வருடாந்திர குத்தகை ஒவ்வொரு தனி தீவின் அளவைப் பொறுத்தது மற்றும் பொதுவாகச் சதுர மீட்டருக்கு, 8.00 அமெரிக்க டாலர் ஆகும். இது தீவின் பயன்பாட்டைப் பொறுத்து இந்தக் குத்தகை தொகையானது மாறுபடும்.
அப்படி தனியாருக்கு 99 வருடங்களுக்குக் குத்தகை விடப் பட்ட தீவுகளில் ஒன்று தான், ‘பிளாக் கோப்ரா/black cobra’ தீவு.
அந்தத் தீவில் இருந்த ஒருவருக்கு தான், சென்னையிலிருந்து அழைப்பு வந்து சேர்ந்தது.
வெளியே இருந்து பார்ப்பதற்கு தான் அது மற்ற தீவுகளைப் போல் மிகச் சாதாரணமாய், இயற்கை வளம் சூழ, அமைதியான சமுத்திரத்தில், பவள பாறைகள் வெளியே தெரியும், அமைதியான அழகிய தீவு.
சதுப்பு நிலத்தின் விளிம்பில் 7,000 ஏக்கரில் பரந்து விரிந்திருந்தது, பிளாக் கோப்ரா தீவு. இது, ‘Black wolf consulting limited’ என்ற தனியார் ராணுவ நிறுவனத்திற்கு சொந்தமானது.
அந்தத் தீவைச் சுற்றி நாளா புறமும் கடலில் ரெண்டு ஆள் உயர இரும்பு வேலி இருக்கும். உள்ளே நடக்கும் எதுவும் வெளியே தெரியாது. அனுமதி பெற்றவர்கள் மட்டுமே கடலில் இருக்கும் வேலியைக் கடக்க முடியும்.
அழகான ஒன்று ஆபத்தானதாகவும் இருக்கலாம் என்பதை அந்தத் தீவிற்குள் நுழைந்தால் தான் புரிந்து கொள்ள முடியும்.
தீவுக்குள் நுழைந்து சற்று நேரம் நடந்தால், இப்பொழுது நிலத்தில் தீவைச் சுற்றி பதினைந்து அடிக்கும் அதிக உயரமான மதில் சுவர் அரணாய் கண்ணின் முன் பிரம்மாண்ட ராட்சஷனாய் எழுந்து நின்றது. அந்தச் சுவரின் மேல், 1800 வாட்ஸ் மின்சாரம் பாயும் இரும்பு வேலிகள் அனுமதி இல்லாமல் எங்களை நெருங்குவது ஆபத்து என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது.
மதில் சுவர் எங்கும் சிசி டிவி கேமெராக்கள், புறஊதாக்கதிர்கள் போன்ற அட்வான்ஸ்ட் பாதுக்காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
தீவுக்குள் செல்ல ஒற்றை கதவு. அதன் நீளம், அகலம், பிரமாண்டம் பார்க்கவே, ‘ஜுராசிக் பார்க்’ படத்தில் வரும் கதவுகளைத் தான் நினைவு படுத்தும் வண்ணம் இருந்தது. அங்கே ஆட்டோமேட்டிக் துப்பாக்கி ஏந்திய காவலர்கள், K9 யூனிட் எனப்படும் காவல் நாய்கள், மெட்டல் டிடெக்டர்ஸ் என்று ஒரு ராணுவ தலைமையகம் எந்தவித பாதுகாப்போடு இருக்குமோ அப்படி இருந்தது.
அந்தத் தீவுக்குச் சொந்தக்காரர் இந்திய NRI. ‘ஜாக்கெல்/jackel’ என்பது அவருக்கு இருக்கும் பட்ட பெயர். உண்மை பெயர் அறிந்தவர்கள் சிலரே.
அது ஒரு PMC/பிரைவேட் மிலிட்டரி கான்ட்ராக்டர்ஸ், ராணுவ பயிற்சி தளம். முழுவதும் தனியார் ராணுவத்தை ஆபத்தான இடங்களுக்கு அனுப்பி வைக்க இங்கே பயிற்சி கொடுத்து அனுப்புவார்கள்.
30 நாடுகளில் செயல்பட்டு, 15,000 ஊழியர்கள் கொண்ட தனியார் ராணுவ நிறுவனம், Black wolf consulting limited.
‘The shadow behind you. நீங்களே அறியாமல் உங்களைப் பின் தொடரும் நிழல்’ என்பதை நிரூபிக்கும் தனியார் ராணுவம்.
இதன் ஒரு அங்கம் தான் சைபர் குற்றங்களிலிருந்து பொது மக்களைக் காக்கும் அரணாய் நிற்கும் , ‘third eye/மூன்றாவது கண்’ hacker குழு.
‘Black wolf consulting limited.The shadow behind you.’
கடந்த இருபது வருடங்களாய், பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவதற்கும், அமைதி ஒருமைப்பாடு, சகோதரத்துவம், அனைவரும் சமம், என்ற கொள்கை கொண்டு, இணையற்ற அர்ப்பணிப்பையும், ஆர்வத்தையும், தியாகத்தையும் செய்யத் தயங்காத, நீதி, நேர்மை, நியாயம், தர்மம் பக்கம் நிற்கும் நிறுவனம்.
