ithayamnanaikirathey-24

IN_profile pic-50f8965b
Akila Kannan

இதயம் நனைகிறதே…

அத்தியாயம் – 24

விஷ்வாவின் வலியின் துடிப்பில், இதயா சட்டென்று விலகி உப்பிட்ட சூடு நீரில் ஒத்தடம் கொடுப்பதாக கூறிக்கொண்டே ஓடினாள்.

    தியா, சுவரோடு சாய்ந்து நின்று தந்தையை தன் திராட்சை கண்களை உருட்டி உருட்டி பார்த்தாள்.

‘இன்னைக்கு தான் இவ என்னை பார்க்கிறாளா?’ என்பது போல், அவள் அவனை பார்க்க, தியாவின் கண்களில் கண்ணீர்.

விஷ்வா பதறி தன் மகளின் அருகில் வர, “அப்பா, நீங்க உட்காருங்க. நான் தங்கச்சியை பார்த்துக்கறேன்” என்றான் அஜய் பெரிய மனிதன் போல.

“தியா, அழ கூடாது. அப்பாவுக்கு சின்ன அடி தான். கொஞ்ச நாளில் சரியாகிரும்.” தன் தங்கையின் கண்களை துடைத்துவிட்டபடியே கூறினான்.

தியா, “ம்…” மூக்கை உறிஞ்சினாள்.

விஷ்வா, வலியால் மெத்தையில் அமர்ந்து கொண்டு, தன் மகளை பார்த்தான்.

‘அப்படியே, அவ அம்மா மாதிரி. பேச்சு மட்டும் அங்க இருந்து, இங்க வரைக்கும். ஏதாவது ஒண்ணுன்னா, தாங்கமாட்டாங்க’ அவன் எண்ணி கொண்டிருக்கையில், இதயா சூடான நீரோடு வந்தாள்.

“ரெண்டு பேரும் போய் விளையாடுங்க. நான் அப்பாவுக்கு மருந்தெல்லாம் போட்டுட்டு கூப்பிடுறேன்.” இதயா கூற, குழந்தைகள் மனமில்லாமல் அறையை விட்டு வெளியேறினர்.

இதயா அவன் கைகளை தொட,  அவன் அலறினான்.

அவள் கண்களில் கண்ணீர் வடிந்து, அவன் உள்ளங்கையை தொட்டது.

“இதயா…” அவன் சமாதானம் செய்ய முற்படுகையில், அவள் பேச்சை மாற்றினாள். என்ன பேசினால், அவன் கவனம் திசை திரும்பும் என்று எண்ணியவளாக அவள் பேச ஆரம்பித்தாள்.

“நான் வாழ்க்கையில் தோத்துட்டேன் விஷ்வா.” அவன் அருகே அமர்ந்து கொண்டு, அவன் கைகளை தன் மடிமீது வைத்து கொண்டு, அவனுக்கு வலிக்காதபடி ஒத்தடம் கொடுத்து கொண்டு மெல்லிய விசும்பலோடு கூறினாள்.

அவள் அறிவும், அவள் மனமும் ஒரு சேர அவன் அருகாமையை விரும்புவதை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.

“என்ன வித்தியாசம்? என் வாழ்க்கையில் நான் தோத்ததுக்கு இப்ப நான் காரணம். ஒருவேளை, நான் படிக்க வரமா அங்கேயே இருந்து , என் கனவில் தோத்திருந்தாலும் நான் என் வாழ்க்கையில் தோத்து தான் இருப்பேன். என்ன, என் வாழ்வில் நான் தோத்ததுக்கு, அப்ப நீ காரணமாக்கிருப்ப” பொறுமையாக, மிக அமைதியாக விரக்தி புன்னகையோடு கூறினாள் இதயா.

எழுந்து, நின்று அவன் வலது தோள்பட்டைக்கு ஒத்தடம் கொடுத்தாள். எங்கே, அதிகம் அழுத்தினாள் அவனுக்கு வலித்து விடுமோ என்று அவள் கைகள் நடுங்கியது.

