நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா–15
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா–15
அத்தியாயம் 15
திருமண ஜோடிகள் மனிதர்களால் தேர்ந்தெடுப்பவர்கள் மட்டும் இல்லை. அது தேவர்களால் தீர்மானிக்கப்பட்டது. அதன் வழியே மனிதர்கள் தன் பாதைகளை அமைத்து செல்கின்றனர்.
நங்கையின் கழுத்தில் ஏறவேண்டிய மாங்கல்யம் பரணியின் கையில் இருக்க, அதிர்வுடன் அங்கே வந்திருந்த கமிஷ்னரை எதிர் கொண்டான்.
அங்கிருந்த மற்றவர்களுக்கு எதற்கு இவர்கள் திருமணத்தை நிறுத்த வந்திருக்கிறார்கள் என்று புரிபடவில்லை. ஒரு பார்வையாளராக நின்று வேடிக்கை பார்ப்பதோடு தங்களுக்குள் கிசுகிசுத்தனர்.
“என்னாச்சி சார்? எதுக்கு இப்படி தாலி கட்டுற நேரத்துல வந்து கல்யாணத்தை நிறுத்த சொல்றீங்க” என்று பரணியின் தந்தை சீனிவாசன் கேட்க,
“நீங்க யாருங்க முதல?” என்று அவர் கோபமாய் கேட்டார்.
“நான் மாப்பிள்ளையோட அப்பா, பொண்ணுக்கு மாமா” என்க.
“அப்போ உங்களதான் முதல ஜெயில்ல தூக்கி போடணும்” என்க, அனைவரும் அதிர்ந்து நின்றனர்.
“எதுக்கு என்னோட புருஷனை ஜெயில போட சொல்றீங்க, நாங்க யாருன்னு தெரியுமா உங்களுக்கு” என்று கோபமாய் கேட்டார் கிருஷ்ணவேணி.
“இப்படி மேஜர் ஆகாத பொண்ணை ஒரு பையனுக்கு கல்யாணம் பண்ண நினைச்சதுக்கு உங்க எல்லாத்தையும்தான் ஜெயில தூக்கி போடணும்” என்றார் ஆவேசமாக.
“உங்களோட சட்டத்தை எல்லாம் உங்களோடவே வச்சிக்கோங்க தம்பி. இது கிராமம், இங்க எங்களோட பஞ்சாயத்து மட்டும் போதும். நீங்க தேவையில்லாம இதுல வராதீங்க” என்று தன்மையாக வெளியேறும் படி நாச்சியார் பேச,
“அது எப்படி முடியும்? எங்க தப்பு நடந்தாலும் தட்டி கேட்கிற பொறுப்பில நாங்க இருக்கோம். இப்போ சரின்னு சொன்னா பிற்காலத்திலும் இதே போல்தான் நடக்கும். கிடைக்கிற வாழ்க்கை நல்லபடியா இருந்தா பரவாயில்லை. அதுவே மோசமான வாழ்க்கை கிடைச்சா என்ன பண்ணுவீங்க. இங்க எங்கேயுமே பசங்க வாழ்க்கை பாதிக்காது மொத்தமா பாதிக்கப்படபோறது என்னவோ பொண்ணுங்கதான். நாங்க வந்துருக்கிறது எல்லாமே உங்களோட பொண்ணு நல்லதுக்குதான். இங்க யாரும் அனாவசியமா வரல பாட்டி மா. எனக்கு கம்ப்ளெய்ண்ட் கொடுத்திருக்காங்க. அதுனாலதான் இப்போ இந்த கல்யாணத்தை நிறுத்த வந்திருக்கேன்” என்று நீண்டதொரு விளக்கத்தை கொடுத்தார்.
“இந்த ஊருல எந்த எடுப்பட்ட பயலுக்கு தைரியம் இருக்கு” என்று வாரிக் கட்டிக்கொண்டு வந்தார் நாச்சியார்.
“இப்போ நீங்க பண்றது மிரட்டல் மாதிரி இருக்கு” என்று எச்சரிக்கை விடுத்தார் அந்த கமிஷ்னர்.
“நீங்க சொல்ற மாதிரி எல்லாம் எதுவும் ஆகாதுங்க சார். இவங்க ரெண்டும் அத்தை பசங்க, மாமா பொண்ணுதான் சார். இவங்களோட விருப்பத்தோடதான் இந்த கல்யாணம் நடக்குது சார். கண்டிப்பா இவங்க நல்லா வாழுவாங்க சார்” என்று வார்த்தைக்கு வார்த்தை சார் போட்டு கிருஷ்ணவேணி அவரை சமாதான படுத்தி அனுப்பும் வித்தையில் இறங்கி விட,
“அப்படியா?” என்று புருவம் உயர்த்தினார்.
“ஆமாம் சார்” என்ற பதில் முடிப்பதற்குள், ”எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை” என்று எழுந்து நின்றாள் நங்கை.
நங்கையின் பக்கத்தில் அமர்ந்திருந்த பரணியோ அவளை அதிர்வோடு நோக்கினான். இத்தனை நேரம் எங்கே தன் கனவு வீணாகிவிடுமோ என்ற பதற்றத்தில் இருந்தவன் நங்கையின் பேச்சில் சுயவுணர்வு பெற்றான்.
“கேட்டுக்கோங்க” என்றவரிடம் ஒரு ஏளன புன்னகையைப் பார்க்க முடிந்தது.
“எதுக்கு இப்படி பொய் சொல்ற நங்கை. உன்கிட்ட கேட்டு தானே எல்லா ஏற்பாட்டையும் பண்ணோம்” என்று கிருஷ்ணவேணி பதறியவராய் நங்கையை முறைத்தவாறே கேட்டார்.
“இவங்க உன்னோட சம்மதம் கேட்டாங்களா மா” என்க.
“… “
“சொல்லும்மா பயப்புடாத. இங்க இருக்கிற யாராலும் உன்ன ஒன்னும் பண்ண முடியாது. தைரியமா எதுனாலும் சொல்லு மா” என்று தைரியமூட்ட,
அனிச்சையாக நங்கையின் விழிகள் பாரியை தேடியது. அவனோ வாயிலில் நின்று அவளையே பார்த்திட, இருவரும் ஒரு நொடியானாலும் கண்களாலே பேசினர்.
கண்ணசைவில் பாரி, ‘சொல்லு’ என்க, அவளும் தைரியம் வந்தவளாய் தந்தையின் கைபிடித்து, ”என்கிட்ட இவங்க இந்த கல்யாணத்தை பத்தி எதுவுமே சொல்லலை சார். நிச்சயத்தனைக்குதான் சொன்னாங்க. அதுக்கு முன்னாடி வரைக்கும் எனக்கு ஒன்னுமே தெரியாது. என்னாலையும் எதிர்த்து பேச முடியலை” என்று சொல்லி முடித்தாள்.