ஆரம்பத்தில் பிரபலங்கள், ராயல்டி, வணிகர்கள் மற்றும் சூப்பர் பணக்காரர்கள் போன்ற உயர்மட்ட நபர்களுக்கு மட்டுமே பாதுகாப்பாய் இருந்த இந்த நிறுவனம், தான் தனி தன்மையால் இன்று Guarding facilities/பொது கட்டிடங்கள், சோதனைச் சாவடி மற்றும் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு வழங்குதல், protecting key personnel, transporting sensitive material, எண்ணெய் வயல்கள், வைர சுரங்க பாதுக்காப்பு, அணு ஆராய்ச்சி நிறுவன பாதுக்காப்பு, தளவாட சங்கிலியின் பெரிய பகுதிகளை இயக்குதல்/ logistics chain என்று முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில், பல்வேறு அரசாங்கத்திற்கு பக்க துணையாய் நிற்கிறார்கள்.
ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, சிரியா, துருக்கி போன்ற நாடுகளில் தீவிவாதத்துக்கும், தீவிரவாதிகளுக்கும், கொள்ளைக்காரர்களுக்கும், மாபியாகளுக்கும் சிம்ம சொப்பனமாய் விளங்கிக் கொண்டிருக்கும் தனியார் ராணுவம்.
உலகெங்கிலும் உள்ள அரசு மற்றும் வணிக வாடிக்கையாளர்களுக்கு இடர் மேலாண்மை, பாதுகாப்பு, மனிதாபிமான, பயிற்சி, செயல்பாட்டு ஆதரவு சேவை, சிந்தனை தீர்வுகள், பின்னணி விசாரணைகள், சமூக புலனாய்வு கருவிகள், தளவாடங்கள், வாழ்க்கை ஆதரவு, யுஏவி/UAV ஆளில்லாத வானூர்தி (Unmanned aerial vehicle) மற்றும் கே 9 சேவைகள் மற்றும் பலவிதமான ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கிக் கொண்டு இருக்கின்றன.
‘Black wolf consulting limited தனியார் ராணுவத்தில் யார் வேண்டும் என்றாலும் சேரலாம். அவர்களுக்கு ட்ரைனிங் தர, ‘worldclass infrastructure’ கொண்டுள்ள army camp அந்த black cobra தீவு.
7000 சதுர ஏக்கரில் எட்டுக்கும் அதிகமான துப்பாக்கி சுடும் தளங்கள், விமானம் தளம், கார் ஓடு தளம், எட்டு மிகப் பெரிய நீச்சல் குளம், 2000 சதுர ஏக்கர் காடுகளில் ட்ரைனிங், simulation அறைகள், விமானம், கப்பல் மாடல், நானூறு பேர் தங்கும் விடுதிகள், சமையல் கூடம், காய்கரி, பழ தோட்டங்கள் என்று எல்லாமே இருக்கும், ‘நரகம்/HELL’ என்று என்ற பட்ட பெயர் வைத்து அழைக்கப்படும் ராணுவ பயிற்சி தளம்.
இந்த நரகத்தில் ராணுவ வீரனாய் பயிற்சி பெறுவது ஒன்றும் அத்தனை எளிது அல்ல.
சேர வருபவர்கள் முதலில், ‘complete wetting and filter’ செய்யப்படுவார்கள். ஆதி முதல் அந்தம் வரை எல்லா தகவல்களும் முதலில் அலசி ஆராயபடும். பத்து விட்ட சித்தப்பா, காணாமல் போன சிறு வயது நாய் குட்டிவரை உங்களைப் பற்றி நீங்களே அறியாத தகவல்கள் கூடச் இவர்கள்வசம் இருக்கும்.
பிடித்த நடிகை, அரசியல் சார்பு , நீங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிடும் பதிவு உட்பட எல்லாம் கண்காணிக்கப்பட்டு, ஸ்திர தன்மை உள்ளவரா, பூஞ்சை மனம் கொண்டவரா, மனநலம் பாதிக்கப்பட்டவரா, சூழ்நிலை கனத்தை தாங்கக் கூடியவரா போன்றவை மனநல மருத்துவர்களால் அலசி ஆராயபடும்.
யுத்தம் என்பது திட சித்ததையும் கலங்கடித்து விடும் என்னும்போது, எந்தக் கணம் வேண்டும் என்றாலும் கண் முன்னே மரணம் என்பது தனக்கோ, தன்னை சார்ந்த சக வீரர்களுக்கோ நடக்கலாம் என்ற நிலையில் மன உறுதி என்பது தான் வீரனை சிதைந்து போகாமல் காப்பாற்றும்.
இவர்களின் வீரர்களாக நியமிக்கப்பட்டால், செய்யும் வேலைக்கு ஏற்பச் சம்பளம், மரணித்தால் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ், குழந்தைகளின் கல்வி, பெற்றோர்களின் பாதுக்காப்பு என்று எல்லாம் பொறுப்பேற்று கொள்ளப்படும்.
ஆனால், இவர்களின் வீரர்களாய் நியமனம் வாங்குவது அத்தனை சுலபமான விஷயம் இல்லை.
முதல் மூன்று வாரங்களுக்கு இவர்கள் கொடுக்கும் பதினெட்டு மணி நேர ட்ரைனிங் பெயர், ‘kindergarden’.
சின்னக் குழந்தைகள் நிஜ பள்ளிக்கு அனுப்பப்பட்டுவதற்கு முன், பள்ளி எப்படி இருக்கும் என்று என்று சாம்பிள் காட்டுவது, kindergarden வகுப்புகள். அதைப் போல் ராணுவ வீரனாய் இவர்களிடம் வேலைக்குச் சேர்ந்தால், அந்த வாழ்க்கை எத்தகைய நரகமாய் இருக்கும் என்று சாம்பிள் காட்டப்படும் மூன்று வார ட்ரைனிங் வகுப்புக்குப் பெயர் kindergarden.
physical evaluation எனப்படும் உடல் கூறு ஆய்வுகள் மட்டுமே நடத்தப்படும்.
