நினைவு – 20

eiE6SA598903-955def15

நினைவு – 20

கடிகாரத்தின் டிக் டிக் என்ற ஓசை மாத்திரம் அந்த அறையில் எதிரொலிக்க அங்கே நின்று கொண்டிருந்த அனைவரது மனங்களுமோ வெவ்வேறு வகையான சிந்தனையில் மூழ்கிப் போய் இருந்தது.

அர்ஜுனின் குழம்பிய தோற்றத்தைப் பார்த்து வருண் பதட்டத்துடன் தன் கையை பிசைந்து கொண்டு நிற்க வைத்தியர் இளங்கோ அவனது அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்க கூடும் என்று எதிர்பார்ப்போடு பார்த்துக் கொண்டு நின்றார்.

அங்கே நின்று கொண்டிருந்த இரு பெண்களின் முகத்தையுமே சிறிது நேரம் மாறி மாறி பார்த்து கொண்டு இருந்த அர்ஜுன் தான் அமர்ந்திருந்த கட்டிலில் இருந்து மெல்ல இறங்கி அவர்கள் இருவருக்கும் முன்னால் சென்று நின்று கொண்டான்.

தன் மனம் கவர்ந்த பிரியாவின் தோற்றத்தை ஒத்த ஒரு பெண் ஒரு புறம், அதே நேரம் அவனது மனதை சஞ்சலம் செய்யும் வகையில் அவளருகில் நின்று கொண்டிருந்த புதியவள் மறுபுறம் என் நின்று கொண்டிருக்க அர்ஜுனின் பார்வையோ தன் மனதை சஞ்சலம் செய்யும் அந்த கன்னியின் மேலேயே நிலைத்திருந்தது.

விஷ்ணுப்பிரியா அவனை நிமிர்ந்து பார்க்கவும் முடியாமல் தலை குனிந்து நிற்கவும் முடியாமல் அவஸ்தையான ஒரு நிலையில் நின்று கொண்டிருக்க மறுபுறம் அவளருகில் நின்று கொண்டிருந்த ஹரிணிப்பிரியாவோ கண்கள் கலங்க அவனை கண் சிமிட்டாது பார்த்துக் கொண்டு நின்றாள்.

அவன் மேல் தனக்கு இத்தனை சீக்கிரமே காதல் வந்து விட்டதா என்று அவளால் அதிர்ச்சியடைய முடியவில்லை மாறாக இந்த காதல் காலம் காலமாக தொடர வேண்டுமே என்ற ஆவல் தான் பரவி இருந்தது.

கண்டதும் காதல் அல்லது ஒருவரது கடந்த காலத்தைப் பற்றி தெரிந்து கொண்ட பின்பு வரும் சட்டென்ற காதல் உணர்வு எல்லாம் இரு பாலாருக்கும் பொருந்துமாம் அது போலதான் அர்ஜுனைப் பற்றி எதுவுமே தெரியாமல் அவனைப் பார்த்த போது உருவான சலனம் எப்போது அவனைப் பற்றி தெரிந்து கொண்டாலோ அப்போதே காதலாக மாறி விட்டது.

அவன் சித்த பிரமையில் இருக்கும் போதே தன்னை அடையாளம் கண்டு அவனது காதலை ஒவ்வொரு நொடியும் வெளிப்படுத்தினான் அப்படியிருக்கையில் இப்போது எல்லாம் சரியான சூழ்நிலையில் அவனது காதல் மாறி இருக்காது, இருக்கவும்கூடாது என்ற எண்ணம் தான் அவளது மனதிற்குள் விடாமல் ஓடிக் கொண்டிருந்தது.

அதேநேரம் அர்ஜுனின் மனதிற்குள் விஷ்ணுப்பிரியாவை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தாலும் அவன் கால்களோ ஹரிணியின் முன்னால் வந்து நின்று அந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்பது போல சண்டித்தனம் செய்தது.

தன் மனதிற்குள் எழுந்த எண்ணத்தோடு ஹரிணியைத் தயங்கி தயங்கி பார்த்து கொண்டு நின்றவன் இறுதியாக
“சில்லு!” என்று அழைக்க அவனது குரலைக் கேட்கத்தான் காத்திருந்தேன் என்பது போல சட்டென்று அவனை தாவி இறுக அணைத்து கொண்டவள் அவனது முகமெங்கும் முத்த மழை பொழிய சுற்றிலும் நின்று கொண்டிருந்த அனைவரும் சிறிது சங்கடத்துடன் தங்கள் பார்வைகளை வேறு புறமாக திருப்பிக் கொண்டனர்.

