நிஹாரி-15(2)

IMG-20211003-WA0016-8e0b3462

நிஹாரி15(2)

பாடல் பெயர் : Seeta kalyana vaibhogame Ameya records (இந்தப் பாடலை ஒருமுறை யூட்யூப்ல கேட்டுக்கங்க ரீடர்ஸ்)

‘சீதா கல்யாண வைபோகமே!            ராமா கல்யாண வைபோகமே!
சீதா கல்யாண வைபோகமே!             ராமா கல்யாண வைபோகமே!
பவனஜ ஸ்துதி பாத்ர, பாவன சரித்ர ரவி சோம வர நேத்ர, ரமணீய காத்ர
பவனஜ ஸ்துதி பாத்ர, பாவன சரித்ர ரவி சோம வர நேத்ர, ரமணீய காத்ர’

என்ற இனிமையான பாடலோடு, விடியல், அன்றைய அதிகாலைப் பொழுது நான்கு மணிக்கு அழகாகத் துவங்க, தேனில் நனைத்து எடுத்த பலாச்சுளையின் சுவையைப் போல, அங்கு இருந்த அனைவருக்கும் நெஞ்சுக் குழிக்குள் அவ்வளவு தித்திப்பாய் இருந்தது.

பேத்தியின் திருமண வைபோகத்திற்கு ஹைதராபாத்தில் இருந்த பெரிய கோட்டையையே எடுத்திருந்தார் சக்கரவர்த்தி.

எத்தனை உறவுகள்! எத்தனை நட்புகள்! எத்தனை அரசியல் பழக்கங்கள்!

அதுவும் தமிழ், தெலுங்கு என்று இரண்டில் இருந்தும் பட்டாளமே இருக்கிறதே!

ரிஷ்வந்திடம், நிஹாரிகாவின் குடும்பம் எவ்வளவு எடுத்துச் சொல்லியும், திருமணத்தை தெலுங்கு முறைப்படியே அவன் நடத்த உத்தரவிட்டான்.

“அவ உங்க வீட்டுக்கு வரப் போறா.. உங்க முறைப்படி கல்யாணம் பண்ணி, தாலி கட்டுனா தானே நல்லது தம்பி” என்று விவாஹா எடுத்துச் சொல்ல,

“இல்ல அத்தகாரு. அது சரி வராது” என்றான் மென் புன்னகையுடன்.

“நிஹாரிகா, தப்பா நினைப்பான்னு யோசிக்கறீங்களா.. அவகிட்ட என் நானா பேசிப்பாரு” விவாஹா மருமகனிடம் சொல்லிவிட்டு, தந்தையைப் பார்க்க அவரும், ‘ஆம்’ என்பதுபோல தலையசைத்தார்.

“அவ எப்பவும் அவளா இருந்தா தான் எனக்கு பிடிக்கும் அத்தகாரு. அவள தெலுங்கு அம்மாயினியா தான் நான் லவ் பண்ணேன். அதேதான் கடைசி வரைக்கும்” என்று கண்களில் மகளைப் பற்றிப் பேசும்போது, காதல் ததும்ப பேசிவிட்டு ரிஷ்வந்த் செல்ல, ரிஷ்வந்தின் பெற்றோரும் அதையே ஆமோதிக்க, நிஹாரிகாவைப் பெற்றவர்களுக்கும், வளர்த்தவருக்கும் மனம் குளிர்ந்து நிறைந்து போனது.

தெலுங்கர்களின் பதினைந்து சடங்குகளும் தவறாமல் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று ரிஷ்வந்த் சக்கரவர்த்தியை அன்பாய் மிரட்டியிருக்க, முதல் சடங்கான, ‘மங்கள ஸ்நானம்’ மங்களகரமாய் தொடங்கியது.

மங்கள ஸ்நானம் என்பது மணமகன் மணமகள் இருவரையும் அவரவர் வீட்டில் வைத்து செய்யப்படும் முதல் முறை. இங்கு இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்ததால் மாப்பிள்ளை, பெண்ணை தனித்தனியாக வைத்து முறை செய்யத் துவங்கினர்.

