நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!11

அத்தியாயம் 11

சம்பிரதாயங்கள் யாவும் முடிந்து விருந்தினர்கள் செல்லும்வரை அமைதியாக கோபத்தை அடக்கிய பரணிதரன் அவர்கள் சென்றதும் வெடிக்க தொடங்கினார்.

“இங்க என்னதான்  நடக்குது? ஆதினி நிச்சய நேரத்துல எங்க போனா? என் பையனோட வாழ்க்கைய அழிச்சு அவமான படுத்ததான்  இப்படி ஒரு ஏற்பாடு பண்ணீங்களா? சொல்லுங்க மச்சான் உங்க பொண்ணு எங்க போனா” என்று ஆத்திரத்தில் கத்தினார்.

“அப்படிலாம் நாங்க யோசிப்போமா மாப்பிள்ளை” என்று தவிப்போடு சொல்ல,

“நீங்க யோசிக்க மாட்டிங்க, ஆனா அவளை வளர்த்தவங்க யோசிக்கலாம்ல. ஏன்னா நீங்க அவங்களை அவமான படுத்தி இருக்கீங்க. அதுக்கு பழிவாங்க கூட இப்படி பண்ண வச்சி இருக்கலாமே மச்சான்” என்று அவர் கூற,

சதாசிவத்திற்கு அடங்கிய கோபம் அனைத்தும் திரும்பி புயலாக மாறியது நங்கை மீது.

ஒரு நொடி அமைதியாக இருந்த பரணிதரன், சௌந்தர்யாவிடம் திரும்பி, ”இந்த மாதிரி பாவம் செய்த மனிஷங்களை கூப்பிட்டல்ல அதுனாலதான்  உன் புள்ளைக்கு இந்த நிலைமை” என்று அவரை ஓங்கி அறைந்தார்.

“பரணி” என்று கிருஷ்ணவேணி கத்த,

“என் பேர சொல்ல கூட உங்களுக்கு தகுதி இல்ல. உங்களோட ஆசைக்கு அன்னைக்கு என்னைய அத்தனை பேரு முன்னாடி அசிங்கப்படுத்தினிங்கல்ல. உங்களோட பார்வை பட்டதால மட்டும்தான்  இன்னைக்கு என்னோட புள்ளைக்கு இந்த நிலைமை” என்று சீறினார்.

“வேணாம்ப்பா பரணி. எதுவும் சொல்லாத இனியும் எங்களால அதை தாங்கிக்க முடியாது. நீ எங்கள விட்டு பொய்டுவியோன்னு பயந்துதான்  அப்படி பண்ணோம். மத்தபடி உன் நல்லதுக்காகதான் பண்ணோம் பா” என்று கண்ணீர் சிந்தினார் கிருஷ்ணவேணி.

“என்னோட பேர சொல்லி கூப்பிட கூட உங்களுக்கு தகுதி இல்ல. என்னைய பெத்ததுக்கு நீங்க எனக்கு ரொம்ப பெரிய நல்ல விஷயம் பண்ணிட்டிங்க. அப்புறம் மிஸ்டர் ராஜவேல் உங்களால எப்படி என்னை பார்க்க வரமுடிஞ்சது சொல்லுங்க. கொஞ்சம் கூட உறுத்தலையா” என்று அனைவரது இதயத்தையும் வார்த்தையால் தாக்கினார்.

எதுவும் பேசமுடியாமல் கண்ணீரில் கரைந்தது அந்த குடும்பம்.

சீதாலட்சுமிதான் பெண்ணை காணோம் என்று தவித்து போனார்.

“ஏங்க நம்ம பொண்ணைகாணோம்ங்க, வாங்க போய் அவளை தேடி பாக்கலாம்” என்று அழுகையின் பிடியில் கூற, சதாசிவத்திற்கு ஒரு நிமிடம் அவளுக்கு நடந்த கடத்தல் நிகழ்வு ஞாபகத்திற்கு வரவே உடனே வசீகரனிற்கு அழைப்பு விடுத்தார்.

அதுவோ அடித்து அடித்து ஓய்ந்து போனது. ஸ்டோர் ரூம் செல்வதால் எதற்கு போன் என்று காரிலே வைத்து விட்டுதான் சென்றிருந்தான்.

