நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!10

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!10

அத்தியாயம் 10

வீட்டிற்கு வந்த ஆதினிக்கு தலையே வெடிப்பது போல் இருந்தது. அவள் அங்கே கண்ட புகைப்படம் அதுவும் மாலையிட்டிருந்த படத்தை நினைக்க நினைக்க தலையே வெடித்தது.

எப்படி அது சாத்தியமாகும்? உயிரோடு இருக்கும் ஒரு நபருக்கு எப்படி அவர்களால் மாலை மாட்ட முடிந்தது. இல்லை அது வேறொரு நபரா இல்லை இருவரும் ஒரே நபரா. எப்படி? எப்படி? இது சாத்தியமாகும் என்று மூளையை குடைய தொடங்கியிருந்தது. அந்த புகைப்படத்திற்குரிய நபர்?

இதனை பற்றியே அடுத்தநாள் முழுவதும் சிந்தித்தவளுக்கு தனக்கு அடுத்த நாள் நிச்சயதார்த்தம் என்றே மறந்து போனாள்.

அடுத்த நாள் எழுந்ததும்தான் அவளுக்கு இன்று தனக்கு நிச்சயதார்த்தம் என்றே தெரிந்தது.

அவளால் எதையும் சரிவர யோசிக்க முடியவில்லை. ஒருபுறம் அவள் காதல் மற்றொரு புறம் அந்த புகைப்படம் என்று இருபுறமும் மாட்டிக்கொண்டு தவிக்க, இவளுக்கு உதவ கூட யாரும் முன்வரவில்லை.

அதிகாலையில் எழுந்து பூஜைக்காக ஏனோ தானோ என்றே கிளம்பினாள் ஆதினி.

ஆதினிக்கு எப்படியாவது இன்று வசியை பார்த்து கல்யாணத்தை நிறுத்த சொல்லி பணிக்க வேண்டும் என்றிருக்க, அவனோ எப்படி அன்னையையும் தந்தையும் ஒருங்கே இணைப்பது என்று யோசனையில் இருந்தான்.

அவனுக்கு நன்றாக தெரியும் தன் தந்தை, தாய் அழைக்கும் வரைக்கும் அவர் இங்கே வரமாட்டார் என்று.

எப்படி தன் அன்னையையே அவருக்கு அழைத்து இங்கே வர சொல்ல வைப்பது என்று அவனது யோசனையில் மூழ்கி இருந்தவனுக்கு ஆதினியின் நினைவு சுத்தமாக இல்லை.

எப்போது அபிதான்  அவள் திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளை என்று தெரிந்ததோ அன்றில் இருந்தே அவளை விட்டு விலகி இருந்தான். திருமணம் முடியும் வரை அவளை பேணி காக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான்.

பரணிதரனால் மதியம் போல்தான்  கோவையே வந்து சேர முடியும் என்பதால் சௌந்தர்யாவிற்கு சிறிது கோபத்தோடு கலந்த வருத்தமாக இருந்தது.

காலை ஆறு மணிக்கு பூஜை வைத்திருந்ததால் அதற்காக வசி ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தான். அவனுக்கு கீழ் நூறு பேர் வேலை செய்து கொண்டிருந்தாலும் தாய் தந்தைக்காக இங்கே ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தான்.

முதலில் சதாசிவம் அங்கே வந்தவர், அனைத்து வேலைகளும் சரியாக நடந்துள்ளதா என்று பார்வையிட்டார்.

அதன்பின் குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் வருகை தந்தனர்.

வசியின் பார்வை எதார்த்தமாக ஆதினியின் மீது பதிந்து அவனை சிலையென நிற்க வைத்தது.

தங்க நிற பட்டு புடவையில் ஆங்காங்கே ஜரிகை வைத்து இருக்க, அதற்கு ஏற்றாற் போல் ஒப்பனை செய்து, காதில் பெரிய காதணி அணிந்து அதற்கு தகுந்தாற்போல் கூந்தலை விரித்து விட்டிருக்க, அதில் ஆதினியை பார்க்கவே தங்க தேவதை போல் மின்னினாள்.

எவ்வளவுதான்  புடவையில் அவள் அழகை எடுத்துரைத்தாலும் அவள் முகத்தில் அதற்கான உயிர்ப்பு இல்லாமல் இருந்தது.

