நிலா பெண் 10

நிலா பெண் 10

அந்த ப்ளாக் ஆடி பிச்சாவரத்திலிருந்து இப்போது வீடு திரும்பி கொண்டிருந்தது. வீட்டை விட்டு கிளம்பும் போது இருந்த மகிழ்ச்சியான மனநிலை இப்போது இருவருக்குள்ளும் இல்லை.

ஆத்ரேயன் தன் ஒட்டுமொத்த ஆத்திரத்தையும் அந்த ப்ளாக் ஆடி மேல் காட்டிக்கொண்டிருந்தான்.

வாயில்லாத ஊமையைப் போல அந்த இயந்திரம் அவன் இழுத்த‌ இழுப்பிற்கெல்லாம் ஓடிக்கொண்டிருந்தது.

துளசி பற்களால் உதட்டைக் கடித்தபடி அமர்ந்திருந்தாள், பின் சீட்டில். அவன் கோபத்திற்கான முக்கிய காரணம் அதுதான் என்பது அவளுக்கும் தெரியும், ஆனாலும் பிடிவாதமாக பின்னாலேயே அமர்ந்து கொண்டாள்.

‘அவன் எப்படி அப்படி நடந்து கொள்ளலாம்?’ நினைத்த மாத்திரத்திலேயே கண்களில் கண்ணீர் திரண்டது. கண்ணாடி வழியாக அவள் மேல் ஒரு கண்ணை வைத்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்த ஆதியின் கண்களுக்கும் அந்த கண்ணீர் தப்பவில்லை.

‘இவளுக்கு ஏன் இத்தனைப் பிடிவாதம்?’ அவன் மனதும் சண்டித்தனம் பண்ணியது.

அவள் தோள்கள் இரண்டையும் பற்றி தன்னை நோக்கி ஆதி இழுத்த போது அவன் கோபம் கரை மீறியிருந்தது. அவள் விலக விலக அவளை நெருங்கும் அவன் வேகம் அதிகரித்துக்கொண்டே போனது.

“எதுக்காக என்னை விட்டு விலகி விலகி போறே துளசி? எங்கிட்ட உனக்கு அப்பிடி என்ன பிடிக்கலை? ஒருவேளை என்னையே பிடிக்கலையா?” கோபமா ஆதங்கமா என பிரித்தறிய முடியாத ஒரு குரலில் அவன் இப்போது கேட்க துளசி அரண்டு போனாள்.

அவளுக்கே விடைத் தெரியாத ஒரு கேள்வியை அவன் கேட்டால் அவளால் எப்படித்தான் பதில் சொல்ல முடியும்?! அப்போது துளசி சின்னதாக ஒரு தவறு செய்தாள்.

உரிமையோடு தன்னைக் கேள்வி கேட்கும் அவனை அப்போது தவிர்க்க வேண்டும். இது இந்த நிலைமைக்கு நிரந்தரமான தீர்வு இல்லை என்று தெரிந்தாலும் அவனைத் தவிர்த்துவிடும் நோக்கமே இப்போது முதன்மையாக தெரிந்தது.

தன் தோளை உரிமையோடு பற்றியிருந்த அவன் கரங்களைத் தள்ளிவிட்டு திரும்பி நடந்தாள்.

ஆனால் அதை அவன் அனுமதிக்கவில்லை. எட்டி அவளைப் பிடிக்க முயல, அவன் கைக்கு எட்டியது அவள் புடவை முந்தானைதான்.

இவன் இழுத்த வேகத்தில் அவள் இடது பக்க தோளில் இருந்த பின் லேசாக விட்டுக்கொடுக்க, துளசியின் ப்ளவுஸ் சற்றே பின்புறமாக கிழிந்தது.
ப்ரேக் அடித்தாற்போல நின்று விட்டாள் பெண். ஆதிக்கு உடம்பெல்லாம் பதறியது!

“துளசீ…” ஒரு கூச்சலோடு அவளருகே ஓடியவன் அவள் சேலைத் தலைப்பாலேயே அவள் தோளை மூடினான். துளசி கண்களை இறுக மூடிக்கொண்டாள். அவள் வலதுகை ஆடைக் கிழிந்த அவள் இடது தோளை இறுக பற்றியிருந்தது.

“சாரி துளசி…‌ சாரி… சாரி… நான் வேணும்னு பண்ணலை, சாரிம்மா.” அவன் எத்தனைக் கெஞ்சியும் அவள் இளகவில்லை.

