நிஹாரி-31

IMG-20211003-WA0016-bf219809

நிஹாரி-31

“ஆன்ட்டி, இன்னிக்கு ஈவ்னிங் ரிஷ்வந்த் வந்திடுவான்” என்று சமையல் அறைக்குள் இருந்த மாமியாரிடம் வந்துநின்ற நிஹாரிகா சொல்ல, “நேத்தே சொன்னியே டா.. நைட்டுக்கு என்ன செய்யணும்னு அவன்கிட்ட கேட்டு சொல்லு” என்றிட, நிஹாரிகாவோ மாமியாரிடம் எப்படிச் சொல்வது என்று தயக்கத்துடன் வெட்கப்பட்டுக் கொண்டே யோசனையுடன் நின்றிருந்தாள்.

மருமகள் தயங்கித்தயங்கி நெளிந்துகொண்டு நிற்பதைப் பார்த்த கயல்விழி, “என்ன நிஹி? ஏதாவது சொல்லணுமா?” என்று வினவ,

“ஆன்ட்டி, நாங்க இன்னிக்கு நைட் அந்த வீட்டுக்கு போறோம்.. எங்களுக்கு டிபன் மட்டும் பாக் பண்ணித் தர்றீங்களா?” என்று கேட்க, சிறியவர்களின் திட்டம் புரிந்துபோன கயல்விழி நமட்டுச் சிரிப்புடன், “ஏன் செஞ்சு சாப்பிட டைம் இல்லியா.. ரிஷி அவனே தானே அங்க போனா செஞ்சு சாப்பிவான்” என்று கேட்டார் மருமகளை சீண்டும் பொருட்டு. அவரும் இருவரின் வயதைக் கடந்து வந்தவர் தானே.

“அது.. அது..” என்று யோசித்தவள் மாமியாரின் முக பாவனைகொண்டு அவர் கேலி செய்வது புரிந்தவளாய், “அய்யோ! ஆன்ட்டி ப்ளீஸ் கிண்டல் பண்ணாதீங்க.. அவனே வந்தா கேட்டுக்கங்க என்னன்னு” என்றாள் சிணுங்கலோடும் குட்டிக் கும்பிடோடும்.

“சரிசரி.. அவனுக்கு புடிச்சதே ரெடி பண்ணிடறேன்” என்றவரிடம், “நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா ஆன்ட்டி” என்று நிஹாரிகா வர, “நீங்கதான் இன்னிக்கு உங்க வீட்டுக்காரருக்கு செய்யவே போறீங்க” என்றிட, அவளுக்கு இரண்டு முட்டைக் கண்களும் விரிந்து வெளியே உருண்டு விழுந்துவிடுமோ என்ற நிலைக்கு ஆனது.

சமையலுக்கும் அவளுக்கும் தான் நிலவிற்கும் பூமிக்கும் உள்ள தூரமாயிற்றே!

“எனக்கு எதுமே செய்யத்தெரியாது ஆன்ட்டி.. ஒரே ஒரு தடவை செஞ்சு தாத்தையாக்கு வயிறு வலியே வந்திடுச்சே” என்று சொல்ல அவளின் நாடியைப் பிடித்த கயல்விழி, “நான் எல்லாம் வெட்டி வச்சுட்டேன். நான் எல்லாம் எப்படின்னு சொல்றேன். உன்கூடவே நிக்கறேன். நீதான் செய்யணும்” என்று மென்மையாய் சொல்ல, தலையை ஆட்டியவள், மாமியார் சொல்வதுபோல எண்ணைக் கத்திரிக்காய் குழம்பை செய்து முடித்து, ரசம், அப்பளம் என அனைத்தையும் செய்து முடிக்க, அதை ருசி பார்த்த கயல்விழி மருமகளிடம் எதுவுமே சொல்லவில்லை.

இவளிற்கும் கேட்க முடியவில்லை. ‘ஒருவேளை நல்லா இல்லியோ’ என்று நினைத்தவள், ‘டேய் ரிஷ்வந்த் ஸாரிடா.. வந்தோன உன் வயிறு என்னால கலக்கப் போது. இதுல வேற என்னைத் தூங்கவிட மாட்டேன்னு சொன்ன? நீதான் தூங்காம பாத்ரூம்ல இருக்கப் போற’ என்று மனதுக்குள் சிரித்தவள், ‘உன் விதிடா புருஷா’ என்று தோளைக் குலுக்கிக்கொண்டு தொலைக்காட்சியில் மூழ்கினாள்.

மதியம்போல வெளியே சென்றுவிட்டு வந்த கனகராஜுக்கு கயல்விழி உணவை பரிமாற, “ஏன் கயலு.. எப்போமே சமைக்கற மாதிரி தான் சமைச்சிருக்க.. பட் டேஸ்ட் இன்னிக்கு தூக்கலா இருக்கே?” என்று அவர் வினவ,
“எல்லாம் நம்ம நிஹாரிகா பண்ணியது தான்” நல்ல மாமியாராய் கயல்விழி கூற, “அடடே.. உனக்கு இதெல்லாம் செய்யத் தெரியுமாமா.. ரொம்ப நல்லாருக்கு” என்று கனகராஜ் மருமகளுக்கு தலையில் கிரீடம் வைக்க, நிஹாரிகாவோ புன்னகை முகத்துடன், “ஆன்ட்டி சொல்ல சொல்ல செஞ்சேன் அங்கிள்” என்றாள்.