அதனை பார்க்க கடினமாக இருந்தாலும், தான் அவளுக்கு சரியான ஜோடி இல்லை என்று எப்படி அப்பெண்ணிற்கு புரிய வைப்பது என்று புரியவில்லை அந்த ஆறடி ஆண் மகனுக்கு.

நேரங்கள் கடக்க விருந்தாளிகள் யாவும் வந்து விட தம்பதியர் நிமித்தமாய் சதாசிவமும் சீதாலட்சுமியும் ஓம குண்டத்தில் அமர்ந்து ஐயர் சொல்வதை செய்தனர்.

யாருக்கோ வந்த விருந்து என்பது போல் ஆதினியின் பார்வை வசீகரனையே சுற்றி திரிந்தது.

சிவப்பு நிற சட்டையும் வேஸ்ட்டியும் அணிந்திருந்தவனின் நெற்றியில் கீற்றாக சந்தனம் வைத்திருக்கவும் அவனை பார்க்க பார்க்க இதயம் துடிக்க மறந்து போனது போல் இருந்தது பெண்ணவளுக்கு.

பக்கத்தில் இருந்த பூவிடம், “பூவு இன்னைக்கு மிஸ்டர் விரு எவ்வளவு அழகா இருக்கான்ல. எனக்கு அப்படியே அவனை ஆப்பிள் போல கடிச்சி திங்கணும்னு ஆசையா இருக்கு டி. அதுவும் அந்த தாடி இருக்கு பாரேன், அதுதான்  அவனுக்கு அழகே” என்று ஆதினி வசியை வர்ணித்தாள்.

“ஏன்டி இப்படி பண்ற? உனக்கு இன்னைக்கு நிச்சயம், ஆனா நீ யாருக்கோ விருந்துன்ற மாதிரி இருக்க?” என்று பூங்குழலி சிடுசிடுக்க,

“உண்மையாவே இன்னைக்கு யாருக்கோதான் அந்த விருந்து எனக்கில்லை. கண்டிப்பா இந்த நிச்சயம் நடக்காது. அதுல எனக்கு நம்பிக்கை இருக்கு. அதைவிட என்னோட காதல் மீது அதீத நம்பிக்கை வச்சிருக்கேன் பூவு. நீயும் நம்பு எல்லாம் நல்லதே நடக்கும்” என்று சாதாரணமாக கூறிட,

பூங்குழலிக்குதான்  திக்கென்று ஆனது இவளின் பேச்சிலும் செயலிலும்.

பூஜை எல்லாம் சிறப்புற முடிந்து விட, ஆதினியை அழைத்து அதனை தொடங்கி வைக்க சொன்னார் சதாசிவம்.

“அப்பா நான் எதுக்கு, அம்மா இல்லைன்னா பாட்டிய பண்ண சொல்லுங்க பா” என்று மறுக்க முயல,

“பாப்பா அப்பா சொல்றேன்ல கேளு?” என்று அதட்டல் போட,

அவள் தயங்கி நிற்க, அபிதான் முன்னே வந்து, ”போங்க மிஸ் ஃப்ளவர் போய் மிஷின உங்க கையால‌ ஸ்டார்ட் பண்ணுங்க” என்று அவளை வற்புறுத்தி முன்னே செல்ல வைத்தான்.

அபியின் கட்டாயத்தினாலே அந்த மிஷினை ஸ்டார்ட் செய்து வைத்தாள். அனைவரும் அதனை கண்டு மகிழ்ந்து கை தட்டினர்.

அதன் பின் அனைவரும் வீட்டிற்கு சென்றுவிட்டனர். மாலை நடக்க போகும் நிச்சய வைபவத்திற்கு ஏற்பாடு செய்வதற்காக.

சதாசிவம் நிச்சய பொறுப்பினை வசியை நம்பி அவன் பொறுப்பில் விட, அவனுக்கு அவர் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. அது இன்னும் சில மணி நேரத்தில் சுக்கு நூறாக உடைய போவது தெரியாமல்.

நேரம் கடக்க கடக்க ஆதினிக்கு எப்படியாவது இந்த நிச்சயத்தை நிறுத்தியே ஆக வேண்டும் என்ற உணர்வு வந்தது.

எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் டென்ஷனாகவே சுற்றி வந்தாள். ஆனால் அபியோ நிம்மதியாக அந்த வீட்டையே சுற்றி சுற்றி வந்து அங்கிருந்த பெண்களை கலாய்த்து கொண்டிருந்தான்.

