நிஹாரி-18

IMG-20211003-WA0016-a60ea144

நிஹாரி-18

ரிஷ்வந்த் கல்லூரிக்குள் காலை எடுத்து வைத்தபொழுது, அவனுக்காகவே காத்திருந்த அன்பு அவனை நோக்கி படபடப்புடன் ஓடி வந்தான்.

ரிஷ்வந்தின் விழியே நண்பனைக் கேள்வியாகப் பார்க்க, “உன்னை இப்பவே ஆபிஸ்ல வரச் சொன்னாங்கடா” என்றுஅன்பு அழைத்துச் செல்ல, ரிஷ்வந்த் யோசனையுடன் அவனுடன் சென்றான்.

அனைத்து யோசனைகளும், பிரச்சனைகளும் அவனின் மூளைக்குள் மத்தளம் போலக் கொட்டி, அவனின் தலை வலியைப் பிடுங்க, சிந்தனையுடன் வந்தவன் ஆபிஸ் அறையின் முன் நின்றிருந்த கவினைக் கண்டான். ரிஷ்வந்த் அவனை உணர்வில்லாத பார்வை பார்க்க அவன் தலை குனிந்துகொண்டான்.

***

“கவின், உன் ஃபோன்ல கடைசியா ஒரு மெசேஜ் வந்துச்சுல.. காமி” மதிய இடைவேளையில், ஏதோ ஒன்று உறுத்திக்கொண்டே இருக்க, நிஹாரிகா கவினின் அலைபேசியை காண்பிக்கச் சொன்னாள்.

ஏனெனில், முகம் விழுந்து செல்லும் தன்னவனைப் பார்க்கும் பொழுதே ஏதோ ஒன்று சரியில்லை என்று தோன்றியது அவளுக்கு. அதுவும் வகுப்புக்குள் வந்தவன், மிக எச்சரிக்கையாக அவளின் முகத்தைப் பார்க்க முடியாமல், தவிர்த்துவிட்டுச் சென்றது, அவளை சிந்தனையில் ஆழ்த்தியது. அதனால் தான் கவினிடம் நேரே அலைபேசியைக் கேட்டாள்.

“அது எதுக்கு உனக்கு?” கவின் மழுப்ப,

“இப்ப தர போறியா இல்லியா?” நிஹாரிகா அவனுக்கு வழி விடாமல் பெஞ்ச்சை அடைத்தபடி நிற்க, கவினிற்கு தெரிந்துபோனது இனி அவளிடம் தப்பமுடியாது என்று. ஆனாலும், ரிஷ்வந்தை அவனால் விட்டுத் தர முடியாதே.

“அது எங்க பர்சனல் நிஹாரிகா” என்றுவிட்டான் யோசிக்காமல். அவனுக்கு அலைபேசியில் ரிஷ்வந்த் அனுப்பிய குறுஞ்செய்தியை, நிஹாரிகா பார்த்துவிடக் கூடாது என்றே இருந்தது. ஆனால், அது அவளின் மனதை வாட்டும் என்பதை அவளின் நண்பனாய் மறந்தான் கவின்.

அவன், ‘எங்க பர்சனல்’ என்று சொன்னதில் முகம் வாடியவள், அடுத்த நொடி கோபம் கொண்டவளாய், “சரி விடு.. இனி நான் உங்க யாருக்கு நடுவுலையும் வரல” என்று கரகரத்த குரலில் சொல்லிவிட்டு, தனது பையை மாட்டிக்கொண்டு கிளம்பினாள். அவன், “நீ யாரோ” என்று சொல்வதுபோல இருந்தது நிஹாரிகாவுக்கு.

‘அவ்வளவு தானா நான். என்கிட்ட எதுக்கு மறைக்கனும். அப்ப நான் அவ்வளவு முக்கியம் இல்லை. அவங்க அவங்கதான்னு இருக்காங்க’ என்று மனம் சுணங்க உள்ளுக்குள் முனகியபடி, கோபத்தோடு சென்று கொண்டிருந்தவளின் பின்னே ஓடிவந்த கவின்,

“நிஹி, நில்லு..” என்று அவளை வழிமறித்து நிற்க, நிஹாரிகா அவனை நிமிரிந்து பார்க்காமல் அவளைக் கடந்து சென்றாள்.

“ப்ச்” என்று சலித்துக் கொண்டவன் சிறிது கோபத்தோடு திரும்பி, “ரிஷ்வந்தை யாராவது அசிங்கப்படுத்துனா உன்னால தாங்கிக்க முடியுமா?” என்று அழுத்தமாகக் கேட்க, முன்னால், ‘டக்’, ‘டக்’ என்று தனது கோபத்தை நிலத்தில் பதித்துக்கொண்டு, நடிந்து சென்று கொண்டிருந்தவளின் கால்கள் தோழனின் கேள்வியில் அப்படியே நின்றது.