கனகராஜும் சாப்பிட்டு முடித்துவிட்டு ஓய்வெடுக்கச் செல்ல, இருவரும் அமர்ந்து சாப்பிட்டபடியே பல கதைகள் பேசிக் கொண்டிருந்தனர்.

“ஆன்ட்டி நைட்டுக்கு என்ன செய்வீங்க?” நிஹாரிகா வினவ,

“ரிஷ்வந்த் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தான் சொன்னான்டா. அப்படியே சப்பாத்தியும் சொன்னான்” என்றவரிடம், “சரி ஆன்ட்டி” என்றாள் நிஹாரிகா.

அவளுக்கு ஏனோ மாமனார் பாராட்டியவுடன் சமையல் கற்றுக் கொள்ளும் ஆர்வம் எழுந்தது, கணவனுக்காக. சிறிய வயதில் இருந்து அன்னை பாட்டி சொல்லிக் கேட்காதவள், அடுத்து சில சமயம் சந்திராமா அன்பாய் எடுத்துச் சொல்லியும் கேட்காதவள், இப்போது கணவனுக்காக இதைக் கற்க ஆர்வம் கொண்டாள். அதுவும் அவன் இப்போதெல்லாம் டயட் டயட் என்று இருப்பது அவளுக்கு சிறிது வருத்தமாகக் கூட இருந்தது. அவளுக்குத் தெரியுமே அவன் தனக்கு ஏற்ற சாப்பாட்டு ராமன் என்று. சாப்பாட்டு ராமியாய் இருந்தவள் சிறிய வயதில் அவனுடன் சுற்றி சுற்றி அவனையும் மாற்றி வைத்திருந்தாள். இருவரும் சாலைகளில் கதைகள் பேசியபடி சுற்றிச் சுற்றி தேடித் தேடி சாப்பிட்டவர்கள்.

அப்படியிருப்பவன், அவனுக்குப் பிடித்ததைத் தவிர்த்து, கட்டுக்கோப்பாக இருப்பது அவளுக்கு பிடிக்குமா என்ன.. ‘நீ வந்ததுக்கு அப்புறம் நான் உன்னை ஒரு சுத்து ஏற வைக்கிறேன் பாருடா’ என்று மனதுக்குள் சபதம் எடுத்துக் கொண்டவள் மாமியாரிம் பேசியபடியே உண்டு முடித்தாள்.

நிஹாரிகாவின் அலைபேசி அடிக்க, அதை ஏற்றவள், “ஹாய் அண்ணி” என்றாள். பிரகாஷின் மனைவி தான். அன்று விருந்திற்கு வந்து சென்றபின் இருவரும் அலைபேசியில் உரையாடி உரையாடி நெருக்கம் ஆகியிருந்தனர்.

“என்ன நிஹி, சென்னை வந்திருக்கயாம் சொல்லவே இல்ல. இன்னிக்கு காலைல தான் அவரு சொன்னாரு.. அதுவும் இந்த வாணரம் முன்னாடி.. அதுல இருந்து உன்கிட்ட வரேன்னு ஒரே அழுகை” என்று பிரகாஷின் மனைவி அழுத மகளைக் கையில் வைத்துக் கொண்டே பேச, “ஆன்ட்டி” என்று அன்னையின் மடியில் அமர்ந்தபடியே கீச் குரலில் கத்தினாள் ஸ்வாதிகா.

ஸ்வாதிகாவின் குரலில் நிஹாரிகா சிரிக்க, “பாத்தியா ஸ்பீக்கரை வாய்ல கட்டி வச்சிருக்கோம் எங்க வாணரத்துக்கு..” என்று அவர் சிரிக்க, “நீங்க பாப்பாகிட்ட ஃபோனை குடுங்க” என்றாள் நிஹாரிகா.

அன்னை தன் செவியில் அலைபேசியை வைக்க, புரிந்து கொண்டு, “ஆன்ட்டி” என்றது வாண்டு. தன் குட்டி இதழ்களை வைத்து அவள் அழைக்க, “ஹாய் டா பட்டு.. என்ன பண்றீங்க?” என்று வினவ,

“ஆன்ட்டி! நான் அங்க வர்றேன்” என்று தொடங்க, “ஈவ்னிங் போலாம் ஸ்வாதிமா” என்று ராஜி சொல்ல, “அஹும்.. இப்பவே” என்று பிடிவாதமாக கத்தி அழத் தொடங்க ஆயத்தமானாள் சிறுமி.

அனைத்தையும் கேட்ட நிஹாரிகா, “பட்டு பட்டு.. இங்க பாருங்க.. ஆன்ட்டி இப்ப வந்து கூட்டிட்டு வர்றேன் உங்களை.. அதுவரைக்கும் அழாம இருக்கனும் சரியா?” என்று வினவ, “ம்ங்” என்றது குட்டிச் சிணுங்கலுடன்.

“ஹம் குட்” என்று ஃபோனை வைத்துவிட்டு புடவை மாற்றிக்கொண்டு கிளம்பி கீழே வந்த நிஹாரிகா, “ஆன்ட்டி நான் பிரகாஷ் அண்ணா வீட்டுக்கு போய் குட்டியை கூட்டிட்டு வர்றேன்” என்றவள் அலைபேசியில் வாண்டு செய்த அலப்பறையைச் சொல்ல,

“சரிடா நிஹி.. பாத்து போயிட்டு வா.. இரு நம்ம ட்ரைவர் வெளில போயிருக்கான். வந்தவுடனே போயிடலாம்” என்றார் கயல்விழி.

