நிலா பெண் 11

நிலா பெண் 11

 
நம்பியும் பாட்டியும் வீடு வந்து சேர்ந்த போது மணி மாலை ஆறு ஆகியிருந்தது. பாட்டி வந்ததும் வராததுமாக ஏறி இறங்கிய அனைத்து கோயில்களைப் பற்றியும் பேச ஆரம்பித்துவிட்டார்.
 
“ஆதி, நேக்கு ரொம்ப முடியலை, கொஞ்சம் ஒத்தாசைப் பண்ணுடா.” முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு பாட்டி கேட்க ஆதி சிரித்து விட்டான்.
 
குளிப்பதற்குப் பாட்டிக்கு அப்போது தண்ணீர் தேவைப்பட்டது. அதற்குத்தான் இத்தனைப் பீடிகை. இரண்டு மூன்று பக்கெட்டுகளில் நீரை நிரப்பி கொடுத்தான்.
 
“இது போதுமா பாட்டி? இன்னும் தேவைன்னா என்னைக் கூப்பிடுங்க.” 
 
“இதுவே போதும்டா ராஜா.” பாட்டிக்கு அத்தனை சந்தோஷம்.
 
“சாமிக்கிட்ட என்ன வேண்டிக்கிட்டீங்க?” இது ஆதி.
 
“எனக்குன்னு தனியா நான் என்னத்தைப்பா வேண்டிக்க போறேன், எல்லாம் என்னைச் சுத்தி இருக்கிறவா நல்லா இருக்கணும்னு வேண்டிக்கிறதுதான்.”
 
“ஓ…”
 
“அதுலயும் இன்னைக்கு இந்த துளசிக்காக வேண்டிக்கிட்டதுதான் ஜாஸ்தி.” பாட்டி கவலையோடு சொன்னார்.
 
“ம்…” ஆதி அமைதியாக அதைக் கேட்டு கொண்டான். பாட்டியின் வேண்டுதல் பலித்துத்தான் இந்த பெண் இன்று இளகியதோ?!
பாட்டி குளிப்பதற்காக போய்விட ஆதி முன்னறைக்கு வந்தான். நண்பனை ஒரு முறை நன்றாக ஏற இறங்க பார்த்தான் நம்பி.
 
“என்ன நம்பி அப்பிடி பார்க்கிறே?”
 
“முகம் சும்மா சந்தோஷத்துல பளபளங்குது! அப்பிடி எதைச் சாதிச்சு முடிச்சுட்டே?” நம்பி குறுகுறுவென்று நண்பனைப் பார்த்துக்கொண்டே கேட்க, ஆதி இப்போது சிரித்தான். 
 
அந்த சிரிப்பை ஒரு நொடி இமைக்க மறந்து பார்த்தான் நம்பி. துளசி நிறைய அதிர்ஷ்டம் பண்ணி இருக்க வேண்டும் என்றுதான் தோன்றியது!
 
“அடேய்! நீயெல்லாம் பொண்ணா பொறந்திருக்கணும்டா, அநியாயத்துக்கு அழகா இருக்கேடா!” நம்பி ஹோவென்று சிரிக்க ஆதியின் முகம் சிவந்து போனது.
 
“நான் பொண்ணா பொறந்தா அப்புறம் எப்பிடி உன்னோட தங்கையைக் கல்யாணம் பண்ணுறதாம்?”
 
“அதுசரி, அப்பவும் உனக்கு துளசி நினைப்புத்தானா? உனக்கு துளசி பைத்தியம் பிடிச்சிருக்குடா ஆதி.”
 
“ஆமா, பைத்தியத்துக்கு துளசியை வைத்தியம் பண்ண சொல்லு, எல்லாம் சரியாகிடும்.”
 
“பேச்சை மாத்தாதே, உன்னோட முகம் ஜொலிக்கிறதைப் பார்த்தா என்னமோ நடந்திருக்கு…” நம்பி லேசாக இழுக்க ஆதி லேசாக சிரித்தபடி முன் கதவருகில் போய் நின்று கொண்டான்.
 
“என்னாச்சு ஆதி? துளசிகிட்ட பேசினியா?”
 
“ம்…”
 
“என்ன சொன்னா?”
 
“நல்லா சண்டைப் போட்டோம் ரெண்டு பேரும்.”
 
“டேய்! ஏன்டா? ஏன்டா இப்பிடி பண்ணுறே? எத்தனைத் தரம் பொறுமையா பேசு பொறுமையா‌ பேசுன்னு சொல்றது!”
 
“நீ முழுசா கேட்டுட்டு பேசு நம்பி.”
 
“நீயெல்லாம் என்னத்தைப் பேசி எப்போ சம்மதம் வாங்கி… ஆண்டவா!”
 
“டேய்! உன்னோட தங்கை இன்ன…”
 
“நம்பிண்ணா!” ஆதி பேச்சை முடிப்பதற்கு முன்பாக துளசியின் குரல் கேட்டது. இருவரும் திரும்பி பார்த்தார்கள். 
 
‘இவள் எப்போது வந்தாள்?!’ ஆண்கள் இருவர் மனதிலும் இந்த எண்ணமே ஓடியது.
 