“துளசி இங்கப்பாரு, என்னைத் திரும்பி பாரு துளசி.” அவன் மேலும் மேலும் பணிந்து பேசியும் கெஞ்சியும் கூட அவள் திரும்பாமல் போக மீண்டும் அவள் தோளைப் பிடித்து திருப்ப முயன்றான்.

“தொடாதீங்க!” சீறலாக வந்தது அவள் குரல்.

“ஏன்?” நடந்த தவறைச் சரி பண்ணாமல் மீண்டுமொரு விவாதத்திற்கு ஆயத்தமானான் ஆதி.

“பதில் சொல்லு! நான் உன்னைத் தொடக்கூடாதா?” அவன் கண்கள் இடுங்கியது.

“நீங்க யாரு என்னைத் தொட?” இப்போது பெண்ணும் வார்த்தைகளைச் சிதறவிட்டது.

“நான் யாரா?”

“ஆமா… பத்து நாளைக்கு முன்னாடி நீங்க யாருன்னு கூட எனக்குத் தெரியாது.” அந்த வார்த்தைகள் ஆதியை அடித்து நொறுக்க போதுமானதாக இருந்தது.

அதற்கு மேல் துளசி அங்கே நிற்கவில்லை. கார் நிறுத்தியிருந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டாள்.‌ அவள் தனித்து நடப்பது கண்டு ஆதியும் பின் தொடர்ந்தான்.

காரை இவன் அன்லாக் செய்ததுதான் தாமதம், சட்டென்று பின் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டாள் துளசி. இப்போது மீண்டும் முருங்கை மரம் ஏறிக்கொண்டது வேதாளம்!

வீட்டிற்கு முன்னால் கார் கிரீச்சென்று வந்து நின்றது. துளசி ஒரு கணமும் தாமதிக்காமல் இறங்கி வீட்டிற்குள் போய் விட்டாள்.

அப்போது சரியாக அடித்தது ஆதியின் ஃபோன். நம்பிதான் அழைத்து கொண்டிருந்தான்.

“சொல்லு நம்பி.”

“எங்கே இருக்க ஆதி?”

“வீட்லதான்.”

“எங்கயோ வெளியே போகணும்னு சொன்னே, போகலையா?”

“போய்ட்டு வந்தாச்சு.”

“இவ்வளவு சீக்கிரமாவா வந்தீங்க?”

“இதைக் கேக்கத்தான் கூப்பிட்டியா?” நண்பன் மேல் எரிந்து விழுந்தான் ஆதி.

“இல்லைடா, இங்க பாட்டி ஒவ்வொரு கோவிலா ஏறி இறங்குது, நாங்க வர சாயங்காலம் ஆகிடும், அதால நீங்க ரெண்டு பேரும் ஹோட்டல்ல வாங்கி சாப்பிடுங்க.”

“சரி.” ஒற்றை வார்த்தையோடு பேச்சை முடித்துக்கொண்டான் ஆதி.

காரை விட்டு இறங்கவே மனமில்லாமல் இருந்தது ஆதிக்கு. எதிர்பாராமல் என்னென்னவோ நடந்து விட்டதே! அவன் கைக்கு அவள் சேலை முந்தானைதான் அகப்பட வேண்டுமா?!

அவள் வார்த்தைகள் அவனைக் காயப்படுத்தியது உண்மைதான். ஆனாலும் அது அவன் செய்கையால் விளைந்த கோபமே அன்றி வேறில்லையே!

காரை விட்டிறங்கியவன் வீட்டினுள்ளே போனான். அவள் அறைக்கதவு மூடியிருந்தது. இன்று காலை எத்தனை அழகாக இருந்தாள் அந்த புடவையில்.

“ச்சே!” தன்னைத்தானே அவன் கடிந்து கொண்டிருக்கும் போது அவள் அறைக்கதவு சடாரென்று திறந்தது. ஆதி திடுக்கிட்டு நிமிர்ந்தான். சுடிதாருக்கு மாறி இருந்தாள்.

இவன் அங்கே நிற்பதைக் கொஞ்சமும் இலட்சியம் செய்யாமல் சமையலறையை நோக்கி போனாள் துளசி. அவள் நடையின் வேகத்தில் அவள் கோபம் தெரிந்தது. ஆதி புன்னகைத்தான்.

