நினைவு – Epilogue

நினைவு – Epilogue
ஏழு வருடங்களுக்கு பிறகு…..
வருண் மற்றும் அர்ஜுன் எப்போதும் போல அவர்கள் இருவரது அறைக்கும் பொதுவாக இருக்கும் பால்கனியில் ஒருவர் மேல் ஒருவர் காலைப் போட்ட படி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க அவர்கள் இருவரதும் பாசத்துக்குரிய காதல் மனைவிகள் விஷ்ணுப்பிரியா மற்றும் ஹரிணிப்பிரியா தங்கள் இடுப்பில் கை வைத்து கொண்டு அவர்கள் இருவரையும் கோபமாக முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றனர்.
“பார்த்தியா ஹரிணி இவங்க இரண்டு பேரையும்? இன்னும் கொஞ்ச நாளில் அறுபதாம் கல்யாணம் பண்ணிக்க போற வயசாகுது ஆனா இன்னும் சின்ன குழந்தைங்க மாதிரி ஒருத்தர் மேல ஒருத்தர் காலைப் போட்டுட்டு இங்க வந்து படுத்து தூங்கிட்டு இருக்காங்க! எல்லாம் காலக் கொடுமை!” விஷ்ணுப்பிரியா தன் தலையில் அடித்து கொள்ளாத குறையாக புலம்பியபடி நிற்க
அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டு நின்ற ஹரிணி அர்ஜுன் அருகில் மண்டியிட்டு அமர்ந்து கொண்டு
“அர்ஜுன்! அர்ஜுன்! எழுந்திருங்க அர்ஜுன்! இன்னைக்கு கோவிலுக்கு போகணும்னு நேற்று நைட்டே சொல்லி இருந்தேனே எழுந்திருங்க அர்ஜுன்!” என்றவாறே அவனை உலுக்க அவனோ எந்தவொரு மாற்றமும் இன்றி தான் உறங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே உறங்கிக் கொண்டிருந்தான்.
“இது சரி வராது! இப்படி பாசமாக எல்லாம் சொன்னால் நம்ம வீட்டுக்காரருக்கு கேட்காது” ஹரிணியைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவாறே தன் கணவரின் அருகில் அமர்ந்து கொண்ட விஷ்ணுப்பிரியா
“டேய் வருண்! இப்போ நீ எழுந்திருக்கலைன்னா உன் உயிருக்கு பல சேதாரங்கள் வரும் சொல்லிட்டேன்” என்றவாறே அவனது தலை முடியை பிடித்து இழுக்க
அடுத்த கணமே
“அய்யோ! அம்மா!” என அலறியபடி வருண் பதறியடித்து கொண்டு எழுந்து அமர்ந்தான்.
“ஏன்மா விஷ்ணு இப்படி..”
“ஹேய்!”
“ஓகே சாரி சாரி! விஷ்ணுப்பிரியா மேடம்! ஏன்மா விஷ்ணுப்பிரியா உன் வீட்டுக்காரரை காலங்காத்தால நீ இப்படி தான் வந்து எழுப்புவியா?”
“வீட்டுக்காரர்னா அதற்கு ஏற்ற மாதிரி நடந்துக்கணும் இன்னும் சின்ன பசங்க மாதிரி இங்கே வந்து இப்படி தூங்கிட்டு இருக்கீங்க? உங்க பசங்களையே பாருங்க உள்ளே ரூமில் பெட்டில் எவ்வளவு அழகாக தூங்குறாங்க நீங்களும் தான் இருக்கீங்களே! இரண்டு குழந்தைங்களுக்கு அப்பான்னு சொன்னா நம்புவாங்களா யாரும்?”
“அது எங்க பர்சனாலிட்டி மேடம்! என்றும் இளமை!”
“அடச்சை! முதலில் எழுந்திருங்க கோவிலுக்கு போகணும்! இன்னைக்கு நம்ம கல்யாண நாள் அதாவது ஞாபகம் இருக்கா?”
