நிஹாரி-5

IMG-20211003-WA0016-90bc0117

நிஹாரி-5

ஹைதராபாத்தில் உள்ள அந்த பெரிய அரங்கம் முழுதும் தென்னிந்திய நட்சத்திரங்களால் நிறைந்திருந்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலுள்ள நாயகர்கள், நாயகிகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நகைச்சுவை நடிகர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், துணை நடிகர்கள் என பலரால் நிறைந்து அரங்கே கரகோஷத்துடன் காட்சியளித்துக் கொண்டிருக்க, தங்களின்
பிடித்தமான நடிகர்களை காண வந்த ரசித்தர்களின் ஆரவாரங்கள் ஒருபுறம்.

கூடவே ஏதாவது கிசுகிசு கிடைக்குமா என்று வருகை தந்திருந்த டிவி சேனல்களும், பத்திரிகை நிருபர்களும்.

மற்றொரு பக்கம் நான்கு மொழிகளிலும் இருந்து வந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், தங்களது உடைகளில் அந்தச் சிறிய மைக்கை மாட்டியபடி மேடையேறுவோரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை சரிபார்த்தபடி பரபரப்பாக இருந்தனர்.

தனது ஜாக்குவாரில் வந்திறங்கிய நிஹாரிகா திரும்ப, அடுத்த நொடியே அவளை ஊடகங்கள் சூழ்ந்துகொண்டது.

கடல் பச்சை நிறத்தில் வெள்ளி நிற சட்டாரி வேலைப்பாடுகள் செய்த புடவையை வழக்கம்போல அவள் சிங்கிள் ப்ளீட்ஸாக விட்டிருக்க கேமிராவின் ஒளி, புடவையின் வெள்ளி நிறத்தில் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தது.

ஊடகங்களுக்கு பதில் அளித்தவள், அவர்கள் கேட்ட புகைப்படத்திற்கும் புன்னகையுடனும் கம்பீரத்துடனும் நின்றுவிட்டு நகர்ந்தாள்.

அரங்கின் உள்ளே செல்லும் வழியில் ஆடம்பரமாய் சிவப்புக் கம்பளம்
விரிக்கப்பட்டிருக்க, செல்லும் வழிமுழுதும் இர்ரேடியன்ட் பட்டுடன், பார்ட்டி ப்ராப்ஸ் ஃபேரி கர்டைன் லைட்டினால் குறைவின்றி அலங்கரிக்கப்பட்டு, இன்று அந்த அரங்கமே பகட்டான தோற்றத்தை தத்தெடுத்திருந்தது.

நிஹாரிகாவை பாதுகாப்பாக பவுன்சர்ஸ் அழைத்துச் சென்றுவிட, அவள் உள்ளே நுழைந்த சமயம் ரசிகர்கள் அனைவரின் குரல்களும் அவளின் அழகில் அதிர்ந்தது. அவள் உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த திரைத்துறையினர் அனைவரின் பார்வையும் அவள் மேல் விழ, துளியும் சட்டை செய்யாது நிமிர்வாக நடந்தவள் சக்கரவர்த்தி அமர்ந்திருந்த முதல் வரிசைக்குச் சென்றாள்.

சக்கரவர்த்தி முதல் வரிசையில் மற்ற மொழிகளிலுள்ள அவர் வயது நடிகர்களுடன் அமர்ந்து பல கதைகளைக் கதைத்துக் கொண்டிருந்தார். தாத்தாவிடம் சென்றவள் அவரிடம் ஆசி வாங்கிவிட்டு அவருடன் இருந்தவர்களிடமும் நலம் விசாரித்தாள். சிறிய வயதிலிருந்தே அவள் வளர்ந்ததைப் பார்த்தவர்கள் அவர்கள். சக்கரவர்த்தியின் செல்லப்பேத்தி. அவரின் சொத்து அனைத்திற்கும் ஒரே வாரிசு அவள். அதிலும் அவளின் திறமையும், ஒழுக்கமும் அனைவரும் அறிந்ததே.

அவளை ஆசிர்வதித்து அவளிடம் பேசிய சக்கரவர்த்தியின் நண்பர்கள் அனைவரின் மனதிலும், நிஹாரிகாவை தங்களது பேரன்களுக்கு இணையாக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழுந்தது என்னமோ உண்மைதான்.