“நல்லா கேட்டுக்கோங்க, பொண்ணுக்கே இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டாங்க. அது மீறியும் இந்த கல்யாணத்தை பண்ண நினைச்சீங்க நான் சிவீயரா ஆக்ஷன் எடுக்க வேண்டி இருக்கும்” கர்ஜிக்கும் குரலில் எச்சரிக்கை விடுத்தார்.
“ரியலி சாரி சார், இது என் மிஸ்டேக்தான், படிச்ச பையனா இருந்தும் தப்பு பண்ண பாத்திருக்கேன். என்கிட்ட பொண்ணுக்கு சம்மதம்னு சொல்லிதான் இந்த கல்யாணத்தை சம்மதிக்க வச்சாங்க. இனி இப்படி ஒரு தப்பு நடக்காது” பரணிதரன் மன்னிப்பை வேண்டினான்.
“சரி நீங்க படிச்சவரு நாங்க சொன்னதும் புரிஞ்சுக்கிட்டிங்க. நீங்களே உங்க குடும்ப உறுப்பினர்களுக்கும் புரிய வச்சிடுங்க” என்று கூறி விடைப்பெற்றவர், போகும்போது பாரியிடம் ஒரு புன்னகையோடு விடைப்பெற்றார். இதனை பரணிதரன் கண்டு கொண்டான்.
நடந்து முடிந்த கலவரத்தில் எல்லாம் முடிந்தது என மக்கள் யாவரும் எழுந்து செல்ல போகையில் பரணியின் குரல் தடுத்தது.
“இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும், யாரும் இந்த இடத்தை விட்டு வெளிய போக வேணாம்” என்றவன் தன் குடும்ப உறுப்பினர்களை அழைத்து மணமகன் அறைக்குள் நுழைந்தான். அதில் பாரியும் நங்கையும் அதிர்ந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
***
அறைக்குள் நுழைந்த பரணிக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை.
“ஏன்டா பேராண்டி, நீ அந்த சிறுக்கிய கல்யாணம் பண்ணிக்க போறியா” என்று நாச்சியார் கேட்க,
“உங்களால இப்போ அசிங்கப்பட்டது பத்தாதோ. இன்னும் வேற படணுமா” என்று வார்த்தையால் அடித்தான்.
“ராசா” என்றார் கலங்கியவராய்.
“என்ன ராசா சொல்லுங்க என்ன ராசா…? நான் படிச்சு படிச்சு சொன்னேன், இந்த கல்யாணம் இப்போதைக்கு வேணாம்னு நீங்க கேட்டிங்களா சொல்லுங்க… அவ சின்ன பொண்ணு அவளுக்கு இப்போ கல்யாணம் பண்ணி வைக்க கூடாதுன்னு சொன்னேனா இல்லையா சொல்லுங்க…
நீங்களும் அம்மாவும் சேர்ந்து என்னை ப்ளாக் மெயில் பண்ணிங்க, என்னை படிக்க அனுப்ப மாட்டேன்னு சொல்லி… நானும் என் கனவுக்காக ஒத்துக்கிட்டேன் கடைசில… அதுதான் நான் பண்ண மிகப்பெரிய தப்பு. உங்களால என்னதான் பண்ண முடியும்னு பாத்திட்டு இருந்திருக்கணும், விட்டுட்டேன் அதான் இப்போ அனுபவிக்கிறேன்…
எனக்கு தெரியாது நீங்க என்ன செய்வீங்களோ, நான் இந்த மண்டபத்தை விட்டு போகும்போது என்னோட மனைவியோடதான் போகணும். ஏதாவது பண்ணி கல்யாணத்தை நடத்த பாருங்க” என்றவன் இருக்கையில் தொப்பென்று அமர்ந்து விட்டான்.
“ராசா திடீருன்னு பொண்ண எங்க இருந்துப்பா தேடுறது சொல்லு?” என்று கிருஷ்ணவேணி தயங்க,
ஒரு நிமிடம் யோசித்தவன், “அப்போ நான் கைக்காட்டுற பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க” என்றான்.
முதலில் அனைவரும் தயங்கி பின்னோக்க, இது கௌரவம் சம்பந்தப்பட்டது என்று புரிந்து, ”சரி யாரு அந்த பொண்ணு” என்று சீனிவாசன் அனைவருக்காய் கேட்க,
“நங்கையோட உயிர் தோழி சௌந்தர்யா” என்றான்.
அதன்பின் கிருஷ்ணவேணியும் சீனிவாசனும் பேச்சியம்மாளிடம் பேசி சம்மதம் பெற்று திருமணத்தை முடித்தனர்.
இதனை நங்கையும் பாரியும் புன்சிரிப்போடு பார்த்தனர்.
***
பரணியின் மனைவியாக அவ்வீட்டின் மருமகளாக அவ்வீட்டிற்குள் நுழைந்தாள் சௌந்தர்யா.
வீட்டிற்குள் வந்ததும் பூஜை அறைக்கு விளக்கேற்றி வழிபாடு செய்த பின்னரே அனைவரும் மூச்சு விட்டனர்.
அனைத்து சடங்குகளும் முடிந்த பின்னர், பாரியை அழைத்தான் பரணிதரன்.
திருமணம் முடிந்தவுடனே வீட்டிற்கு வந்த நங்கையை கூட பரணி அழைக்கவும், அவள் அறையிலிருந்து வெளியே வந்தாள்.
பரணி அழைத்ததும் உள்ளே வந்த பாரி, “சொல்லுங்க அண்ணா” என்க.
“எதுக்கு நீ இப்படி ஒரு காரியத்தை பண்ணின பாரி. நான் உன்னை ஒரு தம்பியா தானே பார்த்தேன், ஆனா நீ எனக்கு என்ன பண்ணி இருக்க சொல்லு” என்று அமைதியாக குரலில் தீர்க்கமாக கேட்க,
அதில் முதலில் அதிர்ந்தவன் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, ”உங்களோட நல்லதுக்குதான் பண்ணேன் அண்ணா” என்றான் தைரியமாய்.
“எது நல்லது, இப்படி ஊருக்கு முன்னாடி வச்சி என்னைய அசிங்க படுத்துவதா?” என்று அவன் கன்னத்தைப் பதம் பார்த்தான்.
அதில் நிலை தடுமாறி கீழே விழுந்தான் பாரி. அதனை கண்ட நங்கையும் சௌந்தர்யாவும் அவனை தூக்க முற்பட, கண்ணாலே வேண்டாம் என்று நங்கையிடம் விழியசைக்க, அப்படியே நின்றவள் சௌந்தர்யாவின் கையை இறுக பிடித்தாள்.
“நீங்க எவ்வளவு வேணா அடிச்சுக்கோங்க ண்ணா. ஆனா நான் உங்க நல்லதுக்குதான் செஞ்சேன். இதுல எந்த தப்பும் இல்லை. உங்களோட நல்லதுக்காகதான் நான் போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்தேன்” என்றான் எழுந்து நின்று.
அவன் கூறியதில் ஆத்திரம் பன்மடங்கு பெருக்கெடுக்க, பாரியை உதிரம் வரும் அளவிற்கு அடித்து வெளியே துரத்தி விட்டான் பரணிதரன்.