“பாட்டி குளிச்சு முடிச்சாச்சு, நீங்களும் குளிச்சுட்டு சீக்கிரமா வாங்க, சாப்பிடலாம், டயர்டா இருப்பீங்க.”
 
“சரிம்மா.” ஒற்றை வார்த்தையோடு நகர்ந்துவிட்டான் நம்பி. ஆதி இப்போது பெண்ணைப் பார்க்க அவள் விழிகளும் இப்போது அவனைத்தான் பார்த்தன.
 
“இப்போ எதுக்கு நம்பிண்ணாக்கிட்ட இதெல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க?” அவள் குரலில் லேசான கோபம். ஆதி புன்னகைத்தான்.
 
“உனக்குத்தான் அவன் நம்பிண்ணா, எனக்கு ஃப்ரெண்ட் துளசி.” சொல்லியபடி அவள் அருகில் வந்தான்.
 
“அதுக்காக…‌ அதுக்காக எல்லாம் பேசுவீங்களா?” அவள் குரல் இப்போது நலிந்திருந்தது. சொல்லிவிட்டு தலையைக் குனிந்து கொண்டாள்.
 
“அப்பிடி என்னத்தை உங்க நம்பிண்ணாக்கிட்ட சொல்லிட்டாங்களாம், ம்…” அவன் இறங்கிய குரலில் கேட்க துளசி உதட்டைக் கடித்து கொண்டாள். அந்த செவ்விதழ்களையே வட்டமிட்டன ஆதியின் கண்கள்.
 
“துளசி…” பாட்டியின் குரல் இருவரையும் கலைத்தது. திடுக்கிட்டு நிமிர்ந்த துளசி உள்ளே போய்விட்டாள். போகும் பெண்ணோடேயே அவன் மனமும் பின்னால் அலைந்தது.
 
அதன்பிறகு இரவு உணவை அனைவரும் முடித்துக்கொள்ள பாட்டி ஹாலில் வந்து உட்கார்ந்து கொண்டார்.
 
“நம்பி இங்க வா!” கொஞ்சம் ஓங்கி ஒலித்தது பாட்டியின் குரல். கிச்சனில் வேலையாக நின்ற துளசி கூட என்னவோ என்று ஒரு கணம் வேலையை நிறுத்தினாள்.
 
“ஆதீ…” மீண்டும் பாட்டியின் குரல் ஒலித்தது.
 
“எதுக்கு இப்போ இவ்வளவு சத்தம்?” கோபமாக கேட்டபடி நம்பி வர பின்னால் ஆதியும் வந்தான்,
 
“என்ன பாட்டி?” என்று கேட்டபடி.
 
“ரெண்டு பேரும் இப்பிடி உட்காருங்க.” 
 
“இப்போ என்ன பாட்டி வேணும் நோக்கு? பகல் முழுக்க கோவில் கோவில்னு என்னோட பிராணனை வாங்கினது பத்தாதா?” நம்பி அங்கலாய்த்தான்.
 
“டேய்! உட்காருங்கடா ரெண்டு பேரும்!” பாட்டி அதட்ட இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். எங்கேயோ மணி அடித்தது!
 
“என்னடா நடக்குது இங்க?”
 
“என்ன நடக்குது?!” நம்பி ஒரு தினுசாக கேட்டான்.
 
“ஆதீ… நோக்கு என்னைப் பார்த்தா எப்பிடி தோணுது?”
 
“பாட்டீ…” ஆதி லேசாக இப்போது விழித்தான். பாட்டியின் முகத்தில் கோபம் சப்த தாண்டவம் ஆடியது.
 
“நீ இப்போ எதுக்கு சங்கரபாணி ஊர்ல நிலம் தேடுறே?” முகம் முழுக்க சந்தேகத்தோடு ஆதியை கேள்வி கேட்டார் பாட்டி.
 
“சங்கரபாணி அங்கிள் தெரிஞ்சவங்க, தெரிஞ்சவங்கன்னா…”
 
“ஓ… அதுதான் காரணமா இல்லை… சங்கரபாணி துளசியோட தோப்பனார் எங்கிறதாலயா?” பாட்டியின் கேள்வியில் நம்பி திருதிருவென முழித்தான்.
 
கிச்சனில் நின்ற துளசியின் நெஞ்சம் படபடத்தது. யாரும் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் ஆத்ரேயன் இப்போது தயங்கவில்லை. நிலைமையைச் சமாளிக்க தயாரானான்.
 
“துளசியோட அப்பாங்கிறதுதான் காரணம்!” பாட்டியை நேராக பார்த்து தெளிவாக பதில் சொன்னான்.
 
“அப்போ இங்க பிஸினஸ் ஆரம்பிக்க போறது?!” இப்போது பாட்டி திகைத்தார். அவர் கண்கள் ஆதியை துளைத்தன.
 
“துளசிக்காக, துளசியை கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக.” நிதானமான பதில் அவனுடையது.
 
“நம்பி! இவன் என்னடா பேசுறான்?!” பாட்டியின் ஆச்சரியம் சொல்ல முடியாததாக இருந்தது.
 
“அவன் ரொம்ப நாளா இப்பிடித்தான் பாட்டி பேசுறான்.” ஆதியின் தைரியம் பார்த்து இப்போது நம்பியின் வாய்ப்பூட்டும் அகன்றது.
 