அவன் இடது கையால், அவளை பிடித்து முன்னே அமர வைத்தான். நடுங்கி கொண்டிருந்த அவள் கைகளை தன் கைகளுக்குள் பொதித்து கொண்டான்.

அவள் முகத்தை கூர்மையாக பார்த்தான். அவள் முகத்தில் மண்டி கிடந்த கவலை, அவள் அன்பின் அளவை கூறியது. அவன் மீது அவள் கொண்டுள்ள அக்கறையின் அளவை கூறியது. அவள் கண்களில் இப்பொழுது கோபம் இல்லை. காதல் காதல் காதல் மட்டுமே இருந்தது. சூழ்நிலை, அவள் உள்ளுணர்வை படம்பிடித்து காட்டிவிட்டது.

வழக்கமாக , அவள் முகத்துக்கும், கண்களுக்கும் அவள் இட்டுக்கொண்டிருக்கும் முகமூடி, இன்று அவள் உகுத்த கண்ணீரில் காணாமல் போய்விட்டது.

அவள் காதல் அவன் அறியாததா?  அவனுள் உதித்து, அவள் மனதில் மலர்ந்த அன்பல்லவா ? அந்த அன்பு கண்ணீராய் அவன் முன் கரைகையில் அவன் இன்றைய வலி மரத்து தான் போனது. கனிந்த அவன் கண்கள் இன்று இன்னும் கனிந்தது.

“இதயா…” அவன் அழைப்பில், அவள் சுதாரித்து கொண்டாள்.

‘இதயா…’ எத்தனை விதமான அழைப்புகள். கோபத்திலும், ‘இதயா’ தான்! கடினமாக!

கெஞ்சினாலும், கொஞ்சினாலும், சலித்து கொண்டாலும், வெறுத்தாலும், ‘இதயா… இதயா… இதயா…’ அவன் இதயம் அவள் தானே.  அவளுக்கு புரியத்தான் செய்தது.

அவனுக்கு ஆசுவாசம் செய்து கொள்ள நேரம் கொடுத்து, “ஐஸ் பேக் வைக்கிறேன் விஷ்வா” அவள் கூற, “வேண்டாம் இதயா. வலிக்குது” அவன் மறுப்பு தெரிவித்தான்.

அவன் கன்னத்தை கைகளில் ஏந்தி, “ப்ளீஸ் விஷ்வா. கொஞ்சம் பொறுத்துக்கோ” அவள் கெஞ்சினாள். கொஞ்சினாள் என்றும் சொல்லலாம்.

அவள் செய்கையில், அவனுக்கு பழைய நாட்கள் நினைவில் மோதியது.

‘இப்படி தானே என் கிட்ட அவளுக்கு வேண்டிய எல்லா விஷயத்தையும் கேட்பா? படிப்பு விஷயத்தை மட்டும் இதயா இப்படி கடைசி வரைக்கும் கேட்கவே இல்லையே. கேட்டிருந்தால், நான் எப்படி வேண்டாமுன்னு சொல்லிருப்பேன்’ அவன் சிந்தனையில் மூழ்கி, மௌனம் கொள்ள, சட்டென்று தன்னிலை உணர்ந்து படபடவென்று விலக எத்தனித்தாள் இதயா.

அவன் அவளை விலகவிடவில்லை. அவள் கைகளை தன் கன்னத்தோடு அழுத்தி கொண்டு, “என் மேல கோபமா இதயா?”என்று அவள் கண்களை பார்த்தபடி கேட்டான்.

அவன், கேட்க நினைத்தது தான். ஆனால், இன்றைய அவள் அருகாமை தான், அவனை கேட்க துணிந்தது.

‘என்ன கோபம்? எதுக்கு கோபம்? எத்தனை விஷயங்கள்?’ அவனுக்கும் அவளுக்கும் தெரியும்! ஆனால் தெரியாது! என்பது போன்ற இடைநிலை.  