“இல்ல ஆன்ட்டி. நான் ட்ரைவர் யூஸ் பண்ண மாட்டேன். கீ தாங்க நானே போயிட்டு வந்திடறேன். எனக்கு அன்னிக்கு போன வழி ஞாபகம் இருக்கு” என்றிட, கயல்விழி யோசித்தார். மனதுக்கு ஏதோ நெருடலாக இருந்தது.

சாவியை மருமகளிடம் தந்தவர், “பாத்து பத்திரமா போயிட்டு வாடா” என்று வழியனுப்பி வைத்தவருக்குத் தெரியவில்லை, இப்போது செல்லும் தன் மருமகளை ஒருவன் சிறை செய்யப்போகிறான் என்றும், அதனால் தன் மகன் பரதேசியாய் அலையப் போகிறான் என்றும்.

வெளியே நின்றிருந்த ரிஷ்வந்தின் பிஎம்டபிள்யூவில் ஏறியவள், காரைக் கிளப்பிக்கொண்டு வெளியே செல்ல, ரிஷ்வந்தின் வீட்டிற்கு வெளியே சிறிது தொலைவில் நின்றிருந்தவன், கார் செல்வதை உணர்ந்து தனது அலைபேசியை எடுத்து, யாருக்கோ தகவலைத் தந்துவிட்டு காரை பின் தொடர ஆரம்பித்தான்.

பிரகாஷின் வீட்டிற்கு வந்து சேர்ந்த நிஹாரிகா உள்ளே நுழைய, அவளைக் கண்டவுடன் அன்னையின் மடியில் இருந்து இறங்கிய ஸ்வாதிகா நிஹாரிகாவை நோக்கி ஓடிவர, வந்தவளை அப்படியே கைகளில் அள்ளிய நிஹாரிகா, “பட்டூஸ்” என்று முத்தமிட்டுக் கொஞ்ச, அவளின் கைகளில் நெளிந்து வாய்விட்டுச் சிரித்து ஸ்வாதிகா வீட்டை இரண்டாக்கிக் கொண்டிருந்தாள்.

“போதும் போதும் விளையாடுனது போதும் இரண்டு பேரும்” என்று பழச்சாறுடன் வந்த பிரகாஷின் மனைவி, “இரண்டு பேரும் பேசாம குடிக்கனும்” என்று சொல்ல, பார்வையை குறும்பாய் பரிமாறிக்கொண்ட இருவரும், கிளுக்கிச் சிரித்து, ஜூஸை பருக ஆரம்பித்தனர்.

“நைட் இங்கையே செய்யறேன்.. ரிஷ்வந்தை இங்கையே வர சொல்லு.. சாப்பிட்டு போயிடுங்க” ராஜி (பிராகஷின் மனைவி) சொல்ல, ‘அய்யய்யோ எங்க ப்ளானே வேறயே’ என்று நினைத்த நிஹாரிகா மறுத்துப் பார்க்க, அவர் விட்டால் தானே.

வேறு வழியின்றி அவரின் செவியில், “அண்ணி.. நாங்க இன்னிக்கு தான் பர்ஸ்ட் டைம் பிரைவேட்ஆ இருக்கப் போறோம்.. ஸோ ப்ளான் வேற” என்று நாணத்துடனும் குறும்புடனும் சொல்ல, ராஜி தான் மோவாயில் கை வைத்தார்.

“அடிப்பாவி.. இதுல வேற என் பிள்ளையை கூட்டிட்டு போற?” என்றிட,

“அதெல்லாம் அப்படித்தான் அண்ணி. பாப்பாவை தூங்க வச்சிட்டுத்தான் கிளம்புவோம்” என்று கண்ணடித்துக் கூற, “பின்னே அவ இருக்கும் போது கிளம்புனீங்க அவ்வளவு தான். நீங்க அங்க கிளம்பறதும் நல்லது தான். நடு ராத்திரி முழிக்க மாட்டா.. பட் முழிச்சா நீங்க இரண்டு பேரும் அவ்வளவு தான்” என்று பெருமூச்சை வெளியிட்டுச் சிரிக்க,

“நிறைய டைம் எக்ஸ்பீரியன்ஸா அண்ணி?” நிஹி வாய்விட்டே சிரித்துக் கேட்டுவிட, அவளின் முதுகில் அடிபோட்ட ராஜி, “அப்படியும் சொல்லலாம்.. ஸோ..” என்று இழுத்த ராஜிக்கும் வெட்கம் வந்துவிட்டது.

“ஸோ..?” என்று இழுத்து ஒற்றை விரலை நாடியில் வைத்துக் கேட்ட நிஹாரிகா, “ஸோ மேட்னி ஷோ வா அண்ணி?” என்று கேட்டு, சில செல்ல அடிகளை முதுகில் வாங்கிக் கொண்டாள்.

இரு பெண்களும் வயிறு வலிக்க சிரித்து பேச, “ஆன்ட்டி கிளம்பலாம்” என்று வந்து நின்ற குட்டியை தூக்கிக்கொண்டவள், “சரி அண்ணி.. நாங்க கிளம்பறோம்” என்று நிஹாரிகா கார் சாவியை எடுத்தபடிச் சொல்ல,

“ஒரே அவசரம் தான் கிளம்ப..” ராஜி கலாய்க்கத் தொடங்க,

“அஹான்” என்று சிரித்தவள், “நீங்க மட்டும் என்ன.. இன்னிக்கு பாப்பா வேற இல்ல..” என்று இழுக்க கை எடுத்துக் கும்பிட்ட ராஜி, “அம்மா தாயே போடி” என்று இருவரையும் வழியனுப்ப வெளியே வந்தார்.