“துளசிக்கு ஒன்னுன்னவுடனே இவன் ஓவரா துடிச்சப்போவே நான் சந்தேகப்பட்டேன்… கடைசியில அதுதான் நடந்திருக்கா?!” பாட்டி தனக்குத்தானே பேசிக்கொண்டார். அவர் குரலில் பதட்டத்தின் அளவு அதிகமாக இருந்தது.
 
“இதெல்லாம் நடக்கிற காரியமா ஆதி?”
 
“அது உங்க பிரச்சனை பாட்டி.” இலகுவாக சொன்னான் ஆதி.
 
“என்னோட பிரச்சனையா?!”
 
“ஆமா.”
 
“எதுடா என்னோட பிரச்சனை?”
 
“இப்போ இதைப்பத்தி நீங்க எங்கிட்ட பேசாம போயிருந்தாலும் உங்கக்கிட்ட இதைப்பத்தி நான் கட்டாயம் பேசுறதாத்தான் இருந்தேன்.”
 
“எதுக்கு?”
 
“பெரியவங்க நீங்கதானே முன்னே நின்னு எங்க கல்யாணத்தைப் பண்ணி வெக்கணும்.”
 
“டேய் நம்பி, இவன் என்னடா பேசுறான்? எல்லாத்தையும் ரொம்ப சுலபமா சொல்றான்! இதெல்லாம் நடக்கிற காரியமா?”
 
“ஏன் நடக்காது?” எகிறினான் ஆதி.
 
“எப்பிடி நடக்கும்? சங்கரபாணி இதுக்கு சம்மதிப்பானா?”
 
“நீங்க சம்மதிக்க வைங்க, பெரியவங்கன்னு எதுக்கு நீங்க இருக்கீங்க?”
 
“துளசி அவன் பொண்ணுடா ஆதி.”
 
“அப்போ உங்களுக்கு யாருமே இல்லையா? துளசி உங்க பேத்தி இல்லையா பாட்டி?” ஆதி ஒரே போடாக போட பாட்டி மலைத்து போனார். இப்படி கேட்பவனிடம் என்ன சொல்வது?!
 
‘சபாஷ்டா ராஜா!’ நம்பி மனதிற்குள் கூவிக்கொண்டான். இதை வாய்விட்டு சொன்னால் பாட்டியிடம் நன்றாக வேண்டி கட்டவேண்டும்.
 
“ஆதி… நான் சொல்றதைப் புரிஞ்சுக்கோ.” பாட்டி மெதுவாக ஆரம்பித்தார்.
 
“பாட்டி… இதுல நான் புரிஞ்சுக்க எதுவுமே இல்லை, ஊருக்குப் போனதும் அத்தனைப் பேரையும் கூப்பிட்டு குடும்பத்துல மூத்தவங்களா நீங்க இதைப் பேசணும்.”
 
“உங்க வீட்டுல இதுக்கு சம்மதிப்பாங்களா ஆதி?”
 
“எனக்குப் பிடிச்சிருக்கிங்கிற ஒரு வார்த்தைப் போதும் பாட்டி, அத்தனைப் பேரும் தலையை ஆட்டுவாங்க.”
 
“துளசியோட பிரச்சனை தெரிய வந்தா…”
 
“பாட்டீ…” பெரியவரை முழுதாக பேச விடவில்லை ஆதி.
 
“எந்த தேவையில்லாத பேச்சும் இப்போ வேணாம், துளசிக்கு நான் பொருத்தமில்லைன்னா தாராளமா‌ சொல்லுங்க, கேட்டுக்கிறேன்… என்னோட வருமானம் அவளை வெச்சு குடும்பம் நடத்த பத்தாதுன்னு நீங்க நினைச்சா சொல்லுங்க, ஒத்துக்கிறேன்…
இல்லை, நான் நல்லவன் இல்லைன்னு நீங்க நினைச்சா அதையும் தாராளமா சொல்லுங்க.”
 
“என்னடா ஆதி இப்பிடி பேசுறே…”
 
“இந்த கல்யாணத்துக்கு மறுப்பு சொல்ல இதெல்லாம்தான் காரணம் பாட்டி, அதை விட்டுட்டு எதுக்குத் தேவையில்லாத பேச்சு?” ஆதி கோபமாக கேட்க பாட்டி நம்பியை பார்த்தார். 
 
“அவன் சொல்றது கரெக்ட்தானே பாட்டி, துளசிக்கு‌ ஒரு நல்ல வாழ்க்கை அமையாதான்னு நாம வேண்டாத நாளில்லை, இப்போ அதுவே நாமெல்லாம் எதிர்பார்த்ததைவிட அருமையா அமைஞ்சு வரும்போது அதை எட்டி உதைக்கிறது எந்த வகையில நியாயம்?”
 
“அதெல்லாம் சரிதான் நம்பி, ஆனா இதால ஆதிக்கு நாளைக்கு ஒரு பிரச்சனை வந்திடுச்சுன்னா என்னால தாங்க முடியாதுடா!” பாட்டியின் குரல் கரகரத்தது.
 
அந்த அன்பில் ஆதி நெகிழ்ந்து போனான். பாட்டியின் அருகில் போய் அமர்ந்தவன் அவரின் கைகளைக் கெட்டியாக பிடித்து கொண்டான்.
 