“ஓஹ் நல்லா நினைவு இருக்கே! வருஷா வருஷம் வரும் மறக்க முடியாத துக்க தினம்!” முதலில் சொன்ன வார்த்தைகளை நன்கு சத்தமாகவும் இறுதியாக சொன்ன வசனங்களை வெகு அமைதியாகவும் வருண் கூறவும்
“என்ன? என்ன சொன்னீங்க?” விஷ்ணுப்பிரியா அவனை முறைத்து பார்த்தபடியே கேட்க
“ஒண்ணும் இல்லை தாயே!” என்றவாறே அவளை பார்த்து தன் கையை எடுத்து கும்பிட்டவன் தங்கள் அருகே கேட்ட ஹரிணியின் குரலில் தன் மனைவியை பாவமாகப் பார்த்து கொண்டு இருந்தான்.
“அர்ஜுன் கண்ணா! என் தங்கம் தானே எழுந்திருங்க! எழுந்திருங்க அர்ஜுன்!” ஹரிணி பாசமாக அர்ஜுனை தட்டி எழுப்புவது போல் சத்தம் கேட்கவே விஷ்ணுப்பிரியாவின் அருகில் வந்த வருண்
“உங்க அக்காவை பாரு எவ்வளவு பாசமாக, அன்பாக அர்ஜுனை எழுப்புறான்னு! ஒரு நாள் இப்படி பாசமாக என்னை எழுப்பி இருப்பியா?” தன் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு கேட்கவும்
“அப்படியா? கொஞ்சம் அங்கே பாருங்க சார்!” என்றவாறே அவள் அவனது முகத்தைத் திருப்ப அங்கே அவன் கண்ட காட்சியில் அவனது கண்கள் இரண்டும் அதிர்ச்சியில் விரிந்து போனது.
தண்ணீர் சொட்ட சொட்ட தூக்கம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து வெடவெடத்துப் போய் இருந்த அர்ஜுனுக்கு அருகில் கையில் தண்ணீர் காலியான ஜார் ஒன்றுடன் புன்னகை முகமாக நின்று கொண்டிருந்த ஹரிணி
“அர்ஜுன் கண்ணா! எழுந்திருங்க! நேரமாகுது இல்லை எழுந்திருங்க!” என்று கூற
அதைப் பார்த்து வாயைப் பிளந்த வண்ணம் அமர்ந்திருந்த வருணின் தோளில் தட்டிய விஷ்ணுப்பிரியா
“ஏன்ங்க உங்களையும் தினமும் இவ்வளவு பாசமாக எழுப்பி விடவா?” என்று கேட்கவும்
அவளைப் பார்த்து அவசரமாக மறுப்பாக தலையசைத்தவன்
“எனக்கு இதுவே போதும்!” என்று விட்டு அந்த இடத்தை விட்டு விட்டால் போதும் என்பது போல ஓடி விட அவனைப் பின் தொடர்ந்து விஷ்ணுப்பிரியாவும் அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.
முழுவதும் தண்ணீரில் நனைந்து போய் தன் மனைவியை அர்ஜுன் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருக்க சிறு புன்னகையுடன் அவனின் முன்னால் முழங்காலிட்டு அமர்ந்து கொண்ட ஹரிணி
“இன்னைக்கு என்ன நாள்ன்னு கூட நினைவு இல்லாமல் அப்படி என்ன உங்களுக்கு தூக்கம்? உங்க ஞாபக மறதியைப் போக்கத் தான் இந்த சின்ன ட்ரீட்மெண்ட் எப்படி நம்ம ஐடியா?” தன் இல்லாத சட்டைக் காலரை உயர்த்தி விட
அவளைப் பார்த்து தன் அனைத்து பற்களும் வெளியே தெரியும் படி சிரித்த அர்ஜுன்
“நீங்க யாரு? தனியாக ஒரு பேஃசன் அன்ட் டிசைனிங் கம்பெனியை நடத்தும் ஆளாச்சே! உங்க கிட்ட இவ்வளவு புத்திசாலித்தனத்தை எதிர்பார்க்கலேன்னா எப்படி மேடம்?” என்று விட்டு அவளது தலையில் நங்கென்று கொட்ட அவளோ வலியில் தன் தலையை தேய்த்து விட்டபடியே அவனது தோளில் பட்டென்று அடித்து வைத்தாள்.