அவளது திடீர் செய்கையில் சிறிது அதிர்ச்சியாகி நின்றவன் உடனே தன்னை சரி செய்து கொண்டு அவளைத் தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்த அவளோ அவனை குழப்பமாக நிமிர்ந்து பார்த்தாள்.

“அர்…”

“உஸ்ஸ்ஸ்ஸ்!” ஹரிணியின் இதழில் தன் ஒற்றை விரலை வைத்தவன் அவளது கண்களையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்க அவனது கண்களோ அவனையும் அறியாமல் ஒரு துளிக்கண்ணீரை சிந்தியது.

எந்த நிலையிலும் மறக்காமல் அர்ஜுனுக்குள் ஆழமாகப் பதிந்து போன அவனது காதல் இப்போதும் அதே நிலையில் அவனது மனதை சூழ்ந்து கொள்ள கால்களும்,கைகளும் தடுமாற அவளது முகத்தை தன் கைகளில் ஏந்திக் கொண்டவன்
“ப்ரி..ப்ரியா! என்னோட ஹரிணிப்பிரியா?” கேள்வியாக நோக்க அவனைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்துக் கொண்டவள் மீண்டும் அவனை தன்னோடு சேர்த்து இறுக அணைத்து கொண்டாள்.

அவர்களது அந்த உணர்ச்சிகரமான காதல் பார்வை பரிமாற்றத்தை பார்த்து எல்லோரும் மெய்மறந்து நிற்க முதலில் தன்னை நிதானப்படுத்திக் கொண்ட வைத்தியர் இளங்கோ
“க்கும்! அர்ஜுன்! இது ஹாஸ்பிடல்!”சிறு கண்டிப்போடு கூறவும்

அவரது குரலில் சட்டென்று தன் அணைப்பை விலக்கிக் கொண்டவன்
“ஸாரி டாக்டர்!” என்றவாறே இயல்பான புன்னகையுடன் ஹரிணியின் அருகில் மறுபுறமாக வந்து நின்று கொண்டான்.

“அர்ஜுன் இப்போ உங்க கேள்விக்கு பதில் கிடைச்சதா? உங்க பிரியாவை கண்டு பிடிச்சுட்டீங்களா?”

“ஆமா டாக்டர் என் பிரியாவோட கண்ணு இன்னும் என் மனதை விட்டு போகல, போகவும் போகாது”என்றவாறே ஹரிணியின் புறம் திரும்பியவன் அவளருகில் நின்று கொண்டிருந்த விஷ்ணுப்பிரியாவை அப்போதுதான் நன்றாக கவனித்து பார்த்தான்.

அவளது முகத்தை பார்த்து சிறிது அதிர்ந்து போனவன் சட்டென்று ஹரிணியை திரும்பி பார்க்க அவனது பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவளாக அவனது கரத்தைப் பற்றிக் கொண்டவள் எதுவும் பேசாமல் சற்று ஆதரவாக அவனது கரத்தை அழுத்திக் கொடுக்க அந்த அழுத்தத்தில் அவளைப் பார்த்து சிறிது புன்னகைத்துக் கொண்டவன்
“இவங்க யாரு?” விஷ்ணுப்பிரியாவை சுட்டிக் காட்டி கேட்க

“ஹரிணியோட தங்கை விஷ்ணுப்பிரியா!” வருண் முந்திக்கொண்டு அர்ஜுனின் கேள்விக்கு பதில் அளித்திருந்தான்.

கொஞ்சம் கொஞ்சமாக ஏதோ புரிந்து கொண்டது போல தன் தலையை ஆமோதிப்பாக அசைத்த அர்ஜுன் வைத்தியர் இளங்கோவின் புறம் திரும்பி
“டாக்டர் நான் பிரியா கூட கொஞ்ச நேரம் பேசலாமா?” கேள்வியாக நோக்க

சிறிது நேரம் தன் தாடையை நீவி விட்டு கொண்டவர்
“ஓகே அர்ஜுன் பட் எல்லா விடயங்களையும் ஒரே நாளில் தெரிந்து கொள்ளணும்னு ரிஸ்க் எடுக்க வேண்டாம் புரிந்ததா?” என்று கேட்கவும் அவரைப் பார்த்து சரியென்று தலையசைத்தவன் ஹரிணியின் கையை பிடித்து கொண்டு அவளது முகத்தை ஏக்கத்துடன் திரும்பி பார்த்தான்.