“உங்க ஆசீர்வாதம் இருக்கும்போது எனக்கு எதுவும் ஆகிடாது பாட்டி, நானும் துளசியும் ரொம்ப காலம் நல்லா இருப்போம், அதை நீங்க பார்ப்பீங்க.” 
 
“ஆண்டவா!” பாட்டி சட்டென்று உடைந்து அழுதார்.
 
“விஞ்ஞானம், நாகரிகம் எல்லாம் எப்பிடியெல்லாமோ வளர்ந்து எங்கெல்லாமோ போகுது, நீங்க என்ன பாட்டி பேசுறீங்க?” 
 
“முடியலைடா ஆதி… வழிவழியா இதுலயே ஊறிட்டோம், இப்போ வந்து சட்டுன்னு மாத்துன்னா முடியலையே!
 
“முடியணும் பாட்டி, ஆதி மேலயும் துளசி மேலயும் உங்களுக்கு உண்மையான பாசம் இருந்தா முடியணும்.” ஆதி ஆணித்தரமாக பேச நம்பி மலைத்தே போனான்.
 
‘விட்டால் இவன் பாட்டியை இப்போதே இவர்களுக்குக் கல்யாணம் பண்ணி வைத்துவிட செய்வான் போலிருக்கிறதே!’
 
“துளசி இதுக்குச் சம்மதிக்கணுமே ஆதி.”
 
“அதெல்லாம் நீங்க சொன்னா அவ சம்மதிப்பா, ஏன்டா? உன்னோட தங்கை என்னை வேணாம்னு சொல்லிடுவாளா?” துளசியை வம்பில் மாட்டாமல் பேச்சை மாற்றினான் ஆதி.
 
“ஏன் சொல்ல மாட்டா? நீயென்ன பெரிய இவனா? லண்டன்ல எந்த வெள்ளைக்காரியோட ஊர் மேய்ஞ்சு திரிஞ்சியோ? நீ எங்க பொண்ணைக் கேட்டா சட்டுன்னு தூக்கி குடுத்திருவோமா?
அதெல்லாம் நாலு வாட்டி நாங்களும் மாப்பிள்ளையைப் பத்தி நல்லா விசாரிக்கணும்!” கேலியாக பேசினாலும் தனக்கு இந்த திருமணத்தில் சம்மதமே என்பதை மறைமுகமாக சொல்லிவிட்டான் நம்பி.
பாட்டி அதைப் புரிந்து கொண்டார் போலும். அமைதியாக ஆதியை பார்த்து சிரித்தார். ஆதி முகத்திலும் சிரிப்பே மண்டிக்கிடந்தது. பாட்டியை இன்னும் நெருங்கி அமர்ந்து கொண்டான்.
 
“பாட்டி, எனக்குக் கல்யாணம்னு ஒன்னு ஆனா அது துளசி கூடத்தான், இல்லைன்னா இல்லை… ப்ளீஸ் பாட்டி, புரிஞ்சுக்கோங்க.” அவர் முகவாயைப் பிடித்து கெஞ்சினான். 
 
பாட்டிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. யாரிடம் எப்படி எதைப் பேசுவது என்று ஒன்றும் புரியவுமில்லை.
 
அதன்பிறகு ஆதி அங்கே அதிக நேரம் நிற்கவில்லை. மனது ஏனோ பரபரத்தது. துளசியை அப்போதே பார்க்க வேண்டும் போல உள்மனது ஆர்ப்பரித்தது.
 
‘கிச்சனில்தானே ஏதோ கழுவிக்கொண்டிருந்தாள்?’ எண்ணமிட்ட படியே எழுந்தான்.
 
“தண்ணி குடிச்சிட்டு வர்றேன்.” பொதுவாக சொல்லிவிட்டு மெதுவாக கிச்சனுக்கு போனான். ஆனால் அங்கே துளசி இல்லை. பெருத்த ஏமாற்றமாகி போனது ஆதிக்கு.
 
‘அதற்கிடையில் இந்த பெண் எங்கே போனாள்? நாளைக் காலை வரை இனி அவளைப் பார்க்க முடியாதா?’ 
 
அங்கிருந்த பாத்திரத்திலிருந்து நீரை எடுத்துக் குடித்தவன் சட்டென்று நிதானித்தான். அவன் பின்னால் அரவம் கேட்டது. 
பொறுமையாக திரும்பியவன் கண்களுக்கு விருந்து கிடைத்தது.
 
துளசி கதவிற்கு அருகில் இவனையே பார்த்தபடி நின்றிருந்தாள். ஆதிக்கு உலகம் வண்ணமயமானது. முகத்தில் தாபம் ஏற தன் இரு கைகளையும் விரித்தான். அடுத்த நொடி அந்த கைகளுக்குள் ஐக்கியம் ஆனாள் பெண்!
 
“துளசி… துளசி…” வார்த்தைகளுக்கும் வலிக்குமோ என்று அஞ்சியவன் போல அவள் பெயரை உச்சரித்தவன், அந்த பளிங்கு முகமெங்கும் முத்திரைப் பதித்தான்.
 
ஒரு கட்டத்திற்கு மேல்தான் அவள் முகத்தில் ஈரத்தை உணர்ந்தவன் சட்டென்று அவளை விலக்கினான். துளசியின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக பெருகியது.
 