ஒரு நிமிடத்திற்குள் எத்தனை தண்டால், எத்தனை சிட் அப், எத்தனை முறை ஸ்கிப்பிங், எத்தனை மணி நேரம் புஷ் அப், எத்தனை மணி நேரம் தலை கீழாக நிற்பது, ரெண்டு மைல் அதாவது ஏறக்குறைய மூன்றரை கிலோமீட்டரை ஒன்பது நிமிடத்திற்குள் ஓடிக் கடப்பது அதுவும் இருப்பது கிலோவிற்கும் அதிகமான எடை கொண்ட கவச உடை, ஆயுதங்களோடு ஓடி கடப்பது என்று ஒரு நாளைக்கு தொடர்ந்து பன்னிரெண்டு மணி நேரம் என்று பிழிந்து எடுப்பதில், அதைத் தாக்குப்பிடிக்க முடியாமல், ‘துண்டைக் காணோம், துணியைக் காணோம், என்னை விட்டுடுங்க…’ என்று கதறி துடித்து ஓடவில்லை என்றால் அடுத்த கட்ட ட்ரைனிங் போவார்கள்.
இருபது செகண்டுக்கும் குறைவான நேரத்தில் முழு துப்பாக்கியைப் பிரித்து மீண்டும் சேர்த்தல், driving, marksmenship, hand to hand combat, என்று எல்லா விதமான ட்ரைனிங் கொடுக்கப்படும்.
அந்த நரகத்தின் அதிபதி, தலைவன், பாஸ் இந்த ஜாக்கெல். அவனைத் தான் சென்னை பெரியவர் தொடர்ப்பு கொள்ள முயன்றுகொண்டிருந்தார்.
கோடையின் வெப்பத்திலும்,
இரவின் இருளிலும்
நீங்கள் நிம்மதியாகத் தூங்கும்போது,
உங்களைப் பாதுகாக்க நான் விழித்திருக்கிறேன்
நான் விழித்திருக்கிறேன்
எனக்காக நீங்கள் கண்ணீர் விடாதீர்கள்
எங்கோ ஒரு தாய் தன் மகனுக்காக,
கண்களில் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறாள்
குழந்தை தன் தந்தைக்காக
கண்களில் ஏக்கத்துடன் காத்திருக்கிறாள்
மனைவி கணவன் கொடுத்துச் சென்ற
நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள்
அவனுக்குப் பதிலாக ஒரு நாள் ஒரு கடிதம் வந்தது
இதுதான் சொன்னது …
உங்களின் அன்பானவர் இறந்துவிட்டார்
என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறோம் என்று …
இன்று அதே இடத்தில் இன்னொரு வீரன்
நீங்கள் நிம்மதியாகத் தூங்கும்போது,
உங்களைப் பாதுகாக்க விழித்திருக்கிறேன்
எனக்காக நீங்கள் கண்ணீர் விடாதீர்கள்… ‘ என்ற அர்த்தம் தரும் பாடலைப் பாடிக் கொண்டு, பயிற்சியில் ஈடுபட்டு இருந்த வீரர்களுடன் இன்னொரு வீரனாய் தற்காப்பு பயிற்சியில் ஈடுபட்டு இருந்தான் ஜாக்கெல்.
நிச்சயம் நாற்பது வயதிற்கு மேல் இருக்கும். ஆனால், முப்பத்தின் தொடக்கத்தில் இருப்பது போல் இருந்தது அவன் உருவம். ஐந்தடி பத்து அங்குல உயரம். 80 கிலோ எடை. தீவிர போர் பயிற்சிகள் 44-37- 17 என்ற சிக்ஸ் பாக் உடலமைப்பை கொடுத்து இருந்தது.
சட்டென்று பார்க்க, ‘ஆக்ஷன் கிங்’ என்று அழைக்கப்படும் நடிகர், ‘அர்ஜுன் ஷார்ஜா’ உருவ அமைப்பில் இருந்தான் ஜாக்கெல்.
கண்களில் தீட்சண்யம், அதில் இருந்த ஒளிர்வு அவன் ஆபத்தானவன் என்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது.
வெற்று உடம்புடன் வீரர்களுடன் மோதிக் கொண்டிருந்தவனின், உடலில் இருந்த தழும்புகள், துப்பாக்கி குண்டு பாய்ந்த இடங்கள் அவன் பல வருடமாய் மரணத்துடன் விளையாடிக் கொண்டிருக்கிறான் என்பதை சொல்லாமல் சொன்னது.
அன்றைய பயிற்சி முடிந்து, வழக்கம்போல் தற்காப்பு கலையில் யாராலும் வெல்ல முடியாது ஜெயித்தவனை கண்டு, அவன் மாணவர்கள் ஆரவார கூச்சல் எழுப்ப, அதை முகத்தில் எந்த ரியாக்ஷன் காட்டாமல் ஏற்றவன், டவெல் கொண்டு தன் உடம்பில் வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டே பேச ஆரம்பித்தான்.
கணீர் என்று ஒலித்த அந்தக் குரல் சிங்கத்தின் கர்ஜனை போலிருந்தது.
“ஜெப் கூப்பர்’ சொன்னது போல், எந்த நேரத்திலும் ஆபத்து தோன்றக்கூடும் என்பதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டியது அவசியம். எச்சரிக்கையாக இருங்கள். தயாராக இருங்கள். தற்காப்பு என்பது ஒரு நுட்பங்களின் தொகுப்பு மட்டுமல்ல. இது ஒரு மனநிலை. மேலும் நீங்கள் பாதுகாக்கத் தகுதியானவர் என்ற நம்பிக்கையுடன் இது தொடங்குகிறது.