“நம்பி ஃபோன் பண்ணினான்… அவங்க வர சாயங்காலம் ஆகுமாம்.” கிணற்றைத் தாண்டி நடந்து போன பெண்ணின் நடையின் வேகம் இப்போது சற்றே குறைந்தது.

“நமக்கு ஹோட்டல்ல வாங்கிக்கட்டாம்.” அவள், தான் பேசுவதைக் கேட்கிறாள் என்று தெரிந்ததும் தைரியமாக தொடர்ந்தான் ஆதி.

“தேவையில்லை.” அவனை வெட்டுவது போல பதில் சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள் துளசி. அவள் சமையலுக்கான ஆயத்தங்களில் ஈடுபட ஆதி மீண்டும் பேசினான்.

“ஹோட்டல்ல வாங்கலாம் துளசி.”

“ரெண்டு நாளா ஹோட்டல் சாப்பாடுதான் சாப்பிடுறோம், நல்லதில்லை… வெறும் ரசம், அப்பளம், உருளைக்கிழங்கு பொரியல்தான்.”

“உன்னால முடியாது துளசி, சிரமப்படுத்திக்காதே.”

“அதுக்குத்தான் அரைக்க, கிழிக்கன்னு நீங்க இருக்கீங்களே!” அவள் பதில் சூடாக வர ஆதியின் முகம் கன்றியது.

அரைத்ததைத் தவறென்று அவன் நினைக்கவில்லை. ஆனால் கிழத்தது மகா தவறுதானே?! அதை அவள் வேறு சொல்லி காண்பிக்கிறாளே! அப்போதுதான் ஒன்று உறைக்க அவளருகில் போனான்.

துளசி நாலு வார்த்தைக்கு மேல் அதிகமாக அவனிடம் பேசுபவள் இல்லை. அதுவும் சில நேரம் திணறும். ஆனால் இன்றைக்கு எத்தனை உரிமையாக கோபித்து கொள்கிறாள்!

“நான்தான் உனக்கு யாருமில்லைன்னு சொல்லிட்டியே, அதுக்கப்புறமா எதுக்கு என்னை இத்தனை உரிமையா திட்டுறே, எம் பொண்டாட்டி மாதிரி?!”
அவன் கேள்வியில் அவள் தடுமாறியது வெளிப்படையாகவே தெரிந்தது. சமாளித்துக்கொண்டு அம்மி இருந்த இடத்திற்கு நகர்ந்து விட்டாள்.‌ அவனும் பின்னோடு போனான்.

“உனக்கு என்னைப் பிடிக்கும் துளசி, நீ சும்மா சீன் போடுறே!” அவன் வார்த்தைகளை முடித்திருக்கவில்லை. நின்றபடியே தலையைத் திருப்பி பெண் அவனை முறைத்தது.

“எதுக்கு இப்போ என்னை முறைக்கிறே?!” சற்று காட்டமாக கேட்டவன் அவளை அம்மியோடு சேர்த்து பிடித்திருந்தான். அவன் இரு கைகளுக்கு நடுவே அகப்பட்டுக்கொண்ட துளசி சட்டென்று அவனை நோக்கி முழுதாக திரும்பினாள்.

அவனை உறுத்து விழித்த அந்த விழிகளை ஆழ்ந்து பார்த்தான் ஆதி. அதில் துளிகூட பயம் இருக்கவில்லை.

“உனக்குக் கொஞ்சம் கூட எம்மேல பயமில்லை இல்லை?!” அவன் கண்கள் இப்போது சிரித்தன, உதடு லேசாக துடித்தது.

“எதுக்குப் பயப்பிடணும்? அப்பிடி எதை இப்போ கிழிச்சிருவீங்க நீங்க?” அசால்ட்டாக கேட்டாள் துளசி. அவன் கண்கள் பளபளத்தது.

“உடம்புக்கு முடியாம இப்போ இருக்க, இல்லைன்னா எனக்கு என்னெல்லாம் கிழிக்க தெரியும்னு காட்டுவேன் உனக்கு!”

“ஆமாமா… யூகேல பொறந்து வளர்ந்தவர் இல்லை, எல்ல்ல்லாம் தெரிஞ்சுதான் இருக்கும்.” அந்த ‘எல்லாம்’ என்ற வார்த்தை அவள் வாயில் சிக்கி சின்னா பின்னமாகியது.