“துளசி! துளசி… ஏய் துளசி… என்னாச்சு?” ஆதி திகைத்து போனான்.
 
“என்னாச்சு? எதுக்கு இப்போ அழுறே?” ஆதி கேட்ட எந்த கேள்விக்கும் துளசி பதில் சொல்லவில்லை. வெடித்து அழுதாள். அவள் அழுகை அதிகரிக்கவும் ஆதி பயந்து போனான்.
 
“துளசி… என்னைப் பாரு துளசி…‌ பாட்டி! இங்க வாங்களேன்… நம்பி, டேய்!” ஆதி சத்தம் போட அவர்கள் இருவரும் பதைபதைத்து போய் ஓடி வந்தார்கள்.
 
ஆனால் இவர்கள் நின்றிருந்த கோலம் பார்த்து அவர்கள் உள்ளே வரவில்லை.
 
“பாட்டி, இந்த துளசியை பாருங்களேன்… எதுக்கு இப்பிடி அழுறா? டேய் நம்பி, நீயாவது வந்து துளசிக்கிட்ட பேசேன்டா.” தன் நெஞ்சோடு சாய்ந்திருந்த பெண்ணின் தலையை முதுகை வருடிய படி இவர்களிடம் பேசிக்கொண்டிருந்தான் ஆதி.‌ 
 
இவை எதையும் உணராமல் கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள் துளசி. பாட்டி இப்போது நம்பியை திரும்பி பார்த்தார்.
 
‘இதற்கு மேலும் இவர்களைத் தடுக்க வேண்டுமா?’ என்ற கேள்விதான் நம்பியின் முகத்தில் இருந்தது. இருவரும் எதுவுமே பேசாமல் அவரவர் படுக்கையில் போய் அமர்ந்து கொண்டார்கள்.
 
நம்பிக்கு மனது நிறைந்து போயிருந்தது. தன் தங்கையை அணைத்தபடி நின்ற ஆத்ரேயனின் தோற்றமே அவன் கண்களுக்குள் வந்து போனது.
 
‘மேட் ஃபார் ஈச் அதர்.’ என்று சொல்வது இதைத்தானா?! எத்தனை அழகாக, பொருத்தமாக இருக்கிறார்கள்! அன்றைய அலைச்சலின் விளைவாக உடம்பும் ஓய்வுக்கு ஏங்க சுகமாக கண்களை மூடிக்கொண்டான் நம்பி.
 
ஆனால் பாட்டி அத்தனைச் சுலபத்தில் உறங்கி விடவில்லை. கண்ணில் பெருகிய நீரைத் துடைத்து கொண்டார். துளசியின் மனதும் அவருக்கு இப்போது தெள்ளத்தெளிவாக தெரிந்துவிட்டது.
 
இதற்கு மேலும் இவர்களைப் பிரிப்பது நியாயமா?‌ இருந்தாலும்… சாஸ்திரம், சம்பிரதாயம் என்று நமக்கு முன்னிருந்தவர்கள் சும்மாவா சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள்? 
 
பழமையில் ஊறிய அந்த பெண்மணிக்கு இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவது கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது! ஏதேதோ எண்ணங்கள் சிந்தையில் ஓட தன்னை அறியாமலேயே கண்ணயர்ந்து விட்டார் பாட்டி.
 
“எதுக்கு இப்போ இவ்வளவு அழுகை?” அவள் விசும்பல் மட்டுமே இப்போது கேட்டது. ஆதி அவள் முகம் பார்க்க குனிந்தான். முகத்தை மறுபக்கமாக திருப்பி அவன் மார்போடு இன்னும் அழுத்தி கொண்டாள்.
 
தான் நிற்கும் நிலையை இன்னும் அவள் உணர்ந்து கொள்ளவில்லை என்று ஆதிக்கும் புரிந்தது. ஏதாவது இப்போது வம்பாக பேசினால் ஓடி விடுவாள். ஆனால் வம்பு பேச ஆசையாக இருந்தது அவனுக்கு!
 
“எதுக்கு இந்த அழுகை துளசி? இன்னைக்கு மத்தியானம் எங்கிட்ட நீ சம்மதம் சொன்னதா எனக்கு ஞாபகம்.” இப்போதும் அவள் எதுவும் பேசவில்லை. 
 
ஆதி அவள் முகத்தைப் பிடித்து நிமிர்த்தினான். பேச நினைத்த எத்தனையோ கதைகள் அவள் மலர் வதனத்தைப் பார்த்த போது மறந்தே போனது அவனுக்கு.
 
அந்த மொட்டவிழ்ந்த இதழ்கள் மட்டுமே இப்போது அவன் கண்ணுக்குத் தெரிய வண்டாகிப்போனான் ஆதி. அவளை அவன் நெருங்கும் தருணத்தில் விலகினாள் இளையவள்.
 
“என்னாச்சு?” அவன் குரலில் அளவுக்கு மீறிய ஏமாற்றம், ஏக்கம்!
 
“தூ… தூங்கணும்.” நாணம் பொங்க பெண் இன்னும் விலகியது.
 
“ஓ…” இதற்குப் பதில் சொல்ல அவனுக்கும் தெரிந்திருக்கவில்லை. வெகுவாக தயங்கிய படி அவள் சமையலறைக் கதவை நெருங்கி இருந்தாள்.
 