அவர்கள் இருவரது முகத்தையும் பார்த்து விட்டு பெருமூச்சு விட்டபடியே வருண்
“அர்ஜுன் நீ ஹரிணியோட பேசிட்டு வா நாங்க வெளியே இருக்கோம்” என்றவாறு கிருஷ்ணாவையும், விஷ்ணுப்பிரியாவையும் வெளியே வரும் படி ஜாடை காட்ட அவர்களும் அமைதியாக அவனைப் பின் தொடர்ந்து சென்றனர்.

ஒரு நாள், இரண்டு நாட்கள் அல்ல மொத்தமாக ஏழு வருடங்கள் தன் நண்பனின் நிலையை எண்ணி நித்தமும் தனக்குள்ளேயே நொறுங்கி போய் இருந்தவன் வருண்.

இப்போது அவனது ஏழு வருடக் காத்திருப்பின் பயன் கண் முன்னால் நடந்து விட்டதை எண்ணி சந்தோஷத்துடன் தன் முகத்தை மூடிக்கொண்டவன் குலுங்கி குலுங்கி அழ விஷ்ணுப்பிரியா மற்றும் கிருஷ்ணா பதட்டத்துடன் அவனை நெருங்கி வந்து நின்று கொண்டு
“வருண் சார் என்ன ஆச்சு? எதற்காக அழுவுறீங்க?” என்று கேட்க

அவர்களது குரலில் தன் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு நிமிர்ந்து பார்த்தவன்
“இது கவலையில் வர்ற கண்ணீர் இல்லை கிருஷ்ணா! ஆனந்தக் கண்ணீர்! ஏழு வருடங்களாக அர்ஜுனோட நிலைமையை பார்த்து தினம் தினம் நான் நொந்து போயிட்டேன் ஒரு கட்டத்தில் அவனை சரி பண்ண முடியாதோன்னு கூட நான் விரக்தி அடைந்த நிலைக்கு போயிட்டேன் சின்ன வயதில் இருந்தே எனக்கு அர்ஜுன்னா ரொம்ப இஷ்டம் அவனைப் பார்த்து தான் நான் சின்ன சின்ன விடயங்களை கூட சரியாக செய்யணும்னு ஆசைப்படுவேன் எனக்கு ஒரு சின்ன குழந்தை மாதிரி தான் அவன் அவனோட இந்த நிலைமையைப் பார்த்து அம்மா, அப்பாவும் சரி நானும் சரி வருத்தப்படாத நாளே இல்லை இன்னைக்கு அது எல்லாம் சரியாக போய் பழைய படி அவன் என்னை பார்த்து பேசி சிரித்தது எல்லாம் பார்த்து எனக்கு ரொம்ப எமோஷனல் ஆகிடுச்சு அர்ஜுன் முன்னாடி நான் அழுதால் அவன் தாங்க மாட்டான் அது தான் எல்லாவற்றையும் பொறுமையாக இழுத்து பிடித்து வைத்திருந்து வெளியே வந்ததும் கொட்டிட்டேன் வேறு எதுவும் இல்லை!” இயல்பாக புன்னகைத்த படியே கூறவும் அவனது அந்த பாச உணர்வைப் பார்த்து மற்றைய இருவரும் வாயடைத்து போய் நின்றனர்.

உடன் பிறந்தவர்களையே சரியாக கவனித்துக் கொள்ளாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று பலர் இருக்கும் இந்த காலத்தில் அந்த எண்ணவோட்டத்தை பொய்யாக்குவது போல இன்னமும் ஒன்றிரண்டு பேர் இருக்கிறார்கள் என்பதை வருண் மூலமாக கிருஷ்ணா மற்றும் விஷ்ணுப்பிரியா இன்று கண்டு கொண்டனர்.

இங்கே அறையின் வெளியே நின்று கொண்டிருந்த மூவரும் ஏதோ ஒரு சந்தோஷமான மனநிலையில் நின்று கொண்டிருக்க மறுபுறம் அறையின் உள்ளே நின்று கொண்டிருந்த அர்ஜுன் மற்றும் ஹரிணிப்பிரியா என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வில் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு நின்றனர்.