“யாருக்குங்க கூப்பிடுறீங்க?” என்று அழுகையின் பிடியில் சீதா கேட்க,

“நம்ம வசீகரனுக்குதான்மா. அவனை விட்டு தேட சொல்லலாம்னுதான்  இருக்கேன்” என்று கூற,

“எதுக்கு இந்த நடிப்பு உங்க ரெண்டு பேருக்கும். உங்க பொண்ணு இந்த நிச்சயம் வேண்டாம்னு ஓடி போயிட்டா. அவள போய் ஏதோ காணாம போன மாதிரி பண்ணுறீங்க” என்று புருவம் உயர்த்தி கேட்டார்.

“இல்ல மாப்பிள்ளை போன மாசம் அவளை யாரோ ஒருத்தன் கடத்திட்டான். வசிதான் அவளை காப்பாத்தி கூட்டிட்டு வந்தது” என்று சொல்ல,

இந்த செய்தி அங்கிருந்த அனைவருக்கும் புதிது என்பதால் அதிர்ச்சியடைந்தனர்.

“அய்யோ ஆத்தா என் பேத்திக்கு எதுவும் ஆகிருக்க கூடாது த்தா” என்று பேச்சியம்மாள் சாமியிடம் முறையிட்டார்.

“ஆமா இந்த வசீகரன், வசீகரன்னு சொல்லுறீங்க, ஆனா நான் வந்ததுல இருந்தே அந்த பையனை பாக்கலையே” என்று சந்தேகமாக அவர் குரல் வரவே, சதாசிவத்திற்கு, ‘அய்யோ’ என்று மனம் அடித்துக்கொண்டது.

பின், அங்கிருந்த ஆட்களிடம் இருவரையும் தேட சொல்லி அனுப்பியவர், அப்படியே நங்கையை அழைத்து வர சொல்லி கட்டளையிட்டார்.

அபியோ எந்த ஒரு கேள்வியோ முக சுழிப்போ காட்டாமல் அமைதியாகவே பூங்குழலியை பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் நிலை புரிந்தாலும் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தான் அபிநந்தன்.

பூங்குழலிக்கு துணையாக மிளனி அவளுடன் நின்றுக்கொண்டாள்.

அவனின் மூளை சிறிது நேரத்திற்கு முன்பு நடந்ததை பற்றி யோசிக்க செய்தது.

***

சிறிது நேரத்திற்கு முன்பு…

ஆதினி எங்கேயோ மறைந்து மறைந்து போவதை கண்டு அவள் பின்னயே சென்றான் அபிநந்தன்.

“இவ எதுக்கு இப்படி பயந்து பயந்து போறான்னு தெரியலையே” என்று சிந்தித்தபடியே பின்னே சென்றான்.

அவள் ஒரு அறைக்குள் நுழைவதை கண்ட அபி, அந்த அறைக்கு நெருக்கமாய் சென்று அவள் உள்ளே சென்று கதவை சாற்றி விட்டு வந்த சுவடே தெரியாமல் திரும்பி விட்டான்.

அவனுக்கு ஒரு நம்பிக்கை நிச்சய பெண் இல்லை என்றால் கண்டிப்பாக நிச்சயத்தை நிறுத்தி விடுவார்கள் என்று. அதன் பிறகு எப்படியாவது சிரமப்பட்டாவது பூங்குழலியை திருமணம் செய்வதற்கு சம்மதம் வாங்கிட வேண்டும் என்று நினைத்திருந்தான்.

அவனுக்கு தெரியவில்லை அங்கே வசி அந்த அறையில் இருந்தது. தெரிந்திருந்தால் இதனை செய்திருப்பானோ? இல்லையோ?

நிச்சய ஓலை வாசிக்கும் நேரம்தான்  அந்த குடும்பத்தினருக்கு தெரிய வந்தது ஆதினி இல்லாதது. அந்த வீடு முழுவதும் யாரும் அறியாமல் தேட, அவள் இருக்கின்ற சுவடே இல்லாமல் இருந்தது.

அந்த வீடு முழுக்க தேடியவர்கள் வீட்டின் பின்புறத்தில் இருந்த அந்த ஸ்டோர் ரூம்மை சென்று பார்க்க தவறி விட்டார்கள்.