“துளசி!” ஆதி இப்போது திகைத்து போனான். இவள் தன்னை விலக்குவதன் காரணம் இதுதானா?‌! இதனால்தான் ஒதுங்கி ஒதுங்கி போகிறாளா?!

“கையை எடுங்க!” இப்போதும் அவள் சீறினாள்.

“துளசி, என்னைப் பாரு.”

“நான் சமையலைக் கவனிக்கணும், நீங்க கொஞ்சம் கையை எடுக்கிறீங்களா?”

“முடியாது, நீ இப்போ நான் சொல்றதைக் கேளு.” அவனும் பிடிவாதமாக அப்படியே நின்றான்.

“வெள்ளைக்காரிக்குப் பொறந்தவன்தானே… ஊர் மேஞ்சு திரிஞ்சிருப்பான்னு நினைக்கிறியா?”

“இல்லை… இல்லையில்லை…” ஏதோவொரு கோபத்தில், அவனைக் காயப்படுத்திவிடும் வேகத்தில் வார்த்தைகளை உதிர்த்துவிட்டாளே ஒழிய அவன் பேசும் அர்த்தத்தை அவள் கிஞ்சித்தும் நினைத்திருக்கவில்லை.

“உம்மனசுல அப்பிடியொரு எண்ணம் இல்லைன்னா அந்த வார்த்தை வந்திருக்காது துளசி!”

“இல்லை…”

“ஃபாரின்ல ஒருத்தன் பொறந்து வளர்ந்தாலே உங்களுக்கெல்லாம் இப்பிடியொரு நினைப்பு வந்திடுது இல்லை?”

“நான்… இல்லை…”

“ஏன், யூகேல பொறந்து வளர்ந்தவங்க நல்லவங்களா இருக்கக்கூடாதா துளசி?”

“நான்… ஏதோ ஒரு கோபத்துல அப்பிடி சொல்லிட்டேன், சாரி.” அவள் சட்டென இறங்கி வந்தாள்.

ஆதி அவளை இன்னும் நெருங்கி வந்தான். அதீத நெருக்கம்தான்!

“துளசி… படிக்கிற காலத்துல நிறைய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருந்திருக்காங்க.” அவன் மூச்சுக்காற்று அவள் கன்னம் தீண்டியது.

“பொண்ணுங்களைத் தொட்டு பேசுறது அங்கெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லைதான்… ஆனா…” ஆதி நிறுத்த அவள் சட்டென்று அண்ணார்ந்தாள். அவள் கன்னம் இப்போது அவன் தாடையை உரசியது.

“இந்த நெருக்கம்… எப்பவும், யார்க்கிட்டயும் இருந்ததில்லை துளசி…‌ இந்த நிமிஷம் நீ எந்தளவு ப்யூரா இருக்கியோ, அதேயளவு நானும் இருக்கேன்னு சொன்னா நீ நம்பணும்!”

துளசி இமைக்க மறந்து நின்றிருந்தாள். எதுவோ சொல்ல தெரியாத இதம் ஒன்று அவள் மனதுக்குள் மெதுவாக பரவியது.

“அம்மா வெள்ளைக்காரிதான், அதுக்காக எது வேணும்னாலும் பண்ணலாம்னு அர்த்தமில்லை துளசி.”

“சாரி, நான் அந்த அர்த்தத்துல சொல்லலை.”

“கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் உண்டு, வீடு வரைக்கும் வருவாங்க, ஏன்… ஒரு சிலர் என்னோட ரூம் வரைக்கும் கூட வந்திருக்காங்க, ஆனா… எல்லார்கிட்டயும் ஒரு நாகரிகமான இடைவெளி இருந்திருக்கு துளசி.”

“……………….” துளசி எதுவும் பேசவில்லை. அம்மியைப் பிடித்திருந்த அவன் கை இப்போது அவள் இடைக்கு இடம் மாறியது.

தவித்தவளின் முகத்தை நோக்கி தயக்கமே இல்லாமல் குனிந்தான் ஆதி.

“நான்… சமைக்கணும்!” சட்டென்று வந்தது எதிர்ப்புக்குரல்.

“சமைக்கலாம்.” அவன் குரல் கரகரப்பாக வந்தது.

“இல்லை…”

“துளசி ப்ளீஸ்…” கொஞ்சலுக்கான அவன் கெஞ்சல் அவளிடத்தில் கொஞ்சமும் எடுபடவே இல்லை.

