NSK!14

NSK!14

அத்தியாயம் 14

காரணமில்லா பயத்தின் காரணமே இவ்வுலகில் பலரின் வாழ்வையே கேள்வி குறியாக்கியுள்ளது. சிலரின் வாழ்வு நன்கு சென்றாலும் பலரின் வாழ்வில் பல பல இன்னல்களை இன்று வரை சந்தித்துதான் இருக்கின்றனர்.

பரணியும் நங்கையும் ஒன்றாக வருவதை கண்ட நாச்சியாருக்கும் கிருஷ்ணவேணிக்கும் ஓரேப்போல் சிந்தனை ஓட்டங்கள் மனதில் துளிர் விட, வார்த்தைகள் இல்லா மௌனங்களாய் இருவரும் பேசினர்.

இருவரின் மனதிலும் துளிர் விட்ட ஆசை புன்னகையில் இதழ் பூசி நிற்க, அதற்கான வேலையில் இருவரும் ஒருசேர இறங்கினர்.

அடுத்தநாளே அதனை பற்றின பேச்சுக்கள் வீட்டிற்குள் துவங்கியது சிறியவர் இருவர் இல்லா நேரத்தில்.

குடும்பத்தின் தலைவியான நாச்சியாரே முதலில் தன் பேச்சினை துவங்கினார்.

“எப்போ பரணி வெளிநாடு போய் படிக்கிறேன்னு சொன்னான்னோ அப்பையிலிருந்தே எனக்குள்ள ஒரு பயம்” என்று நிறுத்திவிட, மற்ற குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் கேளிவியாய் நோக்கினர்.

“எதுக்கும்மா பயப்படுறீங்க, அவன் நாம வளர்த்த பையன். எப்போதும் தப்பு பண்ண மாட்டான்” என்று ராஜவேல் தன் மருமகனுக்காய் பரிந்து பேசினார்.

“என்ன இருந்தாலும் அது இள இரத்தம் பா. எப்போ எப்படி சிந்திக்கும்னு யாருக்கு தெரியும் சொல்லு. இப்படிதான் நம்ம ஊருல ஒரு பையன் வேலைக்கு போறேன்னு சொல்லிபுட்டு வரும்போது ஒரு வெள்ளச்சியை இழுத்திட்டு வரலையா. அப்படியேதும் நடந்திற கூடாதுன்னுதான் ப்பா எனக்கு பயமே” என்று தன் மனதினுள் இருந்ததை கொட்ட ஆரம்பித்தார்.

“அதுனால இப்போ என்ன பண்றது அத்தை” என சீனிவாசன் கேட்க,

இப்படி பரணியை பற்றி நம்பாது பேசுவதே ராஜவேலுக்கு பிடித்தமானதாக இல்லை. தன் பிள்ளைகளை தாமே நம்பாது இருந்தால் இவ்வுலகம் எப்படி அவர்களை நம்புவர். இவர்களுக்கு தேவையில்லாத பயமாக தோன்றியது. அங்கிருக்கவே பிடிக்கவில்லை என்றாலும் அன்னையை மீறி நகர மனதில்லாமல் அமைதியாக இருந்தார்.

இவ்வாறு யோசித்தவர்தான்  பிற்காலத்தில் மகளையே நம்பாமல் விட்டு பெரிய தவறை செய்ய காத்திருக்கிறார்.

“எனக்கு ஒரு நல்ல யோசனை புலப்படுது மருமகனே” என்று புதிர் வைத்திட, அங்கிருந்த கிருஷ்ணவேணியை தவிர்த்து மற்ற இருவரும் கேள்வியாய் நோக்கினர்.

“எனக்கு என்ன தோனுதுன்னா நாம பரணியை அங்க தனியா விட்டுட்டு இங்க நாம வயித்துல நெருப்பை கட்டிகிட்டு அலைய முடியாது. அதுனால நாம நம்ம பேரனுக்கு ஒரு கல்யாணத்தை முடிச்சிடலாம். எப்படி இருந்தாலும் அவனுக்கு நடக்கப்போற கல்யாணம் தானே. இப்போ நடந்தா என்ன கொஞ்ச நாள் கழிச்சு நடந்தா என்ன” என நாச்சியார் பொறுமையாய் அவருக்கு தோன்றிய விடயத்தை விவரித்தார்.