“என்னையே அடிக்குறியா? இன்னைக்கு உன்னை என்னை பண்ணுறேன் பாரு!” என்றவாறே அர்ஜுன் கோபமாக அந்த இடத்தில் இருந்து எழுந்து கொள்ளப் போன வேளை கீழே கொட்டிக் கிடந்த நீரில் அவனது கால் வழுக்கி விடவே அதற்கிடையில் அந்த இடத்தில் இருந்து எழுந்து ஓடத் தொடங்கிய ஹரிணி அவனைத் திரும்பிப் பார்த்து சத்தமாக சிரிக்கத் தொடங்க அவனது கோபம் இன்னும் அதிகமாக ஆரம்பித்தது.
“ஏய் சில்லு! உன்னை! இரு வர்றேன்!” அர்ஜுன் தண்ணீரில் வழுக்கிய தன் கால்களை ஒருவழியாக சமநிலைப் படுத்திக் கொண்டு ஹரிணியை விரட்டிக் கொண்டு ஓடத் தொடங்க அவளோ அவனது கைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் அந்த பால்கனி முழுவதும் ஓடி அவனுக்கு போக்கு காட்டி கொண்டு நின்றாள்.
ஒருவழியாக அவளை விரட்டி பிடித்து தன் இரு கைகளுக்கு இடையிலும் அவளை சிறை செய்து கொண்டவன்
“காலையில் இப்படி தான் உன் ஹஸ்பண்டை தூக்கத்தில் இருந்து எழுப்பி விடுவ போல! பரவாயில்லை கஷ்டமோ, நஷ்டமோ, சுகமோ, துக்கமோ எதுவாக இருந்தாலும் கணவன் மனைவி இருவருக்கும் சரிபாதி தான்! அதனால…” என்றவாறே அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள
“ஐயோ அர்ஜுன்! ப்ளீஸ்பா வலிக்குது விடுங்கபா! கோவிலுக்கு போகணும் லேட் ஆகுது அர்ஜுன் ப்ளீஸ்பா! பசங்க எந்திரிச்சுடப் போறாங்க!” ஹரிணி அவன் அணைப்பில் இருந்து விலக முயன்றபடியே கூறவும் அவளைப் பார்த்து வாய் விட்டு சிரித்துக் கொண்டவன் அவளது கன்னத்தில் சட்டென்று அழுந்த முத்தமிட்டான்.
அவனது அந்த திடீர் முத்தத்தில் தன் விழிகள் இரண்டும் குடை போல் விரிய அர்ஜுனைப் பார்த்து கொண்டிருந்த ஹரிணியின் மறு கன்னத்திலும் அழுத்தமாக தன் இதழைப் பதித்தவன் மெல்ல மெல்ல அவள் முகமெங்கும் தன் இதழ் முத்திரையை பதிக்கத் தொடங்கினான்.
அவனது ஒவ்வொரு இதழொற்றுதலிலும் ஹரிணியின் முகம் குங்குமப்பூவின் நிறத்தை தத்தெடுத்து கொள்ள அவளது வெட்கத்தில் கிறங்கிப் போனவனாய் அவளது இதழ்களை நோக்கி குனிந்தவன் அவள் கண்களை பார்க்க அவளோ அவனது பார்வை வீச்சை தாளாமல் தன் இமைகளை மூடிக் கொண்டாள்.
சிறிது நேரம் அர்ஜுன் தன் இதழில் தவழ்ந்த குறு நகையுடன் அவளைப் பார்த்து கொண்டு நிற்க ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வில் மெல்ல தன் இமைகளை திறந்து கொண்ட ஹரிணி அவனது குறும்பு தவழும் முகத்தைப் பார்த்து
“அர்ஜுன்!” சிறு சிணுங்கலுடன் அவனது தோளில் தட்டவும்
சிரித்துக் கொண்டே அவளது இடையை சுற்றி தன் கைகளை படர விட்டவன்
“நான் ஆரம்பத்தில் சொன்ன மாதிரி கணவன் மனைவி இருவருக்கும் இடையே எந்த பாகுபாடும் இருக்க கூடாதாம் அதனால..” என்றவாறே தன் தலையை சிலுப்ப அவனது தலையில் இருந்து நீர்த்திவளைகள் ஹரிணியின் முகத்திலும், சேலையிலும் பரவலாக தெறித்தது.