தன் காதல் தன் கண் முன்னால் மொத்தமாக தவிடு பொடியாகிப் போன அந்த நாளின் தாக்கத்தில் தன் கண்களை இறுக மூடி கொண்டவன் சிறிது நேரம் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு ஹரிணியின் முன்னால் வந்து நின்று கொண்டான்.

“சில்லு!” அவனது அந்த ஒற்றை அழைப்பில் ஏதேதோ எண்ணங்கள் அலை பாய அவனை நிமிர்ந்து பார்த்தவள்

“அர்ஜுன் நான்… நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று கூற

அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவன்
“எனக்கும் உன் கிட்ட கேட்க வேண்டியது நிறைய இருக்கிறது முதல்ல வந்து இப்படி உட்காரு” என்றவாறே அங்கிருந்த இருக்கையில் அவளை அமரச் செய்து விட்டு அவளருகில் சிறிது இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டான்.

“சொல்லு பிரியா அன்னைக்கு என்ன ஆச்சு? உனக்கு ஆக்சிடென்ட் ஆனதைப் பார்த்தது வரைக்கும் தான் எனக்கு தெரியும் அதற்கு அப்புறம் என்ன நடந்தது என்று எதுவுமே எனக்கு தெரியல ஏதோ தூக்கத்தில் இருந்து விழித்தது போல இருக்கு டாக்டர் தான் அந்த ஆக்சிடென்ட் நடந்து ஏழு வருடங்கள் முடிந்து போச்சுன்னும் இவ்வளவு நாள் நான் சித்த பிரமை பிடித்தாற் போல இருந்தேன்னும் சொன்னாங்க அதை கேட்டதில் இருந்து என் மனசே சரியில்லை! என்னை அந்த நிலைமையில் ஏழு வருடங்களாக பார்த்து நீ ரொம்ப கஷ்டப்பட்டு இருப்ப இல்லை?” அர்ஜுனின் கேள்வியில் கண்கள் கலங்க அவனை நிமிர்ந்து பார்த்தவள்

‘எனக்கு உங்களை பற்றி சொல்லவே இன்னொரு ஆள் தேவைப்பட்டாங்கன்னு நான் உங்க கிட்ட எப்படி சொல்லுவேன் அர்ஜுன்? எனக்கு எதுவுமே நினைவு இல்லை என்கிற விடயத்தை நீங்க எப்படி தாங்கிக் கொள்ளுவீங்க அர்ஜுன்?’ மனதிற்குள் தன் நிலையை எண்ணி கண்ணீர் வடித்தவளாக அவனைப் பார்த்து இடம் வலமாக தலை அசைக்க

அவனோ
“என்ன ஆச்சு பிரியா?” குழப்பத்தோடு அவளைப் பார்த்து வினவினான்.

“அர்.. அர்ஜுன் நான் சொல்ல போற விடயத்தை நீங்க எப்படி எடுத்துக் கொள்ளுவீங்கன்னு எனக்கு தெரியாது ஆனா இந்த விஷயத்தை உங்க கிட்ட கண்டிப்பாக சொல்லியே ஆகணும் ஆனால் நான் சொல்ல போற விடயத்தை கேட்டு நீங்க ஓவரா எமோஷனல் ஆகக்கூடாது நான் பொறுமையாக தான் எல்லாம் சொல்லுவேன் அதே மாதிரி நீங்களும் பொறுமையாக இருக்கணும் ப்ளீஸ்”

“சரிம்மா நான் எமோஷனல் ஆகாமல் நீ சொல்லுறதைக் கேட்கிறேன் நீ சொல்லு”

“அது அர்ஜுன்…வந்து நான் எனக்கு நீங்க…”

“பிரியா! எதற்கு இப்படி பதட்டமாக இருக்க? நான் நீ என்ன சொன்னாலும் உன் கூடவே தான் இருப்பேன் நீ பயப்படாமல் சொல்லு” அர்ஜுன் ஹரிணியின் கரத்தை ஆதரவாக அழுத்திக் கொடுத்தபடியே கூறவும் தன் உதட்டை கடித்து கொண்டு கண்களை மூடி தன்னை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் பின்னர் மெல்ல தன் இமைகளைத் திறந்து கொண்டு அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“அன்னைக்கு ஆக்சிடென்ட் ஆனதோ, அதற்கு முன்னாடி என் வாழ்க்கையில் என்ன நடந்ததோ எனக்கு எதுவுமே நினைவு இல்லை அர்ஜுன் எனக்கு நினைவு இருக்கிறது எல்லாம் நான் ஹாஸ்பிடலில் வைத்து கண் விழித்த பிறகு என்னை சுற்றி இருந்தவங்க சொன்ன விடயங்கள் மட்டும் தான்”

“அப்…. அப்படின்னா?”