“துளசி…”
 
“ம்…” அவள் நின்றாள்.
 
“நாளைக்கு ஊருக்குப் போனதுக்கு அப்புறமா அப்பா அப்பிடி சொன்னாங்க, காமிலா ஆன்ட்டி இப்பிடி சொன்னாங்கன்னு பேச்சு மாறக்கூடாது.”
 
“இல்லையில்லை…” பதில் சட்டென்று வந்தது.
 
“அப்பிடி ஏதாவது ஆச்சு…” அவன் குரல் அவளை மிரட்டியது. முழுதாக திரும்பி நின்று அவனைத் தைரியமாக இப்போது பார்த்தாள் துளசி.
 
“என்ன பண்ணுவீங்க?” அவள் தொனியில் சிரிப்பு!
 
“தூக்குவேன்டீ!” அவன் பதிலில் அவளுக்குத் தூக்கிவாரி போட்டது!
 
“என்னது? டீ யா?”
 
“ம்… அன்னைக்கு கரீம் அங்கிள் காமிலா ஆன்ட்டியை செல்லமா, சரிதான் போடீன்னாரு, எனக்கு அந்த வார்த்தை செம ரொமான்டிக்கா இருந்துது துளசி.” அவன் ரசித்து சொல்ல இவள் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.
 
“இன்டியாக்கு வந்து நல்லது எதையும் கத்துக்கலை அப்போ?”
 
“காதலிக்க கற்றுக்கொண்டேன்!” தூய தமிழில் அவன் சொல்ல பெண் பட்டென்று சிரித்து விட்டாள்.
 
“நீ போய் தூங்கு, அதுதான் உனக்கு அப்பவே தூக்கம் வந்துச்சே.” இது அப்பட்டமான அவன் கேலி. முகம் சிவக்க அவள் திரும்பி நடந்துவிட்டாள்.
 
ரூம் கதவை நெருங்கியவள் அதை மூடும் முன்பு அவனை ஒரு நொடி பார்த்தாள். மார்புக்குக் குறுக்கே கையைக் கட்டியபடி சுவரில் சாய்ந்து கொண்டு அவளையே பார்த்திருந்தான். 
 
“குட் நைட்!” அங்கிருந்த படியே சொன்னாள் அவள். அவன் இல்லை என்பது போல தலையை ஆட்டினான்.
 
‘அவளில்லாமல் அவனுக்கேது சுகமான இரவு?!’ அவள் திகைத்து நின்ற அடுத்த நொடி இங்கிருந்த படியே உதடு குவித்து அவளுக்குக் காற்றில் முத்தம் ஒன்று வைத்தான் ஆதி. கதவு சட்டென்று மூடிக்கொண்டது.
 
*  *  *
 
அடுத்த நாளே சென்னை பயணமானார்கள். வழி நெடுகிலும் ஆதியும் நம்பியும் மாத்திரமே பேசிக்கொண்டார்கள். துளசி பாட்டியைப் பார்க்கவும் அஞ்சியபடி அமர்ந்திருந்தாள்.
 
பாட்டி வேறு ஒரு உலகத்தில் இருப்பவர் போல சதா சிந்தனையிலேயே இருந்தார். அவர் யாரையும் கவனிக்கவே இல்லை. 
 
ஊர் போய் சேர்ந்து இரண்டு நாட்கள் கடந்திருக்கும். ஆதிக்கு பார்க்க வேண்டிய வேலைகள் பாக்கி இருந்ததால் லாப்டாப்போடு ஐக்கியமாகி விட்டான்.
 
தாமஸும் அடிக்கடி அழைக்கவே வேலைகள் அவனைக் கொஞ்சம் உள்வாங்கிக்கொண்டன. ஆனால் இரண்டு நாட்கள் கழிந்த பிற்பாடு அன்று நிதானமாக உடுத்திக்கொண்டு தயாரானான் ஆதி.
 
அந்த ப்ளாக் ஆடி காலையில் வெளியே கிளம்பிப்போய் மத்தியானம் வீடு திரும்பியது. வீடு வந்த ஆதி தனியாக வரவில்லை. அவன் கூடவே ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியும் வந்திருந்தார்.
 
“ஆதீ… யாருடா இது?” கேட்டபடி நுழைந்த பாட்டியிடம்,
 
“இவங்க என்னோட அத்தை பாட்டி, பெயர் அபிராமி.” என்று அறிமுகப்படுத்தினான்.
 
இள நீலநிற ஜீன்ஸும் சிவப்பு குர்தாவும் அணிந்து, கண்களில் இருந்த கறுப்பு கண்ணாடியை நெற்றிக்கு ஏற்றிக்கொண்ட அந்த பெண்ணைப் பாட்டி ஏதோ அதிசயத்தைப் பார்ப்பது போல பார்த்தார்.
 
‘என்ன இது?! இத்தனை வயசுல இந்த பொம்மனாட்டி இப்பிடி உடுத்துண்டு வந்திருக்கா?!’ மனது லேசாக முணுமுணுக்க ஆதியை ஒரு மார்க்கமாக பார்த்தார் பாட்டி. 
ஆனால்… அழகாக இரு கை கூப்பி அதே பெண் வணக்கம் வைத்த போது பாட்டியின் எண்ணம் சற்றே மாறியதோ?!
 