“ஐயோ அர்ஜுன் என்ன பண்ணுறீங்க?”
“உன்னையும், என்னையும் ஒரே நிலைக்கு கொண்டு வர்றேன் சில்லு”
“என்கிட்ட இதற்கு எல்லாம் நீங்க சேர்த்து வாங்கப் போறீங்க அர்ஜுன்!”
“அதை வாங்கும் போது பார்த்துக்கலாம் இப்போ கொடுக்குற வேலையை பார்த்தால் போதும்” என்று விட்டு அவளை தன் அணைப்பில் இருந்து விடுவித்தவன்
அவளை மேலிருந்து கீழாக பார்த்து விட்டு
“இப்போ தான் பர்பக்டா இருக்கு! வரட்டா மை டியர் சில்லு!” என்றவாறே அவளது கன்னத்தில் மீண்டும் ஒரு முறை முத்தமிட்டு விட்டு அங்கிருந்து சென்று விட அவளோ அவனை கோபமாக முறைக்க முயன்று முடியாமல் புன்னகையுடன் பார்த்து கொண்டு நின்றாள்.
தங்களுக்கு திருமணம் நடந்து அதற்கிடையில் ஏழு வருடங்கள் முடிந்து விட்டது என்பதை அவளால் இன்னமும் நம்பமுடியவில்லை.
நேற்று தான் அர்ஜுனை அந்த பேருந்து நிறுத்தத்தில் வைத்து சந்தித்தது போல இருந்தது அதற்கிடையில் அவனைக் காதலித்து, திருமணமும் செய்து இரண்டு பிள்ளைகளுக்கு அன்னையாகவும் ஆகி விட்டோம் என்பதை நினைத்துப் பார்க்கும் போதே அவளுக்கு அத்தனை பிரம்மிப்பாக இருந்தது.
அவர்கள் அளவில்லா காதலின் சின்னமாக கடவுள் அவர்களுக்கு கொடுத்த அன்பளிப்பு தான் ஆறு வயது நிரம்பிய அவர்கள் செல்ல மகன் ஆர்யா மற்றும் மூன்று வயது நிரம்பிய செல்ல மகள் ஹாஸினி.
அர்ஜுன் மற்றும் ஹரிணியின் அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத காதல் ஒரு புறம் இருக்க மறுபுறம் வருண் மற்றும் விஷ்ணுப்பிரியாவின் கலாட்டாவான காதலும் அரங்கேறிக் கொண்டு தான் இருந்தது.
அவர்கள் காதலின் அடையாளமாக அவர்களுக்கும் இரு குழந்தைகள் இருந்தனர்.
ஐந்து வயது நிரம்பிய வர்ஷா எனும் செல்ல மகளும், இரண்டு வயது நிரம்பிய வினித் எனும் செல்ல மகனும் தான் அவர்களது காதலின் அடையாளம்.
விஷ்ணுப்பிரியா தன் கல்லூரி படிப்பை முடித்து விட்டு தற்போது பிரபலமான ஒரு வழக்கறிஞராக சேவையாற்றிக் கொண்டிருக்க ஹரிணிப்பிரியா சொந்தமாக ஒரு ஃபேஷன் டிசைனிங் கம்பெனியை நடத்தி வருகிறாள்.
தங்கள் இரு மருமகள்களினதும் வாழ்க்கை பாதைக்கும் சரி, தங்கள் இரு மகன்களினதும் வாழ்க்கை பாதைக்கும் சரி சாவித்திரி மற்றும் ராமநாதன் எப்போதும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.
சாவித்திரி மற்றும் ராமநாதனுக்கு மட்டுமின்றி மாணிக்கம் மற்றும் ஜெயலஷ்மிக்கு கூட அர்ஜுன் மற்றும் வருணின் குழந்தைகள் தான் உலகமாகிப் போயினர்.
ஒரு நாள் தங்கள் பேரக்குழந்தைகளை பார்க்காமல், பேசாமல் அவர்களுக்கு இருக்க முடியாது அந்தளவிற்கு அந்த குழந்தைகள் அவர்களுக்கு மிகவும் முக்கிய அங்கமாகிப் போயினர்.