“நீ ஐஸ் பேக் வச்சுக்கிறியா? நான் பதில் சொல்றேன்” அவள் புன்னகையோடு  சூழ்நிலையை சரிசெய்ய விரும்பினாள்.

அவன் தலையசைத்து கொண்டான்.

“கோபப்பட என்ன இருக்கு விஷ்வா. நம், நாட்டின் அமைப்பு அப்படி தான். வேலைக்கு போகாம, வீட்டில் இருக்கிற லேடிஸ்க்கு, படிச்ச படிப்பு வீணாகுத்துன்னு குற்ற உணர்ச்சி. வேலைக்கு போற லேடிஸ்க்கு, நம்ம குழந்தைகளை சரியா கவனிக்கலையேன்னு குற்ற உணர்ச்சி. பெரும்பாலான பெண்களுக்கு இந்த குற்றவுணர்ச்சி இருக்கும்.” அவன் கைகளுக்கு கவனமாக ஒத்தடம் கொடுத்தாள்.

“கனவை நோக்கி பயணிக்கும் பெண்களுக்கும் இது தான் நிலை. கனவா? கணவனா?” அவள் தத்துவம் பேசி கொண்டே, அவனுக்கு முதலுதவியை முடித்துவிட்டாள்.

‘இதயாவின் பேச்சில் எத்தனை பொறுமை? இருபதுகளுக்கும், முப்பதுகளுக்கும் எத்தனை வித்தியாசம். நானும் இது போல், அன்று பொறுமையா கேட்டிருக்கலாமோ?’ அவன் மனம் இன்று தவித்தது.

‘என் மனைவியின் கனவுக்கு நான் தடையா?’ அவன் மறுப்பாக தலை அசைத்து கொண்டான்.

அவன் முன்னே இருக்கும் பொருள்களை சுத்தம் செய்துவிட்டு, அறையை விட்டு வெளியே சென்ற இதயா, இரண்டெட்டு பின்னே வைத்து, “நான் அன்னைக்கு உன்கிட்ட, என் விஷ்வா தானேன்னு பொறுமையா பேசியிருந்தா, நம்ம வாழ்க்கை வேறு மாதிரி மாறியிருக்குமோ?” என்று கேட்டுவிட்டு அறையிலிருந்து கண்களில் கண்ணீரோடு  படபடவென்று வெளியேறினாள்.

‘ஆம், அன்று சண்டை ஆரம்பித்ததுக்கு நீ தான் காரணம்.’ என்று பலமுறை குற்றம் சாட்டியவன், இன்று அதை சொல்லிக்காட்ட பலமில்லாதவன் போல் சுவரோடு சாய்ந்து கண்ணீர் உகுத்தான்.

‘என் இதயாவிடம் நான் அன்று பொறுமை காட்டி இருக்கலாமே?’ காலம் கடந்த சிந்தனையோடு படார்படாரென்று தலையில் அடித்து கொள்ளும் கோபம் அவன் மீதே அவனுக்கு எழுந்தது.

இருவரின் எண்ணங்களும் அவர்கள் செய்த தவறை நோக்கி பின்னே நகர்ந்தது.

     அன்று கடற்கரை சென்று வந்தபின் இருவரும் இதயாவின் படிப்பை பற்றி பேசவில்லை. சண்டை என்று சொல்லமுடியாது. ஆனால், அவர்களிடம் மெல்லிய மௌனம் நிலவியது.

   ‘இதயா மீண்டும் பேசட்டும். அதன்பின் பார்த்துக்கொள்ளலாம்’ என்று தற்காலிகமாக விஷயத்தை ஒத்தி வைத்தான் விஷ்வா.

இரண்டு நாட்களுக்கு பின், கோபமாக உள்ளே நுழைந்தான் விஷ்வா. “இதயா என்ன பண்ணி வச்சிருக்க?” அவன் பற்களை நறநறத்தன்.

“என் ஹயர் ஸ்டடிஸ் அப்ளிகேஷன் மெயில் பண்ணிருக்கேன்” அவள் அசட்டையாக கூற, “இதயா” அவன் குரலில் கோபம்.