இறுதியில் ஆதிதான் அவள் பேச்சைக் கேட்கவேண்டி இருந்தது.

அவன் கையை மெதுவாக விலக்கியவள் சமையலுக்குத் தேவையான பொருட்களை எடுப்பதில் ஈடுபட்டாள். சிந்தைக்கும் செயலுக்கும் தொடர்பற்று போகவே எதையெதையோ இடம் மாற்றி வைத்தாள்.

அவள் தவிப்பைச் சற்று நேரம் வேடிக்கைப் பார்த்தபடி நின்றிருந்தான் ஆத்ரேயன். அவன் தன்னையே பார்த்திருப்பது அவளுக்கும் புரிந்தது.

“இப்பிடி பார்த்துக்கிட்டே நின்னா எனக்கு வேலை ஒன்னும் ஓடாது.”

“என்னை என்ன பண்ண சொல்றே? வெளியே போடாங்கிறியா?”

“தோட்டத்தைப் பார்க்க போனீங்களே நேத்து, என்ன ஆச்சு?” சட்டென்று அவள் வேறு பேச்சுக்குத் தாவினாள். அம்மிக்கு அருகில் இருந்த மேடை மேல் ஏறி அமர்ந்து கொண்டான் ஆதி.

“எல்லாம் ஓகே, மண்ணை டெஸ்ட் பண்ண குடுக்கணும்.”

“இது சரியா வருமா?”

“எது?”

“இங்க பிஸினஸ் ஆரம்பிக்கிறது?”

“ஏன் சரியா வராது?”

“இங்க பிஸினஸ் பண்ணினா இங்கேயே தங்கணும்.”

“ம்…”

“உங்க வீட்டுல அதுக்கு சம்மதிப்பாங்களா?”

“எனக்குப் பிடிச்சிருந்தா சம்மதிக்கத்தானே வேணும் துளசி?”

“ரொம்ப சுயநலமா தெரியுதே…”

“நீ ஏன் அப்பிடி நினைக்கிறே? நான் பண்ணுற இன்னொரு முயற்சின்னு இதை எடுத்துக்க கூடாதா?”

“அதை உங்க ஊர்லயே பண்ணலாமில்லை.”

“இதுவும் என்னோட ஊர்தானே?”

“ஆனா இங்க உங்க அம்மா, அப்பா இல்லையே?”

“அவங்களையும் இங்க வரச்சொல்லிட்டா போச்சு.”

“அப்பிடி அத்தனைச் சுலபத்துல வந்திடுவாங்களா என்ன?”

“ஏன்? வரமாட்டாங்களா?” இப்படி ஏதேதோ பேசியபடி துளசி சமையலை முடித்தாள். ஆதியும் கூட இருந்து ஒத்தாசை செய்ய சமையல் வேலைச் சீக்கிரமே முடிந்துவிட்டது.

“துளசி…” கிச்சனை விட்டு வெளியேறப்போன பெண்ணை அழைத்தான் ஆதி.

“ம்…” திரும்பினாள் துளசி.

“நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லலை.” இந்த கேள்விக்கும் அவளிடத்தில் பதிலிருந்தது.

“பதில் சொன்னதா எனக்கு ஞாபகம்.”

“அது உண்மையான பதில் இல்லைன்னு எனக்குத் தெரியும்.”

“எம்மனசுல என்ன இருக்குன்னு உங்களுக்குத் தெரியும்னா அப்புறம் எதுக்கு எங்கிட்ட கேள்வி கேக்குறீங்க?”

“அந்த உண்மையான பதிலை எங்கிட்ட உன்னைச் சொல்லவிடாம தடுக்கிற விஷயம் என்னன்னு எனக்குத் தெரியணும்.” அவள் இப்போது அவனை விளங்காத பார்வைப் பார்த்தாள்.

“ஆதி, ஐ லவ் யூ ன்னு நீ உன்னோட வாயால சொல்லணும்!” சொல்லிவிட்டு அவன் அழகாக சிரித்தான்.

“என்னை உனக்குப் பிடிக்கும் துளசி, ஆனாலும் எதையோ நினைச்சு நீ என்னைத் தவிர்கிற, ஏன்?”

“…………….”