அவளுக்குத் தெரிந்தால் அழுதுவிடுவாள் என்று எண்ணித்தான் கவின் கேட்டது. ரிஷ்வந்திற்கு ஏதாவது என்றால் அவள் உள்ளுக்குள் துடிப்பதை அவன் கண்டு இருக்கிறானே. ஒருநாள் விளையாட்டுப் போட்டியில் அவன் கீழேவிழுந்து அடி பட்டு இரத்தம் கசிந்ததில், அவள் பட்ட துடிப்பு அவனுக்குத் தானே தெரியும். ரிஷ்வந்த் முன் காட்டாமல் அவனுக்கு முதல் உதவி செய்தவள், அன்று இவர்கள் வெற்றி பெற்று வீட்டிற்கு சென்றபின், கவினை அலைபேசியில் அழைத்து புலம்பி தூங்க விடாமல் செய்தது அவனுக்குத் தானே தெரியும்.

அப்படி நினைத்துதான் நிஹாரிகாவிடமே கவின் மறைத்தது. அவள் தாங்கமாட்டாள் அழுதுவிடுவாள் என்று.

ஆனால், அதற்கு நேர்மாறாக ஆக்ரோஷத்துடன் திரும்பியவள், “யார் என்ன சொன்னா?” என்ற கர்ஜனையுடன் திரும்பியவளின் கண்களில், தீயாய் தெறித்துக்கொண்டிருந்த கோபத்தைக் கண்ட கவினின் கால்கள், வேறொரு அவதாரத்தில் நின்றவளின் தோற்றத்தில், தன்னால் இரண்டடி பின்னால் நகர்ந்தது.

ரிஷ்வந்திற்கு அலைபேசியில் அழைத்த நிஹாரிகா அவன் ஃபோனை எடுக்கவில்லை என்றவுடன், கவினின் அருகில் வந்து, “யார் என்ன சொன்னா?” என்று மீண்டும் தனது செல்வாக்கிற்கே உண்டான சிம்மக் குரலில் வினவ, கவின் தனது அலைபேசியை எடுத்து ரிஷ்வந்தின் குறுஞ்செய்தியைக் காண்பித்தான்.

பிறந்ததில் இருந்தே பணக் கஷ்டம் என்ற ஒன்றையே அறியமால் இருந்தவளுக்கு, ஒரு மனிதனை பணத்திற்காக இவ்வளவு கேவலப் படுத்துவார்களா என்று அத்தனை ஆத்திரமாக இருந்தது. தன்னவனின் தொய்ந்த முகமும், கம்பீரம் குறைந்து நடந்து சென்றதும் மனக்கண்ணில் வர, கொதிக்கும் அக்னிப் பிளம்பாய் ஆனாள், ரிஷ்வந்தின் மனம் கவர்ந்தவள்.

அனைத்தையும் படித்து முடித்தவளுக்கு நாசியின் கூர் நுனி மட்டும் மிளகாயின் சிவப்பில் சிவக்க, விறுவிறுவென ஆபிஸ் ரூமை நோக்கி நடந்தாள். அத்தனை ஆவேசம் மனதில். கவின் அவளைக் கத்தி அழைத்துக்கொண்டு, அவள் கடகட வேகநடைக்கு பின்னே ஓடிவருவது எதுவும் அவளின் காதில் விழவில்லை. விழுந்தாலும் நிற்கும் நிலையில் இல்லை அவள்.

ஆபிஸ் ரூம் கதவைத் தட்டாமல் புயலென உள்ளே நுழைந்தவள் கல்லூரி கட்டணம் வசூலிக்க இருக்கும் பெண்ணிடம் நேராய் சென்றாள். அவள் வந்த வேகத்தையும், முகத்தில் இருந்த கடுமையையும் கண்டு ஆபிஸ் ரூமில் இருந்த மற்றவர்கள் அவளையே அசையாமல் கவனிக்க,

“ஹலோ!” அப்பெண்ணின் முகத்திற்கு முன், தன் நீண்ட விரல்களை வைத்து சொடுக்கிட்டவள், “உங்க சேர்மனை வர சொல்லு” என்றாள். அத்தனை திமிரும், தெனாவெட்டும் நிரம்பி வழிந்தது, நிஹாரிகாவின் குரலிலும், அவள் சொடக்கிட்ட விதத்திலும்.