“என் கிட்ட கேட்க வேண்டாமா இதயா?” சட்டென்று தன் கோபத்தை மறைத்து கொண்டு அவன் குரல் இப்பொழுது கெஞ்சியது.

“எதுக்கு கேட்கணும் விஷ்வா?” கோபமாக கேட்டாள் இதயா.

அவனிடம் மௌனம்.

அவன் முன்னே நின்று கொண்டு, “நான் கேட்டேன் விஷ்வா. நீ சரியா பதில் சொல்லலை.” அவள் குற்றம் சாட்டினாள்.

“அப்படினா, எனக்கு அதில் முழு விருப்பமில்லைன்னு அர்த்தம் இதயா. எனக்கு கொஞ்சம் டைம் கொடு.” அவன் கூற, “எவ்வளவு நாள் விஷ்வா? நான் கிழவியாகுற வரைக்குமா?” அவள் இடக்காக கேட்டாள்.

“நான் வீட்டில் எல்லார் கிட்டயும் பேசிட்டு சொல்றேன் இதயா” அவன் சமாளிக்க, “நீ ரெண்டு நாளா எதுமே ஸ்டெப் எடுக்கலை விஷ்வா. நான் ரெண்டு நாளா பொறுமையா தான் இருந்தேன். எனக்கு இப்ப, லாஸ்ட் டேட்” அவள் தன்னிலையை விளக்கினாள்.

“நான் வீட்ல பேசிட்டு சொல்றேன் இதயா” என்று அவன் முகத்தை திருப்பி கொண்டு கூற, “வீட்ல பேசிட்டு தான், என் கிட்ட உன் காதலை சொன்னியா விஷ்வா? வீட்ல பேசிட்டு தான் நாம்ம நம்ம வாழ்க்கையை ஆரம்பிச்சோமா விஷ்வா?” அவள் கடுப்பாக கேட்டாள்.

“நான் படிக்க ஊர்ல எல்லார் கிட்டயும் கேட்கனுமா?” அவளிடம் முணுமுணுப்பு.

“நீ மேல படிக்க வேண்டாமுன்னு நான் சொல்லலை இதயா. உன்னை, நான் படிக்க வைக்குறேன். நீ, ஃபாரின் போனா, ரெண்டு குடும்பத்துலையும் உனக்கு   ஃபினான்சியல் சப்போர்ட் வேணும். இங்கயே, படிச்சா நாம உங்க வீட்டில் ஹெல்ப் வாங்க வேண்டாம்.” அவன் நிறுத்த, இதயா எதுவும் பேசவில்லை.

“வீட்ல இருந்து இங்கயே சென்னையிலேயே படி. அஜய் உன்கூடவே இருப்பான். நானும் இதயா” அவன் குரல் இப்பொழுதும்  கெஞ்சத்தான் செய்தது.

“எனக்கு, யு.எஸில்  எம்.எஸ் பண்ணனும். பணம் பிரச்சனை இல்லை விஷ்வா. ஸ்காலர் ஷிப் கிடைக்கும். படிச்சி முடிச்சிட்டு நான் அங்க கொஞ்ச நாள் ஒர்க் பண்ணினா, எல்லாம் சரியாகிரும் விஷ்வா.” அவள் பிடிவாதமாக கூற, விஷ்வா அவளை அதிர்ச்சியாக பார்த்தான்.

“நீ இரெண்டு வருஷத்தில் திரும்பி வர ஐடியால இல்லையா இதயா?” அவன் கேள்வியாக நிறுத்தினான்.

“வரணும்னுனா வந்திடுறேன் விஷ்வா. ஆனால், ஒருவேளை எனக்கு ஒர்க் பெர்மிட் விசா கிடைச்சா, நீயும் விசா கேட்டு அங்க வந்து ஒர்க் பண்ற வாய்ப்பு கிடைக்குதான்னு பாரு. கிடைச்சா ரெண்டு பேரும் அங்க கொஞ்சம் நாள் இருக்கறதில் என்ன  தப்பு?” அவள் சர்வ சாதாரணமாக கேட்டாள்.