இந்த பிரச்சனையில் எப்படியாவது நங்கையை இங்கு அழைத்து வர வேண்டும் என்ற யோசனை வேறு ஒருபக்கம் ஓடிக்கொண்டிருந்தது.

அது இப்போது ஒருவரால் முடியுமென்றால் அது வசியால் மட்டுமே முடியும் என்று தோன்ற வேகவேகமாக கிளம்பி தயாரானவள் யாரும் அறியாதபடி வசியை தேடிச் சென்றாள்.

வசியோ அவள் கண்ணுக்கு அகப்படக்கூடாது என்று கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினான்.

ஒருவருக்கு ஒருவர் மூகமுடியை அணிந்து கொண்டு வெளியே நடமாடினர்.

நேரங்கள் கடந்து நிச்சயத்திற்குரிய நேரமும் நெருங்கி விட, சௌந்தர்யாவிற்கு இன்னும் தன் கணவரும், கணவர் குடும்பமும் வராமல் இருப்பதே தவிப்பாக இருந்தது.

உடனே தன் கணவருக்கு அழைப்பு விடுத்தார் சௌந்தர்யா.

“எங்கங்க இருக்கீங்க நீங்க? இங்க எல்லாரும் உங்களையேதான்  கேக்குறாங்க” என்று பொரிய தொடங்க,

“இதோ பக்கத்துல வந்துட்டேன்மா. கொஞ்ச நேரத்துலையே வந்துடுவேன்” என்றார்.

“சீக்கிரமா வாங்கங்க என்னால தனியா இங்க சமாளிக்க முடியாது” என்று கூறி அழைப்பை துண்டித்தார்.

அதன் பின் சீதாலட்சுமியும் சௌந்தர்யாவும் சேர்ந்து வருக்கின்ற விருந்தினர்களை வரவேற்க வாசலில் நின்றனர்.

நிச்சயம் துவங்க போகும் சமயம் பொறுத்தே, நாச்சியார், கிருஷ்ணவேணி, சீனிவாசன், ராஜவேல் என நால்வரும் வந்தனர்.

“வாங்க அத்த, மாமா, வாங்க பெரியப்பா, வாங்க பாட்டி, இதுதான் நீங்க வர நேராமா” என்று அனைவரையும் உள்ளே அழைத்துச் சென்றார் சௌந்தர்யா.

விருந்தினர்கள் அனைவரும் வந்து விட, “நல்ல நேரம் போறதுக்குள்ள நிச்சய தாம்பூலத்தை படிச்சிடலாமா ஐயா” என்று கேட்க,

“இருங்க ஐயரே இன்னும் மாப்பிள்ளையோட அப்பா வரல. அவர் வந்ததும் ஆரம்பிச்சிடலாம்” என்று சொல்ல,

“சரிங்க ஐயா” என்று அவர் அமைதியாகி விட்டார்.

அவர் சொன்ன சிறிது நிமிடத்திலே அவசர அவசரமாக பரணிதரன் உள்ளே வந்தவர், “ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்தறேன்” என்று சொல்லிச் சென்றவர் சரியாக ஐந்து நிமிடங்களிலே வந்து விட்டார்.

அதன் பின் நிச்சயதார்த்த பத்திரிக்கை வாசிக்கும் வைபவம் தொடங்கியது.

                                                    ***

வெகு நேரமாக வசியை தேடிய ஆதினி, அவன் ஸ்டோர் ரூம் செல்வதை பார்த்து அவன் பின்னாடியே சென்றாள்.

அவன் அறைக்குள் நுழைந்து எதையோ எடுத்துவிட்டு திரும்ப, அவனுக்கு வெகு பக்கத்தில் ஆதினி நின்றிருந்தாள்.

“இப்போ இங்க என்ன பண்ணுறீங்க மேடம் நீங்க? முதல இங்க இருந்து கிளம்புங்க மேடம்” என்று அவளை விட்டு தள்ளி நின்றான்.

“மிஸ்டர் விரு, ஒரு நிமிஷம் இருங்க நான் உங்க கூட பேசணும். எனக்கு உங்கள விட்டா இப்போ யாரும் உதவி செய்ய இல்ல” என்று எதையோ கூற முயல,

“என்னால எந்த ஒரு உதவியும் உங்களுக்காக செய்ய முடியாது மேடம். முதல்ல இந்த இடத்தை விட்டு கிளம்புங்க” என்று அவளை வெளியே அனுப்புவதிலே குறியாக இருந்தான்.