ஐந்து ஆண்டுகள் அங்கு வேலை செய்பவளுக்கோ அனைவரின் முன்னால், சிறு பெண்ணின் செயலால் தன்மானம் சீண்டப்பட, “ஏய்! நீ சொன்னா வரதுக்கு அவரு என்ன உன் வீட்டு வேலைக்காரரா? என்ன திமிரு உனக்கெல்லாம். உனக்கு எல்லாம் நாளைக்கே டிசி தான். உன் வீட்டுல வந்து வாங்கிட்டுப் போக சொல்லு” அவள் அமர்ந்த இடத்தில் இருந்து ஆங்காரமாய் எழுந்துக் காட்டுக் கத்து கத்த,

“ஹோ, ஐ ஸீ” என்றவள் தனது அலைபேசியை எடுத்து சக்கரவர்த்திக்கு அழைத்தாள். சென்னை வந்ததில் இருந்து எதற்கும் தன் செல்வாக்கை உபையோகிக்காதவள் அவள். ஏன் பள்ளியில் ஒருவன் அவளிடம் எல்லை மீறும் போதுகூட தன்னைத் தானே காத்துக்கொண்டவள். முதல் முறையாக தாத்தையாவை அழைத்தாள். அதுவும் தன்னவனுக்காக.

பேத்தி என்றவுடன் அந்தப்பக்கம் உடனே அலைபேசி எடுக்கப்பட, “தாத்தைய்யா..” என்றவளின் குரல் கரகரக்க, அவரோ பேத்தி நீண்ட நாள் கழித்து அழுவதுபோல் பேச பயந்துவிட்டார்.

“என்னாச்சு பங்காரம்?” அவர் பதட்டத்தை கட்டுப்படுத்திக் கொண்டு வினவ, இந்தப்பக்கம் நின்றிருந்த நிஹாரிகா, அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டு,

“தாத்தையா, நான் இந்தக் காலேஜ் சேர்மனை உடனே பாக்கணும். இப்பவே அவரு காலேஜுக்கு என்னைப் பார்க்க வந்தாகணும். நௌ(now)” என்று தன்முன் நின்றிருந்த பொம்பளையை, கண்கள் கோபத்தில் சிவந்து, முகத்தில் ஆத்திரத்தைத் தேக்கி, விழியில் கண்ணீர் ரேகையுடன் நின்றிருந்தவள் தனது தாத்தாவிற்கே கட்டளையைப் பிறப்பித்துவிட்டு, அங்கிருந்த இருக்கையில் கல்லாய் அமர்ந்துவிட, அங்கிருந்த அனைவருக்குமே திக்கென்று இருந்தது.

அவளின் தோற்றம் அனைவருக்கும் பணக்காரப் பெண் என்று தெரிந்திருந்தாலும், அவளின் பின்புலம் யாரும் அறியவில்லை. அங்கு ஆபிஸ் ரூமில் முக்கியப் பதவியில் இருக்கும் ஒருவர், நிஹாரிகாவின் டீடெயில்ஸை கம்ப்யூட்டரில் ஐந்து நிமிடத்தில், பார்த்து முடித்தவருக்கு தெரிந்து போனது, இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் இங்கு பூகம்பமே வெடிக்கப்போகிறது என்று.

அவர் வெளியே வந்து அந்தப் பெண்மணியிடம் சொல்வதற்குள் அந்தக் கல்லூரியின் சேர்மன் வெள்ளையும் சொள்ளையுமாக உள்ளே நுழைந்தார்.

உள்ளே நுழைந்தவரை நிஹாரிகா அசையாமல், அதே பார்வையுடன், வாள் போன்ற கூர்மையான வெட்டி வீசும் பார்வையை அவரின் மேல் வீச, அவரோ அவருக்கு மேலிருப்பவர் அலைபேசியில் இடித்த இடியில், பதைபதைப்புடன் ஓடி வந்தவர், “மேடம், ப்ளீஸ் உள்ள வாங்க” என்று பணிவான குரலில் அழைக்க, அங்கு நின்றிருந்த அனைவருக்கும் ஈ ஆடவில்லை.

சிறிதுதூரம் நடந்தவர் திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்து முறைத்துக் கொண்டே, “நீயும் உள்ள வா” என்றார்.

“மேடம், ப்ளீஸ் டேக் யுவர் சீட்” என்று அவளை அமரச் சொன்னவர், அவள் அமர்ந்த பின் அமர்ந்துவிட்டு அந்தப் பெண்ணை விழியாலே எரித்தார். அவரின் விழிகள், ‘உன்னால நான் சின்னப் பொண்ணு முன்னாடி எல்லாம் கை அசைக்க முடியாம ஆகிடுச்சு’ என்று குற்றம்சாட்ட கைகளை பிசைந்துகொண்டே பயத்துடன் நின்றார் அப்பெண்.

அதேநேரம் ஒருவர் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்து, “ஸார் அந்தப் பையன் வந்துட்டான்” என்றிட, “சீக்கிரம் உள்ள அனுப்புங்க” என்றார் சேர்மன்.

ரிஷ்வந்த் வந்தவுடன் அவனையும் அமர வைத்தவர், “ஸாரி மேடம். இனி..” அவர் தொடங்க, நிஹாரிகா கையை உயர்த்தி அவரின் பேச்சைக் கோபமாகத் தடுத்தாள்.