வீட்டில் இல்லை என்றதும் குடும்பமே ஒரு நொடி கதிகலங்கி போயினர். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினர். இதில் சதாசிவத்திற்கு அவமானமாக போயிற்று.

அபிக்கு அவன் நினைத்தது போல்தான் அனைத்துமே நடந்தது. அவன் நினைக்காத ஒன்று பரணிதரனே கீழிறங்கி பூங்குழலியிடம் அபியை திருமணம் செய்ய சொல்லி கேட்டது.

முதலில் மறுத்த பூங்குழலி, குடும்பத்தின் மானத்தை கருத்தில் கொண்டு பரணிதரன் அவளிடம் கைகூப்ப‌, அதில் மனமிரங்கியவள் ஆதினி காலையில் பேசியதை எண்ணி அவள் எங்கோ சென்று விட்டாள் என்றெண்ணி தன் சம்மதத்தை தெரிவித்தாள்.

ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த அபி, அவனின் ஃப்ளவரின் சம்மதத்தில் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டான்.

அதன் பிறகு எல்லாம் அவன் எதிர்பாராததே…

அதனாலேயே யாரின் கண்களுக்கும் தன் மேல் சந்தேகமான பார்வை பதிய கூடாது என்று எந்தவிதமான உணர்ச்சியையும் வெளியே காட்டவில்லை.

ஆனால் தந்தையின் இப்படி ஒரு கோப முகத்தை அவன் காண்பான் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

***

வெளியே சென்று தேடிய சதாசிவத்தின் ஆட்களுக்கு ஆதினி வெளியே சென்றது போல் யாரும் காணவில்லை என்றே சொல்ல, அவர்களின் தேடலுக்கு பூஜ்ஜியம் தான் கிடைத்தது.

அத்தனை கடுப்பையும் அவர்கள் நங்கையின் வீட்டில் காட்டி அவரை தரதரவென இழுத்து வந்தார்கள்.

இழுத்து வந்து அவரின் வீட்டினுள் தள்ளி விட்டுவிட்டு, “ஐயா சின்னம்மா எங்க தேடியும் கிடைக்கவில்லை” என்று கைவிரித்தனர்.

கீழே விழுந்த நங்கை தட்டி தடுமாறி எழுந்தவர், அங்கிருந்தவர்களை கண்டு அதிர்ச்சியுற்றார்.

அங்கு இருந்தவர்களோ நங்கையை மாதிரியே ஒருநொடி அதிர்வை காட்டி அதன் பின், ‘ஏன் பார்த்தோம்?’ என்ற முகபாவனையை காட்டினர்.

ஆனால் ராஜவேலும் சௌந்தர்யாவும் மட்டுமே கண்கள் கலங்க, ”குட்டிமா” என்றழைத்தனர்.

“இவ எங்க இங்க வந்தா. இன்னும் யார் மானத்தை வாங்க காத்திருக்க?” என்று நாச்சியார் கோபத்தோடு கேட்க,

நங்கை, “பாட்டி” என்று அழுகையோட அழைக்க,

“அப்படி கூப்பிடாத. அந்த உறவு எல்லாம் என் பேரனை எப்போ அசிங்க படுத்துனியோ அப்பவே முடிஞ்சு போச்சி” என்றார் கண்டன குரலில்.

“அப்படி எல்லாம் சொல்லாதீங்க பாட்டி?” என்று நங்கை கெஞ்ச,

நங்கையை பார்த்த பரணிதரனுக்கு முகம் இறுகியது. அவருக்குதான் நங்கை இங்கிருப்பது எல்லாம் தெரியுமே. என்றாவது ஒருநாள் இந்த சூழ்நிலையை சந்திக்க வேண்டும் என்றுதான்  இருந்தார். ஆனாலும் அவரின் மனம் பழையதை நினைத்து இறுகிப்போனது.

சதாசிவம் முன்னே வந்து, “எங்க என்னோட பொண்ணு. அவன்கிட்ட அவளை எங்க கூட்டிட்டு போக சொன்ன சொல்லு” என்று ஆங்காரமாக கத்தினார்.