“வணக்கம் மாமி, நல்லாருக்கேளா?”
 
“நேக்கென்னடி பொண்ணே! ரொம்ப நன்னாருக்கேன்!” அழுத்தமாக பாட்டி சொல்ல அந்த அபிராமி சிரித்தார். 
 
டெல்லியின் மிதமான சீதோஷ்ண நிலை அவரை செழுமையாக வைத்திருந்தது. ஆதியின் ஜாடையும் லேசாக அடித்தது அந்த பெண்ணிடம். அவர்களுக்குத் தனிமைக் கொடுத்துவிட்டு பாட்டி நகர,
 
“ஸாரியில வந்திருக்கணுமோ ஆதி?” கேட்டார் அபிராமி. ஆத்ரேயன் சிரித்தான்.
 
“வந்ததும் வராததுமா பாட்டி வந்து நிப்பாங்கன்னு எதிர்பார்க்கலைடா, ட்ராவலுக்கு இந்த ட்ரெஸ்தான் வசதியா இருக்கும்னு வந்துட்டேன்.” இதற்கும் ஆதி சிரித்தான்.
 
“என்னடா எல்லாத்துக்கும் பல்லைப் பல்லைக் காட்டுறே!”
 
“முதல்ல போய் குளிச்சிட்டு வாங்க அத்தை, அப்புறமா நிதானமா பேசலாம்.” ஆதி அத்தையை மாடிக்கு அழைத்துச்சென்று, அவன் அறைக்குப் பக்கத்தில் இருந்த அறையில் அவர் உடமைகளை வைத்தான்.
 
“வீடு சூப்பரா இருக்கு!”
 
“விஸ்வநாதன் அங்கிளோட டேஸ்ட் எப்பவுமே அப்பிடித்தான் அத்தை.”
 
“ஓ…‌” அத்தை பாத்ரூமிற்குள் நுழைய ஆதி பால்கனிக்கு வந்தான். ஒரு நல்ல தரமான ஹோட்டலில் மதிய உணவை ஆர்டர் பண்ணினான்.
 
அந்த மதிய நேரத்து வெயில் தன் வீச்சைப் பூமி மீது உக்கிரமாக காண்பித்து கொண்டிருந்தது. அவன் கண்கள் துளசியின் வீட்டை வட்டம் போட்டன.
 
இரண்டு நாட்களாக அவளைப் பார்க்கவில்லை. ஊரிலிருந்து வந்ததோடு வீட்டுக்குள் போய் அடைந்து கொண்டாள்.
 
பெரியவர்கள் ஏதேதோ கூடிப்பேசுவது போலதான் ஆதிக்கு தெரிந்தது. இருந்தாலும் அவன் கண்டுகொள்ளவில்லை.
 
வேலைகள் தலைக்கு மேல் இருந்ததால் அதில் கவனம் செலுத்தினான். ஆனால் சிதம்பரத்திலிருந்து வந்த அன்று இரவே அத்தைக்கு அழைத்து பேசிவிட்டான். 
 
துளசியை பற்றி அத்தையிடம் அனைத்தையும் கொட்டி தீர்த்து விட்டான். அபிராமி அனைத்தையும் உள்வாங்கி கொண்டார். அவன் இந்த விஷயத்தில் மிகவும் தீவிரமாக இருக்கிறான் என்று அவருக்குப் புரிந்து போனது.
 
“உனக்குப் பிடிச்சா ஓகேதானே ஆதி.”
 
“ஆனா இங்க இருக்கிற பெரியவங்களுக்கு என்னோட சைட்ல இருந்து யாராவது பேசினா திருப்தியா இருக்கும்னு எனக்குத் தோணுது அத்தை.”
 
“ஓ…”
 
“நீங்க கிளம்பி வாங்க அத்தை.”
 
“என்னடா இப்பிடி திடுதிடுப்புன்னு கூப்பிடுறே!” ஆச்சரியப்பட்டாலும் கிடைத்த அடுத்த ஃப்ளைட்டில் புறப்பட்டு இதோ வந்துவிட்டார்.
 
அத்தையின் வரவை அவன் நம்பியிடம் கூட சொல்லி இருக்கவில்லை. துளசி தரப்பு பெரியவர்கள் அவர்களுக்குள் பேசி முடிவெடுக்க இந்த இரண்டு போதுமானதாக அவனுக்குத் தோன்றியது. இனி காய் நகர்த்த வேண்டியதுதான்.
 
“ஆதி…” அத்தையின் குரலில் திரும்பினான்.
 
“என்னடா வெயில் இப்பிடி கொளுத்துது? எப்பிடி சமாளிக்கிறே நீ?!”
 
“ஃபர்ஸ்ட் டூ த்ரீ டேய்ஸ் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அத்தை, யோகர்ட் நிறைய சாப்பிடுன்னு விஸ்வநாதன் அங்கிள்தான் ஐடியா குடுத்தாங்க.”
 
“இப்பிடி தொடர்ந்து ஏசி யில இருந்தா ஸ்கின் ட்ரை ஆகிடும் ஆதி.” அவரின் கவலை அவருக்கு என்பது போல அபிராமி பேச ஆதி சிரித்தான்.
 