“அதெல்லாம் சரிதான் அத்தை, ஆனா இப்போ நம்மளோட அவசரத்துக்கு எந்த பொண்ணு கிடைப்பா சொல்லுங்க” எனக் கேட்க,

“கையிலே வெண்ணைய வச்சிட்டு, யாராவது பால் கொடுங்க அதிலிருந்து வெண்ணைய எடுத்துபேன்னு சொல்லுவாங்களா சொல்லுங்க. நீங்க கேக்குறதும் அப்படிதான் இருக்கு மருமகனே” என்றார்.

“அத்தை” என்று சீனி இழுக்க,

“என் பேத்தி நங்கை இருக்கும்போது எதுக்கு வேற பொண்ணு தேடணும் சொல்லுங்க” என்று மனதிலிருந்ததை கூற, அதில் அதிர்ச்சியுற்றவர் ராஜவேல் மட்டுமே.

“அம்மா அவ சின்ன பொண்ணு மா. அவளுக்கு எப்படி இப்போ கல்யாணத்தை வைக்கிறது. இதெல்லாம் ரொம்பவே தப்பு மா” என்று அவ்விடத்தில் இருக்க பிடிக்காமல் நகர்ந்து விட்டார்.

அதன் பின் வந்த நாட்களில், ராஜவேல் சரியாக பிடிக்கொடுக்காமல் இருந்தார்.

வண்டியில் போகும் போது பரணி பாரியிடம், “பாரி இந்த வீட்டுல இப்ப யாரும் யாருக்கூடயும் பேசுறது இல்லை போலடா. ஏதோ ஒன்னு அவங்கக்குள்ள நடக்குது. ஆனா என்னன்னுதான்  தெரியமாட்டேங்கிது” என்று குழப்பியவனாய் புலம்ப,

“விடுங்கண்ணா. அது அவங்களுக்குள்ள நடக்குற பிரச்சனை. இதுல நீங்க ஏதும் செய்ய முடியாது” என்று தனக்கு தோன்றியதை கூறினான்.

“சரி விடு நீ வண்டியை பார்த்து ஓட்டு” என்று அமைதியாக இருக்கையில் அமர்ந்து விட்டான் பரணி.

பாரிக்குமே உள்ளுக்குள் இவ்விடயம் குடைய தொடங்கியது. பார்த்து பிரமித்த குடும்பமல்லவா இது. இங்கே ஒருவரோடொருவர் முகத்தை காண சங்கோஜம் படுவதை கண்டு கவலையாக இருந்தது. ஆனால் என்ன செய்ய இயலும்  வீட்டு உறுப்பினராக இருந்தால் கூட எதையாவது செய்யலாம் அவனோ அவ்வீட்டின் விசுவாசி ஆகிற்றே. என்ன என்று கேட்டு பிரச்சனையை போக்க வேண்டிய நிலையில் இருக்க வேண்டிய பரணியோ என்ன பிரச்சினை என்று ஆராய கூட முற்படவில்லை.

நாட்கள் அதன்போக்கில் நகரத்தொடங்க, அன்றைய நாள் சௌந்தர்யா பள்ளிக்கு வராமல் போக நங்கைக்கு அந்த நாளே உயிர்ப்பாக இல்லை.

ஏனோ அவள் எல்லாருடனும் சகஜமாக பழகினாலும் நங்கைக்கு சௌந்தர்யா மீது தனி பிரியம் உள்ளது.

வீட்டில் பெண் பிள்ளைகள் இல்லாத பொழுதில், நங்கையே சௌந்தர்யாவிற்கு ஒரு தங்கையாக மாறிபோனாள்.

சிறுவயதில் சௌந்தர்யா காட்டிய அன்பிற்கு இன்று வரை அடிமையாகி உள்ளாள் நங்கை.

அந்த நாள் முழுவதும் பள்ளியில் யாரிடமும் பேசாது அமைதியாக வலம் வர, அவளுடன் படிக்கின்ற அனைவருக்குமே அது ஆச்சரியமாக இருந்தது.

ஏனெனில் அனைவரிடமும் சகஜமாக பழகுபவள், யாரேனும் கவலையாகவோ தனிமையிலோ இருந்தாலோ அவர்களுக்கு துணை நிற்பவள், அனைவரிடமும் நட்பு பாராட்டி அதை எல்லைக்குள்ளே வைத்து அனைவரிடமும் பழகி வருபவள் என அவளின் நற்குணங்கள் நீண்டுக் கொண்டே செல்லும். இவை யாவிற்கும் காரணம் ராஜவேலே.