“என்ன சொல்றீங்க? ஆதினி எங்க போனா” என்று பதறியவராய் கேட்க,

“ஆதினி ஒன்னும் தானா எங்கேயோ போகல, உங்க வீட்ல தங்க வச்சிருக்கியே வசீகரன் அவன்தான் ஆதினியை எங்கேயோ கூட்டிட்டு போயிட்டான்” என்று குண்டை தூக்கி போட,

“கண்டிப்பா ஆதினி எங்கேயும் போயிருக்கமாட்டா. அதுவும் இல்லாம வசி அப்படிப்பட்ட வளர்ப்பு இல்லை. அவன் அந்த மாதிரி செய்ற பையன் கிடையாது” என்றார் உறுதியாக.

“என்னம்மா நடிப்பு உன்னோடயது. யாரு காதுல பூ சுத்துற? இப்ப நடக்குற நிகழ்வு எல்லாத்தையும் பார்த்தா, இது எல்லாம் நீ போட்டு கொடுத்த ப்ளான் மாதிரி தெரியுதே. உன்ன நான் அவமான படுத்தினக்கப்புறம்தான்  வசி என்கிட்ட வேலைக்கு வந்தான். அடுத்து வந்த கொஞ்ச நாள்ளையே அவன் உன்னோட வீட்டுக்கு வந்துட்டான். இது எல்லாம் உன்னோட சதி திட்டம் தானே. இப்போ சொல்லு எங்க பொண்ண கூட்டிட்டு போக சொல்லியிருக்க” என்று சதாசிவம் நங்கையை பார்த்து ஆத்திரத்தோடு கேட்க,

இவை அனைத்தையும் ஒரு தந்தையாய் பாசமிகு பெண்ணின் குணத்தை கீழிறக்கி பேசவும் அவரால் கேட்க முடியவில்லை. அவள் செய்தது தவறு என்று தானே இத்தனை வருடங்களாக அவளை பிரிந்து வாழ்கிறார்.

நிலைமை வேறுவிதமாக செல்வது போல் உணர்ந்த அபி நேரம் தாமதிக்காமல், “எல்லா இடமும் தேடி பாத்திங்களா?” என்று சந்தேகமாக கேட்க,

“எல்லா இடத்துலயும் நல்லா தேடி பாத்தாச்சி சின்னயா” என்க.

“அப்போ நம்ம வீட்டுக்கு பின்னாடி இருக்கிற ஸ்டோர் ரூம்ல செக் பண்ணிங்களா” என்று புருவம் உயர்த்தி கேள்வி எழுப்ப,

“அது வந்து தேடி பாக்கலைங்கையா” என்று ஒருவன் சொல்ல,

“அப்போ ஆதினி அங்க கூட இருக்கலாமே. வாங்க அங்க போய் பாக்கலாம்” என்று எதுவும் தெரியாதது போல் முன்னே நடந்தான்.

அவன் பின்னாடியே அனைவரும் செல்ல, அங்கு தரையில் மடிந்து அழுதுக் கொண்டிருந்த நங்கையை பார்த்த பேச்சியம்மாள், “என் பேத்தி மட்டும் அங்க இல்லாம இருக்கட்டும். நீ உயிரோடவே இருக்க முடியாது” என்று மிரட்டி விட்டு சென்றார்.

வேகமாக ஸ்டோர் ரூம் அருகே வந்தவன், தாழ்ப்பாளை திறந்து உள்ளே சென்று பார்க்க, அங்கோ வசி அவளை தாங்கிருந்தான்.

வசியை கண்ட அபிக்கோ கண்கள் தானாக விரிந்து, ‘இவன் எங்க இங்க இருக்கான், அச்சோ எல்லாம் போச்சே’ என்று தலையில் கைவைக்காத குறையாக நின்றான்.

அழுது அழுது மூச்சிவிட சிரமபட்டவளை வெளியே அழைத்து செல்ல, கதவை திறக்க முற்பட்ட போதுதான்  கதவு வெளி புறமாக சாத்தியிருப்பது புரிந்தது இருவருக்கும். அதில் ஆதினி அவன் மீதே மயங்கி சரிந்து அவன் தாங்கிய சமயம்தான் கதவு திறந்தது.

“என்னடா பண்ண என் பொண்ணை” என்று அவன் சட்டையை கொத்தாக பிடித்தார் சதாசிவம்.