“உன்ன மாதிரி ஒரு நம்பிக்கை துரோகிய நான் பார்த்தது இல்லடா. இனி என் கண் முன்னாடியே நிக்காத பொயிடு” என்று உள்ளே வந்தவன் நங்கையை ஒரு புழுவை போல் பார்த்து விட்டு, சௌந்தர்யாவை அவளிடமிருந்து பிரித்து கூட்டிச் சென்றான்.
கண்ணீர் மல்க சௌந்தர்யாவையும் கதவையுமே மாறி மாறி பார்வையிட்டவளை ராஜவேல்தான் ஆதரவு கொடுத்து அழைத்துச் சென்றார்.
அடுத்து வந்த இரண்டு மாதத்திலே சௌந்தர்யா கருவுற்றிருக்க, இங்கிருந்தால் நங்கையின் பாவம் பட்ட பார்வை மனைவி மீது படியும் என்றும், குடும்பத்தை அடியோடு வெறுத்தவன் அவளை தன்னோடு சென்னை அழைத்து சென்றுவிட்டான்.
அதற்கு பிறகு வந்த நாளில் நாச்சியார் குடும்பம் எவ்வளவு போராடியும் பரணிதரன் எங்கிருக்கிறான் என்ற விடயம் தெரியவே இல்லை.
இதற்கிடையில் நங்கைக்கு அடிக்கடி வயிற்று வலி எடுக்க, முதலில் தந்தையிடம் சொல்லாமல் மறைத்து வைத்திருவள், பின் வந்த நாளில் வலி உயிரெடுக்கவும் தந்தையிடம் தனக்கு ஏற்படுகின்ற வயிற்று வலியை பற்றி கூறினாள்.
தந்தையாக ராஜவேல் பதறியவர், அவளை பக்கத்து ஊரில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கிருந்த மருத்துவர்கள் அவளை பரிசோதித்து விட்டு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றார்கள்.
பின், அங்கேயே அவளுக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் வயிற்றில் கட்டி இருப்பது தெரிய வரவே, உடனடியாக ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்றனர்.
அடுத்து வந்த நாளில் அவளுக்கு செய்ய வேண்டிய ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்தது.
இவளுடன் கூடவே இருந்தது அவள் தந்தை ராஜவேல் மட்டுமே. குடும்பத்திலிருந்த மற்றைய நபர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.
நங்கை இருந்தால் என்ன செத்தால் என்ன என்பது போல் அவர்களின் நடவடிக்கைகள் யாவும் இருந்தது.
பரணியை இக்குடும்பத்திலிருந்து பிரித்த காரணத்தினால் நங்கையின் மீது வீணாக வெறுப்பை வளர்த்துக் கொண்டனர் பெரியவர்கள்.
அவ்வீட்டில் இருந்த எவருமே ஏன் நங்கை அப்படி செய்தாள் என்று யோசிக்க கூட முனையவில்லை. அவள் வேண்டுமென்றே இதனை செய்ததாக எண்ணியே அவளை கரித்து கொட்டினர்.
நாட்கள் அதன் போக்கில் சரியாக செல்ல, இரண்டு மாதம் கழித்து நங்கை விடிய காலையில் கோலம் போட்டிருந்த சமயத்தில் மயங்கி விழுக, அதனை பார்த்த கிருஷ்ணவேணி அவளை கண்டுக்கொள்ளாமல் உள்ளே சென்று கதவை அடைத்து விட்டார்.
பக்கத்து வீட்டில் இருந்த பெண்மணி எதட்சியாக வெளியே வந்து பார்க்க, நங்கை மயங்கி கிடக்கவும் பதறியவராய் அவள் பக்கத்தில் சென்றார்.
“நங்கை நங்கை” என்று கன்னத்தில் தட்டி பார்த்து எழுந்து கொள்ளாமல் போகவே, ராஜவேலை கத்தி அழைத்தார்.
“ஐயா! கொஞ்சம் சீக்கிரமா வெளிய வாங்க. இங்க சின்னம்மா மயங்கி கிடக்கிறாங்க” என்று கூவல் போட,
உறக்கத்தில் இருந்தவர் சத்தம் கேட்டு கண் விழித்தவர், குரல் வந்த திசையை உன்னிட்டு கவனிக்க நங்கை பெயரை சொல்லவும் வேகமாக வாசலை நோக்கி நடந்தார்.
அவள் செல்வதை பார்த்த குடும்பமும் யாருக்கோ வந்த தபால் போல் அவரவர் வேலையில் கவனத்தைச் செலுத்தினர்.
கதவு சாற்றி இருக்கவும் அங்கிருந்த அனைவரையும் முறைத்த ராஜவேல், கதவை திறந்து வெளியே வந்து பார்த்தவர் அதிர்ந்து போனார்.
“நங்கை” என்று பதறிவராய் அவளை நோக்கி வந்தார்.
“ஐயா, சின்னம்மாக்கு என்ன ஆச்சின்னு தெரியல திடீருன்னு மயங்கி விழுந்துட்டாங்க. நான் எதட்சியா பாத்து வந்தேன் ஐயா” என அப்பெண்மணி சொல்ல,
உடனே அவளை அவளது அறைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தவர் மருத்துவருக்கு அழைப்பு விடுத்து வரச்சொன்னார்.
மருத்துவரும் சில நிமிடத்திலே வருகை புரிந்தவர், அவள் நாடியை பிடித்து துடிப்பை பரிசோதிக்க அதுவோ இரட்டை துடிப்பாக காட்டியது.
அதில் மருத்துவர் அதிர்ந்து நங்கையை நோக்க, அவளோ மயக்கத்தின் பிடியில் உறங்கிக் கொண்டிருந்தாள்.
“டாக்டர் என் பொண்ணுக்கு என்னாச்சி” என்றார் பதறிய தந்தையாய்.
“எனக்கு இதை எப்படி சொல்றதுன்னே தெரியலை, பட் நான் இதை உங்க கிட்ட சொல்லிதான் ஆகணும்” என்று புதிர் போட,
“டாக்டர் என்னென்னு கொஞ்சம் சொல்லுங்க”
“உங்க பொண்ணு இப்போ கர்ப்பமா இருக்காங்க சார்” என்று குண்டை தூக்கி அவர் தலையில் இறக்கி சென்றார்.
மருத்துவர் கூறியதை கேட்ட ராஜவேல் இடிந்து போய் சுவற்றில் ஒட்டி நின்றுவிட்டார்.
“ஒ இதுனாலதான் பரணியோட நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தினாளா. பள்ளிக்கு போறேன்னு சொல்லி இப்படி ஊர் மேஞ்சிட்டு வந்து நிக்குது” என மற்றவர்களின் கருத்தாக இருந்தது.
சிறிது நேரத்திலே எழுந்திருந்த நங்கை, மொத்த குடும்பமும் தன்னையே வெறித்து பார்ப்பதைக் கண்டு, “என்ன ஆச்சி ஏன் எல்லாரும் என்னையே பார்த்துக்கிட்டு இருக்கீங்க” என்க.