குழந்தைகளிடம் சாதி மதம் என்ற நஞ்சை கலக்காமல் அனைவரும் சமம் என்றும் அனைவரிடத்திலும் பாகுபாடின்றி நடந்து கொள்ள வேண்டும் என்றும் கற்றுக்கொடுத்துள்ளார்.

அதனாலையோ என்னவோ யாரிடமும் பாகுபாடு காட்டாமல் அனைவரிடத்தும் அன்பையே கொடுத்து நன்முறையில் பழகுபவள்.

அவளது தோழியர் யாவரும் அவளிடம் வந்து என்னவாயிற்று என்று கேட்க, அவளோ ஒன்றுமில்லை என்று சொல்லி நகர்ந்து விட்டாள்.

அந்த நாள் முழுதும் அப்படியேதான் அவளுக்கு சென்றது.

வீட்டில் இருந்த அனைவரும் கேட்டும் கேட்காதது போல் நகர்ந்து விட்டாள் தேவநங்கை.

அடுத்து வந்த இரண்டு நாட்களும் சௌந்தர்யா வராமல் போய்விட, நங்கைக்குதான் கஷ்டமாக இருந்தது.

அந்த வருத்ததுடனே வலம் வருபவளை கண்ட பாரி அவளிடம், “உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா மா” என்று கனிவோடு கேட்டான்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லையே. நான் நல்லாதான் இருக்கேன்” என்று விடையளித்தாள்.

ஒரு புன்னகையை வழங்கியவன், “எல்லாரும் நல்லாதான்  இருப்பாங்க. ஆனா அவங்க மனசுக்கு மட்டும்தான்  உண்மை எதுன்னு தெரியும். உங்க மனசுக்கு தெரியும் நீங்க நல்லா இருக்கீங்களா இல்லையான்னு” என்று புரியும்படியும் புரியா விடையாகவும் கூறி நகர்ந்து விட,

நங்கைக்கு ஏனோ அவனின் பேச்சு சுணக்கத்தை கொடுக்க, பேசாமல் அறைக்கு செல்ல நேர்ந்த சமயம் பார்த்து பரணி அவளை அழைத்தான்.

“சொல்லுங்க அத்தான்” என்க.

“உன்கூடவே ஒரு பொண்ணு வருவாளே அவ பேருக்கூட” என்று தொடங்க,

“சௌந்தர்யா அக்காவா அத்தான்” என்று எடுத்து கொடுக்க,

“ஆமாம் அந்த பொண்ணேதான் . இன்னைக்கு அந்த பொண்ணு ஹாஸ்பிடல் வந்துச்சி காய்ச்சல்ன்னு சொல்லி. நான்தான் ட்ரிட்மெண்ட் பண்ணேன். உன்கிட்ட சொல்லிட சொன்னா நீ கவலைபடுவன்னு. அதான் உன்கிட்ட சொல்லலாம்னு கூப்பிட்டேன்” எனச் சொன்னான்.

“அத்தான் அக்காக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே” என்று பதற்றமாக கேட்க,

“ஒன்னும் பிரச்சனை இல்லை. இன்னும் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடும்” என்ற பரணி நகர்ந்து விட்டான்.

அதனை தூரத்திலிருந்த ராஜவேலிடம் காட்டிய நாச்சியார், “அவங்கள பாரு தம்பி. எப்படி சிரிச்சு பேசிட்டு இருக்காங்கன்னு. இதுலயே உனக்கு புரிய வேணாமா அவங்க ரெண்டு பேருக்குமே விருப்பம் இருக்குன்னு” என்று கிடைத்த சந்தில் பட்டையை போட நினைக்க,

“அதில்லை மா. உங்களுக்கே தெரியும் அவ அம்மா இல்லாத பொண்ணுன்னு. எனக்கு நீங்க தேவாமிர்தத்தை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கும் போது அவளுக்கும் இதே வயசுதான். அவளால குழ்ந்தைய சுமக்குற நிலை இல்லாமல் போக நங்கைக்கு பிறப்பை கொடுத்துட்டு அவ பொய்ட்டா. அந்த மாதிரி என்னோட பொண்ணையும் நான் இழக்க விரும்பல மா. கொஞ்சம் என்னைய புரிஞ்சிக்கோங்க” என்று அன்னையின் முன் மன்றாடினார்.

“இங்க பாரு தம்பி, அப்படி பார்த்தா எனக்கு கூட பதிமூனு வயசுல உங்க அப்பாக்கு கட்டி கொடுத்திட்டாங்க. நான் என்ன உன்னைய பெத்துட்டு செத்தா போனேன் சொல்லு. இன்னும் உயிரோட தானே இருக்கேன் தம்பி. தேவியோட ஆயுசு அவ்வளவுதான் பா. அதான் அவ நம்மளை விட்டு பொய்ட்டா” என்று எதையெதையோ பேசி அவர் மனதை கரைத்து விட்டார் நாச்சியார்.