“ஓகே தாத்தைய்யா, நேனு எனக்கல கூச்சுண்டான்னு”(ஓகே தாத்தா, நான் பின்னாடி உட்காறேன்) என்றவள் பெரியவர்களிடம் விடைபெற்று முதல் வரிசைக்கு பின்னாலிருந்த வட்ட மேசைகளிடம் சென்று அருண், நவ்யா, நவ்தீப்புடன் அமர்ந்தாள். எப்போதும்போல் அவளது அழகு நவ்தீப்பின் மனதில் பதிந்தது.

இரண்டு மேஜை தள்ளியிருந்த விவாஹா மற்றும் மகாதேவன் விழிகள் இரண்டும் மகளை வாஞ்சையாய் வருடியது.

ஆத்விக்கின் விழிகள் நிஹாரிகாவை பசி கொண்டு பார்த்திருந்தது.

“டேய் மச்சி, ஸ்டார்ட் ஆகப்போகுது சீக்கிரம் வா” அருண் அலைபேசியில் பேசிக்கொண்டிருக்க நிஹாரிகாவிற்கு புரிந்தது.

நிகழ்ச்சிகள் தொடங்க தொகுப்பாளர்கள் வந்து அனைவருக்கும் தங்களது வணக்கத்தைத் தெரிவித்த பிறகு நிகழ்ச்சி தொடங்கியது.

முதலில் அனன்யா நாயரின் வரவேற்பு நடனத்திலிருந்து தொடங்க, அவளின் அழகிலும் தாராள உடையிலும் அனைவரும் மயங்கித்தான் போயினர்.

அவளது நடனம் முடிய, “தாங்க்ஸ் எ லாட் அனன்யா நாயர் ஃபார் யுவர் வொன்டர்ஃபுல் பெர்பாமன்ஸ். அடுத்து…” தேனாய் பேசிக்கொண்டே போன தொகுப்பாளினியை, “ஸ்டாப் ஸ்டாப் ரீமா” என்றான் உடனிருந்த தொகுப்பாளன்.

“வாட் சந்தோஷ்?” ரீமா தனது புறாமுட்டைக் கண்களை உருட்டியபடி.

“அடுத்து யார் உள்ள வரப்போறாங்க தெரியுமா?”

“நோ”

“அவரு உங்களோட ஃபேவ்ரைட் ரீமா” என்றவன், “அவரு உங்க ஃபேவ்ரைட் மட்டுமில்ல இப்ப இருக்க குழந்தைங்க, அப்புறம் நிறைய காலேஜ் கேர்ள்ஸ், கேர்ள்ஸ் மட்டுமில்ல எல்லாரு மனசிலையும் இடம்பிடிச்ச நம்ம தமிழ்நாட்டோட செல்லப் பிள்ளை” என்றான்.

ரீமா யோசிப்பதுபோல பாவனை செய்ய, “இப்ப தெலுங்குலையும் காலப் பதிச்சுட்டாரு” என்றவன், “கண்டு பிடிச்சுட்டீங்களா?” என்றதும்,

“எஸ்” என்றாள் ரீமா திரும்பி தன் முன்னிருந்தவர்களைப் பார்த்து பொம்மைபோல் புன்னகைத்தபடி.

இருவரும் ஒருசேர இணைந்து தங்களது சந்தோஷக் குரலில், “ஓகே லெட்ஸ் வெல்கம் மக்களின் நாயகன் ரிஷ்வந்த்” வரவேற்க, ரசிகர்களின் கரகோஷமும் இணைய, தனது பிராண்டட் பிலீப் ப்லெயின் சாலிட் வைட் சர்ட்டிலும், ஆகாய நிற ஜீன்ஸிலும் வலது கையில் ப்ளாட்டினத்தில் காப்பணிந்து, கம்பீரம் என்னும் கவசமணிந்து, வசீகரத்தின் இலக்கணமாய் பவனி வருபவனை என்னவென்று கூறுவது?

அனைத்து நடிகைகளின் தலையும் ஒருசேர அவன் வந்துகொண்டிருந்த பகுதியை நோக்கித் திரும்பியது. அவர்களின் கண்களில் ஒரு ‘பளிச்’.