“நீ பண்ணி வச்ச வேலைக்கு இந்நேரம் உன்னைய கொன்னு இருக்கணும். இப்படி குடும்ப மானத்தை வாங்குறதுக்காவே பிறந்திருக்க. இப்படி ஒரு காரியத்தை பண்ண உனக்கு உடம்பு கூசலை. இப்படிதான் வயித்துல ஒன்ன சுமந்து கிட்டு இருப்பியா?” என நாச்சியார் கொதித்தார்.
“அப்பா, பாட்டி என்னனென்னமோ சொல்றாங்கப்பா. எனக்கு ஒன்னுமே புரியலையே” என்று புரியாமல் விழிக்க,
“உங்க அப்பன் இப்போ என்னத்தை சொல்லுவான். நீ பண்ணி இருக்கிற காரியத்தை வெளிய சொல்லதான் முடியுமா?” என்று கிருஷ்ணவேணி கரிக்க தொடங்கினார்.
“அப்பா…” என அழுதிடும் குரலில் அழைத்த நங்கையை வெறித்த பார்வை பார்த்தவர், ”உன் வயித்துல வளர குழந்தைக்கு அப்பா யாரு?” எனக் கோபமாய் கர்ஜித்தார்.
“அப்பா…” என்று கத்தியே விட்டாள்.
“இனி நீ என்னைய அப்பான்னு சொல்லாத. இத்தனை நாள் உன்னையே பார்த்ததுக்கு எனக்கு நீ நல்லா செஞ்சிட்ட. கல்யாணத்தை நிறுத்தினப்ப கூட உன் பக்கம் ஏதாவது நியாயம் இருக்கும்னு நினைச்சேன். ஆனா இதுதான் காரணமா இருக்கும்னு நினைக்கலை. ச்சீ உன்ன போய் என் பொண்ணுன்னு சொல்லவே அசிங்கமா இருக்கு” என்று காரித்துப்பி விட்டு சென்றார்.
அவர் பின்னவே அனைவரும் சென்றுவிட்டனர்.
தனித்து விடப்பட்ட நங்கை அனிச்சையாக தன் வயிற்றில் கையை வைக்க அவளின் உடலோ சிலிர்த்து அடங்கியது. அந்த நாள் முழுவதும் கண்ணீரிலே கரைந்தாள்.
ஊடல் கூடல் எதுவும் இல்லாமலே குழந்தை உருவாகிட, யாருடைய குழந்தை என்று அறியாமலே நங்கையின் வயிற்றில் வளரத்துவங்கியது. யாருடைய குழந்தையாக இருந்தாலும் இனி இது என் குழந்தையென நினைத்து வாழத் தொடங்கினாள் நங்கை.
அதன் பின் வந்த நாட்களில் அவளிடம் யாரும் பேசக்கூட முனையவில்லை. அவளே அவர்கள் முன்பு வந்தாலும் காரி உமிழ்ந்து விட்டு சென்றனர்.
மனது முழுதும் பாரத்துடனே நாட்கள் செல்ல, அறைக்குள்ளே அடைந்து கிடந்த நங்கைக்கு மூச்சு முட்டுவது போல் இருக்க மாடிக்கு செல்லலாம் என்று முடிவெடுத்த நங்கை நடந்து செல்கையில் நாச்சியார் குரல் கேட்டு அப்படியே நின்று விட்டாள்.
“இங்க பாரு ராஜா, உன் பொண்ணு வயித்துல வளருர சனியனை எப்படியாவது அழிச்சே ஆகணும். இல்லைன்னா நம்ம குடும்ப மானமே பொயிடும்” என்று தூபம் போட்டார் பெரியவர்.
அதற்கு ராஜவேல் அமைதியாகவே இருக்க,
“ஆமா ண்ணா, அம்மா சொல்றது சரிதான் . சீக்கிரமே இந்த குழந்தையை அழிச்சிட்டு வேற ஒருத்தனுக்கு கட்டி தந்திடலாம். சீக்கிரமே இந்த சனியனை ஒழிச்சு ஆகணும்னா” என்க.
“சரிம்மா, நீங்க சொல்றது போலவே பண்ணிடலாம்” என்று அவ்வறையை விட்டு வெளியேறினார்.
அதனை முழுதும் கேட்ட நங்கைக்கு மனம் முழுதும் அவள் குழந்தையை எண்ணி மறுகியது.
கடவுள் தனக்காக கொடுத்த பரிசு, இதனை அழிக்க விடமாட்டேன் என்று மனதிற்குள்ளே பிதற்றியவள், அன்றிரவே தந்தைக்கு ஒரு கடிதத்தை எழுதி வைத்தவள் வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள்.
வீட்டை விட்டு வெளியே வந்தவளுக்கு எங்கு செல்வது என்று தெரியாமல் கால் போன போக்கில் நடக்க தொடங்கியவளுக்கு அடுத்த பிரச்சனையாக சில பேரின் மூலம் வந்தது.
இரவின் அமைதி அவளை பயமுறுத்த தன் குழந்தையின் பாதுகாப்பை நோக்கி நடைப்போட்டவளை, ”ஏய் பொண்ணே, கொஞ்ச நிக்கிறது” என்ற குரல் அவள் பின்னாலில் இருந்து வர, மூச்சு விடவே பயந்து போனாள்.
அவள் நடையின் வேகத்தை கூட்ட, நங்கையின் பின்னே வந்த குரல் போய் குரல்களாக மாறி அவளை நெருங்கியது.
“இப்போ ஒழுங்கா நிக்க போறியா இல்லையா. ஒரு பொண்ணு தனியா போகுதே அதுக்கு கம்பெனி கொடுக்கலாம்னு பார்த்தா நீ இப்படி பயந்து போற” என்று ஒருவன் அவள் பின்னே வந்தபடியே சொல்ல,
பயத்தின் உச்சத்தில் இருந்தவள் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக கீழே குனிந்து மண்ணை அளிக்கொண்டவள் அவர்கள் மீது தூவி விட்டு ஓடத் துவங்கினாள்.
நங்கையின் பின்னே அந்த கயவர்களும் ஓடத் துவங்க, பாதி தூரம் வரை ஓடிவந்தவளால் அதன்பின்னும் ஓட முடியாமல் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.
அவள் பின்னே ஓடி வந்தவர்ஙள் இவள் மயங்கி விழுந்ததை தூரத்தில் இருந்து பார்த்து சிரித்துக் கொண்டனர்.
***
விழிகள் இரண்டும் மெது மெதுவாக மூட, இருள் சூழ மயக்க நிலையில் விழிகளை திறக்க சிரமபட்டு கண்ணை திறக்க முற்பட்டவளின் முன் வெள்ளையாக ஒரு உருவம் தோன்றி தோன்றித் மறைய, விழியில் நீர் கோர்க்க மூச்சினை கடினத்துடன் விட்டபடியே, ”என் குழந்தைய காப்பாத்துங்க?” என்றவாறே இமை முழுவதுமாக மூடியது.