ஒருமனதாக ராஜவேலும், பரணி மற்றும் நங்கையின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

இதற்கு இடையில் பரணிதரனிற்கு தேர்வு வர, அதற்காக பாரியுடன் சென்னை சென்று வந்தான்.

தாமதப்படுத்த விரும்பாத நாச்சியாரும் கிருஷ்ணவேணியும் அடுத்துக்கட்ட வேலையைத் தொடங்கி விட்டனர்.

பரணியிடம் இதனை பற்றி சொன்ன போது முதலில் அதிர்ச்சி, ஆச்சரியம் என அவன் முகத்தில் காண்பித்து தயங்கியவன், அவனின் பாட்டியின் பேச்சில் கரைந்து சம்மதத்தை தெரிவித்திருந்தான். ஆனால் நங்கைக்கு இவ்விடயம் அறிவிக்கப்படாமலே இருந்தது.

பாரி அன்று கூறிய நேரத்தில் இருந்து தன் மனதை படிக்க கற்றுக் கொண்டாள். அவன் சொல்லி விட்டு சென்ற செய்தி அவள் மனதை மேலும் தைரியப்படுத்தியது.

வேகவேகமாக அனைத்தும் நடக்க, பாரியே அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்தான்.

அவனுக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது பரணியின் திருமண பேச்சினை அறிந்து. தன் அண்ணனுக்கு திருமணம் என உள்ளார்ந்து மகிழ்ந்து போனான்.

இவ்விடயம் அறியாத நங்கை பள்ளியில் மிகவும் மகிழ்ச்சியாக சௌந்தர்யாவுடன் வலம் வந்தாள்.

அவள் வராத அந்த ஒருவாரத்தில் சௌந்தர்யா மீது அவள் வைத்திருந்த அன்பு மேலும் பெருகியது.

நங்கைக்கு அரையாண்டு பரிட்சை தொடங்கவும் அது முடிந்த பிறகு நிச்சயமும் தையில் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்றும் பேசி வைத்திருந்தனர்.

அதே போல் நங்கையின் தேர்வுகளும் முடிவு பெற, அடுத்து வந்த நல்ல நாளில் நிச்சயத்தை வைத்திருந்தனர்.

அதன்பொருட்டு அவளுக்கு தேவையான நகைகள், புடவைகள் எல்லாம் வாங்கி வரச்சென்றனர்.

பரணி இதில் எதிலையும் கலந்து கொள்ளவில்லை. அவனை பொறுத்தவரை எப்படியாவது வெளிநாட்டிற்கு சென்று படிக்க வேண்டும் என்பதே. அதற்காக அனைத்திற்கும் அமைதியாக இருந்தான்.

பாரி அவர்களை அழைத்துக் கொண்டு புடவைகள், நகைகள் என அனைத்தையும் வாங்கி, இரவுபோல் வீடு வந்து சேர்ந்தனர்.

ஜோசியர் குறித்து கொடுத்த நாளும் வந்து விட, அன்று காலையில்தான்  கிருஷ்ணவேணியின் மூலம் நங்கைக்கு இந்நிச்சயத்தை பற்றியே தெரிவித்தனர்.

இறுதி நேரத்தில் கூறியதால் அவளால் ஒன்றும் யோசிக்க முடியவில்லை.

எப்படியாக இருந்தாலும் இவர்கள் கைக்காட்டும் ஒருவரை தானே திருமணம் செய்து கொள்ள வேண்டும், அது இப்பவாக இருந்தால் என்ன சிறிது காலம் கடந்த பின் செய்து கொண்டால் என்ன என்பது போல்தான்  அவள் சிந்தனைகள் இருந்தது.

அதனாலே அவளும் நிச்சயத்திற்குத் தயாராகினாள்.

அன்று மாலையே கோட்டையூரையே கூட்டி விமர்சையாக நிச்சயத்தை நடத்தினர்.

வந்து போன அனைத்து சொந்தபந்தங்களும் நங்கையையும் பரணியையும் வாழ்த்தி சென்றனர்.

அடுத்தக்கட்ட கல்யாண வேலைகளைக் குடும்பமே சேர்ந்து மகிழ்ச்சியாக தொடங்கியது. இதில் பாரியும் அடக்கம்.