“எனக்கு உங்களை, உங்க கூட பழகியது எதுவுமே ஞாபகம் இல்லை வருண் அண்ணா சொல்லி தான் எனக்கு எல்லாம் தெரியும்” ஹரிணி சொன்ன இறுதி வசனத்தை கேட்டு அர்ஜுனின் கரங்கள் சட்டென்று அவளது கரங்களில் இருந்து விலகிக் கொண்டது.

“அர்ஜு…”

“மேலே சொல்லு!”

“அர்ஜுன் நான் ஆரம்பத்திலேயே உங்களை எமோஷனல் ஆக வேண்டாம்னு சொன்னேன் தானே?”

“நான் எமோஷனல் ஆகல நீ மேலே சொல்லு!”

“அன்னைக்கு ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் போது பஸ் ஸ்டாண்டில் வைத்து தான் நான் உங்களை பார்த்தேன் அப்போ நீங்க யாருன்னு எனக்கு தெரியாது ஆனாலும் உங்களைப் பார்த்த நேரம் மனதுக்கு ஏனோ நெருடலாக இருந்தது அன்னைக்கு முழுவதும் உங்களைப் பற்றியே யோசித்துட்டு இருந்தேன் அதற்கு அப்புறம் அதை மறந்துட்டேன் மறுபடியும் திரும்ப உங்களை வருண் அண்ணாவோட ஹோட்டலில் வைத்து தான் பார்த்தேன்”

“அங்கேயும் தற்செயலாக தான் வந்தியா?” அர்ஜுனின் கேள்வியில் இப்போது ஹரிணியின் தலை தானாக கவிழ்ந்து கொண்டது.

தனக்கும், வருணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்த விடயத்தை பற்றி தெரிந்து கொண்டால் அர்ஜுன் என்ன நினைப்பான்? இது எல்லாம் அவனுக்காகத் தான் செய்தது என்று தெரிந்தாலும் அதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

அவனைப் பற்றி இன்னொரு நபர் மூலமாக தான் தெரிந்து கொண்டேன் என்ற விடயத்தை சொன்ன போதே அவனால் அதை இலகுவாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை அப்படியிருக்கையில் இந்த விடயத்தை அவன் தாங்கிக் கொள்ளுவானா? என்ற குழப்பத்தோடு ஹரிணி தன் கை விரல்களை பிரிப்பதும், கோர்ப்பதுமாக இருக்க சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டு இருந்த அர்ஜுன் அவளது கரங்களுக்கு நடுவில் மீண்டும் தன் கரத்தை வைத்து பிடித்து கொள்ள அவனது செய்கையில் சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவனைத் தாவி அணைத்துக் கொண்டாள்.

“ஹேய் பிரியா! ரிலாக்ஸ்! அதற்கு அப்புறம் என்ன நடந்தது சொல்லு” அவனது கூற்றில் மீண்டும் மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் வருணை எதற்காக அங்கே சந்திக்க சென்றாள் என்பது முதல் அர்ஜுனைப் பற்றி தெரிந்து கொண்ட பின்பு அந்த நினைவுகளை திரும்பவும் கொண்டு வர தான் முயற்சி செய்ததில் இருந்து இப்போது அவனை சரி செய்ய முயற்சி செய்தது வரை கூறி முடிக்க அப்போதுதான் அர்ஜுனும் அவளை நன்றாக கவனித்து பார்த்தான்.

அவளுக்காக தன் காதலை சொல்லும் கணத்தில் கொடுக்க வேண்டும் என்று ஆசை ஆசையாக அவன் வாங்கிய சேலை இப்போது அவளைத் தழுவி இருந்தது.

எல்லா விடயங்களையும் கேட்ட பின்னர் அதை உள்வாங்கி கொள்ள அவனுக்கு சிரமமாக இருந்தாலும் வெகு சிரமப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை தனக்குள்ளேயே கிரகித்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தவன் ஒவ்வொரு விடயமாக தனக்குத்தானே சொல்லி கொடுத்த படி அவற்றை தனக்குள் சேகரித்துக் கொண்டான்.