“எல்லாத்துக்கும் சிரி, ஆமா… எது உன்னோட கிளியோபாட்ராவோட வீடு?” தலையைத் துவட்டியபடி கேட்டார் அபிராமி. இப்போது காட்டன் புடவைக்கு மாறி இருந்தார்.
 
“அத்தை, உங்களுக்கு ஸாரியெல்லாம் கட்ட தெரியுமா?”
 
“அடிதான் வாங்க போற நீ! நான் என்ன உங்க அம்மா மாதிரி வெள்ளைக்காரியாடா? சுத்த இந்திய குடிமகள்!”
 
“அது சரி, இந்த சுத்த இந்திய குடிமகளைப் பார்த்த உடனேயே பாட்டி தெறிச்சு ஓடினதைத்தான் நான் பார்த்தேனே.” ஆதி சொல்ல இப்போது அபிராமி முகத்தில் அசடு வழிந்தது.
 
“சாரிடா ஆதி, நீ பேசும்போது மூச்சு விடாம துளசியை பத்தி மட்டுந்தான் பேசினியா… பாட்டியோட திடீர் என்ட்ரியை நான் எதிர்பார்க்கலை.”
 
“பாட்டி எப்போ எந்த இடத்துல தரிசனம் குடுப்பாங்கன்னு யாருக்கும் தெரியாது அத்தை.”
 
“அதை விடு ஆதி, துளசி வீடு எதுடா?” ஆர்வத்தோடு கேட்டார் அபிராமி. வாய்ப்பேச்சு தேவையே இல்லை என்பது போல ஆதியின் கண்கள் துளசி வீட்டை நோக்கின.
 
“ஓ… உங்க பியூட்டி குயின் அங்கதான் இருக்காங்களா? இப்போ ஷிவானி மாத்திரம் இங்க இருந்திருக்கணும், உன்னை ஒரு வழி பண்ணியிருப்பா!”
 
“அதான் நீங்க இருக்கீங்களே, இதுல அவ வேற வரணுமா?” இரண்டு பேரும் பேசிக்கொண்டிருக்கும் போதே ஆர்டர் பண்ணிய உணவு வந்துவிட கீழே போனார்கள்.
 
ஷிவானி, அபிராமியின் மகள். டெல்லியில் உள்ள ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்க்கிறாள். அபிராமி அவசரமாக புறப்பட்டு வந்ததால் அவளால் கூட வர இயலவில்லை. சரியான கலாட்டா பேர்வழி.
 
மாமன் மகன் மேல் பிரியம் அதிகம். அவன் ரகசியம் தெரியவந்த போது அவளுக்கும் கிளம்பி சென்னை வர ஆசைதான். ஆனாலும் அவள் பார்க்கும் வேலை அதற்கு இடம் கொடுக்கவில்லை.
 
“நான் கல்யாணத்திற்குக் கட்டாயம் வருவேன்.” என்று அத்தானுக்கு அன்னையிடம் தூதனுப்பி இருந்தாள்.
 
“ஆதி, இப்ப உன்னோட ப்ளான் என்ன, முதல்ல அதைச் சொல்லு?” உணவை ருசித்தபடியே கேட்டார் அபிராமி.
 
“பாட்டி ஊர்ல இருந்து வந்த உடனேயே இங்க இருக்கிற அத்தனைப் பேர்கிட்டயும் விஷயத்தைப் போட்டு உடைச்சிருப்பாங்க.”
 
“ம்…”
 
“இந்த விஷயத்தை ஏத்துக்க அவங்களுக்கும் கொஞ்ச அவகாசம் வேணுமில்லை அத்தை, அதால இந்த ரெண்டு நாளும் நான் எதுவும் பேசலை.” 
 
“ஏத்துக்குவாங்களா ஆதி?”
 
“ஏத்துக்கணும்.”
 
“ம்ஹூம்…” அத்தையின் முகத்தில் குறும்பு கூத்தாடியது.
 
“அது அவங்களுக்கு நல்லது.” இப்போது ஆதியும் புன்னகைத்தான்.
 
“டேய்! நீ ஹீரோடா, வில்லன் மாதிரி பேசாதே.” வாய்விட்டு சத்தமாக சிரித்தார் அபிராமி.
 
“என்னை ஹீரோவா ஆக்குறதும் வில்லனா மாத்துறதும் துளசியோட அப்பா கைல இருக்கு அத்தை.”
 
“கைல இல்லை ஆதி, வாய்ல இருக்கு, மனுஷன் நல்ல பதிலா சொல்லணும்.”
 
“நீங்க எதுக்கு அத்தை இருக்கீங்க? மனுஷன் வாய்ல இருந்து அந்த நல்ல பதிலை வரவைங்க.” 
ஆர்வத்தோடும் ஆசையோடும் தன் எதிரே அமர்ந்திருக்கும் அண்ணன் மகனைப் பார்த்தார் அபிராமி. அவர் முகம் கனிந்து போனது!
 
யௌவனத்திற்கே உரிய கம்பீரம், மிடுக்கு என அனைத்தும் அவனிடம் கொட்டிக்கிடந்தது. அவன் ஆசை நிராசை ஆகிவிடக்கூடாது என்று இறைவனை வேண்டிக்கொண்டார்!
 
 
 
 
 
 

Leave a Reply

error: Content is protected !!