நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!12

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!12

அத்தியாயம் 12

மங்கிய இரவு இப்பவோ அப்பவோ என்று மழை வருவதற்காக மேகங்கள் சூழ தொடங்கியது. காற்றின் வேகம் பயங்கரமாக இருந்தது அதற்கு கூடவே மின்னலின் வெளிச்சமும் வந்து சென்றது.

“வசி நீ உன்னோட அப்பாவுக்கு ஃபோன் பண்ணி இங்க வர சொல்லு. எனக்காக இல்லைனாலும் உனக்காக இந்த நேரத்துல உன்னோட அப்பா இங்க இருக்கணும் பா. நீ கூப்பிடு?” என்று கதிரையில் அமர்ந்த படியே சொல்ல,

அவனுக்கு தன்னை தன் அன்னைக்கு தெரிந்து விட்டது என்று எண்ணி சந்தோஷபடுவதா? இல்லை இப்படி ஒரு நிலையில்தான் தன் அன்னைக்கு என்னை தெரிந்திருக்கிறது என்று வருந்துவதா? என்று தெரியவில்லை. அதுவும் அந்த நிலைக்கு தானே கொண்டு வந்ததை எண்ணி உள்ளுக்குள்ளே மறுகி போனான்.

“தம்பி வசி, அப்பாக்கு போன் போடு” என்று அழுத்தம் கொடுக்க,

“அப்படி ஒருத்தன் இருந்தா தானே இவன் கால் பண்றதுக்கு” என்று நக்கலாக பரணிதரன் கூற,

அவரை உறுத்து விழித்த நங்கை மகனை காண அவனோ, ”இதோ பண்றேன்மா” என்று மொபைலை எடுத்து டையல் செய்தான்.

“அவனுக்கு அப்பா இருக்காங்கன்னு நான் சொல்றேன். அது யாருன்னு நீங்க அவரு வந்ததும் தெரிஞ்சிக்கோங்க. அதுவரைக்கும் உங்களுக்கு கொஞ்சமாச்சும் மூளைய யோசிக்க வைக்கணும்ல” என்றவர்,

”அவனோட அப்பா உங்க எல்லாருக்கும் ரொம்ப பழகியவர்தான். அதுவும் அத்தான் உங்களுக்கு ரொம்பவே பழக்கம்” என்று கசந்த புன்னகையை புரிந்தார்.

***

“விபு இங்க கொஞ்சம் என்னோட ரூம்க்கு வா” என்று அழைப்பு விடுத்தார் பாரிவேந்தர்.

“எதுக்கு இவரு நம்மள கூப்பிடுறாரு” என்று யோசித்தபடியே அவரது அறையை நோக்கி நடையிட்டான் விபுனன்.

நாகரீகம் கருதி கதவை தட்டி உள்ளே வந்த விபுனன், “சொல்லுங்கப்பா ஏதாவதுஇம்பார்டண்ட் நியூஸா” என்று பாரியை பார்த்து கேட்க,

“ஆமாடா. கொஞ்சம் முக்கியமான விஷயம்தான்” என்று முடிக்க,

“சொல்லுங்கப்பா என்ன விஷயம்னு” என்று அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்தான் விபுனன்.

“டேய் நீ இந்த பேஸ்புக் அப்புறம் ஏதோ சொன்னாங்களே ஹான் அந்த இன்… இன்ஸா” என்று வார்த்தை வராமல் யோசிக்க,

“இன்ஸா என்ன சொல்றீங்க பா…  எனக்கு ஒன்னும் புரியலையே” என்று குழம்ப,

“அதான்டா இந்த போட்டோ கூட அதுல போட்டு ஏதோ வாங்குவாங்கலாமே, எனக்கு அது சரியா தெரியலடா. ஆனா ஏனோ ஒன்னு இன்ஸ்லதான்  ஸ்டார்ட் ஆகும்”

“நீங்க இந்த லைக்ஸ் வாங்கிறதுக்காவே போட்டோஸ் போஸ்ட் போடுற இன்ஸ்டாகிராம் சொல்லலையே”

“ஹான் அதேதான் விபு சொல்ல வந்தேன். ஆனா நேம்தான் மறந்து போச்சி. இந்த பொண்ணுங்க நம்பர் இல்லைனாலும் இதுல உங்க அக்கௌன்ட் நேம் கேக்குறாங்கடா. பாக்க பாவமா தெரியுது அதான் இதுல ஒரு அக்கௌன்ட் ஓப்பன் பண்ணலாம்னு இருக்கேன்” என்று பாரி மேலே பேச பேச விபுனன் தலையில் கை வைத்து விட்டான்.