போர் பயங்கரமானது. போரின் கொடூரத்தை வெறும் வார்த்தைகளால் முழுமையாகப் பிடிக்க முடியாது. இதன் பின்விளைவு பல நூற்றாண்டுகளுக்கும் அப்பால் நீடிக்கக் கூடியது. ஆனால், மிகவும் கொடூரமான யுத்தம் மூலமாக மட்டுமே, சில சமயம் மனிதநேயம் பிரகாசிக்க முடியும். மனித நேயத்தை பிரகாசிக்கச் செய்வதே ஒவ்வொரு வீரனின் கடமை.
உண்மையான வீரன் சண்டையிடுவதும், ஆயுதம் தூக்குவதும், தனக்கு முன்னால் இருப்பதை வெறுப்பதால் அல்ல, மாறாக அவன் பின்னால் இருப்பதை நேசிப்பதால் தான்.
வன்முறை சட்டபூர்வமானதல்ல என்றாலும், அது தற்காப்புக்காக அல்லது பாதுகாப்பற்றவர்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்படும்போது, அது கோழைத்தனமான அடிபணியலை விட மிகச் சிறந்த துணிச்சலான செயலாகும்.
வன்முறைக் குற்றங்களைத் தடுக்க வேண்டுமென்றால், அதைச் செய்யக்கூடியவர் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். குற்றவாளி காவல்துறையினருக்கு அஞ்சமாட்டார், நீதிபதி, நடுவர் மன்றத்திற்கும், சிறை தண்டனைக்கும் அஞ்சமாட்டார்கள். ஆகவே, பயப்படுவதற்கு குற்றவாளிகளுக்குக் கற்பிக்க வேண்டியது நமது கடமையாகும்.
நாம் தடுப்பது அழிப்பது எல்லாம் சமூகத்தின் விஷ கிருமிகளைத் தான். இந்த மிருகங்களுக்கும், அப்பாவி பொது மக்களுக்கும் இடையே நிற்பது நாம் மட்டும் தான் என்பதை மறக்க வேண்டாம்.
பொது மக்களுக்கு ஆயிரம் கடமைகள் உண்டு. ஆனால், நமக்கு இருக்கும் ஒரே கடமை, ‘அவர்களைக் காப்பாற்றுவது’ ஒன்று தான். நீங்கள் காப்பாற்றும் இந்த மக்கள் யார், என்ன என்று எதுவுமே நமக்குத் தெரிய வேண்டியதில்லை. ஆனால் ஒரு வீரனாய் உங்கள் கடமை, உயிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் உயிரைக் காப்பது ஒன்று தான்.
தினம் தினம் பயிற்சி, குடும்பத்தைப் பிரிதல், கண் காணாத இடத்தில், வசதிகள் குறைவான இடத்தில், மரணம் துரத்தும் யுத்த களத்தில் நிற்பது சாதாரண விஷயம் இல்லை. பணம் இதை நிர்ணயிக்க முடியாது. பொது மக்களால் வீரனின் வாழ்வை வாழாதவரை அவனும், அவன் குடும்பமும் செய்யும் தியாகத்தை, அதன் அரிச்சுவடியை கூடப் புரிந்து கொள்ள முடியாது தான்.
சிப்பாய் தான் இராணுவம். எந்த இராணுவமும் அதன் வீரர்களைவிடச் சிறந்தது அல்ல. ஒவ்வொரு வீரனும் ஒரு நாட்டின் குடிமகனும் கூட. உண்மையில், குடியுரிமையின் மிக உயர்ந்த கடமையும், சலுகையும் ஒருவர் நாட்டிற்கு ஆயுதங்களைத் தாங்குவது மட்டுமே ஆகும்.
மரண பயதை வெல்வது என்பது எல்லோராலும் முடியாது. ‘கோழைகள்’ இறப்பதற்கு முன்பு பல முறை இறக்கின்றனர். ஆனால், வீரனுக்கோ மரணம் என்பது கூடச் சன்மானம் தான். வீரனின் உடல் தூசியில் தூங்கினாலும், அவர்களின் துணிச்சல் ஒருபோதும் இறக்காது. அவர்களின் தைரியம் ஆயிரம் உயிருள்ள வீரனை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
உலகம் ஒரு ஆபத்தான இடமாகும், தீமை செய்பவர்களால் அல்ல, ஆனால் அதைத் தடுக்க எதையும் செய்யத்தவர்களால் தான். நாம் தடுக்கிறோம். சில நேரங்களில் துப்பாக்கியை மற்றவர்களைக் கீழே வைக்கும் படி செய்ய, நீங்கள் துப்பாக்கியை எடுக்க வேண்டி இருப்பது தவிர்க்க முடியாதது.
ஒரு நாட்டின் பாதுக்காப்பு என்பது அதன் ராணுவமோ, ஆயுதங்களோ இல்லை. அதன் பொது மக்கள் தான். இந்த உண்மையைப் பொதுமக்கள் உணராத வரை, அவர்களைக் காப்பது வீரனான நம் கடமை.” என்ற அவன் கேட்டு அங்கிருந்தவர்களின் மனதில், நாடி நரம்புகளில் எழுந்த வீரத்தை, துணிவை, மனதைரியத்தை வார்த்தைகள் கொண்டு விவரிக்க முடியாது தான்.
அத்துடன் அன்றைய வகுப்பு முடிந்து தன் அறைக்கு வந்தவனை வரவேற்றது சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்த அழைப்பு.