“நங்கைம்மா எழுந்திறீங்க?” என்று பாரி எழுப்ப முனைய,
“டேய் உன் தங்கச்சி இங்க மயங்கி கிடக்கிறா” என்றவாறே மூச்சிறைக்க மற்றவனிடம் சொல்ல,
“ஆமாடா” என்றான் ஒருவித புன்னகையோடு.
“நீங்களெல்லாம் யாரு” என்று புருவ முடிச்சிட்டு கேட்க,
“நான் அவளோட அண்ணா பாஸ். வெளிய போயிட்டு வரேன்னு காலையில போனா. என்னடா இன்னும் வீட்டுக்கு வரலைன்னு தேடி வந்தா இங்க மயங்கி கிடக்கிறா” என்றான் பொய்யை உண்மையாக சித்தரித்து.
“ஹோ” என்றவாறே அவளை மடியில் கிடத்தி எழுப்ப முயன்றான்.
“உங்களுக்கு எதுக்கு சிரமம் எங்க தங்கச்சியை எங்க கிட்ட கொடுத்திட்டு போங்க. நாங்க அவளை பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு போறோம்” என்க.
“இவங்க உன்னோட தங்கச்சி, இதை நான் நம்பணும் பாரு. இவங்க எங்க வீட்டு இளவரசிடா நாய்ங்களா. உங்களோட இச்சைக்கு எங்க வீட்டு பொண்ணுதான் கிடைச்சாளா, அசிங்கமா இல்ல உங்களுக்கு”என்று காரி உமிழ்ந்தான்.
அதில் கோபம் கொண்டவர்கள் பக்கத்திலிருந்த கட்டையை எடுத்து அவனை அடிக்க ஓங்க, நங்கை மீது எந்த அடியும் விழுந்திடக் கூடாது என்று அவளை தனக்குள் புதைத்து அடியை வாங்கி தடுத்தான் பாரிவேந்தர்.
“இருங்கடா, போலிஸை கூப்பிடுறேன்” என்று மொபைலை எடுத்தவனை கண்டு வந்த கயவர்கள் யாவும் பயந்து ஓடினர்.
அதன்பின் நங்கையை தூக்கிய பாரிவேந்தர், அவளை ஓரிடத்தில் அமர வைத்தவன் தனக்கு தெரிந்த நபருக்கு அழைப்பு விடுத்து ஒரு ஆட்டோவை வரவைத்தான்.
சிறிது நாழிகையிலே அந்த ஆட்டோவும் வந்து விட, நேரடியாக அவளை மருத்துவமனைக்கே அழைத்துச் சென்றான்.
நங்கை, ‘என்னுடைய குழந்தையை காப்பாற்றுங்கள்’ என்று இறுதியாக கூறிய வாரத்தை அவனுக்குள் யோசனையாய் இருந்தது.
மருத்துவமனையில் அவளுக்கு சிகிச்சை அளித்து அவள் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறி, அவள் கண் விழித்ததும் அழைத்து செல்ல சொன்னார்.
பாரியும் அவள் கண் விழிக்கும் நேரத்திற்காக இமைக்க கூட மறந்து காத்திருந்தான்.
இரண்டு மணி நேரங்கள் கழித்தே கண் விழித்த நங்கையை பார்த்தான் பாரி.
முதலில் எங்கிருக்கிறோம் என்று விழித்த நங்கை தான் யாரோ ஒருவரின் உதவியால் காப்பாற்றப்பட்டேன், என்று நினைத்தவளுக்கு பாரியை கண்டதும் இருண்ட உலகம் சூரியன் போல் வெளிச்சம் வருவதை உணர்ந்தாள் நங்கை.
ஓடிச்சென்று அவனை இறுக அணைத்துக் கொண்டாள் உணர்வுகளின் மிகுதியில்.
நங்கை அணைத்ததில் விக்கித்து போய் நின்றுவிட்டான் பாரி.
அவனிடமிருந்து பிரிந்த நங்கை, ”என்னோட குழந்தைய காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி பாரி. நீங்க செஞ்ச உதவிக்கு நான் என்ன கைம்மாறு பண்ண போறேன்னே தெரியல ரொம்ப நன்றி” என்று கை கூப்பி நின்றாள்.
“என்னம்மா நீங்க போய் இப்படி கை கூப்பிட்டு நிக்குறீங்க. வாங்கம்மா நான் உங்கள வீட்ல கொண்டு போய் விடுறேன்” என்க.
“இல்லை பாரி, நான் எங்க வீட்ல இருந்து என்னோட குழந்தைய காப்பாற்ற ஓடி வந்துட்டேன்” என்றாள் வெறித்த பார்வையோடு.
“என்ன சொல்றீங்கம்மா நீங்க? உங்களுக்கு எப்படி?” என்று அடுத்து கேட்க முடியாமல் தயங்க,
“எல்லாம் விதியின் சதி பாரி. எனக்கே தெரியாம என்னோட கருவுல ஒரு குழந்தை வளருது. இந்த குடும்பத்தில் பிறந்த பாவத்துக்காக தானோ என்னவோ எனக்கு இந்த குழந்தையை பரிசா கொடுத்திருக்கிறார்” என்றாள் புன்சிரிப்புடன்.
அதனை கேட்ட பாரி நங்கைக்கு வந்த அவநிலையை கண்டு மனமுடைந்து போனான்.
“அப்போ நீங்க என்னோட வீட்டுக்கு வாங்க மா” எனச் சொல்ல,
“இல்ல, அது சரி வராது பாரி” என்று நாசுக்காக மறுத்து பேசினாள்.
“இந்த நேரத்துல நீங்க எங்க போவீங்க சொல்லுங்க. அப்புறம் உங்க வயித்துல வளருர தம்பி பாப்பா நிலைமை என்னாகுறது சொல்லுங்க. இப்போதான் டாக்டர் வந்து சொல்லிட்டு போனாங்க, குழந்தை வீக்கா இருக்கு அங்க இங்கன்னு அலைய கூடாதுன்னு” என்று நிஜத்தோடு பொய்மையும் கலந்து கூற,
முதலில் தயங்கியவளை, குழந்தையின் நலத்தினைக் காட்டி அவளை தன்னுடன் அழைத்துச் சென்றான் பாரிவேந்தர்.
அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்றவன், வாசலிலே நிற்க வைத்து உள்ளே சென்றான்.
“எதுக்கு வெளிய நிக்க சொல்லிட்டு போறீங்க காருகாரரே” என்க.
“ஒரு நிமிஷம் அமைதியா இருங்கம்மா நான் வந்தறேன்” என்று உள்ளே சென்றான்.
“சரி சீக்கிரமா வாங்க” என்றவள் இருட்டினைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சில நொடியிலே வெளி வந்தவன் கையில் ஆரத்தி தட்டு இருக்க, “இது எதுக்கு தேவையில்லாம. என்னைய பார்த்தா எல்லாம் திட்டி ஒழிக்கதான் நினைக்கிறாங்க. நீங்க என்ன ஆரத்தி தட்டு எடுத்து வந்திருக்கீங்க” என்று கேள்வியாய் நோக்கினாள்.