தன் இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கையில் ஸ்வாதிகாவை அமர வைத்து சீட் பெல்ட்டை போட்டுவிட்ட நிஹாரிகா, அந்தக் குழந்தை முகம் தன்னை முழுவதுமாய் ஈர்க்க, குழந்தையின் கன்னத்தில் அழுத்தமாய் ஒரு முத்தத்தைப் பதித்துவிட்டு தன்னுடைய இருக்கையில் ஏற, இருவரும் சேர்ந்து ராஜிக்கு கையாட்டி விடைபெற்றனர்.

வரும்வழி முழுதும் மியூசிக் ப்ளேயரை கத்தவிட்டு குழந்தையுடன் பாடிக் கொண்டே வந்த நிஹாரிகா அப்போது தங்களை ஒருவன் தொடர்வதை கவனிக்க மறந்தாள். அப்போது, “ஆன்ட்டி சாக்லேட் வேணும்” என்று ஸ்வாதிகா கேட்க, டாஷ் போர்ட்டைத் திறந்தவள் அதிலிருந்த மாஸ்க்கை அணிந்துகொண்டு குழந்தையுடன் இறங்கி கடைக்குள் நுழைய, அந்த இருசக்கர வாகனத்தோடு சேர்த்து இப்போது ஒரு காரும் வந்து நின்றது.

சிறிது நேரத்தில் குழந்தையுடன் சிரித்துப் பேசியபடி வந்த நிஹாரிகா, காரை எடுக்க அந்தக் காரும் அவளை பின்தொடர்ந்தது.

ஆள் இல்லாத சாலையின் பக்கம் நிஹாரிகா வாகனத்தை செலுத்த, ஒரு கார் வந்து வழிமறித்து நிற்க, நிஹாரிகா சுதாரித்துக் கொண்டு காரை பின்னே எடுக்க முயல, பின்னேயே வந்த காரும் பைக்கும் நின்றிருந்தது.

எங்கோ மனம் உறுத்த அவள் ஃபோனை எடுக்க நினைத்த சமயம், காரின் கண்ணாடி சில்லு சில்லாக உடைக்கப்பட்டது. பத்து பேர் தடிமாடுகள் கணக்காக நிற்கக் கண்டதில் ஏற்கனவே பயத்தில் இருந்த குழந்தை இப்போது கண்ணாடி உடைக்கப்பட்டதில் அழ ஆரம்பிக்க, நிஹாரிகா, “ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல ஸ்வாதி.. இங்க பாரு.. அழாதே” என்று குழந்தையை சமாதானம் செய்யப்பார்க்க, அவளின் பின்னிருந்து அவள் வாயைப் பொத்தியவர்கள் அவள் மூர்ச்சையாகும் வரை விடவில்லை.

கண்கள் சொருக நிஹாரிகா மயங்கி ஸ்வாதிகாவின் மடியிலேயே விழ, “ஆன்ட்டி ஆன்ட்டி” என்று கத்திய குழந்தையையும் மயக்கத்தில் ஆழ்த்தியவர்கள் இருவரையும் காரில் இருந்து தூக்கி தங்களது காருக்குள் வைத்தனர்.

***

ஏர்போட்டில் வந்திறங்கிய ரிஷ்வந்த், நிஹாரிகாவுக்கு அழைத்துக் கொண்டே வர, அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. ‘இவ ஒருத்தி மனுஷனை வெறுப்பேத்தவே ஸ்விட்ச் ஆப் பண்ணுவா’ என்று முணுமுணுத்தவன், தன்னிடம் செல்பி எடுக்க வந்த சில ரசிகர்களை தடுத்த பாதுகாவலர்களிடம், “லெட் தெம் கம். விடுங்க” என்றிட, அவனின் செயலில் புல்லரித்தது போன ரசிகர்கள் புன்னகைத்தபடி நிற்க, அவர்களுடன் புகைப்படத்தை எடுத்து முடித்தவன், இருவிரல்களையும் ஸ்டைலாகத் தூக்கி அசைத்து அவர்களிடம் விடைபெற்றுக் கிளம்பினான்.

ரிஷ்வந்தைப் பொறுத்தவரை ரசிகர்களை பெரிதும் மதிப்பவன். அவனின் இன்றைய நிலைக்கு அவர்கள் பெரிதும் காரணம் என்று நம்புபவன். எப்போதும் மீடியாவை புறக்கணித்துக் கொண்டு நகர்பவன் ரசிகர்களை புறக்கணித்தது இல்லை. அதானேலேயே மக்களின் செல்வாக்கு அவனிற்கு அதிகம்.

வெளியே வந்தவன், காரில் ஏறியவுடன், கார் டெர்மினலை விட்டு வெளியேறியது. வழியில் அவனின் அலைபேசி அடிக்க, அன்னை தான் என்பதை கண்டவன் அலைபேசியை ஏற்று காதில் வைத்து, “ம்மா.. வந்துட்டேன்.. இன்னும்..” என்று அவன் முடிப்பதற்குள் கயல்விழி உள்ளே புகுந்தார். அடுத்து அவர் கூறிய செய்தியில் ரிஷ்வந்தின் மனம் ஒரு நிமிடம் வெட்டியது போல ஆனது.