“சென்னைக்கு சம்யுக்தாவை, பார்க்கப் போனவுடன் என்னை மறந்தாகி விட்டது. எங்கே காணாமல் போனீங்க என்று உங்களைத் தேட ஒரு குழு அனுப்ப வேண்டுமோ என்று நினைத்தேன்… அதிசயமாய் மூன்று வாரம் கழித்து, என்ன காத்து என் பக்கம் வீசுது?” என்றது ஜாக்கெல் நக்கலுடன்.
“ஆமா இங்கே இருக்கும் நிலையில் பைத்தியம் பிடிக்காதது ஒன்று தான் குறை. சம்யுக்தாவை பார்க்க வந்த இடத்தில், அவ திருமண ஏற்பாட்டில் கலந்து கொள்ளும் நிலை எனக்கு”என்றார் அவர் சலிப்புடன்.
“என்னது சம்யுக்தாவிற்கு திருமணமா? மாப்பிள்ளை யாரு விக்ரமா?… பல்தேவிற்கு பெண்மேல் அப்படியே பாசம் பொங்கி, திருமணம் எல்லாம் ஏற்பாடு செய்துட்டாரா என்ன?… உலகம் அழிய போகுது.” என்றான் ஜாக்கெல் சிரிப்புடன்.
“ஆமா அந்த ஆளுக்கு அப்படியே பாசம் பொங்கிட்டாலும்… அந்தாள் ஏற்பாடு செய்யலை. சம்யுக்தா ஏற்பாடு செய்திருந்தா… மாப்பிள்ளை விக்ரமும் இல்லை. அவ காதலிச்ச ஈஸ்வர்.” என்றார் அந்தப் பெரியவர்.
“வாட்!… சம்யுக்தாவை மணக்கப் போவது ஈஸ்வரா?” என்ற ஜாக்கெல் குரலில் உட்சபட்ச திகைப்பு. தான் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து நின்று விட்டான்.
“எனக்கு நம்ம ஆட்கள் கிட்டேயிருந்து அது மாதிரி எந்தத் தகவலும் வரலையே…” என்றான் ஜாக்கெல் குழப்பத்துடன்.
“ரகசியமாய் எல்லா ஏற்பாடும் செய்திருக்கு அந்தப் பெண். கோயிலுக்குள் நுழைந்த பிறகு தான் மாப்பிள்ளை பையனுக்கே இந்த ஏற்பாடு பத்தி தெரிய வந்தபோது, உங்களுக்கு எப்படி தகவல் வரும்.?” என்றார் அவர்.
“ஹ்ம்ம்… இண்டெர்ஸ்ட்டிங். சம்யுக்தா கிட்டே இந்த அதிரடியை எதிர் பார்க்கவில்லையே!… .பல்தேவ் பத்தி ஏதாவது அவளுக்குத் தெரிஞ்சுடுச்சா என்ன?… .தன் தந்தை எத்தனை உத்தமர், நல்லவர், வல்லவர் என்பது?… வாய்ப்பு இல்லையே!… அந்தாள் சரியான குள்ளநரி ஆச்சே!
அப்புறம் என்ன ஆச்சு… பல்தேவ், விக்ரம் எப்படி ரியாக்ட் செய்தாங்க?… இன்னேரம் துப்பாக்கி வெடித்து இருக்குமே!… அப்படி வெடித்ததாகத் தகவல் வரவில்லையே!… ஈஸ்வர் உயிரோடு இருக்கானா… இல்லை டிக்கெட் வாங்கிட்டானா?” என்றான் ஜாக்கெல்.
“ஹ்ம்ம்!… பல்தேவ் ஆட்கள் துப்பாக்கி தூக்காமல் இருந்தால் தானே அதிசயம்!. தூக்கினாங்க. சம்யுக்தா, ஹேமா நடுவே வந்துட்டாங்க. இப்போ எல்லோரையும் கோவாக்கு அழைத்திருக்கிறான் அந்த ஆள். சென்னைக்குள்ளேயே ஈஸ்வரையும், அவன் நண்பர்களையும் போட்டுத் தள்ள லாரி ரெடி செய்தார். சம்யுக்தா உடன் இருந்ததால், இப்போதைக்கு அவன் உயிர் தப்பித்து இருக்கான்.” என்றார் அவர்.
“அப்போ சீக்கிரம் கல்யாண விருந்து எதிர்பார்க்கலாம் என்று சொல்லுங்க.” என்றான் ஜாக்கெல்.
“கோவாவில் திருமணம், ரிசெப்சன் என்று ஏமாற்றி பலி கடாவை வெட்டக் கூட்டி போயிருக்கார். இதுக்கு நடுவுல இன்னொரு பிரச்சனை.
இத்தனை வருஷமாய் பல்தேவ்வுக்கு ஒரு குடும்பம் இருப்பதை மறைத்து வந்தோம் இல்லையா!… அதை அந்த எமகாதகன் சத்ரு கண்டு பிடிச்சு சம்யுக்தாவுக்கு குறி வச்சுட்டான்.
கோயிலிலிருந்து சம்யுக்தாவை தூக்க அவன் ஆட்கள் வந்துட்டாங்க. வழக்கம்போல் அவங்களை பொய்யான தகவல் கொடுத்து டைவர்ட் செய்து இருக்கேன். ஆனால், எத்தனை நாளுக்கு ஏமாற்ற முடியும் என்று தெரியலை. அதற்குள் சம்யுக்தாவை காப்பாற்றணும்.” என்றவர் அதுவரை தனக்கு தெரிந்த அனைத்தையும் சொல்லி முடிக்க, எதிர்பக்கம் இருந்து எந்தச் சத்தமும் வரவில்லை.