முதலில் நிஹாரிகாவை அழைத்து வர, அங்கு தனக்காக தன் குடும்பத்தினர் செய்து வைத்த அலங்காரத்தில், அவளின் இரு புருவங்களும் உயர்ந்து, கண்கள் அதன் எழிலில் சொக்கி நின்றது.

வீட்டிற்கு அருகேயே, கல்யாண மேடைக்குப் பின்னே, ஸ்டேஜில் போடப்படும் அலங்காரங்களைப் போல புள் தரையிலேயே போட்டிருந்தனர்.

வெண்மை நிறத்தில் திரையை வைத்து, அதில் சதுரங்க விளையாட்டைப் போல கட்டம் கட்டமாக சரியாகப் பிரித்து, ஒரு சதுரத்தில் மஞ்சள் நிற மலர்களையும், அடுத்த சதுரத்தில் சிவப்பு நிற ரோஜா மலர்களையும் அழகாய் குவித்து பதித்து இருக்க, கூடாரம் போல அதை மேலே போட்டு மூடாமல், அலங்காரத்திற்காக நிஹாரிகா அமரும் இடத்திற்கு பின் மட்டும் வைத்து இருந்தனர்.

நிஹாரிகா ஸ்நானத்திற்கு அமர சந்தன மரமும், தேக்கு மரமும் கலந்து செய்த கதிரையை, ரிஷ்வந்த் செய்து வர வைத்திருந்தான். நாற்காலியின் இரு புறமும் நீண்ட கழுத்துள்ள மயில் சிலைகள், பெண் மயிலின் அழகை இன்னும் எடுத்துக்காட்ட ஒயிலாய் நின்றிருக்க,

நிஹாரிகாவை இருபெண்கள் அழைத்து வந்து அதன் நடுவே அமர வைக்க, அத்தனை அலங்காரங்களுக்கு நடுவிலும் அவளின் அழகு சிறிதும் குறையவில்லை.

என்றும் குறையாத, எதற்கும் குறையாத, ஒளிரும் அழகு பெற்ற மகள் ஆயிற்றே அவள்!

கிளி பச்சை நிறத்தில் வைலட் கரை வைத்த பட்டுப் புடவையில், மயிலின் உருவங்கள் செழிப்புடன் நெய்யபட்டிருக்க, மயில் டிசைனில் கழுத்திலும், காதிலும், கரத்திலும், இடையிலும், காலிலும் என்று பொன்னில் அணிந்து அழகுச் சிலையாய் அமர்ந்திருந்தாள் அந்த அழகுப் பாவை. 

அதே வீட்டில் மற்றொரு இடத்தில், பச்சை நிற திரைச்சீலை பின்னால் அலங்கரிக்கப்பட்டு, அதில் கண்களை ஈர்க்கும் மேரி கோல்ட் மலர்கள் மூன்று வண்ணங்களில், மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்று குறையாமல் அலங்கரிப்பட்டு, அதற்கு முன்னால் அதன் அழகையே வீழ்த்தும் அளவிற்கு, ஆண்மையின் இலக்கணமாய், கம்பீரத்தின் அகராதியாய், வெள்ளை நிற வெஸ்ட்டிலும், காஞ்சிப் பட்டு வேஷ்டியிலும் அமர்ந்திருந்தான் ரிஷ்வந்த்.

இருவருக்கும் ப்ராஸ்(brass) செம்பில் மஞ்சள் நீரை எடுத்து, துளைகள் பல போட்டிருந்த ஜல்லடைத் தட்டில் ஊற்ற, இருவரையும் மஞ்சள் நீர் நனைத்து அவர்களின் உடலைக் குளிர்வித்ததோ இல்லையோ,, இருவரின் பனிப்போரை இன்று ஒரு நாளிற்கு மட்டும் தணிக்கச் செய்ய, வீட்டின் வெவ்வேறு பகுதியில் இருந்த இருவரின் முகத்திலும் அத்தனை உணர்வுகளை வெளிக்காட்டிய ஆழமான மென்னகை.