வந்தவனை சக்கரவர்த்தி கண்களாலேயே அழைக்க அருகில் சென்றவனை எழுந்து அவர் கட்டியணைத்தார். அங்கிருந்த அனைவரும் வாயில் விரல் வைக்காத குறைதான்.

ஏனெனில், சக்கரவர்த்தி அப்படி யாரையும் வெளியுலகத்தில் ஆரத் தழுவியதில்லை. ஏன் மருமகனாகிய மகாதேவன், மகனைப்போல தூக்கிவிட்ட அர்ஜூன் கொனிடெல்லாவிடம்கூட இல்லை. அங்கிருந்த அனைவருக்கும் இன்று இது ஆச்சரியத்தைக் கொடுத்தது.

இருவரும் இரகசியமாய் ஏதோ பேசி சிரித்துக்கொள்ள, ‘இப்ப எதுக்கு இந்த தாத்தைய்யா இவன்கிட்ட பேசிட்டு இருக்காரு’ மனதிற்குள் தாத்தாவைத் திட்டியபடி அமர்ந்திருந்தாள் நிஹாரிகா.

அவரிடம் விடைபெற்று வந்தவன், நிஹாரிகா அருகிலிருந்த அருணை கேசுவல் ஹக் செய்துவிட்டு, அருணிற்கு அருகிலிருந்த காலி இருக்கையில் இயல்புபோல அருணை அமர வைத்தவன், நிஹாரிகாவின் அருகில் அமர்ந்துகொண்டான்.

“ஹாய்” ரிஷ்வந்தின் குரலில் நிஹாரிகா தன்னை அழைக்கிறான் என்று திரும்ப, அவனோ நவ்யாவிடம் பேசத் தொடங்கினான்.

மேடையில் சிறந்த மலையாள நடிகைக்கான விருதை அனன்யா வாங்க, அவளிடம் கேள்விகளைத் தொடங்கினர் தொகுப்பாளர்கள்.

“மேம் மேம் லாஸ்ட் கொஸ்டின்” என்றவர்கள், “நின்டே க்ரஷ் ஆரன்னு?” (உங்க க்ரஷ் யாரு?) என்று கேட்க, விஷமமாய் சிரித்தவள், “ரிஷ்வந்த்”  என்றுரைக்க அங்கே பல விசில்களும், சத்தங்களும் எழுந்தது. 

“எந்தா சார்?”(என்ன சார்) மேலிருந்த தொகுப்பாளர் ரிஷ்வந்தைப் பார்த்து இருபொருள்பட வினவ, அவனோ தலையின் மேல் கை தூக்கி, ‘ஆளை விடுறா சாமி’ என்பதுபோல சைகை வைத்தான்.

அங்கிருந்த அனைவரும் அதற்கு சிரிக்க, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பாணியில் மேடையை விட்டு கீழிறிங்கிய அனன்யா அருணின் அருகில் வந்தமர்ந்தாள்.

அங்கிருந்த விவாஹாவையும், மகாதேவனையும் கண்டவனுக்கு மனதில் ஒரு குற்றஉண்ரவு எழுந்தது. நிஹாரிகாவின் முகத்தை அவன் பார்க்க அவளோ மேடையைப் பார்த்தபடி, முகத்தில் எந்தவொரு உணர்வும் காட்டாமல் அமர்ந்திருந்தாள்.

அடுத்ததாக நிஹாரிகாவை விருதைக் கொடுக்க மேலே அழைக்க, எழுந்து சென்றவளை இமைக்காது பார்த்திருந்தான் ரிஷ்வந்த்.

வருகை தந்திருந்த நடிகைகளின் நவநாகரீக உடைகளைவிட நிஹாரிகாவின் புடவை ஏனோ அவனை இழுத்தது. அதுவும் லூஸ் ஹேரை அவள் அவ்வப்போது ஒதுக்கிவிடும் அழகில் அவன் தன்வசம் இழந்து கொண்டிருந்தான்.

“தி பெஸ்ட் சௌத் யூத் ஐகான் ஆஃப் தி இயர் கோஸ் டூ…” நிறுத்திய நிஹாரிகா, “ரிஷ்வந்த்” என்று சொல்ல தனது யோசனையில் இருந்து வெளியே வந்தவன் புன்னகையோடு மேடையேறினான்.