“ரிஷி.. நிஹாரிகா காலைல பிரகாஷ் வீட்டுக்கு போறேன்னு கிளம்புனா ப்பா.. ரொம்ப நேரம் ஆச்சுன்னு ராஜிக்கு ஃபோன் பண்ணா அப்பவே ஸ்வாதிகாவை கூட்டிட்டு கிளம்பிட்டாலாம்.. நான் ஃபோன் பண்ணா எடுக்கல.. மொதல்ல ரிங் போச்சு இப்ப ஸ்விட்ச்ட் ஆப்னு வருது” என்று பதற்றம் நிறைந்த குரலில் கயல்விழி திக்க, அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ரிஷ்வந்துக்கு திக்கென்று இருந்தது.

“ஏன் ம்மா தனியா அனுப்புனீங்க அவளை.. ட்ரைவர் இல்லியா..?” என்று கேட்க, “நிஹி நானே போயிப்பேன்னு சொன்னா ரிஷ்வந்த்.. அவளுக்கு இங்க பழக்கம்னு நானும் விட்டுட்டேன்.. எனக்கு பயமா இருக்குப்பா” கயல்விழி கரகரத்த குரலில் சொல்ல, அன்னையை மேலும் பதற்றம் கொள்ள வைக்க வேண்டாம் என்று எண்ணியவன்,

“சரி இங்க எங்காவது எங்க பிரண்ட்ஸ் வீட்டுக்கு போயிருப்பா.. நான் கேட்டுட்டு கூப்பிடறேன்.. நீங்க டென்ஷன் ஆகாதீங்க” என்று அன்னைக்கு சமாதானம் சொன்னவன், உடனே கவினிற்கு அழைத்து விஷயத்தைத் தெரிவிக்க, கவினும் அனைவரிமும் விசாரித்துவிட்டு ரிஷ்வந்திற்கு அழைத்தான்.

“டேய் இங்க யார் வீட்டுலையும் நிஹி இல்ல..” என்றிட, ரிஷ்வந்திற்கு கோபம் எட்டிப் பார்த்தது. இப்போதும் நிஹாரிகாவை யாரும் கடத்தி இருப்பார்கள் என்று அவன் எண்ணவில்லை. எங்கேயோ சென்றிருக்கிறாள், ஃபோனை அணைத்துவிட்டு என்றே அவனுக்குத் தோன்றியது.

தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவன், “சரிடா கவின். நான் கூப்பிடறேன்” என்று வைத்தவன் தங்கள் வீட்டிற்கு செல்லும் வழியில் அவனுடைய கார் நிற்பதைக் கண்டான்.

“ட்ரைவர் நிறுத்துங்க” என்றவன் காரிலிருந்து இறங்க, அவனை வந்து சூழந்த பாதுகாவலர்களுடன் அவன் காரை ஆராய கண்ணாடிகள் உடைந்திருப்பது புரிந்தது ரிஷ்வந்திற்கு.

‘ஷிட்’ என்று தலையில் அடித்துக்கொண்டவன் சுற்றியும் முற்றியும் ஆராய, ஒரே ஒரு இடத்தில் மட்டும் சிசிடிவி கேமரா இருந்தது. தனது பாதுகாவலனை அழைத்து அதன் பதிவை விசாரிக்கச் சொன்னவன், “நான் வீட்டுக்குப் போறேன்.. இன்னும் பத்து நிமிஷத்துல ஐ வான்ட் தி சிசிடிவி பூட்டேஜ்” என்று கட்டளையிட்டவன், ஒன்று இரண்டு பேர் அவ்வழியாக அவ்வப்போது செல்வதால் நீண்ட நேரம் சாலையில் நிற்க முடியாது வீட்டிற்குக் கிளம்பினான்.

வீட்டிற்கு வந்தவன் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட, மகன் இவ்வாறு சோர்ந்து போய் பார்க்காத கனகராஜ், “ரிஷி..” என்று அழைக்க, கண்களை மட்டும் தூக்கிப் பார்த்தவன், “நிஹியையும் ஸ்வாதி பாப்பவையும் யாரோ தூக்கிட்டு போயிட்டாங்கன்னு நினைக்கறேன் ப்பா” என்று வலி நிறைந்த குரலில் சொல்ல, கனகராஜ், கயல்விழி இருவரும் பதறிவிட்டனர்.

மாறிமாறி கேள்விகளை வீசிய இருவரையும் பார்த்தவன், “எனக்கு எதுவும் புரியலம்மா.. ஆனா, கார் கண்ணாடி எல்லாம் உடைஞ்சிருந்துச்சு.. இரண்டு பேரையும் காணோம்.. எல்லாத்தையும் பாக்கும் போது அப்படித்தான் தெரிஞ்சுது” என்றான் நிதானமாக. அவனுக்கு இப்போது ஏனோ அது மிகவும் அவசியமாய் இருந்தது. தானும் பயந்தால் அன்னை தந்தை அலறிவிடுவார்கள் என்று அவன் அமைதி காத்தான்.

அவனின் பாதுகாவலன் அதற்குள் வர, அவனை உள்ளே அழைத்த ரிஷ்வந்த், “ஏதாவது க்ளூ இருக்கா?” என்று வினவ, அவனோ, “நோ ஸார்.. ஆக்சுவலி அந்த சிசிடிவில நேத்து மதியம் வரைக்கும் தான் எல்லாம் ரெகார்ட் ஆகியிருக்கு. அதுக்கு அப்புறம் எந்த பூட்டேஜும் இல்ல” என்க, ரிஷ்வந்த் யோசிக்கத் தொடங்கினான்.

யாரோ ஒருவர் இதை சாதரணமாக செய்தது போலத் தோன்றவில்லை அவனுக்கு. நீண்ட நாட்களாக நிஹாரிகாவைப் பின் தொடர்ந்து, இங்கு வந்ததை அறிந்துகொண்டு தூக்கியதைப் போன்று இருந்தது.