“ஒரு நிமிஷம் ப்ளீஸ் நான் சொல்றதை கேளுங்க. என்னால இதை இப்போ யார்கிட்டேயும் சொல்ல முடியல சொன்னா கூட நம்புவாங்களான்னு தெரியல” என்று அவனிடம் வழக்கத்திற்கு மாறாக கெஞ்சினாள்.

அவளின் கெஞ்சல் பிடிக்காமல், “சரி எதுனாலும் சீக்கிரமா சொல்லுங்க மேடம். எனக்கு நீங்க இப்படி கெஞ்சுறது பிடிக்கலை” என்று அவன் சொல்லும் போது யாரோ அவர்கள் இருவருக்கும் தெரியாமல் கதவை சாற்றி வெளிப்புறம் தாழ்ப்பாள் போட்டுவிட்டனர்.

இதை அறியாத அவர்கள் இருவரும் அந்த அறையிலேயே பேசத்தொடங்கினர்.

                                               ***

இங்கே நிச்சய பத்திரிகை வாசிப்பதற்காக பெண்ணையும் மாப்பிள்ளையும் அழைக்க இருவருமே வருகை தந்திருந்தனர்.

மாப்பிள்ளை முகத்திலும் பெண்ணின் முகத்திலும் எந்த விதமான உணர்வுகளும் இல்லாமல் நிர்மலமாக இருந்தது. அவர்கள் முகம் மட்டுமின்றி அங்கிருந்த அனைவரது முகமும் நிர்மலமாகதான் இருந்தது.

அங்கிருந்த அனைவருக்கும் குழப்பமாகவே இருந்தது. ஆனால் ஏன் இப்படி? என்று கேள்வி கேட்கதான்  முடியவில்லை. ஏனெனில் அங்கு விருந்தினராக பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வருகை தந்திருந்தனர்.

பரணிதரன்தான் இறுகிய முகத்துடன், ”பத்திரிகையை வாச்சிங்க ஐயரே” என்று சொல்ல,

அவரும், ”சரிங்க ஐயா” என்று பஞ்சாங்கத்தை வாசிக்க தொடங்கினார்.

அதில் திரு பரணிதரன், திருமதி சௌந்தர்யாவின் புதல்வன் திருச்செல்வன் அபிநந்தனுக்கும், திரு பாண்டியன் திருமதி இந்திரா அவர்களின் புதல்வியுமான திருச்செல்வி பூங்குழலிக்கும் வருகின்ற மாதத்தில், தேதியை கூறி திருமுகூர்த்தத்தில் கல்யாணம் என்று பஞ்சாங்கம் வாசித்தார் அந்த ஐயர்.

“இரு குடும்பமும் தட்டை மாத்திக்கோங்கோ” என்று சொல்ல,

கணவரில்லாத இந்திராவோ சற்று தயங்கி பின் வாங்க, அவருக்கு பதிலாக அந்த தட்டை சதாசிவமும் சீதாலட்சுமியுமே வாங்கினர்.

அதன் பின் அபி மற்றும் பூங்குழலி இருவரும் நிச்சய மோதிரத்தை மாற்றிக் கொண்டனர்.

பின் விருந்தினர்கள் அனைவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தவர்கள் சொந்த பந்தங்கள் யாவும் கிளம்பும் வரை அமைதியாக இருந்தனர்.

அவர்கள் கிளம்பிய அடுத்த நொடியே பரணிதரன் கத்த தொடங்கி விட்டார்.

“முதல என்னோட வாழ்க்கையில ஒரு அவமானம் வந்துச்சி. இப்போ எனக்கு பையனா பொறந்த பாவத்துக்கு அவனுக்கும் அவமானத்தை தேடி கொடுத்துட்டேனே” என்று கத்தி கூப்பாடு போட்டார்.

“இதுக்கெல்லாம் காரணம் நீங்கலாம்தான்” என்று ஆத்திரமாக கிருஷ்ணவேணி மற்றும் சீனிவாசனை பார்த்து கூறினார்.

 ***

“அபிக்கு இந்த கல்யாணத்துல சுத்தமா விருப்பமே இல்லையாம் கரண். அவனும் என்னைய மாதிரி ஒன் சைடா உங்க தங்கச்சி பூங்குழலிய லவ் பண்றானாம். அது எங்க வீட்ல கல்யாண விஷயம் பேசும்போதுதான்  என்கிட்ட தனியா பேசணும்னு சொல்லி சொன்னான்” என்று ஆதினி சொல்ல,

முதலில் சொன்னதை கேட்டு அவன் மீது கோபம் வந்தாலும் இதை எதற்காக தன்னிடம் சொல்கிறாள் என்ற பாவனையே இருந்தது அவன் முகத்தில்.