“ஐ டோன்ட் வான்ட் எனி எக்ஸ்ப்ளநேஷன் (I don’t want any explanation).. பீஸ் வாங்கறதும் வாங்காம போறதும் உங்க பாடு.. பட் அதைக் கேக்க ஒரு லிமிட் இல்லியா.. வர வேணாம்னு நினைச்சா அதை எப்படி சொல்லணும்?” என்று கேட்டவள் அந்தப் பெண்ணை திரும்பிப் பார்க்க அவரோ நடுங்கியபடி நின்றிருந்தார்.

‘இப்பப் பேசு’ என்பது போல இருந்தது நிஹாரிகாவின் பார்வை.

“இவங்க எப்படி பேசி இருக்காங்க தெரியுமா உங்களுக்கு..” என்றவள், “கந்து வட்டிக்கு காசு கொடுத்த மாதிரி பிஹேவ் பண்ணியிருக்காங்க. இஸ் திஸ் வாட் எ ஸ்டூடென்ட் டிசர்வ் (Is this is what a student deserve?)” என்று கோபமாகப் பொரிய, ரிஷ்வந்த் மேசைக்குக் கீழ் இருந்த அவளின் கையை அழுந்தப் பற்றி அவளை அடக்க முயற்சி செய்ய, அவள் அதை சட்டை செய்யவேயில்லை.

“இனி இப்படி நடக்காம பார்த்துக்கறோம் மேடம்” அவர் கோபத்தை அடக்கியபடிப் பேசினார் நிஹாரிகாவிடம். இதுவே மத்த நடுத்தர வர்க்கத்து மாணவனோ / மாணவியோ வந்து கேட்டிருந்தால் அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறி ஆக்கி இருப்பார்கள் இந்த கழுகுகள்.

அதையே பணமும், அந்தஸ்தும், செல்வாக்கும் நிறைந்தவளிடம் காட்ட முடியாமல் அடங்கி உள்ளுக்குள் ஒடுங்கி அமர்ந்திருந்தார் அவர்.

“இவங்களுக்கு பீஸ் கட்ட டைம் தாங்க..” என்றவள், “அன்ட் இவங்க இவன்கிட்ட பேசுனதுக்கு ஸாரி கேக்கணும்” என்று ஆணைபோல நிஹாரிகா சொல்ல, அதை சேர்மன் தட்டமுடியாமல் மேசை அருகே நின்றிருந்த பெண்ணை உறுத்து விழிக்க, அவர் பார்வையின் உக்கிரம் தாங்காமல்,

“ஸாரி” என்றாள் ரிஷ்வந்தின் முகம் பார்த்து. ரிஷ்வந்தின் முகமோ அதற்கு எந்த விதமான பதிலையும் உணர்வையும் காட்டவில்லை.

இருவரும் வெளியே வர, மாணவர்கள் ஒருவரும் இல்லாமல், கல்லூரியே வெறிச்சோடி மாலை மங்கி ஐந்து மணியாகி இருந்தது. கவினும் அன்பும் மட்டும் அவர்களுடன் நிற்க, மற்றவர்களை வற்புறுத்தி வீட்டிற்கு அனுப்பியிருந்தான் கவின்.

சேர்மன் சென்றபின், “ரிஷ்..” நிஹாரிகா அழைக்க, அவளின் கை முட்டிக்கு மேலே இறுகப் பற்றியவன், அவளைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு போக, அன்பும், கவினும் பதறினர்.

“மச்சி, என்ன பண்ற.. அவளை விடு” கவின் ரிஷ்வந்தைப் பிடித்து இழுக்க, நிஹாரிகாவைப் பிடித்தபடியே விருட்டென்று திரும்பிய ரிஷ்வந்த், நண்பர்கள் இருவரையும் பார்வையால் சுட்டுப் பொசுக்கினான்.

பேச வேண்டியவளோ எதுவும் பேசாமல், அவன் இறுகப் பற்றியிருந்த இடம் வலியைக் கொடுத்தபோதும் பொறுத்துக்கொண்டு நின்று இருந்தாள்.

“யாராவது குறுக்க வந்தீங்க..” என்று அந்த இடமே நடுங்க கர்ஜித்தவன் அவளை இழுத்துக்கொண்டு கல்லூரி கட்டிடத்திற்கு பின் செல்ல,

“ரிஷ்வந்த், கை வலிக்குது” நிஹாரிகா அவன் கரம் கொடுத்த அழுத்தத்தைத் தாங்கமுடியாமல் உள்ளே போன குரலில் சொல்ல, அவளைப் பார்த்தவன் என்ன நினைத்தானோ, அவளின் மேல் இருந்த கையை எடுத்தான்.