கயல்விழி பதறி அழ, மனைவியை அழைத்துக்கொண்டு தனியாக கனகராஜ் செல்ல, ரிஷ்வந்த் நிதானமாக யோசிக்கத் தொடங்கினான் அமர்ந்து. யாராக இருக்கும் என்று பின்னே சென்று யோசிக்கத் தொடங்கியவனுக்கு பளிச்சென்று மூலையில் வந்து நின்றான் ஆத்விக்.

“உங்க வைஃப் பத்திரம் ரிஷ்வந்த்” என்று முகத்திற்கு நேராக அவன் சொன்னது நினைவு வர, சராலென இருக்கையில் இருந்து எழுந்தவன், முதலில் பிராகஷிற்கு அழைத்து உண்மையை சொல்லி அவரை தன் இல்லத்திற்கு அழைத்தான்.

அடுத்து மகாதேவனிற்கு ஃபோன் செய்தவன் விஷயத்தை அவரிடம் பக்குவமாக உடைக்க, “என்ன சொல்றீங்க ரிஷ்வந்த்” அவர் தன்னை மறந்து வாய்விட்டுக் கத்தியபடி எழ, அவர் எதிரில் அமர்ந்திருந்த விவாஹாவும் சக்கரவர்த்தியுன் மகாதேவனின் குரலில் எழுந்துவிட்டனர்.

“ஆமா மாமாகாரு. நான் இப்ப தேட சொல்லப்போறேன். அவளுக்கு எதுவும் ஆகாம திருப்பி கூட்டிட்டு வர்றது என் பொறுப்பு..” என்று அழுத்தமானக் குரலில் கூறிய ரிஷ்வந்த் அலைபேசியை அணைத்துவிட்டு, நிழல் உலக தாதா ஒருவனுக்கு அழைத்தான்.

விஷயம் அறிந்த விவாஹா அச்சத்தில், “என்னாச்சு என் பொண்ணுக்கு?” என்று வியர்க்க விறுவிறுக்க எழுந்தார். தானும் ஒரு முறை இதே போல சிக்கிய நினைவு அவருக்குள். அதன் தாக்காத்தால் அவருக்கு இன்று கூட பதட்டத்தில் வியர்க்கத் துவங்கியது. ஆனால், இப்போது மகளைக் கடத்தியவன் எதற்காக கடத்தியிருக்கிறான் என்று தெரியவில்லையே..

பணமா? அல்லது… என்று நினைத்த விவாஹாவுக்கு உடல் விறைத்துப் போனது.

“ஏடுகுண்டாலவாடா” என்று கரம் கூப்பி கையை மேலே கொண்டு சென்று வேண்டியவர், “என் பொண்ணை எனக்குத் தந்திடு..” என்று கடவுளிடம் கெஞ்சினார்.

“விவாஹா, நான் உடனே சென்னை கிளம்பறேன்” மகாதேவன் விவாஹாவிடம் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே, பேத்தியை நினைத்தபடி சக்கரவர்த்தி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு மயங்கிச் சரிந்தார்.

“நானா!”, “மாமா!” என்று இருவரும் அலற, சந்திராமாவும் ஓடி வந்தார்.

அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, விவாஹாவோ மகள் ஒரு புறம் தந்தை ஒரு புறம் என்று அழக்கூட சக்தியில்லாமல் ஓடினார். சிகிச்சை தொடங்க, மகாதேவனிடம் வந்தவர், “அப்பாக்கு ட்ரீட்மெண்ட் பாத்துட்டு இருக்காங்க. நீங்க சென்னை கிளம்புங்க” என்று சொல்ல, அதற்குள் அர்ஜூனின் குடும்பம் அங்கு வந்து சேர்ந்தது.

“நாங்க இருக்கோம்.. நீங்க கிளம்புங்க” என்று விவாஹாவும், அர்ஜூனின் மனைவி சுரேகாவும் சொல்ல, மகாதேவன், அர்ஜூன், நவ்தீப் மூவரும் அடுத்த அரை மணி நேரத்தில் சென்னை கிளம்பினர்.

இங்கே ராஜியோ அழுது கொண்டிருந்தார் மகளையும், நிஹாரிகாவையும் நினைத்து. எதற்கும் அசராத பிரகாஷ் கூட கலங்கி அமர்ந்திருந்தார்.

ரிஷ்வந்த் தன் முன்னால் இருந்த அலைபேசியை எடுத்து பாக்கெட்டில் வைத்தவன், “ஸார்.. நான் சொன்னவங்க இந்தியாலையே பெரிய ஆளுக. இன்பாக்ட் மகாராஷ்டிரா எம்.பி பொண்ணை கூட கடத்திருக்காங்க. ஸோ கண்டிப்பா கண்டு பிடிச்சிருவாங்க” என்று பிரகாஷிற்குத் தைரியமூட்டினான். ஆனால், உள்ளுக்குள் எவ்வளவு கலங்கி இருந்தான் என்று அவனுக்குத்தான் தெரியும்.

சற்று நேரத்தில் தேவ், அர்ஜூன், நவ்தீப் மூவரும் வந்துசேர, கவினும் நிஹாரிகா இன்னும் கிடைக்கவில்லை என்று தெரிந்து வந்து சேர்ந்தான்.