பெரியவர்கள் சொல்ல சொல்ல அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்ய துவங்கினான். அதில் அவனுக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.

இதற்கிடையில் நங்கைக்கு பள்ளி தொடங்கி விட, அவளும் சௌந்தர்யாவை கண்டு இந்நிகழ்வை பற்றி சொல்ல மகிழ்வாகவே சென்றாள்.

ஆனால் சௌந்தர்யாவின் சொந்தத்தில் யாருக்கோ திருமணம் என்று ஊருக்கு சென்றிருந்தாள்.

அவள் திரும்பி வந்திருந்த நேரம் திருமண நாள் நெருங்கி விட்டதால் நங்கையை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. பள்ளியிலிருந்து அவளை நிறுத்தியிருந்தார் நாச்சியார்.

பேரனின் வாழ்வை காக்க வேண்டி பேத்தியின் வாழ்வில் குழியை தோண்டினார் நாச்சியார் அவர் அறியாமலே.

ஒருவாரமே மட்டுமே இருந்த நிலையில், சௌந்தர்யாவிற்கு திருமண பத்திரிக்கை வைப்பதற்காக பாரியுடன் சென்றிருந்தாள் நங்கை. அவள் கூடவே அவள் தந்தையும் வந்திருந்தார்.

பேச்சியம்மாள் அவர்கள் இருவரையும் வரவேற்க, சௌந்தர்யா பள்ளிக்கு சென்றிருந்ததால் பேச்சியம்மாளிடம் பத்திரிக்கையை கொடுத்து அழைப்பு விடுத்து திரும்பினர்.

மாலை வீடு வந்த சௌந்தர்யாவிடம் விடயத்தை அவள் தாய் கூற, இடியை அவள் இதயத்தில் மெதுவாக இறக்கினார்.

இத்தனை நாளில் மனதிற்குள் பரணியை கணவனாக நினைத்த சௌந்தர்யாவிற்கு பெரும் அடியாக விழ, எந்திரிக்க இயலாமல் தவித்தாள்.

அவளால் அத்திருமணத்தை நிறுத்தவும் இயலாது, காரணம் அவள் தங்கையாக நினைத்த நங்கையின் வாழ்க்கை அடங்கியுள்ளது.

அன்பிற்கும் காதலுக்கும் நடுவில் மாட்டி தவித்தவளுக்கு பரணியை இன்னொரு பெண்ணுக்கு விட்டு கொடுக்கும் நிலையோ அதனை பார்க்கும் சக்தியோ இல்லாது போக, அவள் வீட்டின் பின் இருந்த கிணற்றில் குதித்து உயிரை விட தயாரானாள்.

ஆனால் அப்போது வெளியூரில் வேலை செய்து கொண்டு இருந்த சதாசிவம், வீட்டிற்கு வருகை தந்தவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

உடனே அக்கிணற்றில் குதித்து அவளை மீட்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்தனர். அவளுக்கு மருத்துவம் பார்த்தது வேறுயாமில்லை பரணியேதான்.

விவரம் அறிந்த நங்கை, பாரியின் உதவியோடு சென்று பார்த்தாள்.

“எதுக்கு இப்படி பண்ணிங்க கா?” என்று நங்கை கோபமாய் கேட்க,

“… “

“சொல்லுங்க எதுக்கு இப்படி ஒரு காரியத்தை பண்ணிங்க? உங்களுக்கு ஏதாவது பிரச்சனைன்னா யார்க்கிட்டயாவது சொல்லி இருக்கலாமே” என்று வயதிற்கு மீறிய பக்குவத்துடன் கேட்க,

“… “

“இப்போ சொல்ல போறீங்களா இல்லையாக்கா. உங்களுக்கு ஒன்னுன்னா அது என்னைய எவ்வளவு பாதிக்கும்னு உங்களுக்கு தெரியாதா?” என்று கண்ணீர் விட்டவளை பார்த்த பாரிக்கே கஷ்டமாக இருந்தது.

“உங்களுக்கு என்னதான்  பிரச்சினை சொல்லுங்க. எதுக்கு இந்த மாதிரி தற்கொலை எல்லாம் பண்றீங்க. எந்த ஒரு பிரச்சனைக்குமே அதுக்கான பதில் கண்டிப்பா இருக்கும். ஆனா உங்க பிரச்சினை என்னனென்னு சொல்லாம இருந்தா எப்படி மா” என்று பாரி ஆதங்கத்துடன் கூறினான்.