“என்ன இதயா திட்டம் எல்லாம் பயங்கரமா இருக்கு. என்னை வச்சி திட்டம் போட நீ யாரு?” அவன் அவள் தொடர் பேச்சில் கடுப்பாக கேட்டான்.

அவன் கேள்வியில், அவள் பேச்சு முடிந்தது என்பது போல் நகர, அவள் கைகளை பிடித்து நிறுத்தினான்.

“நான் பேசிட்டு இருக்கேன். நீ அப்படியே போற?” அவன் கோபமாக கேட்க, “உன் வாழ்க்கையில் நான் முடிவு எடுக்க கூடாதுன்னா? என் படிப்பில் நீ எப்படி முடிவு எடுக்கலாம் விஷ்வா? நான் படிக்க போறேன். மேலே பேச, ஒண்ணுமில்லை விஷ்வா” அவள் கறாராக கூறிவிட்டாள்.

“அது ஏன் ரெண்டு வருஷம் இதயா? அப்படியே போய்டு. நீ இல்லாம ரெண்டு வருஷம் இருக்க தெரியுற எனக்கு, அப்புறமும் இருக்க தெரியாதா என்ன?” அவன் நக்கலாக தான் கேட்டான்.

அவனின் நக்கல், அவளை சுருக்கென்று தைக்க, “தேவைன்னா அப்படியே இருந்துக்கோ விஷ்வா” அவன் நக்கலுக்கு அவள் பதிலடி கொடுத்தாள்.

அவள் பதிலடி அவனை தாக்க, “அப்படியே விட்டேனா ஒண்ணு” அவன் கைகள் மேலே எழும்பி, அவள் கன்னத்தை நெருங்க, தன் கைகளை உயர்த்தி அவன் கைகளை அழுத்தமாக பிடித்தாள் இதயா.

“கையோங்குற வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம் விஷ்வா. சர்தாம் போடான்னு போய்கிட்டே இருப்பேன்” அவனை கண்டித்தாள் இதயா.

“புதுசா, என்ன போறன்னு சொல்ற? நான் அடிச்சி தான் நீ போகனுமா? அது தான் ஏற்கனவே போறேன்னு முடிவு பண்ணிட்டியே” அவன் கைகளை உதறிக்கொண்டு மெத்தையில் அமர்ந்தான்.

அவள் எதுவும் பேசவில்லை. படுத்து கொண்டாள்.

“இதயா, நான் உன்கிட்ட அப்படி என்ன கேட்குறேன். இந்த ஆளுக்கொரு பக்கம் இருக்கிற வேலை எல்லாம் வேண்டாம். உங்க அம்மா, எங்க அம்மா மாதிரி நீ குடும்பத்தோடு இருன்னு தானே சொல்றேன். நீ படி, வேலைக்கு போ. எதுவனாலும் உன் இஷ்டம். எதுவாயிருந்தாலும், நீ என் கூட இரு.” அவன் குரல் மென்மையாக வெளி வந்தது.

“லவ், பண்ணும் பொழுது நீ என்ன சொன்ன தெரியுமா விஷ்வா? நீ, அந்த காலத்துக்கு பொண்ணு மாதிரி இல்லை. நீ பேசுற விஷயங்கள் ரொம்ப முற்போக்கா இருக்கு. எனக்கு பையன் பிறந்தா, நீ வளர்க்கணும். என் பொண்ணு உன்னை மாதிரி வளரனும்முனு நீ தானே சொன்ன?” அவள் நிறுத்த அவனிடம் மௌனம்.

“லவ்வரா நான் முற்போக்கா சிந்திக்கும் பொழுது உனக்கு பிடிச்சது. அதையே நான் மனைவியா பேசும் பொழுது உனக்கு பிடிக்கலை.” அவள் குற்றம் சாட்ட, “இதயா…” அவன் கர்ஜித்தான்.