ரிஷ்வந்தின் ஃபோன் அடிக்க, “ஹலோ” என்றான் அதை ஏற்று. ஆத்விக்கை கண்காணிக்க வைத்திருந்தவன் தான் அழைத்திருந்தது.

“ஸார், உங்க டவுட் கரெக்ட் தான். ஆத்விக் நேத்து காலைலயே சென்னை கிளம்பி வந்திருக்கான். இப்ப அவனோட கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கான்” என்று அவன் தகவலைச் சொல்ல, ஃபோனை வைத்த ரிஷ்வந்த் புயலெனத் திரும்பினான்.

“நான் சந்தேகப்பட்டது சரிதான். ஆத்விக் தான் எல்லாத்துக்கும் காரணம். அவனோட லோகேஷன் வந்திடும். நாம எல்லாரும் இப்ப கிளம்பலாம்” என்று ரிஷ்வந்த் சொல்ல, அவரவர் காரில் புறப்பட்டனர் ஆத்விக்கைத் தேடி.

செல்லும் வழியிலேயே அந்த நிழல் உலக தாதாவின் ஆட்களுக்கு அழைத்த ரிஷ்வந்த், ஆத்விக் தங்கியிருக்கும் இடத்திற்கு வரச்சொல்ல, ஆத்விக்கின் கெஸ்ட் ஹவுஸிற்கு அரை கி.மீ முன்னேயே காரை நிறுத்தியிருந்தான் ரிஷ்வந்த்.

வந்தது தெரிந்து எங்காவது தப்பித்து சென்றுவிடுவானோ என்று நினைத்தான் ரிஷ்வந்த். அவனைக் கையும் களவுமாக பிடித்து சித்தரவதை என்றால் என்ன என்று அறிமுகப்படுத்த எண்ணி இருந்தான் ரிஷ்வந்த். அவனின் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் ஆத்விக்கின் குருதியின் சூட்டை உணர, இறைக்கு காத்திருக்கும் வேங்கையாய் காத்திருக்க, ரிஷ்வந்தின் கை முஷ்டிகள் இறுகி நரம்புகள் புடைத்துத் தெறிக்கும் நிலையில் இருந்தது.

ரிஷ்வந்தின் வாகனம் நின்றிருப்பதைக் கண்டு வாகனத்தை நிறுத்திய கும்பலை, கண் அசைவாலேயே இறங்கச் சொன்னவன், “இத்தனை கார் போனா அவன் அலெர்ட் ஆகிடுவான். ஸோ பர்ஸ்ட் அவன் தப்பிக்க முடியாத மாதிரி சிலர் அவனை ரௌன்ட் அப் பண்ணுங்க.. மத்தவங்க எங்ககூட வாங்க” என்று ரிஷ்வந்த் காரில் சாய்ந்து நின்றுகொண்டு கட்டளையிட வீட்டை சுற்றி நிற்க பத்து பேர் ஓடினர்.

***

இரவு 11.30

அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்த ரிஷ்வந்த், பைத்தியம் பிடித்ததைப் போன்று காருக்குள் அமர்ந்திருக்க, அவனின் தோள் மேல் கை வைத்த கவின், “மச்சி ரிலாக்ஸ்டா” என்றிட, அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்வுகள் வெடித்துச் சிதற, ரிஷ்வந்தின் கண்கள் கலங்கியது தன்னவளுக்காக. அவளின் நிலையை நினைத்து.

என்ன செய்கிறாளோ! சாப்பிட்டிருப்பாளா! சுற்றி யார் இருக்கிறார்கள்! தன்னந்தனியாக பயந்திருப்பாளோ! என்று அவனுள் பல கேள்விகள்.

ஸ்டியரிங்கில் நெற்றியை சாய்த்தவன், “முடியலடா மச்சி.. இப்பதான் எல்லாம் சரியான மாதிரி இருந்துச்சு.. ஆனா, அதுக்குள்ள.. அவ பாவம்டா கவின்.. வசதி இருந்தும் அதை அனுபவிக்காம, எல்லா கஷ்டத்தையும் அனுபவிச்சிட்டா.. அதுவும் என்னால அவ பட்டது ரொம்பவே அதிகம்டா. உனக்கு சொல்லித் தெரியனும்னு இல்ல..” என்று மனக்குமுறல்களை நண்பனிடம் கொட்டியவன்,

“இன்னிக்கு தான் எங்க லைஃபை ஸ்டார்ட் பண்ணனும்னு நினைச்சோம் மச்சி. ஆனா, எங்க இருக்கா என்னனே தெரியல மச்சி.. என்ன நிலைமைல இருக்கான்னும் தெரியல.. பயமா இருக்குடா” என்று குரல் நடுங்கக் கூறியவன், “I still remember how we started talking” என்றவனின் வலது கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது. இரு காதல் கொண்ட நெஞ்சங்கள் தான் சேர எத்தனை போராட்டங்கள்.

ஆண்மகன் அழக்கூடாது என்று சிலர் சொல்லியிருக்க, இங்கு தன்னவனை அழ வைத்துவிட்டாள் மங்கை, தன் பிரிவை உணர்த்தி.

தன்னவளின் பிரிவு அவனின் உயிரை உருக்கிக் கொண்டிருக்க, தன்னவள் இல்லாத சிலமணி நேரங்களிலேயே ஓய்ந்துபோய் காணப்பட்டான் ரிஷ்வந்த்.