அதில் அதிர்ந்த வசி, “சார் நான் எதுவும் பண்ணல. மேடம்தான் மயங்கி விழுந்துட்டாங்க” என்று சொல்ல,

ஒரு மருத்துவராக இருக்க பரணிதரன், “அபி அவளை தூக்கிட்டு சீக்கிரமா வீட்டுக்கு வா” என்று முன்னே நடந்தார்.

ஆதினியோ வசியின் சட்டையை இறுக பற்றி இருந்ததால் அவனிடமிருந்து பிரித்து அவளை தூக்க முடியாமல் போக, “நானே தூக்கிட்டு வரேன்” என்று அவளை அலேக்காக தூக்கிக் கொண்டு உள்ளே விரைந்தான் வசீகரன்.

“அவளை விடுடா” என்ற படி மற்றவர்களும் அவன் பின்னே ஓடினர்.

வசீகரன் வீட்டிற்குள் ஆதினியை தூக்கி வருவது அறிந்து பதறிய நங்கை, “தம்பி அம்முக்கு என்ன ஆச்சி” என்று கேட்க,

“அவளுக்கு ஒன்னும் இல்லம்மா, இருட்டில் இருந்ததால மயங்கிட்டா” என்று சொல்ல, அதற்குள் பரணிதரன் தண்ணீர் எடுத்து கொண்டு வந்தார்.

“தள்ளுங்க முதல்ல” என்று இருவரையும் சுட்டிக் சொன்னவர், அவளுக்கு முதலுதவி செய்ய தொடங்கினார்.

சிறிது நிமிடத்திலே கண் விழித்த ஆதினி, அங்கிருந்த நங்கையிடம் ஓடிச்சென்று அணைத்துக் கொண்டாள்.

“அத்த அத்த என்னை விட்டு எங்கேயும் பொய்டாதீங்க ப்ளீஸ்” என்று அழுகையின் பிடியில் கெஞ்ச,

“எங்கேயும் போகலடா ?” என்று சமாதானம் செய்தார்.

“சீதா போ போய் ஆதினிய இழுத்துட்டு இங்க வா” என்று அதட்ட,

அவரும் பயந்து போய், “ஆதினி அம்மாகிட்ட வாம்மா” என்க.

“இல்ல நான் வரமாட்டேன்”

“அத்தை, இவங்க வீட்ல உங்க போட்டோக்கு வேற மாலை போட்டு இருந்தாங்க அத்தை. எனக்கு பயமா இருக்கு அத்த. என்ன விட்டு போகாத” என்று அழுக,

அதிர்ந்த நங்கை கசந்த புன்னகையை அவர்களை பார்த்து சிந்தி விட்டு, “ஒன்னும் இல்லடா. அது நான் கிடையாது வேற யாரோ. இங்க பாரு நான் உன்கூட தானே இருக்கேன்” என்று சமாளிக்க,

சதாசிவம் நங்கையை தள்ளிவிட்டு ஆதினியை தன்புறம் இழுத்துக் கொள்ள, கீழே விழப் பார்த்த நங்கையை தாங்கினான் வசீகரன்.

“என்னைய விடுங்க நான் அத்த கிட்ட போறேன்” என்று திமிறியவளை ஓங்கி அறைந்தார்.

அதில் கீழே விழுந்தவளை சீதாவும் சௌந்தர்யாவும் தாங்கி பிடித்தனர்.

“அப்படி என்னத்த சொல்லி என் பொண்ணை மயக்கி வச்சிருக்க நங்கை” என்று ஆத்திரமாக கத்தினார்.

“சொல்லு நங்கை, அவளுக்கு அவளோட அப்பா, அம்மா கூட வேணாம். ஆனா அவ நீயில்லாம இருக்க மாட்டேங்கிறா. எங்கள பத்தி அவகிட்ட தப்பு தப்பா சொல்லியே என் பொண்ணை எங்ககிட்ட இருந்து பிரிச்சி உன் வலையில சிக்க வச்சிட்டல”

நங்கையின் அமைதியை கண்டு வசீகரனிடம் திரும்பிய சதாசிவம், “என் பொண்ணை ரூமுக்குள்ள கூட்டிட்டு போய் என்னடா பண்ண பாத்த? என்னத்த உன் பெத்தவங்க வளர்த்தாங்களோ”

“சார் நான் சொல்ல வரத கொஞ்சம் கேளுங்க சார் ப்ளீஸ்” என்று வசீகரன் கெஞ்சினான்.