“என்னைப் பெத்தவங்க இதுக்குச் சம்மதிக்க மாட்டாங்கன்னு வேணாங்கிறியா? இல்லை, உனக்காக வேண்டி நான் சுயநலமா இங்கேயே தங்க நினைக்கிறதுல உனக்கு உடன்பாடு இல்லையா? இல்லை, இந்த பாழாப்போன மூடநம்பிக்கைகளை நீயும் பிடிச்சிக்கிட்டு தொங்குறியா?” அவன் பாயிண்ட்டை இப்போது சரியாக பிடித்தான்.

“எனக்கு நிறைய வேலை இருக்கு.” சொல்லிவிட்டு நகரப்போன பெண்ணை ஒரே எட்டில் பிடித்து நிறுத்தினான் ஆதி.

“எனக்கு இன்னைக்கு இதுக்கொரு முடிவு தெரிஞ்சாகணும் துளசி.” அவளை இப்போது கிச்சன் கதவோடு சேர்த்து சிறைச் செய்தான். அந்த சமையலறை அன்று இரு முறை துளசிக்கு சிறையானது.

“நாளைக்குப் பாட்டி கிளம்பிடணும்னு சொல்லுவாங்க, அங்க போயிட்டா இந்த தனிமை எனக்குக் கிடைக்காது, அதை நீ குடுக்கவும் மாட்டே, எனக்கு இப்போ பதில் சொல்லு.”
துளசி லேசாக தடுமாறுவது ஆதிக்கு புரிந்தது. ஆனாலும் பதில் பேசவில்லை அவள். மௌனம் காத்தாள்.

“என்னைக் கொல்லாத துளசி, என்னைப் பிடிக்கலையா? உண்மையைச் சொல்லு.” அவன் பிடிவாதமாக நிற்க துளசி சிறிது நேரம் சிந்தித்து பிறகு பேசினாள்.

“வாழ்க்கைன்னா சாதாரண விஷயம் இல்லை… அதுல பல மாற்றங்கள் வரும் போகும்.”

“ம்…” அவன் நிதானமாக அவள் பேசுவதைக் கேட்டான்.

“இன்னைக்கு உங்களுக்கு என்னைப் பிடிக்கலாம், ஆனா இதே நிலை நாளைக்கு மாறியும் போகலாம்.”

“புரியலை!”

“துளசியை ஒரு கட்டத்துல உங்களுக்குப் பிடிக்காம போகலாம்.”

“நீயா ஏதாவது…”

“நான் பேசி முடிச்சிர்றேனே.” அவள் அவன் வார்த்தைகளைப் பாதியிலேயே தடுத்தாள்.

“சரி சொல்லு.”

“துளசிக்காக, வேரோட ஒரு மரத்தைப் புடுங்கி வேற இடத்துல‌ நடுற மாதிரி ஒரு காரியம் பண்ணுறீங்க.”

“ம்…”

“அது எந்தளவு சாத்தியப்படும்? அது மட்டுமில்லை.”

“வேற என்ன?”

“மூட நம்பிக்கையா இல்லையாங்கிற ஆராய்ச்சிக்கு நான் இப்போ வரலை, நாளைக்கு உங்களுக்குச் சின்னதா ஏதாவது ஒன்னு ஆனாலே நம்மளாலதானோன்னு நான் துடிச்சு போயிடுவேன்.” இப்போது அவன் முகம் சிடுசிடுத்தது.

“அப்போ… எம்மேல அவ்வளவு அக்கறை இருக்கு!”

“இல்லைன்னு நான் சொல்லவே இல்லையே!”

“அந்த அக்கறையை நான் லவ் ன்னு எடுத்துக்கலாமா?”

“ப்ளீஸ்… புரிஞ்சுக்கோங்க.” அவள் குரலில் கெஞ்சல் இருந்தது.

“புரிஞ்சுக்க மறுக்கிறது நீதான், சரி அதை விடு… எனக்கு ஏதாவது கெடுதல் நடந்தாத்தானே உனக்கு அந்த மாதிரி நினைப்பு வரும்? அதுக்கு சான்ஸே இல்லை, நமக்கு இனிமே எல்லாமே நல்லதாதான் நடக்கும்.”

“………….” அவள் இப்போது எதுவுமே பேசவில்லை. அமைதியாக அவனையே பார்த்திருந்தாள்.