ரிஷ்வந்தை நிமிர்த்திய கவின், “மச்சி, எமோஷனல் ஆகாத.. இப்ப நமக்கு நிஹி மட்டும்தான் முக்கியம்.. அதுக்கு என்னனு மட்டும் யோசிடா” என்றிட,

“எனக்கு என்னமோ இன்னும் அந்த ஆத்விக் மேல டவுட்டா இருக்கு மச்சி.. அவனை நம்ப முடியல..” என்ற ரிஷ்வந்தின் கண்களில் ஆத்விக்கின் மீதான சந்தேகம் தீர்ந்த பாடில்லை.

“சரி மச்சி.. அவனை மறுபடியும் போய் பாக்கலாம்” என்றிட தனது பென்ஸை எடுத்த ரிஷ்வந்த், காரை ஆத்விக்கின் கெஸ்ட் ஹவுஸை நோக்கி உறுமினான்.

ஆத்விக்கின் பார்ம் ஹவுஸிற்கு அருகில் காரின் லைட்டை அணைத்த ரிஷ்வந்த் காரை ஒரு ஓரமாக நிறுத்தி அவனிற்காக காத்திருக்க, ஆத்விக்கின் ஆடி ஏ8 சரியாக பன்னிரெண்டரை மணிக்கு வெளியே வந்தது. அவனின் கார் காற்றைக் கிழித்துக்கொண்டு, வேகத்துடன் சீறிப் பாய்ந்து கொண்டு கிழக்குக் கடற்கரைச் சாலையில் செல்ல, ரிஷ்வந்தின் கார் அவனை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.

ரிஷ்வந்த் ஆத்விக்கின் காரை இமைக்காமல் தொடர்ந்து கொண்டிருக்க, திடீரென ஒரு லாரி குறுக்கே வந்து திரும்ப நிற்க, மொத்த வழியும் அடைபட்டு போனது. “டேய்!” என்று கத்திய ரிஷ்வந்த், “லாரியை எடுறா” என்று கத்தினான்.

கவினும் இறங்கி கத்த, அந்த லாரி ஓட்டுனரும் விரைவாக லாரியை திருப்பிக் கொண்டே செல்ல, ஆத்விக்கின் காருடைய சுவடே சாலையில் இல்லாமல், இருள் சூழ்ந்து இருந்தது சாலை.

***

மயக்கத்தில் இருந்து விழித்த நிஹாரிகாவின் கண்களும், கைகளும் கட்டியிருந்தது. நிஹாரிகாவின் கை பின்னால் வைத்து கட்டப்பட்டிருக்க, தலை வலியுடன் எழுந்து அமர்ந்தவள், “ஸ்வாதிகா” என்று அழைக்க அங்கு அமைதியே அவளுக்கு பதிலாகக் கிடைத்தது.

கை வேறு வலியைக் கொடுக்க, காலை மடக்கிக் குறுக்கியவள், கைகளை கீழே இறக்கி வளைந்து, இரண்டு கரங்களுக்கு இடையே கால்களை நுழைத்தவள் கைகளை முன்னே கொண்டு வந்திருந்தாள்.

கைகளால் அருகில் துழாவியவளுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. “ஸ்வாதிகா” என்று மீண்டும் அழைத்தவள் கைகளால் தரையைத் தொட்டு தொட்டுப் பார்க்க, ஸ்வாதிகாவின் ஸ்பரிசம் உணர்ந்தவள், ஒரு நிம்மதிப் பெருமூச்சை விட்டாள். தன் கண் கட்டை அவிழ்க்க நிஹாரிகா முயற்சிக்க, அதைப் பின்னே நன்கு நான்கைந்து முடிச்சுகளை கண்ணாபின்னா வென்று இட்டிருந்தனர். அவிழ்க்க முயற்சித்து தோல்வியைத் தழுவினாள் நிஹாரிகா.

கைகளால் ஸ்வாதிகாவின் தலைக்கு வந்தவள், அவள் கண் கட்டை அவிழ்க்க முயற்சிக்க, முடிச்சுகளை சரியாக ஆராய முடியாமல் முதலில் சிரம்பபட்டாள். ஒருவழியாய் இறுதியாக முடிச்சுகளை கண்டுபிடித்தவள், கட்டுக்களை அவிழ்க்கத் துவங்க, ‘டக்’, ‘டக்’ என்ற ஷூவின் சத்தத்தில் காதுகளை மட்டும் கூர்மையாக்கி, சத்தம் வந்த திசையை நோக்கித் திருப்பினாள் நிஹாரிகா. யாரோ படிகளில் ஏறி வருவது போல் கேட்டது அவளுக்கு. 

யாரென்று அவளுக்குத் தெரியும். அதற்காகத் தானே காத்திருந்தாள். ‘எத்தனை தைரியம் ஒரு பெண்ணின் மேல் கை வைக்கும் அளவிற்கு’ என்று அவளின் ஆத்திரம், எல்லையைக் கடந்து கொண்டிருத்தது. நெற்றியில் பூத்திருக்கும் வியர்வை அரும்புகளுடன், சிறிதாக வாங்கும் மூச்சுக்களுடன், கண்கள் இரண்டும் கட்டப்பட்டு இருக்க, வருபவனை எதிர்கொள்ளத் தயாரானாள் ரிஷ்வந்தின் மனைவி.

கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவன், நிஹாரிகாவை பார்த்தபடி ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து, ஊசி போன்ற கூர்மையை விழிகளில் கொணர்ந்து ஆராய, “நவ்தீப்!” என்று தைரியமாக அழுத்தத்துடன் நிஹாரிகா அழைத்ததில், அதிர்ச்சியில் சராலென இருக்கையில் இருந்து எழுந்தான் நவ்தீப் கொனிடெல்லா.