“சத்ருஜித் விஷயத்தில் என்னால் உனக்கு உதவ முடியும். சத்ருஜித் சம்யுக்தாவை எதுவும் செய்யும் முன் காக்க என்னால் முடியும். ஆனால், தேஜ் விஷயம் என்னை மீறிய ஒன்று. அவன் உள்ளே வந்து விட்டால், ஆட்டம் அவன் போக்குக்குத் தான் செல்லும். பல்தேவை போட்டுத் தள்ள அவனும் காத்து கொண்டு தான் இருக்கிறான். தேஜ் நியாயவாதி. அது உனக்கே தெரியும்.
உனக்கு ஒரு ஆப்சன் தான் இருக்கிறது. யார் சம்யுக்தாவின் வாழ்வில் வராமல் இருக்க வேண்டும்? சத்ருஜித்தா இல்லை தேஜ்ஜா? முடிவு செய்துட்டு சொல்லு.” என்றான் ஜாக்கெல் பெருமூச்சுடன்.
சிறிது கூட யோசிக்காமல் அந்தப் பெரியவர், “சத்ருஜித்!…” என்றார்.
“ஓஹ்!… தெரிந்த தேஜ் என்ற பேயே, தெரியாத சத்ருஜித் என்ற அரக்கனை விட மேல் என்கிறாயா?” என்றான் ஜாக்கெல் சிரிப்புடன்.
“தேஜ் எனக்கு மகன் போன்றவன். ” என்றவரை இடை மறித்தது ஜாக்கெல் சிரிப்பு.
“ஆமா சின்னக் குழந்தை அவன். தொட்டிலில் போட்டுத் தாலாட்டுங்க. நேத்து ராத்திரியிலிருந்து ஒட்டுமொத்த தமிழக காவல் துறையைக் கதி கலங்க வச்சிட்டு இருக்கான். அவன் வளர்த்த ஹோமம் தான் ஹாட் டாபிக். தமிழகத்தில் பரணி ஆட்டம் க்ளோஸ்.
உங்க மகன் தன் ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டான். இதுக்காக தானே பதினைந்து வருடமாய் காத்து இருக்கான். ஒவ்வொரு செங்கலாய் சத்ரு, ஜோக்ராஜ் சாம்ராஜ்யத்தை அழிக்க ஆரம்பித்து விட்டான். இனி அதன் உச்ச கட்டம் தான் பாக்கி. அதுக்கும் வேலை செய்துட்டு தான் இருக்கான்.” என்றான் ஜாக்கெல்.கேலி செய்வது போல் குரல் இருந்தாலும் அதில் இருந்தது ஒரு குருவின் பெருமை.
யுத்த களத்தில் அர்ஜுனனின் போர் திறமையை கண்டு, அவன் காண்டீபத்தின் திறமை கண்டு எந்த அளவிற்கு பீஷ்மர், துரோணாச்சாரியார் பெருமை கொண்டார்களோ, அதே பெருமை இவன் குரலில்.
அதற்கு சற்றும் குறையாத பெருமையுடன் ஒலித்தது அந்த பெரியவரின் குரல்.
“அவன் செய்வது எதுவாய் இருந்தாலும் அது சரியாகத் தான் இருக்கும். ஒரு குடும்பம் நன்றாய் இருக்க வேண்டும் என்றால் அதில் ஒருவனை பலி கொடுக்கலாம். ஒரு கிராமம் நன்றாய் இருக்க ஒரு குடும்பத்தைப் பலி கொடுக்கலாம். ஒரு நாடு நன்றாய் இருக்க, ஒரு கிராமத்தையே பலி கொடுக்கலாம்.
யுத்தம் என்று வரும்போது, யுத்த கலத்தில் நிற்க்கும்போது அங்குப் பந்தம், பாசம், பொது மக்களின் நியாயம், தர்மம் எல்லாம் வேலைக்கு ஆகாது என்பது இன்னமும் புரியவில்லை என்றால் நான் மனித பிறவியே இல்லை. யுத்த நியதிகள் வேறு பட்டவை.
என் நாட்டிற்காக என்றோ என் குடும்பத்தை இழக்க துணிந்த நான், அதே நாட்டிற்க்காகச் சம்யுக்தாவை தான் தியாகம் செய்ய மாட்டேனா என்ன? போர்க்களத்தில் ராணுவ வீரன் இறப்பை தியாகமாக அவனின் குடும்பம் எடுத்துக் கொள்வது போல், சம்யுக்தாவும் தன்னை சுற்றி நடப்பதை புரிந்து கொள்ளும் காலம் வரும்.
ஆனால், இது உயிர் பிரச்சனை என்றால் சரி. சம்யுக்தாவின் மனம் அல்லவா இதில் ஈடுபட்டு இருக்கு. ஈஸ்வர் இழப்பை அவளால் தாங்க முடியுமா? ” என்றார் அந்த வயதானவர் பெருமூச்சுடன்.
“தாங்கித் தான் ஆகணும். வேறு வழியில்லையே!… யுத்தத்தில், ‘collateral damage’ என்று சம்யுக்தாவை போல், அப்பாவி ஜீவன்கள் இடையில் சிக்குவதை தடுக்க முடியாது தான்.
பல்தேவை கொண்டு தான் சத்ருஜித் சாம்ராஜ்யத்தை அழிக்க முடியும். பல்தேவ்வுக்கு, ‘acheeles ஹீல்’ சம்யுக்தா தானே!… சோ பல்தேவ், சத்ருஜித்துக்கு எதிரியாக வேண்டும் என்றால், சம்யுக்தாவை பலி கொடுத்துத் தான் ஆக வேண்டும். சம்யுக்தா ஒருத்தியின் வாழ்வை நாம் பார்த்தால், எத்தனை லட்சம் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்களோ!.