இன்று விஷ்ணுப்பிரியா மற்றும் ஹரிணிப்பிரியா தங்கள் ஏழாம் வருட திருமண நிறைவை முன்னிட்டு குல தெய்வ கோவிலுக்கு போவதற்காக குழந்தைகளை எல்லாம் தயார் படுத்தி விட்டு தங்கள் வளர்ந்த குழந்தைகளை தூக்கத்தில் இருந்து எழுப்பி விட வந்த வேளை தான் இத்தனை களேபரம் நடந்து முடிந்திருந்தது.
இந்த ஏழு வருடங்களில் என்னென்னவோ மாற்றங்கள் நடந்திருப்பினும் ஒரு விடயம் மட்டும் மாறவில்லை அது தான் அர்ஜுன் மற்றும் வருணின் நட்பு.
அந்த நட்பின் ஆழத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியாது என்பது தான் உண்மை.
ஹரிணி தன் பழைய நினைவுகளில் தன்னை மறந்து நின்ற வேளை
“ஹரிணி எங்கே இருக்க? சீக்கிரமாக வா!” விஷ்ணுப்பிரியா சத்தம் போட அவசரமாக தன் சிந்தனைகளில் இருந்து வெளி வந்தவள் வேகமாக தயாராகி ஹாலை நோக்கி விரைந்து சென்றாள்.
அர்ஜுன் மற்றும் வருண் இருவருமே பேபி பிங்க் நிறத்தில் சர்ட் மற்றும் நீல நிற பேண்ட் அணிந்து நிற்க விஷ்ணுப்பிரியாவும் தன் கணவரின் சட்டை நிறத்தினை ஒத்த நிறத்திலான சேலை அணிந்து நின்றாள்.
வருணோடு பேசிக் கொண்டே தற்செயலாக படியிறங்கி வரும் ஹரிணியின் புறம் திரும்பிய அர்ஜுன் எப்போதும் போல காதல் பெருக அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான்.
மஞ்சள், செம்மஞ்சள் மற்றும் பிங்க் நிறம் கலந்த ஷிஃபான் சேலை அணிந்து எளிமையான அலங்காரத்துடன் நடந்து வந்த தன் மனைவியை பார்த்ததும் புன்னகை முகமாக அவள் முன்னால் வந்து நின்றவன்
“எத்தனை தடவை பார்த்தாலும் இப்போ தான் உன்னை முதல் தடவை பார்ப்பது போல இருக்கு சில்லு அது எப்படி?” என்று கேட்கவும்
அவனைப் பார்த்து வெட்கத்துடன் தன் தலையை குனிந்து கொண்டவள்
“போங்க அர்ஜுன்!” என்றவாறே அவனைத் தாண்டி சென்று விட
அவனருகில் வந்து அவனது தோளில் கையை போட்டு கொண்ட வருண்
“எத்தனை வருஷம் போனாலும் நீ மட்டும் உன் காதலிலும், நட்பிலும் மாறவே இல்லைடா! இப்படியே எப்போவும் இரு!” என்று கூறவும் அர்ஜுன் எப்போதும் போல தன் முகத்தில் மாறாத புன்னகையுடன் தன் நண்பனை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றான்.
பெரியவர்களும், குழந்தைகளும் சந்தோஷமாக தங்கள் பிரயாணத்தை ஆரம்பிக்க சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் அவர்களது குலதெய்வக் கோவிலை வந்து சேர்ந்திருந்தனர்.
கோவிலில் வழக்கமான பூஜைகள் மற்றும் சம்பிரதாயங்களை முடித்து விட்டு எல்லோரும் கேம்பிங் செல்வதாக முடிவெடுத்து இருக்கவே அங்கேயிருந்து எல்லோரும் கிளம்பி சென்று விட அர்ஜுன் மற்றும் ஹரிணி மாத்திரம் சிறிது நேரம் கழித்து அவர்களுடன் இணைந்து கொள்வதாக கூறி விட்டு அவனது வண்டியில் ஏறி வேறு ஒரு புறமாக புறப்பட்டு சென்றனர்.