“அடுத்ததா என்னமோ சொன்னியே… என்னது? ஏதோ வேரோட புடுங்கின மரம்னு… அப்பிடியெல்லாம் நான் ஃபியூச்சர்ல தின்க் பண்ணவே போறதில்லை, ஏன் தெரியுமா துளசி?” இதைக் கேட்கும் போது அவன் குரல் மாறியிருந்தது.
துளசி ஒரு படபடப்போடு அவனைப் பார்த்தாள்.

“ஏன்னா நீயும் நானும் வாழப்போற வாழ்க்கை அப்பிடி…” மயக்கத்தோடு சொல்லியபடியே நெருங்கி வந்தான் ஆதி.

“ப்ளீஸ்… தள்ளிப்போங்க.” கதவோடு அவளிருக்க இப்போது அவளோடு அவனிருந்தான்.

“கல்யாணத்துக்குச் சம்மதம்னு சொல்லு…”

“நீங்க தப்பு பண்ணுறீங்க…”

“பரவாயில்லை… ஆண்டவன் கிட்ட இதுக்கு ஒரு சாரி சொல்லிக்கிறேன்.” அவன் நெருக்கம் இன்னும் அதிகமானது.

“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறது அவ்வளவு கஷ்டமான காரியமா துளசி?” அவள் கண்களிலும் இருந்த மயக்கத்தை அந்த நெருக்கத்தில் அவன் கண்டுகொண்டானோ?! கேள்வி சற்றே கேலி கலந்து வந்தது.

“ப்ளீஸ்…” அவள் தன் மனதின் ஆசையையும் சேர்த்து அடக்க முயன்றாள்.

“ஒரேயொரு முறை துளசி, ப்ளீஸ்… பர்மிஷன் குடு.” அனுமதி கேட்டால் கிடைக்கும் வரைக் காத்திருக்க வேண்டும். அவன் காத்திருக்கவில்லை. காதல் செய்ய ஆரம்பித்திருந்தான்.
துளசி துவண்டு போனது!

மென்மையான இதழ் தீண்டல்தான்! மிருதுவான ஸ்பரிசம்தான்! அதைக்கூட தாங்க இயலாமல் அவன் மீதே சரிந்தது பெண்மை!

“துளசி…” ஆதரவாக அவளை அணைத்து கொண்டவன் லேசாக அவள் முதுகைத் தட்டிக்கொடுத்தான். இந்த பதில் போதும் அவனுக்கு. தன்னை ஒருநிலைப் படுத்திக்கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தான் ஆதி.

“புரிஞ்சுதா துளசி?‌ உன்னோட மனசுல என்ன இருக்குன்னு இப்போ உனக்குப் புரிஞ்சுதா? அந்த மனசுல எனக்கான இடம் என்னன்னு இப்போ உனக்குப் புரிஞ்சுதா?” சிறு குழந்தைக்குச் சொல்வது போல அவளிடம் சொல்லிக்கொண்டிருந்தான் ஆதி.

“உன்னைக் கஷ்டப்படுத்துறேன்னு புரியுது, அதுவும் இந்த மாதிரி நேரத்துல…” இப்போது அவள் சட்டென்று விலக முயன்றாள். ஆனால் அவன் விட்டால்தானே!

“எங்க ஓடப்போறே?” கேட்டுவிட்டு ஆதி சத்தமாக சிரித்தான். துளசி தலையை நிமிர்த்தவில்லை.

“என்னோட நிலைமையையும் நீ புரிஞ்சுக்கணும் துளசி, நாளைக்குக் கிளம்பணும், இப்போ கிடைச்சிருக்கிற இந்த தனிமை இனி கிடைக்கிறது கஷ்டம்டா…”
இப்போது தன்னை அணைத்திருந்த அவன் கையை விலக்கிக்கொண்டு மெதுவாக விலகினாள் துளசி.

“சாரி துளசி.”

“பரவாயில்லை…” பச்சை இலையை உதிர்ப்பது போல, ஒற்றை வார்த்தையை உதிர்த்தது துளசி. அவன் பெருவிரல் இப்போது அவள் கீழுதட்டை வருடியது.

“ரொம்ப ஸ்வீட்டா இருக்கே துளசி…” அவன் சிரிப்பில் அவள் முகம் சிவந்தது.