சம்யுக்தாவிற்கு பல்தேவ், சத்ருஜித் பற்றி உண்மை தெரிய வந்து, நடந்து கொண்டிருக்கும் இந்த யுத்தத்தில் முடிவு எடுக்க வேண்டிய நிலை சம்யுக்தாவிற்கு வந்தால், அவளைக் காக்க நான் துணை இருப்பேன். சம்யுக்தா போகும் இடம் சத்ருஜித்துக்கு தெரிய விடாமல், குழப்பும் வேலையை நீங்கச் செய்யுங்க. சம்யுக்தா கையில் கிடைக்காமல் போகப் போகத்தான் சத்ருஜித் தவறான முடிவுகள் எடுப்பான்.
சம்யுக்தா அவன் கையில் சிக்கியிருக்கிறாள் என்ற மாயை பல்தேவிற்கு உருவாக்கினால் போதும். அதுக்கு சத்ரு சம்யுக்தாவை தேடும் தகவல் பல்தேவ் காதுக்குப் போக வேண்டும்.
சம்யுக்தா ஒருவேளை தேஜ்ஜையும், நம்மையும் மீறி அவனிடம் சிக்கி கொண்டால், எப்படி மீட்பது என்று பிளான் போட்டு வைக்கிறேன். எல்லாத்துக்கும் தயாராய் இருப்போம்.” என்றவர் அழைப்பைத் துண்டிக்க, காரை ஓட்டிக் கொண்டிருந்த பெரியவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
அதே சமயம் விமான நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த காரில் இருந்த சம்யுக்தா விடாமல் விக்ரம் மொபைலுக்கு அழைத்துக்கொண்டிருந்தாள்.
தன் தந்தையை சமாளிக்க விக்ரம் என்ற நண்பனின் துணை அவளுக்குத் தேவை என்றே பட்டது. தன்னை விட, தன் தந்தைக்கு மிக நெருங்கியவன் விக்ரம். அவன் எடுத்துச் சொன்னால், தந்தை புரிந்து கொள்வார் என்றே தோன்றியது சம்யுக்தாவிற்கு.
நேரம் ஆகஆக அடி மனதில் பயமானது பேயாட்டம் ஆட ஆரம்பித்துக் கொண்டிருக்க, எப்பொழுதும் இதுபோல் பயம், கலக்கம் தோன்றும் சமயங்களில் விக்ரம் என்ற நண்பனைத் தான் சம்யுக்தாவின் மனம் தேடி சென்றது.
அழைப்புகள், sms, வாட்ஸாப்ப், வாய்ஸ் மெசேஜ் என்று எல்லாவற்றையும் அனுப்பி கொண்டிருந்தாள். விக்ரம் அதையெல்லாம் பார்க்கிறான் என்பதை மொபைல் நீல குறியீடு காட்டினாலும் விக்ரம் சம்யுக்தாவிற்கு பதில் அளிக்கவில்லை.
விமானத்தில் தனி அறையில் கையில் பிடித்து இருந்த மொபைலில் சம்யுக்தாவின் சிரித்த முகம் டிஸ்பிலேவாக இருக்க, ‘wife calling’ என்று அவன் சேமித்து வைத்திருந்த பெயரானது ஒளிர, விக்ரமின் கண்களிலிருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
கைக்கு அருகில் இருந்த சொர்க்கம், கை நழுவி போனபின் அழுது கொண்டிருந்தான் விக்ரம்.
‘முன்னரே சம்யுவிடம் பேசி இருந்தால்!…
காதலை சொல்லி இருந்தால்!…
மனதை திறந்து காட்டி இருந்தால்!…
தயக்கத்தை மீறி இருந்தால்!….
பிறகு என்று தள்ளிப் போடாமல் இருந்திருந்தால்!….’ என்று இருந்தால்கள் காலம் கடந்து, மனதிற்குள் ஓட, உடைந்து சிதறி இருந்த இதயம், நெஞ்சில் வலியை ஏற்படுத்த, மூச்சு விடவும் முடியாமல் திணறினான் விக்ரம்.
உலகில் கத்தியின்றி, ரத்தமின்றி, ஆயுதம் எதுவுமின்றி ஒரு உயிரைச் சிறுக சிறுக கொல்லும் அதி சக்தி வாய்ந்த ஆயுதம் காதல் தோல்வி தான். எத்தனை வெற்றிகள் பெற்றாலும், இந்த ஒரு தோல்வி வாழ்வின் கடைசி மூச்சு வரை உள்ளுக்குள் இருந்தே அரித்து கொண்டு தான் இருக்கும்.
வாழும் போதே நரகத்தில் மனிதன் வதை பட வேண்டும் என்று தானோ, இந்தக் காதலையும், பிரிவையும் படைத்தவன் ஏற்படுத்தினான்!.
தினம் ஆயிரம் லைலா, மஜுனுக்களை, ரோமியோ, ஜூலியெட்க்ளை உருவாக்கி, சொர்க்கத்தை கையில் கொடுத்து, உயிர் பலியை சர்வ சாதாரணமாய் கேட்கும் மரண விளையாட்டு தான் காதலோ!… உலகில் இதனால், இதற்காகப் போன உயிர்கள் கணக்கில் அடங்காது தான்.
அந்த நிலையில் விக்ரமை தான் நிறுத்தி இருப்பதை சம்யுக்தா அறியவில்லை.
“என்னவாம்?…”என்றான் செல்வம், சம்யுக்தாவின் தொடர் அழைப்புக்களை பார்த்து விட்டு ஈஸ்வரிடம்.