அவனது முக பாவத்தை பார்க்க கடுப்பை கொடுத்தது அவளுக்கு. ஆனால் கோபம் வந்தது இவள் அறியாதது அல்லவா. ‌

“இதெல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்றீங்க மேடம்” என்க.

“விஷயம் இருக்கு கரண், அதுனாலதான்  இதுல இருந்தே சொல்றேன்” என்றவள் தொடர்ந்தாள்.

“முதல்ல அவன் என்னைய காதலிக்கிறதா சொல்லி குண்டை தூக்கி போட்டான். அப்புறம் அவனே சொன்னான் அது மிளனி எங்களை பார்த்துட்டு இருந்ததாலதான்  ‌சொன்னானாம். அதுக்கப்புறம்தான்  அவன் பூங்குழலியை காதலிக்கிற விசயத்தை பத்தி சொன்னான்.

இதுல என்ன விசயம்னா அவ இவனோட காதலை சொல்லிருக்க பூவு மறுத்திட்டா போல. அதுக்கு அவளை வெறுப்பேத்திறதுக்காகவே என்னைய பார்த்து ஃப்ளவர்ன்னு சொல்லிருக்கான். நிச்சயத்தன்னைக்கு எப்படியாவது நிறுத்தி தன் காதலை சொல்லிடுறேன், நீ கவல படாதன்னு சொன்னான்.

ஆனா என்னால அப்படி நிம்மதியா இருக்க முடியல. எப்படியாவது இந்த நிச்சயத்தை நிறுத்தணும்னு  யோசிச்சிட்டே இருந்தேன். அது மட்டும் இல்லாமல் எனக்கு உன்ன பாக்காம இருந்தது அவ்வளோ கஷ்டமா இருந்தது. என்னால அதை தாங்கிக்கவே முடியல.

அப்போதான்  அத்தை திடீருன்னு என்னையும் அபியையும் கோட்டையூர்ன்னு ஊருக்கு அவசர அவசரமா கூட்டிட்டு போனாங்க.

முதல யாரோ ஒருத்தரோட வீடுன்னுதான் உள்ள போனோம். அப்போதான்  தெரிஞ்சது அது பரணிதரன் மாமா வீடுன்னு” என்று நிறுத்தியவள் திடீரென அழ ஆரம்பித்து விட்டாள்.

திடீரென்று ஆதினி அழுகவும் வசிக்கு ஒன்றும் புரியவில்லை.

காரணங்கள் இல்லா அவளின் அழுகை அவனை ஒரு நொடி அசைக்கவே செய்தது.

“மேடம் எதுக்கு இப்போ அழுகுறீங்க சொல்லுங்க மேடம்” என்று பதறினான் அந்த ஆறடி ஆண் மகன்.

“அங்க…  அங்க” என்று திக்கியவள் தொடர்ந்து அழுக,

“அங்கன்னா எங்க மேடம்? உங்களுக்கு இப்போ என்ன ஆச்சி?” என்று தவிப்போடு கேட்க,

“கரண் கரண் அங்க அங்க நான் பாத்தத எப்படி சொல்லுவேன்” என்று அழுகையின் பிடியில் பீடிகை போட.

“என்னன்னு சொல்லுங்க மேடம்? எதை பாத்தீங்க நீங்க?”

“கரண்” என்று அவனை கட்டிக்கொண்டவள், ”நான் அங்க பார்த்தது நங்கை அத்தையோட புகைப்படத்துக்கு மாலை போட்டிருந்ததைதான்” என்றாள் இறுதியாக.

அவள் கட்டியணைத்த நொடி இருந்த அதிர்வு அடுத்து கூறிய செய்தியில் உறைந்தே விட்டான்.

அதேநேரத்தில் சதாசிவம் கூனி குறுகி நிற்க, இருவரும் காணோம் என்றதில் நங்கைக்கு பங்கிருக்கும் என்று அவரை அங்கே வரவைத்தார்‌.

அவ்வீட்டிற்குள் நுழைந்தவளைக் கண்டு ராஜவேலின் இதழ்கள் அதிர்ச்சியில், ”குட்டிமா…” என்று கண்ணில் நீர் தேங்கியது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!