அவன் எங்கே தன்னை அழைத்தச் செல்கிறான் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும் என்பதனால் தாங்கள் எங்கே போகிறோம் என்று அவனிடம் அவள் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.
அதற்கு காரணம் தங்கள் முதலாம் வருட திருமண நிறைவு நாள் அன்று அவன் செய்தது இன்னமும் அவளுக்கு நினைவு இருப்பது தான்.
ஆறு வருடங்களுக்கு முன்பு…
தங்கள் முதலாம் திருமண நாள் அன்று காலையில் முதல் வேலையாக கோவிலுக்கு சென்று பூஜைகளை முடித்து விட்டு அர்ஜுன் ஹரிணியை வெளியே ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்வதாக சொல்லி விட்டு அழைத்துச் செல்ல அவனோடு வண்டியில் ஏறிய நொடி முதல் தாங்கள் எங்கே செல்கிறோம் என்று அவனிடம் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தாள்.
அவள் கேட்ட கேள்விக்கு எல்லாம் அவனிடம் இருந்து வந்த பதில் வெறும் புன்னகை மாத்திரமே.
ஒரு நிலைக்கு மேல் கேள்வி கேட்டு ஓய்ந்து போன ஹரிணி கோபமாக தன் முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருக்க அவளது ஒவ்வொரு அசைவுகளையும் வண்டியின் பக்க கண்ணாடி வழியாக பார்த்து கொண்டு இருந்த அர்ஜுன் இறுதியாக தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை வந்தடைந்து ஹரிணியைத் திரும்பி பார்க்க அவளோ அவனை குழப்பமாக பார்த்து கொண்டு நின்றாள்.
ஏதோ ஒரு கல்லூரியின் பேருந்து நிறுத்தத்திற்கு எதற்காக அர்ஜுன் தன்னை அழைத்து வர வேண்டும் என்ற எண்ணத்தோடு ஹரிணி அவனைத் திரும்பிப் பார்க்க அவளது குழப்பம் நிறைந்த முகத்தை பார்த்து சிறிது புன்னகைத்துக் கொண்டவன் அவளது தோளில் கையை போட்டு அழைத்து கொண்டு சென்று அந்த பேருந்து நிறுத்தத்தின் இருக்கையில் அமரச் செய்து விட்டு அவளருகில் நெருக்கமாக அமர்ந்து கொண்டான்.
“சில்லு! இது என்ன இடம்ன்னு ஞாபகம் இருக்கா?”
“ஏதோ ஒரு காலேஜ் பஸ் ஸ்டாப்! இங்கே எதற்காக என்னைக் கூட்டிட்டு வந்தீங்க? கல்யாண நாள் அதுவுமா எங்கே எங்கே எல்லாமோ போவாங்க ஆனால் நீங்க சம்பந்தமே இல்லாமல் இங்கே கூட்டிட்டு வந்து இருக்கீங்க!”
“சம்பந்தம் இருக்கு சில்லு”
“அப்படின்னா?”
“அப்படின்னா இந்த காலேஜ் தான் நான் படிச்ச காலேஜ்! இந்த பஸ் ஸ்டாண்டில் தான் நான் தினமும் என் சில்லு கூட லவ்ஸ் பண்ண இடம்! இந்த பஸ் ஸ்டாண்டில் வைத்து தான் நம்ம இரண்டு பேர் வாழ்க்கையும் மாறிப் போன இடம்!”
“அர்ஜுன்!”
“இந்த இடத்தை கண்டிப்பாக உனக்கு யாரும் சொல்லி இருக்க மாட்டாங்கன்னு எனக்கு தெரியும் ஏன்னா தேவையில்லாத மனக்கஷ்டம் வரும்ன்னு நினைத்து இருப்பாங்க ஆனால் இந்த இடத்தில் கஷ்டங்களை விட நம்ம கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த காதல் நினைவுகள் நிறைய இருக்கு! அதனால்தான் நம்ம கல்யாண நாள் அதுவுமா இந்த இடத்திற்கு உன்னை கூட்டிட்டு வரணும்னு ஆசைப்பட்டேன்!”