இதில் கவின், தமிழ், அன்பு, சக்தி, பிருந்தா, அபர்னா வேறு அவரவர் கணவன் மனைவியோடு வந்திருக்க, இவருக்கும் தங்களுக்குள் இருக்கும் பகையே மறந்து, நண்பர்களாய் இருந்த பழைய பழைய ஞாபகங்கள் வர, அந்த இடத்தில் சிறு மனச் சுணக்கம் கூட இல்லாமல் பஞ்சமாய் இருந்தது. 

கசின்ஸ் கூட்டம், நண்பர்கள் கூட்டம் என்று அவர்களின் மேல் தண்ணீரைக் கொட்டி விளையாட, கேலியும் கும்மளாமுமாக ஒரு வழியாய் அனைவரின் விளையாட்டும் முடிந்து, ரிஷ்வந்தை அவன் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸிற்கு அனுப்பி வைத்துவிட்டு, நிஹாரிகாவை அவளின் அறைக்கு அனுப்பி வைத்தனர்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் இருவரும், தங்கள் திருமணத்தின் முதல் பகுதிக்கு பார்த்து பார்த்து தயாராகினர்.

இருவரும் கிளம்பித் தயாராக, இருவருக்கும் திருஷ்டி கழிக்க, ‘மங்கள ஆரத்தி’ அத்தைகள், பெரியம்மாக்கள், சித்திகளால் என்று கலகலப்புடன் எடுத்து முடித்தவுடன், ரிஷ்வந்த் வெளியே வர, உறவினர் அனைவரின் கண்களும் பளபளத்து அவனை விழுங்கின.

தங்க நிற சர்வானியில், தங்க நிறத்தில் மேலாடையும் வெண் பட்டில் பாண்ட்டும் அணிந்து வந்தவனை, குமரிகள் முதல் பாட்டிகள் வரை பார்த்து கண்ணிமைக்க மறந்து நின்றனர்.

அவனின் அழகில் அனைவரும் கச்சிதமாகச் சிக்கிக்கொள்ள அத்தனை பேர் பார்வையிலும், அவனின் ஆண்மை வெட்கம் கொள்ள, தலையைக் சிறிது குனிந்து கோதியவன், புன்னகையை சிந்தியவாறு தனது வெட்கத்தை அத்தனை அழகாய் மறைத்தான்.

வந்தவனை அடுத்து, கணேஷ் பூஜை செய்ய கோட்டைக்கு அழைத்துச் சென்றனர். அவனுக்கோ தன்னவளை எப்போதும் பார்ப்போம் என்றிருந்தது. ஆனால், அவளைப் பார்க்க முடியாத அளவிற்கு சடங்குகளும், படைகளும் அவனை விடாது மொய்த்துக் கொண்டே இருந்தது. அதுவும் ஐந்தாவது சடங்கு முடியும் வரை இருவரும் பார்த்துக் கொள்ளவே கூடாது என்ற காட்டாயம் வேறு.

கணேஷ் பூஜையை செய்யத் துவங்கியவன், தங்களின் வாழ்வில் இனி எந்தத் தடங்கல்களும் வரக்கூடாது என்று விநாயகரிடம் வேண்டி பூஜையை முடிக்க, அவன் கோட்டைக்கு வந்த அடுத்த பதினைந்து நிமிடத்தில், கோட்டைக்கு மகாராணியாய் வந்து இறங்கினாள் நிஹாரிகா.

லட்சங்கள் மதிப்புள்ள முழுத் தங்கநிற காஞ்சிவரம் பட்டுப் புடவையில், தங்க ரதமாய், ரவி வர்மனின் ஓவியத்தில் உள்ள அழகு அனைத்தும் ஒருங்கே சேர்ந்தது போல, பொன் சிலையாய், அழகின் அகராதியாய், நிஹாரிகா வந்து இறங்க, அனைவரின் கண்களும் அவள் மேல் பட்டுவிடாமல் இருக்க, ‘மங்கள ஆரத்தி’ அத்தனை பாடுபட்டது.