ஆறடி ஆண்மகனாய் புன்னகையோடு தன்னை நோக்கி வருபவனைக் கண்டு நிஹாரிகாவிற்கு இருபதுவயதுப் பெண்போல இதயம் சிறகாய் அடித்துக்கொண்டது.

மேலே வந்தவன் அனைவருக்கும் இருகரம் கூப்பி வணக்கத்தைத் தெரிவித்துவிட்டு, நிஹாரிகாவின் அருகே செல்ல, தனது கரங்களில் இருந்த விருதை அவனிற்குத் தந்தவள், “கங்கிராட்ஸ்” என்றிட,

“தாங்க்ஸ்” என்றான். இருவரும் தங்களுக்குள் இருந்த ஊடலை கேமராவின் முன்னால் மறைத்தனர். இருவரின் அருகாமையில் மறந்தனர் என்றும்கூட சொல்லலாம்.

“கங்கிராஜுலேசன்ஸ் ஸார்” ரீமாவும், சந்தோஷும் சொல்ல,

“தாங்க்யூ” என்றான். அவன் மைக்கை பிடித்திருந்த விதமும், பேசிய விதமும் அங்கிருந்த நடிகைகளுக்கு ஒருவித மயக்கத்தைத் தந்தது.

“ஸார் அடுத்த படம் நம்ம நிஹாரிகா மேம் ப்ரொடக்சன் அப்புறம் அருண் சாரோட டைரக்ஷன்ல நடிச்சிட்டு இருக்கீங்க. கூடவே நம்ம ஹீரோயின்ஸ் வேற.. இது உங்களுக்கு எந்த மாதிரியான எக்ஸ்பீரியன்ஸா இருக்கு” ரீமா கேட்க,

“உண்மையாவே நல்லா இருக்கு.. ஒவ்வொரு படத்துலையும் புதுசா ஏதாவது கத்துக்கிற மாதிரிதான் இருக்கு.. ஐ ஜஸ்ட் பீல் லைக் என்ஜாயிங்” என்றவன், “என்னை நம்பி பர்ஸ்ட் படத்துக்கு சான்ஸ் குடுத்த பிரகாஷ் சாருக்குதான் எப்போமே தாங்க்ஸ் சொல்ல விரும்பறேன்” என்றான்.

தலையாட்டி பொம்மையைப்போல் தலையை ஆட்டிக்கொண்டே அவனின் பதில்களைக் கேட்ட இருவரும் அடுத்து நிஹாரிகாவிடம் சென்றனர்.

“ஹாய் மேம், ஹவ் ஆர் யூ?” என்றதும்,

“நல்லா இருக்கேன்”

“மேம் உங்களுக்குத் தமிழ் தெரியுமா?” ரீமா ஆச்சரியத்துடன் வினவ,

“மேம் சென்னைலதான் படிச்சாங்க ரீமா, தெரியாதா?” சந்தோஷ் சிறிது வழிய,

“எஸ்” என்றாள் நிஹாரிகா.

“மேம், உங்களுக்கு இவ்வளவு பேன்ஸ் இருக்காங்க.. உங்க பேன்ஸ் ஆந்திரால மட்டும் இல்ல. அங்க தமிழ்நாட்டுலையும் நிறைய இருக்காங்க” என்று நிறுத்தியவன், “எப்ப உங்க கல்யாணம்னு தெரிஞ்சிக்காலாமா?” சந்தோஷ் வினவ,

“ஏங்க நான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கிறது புடிக்கலையா?” இறுகிய மனதை முகத்தில் காட்டாமல் அவள் சிரிக்க,

“ஓகே. சக்கரவர்த்திகாரு நீங்க சொல்லுங்க மேடமுக்கு எப்ப கல்யாணம்?” ரீமா அவரிடம் பணிவாக வினவ, சைகையிலேயே அவர் விரைவில் என்று சொல்ல, மேலிருந்தே தனது தாத்தையாவை பொய்யாய் மிரட்டினாள் நிஹாரிகா.

“மேம் அடுத்தது உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்” என்றவர்கள் பின்னால் இருந்த பெரிய திரையில் ஒரு புகைப்படத்தை காண்பித்தனர். மாணவர்கள் குழுவாக இருந்த படம். அதைப் பார்த்த இருவருக்கும் திக்கென்று இருந்தது.