“என்னடா இப்படி தலையில கை வச்சி உட்கார்ந்துட்ட”

“நான் கூட நீங்க கூப்பிடவும் ஏதோ முக்கியமான வேலையோன்னு நினைச்சி, பாத்துட்டு இருந்த அக்கௌன்ஸ் வேலைய விட்டுட்டு வந்தேன். வந்து என்னென்னு கேட்டா பேஸ்புக் ஓப்பன் பண்ணி குடு, இன்ஸ்டாகிராம் ஓப்பன் பண்ணி குடுன்னு சொல்லிட்டு இருக்கீங்க” என்று அங்கலாய்த்து கொண்டான்.

“டேய் இப்போதைக்கு அதை விட இதுதான்  முக்கியம்டா மகனே”

“அப்பாஆ”

“கத்தாத விபு. இப்போ உனக்கு பாஸ் உன் தோஸ்த் இல்ல நான்தான். சோ நான் சொல்றதை நீ கேளு” என்று உத்தரவிட்டார்.

பல்லை கடித்தவன், “சரி சொல்லுங்க இப்போ உங்களுக்காக என்ன பண்ணணும்”

“அதுதான் நல்ல புள்ளைக்கு அழகு. நீ இப்போ என்ன பண்றன்னா எனக்கு அந்த பேஸ்புக்லையும் இன்ஸ்டாகிராம்லையும் ஒரு அக்கௌன்ட் ஓப்பன் பண்ணி நல்ல போட்டோவா டீபில வை” என்று அவனுக்கான வேலையை சொல்லி முடித்தார்.

“சரிப்பா  பண்ணி தரேன்” என்றவன் அவரது மொபைலை வாங்கி ஓப்பன் செய்து கொடுத்தான்.

அதனை பார்த்த பாரி, “என்னடா போட்டோ வச்சிருக்க நல்லாவே இல்லை. இவ்வளவு கேவலமான போட்டாதான்  என்னோட டீபியா வைப்பியா. அப்போ எந்த பொண்ணுடா என்கிட்ட பேச விரும்பும்” என்று பொரிந்து தள்ள,

“அய்யோ! இவரு என்ன என்னைய போட்டு இப்படி கொல்றாரே” என்று தலையில் அடித்துக் கொண்டவன் அவருக்கு விருப்பமான புகைப்படத்தையே டீபியாக வைத்தான்.

“அதான் இப்போ எல்லாம் முடிஞ்சிடுச்சே நான் போய் எனக்காக இருக்கிற வேலையை போய் பாக்கலாமா” என்க.

“ஹோ ஷ்யூர் மேன்” என்று கைக் காட்டிட,

அவன் வெளியே செல்வதற்குள் வசியிடமிருந்து அழைப்பு வரவே, அந்த இடத்தில் இருந்தே அழைப்பை ஏற்று புகார் வாசிக்க தொடங்கினான்.

“டேய்! மச்சான் கொஞ்சம் சீக்கிரமா இங்க வாடா. உங்க அப்பா தொல்லை தாங்கல, என்னைய ரொம்ப டார்ச்சர் பண்றாரு. நீ அங்க உட்கார்ந்துகிட்டு ரொம்ப சந்தோஷமா இருக்க. ஆனா இங்க உங்க அப்பா கிட்ட மாட்டி கஷ்டப்பட்றேன்டா. ப்ளீஸ் மச்சான் வந்திடு” என்று பாரியை பார்த்தவாறே வசியிடம் புகார் வாசித்தான்.