அவன் இறுகப் பற்றி அவளை இழுத்து வந்திருந்திருக்க, அவனின் கை விரல்கள் பதிந்து, அவளின் பளிங்கு நிறம் அவன் பற்றிய இடத்தில் சிவந்து போய் இருந்தது. முகம் சுருங்க வலித்த இடத்தைத் தேய்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்தவனுக்கு கோபம் கோபமாக வந்தது.

“நிஹாரிகா!” அவனிடம் இருந்து முதல் முறையாக வந்த அதிகாரமான குரலில், அவள் விதிர்விதிர்த்துப் போய் நிமிர்ந்தாள். அவனின் குரலில் இருந்த கடுமையை முகத்திலும் கண்டவள், ஏனோ தாயிடம் கடுகளவு பயந்து நிற்கும் குழந்தையாய் நின்றாள்.

பழுப்பு நிறத்தில் ப்ளோரல் பிரின்ட் அடித்த ஸ்லீவ்லெஸ் குர்தா, அவளைக் கச்சிதமாய்க் கட்டிப்பிடித்து இருக்க, க்ரீம் நிற சிகரெட் பாண்ட் அணிந்து, காதில் சிறிய ஆக்ஸிடைஸ்ட் ஜும்கா அணிந்து, அஞ்சனம் பூசிய விழியுடன், காலையில் இருந்து கல்லூரியில் இருந்த பலனாய் தலைகள் அங்கே இங்கே கலைந்து, அவனை சிறு பயத்துடன் அவள் நிமிர்ந்து பார்க்க, அவளின் பால் முகத்தையும், அகல விரிந்திருந்த விழியையும் பார்த்தவனுக்கு கடினம் என்பது வடிந்து போனது.

இருந்தாலும் முயன்று வரவழைத்த கடினத்தோடு, “எதுக்கு இதெல்லாம் பண்ண?” அவள் எதிரில் நின்றபடி அவன் வினவ, “அவங்க பண்ணது தப்பு தானே?” என்றாள்.

ஒரு விரக்திப் புன்னகையை சிந்தியவன், “சரி, இனிமே இப்படிப் பண்ணாதே” என்று மூன்றாவது மனிதனிடம் பேசிவிட்டுச் செல்வதைப் போல நகரப் பார்க்க, அவனின் கை பிடித்து கோபமாய் நிறுத்தினாள் அவனவள்.

“ஏன் இப்படி வித்தியாசமா பேசற?” அவள் ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து படபடக்கும் இதயத்துடன் கேட்க, “நத்திங்” என்றான் அவன்.

“நீ இப்படி எல்லாம் பேசவேமாட்டே.. சொல்லு ஏன் இப்படிப் பேசறே?” நிஹாரிகா கோபத்தோடும் தவிப்போடும் அவனுக்கு வெகு அருகில் சென்று நின்றபடி வினவ, அவனோ அவள் முகம் பார்க்காமல் எங்கோ பார்த்தபடி நின்றிருந்தான்.

அவன் மனதுக்குள் வலித்துக் கொண்டிருந்தது. அவளும் தன்னைக் காதலிப்பது அவனுக்குத் தெரியும். ஆனால், தனக்கும் அவளுக்கும் சரி வராது என்றும், அவள் தன்னைவிட செல்வாக்கு உடையவள் என்றும் அவனுக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. மேலும், நிஹாரிகாவை மட்டும் அறிந்தவனாக, அவளின் குடும்பத்தில் சாதாரண நடுத்தர வர்க்கத்தில் பிறந்த தன்னை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், அது அவளுக்குத் தான் தேவையில்லாத மன உளைச்சல் என்று நினைத்தவன் அவளை தன்னிடம் இருந்து விலக்கப் பார்த்தான். அவளிடம் பட்டும் படாமலும் பேசும்போதே அவனுக்கு அது உயிர்வரை ஊடுருவி வலிக்கச் செய்தது.

அவன் தன் முகத்தையே பார்க்காமல் நின்றிருக்க, அவளுக்கு மனம் சுணங்கியது.

“ரிஷ்வந்த், என்னை பாரு” அவள் அவன் முகம் பிடித்துத் திருப்ப முயற்சிக்க, அவள் கை தன்மேல் படும்முன் அவன் தள்ளி நின்றான். தன்னவனின் விலகலில் அவள் ஆயிரம் பேர், தன்னை அறைந்ததைப் போல வலியுடன் அவனைப் பார்த்திருக்க, அவனோ அவள் பார்வை புரிந்தாலும், தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு நின்றிருந்தான்.