“இந்த வீட்டுக்கு வர முதல் தேவதை நீங்கதான். அதுவும் என்னைய வாழ வச்ச குடும்பத்தோடு இளவரசி நீங்க. அதுனால அமைதியா நில்லுங்க” என்றவன் அவளுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தான்.
“ரொம்ப நன்றி பாரி” என்றாள் கண் கலங்க.
அவளின் கண்ணீரை துடைத்து, ”உங்களுக்காக நான் இருக்கேன்மா. நீங்க எதுக்கும் கவலை படாதீங்க மா” என்று ஆறுதல் படுத்தினான்.
“நான் கவலைபட கூடாதுன்னு நினைச்சா, இந்தம்மா சொல்லி கூப்பிடுறதை விடுங்க” என்றாள் பெரிய மனிஷியாக.
“அது எப்படி முடியும்?”
“அப்போ நான் கவலை படுவேன் போங்க” என்றாள் சிறுபிள்ளை தனமாக.
“சரி சரி கவலை படாதீங்க, நான் இனி ம்மா போட்டு கூப்பிடல போதுமா” என்க.
“அது மட்டும் போதாது. நான் உங்கள காருகாரர்ன்னோ பாரின்னு தானே கூப்பிடுறேன். அதே மாதிரி நீங்களும் என்னைய பேரு சொல்லிதான் கூப்பிடணும் சரியா” என்க.
“அதெல்லாம் முடியவே முடியாது. நீங்க எங்க நான் எங்க. நான் எப்படி உங்க பேரை சொல்லி கூப்பிடுவேன் சொல்லுங்க” என்று மறுக்க,
“அப்போ நான் இங்க இருக்க மாட்டேன். நான் எங்கேயோ போறேன் போங்க” என்று வீராப்பாய் கிளம்ப எத்தனித்தாள்.
“சரி சரி நான் பேரு சொல்லியே கூப்பிடுறேன். ஆனா உங்க பேரு சொல்லி கூப்பிட மாட்டேன்”
“அப்போ எப்படி கூப்பிடுவீங்க?”
“எங்க அம்மாவோட பேரு கண்ணம்மான்னு அப்பா சொல்லி கேள்வி பட்டுருக்கேன். ஆனா நான் அவங்களை பார்த்தது இல்லை. அதுனால உங்களை நான் கண்ணம்மான்னு சொல்லி கூப்பிடுறேன்” என்றான்.
அடுத்தநாளே நங்கைக்கு தேவையான உடைகள், மருந்துகள் என அனைத்தையும் வாங்கி வந்து குவித்திருந்தான்.
நாட்கள் நகரத்தொடங்க இருவருக்குள்ளும் ஒரு நெருக்கம் உருவாகி இருந்தது அவர்கள் அறியாமலே.
நங்கையின் வயிற்றில் வளரும் குழந்தையும் வளரத்தொடங்க, அதோ இதோ என ஏழு மாதத்தில் வந்து நின்றது.
ஏழு மாத முடிவில் நங்கைக்கு வளைக்காப்பு வைக்கலாம் என்று பாரி கூறிட,
திருமணம் ஆகாமல் எப்படி இந்நிகழ்வை எதிர்கொள்வது? ஊர் மக்கள் என்னவென்றாலும் பேசுவார்களே அது குழந்தையின் பிறப்பினை பாதிக்க கூடுமே என்று பயந்து போனாள் நங்கை.
அதனாலே பாரியிடம் மறுத்து பேசி வேண்டாம் என்றிட,
“நீங்க ஏன் உங்க குழந்தையா மட்டும் பார்க்குறீங்க சொல்லுங்க. நம்ம குழந்தையா பாருங்க கண்ணம்மா. உங்களுக்கு எப்படியோ ஆனா பிறக்கப் போற குழந்தைக்கு அப்பா கண்டிப்பா வேணும். இனி குழந்தைக்கு அப்பா இல்லையே ஊர் என்ன பேசும்னு யோசிக்காதீங்க. இனி இந்த குழந்தைக்கு நான் அப்பா, நீங்க அம்மா. உங்களை பொறுத்தவரைக்கும் நான் ஒரு காவலாளி. இனி இதை பத்தி யோசிக்காதீங்க. நான் நல்லபடியா இந்த விழாவை நடத்தி காட்டுறேன்” என்று வாக்களித்தான்.
அவன் சொன்னதை போலவே விழாவை சிறப்புற நடத்தினான்.
இரவில் கண்ணாடி முன்பு நின்றிருந்த நங்கைக்கு அவள் வகிட்டில் இருந்த குங்குமத்தைக் கண்டு கன்னம் இரண்டும் குங்குமம் போல் சிவப்பேறியது.
விழாவின் நடுவில் பாரியை அழைத்து சந்தனம் பூசிவிட்டு நெற்றியில் குங்குமம் வைக்க சொல்ல, பெரிதாய் தயங்கினான் பாரிவேந்தர்.
“என்ன தம்பி இது, பொண்டாட்டிக்கு குங்குமத்தை வைக்க சொன்னா இப்படி வெக்கப்படுறீங்க”என்று கிண்டல் செய்ய,
தயங்கி தயங்கி நின்ற பாரியை பார்த்து நங்கை, “வச்சி விடுங்க பாரி” என்க.
“ம்ம்” என்று தலையசைத்து அவள் முன்னே வந்து, இரு கன்னத்திலும் சந்தனம் பூசியவன் நெற்றியில் குங்குமம் வைக்க தடுமாறினான்.
“இது நம்ம குழந்தைக்கான விசேஷம் பாரி. எப்போ நீங்க இந்த குழந்தைக்கு அப்பாவா ஆனீங்களோ அப்பவே குழந்தையோட அம்மா மேலயும் உங்களுக்கு உரிமை இருக்கு. உங்களால மட்டும்தான் எனக்கு குங்குமம் வைக்க முடியும். அதுக்கான உரிமையை நான் உங்களுக்கு கொடுக்கிறேன். இதுக்கு பேரு காதல் கிடையாது பாரி, அன்புன்னு சொல்லலாம். இந்த அன்பும் அதுக்கப்புறம் வர காதலும் உங்களுக்கு மட்டுமே சொந்தம்” என்று நாணத்தோடு சொன்னாள்.
பாரியின் கண்கள் கலங்கி போயின. தனக்கு யாருமே இல்லை என்ற நிலையில் இருந்து நீங்கி இப்போது மனைவி, குழந்தை என்று சொந்தம் வந்தததை எண்ணி கலங்கினான்.
“வச்சி விடுங்க பாரி உங்களுக்கான உரிமையை நிலைநாட்டுங்க” என்க.
ஆனந்தத்தோடு அவள் வகிட்டில் குங்குமத்தை வைத்து விட்டான். சிரிப்போடு அதனை ஏற்றுக் கொண்டாள் நங்கை.