“அது நீங்கதானே?” சந்தோஷ் வினவ,

“எஸ் நான்தான். காலேஜ் டைம்ல எடுத்தது” என்றாள்.

“அந்த ஃபோட்டோஸ் பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா?”

“அது நாங்க எங்க காலேஜ்ல இருந்து ஆல் இந்தியா டூர் போனப்ப எடுத்த போட்டோஸ். ஐ திங்க் டெல்லில எடுத்த போட்டோ. அவ்வளவுதான் எனக்கு ஞாபகம் இருக்கு” என்றதும், இருவருக்கும் நன்றி சொல்லி கீழே அனுப்பும் முன், தமிழ் தொகுப்பாளர்கள் அருகில் வந்தாள் தெலுங்கு தொகுப்பாளினி.

“ரிஷ்வந்த் ஸார் வெயிட் செய்யண்டி” என்றவள், அந்தப் படத்தின் மூலையில் நின்றிருந்த ரிஷ்வந்தைச் சுட்டிக்காட்டி, “அது நீங்கதானே?” என்று வினவ, ரிஷ்வந்த் நிஹாரிகா இருவருமே தங்களின் முகத்தை ஒருவருக்கொருவர் ஒரு நொடி பார்த்து மீண்டனர்.

திரையுலகமே அப்போதுதான் அந்தப் புகைப்படத்தின் மூலையில் சிரித்தபடி நின்றிருந்த ரிஷ்வந்தைக் கண்டது. அனைவருக்கும் மனதில் பலவித கேள்விகள் எழ ஆரம்பித்தது.

படத்திலிருந்த ரிஷ்வந்தை ஜூம் செய்த ஊடகங்கள், இருவரின் பதிலைக் கேட்க பரபரப்புடன் ஆவலாக இருந்தனர்.

“எஸ் அது நான்தான்.. நாங்க ஜஸ்ட் க்ளாஸ் மேட்ஸ்” என்றவன் அடுத்த கேள்வி கேட்கும்முன் நன்றியை உரைத்துவிட்டு கீழே இறங்க, நிஹாரிகாவும் புன்னகைத்தபடி கீழே இறங்கிவிட்டாள்.

அவனருகில் வந்தமர்ந்தவள், “நீதானே அந்த போட்டோஸ் தந்த?” கோபத்தை அடக்கியபடி வினவ,

“என்ன இந்தளவுக்கு சீப்பா உன்னால மட்டும்தான்டி நினைக்க முடியும்” வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.

பார்ப்பவர்களுக்கு அவர்கள் சாதாரணமாக பேசுவது போலத்தான் தெரிந்தது.

“அப்ப வேற யாரு தந்திருப்பா சொல்லு? சந்தேகமாய் அவள் வினவ,

“ஃபார் யுவர் கைன்ட் இன்பர்மேஷன். அது உன்னோட கேமிரால எடுத்தது. அதை நான் வாங்கக்கூட இல்ல. வாங்கறதுக்குள்ள..” தொடங்கியவன் நிறுத்தினான். சில கசப்பான நினைவுகளை மறக்க நினைத்தான்.

அவன் சொல்வதை நினைத்துப் பார்த்தவளுக்கு உண்மை உரைத்தது. அந்தக் கேமிரா தொலைந்தது நினைவு வந்தது. எங்கே என்று யோசித்தவளுக்கு தான் தயாரித்த முதல் படத்தின் நாயகன் ஆத்விக்கே மனதில் வந்து நின்றான். அந்தப் படப்பிடிப்பின் போதுதானே அவள் கேமிராவைத் தொலைத்தது.

ஆத்திரம் தலைக்கேற திரும்பிய நிஹாரிகா ஆத்விக்கைப் பார்க்க, அவனோ ஒரு கதாநாயகியுடன் கதைத்துக் கொண்டிருந்தான்.

‘தப்பு பண்ணிட்ட ஆத்விக். இதுக்கு பலன் நீ அனுபவிக்கப் போற’ மனதிற்குள் நினைத்தவள் அவனிற்கு சரியான அடி தரக் காத்திருந்தாள்.