“விபு” என்று குரல் உடைந்து போய் அழைத்தான் வசீகரன்.

ஒரு நொடியிலே அவன் குரலின் மாற்றத்தை உணர்ந்து கொண்ட நண்பன், “என்ன ஆச்சி வசி? அங்க ஏதாவது பிரச்சனையா? இல்லை அந்த பொண்ணு ஆதினிக்கு ஏதும் ப்ராப்ளமா” என்று விபுனன் கேட்க,

“மச்சான்!  அம்மா” என்று நிறுத்த,

“அம்மாக்கு என்ன ஆச்சி சொல்லுடா வசி” என்று பதறினான் விபுனன்.

“அம்மா” என்று வார்த்தையிலே பாரிக்கு ஏதோ தவறாக பட, கண்ணம்மாவிற்கு ஏதோ ஆபத்து என்று புரிந்த நொடி அவனிடமிருந்து அலைபேசியை பிடுங்கி விட்டார்.

அதே நேரத்தில், இங்கு வசியின் தடுமாற்றத்தை உணர்ந்து, அதுவுமின்றி தான் சொல்லாமல் தன்னை காண வரகூடாது என்று நிர்ப்பந்தம் போட்டிருப்பது ஞாபகத்திற்கு எட்டவும், அவனிடமிருந்து அலைபேசியை கைப்பற்றினார் நங்கை.

ஒரேநேரத்தில் இருவரும், “ஹலோ” என்று அழைத்தனர்.

இருவருக்குள்ளுமே அந்த அழைப்பு ஏதோ உயிர்வரை தீண்டி என்னவோ சொல்லொணா உணர்வுக்குள் ஆட்கொள்ள வைத்தது.

“கண்ணம்மா…” என்று கண்கள் கலங்கியவராய் அவர் அழைக்க,

அவரின் அழைப்பு அவரை கலங்கடித்தாலும் தைரியமாகவே, ”உங்களுக்கான நேரம் இங்க வந்துடுச்சிங்க. நீங்க இப்போ ஆதினி வீட்டுக்கு வாங்க. எவ்வளோ சீக்கிரமா வர முடியுமோ அவ்வளவு சீக்கிரமா வாங்க. இது நம்ம பையன் வாழ்க்கை சம்பந்தப்பட்டதுங்க” என்றார்.

“நான் சீக்கிரமா வரேன்” என்றவரின் குரலில் அத்தனை கடுமை இருந்தது.

“உங்களுக்காக நானும் நம்ம பையனும் காத்திட்டு இருக்கோம்ங்க” என்றவரது பேச்சில் பாரியின் இதழ்களும் புன்னகை பூசியது.

“பத்திரமா இருங்க ரெண்டு பேரும் நான் வந்திடுறேன்” என்று அழைப்பை துண்டித்தவர் துரிதமாக செயல்பட தொடங்கினார்.

அவரின் துரிதமான செயலால் அடுத்து வந்த நான்கு மணிநேரத்தில் செம்மலபுரம் உங்களை வரவேற்கிறது என்ற பலகையைக் கடந்து வண்டி சீறிப்பாய்ந்து வந்தது.

அங்கிருந்த அனைவருக்கும் யார் வரப்போக்கிறார்கள்? யாரையோ வந்து காட்டப்போகிறார்கள் இதற்கு இத்தனை நேரம் காத்திருக்க வேண்டுமா என்பது போல் இருந்தது அந்த குடும்பத்திற்கு.

அந்த குடும்பத்தை சார்ந்த இளவரசிகளான ஆதினியின் கண்களும் சௌந்தர்யாவின் கண்களும் மட்டுமே அப்பப்போ வெளியே சென்று சென்று மற்றவர்கள் மீது பதிந்தது.

“உனக்காக நாங்க எதுக்கு இங்க இருந்து நேரத்த போக்கணும். ராஜா வண்டியை எடு பா. நாம போகலாம்” என்று மகனிடம் பாய்ந்தார் அன்னை நாச்சியார்.