“ஏன் கத்துற விஷ்வா? நான் சொல்றது தான் உண்மை. யு ஆர் எ டிபிக்கல் இண்டியன் ஹஸ்பண்ட்” அவள் ஏளனமாக கூறினாள்.

“இருந்துட்டு போறேன் இதயா. நீ ஒரு டிபிக்கல் இண்டியன் ஒய்ஃபா இரு. அது போதும் நம்ம வாழ்க்கை.” அவன் அழுத்தமாக கூறினான்.”

“எப்படி, என் கனவை தொலைச்சிட்டு, என் ஆசையை குழி தோண்டி புதைச்சிட்டு, ஒரு பொண்டாட்டியா உனக்கு சமைச்சி போட்டுட்டா?” அவள் அவன் முன் எதிர்த்தே நின்றாள்.

“இருந்தா என்ன டீ தப்பு?” அவனும் அவளை எதிரே நிறுத்தி பார்க்க ஆரம்பித்தான்.

“ஒரு நாளும் இதயா அப்படி இருக்க மாட்டா. அப்படி ஒரு வாழ்க்கை இதயாவுக்கு வேண்டாம். இப்படி ஒரு எண்ணம் கொண்ட விஷ்வாவை இதயாவுக்கு பிடிக்காது. இந்த பேச்சுக்கெல்லாம் இதயா அடங்கி போக மாட்டா” அவள் சவால் விடும் விதமாகவே கூறினாள் இதயா.

“பிடிக்கலைன்னா….” விஷ்வா தொடர்ந்து பேசினான்.

 

 

மேலும் சிந்திக்க முடியாமல் இதயா நிகழ் காலத்திற்கு திரும்பினாள்.

‘நான் அப்படி பேசாமல் இருந்திருந்தால்…’ அவன் இதயம் கனத்தது.

‘அவன் என்ன பேசினா என்ன? அதுக்கு அப்புறம், நான் அப்படி செய்யாமல் இருந்திருந்தால்…’ அவள் இதயமும் கனத்தது.

விஷ்வா எழுந்து சமையலறை நோக்கி நடந்தான். குழந்தைகள் தொலைக்காட்சியில் மூழ்கி இருந்தனர்.

சுவரில் சாய்ந்து இதயாவை பார்த்தான். இதயா, சேமியா உப்புமா கிண்டி கொண்டிருந்தாள். தேங்காய் சட்னியும் தயாராகி இருந்தது.

அவள் கண்கள் மெல்லிய சோகத்தை தேக்கி, சிந்தனையில் ஆழ்ந்திருப்பது போல் விஷ்வாவுக்கு தோன்றியது.

“என்ன யோசனை?” அவன் வினவ, அவள் திரும்பி அவனை, அவன் கையை பார்த்தாள்.

கைகளை மெல்ல தொட்டு, “பரவாலையா விஷ்வா? சுவரில் சாயாத. அடிபட்டிருக்கில்ல, எரியும். நீ உட்காரு” என்று நாற்காலியை இழுத்து போட்டாள்.

“என்ன யோசனைன்னு கேட்டேன்?” அவன் இடது கையால் அவளை நிறுத்தி கேட்க, “டிபிக்கல் இண்டியன் ஹஸ்பேண்ட்” என்றாள் கேலி போல் அவன் கையிலிருந்து மெல்ல விலகி கொண்டே முணுமுணுத்தாள்.

“யெஸ். ஐ அம் அ டிபிக்கல் இண்டியன் ஹஸ்பேண்ட். பெருமை தான் அதில் எனக்கு. அது தான் இதயா இத்தனை வருஷமானாலும், வேறு பொண்ணை மனசாலும் நினைக்காமல், உன்னை தேடி வந்திருக்கேன்.” அவன் நெஞ்சை பெருமையாக மார்தட்டி கொண்டு, அவளை நெஞ்சோடு சேர்த்துக் கொண்டான்.

அவள் நிமிர்ந்து, அவனை பார்த்து அவள் கூறிய வார்த்தையில் அவன் கலகலவென்று சிரித்தான்.

இதயம் நனையும்…