‘மாலை மங்கும் நேரம்
ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்
போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன
வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம்
அதை நம்ப மாட்டேன் நானும்
பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்
தீயாய் மாறும் தேகம் தேகம்
உன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம்
வாழ்வின் எல்லை தேடும் தேடும்’

அடுத்ததாக வந்த பாடகி அப்பாடலைப் பாட ரிஷ்வந்த், நிஹாரிகா இருவருக்கும் இந்தப் பாடலால் தங்களுக்குள் நிகழ்ந்த நிகழ்வு மனதிற்குள் ஓடியது.

அமைதியாய் அமர்ந்திருந்த போதும் இருவருக்கும் உள்ளுக்குள் பூகம்பமே வெடித்துக் கொண்டிருந்தது. நயமாக ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்வதை தவிர்த்தனர்.

அடுத்து இருநாட்களும் அவார்டு பங்கஷனிலேயே கழிய, கடைசி தினம் திரைத்துறையினருக்கு மட்டும் இரவு டின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு எந்த ஊடகங்களுக்கும் அனுமதியில்லை.

மூன்றாவது நாளன்று ராயல் ப்ளூ நிற பார்ட்டி வியர் புடவை, அதற்கு கருப்பு நிற ப்ளவுஸ் அணிந்து வந்திருந்தாள் நிஹாரிகா. காலர் நெக் வைத்து முதுகுப்புறம் தெரிவது போல் கட் அவுட் டிசைன் வைத்திருந்தாள். சைட் பிஷ் ப்ரெயிடை (fish braid) முன்னால் எடுத்து விட்டிருந்தவளிடம் வந்த ஆத்விக்,

“ஹே நைஸ் டிசைன்” என்றான் அவளின் ரவிக்கையை பார்வையால் சுட்டிக்காட்டி.

வேறொரு இடமாக இருந்திருந்தால் அவனுக்கு நிஹாரிகா யாரென்று புரிந்திருக்கும். இத்தனை பேர் முன்னிலையில் அவள் அநாகரிகமாக நடந்துகொள்ள விரும்பவில்லை.

“கவுன்ட் யுவர் டேஸ் ஆத்விக்” வன்மமாக உரைத்தவள் நகரப் பார்க்க,

“புரொடியூசர்னு திமிரா?” ஆத்விக் வினவ,

“ஓஹ், உங்கப்பாவும் ஒரு புரொடியூசர்னு சொல்ல வர்றியா ஆத்விக். அது எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு. ஆனா ஒண்ணே ஒண்ணு. கந்துவட்டிக்கு பணம் வாங்காம படம் பண்றவன்தான் உண்மையான புரொடியூசர். நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கறேன்” எந்தளவிற்கு அவனை மட்டம் தட்ட முடியுமோ அந்தளவு தட்டிவிட்டுச் சென்றாள். அவர்கள் கந்துவட்டிக்கு பணம் வாங்கி அல்லவா படம் எடுக்கிறார்கள்.

நவ்யாவுடன் வந்தமர்ந்தவள் அவளைப் பார்க்க அவளோ பார்வையாலேயே என்னவென்று விசாரித்தாள்.

“ஆத்விக்?” நவ்யா வினவ,

“ம்ம்” என்றாள் நிஹாரிகா.

“அவன் நிறைய பொண்ணுக வாழ்க்கைல விளையாடிட்டு இருக்கான் நிஹா”

“ஐ நோ இட் நவ்யா. பட் ஒரு எவிடென்ஸ் கிடைக்கட்டும். அவனை உண்டு இல்லைன்னு ஆக்கிடறேன்” கோபத்தோடு உரைத்த நிஹாரிகா அங்கு வெயிட்டர் கொண்டு வந்த கோப்பையைக் கையில் எடுத்தாள்.

ஒரு மிடறு குடித்தவள், “ம்ங்” என்று முகத்தை சுளித்தவள், “ட்ரின்க்ஸ் போல.. ச்சு.. நான் ஜூஸுன்னு நினைச்சேன்” என்றவள் எதேச்சையாக ரிஷ்வந்த் தொலைவில் இருந்து முறைப்பதைக் கண்டாள். அவளுடன் சேர்த்து அவள் கையிலிருந்த கோப்பையையும்.

அவனின் முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாடுவதைக் கண்டு உள்ளுக்குள் நகைத்தவள், மேலும் இரண்டு கோப்பையை வாங்கி உள்ளே தள்ளினாள். ‘அவளுக்கு இந்தப் பழக்கம் இல்லியே.. இதென்ன புதுசா?’ நவ்யா மனதில் நினைத்தபடி அமர்ந்திருந்தாள்.