அவரால் எதுவும் வாய்திறந்து பேச முடியவில்லை. அவருக்கு இத்தனை வருட தவமாக இன்றுதான் பெண்ணையே பார்த்திருக்கிறார். அவருடன் சேர்ந்து பேரனை பார்த்ததில் சந்தோஷம் கூடிய கவலை அவரை ஆட்கொள்ள வைத்தது.

அவருக்கும் ஆசை இருக்காதா என்ன? அவருக்கு இருப்பதோ ஒரு பெண் அதுவும் ஆசையாக வளர்த்த பெண்ணின் வாழ்க்கை இப்படி போனதற்கு ஒரு காரணம் அவரும் அவர் குடும்பமும் தானே. காலம்தான் அவரின் தவறை உணர்ந்து கொள்ள செய்தது.

“ராஜா வர போறியா இல்லையா” என்று அதட்டல் விட, நங்கை அவரை ஒரு கசந்த புன்னகையோடு நேர் பார்வை பார்த்தார்.

“இதோம்மா” என்றவர் நங்கையையும் வசீகரனையும் பார்த்தவாறே முன்னேறி செல்ல, அதற்குள் ஒரு கார் அசுர வேகத்தில் உள்ளே வந்து சடன் ப்ரேக் போட்டு நின்றது.

வந்த வேகம் புழுதியை கொடுத்ததால் வெளியில் வந்த நாச்சியாரின் குடும்பம் மொத்தமும் புழுதியின் தாக்கத்தினால் அவர்கள் கண்கள் யாவும் தானாக மூடியது.

அவர்களை பார்த்த பாரிக்கு உள்ளுக்குள் ஏதோ பிசைந்தது. ஆனால் தைரியமாக நிமிர்ந்த பார்வையோடு கீழே இறங்கியவரை கண்ட மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் வாயை பிளந்து நிற்க‌, பரணியோ சிலைப்போல் நின்றுவிட்டார்.

இறங்கிய பாரிவேந்தர் வேக நடையுடன் அவர்களை கடந்து உள்ளே செல்ல, அவர் பின்னே விபுவும் சென்றான். ஆதினி ஓடிச்சென்று அவரை இன்முகத்துடன் வரவேற்றாள்.

“வாங்க மாமா வாங்க” என்று புன்னகையோடு வரவேற்க,

சதாசிவத்திற்கு அத்தனை கோபம் பெருக்கெடுத்தது மகளின் மேல், ஆனாலும் அமைதி காத்தார் அங்கு என்னதான்  நடக்கின்றது என்று தெரிந்து கொள்வதற்கு.

உள்ளே வந்தவர் தன் கண்ணம்மாவின் நிலையை பார்த்து கலங்கி போனார் பாரிவேந்தர்.

அதற்குள் உள்ளே சென்று சௌந்தர்யா பாரிக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, அதனை வாங்கியவர், ”எப்படி இருக்க மா?” என்று அன்போடு கேட்க,

“நான் நல்லா இருக்கேன் ண்ணா. நீங்க நல்லா இருக்கீங்களா?” என்றார் கலங்கிய குரலுடன். 

கசந்த புன்னகையை அளித்தவர், ”இத்தனை வருஷமா கடமைக்கு வாழ்ந்தேன்மா. இனி குடும்பமா சந்தோஷமா வாழ்வோம்” என்றவரின் பார்வை முழுதும் கண்ணம்மாவின் மீதே இருந்தது.

சௌந்தர்யா நிம்மதியான புன்னகையை கொடுத்து ஒதுங்கி நின்று கொண்டார்.

பாரியின் விழிகள் அடுத்ததாக வசியின் மீது விழ, “நீ பாரி, தேவ நங்கையோட மகன்டா. எப்போதும் தலை நிமிர்ந்து இருக்கணும். தப்பு பண்ணாலும் நேர்பார்வையோடுதான் எதிர் கொள்ளணும்டா தம்பி. அப்படிதான் உங்க அம்மா இருப்பா. தப்பே பண்ணாத பட்சத்தில் நீ தலை கவிழ்ந்து இருக்க கூடாது” என்று அறிவுரை வழங்கினார்.