“சாப்பிடலாமா துளசி? பசிக்குது.” அவளை மேலும் மேலும் சங்கடப்படுத்தாமல் பேச்சை மாற்றினான் ஆதி. ஆனால் பெண் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.‌ சில நொடிகள் கழித்தே தன் வார்த்தைகளுக்கு அவள் தப்பான அர்த்தம் செய்து கொண்டாள் என்று புரிந்தது ஆதிக்கு.

“ஏய் துளசி… டோன்ட் கிவ் மீ எனி ஐடியாஸ்.” வெடிச்சிரிப்பு சிரித்தான் அவன். தலையைக் குனிந்தபடி நகர்ந்து ப்ளேட்டை எடுத்தவள் அவனுக்கு முதலில் பரிமாறினாள்.

“ஒரு ப்ளேட் போதும்.”

“இல்லை… நீங்க சாப்பிடுங்க.” அவள் தடுமாறினாள்.

“வாழ்நாள் பூரா உன்னோட ட்யூனுக்குத்தான் நான் ஆடப்போறேன், இன்னைக்கு ஒரு நாள் எம்பேச்சைக் கேக்க கூடாதா?”
இதற்கு அவள் என்னவென்று பதில் சொல்ல? அவளைத் தன் அருகிலேயே வைத்துக்கொள்ள அவன் செய்யும் பிரயத்தனங்கள் இவை என்று அவளுக்கும் புரிந்தது, அனுமதித்தாள்.

அப்பளத்தை அவன் கடிக்கும் போது அவளுக்கும் நீட்டினான், பொரியலை அவள் வாயிலும் வைத்தான். தொல்லை செய்யமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே அவளைத் தொல்லைப் பண்ணினான்.

அவன் அன்புத்தொல்லையில் திணறி போனாள் துளசி! கையை அவள் கழுவி முடிக்க,

“துளசி என்னோட வா.” என்று அவளை வீட்டின் நடுப்பகுதிக்கு அழைத்து வந்தான்.

“நீ இருக்கிற ரூமுக்கு ஒரு அட்டாச்ட் பாத்ரூம், அதுக்கப்புறமா இங்க ஒரு காமன் பாத்ரூம், ஓகேவா?”

“எதுக்கு இதெல்லாம்?”

“இங்க நாம இனி அடிக்கடி வருவோம் துளசி, என்னால இந்த கிணத்தோட மல்லுக்கட்ட முடியாதும்மா.”

“ஓ… கிச்சனுக்குத் தேவையானதை வாங்கச் சொல்லி அப்பாக்கி…”

“நோ நோ…” அவன் அவசரமாக அவளை இடை மறித்தான்.

“அந்த அம்மிதான் நம்மோட ரொமாண்டிக் ப்ளேஸ்! அதை மாத்தக்கூடாது.” இப்போது அவள் பக்கென்று சிரித்துவிட்டாள்.

“என்னைச் சுத்தல்ல விட்டுட்டு இப்போ சிரிக்கிறே நீ!” அவன் வார்த்தைகளில், அந்த பார்வையில் அவள் உதட்டு சிரிப்பு உறைந்து போனது.

“துளசி, என்னைப் பாரு!” அவள் முகத்தைத் தன் கைகளால் தாங்கினான் ஆதி.

“என்னோட கேள்விக்குப் பதில் யெஸ்ஸா நோவா?”

“அது இன்னுமா புரியலை?!”

“அது எப்பவோ தெரியும், இருந்தாலும்… துளசி வாயால அதைக் கேக்கணும்.” துளசியின் முகம் லேசாக சிவக்க, தலைத் தானாக குனிந்தது.

“எல்லாத்துக்கும் கெஞ்சணுமா துளசி?!” அவன் குரல் சரசமாக வந்தது.

“யெஸ்!” தன் காதல் சொன்னது பெண். அடுத்த நொடி அவளே எதிர்பாரா வண்ணம் அவளை அலாக்காக தூக்கியவன் வேகமாக ஒரு சுற்று சுற்றினான்.

பயத்தில் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள் இளையவள். விடவே மனமில்லாதவன் போல அவளை நிதானமாக விடுவித்தான் ஆதி.

“துளசி… இன்னொன்னு கிடைச்சா நல்லா இருக்கும்…”

“உதை விழும்!” அவனைத் தள்ளி விட்டவள் ரூமை நோக்கி போய் விட்டாள். ஆதியின் உல்லாச சிரிப்பு அவளைத் தொடர்ந்தது.

Leave a Reply

error: Content is protected !!