“எல்லாமே இதோ நிக்கிறாளே அவளுக்கு நடக்க இருக்கிற கல்யாணத்துனாலதான்  அண்ணா” என்று குண்டை தூக்கி அலேக்காக இருவரின் மீதும் தூக்கி போட்டாள்.

“என்ன சொல்றீங்க, எனக்கு எதுவும் புரியல”

“நான் பரணியை காதலிக்கிறேன் அண்ணா” என்று பட்டென்று பதில் கூறினாள்.

இந்த பதிலில் இருவருமே ஆடிப்போய் விட்டனர். நங்கைக்கோ என்ன செய்வது என்று புரியாமல் சிலைப்போல் நின்றாள்.

“என்னால கண்டிப்பா பரணிய இன்னொருத்திக்கு விட்டு கொடுக்க முடியாது ண்ணா. அதே மாதிரி இவளோட வாழ்க்கையில இடையூறு பண்ணவும் விரும்பல, அதான் இப்படி ஒரு முடிவெடுத்தேன்” என்று மனது மறையாது அனைத்தையும் கூறினாள்.

“அக்கா அப்போ உனக்கு பரணி அத்தானை அவ்வளவு பிடிக்குமா என்ன?”

இது என்ன அபத்தமான கேள்வி என்பது போல் இருவரும் பார்வையிட,

“செல்லுங்க உங்களுக்கு அத்தானை பிடிச்சிருக்கு தானே” என்க, ஆமாம் என்று அனிச்சையாக தலையாட்டினாள்.

“அப்போ கவலை படாம இருங்க, நானும் காருகாரரும் சேர்ந்து இந்த கல்யாணத்தை நிறுத்தி, உங்களோட நடத்தி வைக்கிறோம்” என்று வாக்கு கொடுத்தாள்.

வெளியே வந்த நங்கையை கேள்வியாய் பாரி நோக்கினான்.

“எதுக்கு இப்படி ஒரு வாக்கு கொடுத்தீங்க?”

“எங்க அப்பா சொல்லி இருக்காரு, அடுத்தவங்க கஷ்டத்துல இருக்கும்போது கை கொடுத்து உதவணும்னு. அததான் நாம இப்போ செய்ய போறோம். எனக்கு சௌந்தர்யா அக்காவோட வாழ்க்கை ரொம்பவே முக்கியம்” என்றாள் சிறியவளாய் இருந்து பெரியவளாய்.

“அதுக்கு உங்க வாழ்க்கையவா வீணடிப்பீங்க. இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன் மா” என்று மறுத்தான் பாரி.

“நீ கண்டிப்பா இதை பண்ணிதான் ஆகணும் காருகாரரே” என்று சிரிக்க,

“நீங்க என்னை எப்படி வேணாலும் கூப்பிடுங்க. ஆனா இந்த காருகாரர் மட்டும் வேணாமே” என்று தயங்க,

“முடியாது. நான் உங்களுக்கு வச்ச பேரு அதுதான். அதை என்னால மாதிக்க முடியாது” என்று சிந்தனையில் மூழ்கினாள்.

கார் வீட்டை நோக்கி அடைந்த சமயம் நங்கைக்கு ஒரு எண்ணம் தோன்ற, அதனை பற்றி கூறி, இதனை செய்து தருமாறு பாரயிடம் வேண்டுதல் வைத்தாள். முதலில் மறுத்த பாரி அதன் பின் ஒத்துக்கொண்டான்.

திருமண நாளும் வந்துவிட குடும்ப உறுப்பினர் எல்லாம் மகிழ்வாக அனைத்து வேலையும் மண்டபத்தில் செய்தனர்.

சௌந்தர்யாவும் கூட பேச்சியம்மாளுடன் திருமணத்திற்கு வருகை புரிந்தாள்.

பரணியும் நங்கையும் மணமேடைக்கு வந்து விட, இருவரும் சேர்ந்து மந்திரங்கள் ஓத, ஐயர் அங்கிருந்த பெண்ணிடம் தாலியைக் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கி வர அனுப்பி வைத்திட, அடுத்த சில மணி துளியில் மஞ்சள் தாலி பாரியின் கைகளுக்கு வந்தது.

“கெட்டி மேளம் கெட்டி மேளம்” என்ற சத்ததத்தோடு, ”கல்யாணத்தை நிறுத்துங்க” என்ற கட்டளையும் பின்னிருந்து வர, நங்கையின் சங்கு கழுத்து வரை சென்ற தாலி கீழிறங்கியது.

***

error: Content is protected !!