அவனை சொல்ல முடியாத வலியுடன் பார்த்திருந்தவள், “என்னால எப்படி ரிஷ்வந்த் உன்னை அசிங்கப்படுத்துனவங்களை சும்மா விடமுடியும். பர்ஸ்ட் உன்னோட ஃபீஸை நானே கட்டிடலாம்னு நினைச்சேன். ஆனா, உன்னை ஒரு கடனாளியா  என்கிட்ட கூட நிறுத்தக்கூடாதுன்னு நினைச்சேன். நான் கடனா நினைக்க மாட்டேன். ஆனா, உன்கூட இத்தனை வருஷம் இருக்க எனக்குத் தெரியும், உன்னோட செல்ப் ரெஸ்பெக்ட் அதை ஏத்துக்காதுன்னு”

“அதைக் கடனா தான் நீ பாப்பேன்னு எனக்குத் தெரியும். சத்தியங்கா, நிஜம்கா, சொல்றேன் அதுனால தான் இப்படிப் பண்ணேன்” அங்கிருந்த கல்லூரி சுவற்றின் மேல், நிற்க முடியாமல் தொய்ந்து, சிறிய குரலுடன் அவள் சொல்லி முடிக்க, அத்தனை நேரம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தவனுக்கு, தன்னவளுக்கு தன் மேலுள்ள புரிதலும், தன்னை அவள் மனதில் வைத்திருக்கும் உயரமும் புரிந்தது.

மேலும், அவளின் தழுதழுத்தக் குரல் ஏதோ செய்ய, இரண்டு வருடம் தனக்குப் போட்டிருந்த எல்லைக் கோட்டை அழித்தவன், அவளிடம் சென்று அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

காற்றுக்கூட இடையில் செல்ல முடியாத அவளுக்கு அவளைத் தன்னுள் அடிக்கிப் புதைத்தவன், அவளின் தலையில் தனது தாடையை வைத்த படி நிற்க, இத்தனை நேரம் அவனின் விலகலில் தவித்து, உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருந்தவள், அவனின் முதல் அணைப்பிலும், அவன் கரங்கள் வரம்பு மீறாத வகையில் தன்னை அணைத்திருந்த வகையிலும், தன் தலையின் மேல் அவன் தன் தாடையை பதித்திருந்த விதத்திலும், அவனின் நெஞ்சில் பூனைக்குட்டியாய் ஒன்றினாள்.

அவளுக்கு அவன் அணைப்பு போதவில்லை போல. அவனின் முதுகிற்கு கைகொடுத்து அவனின் சட்டையை இறுக பற்றி, அவனுடன் நெருங்கிக் கொண்டவள், அவனை விடுவிக்கும் எண்ணமே இல்லாது நிற்க, இருவரின் அணைப்பில் அணைந்து போனது இருவருக்கு இடையே வரவிருந்த ஊடல்.

சிறிது நேரம் அனைத்தையும் மறந்து தன்னவளுடன் நின்றிருந்த ரிஷ்வந்திற்கோ மீண்டும் அனைத்தும் ஞாபகத்தில் எழ, அவளை விட்டு விலகப் பார்த்தவனை அவள் விட்டால் தானே!

அவனின் விலகலை உணர்ந்தவள் அவனை அணைத்தபடியே நிமிர்ந்து பார்க்க, தன்னவளின் பளிங்கு வதனத்தையும், அதில் கபடமில்லாத காதலையும் பார்த்தவனுக்கு காதல் என்பது ஒரு அவஸ்தையாய்ப் போயிற்று.

‘தான் அவளின் செல்வ நிலைக்கு ஏற்றதுபோல் அல்லது அவள் தன் செல்வ நிலைக்கு ஏற்றது போல் பிறந்திருக்கக் கூடாதா’ என்று ஏங்கியது அவன் மனம். ‘பணம்’ என்ற அச்சடித்த காகிதம் அவன் வாழ்விலும், காதலிலும் வில்லனாய் நின்று சிரிப்பது போலத் தோன்றியது ரிஷ்வந்திற்கு.

கண்களை இறுக மூடி தன்னை சமன் செய்தவன், “நகரு நிஹி” என்றான் தன்மையாக.

“ம்கூம், மாட்டேன். என்னமோ நினைக்கறே நீ. என்னன்னு சொல்லு அப்பதான் நகருவேன்” அவள் அவனை விடாமல் நிற்க,

“உனக்கும் எனக்கும் செட் ஆகாதுடி” என்று பட்டென்று போட்டு அவன் உடைக்க, அவளோ அதிர்ச்சியைத் தாங்கிய முகத்துடன் பேச முடியாமல் அவனைப் பாவமாகப் பார்த்தாள்.

“ஏன் செட் ஆகாது?” கோபமாக நிஹாரிகா கேட்க,

“நம்ம ஸ்டேடஸ் இடிக்கும் நிஹி. உனக்கு என்னால..” என்று நிறுத்தியவன், “உனக்கு உன் ஸ்டேடஸுக்குத் தகுந்த மாதிரி மாப்பிள்ளை பாத்து, உங்க வீட்டுல கல்யாணம் பண்ணி வைப்பாங்க. என்கூட இருந்து உன் லைஃபை ஸ்பாயில் பண்ணிக்காத” அவன் எங்கோ பார்த்தபடி சொல்ல, நிஹாரிகா அவனையே வெறித்துப் பார்த்திருந்தாள்.