அதன்பின் வந்த நாட்களில் நங்கையை ராணியை போல் பார்த்துக் கொண்டான் பாரி.
ஒன்பது மாத முடிவில் பாரி அவசர வேலையாக வெளியூர் சென்றிருந்தான்.
அன்றைய தினம் நங்கைக்கு ஏனோ மனம் சஞ்சலமாகவே இருக்க, பக்கத்திலிருந்த கோயிலுக்கு சென்றாள் நங்கை.
அவளது கேட்ட நேரமோ என்னவோ அங்கே ஏதோ வேலையாக வந்த சீனிவாசனும் கிருஷ்ணவேணியும் வந்திருக்க, நங்கையை பார்த்த அவர்களுக்கு ஆத்திரமாக வந்தது.
தன் பிள்ளை எங்கிருக்கிறான் என்று தெரியாமல் தவித்து இருந்தவர்களுக்கு அவளின் நிறைமாத வயிற்றை கண்டு புகைத்தனர்.
நங்கையின் முன்பு வந்து கோபமாக நின்றார் கிருஷ்ணவேணி. அவரை பார்த்த நங்கைக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“என்னடி ரொம்ப சந்தோஷமா இருக்க போல. அப்படி வாழ விட்டுருவேன்னு நினைக்காத. என் பிள்ளைய என்கிட்ட இருந்து பிரிச்ச உன்னையும் உன் குழந்தையும் சும்மாவே விடமாட்டேன். அப்புறம் உன் குழந்தை எப்படி உயிரோட வாழுதுன்னு பாக்குறேன். மொதல்ல குழந்தையை பெத்தெடு அப்புறம் இருக்கு உனக்கு” என்று மிரட்டி விட்டு சென்றார்.
அன்றிரவே பயத்திலே பிரசவ வலி வந்து விட, பாரி இல்லாமல் போகவே அவளே பக்கத்து வீட்டாரை கூட்டிக்கொண்டு மருத்துவமனை சென்றாள்.
சிறிது நேரத்திலே பாரியும் அவளை தேடி மருத்துவமனைக்கு வந்து விட்டான்.
அவன் வரும்வரை வலியை பொறுத்துக் இருந்தவள், அவனை பார்த்த நிம்மதியில் பிரசவ அறைக்கு சென்றாள்.
அவளின் கதறலில் வெளியில் இருந்த பாரி துடிதுடித்து போனான்.
பாரியின் துடிப்பினை அறிந்தோ அறியாமலே அவனின் பிள்ளை அழுகுரலுடன் வெளிவந்தது.
அடுத்த மூன்று நாட்களில் நங்கையை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் பாரி.
வீட்டிற்கு வந்தவளுக்கு அன்று மிரட்டிச் சென்ற கிருஷ்ணவேணியை நினைத்து ஒரு ஓரத்தில் பயம் இருந்தது.
ஆனாலும் வெளியில் சொல்லாமல் மகன் பிறந்த மகிழ்ச்சியில் இருந்தாள்.
சரியாக பதிமூன்று நாட்கள் கழித்து மூவருமாய் குடும்பமாக கோயிலுக்கு சென்றனர். அவசர வேலை ஒன்று பாரிக்கு வந்து விட பாதியிலே அவன் அங்கிருந்து செல்லும்படி நேர்ந்தது.
வீட்டிற்கு வரும் வழியில், கிருஷ்ணவேணி, சீனிவாசன் அனுப்பி இருந்த ஆட்களின் கண்ணில் பட்டாள் நங்கை.
அவர்கள் அவளையே பார்ப்பதை உணர்ந்த நங்கை வேகமாக நடக்க துவங்கிய நேரம் அவர்களும் பின் வர, நங்கை மகனின் உயிரை காக்க வேண்டி மீண்டும் ஓடத் துவங்கினாள்.
அவளை பின்னாடியே துரத்தி வந்தவர்கள், “உன் குழந்தைக்கு அப்பா யாருன்னே தெரியாதாமே. நான் வேணும்னா உன்னோட குழந்தைக்கு அப்பாவா இருக்கவா” என்று அசிங்கமாக பேச, அவளுக்கு அதனை கேட்கும்போது பாரியின் ஞாபகமே வந்து கண்ணீர் துளிர்விட்டது.
“உன்ன கண்டிப்பா உன்னோட அப்பா கிட்ட சேர்த்திடணும் கண்ணா” என்று அவனை இறுக அணைத்தாள்.
அவளால் முடியும் வரையும் ஓடியவள், எப்படியோ அவர்களிடமிருந்து தப்பித்து வீடு வந்து சேர்ந்தாள்.
வீட்டிற்கு வந்தவளை அங்கிருந்தவர்களின் பார்வை ஏனோ ச்சீ என்பது போலே அவளுக்கு தோற்று விக்க, வேகவேகமாக துணிகளை அடுக்கத் தொடங்கினாள்.
இரண்டு பைகளில் ஒன்றில் பாரியின் உடையும் மகனின் உடையையும் வைத்தவள், மற்றொன்றில் அவளின் உடையை எடுத்து வைத்தாள்.
மாலைப் போல் வந்தவனிடம் நடந்ததை கூறி, இறுக அணைத்து கொண்டு கண்ணீர் வடித்தாள்.
“இங்க பாரு கண்ணம்மா, நம்ம பையனுக்கு ஒன்னும் ஆகாதும்மா, நீ கவலை படாதே. நாம வேறே எங்கையாவது போயிடலாம். நீ அழுகாத கண்ணம்மா” என்று அவளின் கண்ணீரைத் துடைத்தான்.
“நாம இல்லங்க, நீங்க ரெண்டு பேரும் இப்பவே இந்த ஊரை விட்டு கிளம்பதான் போறீங்க” என்க.
“என்ன சொல்ற நீ?” என்று கோபமாய் கேட்டவனை கண்ணீர் மல்க பார்த்தாள்.
“என்னால உங்களோட வர முடியாதுங்க. எனக்கு பயமா இருக்கு. நான் செய்யாத தப்பா இருந்தாலும் அது என்னைய சுத்தியேதான் வரும். அது நம்ம பையனோட வாழ்க்கைக்கு நல்லது இல்லைங்க. என்னால உங்களோட வரமுடியாது. நான் ஒரு பாவப்பட்ட ஜீவன். அந்த பாவம் உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையில வரதை நான் விரும்பல” என்று சொன்ன அடுத்த நிமிடமே அவளின் கன்னம் பழுத்திருந்தது பாரியின் அடியால்.
“என்ன பேசுற நீ? நீ பாவப்பட்ட ஜீவனா? அது எங்க வாழ்க்கைய தொடர விடாதா? நீ எனக்கு கிடைச்ச வரமா நான் நினைக்கிறேன். உன்னால மட்டும்தான் எனக்கு ஒரு குடும்பம் கிடைச்சிருக்கு. நீ இல்லைன்னா இது எதுவும் சாத்தியம் ஆகாது, அதை புரிஞ்சிக்கோ முதல்ல. உன்னோட குடும்பத்துக்குதான் உன்ன பத்தியும் உன் தியாகத்தை பத்தியும் தெரியாது. ஆனா எனக்கு தெரியுமே நீ யாருன்னு. நீ இப்படி சொன்னதுக்கு எங்களைய நீ கொன்னு போட்டு இருக்கலாம்” என்றவனின் கண்கள் கோவைப் பழமாய் சிவந்திருந்தது.