“வாய மூடுடா. நீ சொல்ற பொய்ய என்ன நம்ப சொல்றீயா சொல்லு. இவ கூட சேர்ந்து என் பொண்ணு வாழ்க்கைய அழிக்க பார்த்தல. உன்ன ஒழுங்கா வளர்த்திருந்தா உனக்கு ஏன் புத்தி இப்படி அசிங்கமா ஒரு பொண்ணு பின்னாடி போக போகுது சொல்லு. உன்ன வளர்த்த உங்க அப்பா அம்மாவை சொல்லணும். இந்த மாதிரி ஒரு பையனை பெத்ததுக்கு அவங்க நான்டுட்டு சாகணும்” என்று அவன் செய்த நல்லதை மறந்து வார்த்தைகளை கொட்ட, அதில் கூனி குறுகி போனான் வசீகரன். அவனுடன் சேர்ந்து ஆதினியும் தந்தையின் பேச்சில் கூனி குறுகினாள்.

அவர் பேசியதில் கோபமடைந்த நங்கை, ”வாய மூடுங்க” என்று கத்தினார்.

“என்னை பெத்த என்னோட அப்பா வேணா என்னைய தரக்குறைவா பேசும்போது அமைதியா இருக்கலாம். ஆனா வசியை பெத்த நான் அமைதியா இருப்பேன்னு நினைக்காதீங்க” என்று மிரட்டல் விட்டாள்.

நங்கையின் பேச்சில் அனைவருமே திகைத்தனர். இத்தனை வருடமாக அவள் ஒரு ராசியில்லாதவள் அதனாலே கல்யாணம் ஆகவில்லை என்றெண்ணிய அனைவருக்கும் இது பேரதிர்ச்சியை கொடுத்தது.

அப்போதுதான் பரணிதரன் வசீகரனை உற்று நோக்கினார்.

“என்ன புது கதை ஓட்டிட்டு இருக்க, இதை எல்லாம் நாங்க நம்புவோம்னு நினைச்சியா. உனக்குதான் கல்யாணமே ஆகலையே இதுல ஏது குழந்தை குட்டி எல்லாம். யாரு காதுல பூ சுத்துற நீ” என்று நக்கலாக கேட்டார் பேச்சியம்மாள்.

“நான் உங்ககிட்ட வந்து சொன்னேனா எனக்கு குழந்தை இல்லைன்னு” என்றவர், ”இதோ நிக்கிறாங்களே உங்க மாப்பிளை குடும்பம், அவங்களுக்கு தெரியும் எனக்கு பிள்ளை இருக்கா இல்லையான்னு” என்று புருவ முடிச்சிட்டு பேசினார்.

“எவனுக்கோ புள்ளைய பெத்துட்டு இந்த ஊருல இத்தன வருஷமா இருந்து எங்க ஊரை அசிங்க படுத்தியிருக்க? இதுல அப்பனில்லாத பிள்ளையை என் வீட்டுக்கே வேலைக்கு அனுப்பி என் பொண்ணை மயக்க சொல்லி இருக்கன்னா நீ எவ்ளோ பெரிய தில்லாலங்காடிய இருந்திருப்ப நீ” என்று சதாசிவம் வாய்க்கூசாமல் பேச,

“அத்தைய பார்த்து அப்படி எல்லாம் பேசாதீங்க” என்று முன்வந்தாள் ஆதினி.

“உண்மைய தான சொல்றேன். எவனோ இவள சீரழிச்சிட்டு விட்டுட்டு பொய்ருக்கான். அதுல இவன் பொறந்துட்டான். இத்தன வருஷமா இவன் எங்கிருந்தானோ என்னத்த பண்ணானானோ யாருக்கு தெரியும்” என்று அகங்காரமாக பேசினார்.

தன்னை சொல்வதை பொறுத்துக் கொண்ட நங்கையால் தன் மகனை குற்றம் சாற்றுவது பிடிக்கவில்லை.

“யாரு சொன்னா அவனுக்கு அப்பா இல்லைன்னு” என்றவர், ”வசி உடனே உங்க அப்பாவுக்கு போன் பண்ணி இங்க வர சொல்லுடா?” என்று சொல்லி அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார் கால் மேல் கால் போட்டுக் கொண்டு.