அதில் வசீகரனும் நேர் பார்வையோடு அனைவரையும் எதிர் கொள்ள, விபுனன் அவன் பக்கத்தில் பக்கபலமாக நின்று கொண்டான்.

கண்ணம்மாவிடம் சென்ற பாரிவேந்தர், “இத்தனை வருஷமாச்சா உனக்கு என்னைய கூப்பிட? சொல்லு… உனக்காக நானும் நம்ம பையனும் காத்திட்டு இருந்தோம்”

“நான் உங்க ரெண்டு பேரையும் நினைச்சிட்டுதான்ங்க எப்போதும் இருப்பேன். என் மனசு எங்க இருந்தாலும் உங்கள பத்தின சிந்தனையில மட்டும்தான் இருக்கும்னு உங்களுக்கு தெரியாதா சொல்லுங்க” என்று சாவகாசமாய் இருவரும் பேச,

அதில் கோபமடைந்த நாச்சியார் பாரியை நோக்கி, “இப்படி உண்ட வீட்டுக்கு எப்படி உன்னால ரெண்டகம் பண்ண முடிஞ்சது” என்று காரி துப்பினார்.

“பாட்டி வார்த்தைய அளந்து பேசுங்க. அவரும் ஒன்னும் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ற ஆளு இல்லை. பேசுற வார்த்தைய பார்த்து பேசுங்க” என்று கைநீட்டி எச்சரிக்கை விடுத்தார் நங்கை.

“ஏய்!  எங்க அம்மாவ பார்த்து கை நீட்டி பேசுற அளவுக்கு நீ ஒன்னும் ஒழுக்கமானவ கிடையாது. கல்யாண பண்றதுக்கு முன்னாடியே வயித்துல இதோ இவனை சும்மந்தவ தான நீ. உனக்கு வாய திறக்க கூட தகுதி இல்ல” என்று வார்த்தையால் சீண்டினார் கிருஷ்ணவேணி.

அவரது வார்த்தைகள் யாவும் இதயத்தில் குத்தினாலும், இது அமைதியாக இருக்க வேண்டிய நேரம் கிடையாது என்றுணர்ந்த நங்கை வாயை திறப்பதற்குள் பாரிவேந்தர் முந்திக்கொண்டார்.

“உங்களுக்கு தெரியுமா நங்கைக்கு கல்யாணம் ஆகலைன்னு. சொல்லுங்க  உங்களுக்கு தெரியுமா எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகலைன்னு” என்று ஆங்காரமாக கத்த,

“இதுல தெரிய என்ன இருக்கு. இவ லட்சணம்தான் இந்த குடும்பத்துக்கே தெரியுமே. அதான் யாருக்கும் தெரியாம ஓடுகாளி வீட்ட விட்டு ஓடுச்சே”

“டேய் விபு! காருல இருக்கிற பெட்டிய எடுத்திட்டு வாடா” என்று கட்டளையிட,

அவனும் சென்று அவர் சொன்னது போல் அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான்.

அதிலிருந்து சில பேப்பர்களை எடுத்த பாரி, “நல்லா கேட்டுக்கோங்க, எனக்கும் நங்கைக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. அதுக்கான ஆதாரம்தான்  இது. பாத்துக்கோங்க இது எங்களுக்கு நடந்த பதிவு கல்யாணத்தோட ப்ரூஃப்” என்று சபையின் முன் வைத்தார்.

இதனை கேட்ட கண்ணம்மா அதிர்வோடு கலங்கி போய் நின்றவரை  கைகளுக்குள் கொண்டு வந்து தைரிய படுத்தினார்.