“நீங்க ரெண்டு பேரும் இந்த ஊரை விட்டு தூரமா போய்தான் ஆகணும். அப்படி போக மாட்டேன்னு சொன்னீங்கன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன். இது என்மேல சத்தியம். நானா கூப்பிடுற வரைக்கும் நீங்க என்னைய பார்க்க வரக்கூடாது” என்று அவள் தலையில் வைத்து சத்தியம் செய்திட, பாரியால் அவள் சத்தியத்தை உடைக்க முடியவில்லை.
“இப்போ நான் போறேன். ஆனா நீ பண்றது ரொம்பவே தப்பு கண்ணம்மா” என்றவன் மகனோடு சேர்த்து நங்கையையும் இறுக அணைத்து, அவள் நெற்றியில் முதல் முத்தத்தை பதித்தான்.
பின் பாரியையும் மகனையும் சத்தியத்தின் பேரில் அனுப்பி வைத்தவள், அவளும் பையை தூக்கிக் கொண்டு கிளம்பினாள்.
ஆறு மாதங்களுக்கு ஒரு ஊர் என தன் நாட்களை கழித்து எப்படியோ நான்காவது வருடத்தை அடி எடுத்து வைத்திருந்தாள். அந்த மாதிரி ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்லும் வழியில்தான் ஒரு இக்கட்டான சூழலில் ஆதினியின் தந்தையையும் தாயையும் சந்திக்க நேர்ந்தது.
பிரசவத்திற்கு சென்றபோது வண்டி பஞ்சராகி விட, நங்கைதான் அவளுக்கு பிரசவம் பார்த்தாள். அதன்பின் ஆதினியின் ஊரிலே இருந்து அவள் நாட்களைக் கழிக்கத் துவங்கினாள்.
அதேபோல் இங்கே பாரியும் குழந்தையுடன் சென்னை வந்தவன், ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்தான். சிறிது சிறிதாக பணத்தை சேமிக்க துவங்கினான்.
காலங்கள் யாவும் வேகமாய் ஓடிட, பாரியின் விடாமுயற்சியில் ஒரு சூப்பர் மார்க்கெட் துவங்கி, அதில் வந்த வருமானத்தையும் சேமித்து வைத்து பிற்காலத்தில் ஒரு மாலையும் வாங்கி இன்றுவரை அது நன்முறையில் செல்கிறது.
***
அனைத்தையும் கூறி முடித்த பாரி, சமையலறை சென்று தண்ணீர் குடித்து வந்தார்.
வசீகரன் தாய் மற்றும் தந்தையின் கடந்த காலத்தைக் கேட்டு கண்ணீர் வடித்தான்.
பின் ஓடிச்சென்று இருவரையும் அணைத்து ஆறுதல் கூறினான்.
“இத்தனை வருஷமா நீங்க பிரிஞ்சு இருந்துட்டிங்க. இனி நீங்க அப்படி இருக்க வேண்டாம். அப்புறம் நான் என்னைக்குமே இந்த பாரி, நங்கையோட மகனாதான் இருப்பேன்” என்று இருவரின் நெற்றியிலும் இதழ் பதித்தான்.
“அப்புறம் நீங்க எப்படிம்மா என்னைய கண்டு பிடிச்சீங்க” என்க.
“நான் உன்ன பெத்தவ தம்பி. பெத்தவளுக்கு தெரியாத தன் மகனை. அதுவும் இல்லாம உன்னோட வலது கையில ஒரு பெரிய மச்சம் இருக்கும். அது அன்னைக்கு நீ பேசும்போதுதான் நான் பார்த்தேன். அது மட்டும் இல்லாமல் நீ நடந்துக்கிறது எல்லாமே உங்க அப்பா மாதிரியே இருந்ததுடா. அவரோட பொறுமை உனக்கு இருந்தது அதை வச்சிதான் கண்டு பிடிச்சேன்” என்றவர் தன் மகனின் தலையை ஆசை தீர கோதி விட்டார்.
பின்னர் மூவரின் சபையும் கலைந்து போக, அடுத்து செய்ய வேண்டிய வேலையைப் பற்றி சிந்திக்கத் துவங்கினான்.
அப்போது தூங்கி எழுந்த விபு வசீகரனிடம் வர, ”மச்சான்” என்று அணைத்துக் கொண்டான்.
ஒரு நண்பனாய் அவனின் துக்கத்திலும் மகிழ்விலும் கூடவே இருந்து அவனை வழி நடத்தி செல்கின்றான்.
“மச்சான் எனக்கு நீ ஒரு உதவி பண்ணணுமே” என்க.
“சொல்லுடா, என்ன பண்ணணும்னு. இந்த நண்பனோட வேலையே ஹீரோவுக்கு சேவை செய்யிறது தானே. சோ நீ சொல்லு நான் அதை செய்யிறேன்” என்று அங்கலாய்த்து கொண்டான்.
“நீ இப்பவே ஆதினி ஊருக்கு போகணும்டா. சதாசிவம் அங்கிள்க்கு நான் ஆரம்பிச்சி வச்ச பேக்ட்ரி பத்தி எதுவுமே தெரியாது. மிஷினரிஸ் மட்டும்தான் வாங்கி போட்டுருக்கு. நீ கொஞ்சம் அது என்னன்னு பாத்துக்கோ. சரியான சூப்பர்வைசரை வேலைக்கு போட்டு ஆதினிக்கு கொஞ்சம் எப்படி இதெல்லாம் பாத்துக்கணும் சொன்னா போதும்டா அவ பிக்கப் பண்ணிக்குவா.
அப்புறம் அம்மா இருந்த வீட்டை ரீனிவல் பண்ணணும்டா. அதுக்கு நீ சைட் மேனஜரை கூப்பிட்டு எப்படி மேக்கோவர் பண்றதுன்னு பார்த்து சொல்லு. இருக்கிற வீட்டை எந்த ஒரு சேஞ்சும் பண்ண வேணாம் சரியா” என்று அடுக்கி கொண்டே போனவனை மலைப்பாக பார்த்தான் விபுனன்.
“மச்சான் இதோட நிறுத்திக்கோடா. என்னால சத்தியமா முடியாது மீதியை நான் ஊருக்கு போன பிறகு சொல்லு” என்று தலைக்கு மேல் கை வைத்தான்.
“தேங்க்ஸ்டா மச்சான்” என்று கட்டிக்கொண்டான்.
“நீ போய் அங்க இருக்கிற வேலையை முடி, எனக்கு இங்க கொஞ்சம் முடிக்க வேண்டிய வேலை இருக்கு, அதை முடிக்கிறேன்” என்றான் கூர்மையான பார்வையோடு.
***