கௌரி பூஜையை நிஹாரிகா செய்யத் துவங்க, அவளருகில் வந்து அமர்ந்த சிறுமியைக் கண்டு, தனது மீன் விழிகளை நளினமாய் சிமிட்டியவள், தனது கணவனுடனான நல்ல உறவிற்கும், தாய்மைக்கும் பூஜையை ப்ரோகிதர் சொல்லச் சொல்ல கவனமாய் செய்து முடித்தாள்.

இன்னும் சற்று நேரத்தில் அடுத்த முறைகள் துவங்க இருக்க, திருமண வைபோகத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பிரம்மாண்டமான முறையில் அரங்கேறிக்கொண்டிருந்தது.

கோட்டையே இரு குடும்பங்களின் பணத்தால், ராஜ பொலிவைக் குறையாமல் கொட்ட, தொலைவில் இருந்து காண்போருக்கு, அது திருவிழா நடக்கும் இடத்தைப் போன்றே தெரிந்தது.

அடுத்த முறையாக, நிஹாரிகா கைகளில் பச்சை இளநீரை ஏந்தி, ஒயிலாய் தாய்மாமன் முறையில் இருப்பவரோடு நடந்து வந்து அமர, ரிஷ்வந்தையும் அழைத்து வந்தனர்.

இருவருக்கும் இடையில் வெண்பட்டுத் துணி திரையாய் மறைக்கப்பட்டு இருக்க, இருவரும் திரைக்குப் பின் மறைந்தபடி, ஒருவரை ஒருவர் பார்க்கும் எதிர்பார்ப்போடு, எதிர் எதிராக ஆவலும் காதலுமாக காத்திருப்போடு அமர்ந்திருந்தனர்.

வாழ்க்கையில் ஒரே ஒரு முறை நடக்கும் அழகிய அற்புதமான தருணம் அல்லவா!

அடுத்த முறையாக, நிஹாரிகாவின் கையைப் பிடித்து வலதுபுறம் சக்கரவர்த்தி நின்று, விவாஹாவும், மகாதேவனும் இடதுபுறம் நின்று, அவள் கரங்களில் இருந்த பச்சை இளநீரை அவளோடு சேர்த்து திரைக்குக் கீழ் ரிஷ்வந்தின் கைகளில் வைத்து, “கன்னியாதானம்” செய்து முடிக்க, அடுத்து, ‘சன்னை மேளம்’ கோட்டையைத் அதிரச் செய்து, காதைக் கிழிக்கும் அளவிற்குக் கொட்ட, பெண்ணின் கையை மணமகனின் கையில் வைத்து, ‘பனிகிரகனம்’ முறை செய்துமுடித்து ரிஷ்வந்திடம், அவனின் நிஹாரிகாவை அவனுடயவளாகவே ஒப்படைத்தனர் அவளின் குடும்பம்.

‘தர்மேச்ச, ஆர்தேச்ச, காமேச்ச,                                                                                              தாய அஹம் எவம் நாட்டி சரம்’

என்று மூன்றுமுறை, அவளை விட்டு எந்த நிலையிலும் விலகமாட்டேன் என்று ப்ரோகிதர் சொன்ன மந்திரத்தை உச்சரித்து, அவளின் கரத்தை இறுக்கமாய் பற்றிக்கொண்டான், இன்னும் சற்று நேரத்தில் நிஹாரிகாவின் கணவன் ஆகப்போகிற காதலன். 

இத்தனை நாள் வளர்த்த பேத்தியை, தாரை வார்த்துக் கொடுத்த சக்கரவர்த்திக்கு, ஆனந்தமும் கவலையும் சேர்ந்து கண்கள் கலங்கிவிட, அவரைக் கவனித்த நிஹாரிகா பனிகிரகனம் முடிந்தவுடன், தாத்தாவின் கழுத்தை அணைத்து, அவரின் கன்னத்தில் பாசமாய் முத்தமிட, அவரோ ஒருமுறை கண் நிறைய அவளை ஆசையாய் பார்த்துவிட்டு, தன் இரு கரத்தை பேத்தியின் கன்னங்களில் வழித்து நெட்டி முறித்தார்.