அதனை பார்த்த அனைவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் திணறி போய் நிற்க, “அப்போ எதுக்கு இத்தனை வருஷமா இவ இந்த ஊருல தனியா இருந்தா” என்று பேச்சியம்மாள் கேட்க,

“அது எங்களோட தனிப்பட்ட விஷயம், அது உங்க யாருக்கும் தெரியணும்னு  அவசியம் இல்லை”

“ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சிக்கோங்க. தேவநங்கை என் மனைவி… என்னோட கண்ணம்மா. அவளை பத்தி ஒரு வார்த்தை தப்பா பேச உங்க யாருக்கும் தகுதி இல்லை. இத்தனை வருஷத்துல ஒருநாளாவது இவளை தேடி வந்திருப்பீங்களா சொல்லுங்க. என்னதான்  தப்பே செஞ்சிருக்கட்டுமே அதை திருத்துறதை விட்டுட்டு அந்த தப்பையே அழிக்க பாப்பீங்களா நீங்க? இதுவே உங்க பேரன் பண்ணி இருந்தா அவனை அழிக்க நினைச்சிருப்பீங்களா சொல்லுங்க? பொண்ணா பிறந்ததால இவளுக்கு எவ்வளோ கஷ்டத்தைதான்  கொடுப்பீங்க.

நீங்க பண்ணின தப்புனாலதான்  இன்னவரைக்கும் யாருமில்லாம இருக்கீங்க. முதல உங்க வீட்டு பசங்களை நம்புங்க. அதுவே அவங்களை சரியான பாதையில் கொண்டு போகும். நான் அப்படிதான்  என்னோட மகனை வளர்த்திருக்கேன். அவன் ஒரு பொண்ணை தப்பான பார்வை கூட பார்க்க மாட்டான்” என்றவர் சதாசிவத்திடம் திரும்பி,

”நீங்க உங்க பொண்ணை நம்புங்க அவ உங்களுக்காக எதையும் செய்வா அதேதான்  நங்கைக்கும் பண்ணா. உங்களுக்கு ஆதினி மேல நம்பிக்கை இல்லைன்னாலும் பரவாயில்லை. ஆனா நீங்களே அவளை அசிங்க படுத்திடாதீங்க. அது அவளை உயிரோடவே கொல்றதுக்கு சமம்” என்று பாரி ஆதங்கத்துடன் கூற சதாசிவம் தவறை உணர்ந்து தலை கவிழ்ந்தார்.

“இங்க வாம்மா ஆதினி” என்று அழைக்க,

சுற்றியிருந்த அனைவரையும் பார்த்தவள், அவரிடம் சென்று, ”சொல்லுங்க மாமா” என்க.

“நீ என்னை மன்னிக்கணும்மா. இன்னைக்கு இந்த சபைல நீ அவமான பட என் மகன் காரணம் இல்லைனாலும் அவனை வச்சிதான் உனக்கு இந்த அந்நியாயம் ஏற்ப்பட்டிருக்கு. அப்புறம் இத்தனை வருஷமா உங்க அத்தையை எனக்கு பதிலா பாதுகாத்ததுக்கு நன்றி மா”

“மாமா என்ன நீங்க பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க. நான்தான்  மாமா உங்க கிட்ட மன்னிப்பு கேக்கணும். நான் மட்டும் கரனை காதலிக்காம இருந்திருந்தா இவ்வளோ பெரிய பிரச்சினை நடந்திருக்கவே நடந்திருக்காது. ஆனா அதுவும் ஒரு வகையில நல்லதுதான். என்னோட காதல் சேரலைனாலும் இங்க இருக்கிற இரண்டு காதல் இணைந்திருக்கு. அதுவே எனக்கு சந்தோஷம்தான் மாமா” என்று அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.

வசீகரனிடம் நங்கையை ஒப்படைத்த பாரி, பேச்சியம்மாளிடம் திரும்பி, “நங்கையாலதான்  உங்க பொண்ணுக்கு கல்யாணம் நடந்துச்சி. அதுனால உங்க பொண்ணு ஒன்னும் விருப்பம் இல்லாம வாழலையே. விருப்பப்பட்டுதானே வாழ்ந்துட்டு இருக்காங்க. உங்கள விட்டு தூரமா இருக்காங்க அதை தவிர்த்து வேற எந்த ஒரு குறையும் அவங்க வாழ்க்கையில இல்லையே. அப்புறம் ஏன் நங்கையோட வாழ்க்கையை அவதூறா பண்றீங்க. இது எந்த வகையில நியாயம் சொல்லுங்க. உப்பு சப்பில்லாத காரணத்தை கொண்டு அவ வாழ்க்கையில எப்போதுமே ஒதுங்கி இருக்க வச்சிட்டீங்களேம்மா.