இருவரும் காதலை இதுனால் வரை வாய்விட்டுச் சொல்லியது இல்லை. ஆனால், மனதுக்குள் நாள்தோறும் பொக்கிஷமாய் வளர்ந்து கொண்டிருந்தது அவர்களின் காதல். எத்தனை நாட்கள் இருவரும் மறைமுகமாய் தங்கள் காதலை சொல்லாலும் செயலாலும் பகிர்ந்து இருப்பார்கள்.

அதுவும் நிஹாரிகா இங்கு வந்த இத்தனை வருடங்களைத் திரும்பிப் பார்த்தால், அதில் அவன் மட்டுமே தான் வசந்தமாய் இருப்பான். அப்படி சிம்மாசனம் போட்டு அவள் மனதில் அமர்ந்திருப்பவனை அவளால் விட முடியுமா?

அவனையும் விட முடியாது! அவன் காதலையும் விட முடியாது!

இருந்தாலும் என்ன வார்த்தை சொல்லிவிட்டான் என்ற கோபம் வர, “என்னை இவ்வளவு சீப்பா நினைச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ் ரிஷ்வந்த்” அவள் நாசி கோபத்தில் விடைக்கச் சொல்லிவிட்டு நகரப் பார்க்க, தற்போது அவன் அவளை நகரவிடாமல் செய்தான்.

“நான் உன் நல்லதுக்கு சொல்றேன்டி. புரிஞ்சிக்க” என்றான்.

“நான் உன்கூட இருக்கும்போது தான் சந்தோஷமா இருக்கேன்னு எல்லாருக்கும் தெரியும் ரிஷ்வந்த். உனக்கும் தெரியும். இத்தனை நாள்ல உனக்கு கண்டிப்பா என் ஃபேமிலியைப் பத்தி தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு தானே?” அவள் வினவ மேலும் கீழும் தலையாட்டிவனை பார்த்தவளுக்கு காதலோ அமுதசுரபியாய் சுரந்தது.

“நீ.. நான் ஹர்ட் ஆகக்கூடாது அப்படிங்கற ரீசனுக்காகத் தானே கேக்கல?” அவள் ஒரு எதிர்பார்ப்போடு கேட்டாள். ஆம் அது உண்மை தானே. அதற்காகத் தானே அவன் தன்னவளிடம் இதுநாள் வரை எதுவும் கேட்காமல் இருப்பது.

“எனக்கு எதுவும் வேணாம்டா. ப்ளீஸ் விட்டுட்டு போயிடுன்னு மட்டும் சொல்லாத” என்று கோபமும் உரிமையும் போட்டி போட்டுக்கொண்டு வதனத்தில் எழ, அவனிடம் அழுத்தமாகச் சொன்னவள்,

அவனின் கழுத்தில் கரங்களைக் கோர்த்து, தன்னை நோக்கி அவன் முகத்தை இழுத்தவள், அவனின் விழிகளுடன் தன் விழிகளை ஆசையாய் சங்கமித்து, “உனக்கு பிடிக்குமான்னு தெரியல.. ஆனா, எனக்கு இப்ப வேணும்” என்றவள், அவனின் இதழில் தன் இதழைப் பொருத்தினாள்.

அவளின் திடீர்ச் செய்கையில் தடுமாறியவன் நிமர முயல, அவளின் பிடியும், இதழும் அவனை நகர விடாமல் பிடித்துக் கொண்டது.

அவனைத் தக்க வைத்துக் கொள்ளும் தவிப்பும், தன் காதலை உணர்த்திவிடும் தவிப்பும் அவளுடைய இதழ் முத்தம் பறைசாற்ற, தன்னவளின் இதழ் முத்தம் உணர்த்திய செய்தியிலும், எதிர் பாரா நேரத்தில் கிடைத்த முதல் முத்தமும், அவனின் காதலை வெடிக்கச் செய்ய, கண்கள் புதுவித உணர்வில் மூடிக்கொள்ள, அவளின் இடையில் கை கொடுத்தவன் அவளுடன் சுவற்றில் சாய்ந்தான்.

நீண்ட நேரம் தொடர்ந்த தவிப்பில் நிஹாரிகா மூச்சுத் திணற, தலையை பூமியை நோக்கி வைத்த படி விலக, ரிஷ்வந்திற்கோ அது போதவில்லை. காலையில் இருந்து அலைந்து திரிந்தவனுக்கு, அவளுடைய இதழொற்றல் இதத்தையும், இளைப்பாறலையும்  தந்தது. அவனின் தலைவலியோ முற்றிலுமாய் இறங்கி இப்போது தன்னவளின் அருகாமை தந்த சுகத்தில் தலை கிறுகிறுத்தது. மேலும் அவனின் இளமை இன்னும் இன்னும் என்று அவளின் இதழைத் தேடியது.