விவாஹாவும் மகாதேவனும் அத்தனை மனநிறைவுடன் நின்றிருந்தனர். தாங்களே பார்த்திருந்தாலும் இப்படி ஒரு குடும்பம் அமைந்திருக்காது என்று நினைத்தபடி விவாஹா அத்தனை பூரிப்புடன் நின்றிருந்தார்.

அடுத்து, ‘சுமுகூர்த்தம்’ முறை வந்தது. தெலுங்கு திருமண முறைப்படி இது மிகவும் முக்கிய சடங்கு. இச்சடங்கு முடிந்தாலே ஆணும் பெண்ணும் அவர்கள் சாஸ்திரங்களின் படி, அதிகாரப் பூர்வமாக கணவன் மனைவி.

திரைச்சீலைக்கு பின்னால் இருவர் கைகளிலும் சீரகமும் வெல்லமும் கலந்து, வெற்றிலையின் நடுவே வைத்துத் தர, இருவரின் மனமும் தாங்கள் சந்தித்த முதல் தினத்தையும், தருணத்தையும் ஒரே நேரத்தில் நினைத்து திரும்பிப் பார்த்தது. மனமும், உடலும் உள்ளுக்குள் அதிர்ந்து சிலிர்க்க, இருவரின் உடல் ரோமங்களும் இணை கோடுகளாக(parallel lines) எழுந்து நின்று, தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியது.

நல்ல நேரம் வர ப்ரோகிதர் சொன்ன நேரத்தில், திரைச்சீலைக்கு மேலே, இருவரும் வெற்றிலை வைத்த தங்களது கரங்களை, ஒரே நேரத்தில் நீட்டி, ரிஷ்வந்த் தன்னவளின் தலையில் வெற்றிலையை வைத்து அவளைத் தன் மனைவியாக்க, நிஹாரிகாவும் அந்த விநாடியே தன் கரத்தில் இருந்த வெற்றிலையை, தன்னவனின் தலையில் வைத்து அவனைத் தன் கணவனாய் ஏற்றுக்கொள்ள, இத்தனை நேரம் அவர்கள் எதிர்நோக்கிக் காத்திருந்த நொடி வர, திரைச்சீலையை விலக்கினர்.

‘சோகத்தில் இருந்த எனை
வானவில்லாய் வாழ்க்கையில் வந்து,
நட்பிலும் காதலிலும்
சிறகடிக்க வைத்தாய்,
வண்ணத்துப் பூச்சியாய்.

இன்றும் உன்னுடன்
பறந்து சிறகடிக்க
வரம் கிடைக்க,
மறுக்காமல் நானும்
வரவேற்று நீயும்
காதல் இல்லாமலா!’

திரைச்சீலை விலகியவுடன் அவளின் மனம் தன் ஈகோ என்னும் திரையை விலக்கி(மறந்து), அவனிடம் விழியாலே கவி படிக்க, அவனின் விழிகளோ அவளிடம், ‘இனி நீ என் உயிர், உலகம்’ என்றிட, அதை உணர்த்தும் விதமாய், இருவரின் தலையில் மேலிருந்த கைகளும் சற்று அழுத்ததைக் கூட்டி காதலின் ஆழத்தை பறைசாற்றியது.

இருவரும் அதே நிலையில் இருக்க, பெரியோர்கள் ஆசிர்வதிக்க தூவிய அட்சதை, அவர்களை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.

தொடரும்..
(பாதி கல்யாணம் தான் முடிஞ்சிருக்கு. மீதி கல்யாணம் அடுத்த எபில. முடியல😴. அவங்க முறைல நிறைய சடங்குகள். அத்தனை அழகா இருக்கிறதை குறைச்சு குடுக்க மனசு வரலை அதான்).