பெருமூச்சு விட்ட ஈஸ்வர், “வழக்கம்போலத் தான். மிஸ்டர் பாடிகார்டுக்கு தான். பல்தேவை சமாளிக்க அவன் ஒருவன் தானே இருக்கான்… அதான் விடாமல் அவனை அழைக்க ட்ரை செய்துட்டு இருக்கா…” என்றான் ஈஸ்வர் செல்வத்தின் காதோரம்.
“ஹ்ம்ம்… ஆமா, காதலிக்கறவ திருமண கோலத்தில் இன்னொருத்தனுடன் நிற்பதை காண மனசு அப்படியே எப்படி குளுகுளுன்னு இருக்கும் தெரியுமா?” என்றான் செல்வம் ஏளனமாக.
“செல்வம்!…” என்ற ஈஸ்வர், வேண்டாம் என்பது போல் செல்வத்தை நோக்கித் தலை அசைக்கவும் செய்தான்.
“ஆமா, அப்படியே விம், சபீனா போட்டு விளக்கிச் சொல்லிட்டாலும் இவளுக்குப் புரிய போவது மாதிரி தான். இவளே குதிரை மாதிரிக் கண்கள் இருபுறமும் பளைண்டெர்ஸ் போட்டுட்டு போறவ…. கூடப் பழகும் ஒருவன் எப்படி பழகுகிறான் என்பது கூடப் புரியாமல் இருக்கும் கூமுட்டை. அந்த விக்ரம் கண்ணில் இவளுக்கான காதல் இருப்பதை கூட அறியாதவ இவ… அட போடா…” என்றான் செல்வம் அலுத்து கொண்டு.
செல்வம் கூறியது உண்மை என்று எண்ணி பார்த்த ஈஸ்வரின் பார்வை சம்யுக்தா மேல் படிய, அப்பொழுதும் விடாமல் முயன்று கொண்டிருக்கும் சம்யுக்தாவை எண்ணி பார்த்து, பெருமூச்சு ஒன்று அவனிடமிருந்து வெளி வந்தது.
“சம்யு!… விக்ரம் கோபத்தில் இருப்பான் டா… அவனாய் கால் செய்வான். ஸ்ட்ரெஸ் ஆகாதேமா… உன்னை விட்டு எங்கே சென்று விடப் போகிறான்!… ரிலாக்ஸ். உன் அப்பாவை நாம சமாளிக்கலாம்டா…
மாமனார் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்து, ‘இந்தத் தேவதை பெண்ணை எனக்குக் கொடுத்துடுங்க மாமா… ப்ளீஸ்!…’ என்று கெஞ்சிடுறேன் சரியா?… இப்போ சிரி… என் பேபி இப்படி உம்முன்னு இருந்தா நல்லவா இருக்கு?… டூத் பேஸ்ட் விளம்பரத்துக்குச் சிரிப்பது போல் சிரிக்க வேண்டாமா என் செல்லம்… சிரி பேபி… நான் இருக்கேன் டா. ” என்ற ஈஸ்வர் சம்யுவை அணைத்து சம்யுக்தா உச்சியில் இதழ் பதித்து.
‘என் அப்பா உன்னை இருக்க விடுவாரா?’ என்ற சந்தேகம் சம்யுவின் மனதில் பூதாகாரமாய் எழ, கண்ணை மூடி ஈஸ்வரின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
கண்ணை மூடிக் கொண்டால் மட்டும், எதிரில் இருப்பது இல்லாமல் போய் விடுமா என்ன?
விதி இது தான் ட்ரைலர் தான். மெயின் படமே இனி தான் உன் வாழ்வில் இருக்கிறது என்று ஆரம்பித்தது.
ஒரு பக்கம் மகளைக் காக்க நான்கு பேரைக் கொல்ல தயங்காத பல்தேவ்.
இன்னொரு பக்கம் எத்தனை உயிரை வேண்டும் என்றாலும் பலி கொடுத்தாவது சம்யுக்தாவை அடைய துடிக்கும் சத்ருஜித்.
இவர்களைப் பற்றி அறியாமல் பலியாடு கசப்பு கடைக்காரனை நோக்கி வெட்டப்பட போகும் ஆட்டு கூட்டம்போல் ஈஸ்வரும் அவன் நண்பர்களும்.
இன்னொரு பக்கம் சம்யுக்தாவை காக்க என்று உதவி கோரிய அந்தப் பெரியவர்.
சம்யுக்தாவை காப்பேன் என்று வாக்கு கொடுத்து இருக்கும் தனியார் ராணுவ நிறுவன தலைவன் ஜாக்கெல்.
எல்லோரையும் இணைக்கும் புள்ளியாய், அச்சாணியாய் சம்யுக்தா.
இவர்கள் போடும் பிளான் எல்லாவற்றையும் மொத்தமாய் மாற்ற, சம்யுக்தா சத்ருஜித்திடம் வகையாய் சிக்க வைக்கப் போகும் புயலொன்று அந்தக் கணம் இந்தியாவின் எல்லை பகுதியில் மய்யம் இட்டு இருந்தது.
அந்தப் புயல் அழகான புயல்.
கவர்ச்சி புயல்.
தன் வீச்சால் பலரின் வாழ்வை அழித்த புயல் அது.
அந்த அழிவு சக்தியின் பெயர் நிஷா தல்வார்.
தல்வார் என்றால் கத்தி, வாள் என்று பொருள்.
இந்தக் கத்தி அழகான, ஆபத்தான கத்தி தான். யாரின் கழுத்தை பதம் பார்க்க என்பதை காலம் தான் சொல்ல முடியும்.
ஆட்டம் தொடரும்…