இளங்கோ அவனுக்கு சிகிச்சை அளித்த நேரத்தில் கூட அவனிடம் இந்த முறையை பின்பற்றும் படியே சொல்லி இருக்க அதையை இப்போதும் பின்பற்றியவன் எல்லா விடயங்களையும் நன்றாக விளங்கி எடுத்துக் கொண்டு தன் மனதிற்குள் நீண்ட நேரமாக அரித்துக் கொண்டிருந்த கேள்வியை ஹரிணியைப் பார்த்து வினவினான்.

“உனக்கு எதுவுமே ஞாபகம் வரலயா பிரியா?” அர்ஜுன் என்னதான் அந்த கேள்வியை இயல்பாக கேட்க முனைந்தாலும் அவனையும் மீறி அவனது குரல் தழுதழுக்கவே செய்தது.

“நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துட்டேன் அர்ஜுன் எனக்கு எதுவுமே ஞாபகம் வரல வருண் அண்ணா சொன்ன விடயங்கள் மட்டும் தான் ஞாபகம் இருக்கு அதற்காக அவங்க சொன்னதை எல்லாம் நம்பித் தான் நான் இவ்வளவு தூரம் எல்லாம் பண்ணேன்னு இல்லை உங்க காதல்! அது தான் எனை இந்தளவிற்கு அழைத்து வந்திருக்கு! பழைய விடயங்கள் எனக்கு ஞாபகம் வருமான்னு தெரியல ஆனாலும் உங்களை விட்டு என்னால் போக முடியாது அது மட்டும் நிஜம்!” ஹரிணியின் தனக்கு எதுவுமே நினைவில்லை என்ற பதிலில் அர்ஜுனின் மனதிற்குள் சொல்லமுடியாத ஒரு வலி பரவினாலும் அவனது காதல் தனக்கு போதும் என்ற அவளது கூற்றில் தன்னை இயல்பாக மாற்றிக் கொண்டவன்

“பரவாயில்லை பிரியா மறுபடியும் நீ எனக்கு கிடைத்ததே போதும்” என்று விட்டு

“ஆனா உன் முகம் ரொம்ப மாறிடுச்சே எப்படி? உன் தங்கச்சி தான் உன்னை மாதிரியே இருக்கா!” எனவும்

அவனைப் பார்த்து இயல்பாக புன்னகைத்துக் கொண்டவள்
“நீங்களும் அவளைப் பார்த்து நான் தான்னு நினைத்தீங்களா?” என்று கேட்க அவனோ அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தான்.

“நான் நீங்க இரண்டு பேரும் ஒன்றாக வந்து நின்றதும் இரண்டு பேரையும் பார்த்தது என்னவோ உண்மைதான் ஆனால் என் கண்ணு உன்னை விட்டு விலகல! அதுதான் உன் கிட்ட வந்து நின்று பார்த்தேன் உன் கண்ணு! எப்போதும் என் மனதில் ஆழமாக பதிந்து போன விடயம் அதற்கு அப்புறம் உன் குரல்! எத்தனை பெரிய கூட்டத்தில் நின்றாலும் எனக்கு உன் குரல் மட்டும் சரியாக கேட்கும் அது தான் நான் உன் மேல் வைத்து இருக்கும் காதல்! உன் முகம் வேணும்னா மாறி இருக்கலாம் ஆனால் நான் உன் மேல் வைத்திருக்கும் காதல் அது கண்டிப்பாக நம்மை சேர்த்து வைக்கும்ன்னு எனக்கு எப்போதும் நம்பிக்கை இருக்கு!” அர்ஜுன் காதல் ததும்ப பேசிக் கொண்டு இருக்க

அவனையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தவள்
“அர்ஜுன் எனக்கு பழைய விடயங்கள் எதுவுமே ஞாபகம் வரலன்னா என்ன பண்றது?” என்று கேட்க

சிறிது நேரம் தன் கன்னத்தில் தட்டியபடியே யோசித்து பார்த்தவன்
“இதை எல்லாம் அப்படியே தூக்கிப் போட்டுட்டு போக வேண்டியது தான்” என்று கூற அவளோ அதிர்ச்சியாக அவனைத் திரும்பிப் பார்த்தாள்……

Leave a Reply

error: Content is protected !!