“எனக்கு பழைய விடயங்கள் மறந்து போனதை நினைத்து நான் ஒரு நாளும் கவலைப்பட்டதில்லை அர்ஜுன் ஆனா இப்போ கவலைப்படுறேன்! நான் உங்களை எப்படி எல்லாம் காதலித்தேன்னு எனக்கு நினைவு வந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்னு இப்போ தோணுது!”
“ஹேய்! நீ இப்படி ஃபீல் பண்ணா அப்புறம் இனி இங்கே வரவேண்டாம்”
“இல்லை இல்லை அர்ஜுன்! நான் ஃபீல் பண்ணல! எனக்கு ஒரே ஒரு ஆசை அதை மட்டும் செய்வீங்களா?”
“சொல்லுடா சில்லு என்ன பண்ணணும்?”
“இனி வரப்போகும் ஒவ்வொரு கல்யாண நாளும் நீங்க என்னை இங்கே கூட்டிட்டு வரணும் கொஞ்ச நேரம் நம்ம இரண்டு பேரும் தனியாக இங்கே இருந்து காதல் கதை பேசணும்!”
“ஆர் யூ ஸ்யூர்?”
“ஹண்ட்ரட் பர்சண்ட்!”
“உங்கள் ஆணை மகாராணி!” தன் இடை வரை குனிந்து ஹரிணிக்கு வணக்கம் வைத்தவன் அதன் பின்னர் வந்த ஒவ்வொரு வருடமும் அவளது ஆசையை நிறைவேற்றாமல் விட்டதில்லை.
இப்போதும் அதே பேருந்து நிறுத்தத்தில் தான் அவளோடு காதலோடு கை கோர்த்தபடி அமர்ந்திருந்தான்.
அந்த இடத்தில் சிறு சிறு மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் இன்று வரை ஹரிணி மற்றும் அர்ஜுனின் காதலில் எந்தவொரு மாற்றமும் வந்திருக்கவில்லை.
உண்மையான காதல் ஒரு தடவை தான் ஒரு நபரின் வாழ்வில் வரும் அப்படி வந்துவிட்டால் அந்த நபரின் இறுதி மூச்சள்ள வரை அந்த காதல் மறக்காது, மாறாது.
சின்ன சண்டைகள், கேலிகள் மற்றும் கோபதாபங்கள் எல்லா வகையான உறவுகளிலும் வரத் தான் செய்யும் அர்ஜுன் மற்றும் ஹரிணிப்பிரியாவின் வாழ்க்கை கூட அப்படியான ஒன்று தான்.
எத்தனை வகையான பிரச்சினைகள், போராட்டங்கள், தவிப்புகள், காத்திருப்புகள் வந்தாலும் இறுதி வரை அர்ஜுன் தன் காதல் மேல் கொண்ட நம்பிக்கையை மாற்றவில்லை அதனால் தான் அவன் எந்த நிலையில் இருந்தாலும் அவன் காதல் நினைவுகள் அவனை விட்டு விலகவில்லை.
காதல் ஒரு சிலருக்கு சாபமாக அமையும் ஒரு சிலருக்கு வரமாக அமையும் அப்படியாக காதல் வரம் கிடைக்கப் பெற்ற ஒரு ஜோடி தான் அர்ஜுன் மற்றும் ஹரிணிப்பிரியா.
இனி அவர்கள் வாழ்க்கையில் என்ன வகையான தடைகள், பிரச்சினைகள் வந்தாலும் சரி அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காதல் அவர்களை இறுதி வரை சந்தோஷமாக அழைத்துச் செல்லும் அதற்கு சாட்சியாக அமைவது அவர்கள் கடந்து வந்த இந்த பாதை.
அர்ஜுன் மற்றும் ஹரிணிப்பிரியாவின் வாழ்வில் இனி வரும் நாட்கள் முழுவதும் எல்லையற்ற காதலே பெருகி நிற்கும்.
அது மட்டுமில்லாமல் அர்ஜுன் மனதிற்குள் எப்போதும் இருக்கும் ஒரே ஒரு விடயம் ‘தன்னையே மறந்தாலும் ஹரிணி மீது கொண்ட காதலை நினையாதிரேன்!’
சுபம்