தலை பாரமாகக் கனக்க எழுந்தவள் நவ்யாவிடம் விடைபெற்றுவிட்டு, தாத்தாவை அலைபேசியில் அழைத்து தான் கிளம்புவதாக தெரிவித்துவிட்டு வெளியே நடந்தாள்.

நேரே சென்று தனது ஜாக்குவாரை எடுத்தவளிற்கு கண்கள் மங்கலாகத் தெரிந்தது.

அவள் சிறு தள்ளாட்டத்துடன் செல்வதையே பார்த்திருந்த ரிஷ்வந்திற்கு அங்கு நிற்க முடியவில்லை. அருணிடம் சொல்லிவிட்டுக் கீழே அவன் வருவதற்குள் நிஹாரிகா காரை எடுத்திருந்தாள்.

நெற்றியில் கை வைத்து, “இடியட்” பல்லைக் கடித்தவன் தனது ட்ரைவரை காரை எடுக்கச் சொன்னான்.

காரை செலுத்திக் கொண்டிருந்த நிஹாரிகாவுக்கோ, புதிய நிஹாரிகா மறைந்து பழைய நிஹாரிகா வெளியே வர ஆரம்பித்தாள்.

கை போன போக்கில் காரை செலுத்தியவளிற்கு எங்கு செல்கிறோம் என்பதே மறந்தது. ஆள் அரவமற்ற பகுதிக்குள் காரை நுழைத்தவளுக்கு அதற்கு மேல் முடியவில்லை. காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தினாள்.

தலையை ஸ்டியரிங்கின் மேல் சாய்த்தவளிற்கு எதுவும் செய்யத் தோன்றவில்லை. அவளை பின்தொடர்ந்து வந்த ரிஷ்வந்தோ காரை நிறுத்தச் சொல்லிவிட்டு இறங்கி ஓடினான்.

அவள் காரின் அருகே சென்றவன், “நிஹாரிகா டோர் ஓப்பன் பண்ணு” காரின் க்ளாஸை தட்ட அவளோ அவனைக் கண்டு புன்னகைத்தாள்.

“டோர் ஓப்பன் பண்ணுடி” அவன் மீண்டும் தட்ட ஸ்டியரிங்கில் அவனைப் பார்த்தபடி சாய்ந்திருந்தவள், ‘க்ளுக்’ என்று சிரித்துவிட்டு தலையை
திருப்பிக்கொண்டாள்.

“ப்ம்ச்” என்றவன் கீழிருந்த பெரிய கல்லை எடுத்தான்.

‘டொக்’, ‘டொக்’ என்று கார் க்ளாஸைத் தட்டியவன் அவள் திரும்பவும், ‘இப்ப நீ திறக்கல கார் கண்ணாடியை உடச்சிருவேன்’ சைகையில் அவன் சொல்ல கார் கதவைத் திறந்தாள்.

தனது டிரைவரை கிளம்பச் சொன்னவன், “யாரு என்னைக் கேட்டாலும் தெரியலைன்னு சொல்லிடு” என்றான்.

டிரைவர் சென்றபின் கார் கதவைத் திறந்தவன், நிஹாரிவின் கைகளை பிடித்து வெளியே இழுத்தான். கிட்டத்தட்ட அரைமயக்க நிலையில் இருந்தாள் அவள். வெளியே வந்தவளைத் தாங்கியவன் மற்றொரு கரத்தால், பின் கதவைத் திறந்து அவளை உள்ளே படுக்க வைக்க முயற்சிக்க, அவன் எதிர்பாராவிதமாய் அவனின் சட்டைக் காலரைப் பிடித்தவள் தன்னுடன் இழுக்க, அவளுடன் அவனும் சரிந்தான்.

அவளின் கையை அவன் விலக்க முயல, அவளோ அதைவிடும் எண்ணமே இல்லாது குழந்தை பொம்யைப் பிடிப்பதுபோலப் பிடித்திருந்தாள்.

இப்படியே இருந்தால் யாராவது பார்த்துவிடுவார்கள் என்று எண்ணினான். கதவை மூடினால் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தவன் காரின் கதவை மூடினான், அடுத்து நடக்கப்போவது அறியாமல்.