அவளின் மினுமினுத்த கன்னங்களைப்  பற்றியவன், அவளின் தலையை நிமிர்த்த, அவளின் கற்றை முடிகளோ அவளின் முகத்தில் விழுந்து, உதட்டில் வழிந்து அவனைத் தடைய செய்ய, சிறு புன்னகையை உதட்டில் நெளியவிட்டவன், முகத்தின் முன் விழுந்த அவளின் கற்றைக் கூந்தலை, தன் தடித்த இதழ்கள் குவித்து ஊதி விலக்க, நிஹாரிகாவின் விழிகள் நாணத்தால் மூடிக்கொண்டது.

சிவந்திருந்த அவளின் நுனி மூக்கில் முத்தம் கொடுத்து ருசித்தவன், “ஏன்டி ஜிலேபி ஒரு கிஸ் கூட ஒழுங்க தரத்தெரியாதா? பிப்டி ஷேட்ஸ் (காதல் சொட்டும் ஒரு ஆங்கிலப் படம்) படம் பாத்தது இல்லியா நீ?” என்றவன், அடுத்து, அவள் முதல் முத்தத்தில் செய்த பிழைகளை தன் இதழ் முத்தத்தால் சுட்டிக்காட்ட, மாலை நேரத்து இளம் தென்றல் இருவரையும் தீண்ட, இருவரின் இடைவெளியும் குறைந்தது.

ரிஷ்வந்தின் செயலில் உடல் முழுதும் நடுங்கி, நாணத்தில் முகமெல்லாம் சிவந்து, அந்த மாலை நேரத்தின் செவ்வானமும் அவள் முகமும் ஒரே நிறத்திற்கு மாற, “ரிஷ்வந்த்” என்ற அன்பின் குரலிலும், கவினின் குரலிலும் இருவரும் அவசரமாய்ப் பிரிந்தனர்.

இருவரும் பிரிந்து நிற்க, ரிஷ்வந்த் நிஹாரிகாவைப் பார்க்க, அப்போது தான் முதல் முதலாக காதலனின் உரிமையோடு தன்னவளை மேலிருந்து கீழே பார்த்தான் அவன்.

’34-28-36′ என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது, நினைவில் வர தலையைச் சிலுப்பி சரி செய்தவன், தன் கைக்குட்டையை எடுத்து தன் இதழையும் அவளின் இதழைச் சுற்றி ஸ்மட்ச் ஆகியிருந்த லிப்ஸ்டிக் தடத்தையும் துடைத்துவிட்டான்.

“ரிஷ்வந்த்” மீண்டும் நண்பர்கள் அழைக்க, நிஹாரிகாவின் கை பற்றி அவளை அவன் அழைத்துச் செல்ல, அவளின் சிவந்த முகத்தைக் கண்ட நண்பர்கள் பதறிப்போய் இருவரின் அருகில் வந்தவனர்.

“ஏய், என்னடா அழுதிருக்கா போல” கவின் அவளின் முகச் சிவப்பை வேறு மாதிரி எண்ணிக் கொண்டு கேட்க,

“ஆமாடா, அடிச்சிட்டேன்” என்று ரிஷ்வந்த் கிஸ் அடித்ததை இருபொருள்படச் சொல்ல, அவர்கள் இருவரும் மெய்யாகவே அடித்துவிட்டான் போல என்று எண்ண,

“ஆமா, ரொம்ப அடிச்சிட்டான். விட்டா ப்ளட் வந்திருக்கும்” நிஹாரிகாவும் தன் பங்குக்குச் சொல்ல, இருவரும் வெட்டவா குத்தவா என்று ரிஷ்வந்தை முறைத்தனர்.

“என்னடா முறைக்கறீங்க. அவளும் தான் அடிச்சா. இன்பாக்ட் என்னை விட ஸ்ட்ராங்கா அடிச்சா தெரியுமா” ரிஷ்வந்த் நண்பர்களிடம் முறையிட, அப்போது தான் கவின் ரிஷ்வந்தின் கையில் இருந்த கைக்குட்டையை கவனித்தான்.

டக்கென்று அவனின் கையிலிருந்த கைக்குட்டையைப் பிடுங்கியவனுக்கு, அதில் இருந்த லிப்ஸ்டிக் தடத்தைக் கண்டு, புரிந்து போனது என்ன நடந்திருக்கும் என்று.

கைக்குட்டையை விரித்து இருவிரலின் நுனியில் தொங்க விட்டபடி பிடித்தவன், “அன்பு, ரொம்ப ஹெவி ஃபைட் போல.. இல்லடாஆஆ?” என்று இழுத்து கேலி செய்ய, மாட்டிக்கொண்டதில் மீண்டும் வெட்கத்தில் துடித்துப் போன நிஹாரிகா அந்த இடத்தில் நிற்க முடியாமல் ஓடியேவிட்டாள்.