அப்புறம்  உங்க மாப்பிள்ளைக்காக நீங்க செஞ்சது எல்லாம் சரிதான். ஆனா தலையாட்டி பொம்மையா இருக்காதீங்க சார். ஆதினி மாதிரியான தைரியமான பொண்ண வச்சிட்டு இந்த ராசி இல்லாதவ அது இதுன்னு சொன்னா நம்பிடாதீங்க ப்ளீஸ். அது தவறுதலா நடக்கிற விஷயம்தான் . இதுக்கு போய் ஒருத்தரை காரணம் சொல்றது நல்லது இல்லை.”

ராஜவேலை பார்த்து, “உங்களுக்கு நல்லாவே தெரியும் நங்கையோட நிலைமை பற்றி. ஆனாலும் நீங்க அவளுக்கு துணை இல்லாமல் பொய்ட்டிங்க. உங்க கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல ஐயா. உங்களை பார்த்து பெருமை பட்ட நாள் எல்லாம் இந்த ஒரு விஷயத்துல தூசியா பொய்டுச்சி”

“அய்யோ நான் என் பொண்ணை நம்பாம போயிட்டேன். இங்க உள்ளவங்களுக்காக என் பொண்ணோட மனசை கொன்னுட்டேனே” என்று கதறி அழுதார் அந்த பெரியவர்.

இறுதியாக பரணியிடம் வந்து, “இப்பவும் அப்பவும் பெரிதாக பாதிக்கப்பட்டவரு நீங்கதான்  ண்ணா. உங்க கிட்ட வேலை செய்த நாள்ல இருந்தே நீங்க என்னைய ஒரு வேலைக்காரனா பார்த்தது இல்லை. கூட பிறந்த தம்பி போலதான் பார்த்துக்கிட்டிங்க. நீங்களாவது நங்கைக்கு நடந்த அந்நியாயத்தை கேட்டு இருக்கலாமே ண்ணா. உங்களுக்கு தெரிய வேணாமா உண்மையாவே அவ எதுக்கு அந்த கல்யாணத்தை நிறுத்தினான்னு, கொஞ்சம் யோசிச்சு இருக்கலாமே ண்ணா.

பரவால்லை விடுங்க. ஆனா உங்களுக்கு ஒரு நன்றி சொல்லியே ஆகணும் ண்ணா. எப்போ நங்கை இங்கதான் இருக்காங்கன்னு தெரிஞ்சதோ அப்போ இருந்தே அவங்களை இந்த ஊர விட்டு அனுப்பாம வச்சதுக்கு நன்றி ண்ணா. எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி” என்று கை எடுத்து கும்பிட்டு விட்டு வெளியேறிவிட்டார் பாரிவேந்தர்.

அங்கிருந்த அனைவரும் செல்லும் அவர்களை பார்த்திருந்தனர். தவறு செய்தவர்கள் குற்றஉணர்வில் கூனி குறுகி போய் நின்றனர். இதில் ஆதினி மட்டும் மாறுபட்டவளாக வெளியில் சந்தோஷத்தை காட்டி உள்ளுக்குள் நங்கையின் பிரிவையும் வசியின் பிரிவையும் கண்டு நொறுங்கி போனாள். தேற்ற ஆளின்றி தனித்து நின்றாள்.

இத்தனை ஆண்டுகளாக வெறும் ராசியில்லாத நங்கையாக அவ்வூரில் வலம் வந்தவர், இன்று பாரியின் மனைவி நங்கையாக அங்கீகாரத்தோடு அவ்வூரை விட்டு வெளியேறினார்.

அங்கிருந்த ஒவ்வொருவரின் சுயநலத்துக்காக மட்டுமே ஒரு பெண்ணின் வாழ்வு பகடைகாயாக மாறி அப்பெண்ணின் வாழ்வே கேள்விக் குறியாக மாறியது ஏனோ?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!